Friday, February 22, 2019

இந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு


//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த தன்மையைத் தான், நிபந்தனையேதும் இன்றி நாங்கள் ஆதரிக்கின்றோம். அதே சமயத்தில், தேசியத் தனித்துவத்தை நோக்கிய போக்கிலிருந்து, இந்த ஜனநாயகத் தன்மை முற்றிலும் வேறானது, என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். யூதர்களை ஒடுக்கும் போலிஷ் பூர்ஷுவாக்களின் போக்கையும் மற்றும் அது போன்றவற்றையும் எதிர்த்து நாம் போராடுகின்றோம்.// - லெனின் ( தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)

 //ஜனநாயகம் என்பது, பொதுவாக சொல்லப்போனால், சண்டை போடும் குணமுள்ள, ஒடுக்கும் தன்மையுள்ள தேசியவாதத்திற்கும் இயைந்ததாகும். அரசின் எல்லைகளுக்குள் எந்த ஒரு தேசிய இனத்தையும் பலவந்தமாக பிடித்து வைத்திருப்பதை அறவே ஒதுக்கி விடும் ஜனநாயகம் வேண்டுமென்று பாட்டாளி வர்க்கம் கோருகின்றது. எனவே, சுயநிர்ணய உரிமையை மீறாமல் இருக்கும் பொருட்டு.... பிரிந்து போவதற்கு சாதகமாக வாக்களிப்பது அல்ல, பிரிந்து போகும் பிரதேசமானது தானே அப் பிரச்சினையை முடிவு செய்து கொள்ளும் என்ற உரிமைக்கு சாதகமாக வாக்களிப்பதே நம்முடைய கடமை. விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை என்றால், அதற்கென விவாகரத்தை ஆதரித்து ஒருவன் வாக்களிக்க வேண்டியதில்லை.// - வி.இ. லெனின் (தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும்)

லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உண்மையில் "பிரிட்டிஷ் காலனியான இந்தியாவை விடுதலை செய்யும் உள்நோக்கம் கொண்டது" என்று பிரிட்டன் நம்பியது. அதனால், செம்படைகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த, சார் மன்னனுக்கு ஆதரவான வெண் படைகளுக்கு பிரிட்டன் உதவியது. மத்திய ஆசியா போல்ஷெவிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை தடுத்து நிறுத்துவது அதன் நோக்கமாக இருந்தது.

ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சி, நீண்ட காலம் நிலைக்கப் போவதில்லை என்றே அந்தக் காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அதற்குக் காரணம், அப்போது சென் பீட்டர்ஸ்பேர்க் நகரமும், வேறு சில நகரங்களும் மட்டுமே போல்ஷெவிக் செம்படையினர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

ரஷ்யாவின் பெரும்பான்மையான பகுதிகள், சார் மன்னனுக்கு ஆதரவான வெண் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது. அது மட்டுமல்லாது, செம்படையினரை விட, வெண் படையின் எண்ணிக்கையும், பலமும் பல மடங்கு அதிகமாக இருந்தது.

மத்திய ஆசியாவில் உள்ள துருக்கி மொழி பேசும் முஸ்லிம் மக்கள், போல்ஷெவிக் புரட்சியாளர்களை வரவேற்கவில்லை. அவர்கள் சார் மன்னனின் படைகளையும், போல்ஷெவிக் செம்படையினரையும் ஒன்றாகக் கருதினார்கள். அதனால், உள்ளூர் மக்களின் மனதை வெல்வதற்காக, லெனின் சுயநிர்ணயக் கோட்பாட்டை அறிவித்தார்.

மதத்தால் முஸ்லிம்களான மத்திய ஆசிய இனங்கள், தேசிய சுயநிர்ணய உரிமையை விட, மத உரிமைக்கான ஜிகாத் முக்கியம் என கருதினார்கள். பிரிட்டன் அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. பெய்லி போன்ற உளவாளிகள் இந்தியாவில் இருந்து ஊடுருவினார்கள். ஜிகாத் போராட்டம் நடத்த விரும்பிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு, பிரிட்டன் ஆயுதங்கள் வழங்கி உதவியது.

(நன்றி: Setting the East Ablaze; Lenin's Dream of an Empire in Asia, by Peter Hopkirk)

No comments: