Wednesday, February 06, 2019

அன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....


எச்சரிக்கை!
கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.
கம்யூனிச வைரஸ் பின்வரும் நோய்களை உண்டாக்க வல்லது என்று கண்டறியப் பட்டுள்ளது: 
- அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி
- அனைத்து மட்டத்திலும் இலவசமான பொதுக் கல்வி 
- இனவாதம், ஆணாதிக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுதல்
- அனைவரும் சமத்துவமாக நடத்தப் படும் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம்

மேற்குறிப்பிட்ட தொற்று நோய்களை தடுக்க விரும்புவோர், அருகில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு மருத்துவ நிலையத்தில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். 
(கம்யூனிச எதிர்ப்பு மருத்துவர்கள், முதலில் இலவச ஆலோசனை வழங்கி விட்டு, பின்னர் உங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுரண்டி எடுத்து விடுவார்கள்.) 


சில நண்பர்கள், மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களில் வெளியாகும், கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரைகளை வாசிக்குமாறு, எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வெகுளித்தனத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பாவம், உலகம் அறியாப் பாலகர்கள்!

எதற்காக ஒரு முதலாளித்துவ ஊடகம், தனது ஜென்ம விரோதியாக கருதும் ஒன்றைப் பற்றி (கம்யூனிசம்) சாதகமான தகவல்களை வெளியிட வேண்டும்? உலகில் யாராவது தனது எதிரியை புகழ்ந்து பேசுவதைக் கண்டிருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசுக்கு சார்பான ஊடகம், புலிகளை புகழ்ந்து எழுதுமா? அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றால், இதுவும் முட்டாள்தனம் தான்.

பனிப்போர் காலத்தில், சிறந்த கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை எழுதிக் கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப் பட்டது. இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். அது மட்டுமல்ல, சோவியத் யூனியன், மற்றும் பல கம்யூனிச நாடுகளில் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரியோர் பலருண்டு. அவர்களும் தமது கற்பனைக்கு எட்டிய புளுகுக் கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாங்கள் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது பனிப்போர் காலகட்டம். ஒரு கம்யூனிச நாட்டிலிருந்து வந்து அகதித் தஞ்சம் கோரும் ஒருவரை எடுத்த உடனே நம்ப முடியாது. கே.ஜி.பி. கூட அகதி என்ற போர்வையில் உளவாளிகளை அனுப்பலாம். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரி விட்டு, சோவியத் யூனியனுக்காக உளவு பார்த்த பலர் பிடிபட்டிருக்கிறார்கள். இதனால் சி.ஐ.ஏ. யாரையும் நம்பாமல் கடுமையாக விசாரணை செய்தது. சிலர் சித்திரவதை தாங்காமல் இறந்துள்ளனர்.

அவர் சிலநேரம் நேர்மையான அகதியாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், சி.ஐ.ஏ. நம்பத் தயாராக இருக்கவில்லை. மேற்குலகிற்கு தப்பியோடிய சிலருக்கு இந்த விடயம் தெரிந்திருக்கலாம். அதற்காக தன்னை தயார்படுத்த வேண்டி இருந்தது.

அதைவிட, தனிப்பட்ட பொருளாதார நலன்களுக்காக தஞ்சம் கோரிய பொருளாதார அகதிகளும் இருந்தனர். ஒரு கம்யூனிச நாட்டில் இருந்து ஓடி வந்த அகதி என்றால் தனி மரியாதை கிடைக்கும். அவருக்கு வேண்டிய சலுகைகளை செய்து கொடுத்தனர். சிலநேரம், உள்நாட்டவரே பொறாமைப்படும் அளவிற்கு, நேற்று வந்த அகதிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

சரி, மேற்குலகில் அகதித் தஞ்சம் கோருவதற்கு என்ன செய்ய வேண்டும்? அது பெரிய கஷ்டமான விடயம் இல்லை. கம்யூனிச நாடுகளில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று கதை புனைந்து சொல்லத் தெரிந்திருந்தால் போதும். யாருக்கு கற்பனை வளம் அதிகமோ, அவருக்கு தஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் பல திடுக்கிடும் திகில் கதைகளை சொன்ன கதாசிரியர்கள் இருந்தனர்.

இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே தெரிந்த விடயம். பெர்லின் மதில் விழுந்து, சோஷலிச நாடுகள் காணாமல்போன பின்னர், இந்தக் கதாசிரியர்களின் புளுகுக் கதைகள் பற்றிய உண்மையும் தெரிய வந்தது. தாம் எந்தளவு தூரம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம் என்று, மேற்கத்திய அரசுகள் வெட்கித்து நின்றிருக்கும். இருப்பினும் இன்றும் சில மேதாவிகள், அந்தக் கதைகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள். என்ன செய்வது? அவர்களது அப்பாவித்தனத்தை எண்ணி பரிதாபப் படத் தான் முடியும்.

கம்யூனிச எதிர்ப்பு காமெடிகள்: கம்யூனிச எதிர்ப்பாளர்கள் எப்போதும் "தானே ஜோக் சொல்லி தானே சிரிக்கும் வெகுளிகள்" போன்றவர்கள். அவர்களது பிரபலமான காமெடிகளில் ஒன்று:"முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்கள் சர்வாதிகார ஆட்சிக்கு அஞ்சி நடந்தார்கள். அதனால், சர்வாதிகாரம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் கூட தடை செய்யப் பட்டன..." இது முழுக்க முழுக்க மேற்குலகத்தினர் மட்டும் நம்பிய கற்பனைக் கதை.

அதற்கான மூன்று முக்கிய காரணங்கள்: 
1. கம்யூனிச ஆட்சியாளர்கள் யாருமே தம்மை சர்வாதிகாரிகளாக எண்ணிக் கொள்ளவில்லை. அவர்கள் எல்லோரும் தம்மை ஜனநாயகவாதிகள் என்று தான் கருதிக் கொண்டனர்.

2. சரியோ, பிழையோ, அந்நாடுகளின் பிரஜைகளும் தாம் ஒரு சிறந்த ஜனநாயக அரசமைப்பின் கீழ் வாழ்வதாக எண்ணிக் கொண்டனர். பள்ளிக்கூடங்களிலும் அவ்வாறு தான் கற்பிக்கப் பட்டது.

3. எத்தகைய அரசியல் அமைப்பு சிறந்தது என்பதை தெரிவு செய்வதற்கு அந்த நாட்டிற்கு உரிமை உண்டு. மேற்கத்திய அமைப்பு மட்டுமே சரியென்று கூற அது ஒன்றும் புனிதமானது அல்ல.

ஆகையினால், மேற்கத்திய நாடுகள் தயாரித்து அனுப்பிய "சர்வாதிகார எதிர்ப்பு இலக்கியங்கள், திரைப்படங்கள்" எதையும் கம்யூனிச ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பொய்களை மட்டுமே கூறும் (விரும்பினால் அதை "விவாதத்திற்குரியது" என்று சொல்லுங்கள்) அவதூறு பரப்புரைகளை தவிர, ஏனையவற்றை தடை செய்யவில்லை.

உதாரணத்திற்கு Blakes 7 என்ற சயின்ஸ் பிக்சன் தொலைக்காட்சித் தொடர் எழுபதுகளில் பிரபலமாக இருந்தது. பிரித்தானியாவில் தயாரிக்கப் பட்ட அந்தத் தொடர், உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு முன்னாள் சோஷலிச நாடுகளில் காண்பிக்கப் பட்டன.

பிளேக்ஸ் செவன் தொடரின் கதை இது தான். பூமியும், வேறு கிரகங்களும், Terran Federation எனும் சர்வாதிகார (Totalitarian) அரசினால் ஆளப் படுகின்றன. அங்கு அரசுக்கு எதிரான அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சிறை உடைத்து, Liberator என்ற விண்கலத்தில் தப்பிச் செல்கின்றனர். அதை விரட்டிச் செல்லும் அரச படையினருடன் நடக்கும் போர் தான் கதைச் சுருக்கம்.

மேற்கத்திய பார்வையாளர்களை பொறுத்தவரையில், "Totalitarian, Liberator..." போன்ற சொற்களைக் கேள்விப் பட்டாலே "கம்யூனிச சர்வாதிகாரம்" நினைவுக்கு வரும் வகையில் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர். ஆகவே இதை ஒரு "கம்யூனிச எதிர்ப்பு படம்" என்றும் கருதிக் கொள்ள வாய்ப்புண்டு.

அந்தோ பரிதாபம்! மேற்குலகில் நீங்கள் ஆவலுடன் கண்டு களித்த "கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும்" தொலைக்காட்சித் தொடர், கம்யூனிச நாடுகளில் அரசு அனுமதியுடன் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த மக்களில் ஒருவர் கூட இது தமது அரசை கிண்டல் அடிக்கிறது என்று நினைக்கவில்லை. அல்லது தொலைக்காட்சித் தொடரின் தூண்டுதலால் கிளர்ந்தெழவில்லை.

பிற்காலத்தில், சோஷலிச அரசுகள் வீழ்வதற்கான காரணம் வேறு. மேற்கைரோப்பாவில் இருந்து ஒலி/ஒளிபரப்ப பட்ட வானொலி, தொலைக்காட்சிகளில், "மேற்கில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக" பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதை உண்மை என்று நம்பினார்கள். அங்கு சென்றால் பணத்தில் மிதக்கலாம் எனக் கனவு கண்டார்கள்.

மேற்கைரோப்பாவில் அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு உடனே வீடும், வேலையும் கிடைக்கிறது. குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகி விட்டார்கள். சொந்தமாக வீடு, கார் வாங்கி வசதியாக வாழ்கிறார்கள். இப்படியான கதைகளை அவிழ்த்து விட்டால் யாருக்கு தான் ஆசை வராது?

இது ஒரு வகையில் இன்றைய இலங்கை, இந்திய மக்களின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. மேற்குலகில் தான் சொர்க்கம் இருப்பதாக எத்தனை பேர் நம்புகிறார்கள்? எப் பாடு பட்டாவது ஒரு மேற்கத்திய நாட்டிற்கு சென்று விட்டால் பணக்காரர் ஆகலாம் என கனவு காண்பவர் எத்தனை பேர்?

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், மத்தியதர வர்க்க இளைஞர்களிடம், அவர்களது மேட்டுக்குடி சிந்தனையை சுட்டிக் காட்டினால், பின்வருமாறு பதில் கூறுவார்கள்: "என்னைப் பற்றி தெரியுமா? நானும் ஏழைக் குடும்பத்தில் தான் பிறந்தேன்" என்று சொல்வார்கள்.

ஏழைக் குடும்பமோ, பணக்கார குடும்பமோ, பிறப்பினால் ஒருவரும் வர்க்க உணர்வு பெறுவதில்லை. ஏழையாக பிறந்தவர் முதலாளித்துவத்தை ஆதரிக்கலாம். அதே நேரம், மேட்டுக்குடியில் பிறந்தவர் கம்யூனிசத்தை ஆதரிக்கலாம். அதற்கு உண்மையில் நடந்த குட்டிக் கதையை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஒரு தடவை, சோவியத் யூனியன் அதிபர் குருஷேவும், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சூ என் லாயும் சந்தித்துப் பேசினார்கள். அந்த நேரத்தில், குருஷேவ் சோவியத் யூனியனில் முதலாளித்துவ சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். அதற்கு மாறாக, மாவோவின் சீனா, கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில், கடுமையான வர்க்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

அப்படியான ஒரு நேரத்தில், குருஷேவ் தன்னை நியாயப் படுத்த வேண்டிய தேவையேற்பட்டது. "நான் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். நீங்களோ வசதியான மேட்டுக்குடியில் பிறந்தவர்." என்று குருஷேவ் சூ என் லாயிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த சூ என் லாய்: "அது உண்மை தான். ஆனால், எமக்கிடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது பாருங்கள். இருவருமே எமது சொந்த வர்க்கத்திற்கு துரோகம் செய்துள்ளோம்!"

No comments: