Sunday, November 29, 2015

IDFA : ஆம்ஸ்டர்டாம் ஆவணப் பட விழாவில் ஆர்வத்தை தூண்டும் படங்கள்


நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரில், நவம்பர் 2015, சர்வதேச ஆவணப் படங்களின் திரைப்பட விழா (IDFA) நடைபெற்றது. அதில் நான் கண்டுகளித்த, மூன்று திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.




The Black Panthers: Vanguard of the Revolution

அமெரிக்காவில் அறுபதுகளில் இயங்கிய கருப்பின மக்களின் விடுதலை இயக்கமான கருஞ் சிறுத்தைகள் (Black Panthers) பற்றிய ஆவணப் படம்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் சம உரிமைகள் கொடுக்கப்படாமல் ஒடுக்கப் பட்ட காலத்தில் தோன்றிய மாவோயிச - கம்யூனிச இயக்கம் அது. அமெரிக்க உழைக்கும் மக்களின் விடுதலையையும், முக்கியமாக கருப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக அதன் அரசியல் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. அதனால், கருப்பின மக்கள் மட்டுமல்லாது, வெள்ளையின ஏழை மக்களும் அந்த இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக இருந்த போதிலும், அதன் புரட்சிகர அரசியல் கோட்பாடுகள் அமெரிக்க அரசை அச்சுறுத்தின. ஆரம்பத்தில் அதன் உறுப்பினர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. ஆனால், அரசியல் நிர்ணய சட்டம் வழங்கிய உரிமையை பயன்படுத்தி துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

அமெரிக்க அரசு, கருஞ் சிறுத்தைகள் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்றும், கிரிமினல் கும்பல் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது. தலைவர் ஹூவி நியூட்டன் கைது செய்யப் பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு, கருப்பின- வெள்ளையின மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தினால் ஊடகங்களின் கவனம் குவிந்தது. அமெரிக்கா முழுவதும் கருஞ் சிறுத்தைகள் பிரபலமடையத் தொடங்கினார்கள். அவர்களும் ஊடகங்களின் கவனத்தைக் கவரும் வகையில் நடந்து கொண்டனர். கருஞ் சிறுத்தை உறுப்பினர் போன்று லெதர் ஜாக்கட் அணிவதும், இராணுவத் தொப்பி அணிவதும், சாதாரண இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

மக்கள் ஆதரவு பெற்ற இயக்கத்தை அழிப்பது மிகவும் கடினமானது. அதனால், கருஞ் சிறுத்தைகள் உறுப்பினர்களை மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தும் சதி மேற்கொள்ளப் பட்டது. வெள்ளை இனவெறியூட்டப் பட்ட பொலிஸ், வேண்டுமென்றே சில உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

பொலிசாரின் சீண்டுதல் காரணமாக, பதிலுக்கு கருஞ் சிறுத்தைகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினால், அந்த இயக்கத்தை அழித்து விடுவது அரசின் நோக்கம். நிலைமை ஆபத்தான கட்டத்தை அடைந்த படியால், பொது மக்கள் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைக்க அஞ்சினார்கள்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கத்தின் சர்வதேச கிளை, அல்ஜீரியாவில் இயங்கியது. அமெரிக்காவுடன் எந்த வித இராஜதந்திர உறவுமற்றிருந்த அல்ஜீரியாவில் சர்வதேச செயலகம் அமைப்பது மிகவும் இலகுவாக இருந்தது. அங்கிருந்த படியே, சீனா, வியட்நாம், வட கொரியா போன்ற மூன்றாமுலக கம்யூனிச நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Stanley Nelson உடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்காவின் சமூக வரலாற்றில், கருஞ் சிறுத்தைகள் ஏற்படுத்திய மாற்றம் முக்கியமானது என்று தெரிவித்தார். "இன்றைக்கு, இந்தத் திரைப் படத்தை பார்வையிடுவதற்காக, ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மழையையும், குளிரையும் பொருட்படுத்தாது இந்த அரங்கத்தில் கூடி இருக்கிறார்கள். கருஞ் சிறுத்தைகள் கொண்டு வந்த புரட்சி இன்னமும் மக்கள் மனதில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை அது நிரூபிக்கின்றது." என்றார்.

Driving with Selvi

தமிழ்நாட்டில் வசிக்கும், முதன்முதலாக டாக்சி ஓட்டி பிரபலமான பெண் சாரதி செல்வி பற்றி, சிலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். அவரது வாழ்க்கைக் கதை "Driving with Selvi" என்ற பெயரில் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த IDFA திரைப்பட விழாவில் அது திரையிடப் பட்ட பொழுது, பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில், செல்வியும் தனது குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த ஆவணப் படத்தை ஒரு NGO தயாரித்திருப்பதால், இடையிடையே NGO பிரச்சார வாடையும் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மற்றும் படி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக செல்வி படம் முழுவதும் பிரகாசிக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட செல்வி, சரளமாக தமிழும் பேசக் கூடியவர். அவர் தற்போது ஒரு தமிழ் வாலிபரை மறுமணம் செய்து கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

குடும்பத்தினரால் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட செல்வி, தனது கதையை சொல்லத் தொடங்குகின்றார். சிறுவயதில் தந்தையை இழந்த செல்வி, ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தாயால் கட்டாயப் படுத்தப் பட்டு திருமணம் செய்து வைக்கப் பட்டார். அதற்குப் பிறகு கணவனாக வந்தவன் தாங்க முடியாத அளவுக்கு துன்புறுத்திய படியால், கொடுமைகளை தாங்க முடியாமல் வீட்டை விட்டோடி, (இந்தப் படத்தை தயாரித்த) NGO விடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

கொடுமைக்கார கணவனுடன் வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட தன்னை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முன்வரவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். வழமையான கொடுமைகள் போதாதென்று, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுக்குமாறு சித்திரவதை செய்ததாக சொல்லி அழுகின்றார். திருமணத்திற்கு முன்னர் தன்னைப் புரிந்து கொண்ட அண்ணனும், தன்னை நடத்தை கெட்டவள் என்று சொன்னதைக் கேட்டு, இரத்த உறவுகள் மீதான நம்பிக்கை தகர்ந்து போனதை குறிப்பிடுகின்றார். அதனால் இன்று வரையில் தனது குடும்ப உறவுகளுடன் தொடர்பில்லாமல் வாழ்வதாகவும் கூறுகின்றார்.

கடந்த கால வாழ்க்கையில் கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக, எல்லா ஆண்களும் இப்படித் தான் என்ற விரக்தியில் இருந்திருக்கிறார். 15 வயதில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது, அதற்குப் பிறகு துரதிர்ஷ்டம் தொடங்கியது என்றிருந்தவருக்கு புதியதொரு துணை கிடைக்கிறது. விஜி என்ற தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபரின் காதல் கிடைத்த பின்னர், வாழ்க்கையில் தனது அதிர்ஷ்டம் ஆரம்பமானதாக கூறுகின்றார். இருவரும் மனமொத்து காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட பின்னர், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.

சிறு வயதிலேயே சொல்லொணா துன்பங்களை அனுபவித்து, தற்கொலைக்கு கூட முயற்சித்து உயிர் தப்பி விட்டார். அதற்குப் பிறகு, உலகிற்கு வாழ்ந்து காட்டுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்திருக்கிறார். அவரைப் போன்ற பல அபலைப் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் விரக்தியின் விளிம்பில் நின்ற செல்வி, தொழில் தகைமை கொண்ட சாரதியாக சாதித்துக் காட்டியதுடன், மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வது எப்படி என்பது வியப்பிற்குரிய விடயம். அதனை படத் தயாரிப்பாளரே நேரில் கேட்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் செல்வி: "வாகனம் ஓட்டும் பொழுது ஒரு பாதை கரடுமுரடானதாக இருக்கும். இன்னொரு பாதை மிருதுவாக இருக்கும். வாழ்க்கையும் அது போலத் தான். மனம் தளராமல் புதியதொரு வாழ்க்கையை அமைத்து புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்வது தான் மகிழ்ச்சியின் அடிப்படை." படம் முழுவதும் செல்வியுடன் கூடவே பயணம் செய்த பார்வையாளர்கள், படம் முடிந்த பின்னர் பலத்த கரகோஷம் செய்து ஆதரவைத் தெரிவித்தனர்.

Under the Sun

வட கொரியாவை பார்க்கும் கோணத்தில், அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, வட கொரியா "தலையில் கொம்பு முளைத்த அசுரர்களின் தேசம்". ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு "சர்க்கஸ் கூடாரம்"!

தயாரிப்பாளர் Vitaly Mansky நெறிப்படுத்தலின் கீழ், Under the Sun ஆவணப் படமானது, செக் (அல்லது ரஷ்யா) நாட்டை சேர்ந்த குழுவினரால், சுமார் ஒரு வருட காலம் வட கொரியாவில் தங்கி இருந்து படமாக்கப் பட்டுள்ளது.

பியாங்கியாங் நகரில் வாழும் Zin-mi குடும்பத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் படம் எடுக்கப் பட்டுள்ளது. அந்தக் குடும்பத்து சிறுமி தான் கதாநாயகி. அவள் பாடசாலையில் மாணவர் ஒன்றியத்தில் சேர்வது முதல் பிரமாண்டமான நடனக் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றுவது வரையில் படமாக்கியுள்ளனர். அதே மாதிரி, அவளின் பெற்றோர் வேலை செய்யும் தொழிலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.

இது ஒரு ஆவணப்படமாக இருந்தாலும், கொரிய அரசின் மேற்பார்வையின் கீழ் நடந்தாலும், சில காட்சிகள் டைரக்டர் சொன்ன படி அமைந்துள்ளது போன்று தெரிகின்றது. பல இடங்களில் டைரக்டர் முத்திரை பதித்துள்ளார். எடிட்டிங் கூட கலைநயத்துடன் பேணப் பட்டுள்ளது. அதனால் படத்தின் கதாநாயகியான கொரிய சிறுமி கூட, சில இடங்களில் டைரக்டர் சொற்படி நடித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

குறிப்பாக சிறுமி முதன் முதலில் நடனம் பழகும் பொழுது அழுவது. பாடசாலையில் முன்னாள் போர்வீரர் உரையாற்றும் நேரம் தூங்கி விழுவது போன்றவற்றை சொல்லாம். பாடசாலைக்கு சமூகமளிக்கும் முன்னாள் போர்வீரர், மணிக்கணக்காக உரையாற்றும் நேரம், அதைக் கேட்கும் பொறுமை பிள்ளைகளுக்கு இருக்காது. அந்த முன்னாள் போர்வீரர், கொரியப் போரில் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய கதையை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமிக்கு தூக்கக் கலக்கத்தில் கண்கள் செருகுகின்றன. பின்னர் சுதாகரித்துக் கொண்டு கண்களை திறக்கிறாள். இப்படி குறைந்தது பத்து நிமிடங்கள் தூக்கத்துடன் போராட்டம் நடக்கிறது. டைரக்டர் அதைப் படமாக்கியுள்ள விதம், அரங்கில் இருந்த பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.

ஐரோப்பிய மக்களின் பார்வையில் வட கொரியா ஒரு கிளுகிளுப்பூட்டும் மியூசியம் நாடு. அங்கு நடப்பன எல்லாம் நாடகத் தனமானவை. இயல்பான வாழ்க்கை அங்கே கிடையாது. படத் தயாரிப்பாளரும், அவ்வாறான ஒரு தலைப் பட்சமான ஐரோப்பிய கோணத்தில் இருந்தே படமாக்கியுள்ளார். அதனால் தான் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கண்டதற்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தொழிலகத்தில் பணி புரியும் தொழிலாளர்கள், உற்பத்தி தொடர்பாக உரையாற்றும் காட்சி ஒன்று வருகின்றது. மிகச் சிறப்பாக வேலை செய்து, அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த பெண்மணிக்கு பாராட்டுத் தெரிவித்து பூச்செண்டு வழங்குகிறார்கள். சக தொழிலாளி எப்படிப் பேச வேண்டும் என்று முகாமையாளர் முன்கூட்டியே பயிற்சி அளிக்கிறார். இந்தக் காட்சிகளுக்கும் அரங்கில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

அது மட்டுமல்ல, இறுதிக் காட்சியில் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து, கொரியப் போரில் மரணமடைந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்தில் பூச் செண்டுகளை அடுக்கி வைத்து வணங்கி விட்டு செல்கின்றனர். ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு அதுவும் நகைச்சுவைக் காட்சி தான்! எது எதற்கு சிரிப்பது என்ற விவஸ்தையே இல்லையா? சிலநேரம், தமிழர்களின் கார்த்திகை மாத மாவீரர் நினைவுதினத்தை படமெடுத்துக் காட்டினாலும், ஐரோப்பியர்கள் இப்படித் தானே கேலி செய்து சிரிப்பார்கள்?

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Vitaly Mansky கேள்விகளுக்கு பதிலளித்தார். வட கொரியாவில் தங்கியிருந்த காலம் முழுவதும், அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டதாக கூறினார். படமெடுத்து முடிந்த பின்னர், தனியான எடிட்டிங் அறை ஒன்றில் வீடியோ முழுவதையும் போட்டுப் பார்த்தார்களாம். இருப்பினும், தந்திரமாக கமெராவில் இரண்டு டிஸ்க் வைத்து, சில காட்சிகளை மறைத்தது பற்றி பிரஸ்தாபித்தார்.

இது போன்ற "வட கொரியாக் கதைகள்" ஒன்றும் ஐரோப்பாவுக்கு புதியன அல்ல. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வட கொரியா சென்று படமெடுப்பவர்கள் எல்லோரும், ஸ்காட்லான்ட் யார்ட் பயிற்சி பெற்ற துப்பறியும் சாம்பு மாதிரி நினைத்துக் கொள்வார்கள். "நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஒன்பதாம் மாடி இல்லை... டட்ட டாய்ங்... அங்கே என்ன நடக்கிறது.... வாருங்கள் துப்புத் துலக்குவோம்..." "நாங்கள் சென்ற பஸ் வண்டி வழி தவறிச் சென்றது... அங்கே நாம் கண்ட காட்சிகள்...." இப்படித் தான் ஜூனியர் விகடன் பாணியில், வட கொரியா பற்றிய ஆவணப்படம் தயாரித்திருப்பார்கள்.

அதே மாதிரித் தான், இந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் Vitaly Mansky உம், வட கொரிய அதிகாரிகளை ஏமாற்றிய வீரப் பிரதாபங்களை பற்றி நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அனேகமாக, ரஷ்ய அரசின் உதவி பெற்று, வட கொரியா சென்று படமாக்கியுள்ளனர். அதனால் படம் தயாரித்து முடிந்த பின்னர், தங்களது "குளறுபடிகள்" பற்றி, வட கொரிய அரசு ரஷ்ய அரசிடம் முறைப்பாடு செய்ததாம். ஆகவே, படத்தின் முடிவில் நன்றி தெரிவிக்கும் பட்டியலில் ரஷ்யாவின் பெயரை எடுத்து விட்டு, ரஷ்யாவுக்கு வந்த சங்கடத்தை தவிர்த்தார்களாம்.

வட கொரியாவுக்குள் சென்று, அங்கிருந்த அரசு அதிகாரிகள் அறியாமலே உண்மை நிலவரத்தை படமாக்கி வந்ததாக கதையளந்த தயாரிப்பாளர் இறுதியாக ஒன்று சொன்னார். வட கொரியாவில் இன்டர்நெட் இல்லாத காரணத்தால், அவர்கள் தனது பெயரை கூகிளில் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாதாம். ஸ்ஸப்பா.... தாங்க முடியல....

No comments: