Sunday, February 03, 2019

பிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்

அந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro), 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்கிய கிறிஸ்தவ மதகுரு.

"கம்யூனிசமும், மதமும் வேறு வேறான சித்தாந்தங்கள்" என்ற தவறான எண்ணத்தை, பிரேசில் நாட்டு முன்னாள் அடிமைகளும், ஏழை விவசாயிகளும் உடைத்தெறிந்தனர். Bahia மாநிலத்தில், Canudos எனுமிடத்தில், பிரேசிலின் முதலாவது கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கினார்கள். 

சுமார் 25000 பேரளவில், அந்தோனியோ என்ற கிறிஸ்தவ மதகுருவின் தலைமையில் அந்த புதிய நகரத்தை தாமே உருவாக்கிக் கொண்டனர். ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஒரே வழியாக, அந்தோனியோ "கம்யூனிச கிறிஸ்தவத்தை" போதித்து வந்தார். அவரின் போதனைகளால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாயிகளும், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமைகளும், வெறுந் தரையில் கனுடோஸ் என்ற புதிய நகரத்தை உருவாக்கி சாதித்துக் காட்டினார்கள். 

அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், அவரவர் வாழ்க்கைக்கு தேவையான அளவு வேலை செய்தார்கள். வருமானத்தை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட கனுடோஸ் கம்யூன் நகரத்தை மேற்பார்வையிட பொலிஸ் இருக்கவில்லை. குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அதனால் நீதிமன்றமும் இருக்கவில்லை. 

சுமார் 25000 க்கும் அதிகமான மக்கள், பிரேசில் அரசிடம் தங்கியிராமல், தாமாகவே தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். மக்கள் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்ய கற்றுக் கொண்டால், பேராசைக்கார முதலாளிகள் மூலதனத்தை திரட்ட முடியுமா? முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் பிரேசில் அரசு, இராணுவத்தை அனுப்பியது. 

அரச படைகள், கனுடோஸ் நகரை சுற்றி வளைத்தன. துருப் பிடித்த துப்பாக்கிகளை வைத்திருந்த மக்களால், நவீன ஆயுதமேந்திய இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. அந்தப் போரில், ஆயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். கம்யூனிச மதகுரு அந்தோனியோ கொன்செஹெரோ பிடிபட்டு சிரச்சேதம் செய்யப் பட்டார். 

"மனிதர்கள் இயற்கையாகவே சுயநலவாதிகள்" என்ற பொய்யை பரப்பி வரும், ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும், இது போன்ற தகவல்களை மக்களுக்கு வேண்டுமென்றே மறைக்கப் பார்ப்பார்கள். 

மேலதிக விபரங்களுக்கு இந்த திரைப் படத்தை பார்க்கவும்: 
The Battle of canudos (Portuguese) 
https://www.youtube.com/watch?v=HJWn9ySyqEc

No comments: