Showing posts with label பிரிட்டிஷ் காலனிய ஆட்சி. Show all posts
Showing posts with label பிரிட்டிஷ் காலனிய ஆட்சி. Show all posts

Monday, February 04, 2019

பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்

பிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ப் போர் கால‌த்தில், குறிப்பிட்ட‌ள‌வு கால‌னிய‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆனால், கால‌னிய‌ ப‌டையில் இருந்த‌ இராணுவ‌ வீர‌ர்க‌ளின் க‌ல‌க‌ம் ஒன்று இட‌ம்பெற்ற‌து. அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இன்று வ‌ரையும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்டு வருகின்ற‌து.

கால‌னிய‌ கால‌ இல‌ங்கையில் சிங்க‌ள‌-த‌மிழ் பூர்ஷுவா வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ "த‌லைவ‌ர்க‌ள்" பிரிட்டிஷ் எஜ‌மானுக்கு விசுவாச‌மான‌ அடிமைக‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். அப்போதே ட்ராஸ்கிச‌ பாதையில் சென்ற‌ LSSP என்ற‌ சோஷ‌லிச‌க் க‌ட்சி, ம‌ற்றும் க‌ம்யூனிஸ்டுக‌ள், இடதுசாரிக‌ள் ம‌ட்டுமே இல‌ங்கைக்கு சுத‌ந்திர‌ம் வேண்டுமென்ற‌ கோரிக்கையை முன்வைத்த‌னர்.

சிறில‌ங்கா இராணுவ‌த்தின் முன்னோடியான‌ Ceylon Defence Force (CDF) என்ற‌ ப‌டையில் பிரிட்டிஷ் அதிகாரிக‌ளின் கீழ் இல‌ங்கை வீர‌ர்க‌ளும் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதில் ப‌ல‌ சோஷ‌லிஸ்டுக‌ள்‌ இருந்த‌ன‌ர். பெரும்பாலும் LSSP ஆத‌ர‌வாள‌ர்க‌ள். உல‌க‌ப்போரை ப‌ய‌ன்ப‌டுத்தி விடுத‌லைப் போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கு த‌க்க‌ த‌ருண‌ம் பார்த்துக் காத்திருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போரில், ம‌லேசியாவை ஜ‌ப்பானிய‌ரிட‌ம் இழ‌ந்த‌ பிரிட்டிஷார், என்ன‌ விலை கொடுத்தேனும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இல‌ங்கைத் தீவை பாதுகாக்க‌ முடிவெடுத்த‌ன‌ர். பிர‌தான‌மாக‌ ர‌ப்ப‌ர் உற்ப‌த்தியால் கிடைத்த‌ வ‌ருமான‌த்தை இழ‌க்க‌ விரும்ப‌வில்லை. அத‌னால் சுமார் 75 CDF வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளில் இற‌க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

இன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்த‌மான‌ கொகோஸ் தீவுக‌ள், இந்து ச‌முத்திர‌த்தில், ம‌லேசியாவுக்கும் இல‌ங்கைக்கும் ந‌டுவில் அமைந்துள்ள‌ன‌. தீவுவாசிக‌ள் ம‌லே மொழி பேசும் இஸ்லாமிய‌ர் ஆவ‌ர். ஏற்க‌ன‌வே ம‌லேசியா, சிங்க‌ப்பூரை கைப்ப‌ற்றிய‌ ஜ‌ப்பானிய‌ ப‌டைக‌ள், கொகோஸ் தீவுக‌ளையும் பிடித்திருந்தால், இல‌குவாக‌ இல‌ங்கை மீது ப‌டையெடுத்திருப்பார்க‌ள். அதைத் த‌டுப்ப‌தே பிரிட்டிஷாரின் திட்ட‌ம்.

எதிர்பாராத‌ வித‌மாக‌, கொகோஸ் தீவுக‌ளில் நிலைகொண்டிருந்த‌ இல‌ங்கை இராணுவ‌ வீர‌ர்க‌ள் க‌ல‌க‌ம் செய்து தீவின் க‌ட்டுப்பாட்டை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌ன‌ர். 8 மே 1942, அன்று இர‌வு க‌ல‌க‌ம் செய்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், தொலைத் தொட‌ர்பு நிலைய‌த்தை கைப்ப‌ற்றி, பிரிட்டிஷ் அதிகாரிக‌ளை கைது செய்ய‌ முய‌ன்ற‌ன‌ர். ஆனால், இறுதி நேர‌த்தில் ஆயுத‌ங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ம‌றுத்த‌ன‌. அத‌னால் க‌ல‌க‌ம் முறிய‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு, இல‌ங்கைக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டு, கொழும்பு வெலிக்க‌டை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளை கைப்ப‌ற்றி, பின்ன‌ர் அதை ஜ‌ப்பானிய‌ ப‌டையின‌ரிட‌ம் ஒப்ப‌டைக்க‌ திட்ட‌ம் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌து. சில‌நேர‌ம் அப்ப‌டி ஒரு நோக்க‌ம் இருந்தாலும் அத‌ற்கு எந்த‌ ஆதார‌மும் இல்லை.

க‌ல‌க‌த்திற்கு த‌லைமை தாங்கிய‌ பெர்னான்டோ என்ப‌வ‌ரும், வேறு இர‌ண்டு பேரும் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெர்னான்டோ விசார‌ணையின் போது த‌ன் மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ தேச‌த்துரோக‌ குற்ற‌ச்சாட்டை ம‌றுத்து தான் ஒரு நாட்டுப்ப‌ற்றாள‌ன் என்று வாதாடினார். அவ‌ர் தூக்கில் தொங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் க‌டைசியாக‌ சொன்ன‌ வாச‌க‌ம்: "வெள்ளைய‌ருக்கு விசுவாசமாக‌ இருப்ப‌தென்ப‌து போலித்த‌ன‌மான‌து"

இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இல‌ங்கையின் ச‌ரித்திர‌ பாட‌நூல்க‌ளில் குறிப்பிட‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து ஆச்ச‌ரிய‌த்திற்குரிய‌து. சிறில‌ங்கா அர‌சோ, ஊடக‌ங்க‌ளோ நினைவுகூர்வ‌தில்லை. (விதிவில‌க்காக‌, LSSP க‌ட்சியின‌ர் இன்றைக்கும் நினைவுகூர‌ ம‌ற‌ப்ப‌திலை.) அத‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌?

இராணுவ‌க் க‌ல‌க‌த்தின் பின்ன‌ர் விழிப்ப‌டைந்த‌ பிரிட்டிஷார், இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்கி கால‌னிய‌ விசுவாசிக‌ளாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். குறிப்பாக‌, இந்திய‌ர்க‌ளை விட‌ இல‌ங்கைய‌ர்க‌ள் கால‌னிய‌ ஆட்சியாள‌ர்க‌ளினால் ந‌ன்றாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌, இன்றும் ப‌ல‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் பிரித்தானியாவுக்கு விசுவாச‌மாக‌ இருப்ப‌தை க‌ண்கூடாக‌க் காண‌லாம்.

அத்துட‌ன், சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ர், பிரிட்டிஷாருக்கு விசுவாச‌மான‌ உள்நாட்டு பூர்ஷுவா வ‌ர்க்க‌ம் தான் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள‌து. சோஷ‌லிஸ்டுக‌ள் தான் இல‌ங்கையில் சுத‌ந்திர‌த்திற்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள் என்ற‌ உண்மையை மக்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் மூடி ம‌றைத்து வ‌ந்த‌ன‌ர்.

Saturday, July 01, 2017

ஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்!


யார் இந்த ஆறுமுக நாவலர்? ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா?

//ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் பிறந்தவை.// - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். (1822 – 1879)

ஈழ‌த் தமிழ‌ர்க‌ளிடையே பிரிவினையையும், சாதிவெறியையும் தூண்டி விடும் நோக்கில், அர‌ச‌ ஒத்தோடி ஆறுமுக‌நாவ‌ல‌ர் எழுதிய,‌ "சைவ‌ வினா விடை" புத்த‌க‌ம், இன்றைக்கும் யாழ்ப்பாண‌ பாட‌சாலைக‌ளில் போதிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

யாழ் இந்துக் க‌ல்லூரியில் நான் ப‌டித்த‌ கால‌த்தில், சைவ‌ ப‌ரிபால‌ன‌ ச‌பை மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ரீட்சை வைத்து, அந்த‌ நூலை ப‌டிக்க‌ ஊக்குவித்த‌து. அந்த‌ ந‌டைமுறை இப்போதும் தொட‌ர்கிற‌து.

"சாதிக‌ளை ஒழித்து த‌மிழ‌ர்க‌ளை ஒற்றுமைப் ப‌டுத்திய‌தாக‌" சொல்ல‌ப் ப‌டும், புலிக‌ளின் ந‌டைமுறை த‌மிழீழ‌ அர‌சு கூட‌ அந்த‌ சாதிவெறி நூலை த‌டை செய்ய‌வில்லை. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டைக‌ளில் தாராள‌மாக‌ விற்ப‌னை செய்ய‌ப் ப‌ட்ட‌து. பாட‌சாலைக‌ளில் க‌ற்பிக்க‌ப் ப‌ட்ட‌து. அன்று அது எவ‌ர் க‌ண்க‌ளையும் உறுத்த‌வில்லை.

இன்றும் கூட‌, எந்த‌வொரு த‌மிழ்த் தேசிய‌வாதியும் "நாவ‌ல‌ர் ஒரு த‌மிழின‌த் துரோகி" என்று பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌வில்லை. மாறாக‌, வெட்க‌மில்லாம‌ல் நாவ‌ல‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்குகிறார்க‌ள்.

யாழ்ப்பாணம், நல்லூரில் நாவலர் மண்டபம் இருக்கிறது. அதன் முற்றத்தில் ஆறுமுக நாவலரின் சிலை இருக்கிறது. அந்தச் சிலையை, 1969 ம் ஆண்டு, யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

அப்போதே சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்ததனர். "சாதிவெறியன் நாவலருக்கு சிலை வைப்பது அவமானம்" என்று பிரச்சாரம் செய்தனர். "கடும்போக்கு சாதியவாதி நாவலர் சிலையை தகர்ப்போம்" என்று சுவரொட்டிகள் ஓட்டப் பட்டன. ஆயினும், "ஈழத்து பார்ப்பனர்கள்" என்று சொல்லக் கூடிய வெள்ளாளர்கள், தமது சாதியத் தலைவர் நாவலருக்கு சிலை வைப்பதை பெருமையாகக் கருதினார்கள்.

நான் ஒரு தடவை இலங்கைக்கு சென்றிருந்த நேரம், நாவலர் மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர், மண்டபத்திற்கு பின்னால் இருந்த யாழ் அருங்காட்சியகத்தை பார்வையிட சென்றிருந்தேன்.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், யாழ் கோட்டைக்கு அருகில் இருந்த அருங்காட்சியகம் தற்போது நல்லூருக்கு மாற்றப் பட்டுள்ளது. அந்த இடத்தில், ஆறுமுக நாவலர் வாழ்ந்த வீட்டின் எஞ்சிய சுவர்ப் பகுதி இருப்பது, ஓர் அகழ்வாராய்ச்சிப் பொக்கிஷமாக கருதப் பட்டிருக்கலாம். எதிர்பாராத விதமாக அங்கு வேறு சில ஆர்வத்திற்குரிய விடயங்களும் இருந்தன.

ஆறுமுக நாவலர் பிறந்த வீடு இருந்த இடத்தில், டச்சு காலனியாதிக்க வாதிகளின் சமாதிகள் இருக்கின்றன. அதாவது, நாவலர் வீட்டின் இடிந்த சுவர் என்று சொல்லப் படும் சுவருக்கு பின்னால் அந்த சமாதிகள் இருக்கின்றன. அவர்களும் சாதாரணமான ஆட்கள் அல்ல. யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான டச்சு படையணிகளின் தளபதிகளாக பணியாற்றி உள்ளனர். அந்தத் தகவல் சமாதிகளில் எழுதப் பட்டுள்ளது. அதன் அருகில் அருங்காட்சியகம் வைத்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.

ஆறுமுக நாவலர் பிறந்த காலத்தில், யாழ்ப்பாணம் டச்சுக்காரர் கையை விட்டகன்று, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து விட்டிருந்தது. இருப்பினும், காலனிய காலத்தில் ஐரோப்பியரின் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் உள்நாட்டவர்கள் வசிப்பதற்கு அனுமதி இருக்கவில்லை. அது மட்டுமல்லாது, டச்சு காலனிய ஆட்சியாளர்கள் இறந்தால், அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு அருகிலேயே புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தோனேசியா, சுரினாம் போன்ற பிற டச்சுக் காலனிகளிலும் இந்த நடைமுறை இருந்ததை சரித்திர நூல்களில் படித்திருக்கிறேன்.

காலனிய காலகட்டமானது, தென்னாபிரிக்காவில் இருந்ததைப் போன்ற "அப்பார்ட் ஹைட்" காலம் போன்றிருந்தது. அதாவது, வந்தேறுகுடிகளான வெள்ளையர்களும், உள்நாட்டவரான கருப்பர்களும் பிரித்து வைக்கப் பட்டனர். இலங்கையிலும் அதே நடைமுறை இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. வெள்ளையரின் பகுதிகளுக்கு அருகாமையில் வசிக்க அனுமதிக்கப் பட்டவர்கள், அன்றைய காலத்து அரச ஒத்தோடிகள், அல்லது ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்கள் மட்டுமே. ஐரோப்பியர்களுக்கு அடுத்ததாக, அவர்களுக்கு அரச சலுகைகள் கிடைத்து வந்தன.

ஆறுமுக நாவலர் சைவத்தையும், தமிழையும் வளர்த்தார் என்று இலங்கைத் தமிழ்ப் பாடநூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அமெரிக்க மிஷனரிகள் பாடசாலைகள் கட்டி, கிறிஸ்தவ மதம் பரப்பிக் கொண்டிருந்த காலத்தில், நாவலர் இந்துப் பாடசாலைகள் கட்டினார். அங்கு வெள்ளாளர் சாதிப் பிள்ளைகளுக்கு மட்டுமே படிக்க அனுமதித்தார்கள். "நாவலரின் அரும்பெரும் முயற்சியால் தான், யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் பரவுவது தடுக்கப் பட்டது" என்று சொல்லப் படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கு பின்வரும் காரணங்களை காட்டலாம்:

1. ஆங்கிலேய காலனிய காலகட்டத்தில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அது ஒரு சர்வாதிகார ஆட்சி. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் கடுமையான சட்டம் போட்டு, நாவலர் "சைவத்துக்கும், தமிழுக்கும் செய்த தொண்டுப் பணியை" தடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. இதே ஆங்கிலேய ஆட்சியாளர்கள், மறுபக்கத்தில் அநகாரிக தர்மபால "பௌத்தத்திற்கும், சிங்களத்திற்கும் தொண்டு செய்வதை" தடுக்கவில்லை.

2. சிங்களவர், அல்லது தமிழர் ஒருவர், ஆங்கிலேய காலனிய ஆட்சி நிர்வாகத்தில் பதவிகளில் சேர வேண்டும் என்றால், அவர் ஆங்கிலக் கல்வியில் புலமை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். (அதிலும் அங்கிலிக்கன், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவருக்கு முன்னுரிமை. அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்கள்.) இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும், மேட்டுக்குடி சிங்களவர்களும், தமிழர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். "தாய்மொழியை" விட, ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தனர்.

3. "சைவமும், தமிழும் வளர்த்த" ஆறுமுக நாவலர், அதை ஒரு காலனிய எதிர்ப்பு நடவடிக்கையாக செய்யவில்லை. அத்துடன் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே நாவலர் காலமாகி விட்டார். ஆகவே, "சைவமும், தமிழும் வளர்த்த நடவடிக்கை" உள்ளூர் மக்களை, அதாவது தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்திருக்கும். கிறிஸ்தவம், ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்த ஒரு நாட்டில், சைவத்தையும், தமிழையும் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்க முடியும்?

4. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக, தமிழர்கள் மத்தியில் உள்ள, வர்க்க, சாதிய முரண்பாடுகளை கூர்மைப் படுத்துவதற்கு, நாவலரின் "சைவமும், தமிழும் வளர்த்த" நடவடிக்கை உறுதுணையாக இருந்திருக்கும். அன்று, ஆதிக்க சாதியினரான வெள்ளாளரில், ஒரு சிறு பிரிவினரே மேட்டுக்குடியினராக இருந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாகவும், ஆங்கிலக் கல்வியில் புலமை பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அதே சாதியில் பெரும்பான்மையானோர் ஏழை விவசாயிகளாக, அதாவது உழைக்கும் வர்க்கமாக இருந்தனர். அவர்கள் தான், நாவலரின் "சைவமும், தமிழும் வளர்த்த பாடசாலைகளில்" படித்திருப்பார்கள். அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்திருக்கும். ஆனால், தாம் ஆங்கிலேய ஆட்சியில் ஒரு வர்க்கமாக ஒதுக்கப் படுகிறோம் என்ற உண்மை தெரிந்து விடாமல் மறைப்பதற்கு, நாவலர் அவர்களுக்கு சாதிவெறிக் கருத்துக்களை போதித்து இருக்கிறார்.

5. அந்தக் காலத்தில் இலவசக் கல்வி கிடையாது. எல்லா இடங்களிலும் கட்டணக் கல்வி தான். அதே நேரம், பொதுக் கல்வியும் இருக்கவில்லை. நாவலர் கட்டிய இந்துப் பாடசாலைகள் தனியார் மத நிறுவனம் ஒன்றால் நிர்வகிக்கப் பட்டன. மேலும், அங்கு தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கல்வி உரிமை மறுக்கப் பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பள்ளிக்கூடங்களில் மட்டும், கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் குறைந்த எண்ணிக்கையில் சிலரை சேர்த்துக் கொண்டனர்.

இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியது என்னவெனில், ஆறுமுக நாவலர் ஒரு காலனிய எதிர்ப்பாளர் அல்ல, மாறாக ஒரு காலனிய ஒத்தோடி. அதை நிரூபிப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை காட்டலாம். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் நடத்திய காந்தி போன்ற "தீவிரவாதிகளை" கூட பிரிட்டிஷ் காலனிய அரசு கடுமையாக நடத்தவில்லை. நாவலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுண்டு விரலைக் கூட நீட்டாதவர். அவரால் என்ன ஆபத்து வந்து விடப் போகிறது?

ஆறுமுகநாவலர் சாதித் தீண்டாமை பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார். ஆனால், குறைந்தது ஒரு வரியாவது ஆங்கிலேயரின் நிறவாத/இனவாத தீண்டாமை பற்றி எழுதவில்லை. தனது சொந்த மக்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டுகொள்ளவில்லை. அதையெல்லாம் கண்டும் காணாத மாதிரி புறக்கணித்தார். அப்படியான ஆறுமுகநாவலர் ஒன்றில் அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக் குழுத் தலைவராகவே இருந்திருக்க வேண்டும்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்
அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள்

Monday, September 19, 2011

ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஆறு)

இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்," என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, இலங்கைக்கு தன்னாட்சி வழங்கும் திட்டம் மெல்ல மெல்ல நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளது. கோல்புறூக், டொனமூர், சோல்பரி என ஆங்கிலேய பிரபுக்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழுக்கள், இலங்கைத் தீவுக்கென விசேடமான யாப்புகளை எழுதின. இந்த அரசியல் யாப்புகளின் பிரகாரம், "சிங்கள-தமிழ் மேட்டுக்குடிக்கு" ஆட்சியில் பங்கு பெறும் சந்தர்ப்பம் வாய்த்தது. 1948 ல் "சுதந்திரம்" கிடைப்பதற்கு முன்னரே, உள் நாட்டில் சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் அரசு செயற்படத் தொடங்கியிருந்தது. வெளிநாட்டு விவகாரம், இராணுவம், பெருந்தோட்டப் பொருளாதாரம் போன்ற துறைகளை மட்டும் பிரிட்டிஷ்காரர்கள் நிர்வகித்து வந்தனர். 1948 க்கு பின்னரும், நிலைமை பெருமளவு மாறவில்லை. புதிதாக பதவியேற்ற "சிங்கள அரசு", பிரிட்டிஷ் ஆளுநருடன் ஒத்துழைத்தது. ஆளுநர் மட்டுமல்ல, அரசியல் யாப்பு வரைந்த சோல்பரி பிரபு கூட அடிக்கடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருந்தார். மன்னராட்சி நிலவும் ஐரோப்பிய நாடுகளில், அமைச்சரவையும், அரச குடும்பமும் கூட்டுச் சேர்ந்து முடிவுகளை எடுப்பது போலத்தான் அன்றைய நிலைமை இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்தின் ஆரம்பமான, இரண்டாம் உலகப் போர் இலங்கை நிலவரத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. போர் ஆரம்பிக்க முன்னரே, "ஆசியாவில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்...." என்று, சிங்கள அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கத் தொடங்கி விட்டனர். பல காலமாக, சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும், '"யார் சிறந்த ஆங்கிலேய விசுவாசி?" என்பதைக் காட்டுவதில் போட்டி போட்டனர். அப்படி இருந்தும், ஆங்கிலேயர்கள் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். "பிரிட்டனின் எதிரி நாடான ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலை பெறும் எண்ணம் உள்ளதா?" என்ற சந்தேகம் அன்றைய சூழ்நிலையில் சாத்தியமானதே. இந்தியாவில், நேதாஜி ஜப்பானியரின் உதவியுடன் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு வந்தார். 1942 ம் ஆண்டு, பிரிட்டிஷ் காலனிகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகள் ஜப்பானியரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். இலங்கைத் தீவையும் ஜப்பானியர்கள் கைப்பற்றக் கூடிய அபாயம் தோன்றியது. கொழும்பிலும், திருகோணமலையிலும் குண்டுகள் வீசப் பட்டன. இருந்த போதிலும், இலங்கையின் ஆளும் வர்க்கம், பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரை, "ஏகாதிபத்தியப் போர்" என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். மலையகத்தில், இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று விளங்கின. போர் தொடங்கியவுடன், உலகச் சந்தையில் இரப்பரின் விலை அதிகரித்ததால், ரப்பர் ஏற்றுமதி காரணமாக, இலங்கைப் பொருளாதாரம் வளர்ந்தது. அதேநேரம், இடதுசாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. 1940 ல், மலையகத்தில் பொலிசாருடனான முறுகல்நிலை, தொழிலாளர் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இரப்பர் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் இடம்பெறலாம் என ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அதனால், உலகப்போரை காரணமாகக் காட்டி, பல இடதுசாரிகள் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். குறிப்பாக, சமசமாஜக் கட்சிப் பிரமுகர்கள், "போர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காக" சிறைப் பிடிக்கப் பட்டனர். சமசமாஜக் கட்சி தோழர்கள், சிறைச்சாலைக்கு சென்ற பின்னரும் சும்மா இருக்கவில்லை. கூட இருந்த கைதிகளுக்கும், காவலர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு ஊட்டினார்கள். ஒரு தடவை, சிறைக்காவலாளியின் ஒத்துழைப்புடன், சிறை உடைத்து தப்பித்து விட்டனர். தப்பியவர்கள் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. சிறை உடைப்பினால் ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் காலனிய அரசு, கண்ணில் பட்ட இடதுசாரிகளை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் தறுவாயில், உலக இடதுசாரி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரச்சினை, இலங்கையிலும் எதிரொலித்தது. சமசமாஜக் கட்சி ட்ராஸ்கியை பின்பற்றி நான்காம் அகிலத்தில் இணைந்து கொண்டது. இதனால் அதிருப்தியுற்ற ஸ்டாலினிசவாதிகள், "இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி" யை ஸ்தாபித்தனர். இவ்விரு கட்சிகளும், இன்றைக்கும் அதே கொள்கையுடன் தொடர்கின்றன. யாழ்ப்பாணத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல வரவேற்பிருந்தது. தமிழ் உழைக்கும் மக்கள், அதனை தமது கட்சியாக கருதினார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்திய வெகுஜன அமைப்பான, "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" யிலும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் ஊடுருவி இருந்தனர்.

சர்வதேச மட்டத்தில், ஸ்டாலினின் சோவியத் யூனியன், நேச நாடுகளின் அணியில் பிரிட்டனுடன் கூட்டுச் சேர்ந்தது. சோவியத் சார்பு நிலையெடுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, "பாசிசத்திற்கு எதிரான போர் நீதியானது" என்று கூறி வந்தது. இதனால், பல நூற்றுக் கணக்கான தமிழ் தலித் இளைஞர்கள், இலங்கை காலனிய இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றனர். உற்சாகமாக கட்சிக்கு பாடுபட்ட இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்ததால், கட்சியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தில், உயர்சாதி தமிழர்கள் மிகவும் அரிதாகவே சேர்ந்திருந்தனர். வேளாள நிலவுடமைச் சமூகத்தில், இராணுவத்தில் பணியாற்றுவது கீழ்த்தரமாகக் கருதப் பட்டது. பிற்காலத்தில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த பொழுது, "உயர்சாதி மனப்பான்மையினால் ஏற்பட்ட பின்னடைவு" பெரிதும் உணரப் பட்டது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பொறுத்த வரையில், இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும். ஆசியாக் கண்டத்தில் ஆங்கிலேயரின் மிகப்பெரும் குடியேற்ற நாடான, அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் கப்பல்கள் யாவும், இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று செல்வது வழக்கம். இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், பிரிட்டனால் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஓரிரு ஆண்டுகளில், சிங்கப்பூரும், மலேசியாவும், ஜப்பானால் கைப்பற்றப் பட்டன. அந்த அவமானகரமான தோல்வியின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. ஜப்பான் சரணாகதி அடையும் வரையில், தூர கிழக்காசியாவுக்கான இராணுவ கட்டளைப் பணியகமாக இலங்கை திகழ்ந்தது. போர்க்களத்திற்கு அனுப்பப்படும் படையினரை பராமரிக்கும் மையமாகவும் இலங்கையை தேர்ந்தெடுத்தார்கள். இதனால், நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அன்று இரண்டாம் உலகப்போருகாக்காக கட்டப்பட்ட மருத்துவமனைகள் இன்றைக்கும் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது, இலங்கையில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள், நீண்ட காலமாக இரகசியமாக வைக்கப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகருக்கு அருகாமையில் உள்ள, இரத்மலானை விமான நிலையம், ஜப்பானிய விமானக் குண்டுவீச்சினால் சேதமடைந்தது. விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கட்டிடங்கள் நாசமடைந்த செய்தி மட்டுமே வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில், அன்றைய தாக்குதலில் (5 ஏப்ரல் 1942) முப்பதுக்கும் அதிகமான பிரிட்டிஷ் போர் விமானங்கள் நாசமாக்கப் பட்டன! நான்கு நாட்கள் கழித்து, திருகோணமலை துறைமுகம் தாக்கப்பட்டது. கேமிஸ், வம்பயர் என்ற இரண்டு யுத்தக் கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டன. சீனன்குடா எண்ணெய்க் குதம் தீப்பற்றி எரிந்தது. உண்மையில், பிரிட்டிஷ் இலங்கையின் விமானப் படை, கடற்படை என்பன பெருமளவு அழிக்கப்பட்டன. இலங்கையில் பிரிட்டிஷ் படைகள் பலவீனப் பட்டிருக்கும் தகவல்கள் வெளியே கசிந்தால், எதிரிக்கு சாதகமாக அமைந்து விடும். நிலைமையை பயன்படுத்தி, இலங்கை அரசியல் தலைவர்கள் யாராவது ஜப்பானியருக்கு அழைப்பு விடுப்பார்கள், என்று பிரிட்டிஷ் காலனிய அரசு அஞ்சியது. இதைத் தடுப்பதற்காக, மந்திரி சபையில் இருந்த இலங்கையருக்கு அதிக அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. இலங்கை ஆட்சியாளர்களும், பிரிட்டனுக்கு விசுவாசமான சமர்த்துப் பிள்ளைகள் என்பதை நிரூபித்தார்கள். உண்மையில், இலங்கைக்கு வழங்கப்பட்ட "சுதந்திரம்", மேற்கத்திய விசுவாசிகளான மேட்டுக்குடியினருக்கு கொடுக்கப்பட்ட பரிசாகும்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்: