Thursday, February 14, 2019

புனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை

காத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன்டைன் தின‌ம் கிறிஸ்த‌வ‌த்திற்கு முந்திய‌ ரோம‌ர்க‌ளின் ப‌ண்டிகையாக‌ இருந்திருக்க‌லாம். அது காத‌லுக்கு எதிரான‌ கிறிஸ்த‌வ‌ ச‌பையால் வால‌ன்டைன் தின‌மாக‌ மாற்ற‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.

வாலன்டைன் என்ற துறவி சிரச்சேதம் செய்யப் பட்ட நினைவு தினத்தை (பெப். 14), "காதலர் தினம்" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது காதலர்கள் மட்டுமே கொண்டாடப் பட வேண்டிய தினம் என்ற தப்பெண்ணத்தை உண்டாக்கி விடுகிறது. பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், எமது அன்புக்குரிய அனைவருக்கும் வாலன்டைன் தினத்தன்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

பெப்ரவரி 14, வாலன்டைன் தினம் என்று பெயரிடப் பட்டதற்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒரு காரணம். கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமாபுரியில், மன்மத விழா என்ற பெயரில், காதல் காமக் களியாட்டங்களுக்கான ஒரு தினம் இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்த "காட்டுமிராண்டி கால காதலர் தினத்தை" மறக்க வைப்பதற்காக, கத்தோலிக்க துறவி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் தினமாக அறிவிக்கப் பட்டது.

பண்டைய ரோமாபுரியில் ஒவ்வொரு வ‌ருட‌மும் பெப்ர‌வ‌ரி 15, ரோம‌ர்க‌ள் ம‌ன்ம‌த‌ன் ப‌ண்டிகை கொண்டாடுவார்க‌ள். அன்று திரும‌ண‌மாகாத‌ பெண்க‌ளின் பெய‌ர்க‌ளை ஓலையில் எழுதி ஒரு குட‌த்திற்குள் போடுவார்க‌ள். திரும‌ண‌மாகாத‌ ஆண்க‌ள் அவ‌ற்றை எடுக்க‌ வேண்டும். அன்று முத‌ல் அந்த‌ ஆணும், பெண்ணும் க‌ண‌வ‌ன், ம‌னைவியாக‌ வாழ்வார்க‌ள்.

கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம், ப‌ண்டைய‌ ரோம‌ர்க‌ளின் ம‌த‌ ச‌ம்பிராதாய‌ங்க‌ளை ஒழித்துக் க‌ட்டிய‌து. அவ‌ற்றிற்கு கிறிஸ்த‌வ‌ப் பெய‌ர்க‌ள் சூட்டி, கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் சார்ந்த‌ ப‌ண்டிகைக‌ள் ஆக்கினார்க‌ள். ரோம‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்தி ஆட்சிக்கால‌த்தில், பெப்ர‌வ‌ரி 14 அன்று வ‌ல‌ன்டைன் என்ற‌ சிர‌ச் சேத‌ம் செய்து கொல்ல‌ப் ப‌ட்டிருந்தார்.

ஆக‌வே, கிறிஸ்த‌வ‌த்திற்காக‌ உயிர்நீத்த‌ ஒரு தியாகியின் இற‌ப்பை, வ‌ல‌ன்டைன் நாளாக‌ நினைவுகூருமாறு கிறிஸ்த‌வ‌ திருச்ச‌பை அறிவித்த‌து. இத‌னால் ரோம‌ர்களின் புராத‌ன‌ ம‌த‌ப் ப‌ண்டிகை கொண்டாடுவ‌து த‌டுக்க‌ப் ப‌ட்ட‌து. நில‌ப்பிர‌புத்துவ‌ ச‌முதாய‌த்தில் சுத‌ந்திர‌மான‌ காத‌ல் ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட‌வில்லை. கிறிஸ்த‌வ‌ ச‌பையும் காத‌லுக்கு எதிராக‌ இருந்த‌து.

இருப்பினும், எவ்வாறோ ப‌ல‌ நூறாண்டுக‌ளுக்குப் பிற‌கு, இங்கிலாந்தில் பெப்ர‌வ‌ரி 14 காத‌ல‌ர் தின‌மாக‌ கொண்டாட‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து மிக‌வும் க‌ட்டுப்பாடான‌ நில‌ப்பிர‌புத்துவ‌ க‌லாச்சார‌த்தில், அன்றைக்கு ஒரு நாள் ம‌ட்டுமே, ஓர் ஆணும், பெண்ணும் சுத‌ந்திர‌மாக‌ த‌ன‌து காத‌லை தெரிவிப்ப‌த‌ற்கு அனும‌திக்க‌ப் ப‌ட்டார்க‌ள். இருபதாம் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைகளின் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னர், அது மீண்டும் காதலர் தினமாக மாறி விட்டது.

பிற்கால‌த்தில் அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய‌ர்க‌ள் அங்கேயும் த‌ம‌து க‌லாச்சார‌த்தை பின்ப‌ற்றினார்க‌ள். அதே கால‌க‌ட்ட‌த்தில் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ முத‌லாளித்துவ‌ம், இந்த‌ப் ப‌ண்டிகையை வ‌ணிக‌ம‌ய‌மாக்கினால் நிறைய‌ப் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்று க‌ண்டுகொண்ட‌து. இருப‌தாம் நூற்றாண்டில் வ‌ணிக‌ ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ காத‌ல‌ர் தின‌ம், அமெரிக்க‌ ஆதிக்க‌ க‌லாச்சார‌த்தின் ஒரு ப‌குதியாக,‌‌ மேற்கு ஐரோப்பாவில் ப‌ர‌விய‌து.

சோஷ‌லிச‌ நாடுக‌ளாக‌ இருந்த‌ ர‌ஷ்யாவிலும், கிழ‌க்கு ஐரோப்பாவிலும் அது ப‌ர‌வ‌வில்லை. அந்த‌ நாடுக‌ளின் பிர‌ஜைக‌ளுக்கு தொண்ணூறுக‌ளுக்குப் பிற‌கு தான் காத‌ல‌ர் தின‌ம் என்ற‌ ஒன்றிருப்ப‌து தெரியும்.

எல்லா வகையான பண்டிகைகளிலும் பணம் பார்க்கும் வணிகத்துறை, அதனை "மதச் சார்பற்ற காதலர் தினமாக" மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தியது. ஒரு காலத்தில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த வாலன்டைன் தினம், உலகமயமாக்கல் காரணமாக பிற நாடுகளிலும் பரவி விட்டது.

No comments: