Showing posts with label யூதர்கள். Show all posts
Showing posts with label யூதர்கள். Show all posts

Thursday, June 20, 2019

நாஸிகளுடன் ஒத்துழைத்த "யூத ஒட்டுக் குழு" பற்றிய திரைப்படம்


கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, "சவுலின் மகன்" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை விபரமாக சித்தரிக்கின்றது. போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் தடுப்பு முகாமில், யூதர்கள் வகை தொகையின்றி, நச்சு வாயு கொடுத்து படுகொலை செய்த சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். இந்தத் திரைப் படம் அதனை மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது என்பது, அதன் சிறப்பம்சம்.

ஜெர்மன் நாஸிகள், யூதர்களை படுகொலை செய்வதற்கு, யூதர்களையே பணியில் ஈடுபடுத்தினார்கள்! கொஞ்சம் பலசாலிகளான யூதர்களை தேர்ந்தெடுத்து, "சொன்டர் கமாண்டோ" (Sonder Kommando) என்று பெயரிட்டார்கள். தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப் படும் யூதர்களின், ஆடைகளைக் களைவது, அவர்களது உடைமைகளை வகைப் படுத்தி, தனித் தனியாக அடுக்கி வைப்பதில் இருந்து அவர்களது பணிகள் ஆரம்பமாகின்றன.

நிர்வாணமாக்கப் பட்ட யூதர்களை, நச்சு வாயு ஊட்டி கொலை செய்வது மட்டுமல்ல, சடலங்களை இழுத்துச் சென்று நிலக்கரி போட்டு எரிப்பதும், சாம்பலை ஆற்றில் கரைப்பதும், சொன்டர் கமாண்டோவின் பணிகள். இறந்த யூதர்களின் உடல்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் குவித்து வைக்க வேண்டும். நச்சு வாயுக் குளியல் நடந்த இடத்தில், நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்களை, வேறெந்த திரைப்படமாகிலும் இந்தளவு விபரமாக எடுத்துக் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. அவுஷ்வித்ஸ் முகாமில், சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும், ஹங்கேரி நாட்டை சேர்ந்த சவுலின் மகனும் நச்சு வாயு ஊட்டி படுகொலை செய்யப் படுகிறான். தனது மகனின் உடலை, யூத மத அனுஷ்டானங்களின் படி, அடக்கம் செய்ய வேண்டும் என்பது சவுலின் விருப்பம். அதனால், சடலங்களை பரிசோதிக்கும் மருத்துவர் (மருத்துவர்களும் யூதக் கைதிகள் தான்) ஒருவரின் உதவியுடன், மகனின் சடலத்தை தனது வதிவிடத்தில் மறைத்து வைக்கிறான்.

சொன்டர் கமாண்டோக்களில் யூத ராபி (மத குரு) இருக்கிறாரா என்று, சவுல் பல இடங்களிலும் தேடுகிறான். ஆனால், ராபிக்கள் யாரும் தம்மை அடையாளப் படுத்த அஞ்சுகின்றனர். இறந்த யூதர்களின் சாம்பலை ஆற்றில் கரைக்கும் இடத்தில், ஒரு கிரேக்க யூத ராபியை கண்ட சவுல், அவரை தன்னோடு வருமாறு கெஞ்சுகிறான். ஆனால், அவர் எதுவும் பேசாமல், தான் அடையாளம் காணப் பட்டதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அசம்பாவிதம் நடக்கும் இடத்திற்கு வரும் நாஸி இராணுவ அதிகாரி, அந்த ராபியை சுட்டுக் கொல்கிறான்.

இறுதியில், எரிப்பதற்காக கொண்டு செல்லப் பட்ட பிரெஞ்சு யூதர்களில் ஒரு ராபியை கண்டுபிடித்த சவுல், அவரை தன்னோடு வருமாறு கூட்டிச் செல்கிறார். நாஸிகளின் கெடுபிடிகளை மீறி, சொன்டர் கமாண்டோக்கள் தாங்கும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும், அங்கே வரும் பிற யூத பணியாளர்கள், சவுலின் மகனின் பிரேதம் கிடப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது "எங்களை எல்லாம் கொல்லப் பார்க்கிறாய்..." என்று சொல்லும் பொழுது, "நாங்கள் எப்போது இறந்து விட்டோம்..." என்று சவுல் பதில் கூறுகின்றான்.

அதே நேரம், நாஸிகளுக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்கு, பிற சொன்டர் கமாண்டோக்கள் தயாராகிறார்கள். அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வந்து சேருகின்றன. ஒரு தருணத்தில், தங்களில் ஒருவனை நாஸிகள் எரித்து விட்டார்கள் என்று அறிந்த சொன்டர் கமாண்டோக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.

முகாமில் ஆயுத மோதல் நடக்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு, சவுல் தனது மகனின் சடலத்தை தூக்கிக் கொண்டு, ராபியுடன் தப்பி ஓடுகின்றான். காட்டுப் பகுதி ஒன்றில், மத அனுஷ்டானங்களுடன் சிறுவனின் சடலத்தை புதைக்கும் முயற்சி தோல்வியடைகின்றது.

ஏனெனில், முகாமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாஸி படையினரிடம் இருந்து தப்பியோடும், சொன்டர் கமாண்டோக்கள் அந்த வழியாக வருகின்றனர். ஓர் ஆற்றைக் கடக்கும் நேரம், சவுல் தனது மகனின் சடலத்தை பறிகொடுக்கிறான்.

காட்டுக்குள் இன்னும் சில மைல் தூரம் ஓடினால் போதும். அப்போது, ஏற்கனவே போலந்தின் சில பகுதிகளை விடுதலை செய்து விட்ட, சோவியத் செம்படையினரிடம் தஞ்சம் கோரலாம். இல்லாவிட்டால், காடுகளுக்குள் மறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

ஓடி வந்த களைப்பில், சவுலும், யூத கிளர்ச்சியாளர்களும் ஒரு குடிசைக்குள் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களுடன் வரும் நாஸி படையினர், அந்த இடத்தை அண்மித்து விடுகின்றனர். இறுதியில் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் படுவதுடன் படம் முடிவடைகின்றது.

யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்கு, நாஸிகளால் ஈடுபடுத்தப் பட்ட சொன்டர் கமாண்டோக்களின் வரலாறு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். உண்மையில், அவர்களது ஆயுட்காலமும், வேலை செய்யும் சிறிது காலம் தான் நீடித்தது. தேவை முடிந்தவுடன், நாஸிகள் அவர்களையும் கொன்றனர்.

நாஸிகளின் காட்டாட்சியில் நடந்த கொடூரங்களை விரிவாக எடுத்துரைக்கும் இந்தத் திரைப்படம், வெளியில் அதிகம் அறியப் படாத பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும் யூதர்கள், தமது சொந்த இனத்தவர்களை எரிக்கும் பொழுது, எந்தளவு வேதனையுடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருப்பார்கள்? படத்தில் ஓரிடத்தில் கதாநாயகன் சொல்வதைப் போன்று, "எப்போதோ இறந்து விட்ட", நடைப்பிணமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

இரண்டாம் போரின் முடிவில் இனப்படுகொலையில் அகப்படாமல் உயிர் தப்பிய யூதர்களில் பலர், நாஸிகளுடன் ஒத்துழைத்த "சொன்டர் கமாண்டோக்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின்  படையினர் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை.  அந்த யூதர்களை நாஸிகளின் ஒட்டுக் குழுவாகவே கருதினார்கள். அதனால் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.


Wednesday, July 19, 2017

இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பன்னிரண்டு)
"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்." இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா? காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. "பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்," என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், "இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்..." என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. "பூமி உருண்டையானது" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும்? சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா? சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தான் உருவானது.

எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், "அவர்கள் யூதர்கள் இல்லை," என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை "தமிழன் இல்லை" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், "யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

யூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும்? மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் "யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்," என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், "பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்." என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா?")

நிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், "வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்." என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். "மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்," என்றும், "புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது." என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். "வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது." என்றார்கள். "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.

1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், "சமூக உயிரியல்" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.

யூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:
A social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating
.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். "வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன." (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், "சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்," ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.

(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்

("தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"
பகுதி : மூன்று )

"அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டியதாக" கூறும் இந்துத்வா பரப்புரை போல, "ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு ஒமார் மசூதி கட்டியதாக" சியோனிசவாதிகள் கூறுகின்றனர். ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்லாமியர்கள், அங்கிருந்த யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு மசூதி கட்டியதாகவும், அதற்கு இஸ்லாமியப் படையெடுப்பை நிகழ்த்திய ஒமாரின் நாமம் சூட்டப்பட்டதாகவும் ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. யூதர்களையும், இஸ்லாமியர்களையும் மோத விட்டு குளிர்காயும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு சில தமிழர்களும் இரையாகியுள்ளனர். வரலாற்றை திரிபுபடுத்தி புனையப்பட்ட இந்தக் கதை, இஸ்லாமியர் மீதான பகைமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ரோமர்கள் இடித்த யூத ஆலயத்தை, இஸ்லாமியர் இடித்தாதாக கூறுவது ஒரு வரலாற்று மோசடி. அதிலும் அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது "ஒமாரின் மசூதி" என்பது காதிலே பூச்சுற்றும் வேலை. அது ஒரு மசூதியல்ல. அதைக் கட்டியது ஒமாருமல்ல.

கி.மு. 70 ல் ரோமர்களால் ஜெருசலேம் தரைமட்டமாக்கப் பட்ட பொழுது, யூதர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெருசலேமில் ரோமர்களின் அடிச்சுவட்டில் கிறிஸ்தவ ராஜ்ஜியம் பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது. கி.பி. 638 ல் இஸ்லாமியப் படைகள் ஜெருசலேமை வந்தடைந்தன. ஜெருசலேமில் மிகப் புனிதமான, இயேசுவின் தேவாலயத்தை நிர்வகித்த தலைமைப் பாதிரியார் சொப்ரோனியுஸ், இஸ்லாமியப் படைகளின் தளபதி ஒமார் முன்னிலையில் சரணடைய சம்மதித்தார். சொப்ரோனியுஸ் ஒமாருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களின் அருகில் முஸ்லிம்கள் நடமாட முடியாது என்றும், அதே நேரம் யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க முடியாது என்றும் எழுதப்பட்டது. ("The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy) இஸ்லாமிய மதத்தில் புனித நகரான ஜெருசலேத்தின் தனித்துவம் முஸ்லிம்களால் மதிக்கப்பட்டது. ஆனால் யூதர்கள் வசிக்க முடியாது என்ற வாக்கியம் ரோமர்களின் சட்டத்தை அடியொற்றி கிறிஸ்தவ பாதிரிகளால் சேர்க்கப்பட்டது.

இஸ்லாமியத் தளபதி ஒமார், ஜெருசலேமில் இயேசுவின் தேவாலயத்தை பார்வையிட சென்ற பொழுது, தொழுகைக்கு நேரமாகி விட்டது. உடனே ஒமார் தொழுவதற்கு ஏற்ற இடம் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தலைமைப் பாதிரி, தேவாலயத்தின் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த ஒமார் கூறிய விளக்கம் இது: "நான் இந்த இடத்தில் தொழுகை நடத்தினால், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தேவாலயத்திற்கு உரிமை கோருவார்கள்." ஒமார் பின்னர் தேவாலயத்தின் வெளியே சென்று தொழுகையை நடத்தி முடித்தார். இன்றைய அல் அக்சா மசூதி அந்த இடத்திலேயே கட்டப்பட்டது. இந்தக் குறிப்புகளை அரபு-கிறிஸ்தவ சரித்திர ஆசிரியர் Said Batriq எழுதி வைத்துள்ளார்.
("The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy)

Ka ' ab al Ahbar
என்ற, இஸ்லாமியராக மதம் மாறிய முன்னாள் யூத மதகுரு, யூதர்களின் இடிந்த ஆலயம் இருந்த இடத்தில் மசூதி கட்டுமாறு, ஒமாருக்கு வழிகாட்டினார். ஆனால் அந்த கோரிக்கையை மறுதலித்த ஒமார், யூத ஆலய இடிபாடுகளை மூடியிருந்த குப்பைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். (கிறிஸ்தவ ஆட்சிக் காலத்தில் அந்த இடம் பாரிய திறந்தவெளி குப்பைத் தொட்டியாக பயன்படுத்தப்பட்டது.) யூத ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒமார் கட்டிய சிறிய மரத்தாலான மசூதி புனரமைக்கப்பட்டு, இன்று "அல் அக்சா மசூதி" என்று அழைக்கப்படுகின்றது.("The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy) உயரமான குன்றின் மேலே கட்டப்பட்ட குவிமாடம் ஒன்றை பலர் மசூதி என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். அது மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரஹாம், தனது பிள்ளையை பலி கொடுக்க எத்தனித்த இடம் என்று நம்பப் படுகின்றது. ஒமாருக்கு பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தை ஆண்ட மாலிக்கின் காலத்தில் அந்த அழகான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் ஜெருசலேம் நகரின் அடையாளமாக விளங்கும் தங்க நிற குவிமாடத்தைக் கொண்ட கட்டிடம் ஒரு மசூதியல்ல என்ற உண்மை பலருக்கு தெரியாது. (http://nl.wikipedia.org/wiki/Rotskoepel)

சியோனிஸ்ட் பரப்புரையாளர்கள் : "உலகெங்கும் யூதர்கள் அகதிகளாக அலைந்து திரிந்தார்கள். அவர்களது சொந்த நாட்டில் மோசமாக நடத்தப்பட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமியப் படையெடுப்பு." என்று கொண்டு வந்து நிறுவ முயற்சிக்கின்றனர். கி.மு. 70 களிலேயே யூதர்களின் ஐரோப்பா நோக்கிய புலப்பெயர்வு நடந்தன என்ற எடுகோளுடன் முரண்படுகின்றது அந்தக் கருத்து. ரோமர்களில் காலத்திலேயே யூதர்களின் தேசம் தனது சுதந்திரத்தை இழந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வல்லரசால் "இஸ்லாமிய தாலிபான்" அரசு விரட்டப்பட்டது போல, கி.மு. 70 ல் ரோமர்கள் "யூத தாலிபான்" அரசை அகற்றினார்கள். (அன்றைக்கும் கடும்போக்கு யூத மத அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை, ரோமர்கள் படையெடுப்புக்கு காரணமாக அறிவித்தார்கள்.) ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை முதல் எதிரியாக கருதிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அமெரிக்கர்களை வலிந்து அழைத்திருந்தனர். சோவியத் படைகள் வெளியேறிய சில வருடங்களில், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. கிட்டத்தட்ட அதே போன்ற வரலாற்றைக் கொண்டவர்கள் தான் யூதர்களும். வரலாறு திரும்புகிறது என்று அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

யூத மத அடிப்படைவாத அரசு, கிரேக்கர்களுடன் போரிட்டு விடுதலை அடைந்திருந்தது. அன்று அவர்களைப் பொறுத்த வரை, சிரியாவை தளமாக கொண்டு ஆதிக்கம் செலுத்திய கிரேக்க சாம்ராஜ்யமே முதல் எதிரியாக தெரிந்தது. யூத அரசு தனது இறைமையை பாதுகாப்பதற்காக, எங்கோ இருந்த ரோம சாம்ராஜ்யத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிரகாரம், "யூத அரசுக்கு ரோமாபுரி பாதுகாப்பு வழங்குமென்றும், ஒன்றின் எதிரி மற்றொன்றாலும் எதிரியாக கருதப்படும் எனவும், யுத்தத்தில் இரு தரப்பும் ஒரே பக்கத்தில் நின்று போரிடுவர் என்றும்," உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. (பார்க்க: 1 மாக்காபீ 8:23-28) ரோமர்களை நண்பர்களாக கருதி செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் யூத அரசின் பலத்தை அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில் சைமன் (கி.மு 140 - 4) என்ற தலைவர், மதகுருமார் பேரவையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். சைமன் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஆன்மீக தலைவரும் கூட. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமாரின் பேரவையில் முல்லா ஒமார் தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவம் அது.

இன்று இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் இருப்பதைப் போல, சுதந்திர யூத தேசத்தை சூழ இருந்தவை அனைத்தும் கிரேக்க நாடுகள். கிரேக்கம் அரசு மொழியாக இருந்தது, ஆனால் வேறு மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்ந்தனர். அன்று பொதுவாக கிரேக்க மொழி பேசும் நாடுகளில் யூதர்கள் மீதான வெறுப்புக் (Anti Semitism) காணப்பட்டது. அது பிற்காலத்தில் கிரேக்கர்களால் கிறிஸ்தவ மதத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டது. கிரேக்க சரித்திர ஆசிரியர் Diodorus Siculus பதிவு செய்த குறிப்புகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
"யூதர்கள் பிற இனக் குழுக்களை பகைவர்களாக கருதுகின்றனர். யூதர்கள் எகிப்தில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். எகிப்தியர்கள் தொழு நோயாளிகளையும், தேகத்தில் வெள்ளைப்புள்ளி கொண்டவர்களையும் சபிக்கப் பட்டவர்களாக கருதி எல்லைக்கு வெளியே விரட்டி விட்டார்கள். அகதிகளாக வெளியேறியவர்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பின்னர் தான் தம்மை யூதர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் மனித குலத்திற்கு எதிராக வெறுப்புக் கொண்ட காரணத்தால், வேடிக்கையான சட்டங்களை கொண்டிருந்தனர். அவர்கள் அந்நியர்களுடன் தமது ரொட்டியை பகிர்ந்துண்ண மாட்டார்கள்." (Diodorus Siculus 34-35,1)

மத்திய கிழக்கில் அலெக்சாண்டர் நிறுவிய கிரேக்க சாம்ராஜ்யம் அழிந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் மேற்கே தோன்றிய ரோம சாம்ராஜ்யம் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மத்திய கிழக்கில் கால் பதிக்க இடம் தேடிக் கொண்டிருந்த ரோமர்கள், யூதர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒரு வல்லரசை விரட்டிய யூத தேசம், இன்னொரு வல்லரசுக்கு அடிமையாகும் என்று அன்று யாரும் நினைக்கவில்லை. சுமார் நூறாண்டு கால சுதந்திரம், பொம்பியுஸ் என்ற ரோம தளபதியினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறு தேசங்களின் இறையாண்மை சாம்ராஜ்யவாதிகளின் நலன்களுக்கு குறுக்கே நிற்குமாயின், அந்த தேசங்கள் அழிக்கப்படும். இன்று தாலிபான்களை ஆப்கானிஸ்தானை அமெரிக்க ஏகாதிபத்தியம் இலகுவாக தூக்கி எறிந்தது போல, அன்று ரோம ஏகாதிபத்தியம் யூத தேசத்தை ஆக்கிரமித்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மத நம்பிக்கை போதும் என்று தாலிபான்கள் கருதியது போல, அன்றைய யூதர்களும் நம்பினார்கள்.

ரோம ஆக்கிரமிப்புக்கு எதிராக கெரில்லாப்போர் நடத்திய யூதர்களின் சீலோட்
(Zealot) இயக்கம், நவீன பயங்கரவாத அமைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். (Early History of Terrorism ) அன்றைய சீலோட் இயக்கத்திற்கும், நமது கால தாலிபானுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு குழுக்களும் கடும்போக்கு மத அடிப்படைவாதிகளை கொண்டிருந்தன. தாமே உண்மையான மத நம்பிக்கையாளர்கள், இறைவன் தமது பக்கமே நிற்கிறார் என நம்பினார்கள். பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் ஒரு பெரிய வல்லரசு இராணுவத்தை வெளியேற்றலாம் என கருதினார்கள். அன்று ரோமர்களால் இறுதியில் சீலோட் கிளர்ச்சி அடக்கப்பட்ட பொழுது, அமைப்பில் இருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். பிற்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் சீலோட் அனுதாபிகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. சீலோட் சைமன் என்று பெயரிடப்பட்ட ஒருவரை விவிலிய நூல் குறிப்பிடுகின்றது. ஜூதாஸ் கூட சீலோட் பாணியில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும், இயேசு அதற்கு மறுத்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு. ரோமர்களும் மிதவாத இயேசுவை ஹீரோவாக்கி, தீவிரவாத ஜூதாசை துரோகியாக்கி விட்டிருக்க சாத்தியமுண்டு. ஏகாதிபத்திய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி தான் இருக்கின்றது.

யூத தேசம் மீதான ரோம ஆக்கிரமிப்புப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக
ஜோசெபுஸ் என்பவர் எழுதிய குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. போரைப் பற்றிய சரித்திரத்தை அவர் மட்டுமே எழுதி வைத்துள்ளார். (The Jewish War )அவரின் எழுத்துகளை ஆராய்வதற்கு முன்னர், பின்வரும் தகவல்கள் முக்கியமானவை. முதலாவதாக அன்று இருந்த யூத தேசம் இஸ்ரேல் என்று அழைக்கப்படவில்லை. அதன் பெயர் யூதேயா. இரண்டாவதாக ஜோசெபுஸ் ரோமர்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிப்படையின் தளபதியாக இருந்தவர். போரின் நடுவில் ரோமர்களிடம் சரணடைந்து ரோம பிரஜையாக மாறியவர். அதனால் அன்றைய யூதர்கள் ஜோசெபுஸ் ஒரு துரோகி என்றழைத்தனர். மூன்றாவதாக, ஜோசெபுஸ் தனது நூலில் இயேசு கிறிஸ்துவை பற்றி குறிப்பிடுகின்றார். அதைத்தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்பவர் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரமாக காட்டுகின்றனர். ஜோசெபுஸ் போன்றவர்கள் எழுதி விட்டதாலேயே, அவற்றை ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனெனில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவரும் கிரேக்கர்களுடன், ரோமர்களுடன் கூட்டுச் சேர்ந்த யூதர்கள். அதாவது அன்றைய யூதர்கள் கிறிஸ்தவத்தை "துரோகிகளின் மதம்" என அழைத்தனர்.

ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை நிர்மூலமாக்கிய ரோமர்கள், ஜெருசலேமை ரோம நகரமாக மாற்றினார்கள். அங்கே யூதர்கள் குடியேறக் கூடாது என தடையுத்தரவு போட்டனர். அது மட்டுமல்ல யூத வரி (Fiscus Judaicus) என்றொரு அநியாய வரி அறவிடப்பட்டது. ஆக்கிரமிப்புக்கு முன்னர் யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்திற்கு வரி செலுத்திக் கொண்டிருந்தனர். தற்போது சக்கரவர்த்தியின் உத்தரவுக்கிணங்க, ரோமாபுரியில் கட்டப்படும் ஜூபிட்டர் ஆலயத்திற்கு யூதர்கள் வரி கட்டினார்கள். இது சம்பந்தமாக ரோம வரித் திணைக்களத்திற்கு நிறைய முறைப்பாடுகள் வந்தன. சிலர் தாம் யூதர்கள் இல்லை என்று மறைத்தனர். யூதர்களை ஒத்த கலாச்சாரத்தை கொண்டிருந்த பிற மதத்தவரும் பாதிக்கப்பட்டனர். "ஒரு தடவை 90 வயது வயோதிபர் ஒருவர் (யூத மத சடங்கின் படி) சுன்னத்து செய்திருக்கிறாரா என, அதிகாரிகளின் முன்னிலையில் ஆடை அவிழ்த்து ஆராயப்பட்டதாக..." நேரில் கண்ட சாட்சியான Suetonius என்பவர் எழுதியுள்ளார்.

ஜெருசலேம் ஆலயத்தை நிர்மூலமாக்கிய காலகட்டத்தின் பின்னர் தான் யூதர்கள் உலகம் முழுக்க அகதிகளாக அலைந்தனர் என்று நினைப்பது தவறு. ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அலெக்சாண்டிரியா (எகிப்து), சிரேனே (லிபியா) ஆகிய நகரங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அன்று அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை, ஜெருசலேம் யூதர்களை விட பல மடங்கு அதிகம். அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் இரண்டாவது பெரிய நகரத்தின் மொத்த அரை மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் யூதர்கள். அலெக்சாண்டரியாவில் வாழ்ந்த யூதர்களும் ஆரம்பத்தில் ரோமர்கள் பக்கம் நின்றனர். இதனால் மனதில் வன்மம் கொண்ட கிரேக்கர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இனக்கலவரத்தில் இறங்கினார்கள். சிறு சச்சரவு கூட கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. எண்ணிக்கையில் அதிகம் என்பதால், சில நேரம் யூதர்களின் கை ஓங்கியிருந்தது. ஆனால் ரோம ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், கிரேக்க சமூகத்தின் சார்பாக இருந்தன. ரோமர்களின் கடவுள் சிலைகள் அமைப்பதற்கு யூதர்கள் எதிர்த்ததும் அதற்கு காரணம்.

கலவரங்கள் காரணமாக அலெக்சாண்ட்ரியா யூதர்கள், தலைநகரான ரோமாபுரிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அதே நேரம் அங்கே ஏற்கனவே குடியேறிய யூத சமூகம் ஒன்றும் இருந்தது. ரோமர்களுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட மக்காபீக்களின் காலத்தில், பல ஜெருசலேம் யூதர்கள் ரோமாபுரியில் குடியேறினர். கி.மு. 63 ல், யூத தேசத்தை வெற்றி கொண்ட ரோம தளபதி பொம்பியுஸ், போர்க் கைதிகளை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்தான். இவர்களும் ரோமாபுரியில் வாழ்ந்த யூதர்களுடன் கலந்து விட்டனர். ரோம சாம்ராஜ்யத்தில் மத சுதந்திரம் காணப்பட்டது. யூதர்கள் அதைப் பயன்படுத்தி, ரோமர்களையும் தமது மதத்தில் மாற்றிக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ மத ஆதிக்கம் வந்த பின்னர் தான் மத மாற்றம் சட்டப்படி தடை செய்யப்பட்டது.
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?
உசாத்துணை:
- "The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy
- "Rome and Jerusalem, The Clash of Ancient Civilizations" by Martin Goodman
- "Vreemd Volk" by Fik Meijer

இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்


("தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"
பகுதி : இரண்டு)
"பைபிளை ஆதாரமாக கொண்டு இஸ்ரேலியர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் இழந்த தேசத்தை உரிமை கோருகிறார்கள்." கவனிக்கவும்: "ஆதாரம்", ஒரு மத நூலான பைபிள். இந்த வாதம் அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இராமாயணத்தை ஆதாரமாக கொண்டு இந்துத்துவவாதிகள் இராமர் அணைக்கும், பாபர் மசூதிக்கும் உரிமை கோருகின்றனர். மகாவம்சத்தை ஆதாரமாக கொண்டு பௌத்த-சிங்கள அடிப்படைவாதிகள், முழு இலங்கைக்கும் உரிமை கோருகின்றனர். விஞ்ஞானம், மெய்ஞானம் வளர்ச்சியடைந்த 21 ம் நூற்றாண்டிலும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய புராணங்களை ஆதாரமாக அடுக்குகிறார்கள். இதை எல்லாம் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் "தமிழ் சியோனிஸ்ட்கள்" ஏற்றுக் கொள்கிறார்களா?

விவிலிய நூலில் வரும் டேவிட் மன்னன் ஸ்தாபித்த ராஜ்ஜியம் பின்னர் இஸ்ரேல், ஜுதேயா என இரண்டாக உடைந்தது. யூதர்கள் என்றால், யூதேயா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பொருள்படும். பாபிலோனியர்களின் படையெடுப்பின் பின்னர் அந்த ராஜ்ஜியம் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. யூதர்களின் தேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதையிட்டு விவிலிய நூல் என்ன கூறுகின்றது? "பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களை எழுபது ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருப்பார்கள்," என்று ஆண்டவர் ஜோசுவா என்ற தீர்க்கதரிசிக்கு அருள்வாக்கு வழங்கினார். இஸ்ரேலியர்களின் தீய செயல்களுக்கு தண்டனையாக ஆண்டவர் பாபிலோனியர்களை படையெடுக்க வைப்பார் என்று ஜோசுவாவின் தீர்க்கதரிசனத்தில் எழுதப்பட்டுள்ளது. “இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையை மறந்து பல தெய்வங்களை வழிபட்டது, யூதர்களின் கடவுளால் பொறுக்க முடியாத குற்றம்.” இத்தால் விவிலிய நூல் கூறும் நீதிமொழி என்னவெனில், யூதர்கள் அகதிகளாக உலகம் முழுக்க அலைய நேரிட்டதற்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.

சியோனிச அரசியல் ஆதரவாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்திய பைபிள் கதைகளை வைத்து இஸ்ரேலுக்கு உரிமை கோரவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, கடைசி இஸ்ரேலிய அரசு, ரோமர்களால் தூக்கியெறியப் பட்டது. 1900 அல்லது 2000 வருடங்களுக்கு முன்னர் அது நடந்தது. அந்த கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை ரோம, கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். அந்த குறிப்புகளில் இருந்து மக்கபீ என்ற யூத அரசு (கி.மு.164 -63 ) இருந்துள்ளமை நமக்குத் தெரிய வருகின்றது. யார் இந்த மக்காபீ? சுருக்கமாக சொன்னால். அந்தக் கால "யூத தாலிபான்கள்"! இஸ்ரேலில் மக்காபீக்களின் ஆட்சிக்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு ஆட்சியாளர்களும் தமது மத சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார்கள். ஒவ்வொரு பிரஜையும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க காவலர்களை நியமித்தார்கள். மதச்சார்பற்றவர்களும், பிற மதத்தவர்களும் ஒன்றில் கொல்லப்பட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தாலிபான்கள் புத்தர் சிலைகளை தகர்த்தனர், மக்காபீக்கள் கிரேக்க மதக் கடவுள் சிலைகளை உடைத்தார்கள்.

மக்காபீக்கள் தமது வரலாற்றை நூல்களாக(Books of the Maccabees) எழுதி வைத்துள்ளனர். அவற்றில் இருந்து மக்காபீ தலைமையிலான யூதர்களின் எழுச்சிக்கு காரணம், மத அடிப்படைவாதம் என்பது தெட்டத் தெளிவாகின்றது. மாசிடோனியா சக்கரவர்த்தி அலெக்சாண்டர் ஆசியா முழுவதையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான். யூதர்களின் நாடும் அதில் அடக்கம். அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னர், அவன் தளபதிகள் சாம்ராஜ்யத்தை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். யூதர்கள் செலியுசிட் என்ற புதிய ராஜ்யத்தின் கீழ் வந்தார்கள். செலியுசிட் ராஜ்யத்தை ஆண்டவர்கள் கிரேக்கர்கள். (அலெக்சாண்டரும் ஒரு கிரேக்கன் தான்) அவர்கள் செயுஸ் போன்ற தமது மதக் கடவுள்களுக்கு ஆலயங்களை கட்டினார்கள். கிரேக்க மதமே அரச மதமாக இருந்தது.

கிரேக்க செலியுசிட் ஆட்சிக் காலத்தில் யூத சமூகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. (யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்ற கட்டுக்கதைகளை கேள்விப்பட்டவர்கள் கவனிக்கவும்.) நகரங்களில் வாழ்ந்த படித்த யூதர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். நிர்வாகத்துறையில் கிடைத்த பதவிகளுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டனர். இன்றைக்கும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசி, ஐரோப்பிய கலாச்சாரத்தில் வாழும் ஒரு பிரிவு இருக்கிறதல்லவா? அது போலத் தான் இதுவும். நமது நாடுகளில் அவ்வாறானவர்கள் மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தை தழுவியதைப் போலவே, அன்றைய யூதர்கள் பலர் கிரேக்க கடவுள்களை வழிபட்டும் வந்துள்ளனர்.

ஜெருசலேம் நகரில் யூதர்களின் பெரிய ஆலயம் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தின் தலைமை மதகுருவை கத்தோலிக்கர்களின் பாப்பரசரோடு ஒப்பிடலாம். அந்த அளவுக்கு யூதர்கள் ஆனவர் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒருவர். மேலும் ஒவ்வொரு யூதனும் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த ஆலயத்திற்கு நிதி வழங்க வேண்டும். இந்தியாவின் திருப்பதி கோயில் போல, ஜெருசலேம் ஆலயமும் அன்று "பணக்கார ஆலயம்" என்று அழைக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், கிரேக்க ஆதரவு யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்தின் தலமைப் பதவிக்காக போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கிரேக்க மன்னனுக்கு லஞ்சம் கொடுத்தேனும் அந்தப் பதவியைப் பெற முடிந்தது. இதனால் பழமைவாத யூதர்கள் அதிருப்தியுற்றனர். பழமைவாத யூதர்கள் கிளர்ச்சி செய்தனர். கிரேக்க மன்னன் Antiochus IV, பெரும்படை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்கினான்.

கிரேக்கமயப்பட்ட யூதர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஜெருசலேம் ஆலயம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் அவர்களும் ஈடுபட்டனர். யூதர்கள் எவ்வாறு யூதக் கோயிலை உடைத்தார்கள் என்று ஆச்சரியப்படலாம். பிரெஞ்சுப் புரட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்படவில்லையா? லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது கத்தோலிக்க தேவாலயங்களை உடைக்கவில்லையா? அப்படியானவர்கள் தம்மை முற்போக்கானவர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். கடும்போக்கு மதவாதிகளை பழமைவாதிகளாக கருதி வெறுக்கிறார்கள். (From the Maccabees to the Mishnah)

மொடைன் என்ற கிராமத்தில் நடந்த அசம்பாவிதம் யூதர்களின் புனிதப்போருக்கான தூண்டுதலாக அமைந்தது. கிரேக்க அதிகாரிகள் அந்த கிராமத்தின் யூத மதகுருவான மத்ததியாசை அழைத்து, கிரேக்க முதற்கடவுள் செயுசுக்கு பூஜை செய்ய உத்தரவிட்டனர். மத்ததியாஸ் மறுக்கவே, இன்னொரு யூதர் முன்வந்து பூஜையை நடத்தினார். யூத மதம் தவிர்ந்த பிற தெய்வங்களுக்கு பூஜை செய்த குற்றத்திற்காக, அவரை மத்ததியாஸ் அந்த இடத்திலேயே படுகொலை செய்தார். படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து தனது மகன்மாருடன் பாலைவனத்திற்கு சென்று ஒளிந்து கொண்ட மத்ததியாஸ், (யூதர்களின்) புனிதப்போரை பிரகடனம் செய்தார். புனித நூலான தோரா வை பின்பற்றுவோர் அனைவரும் தான் பின்னால் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்தார். வரலாற்றில் அது மக்காபீக்களின் எழுச்சி என அழைக்கப்படுகின்றது. கெரில்லாப் போராட்டம் மூலம் கிரேக்கர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜெருசலேமை விடுவித்தனர்.(Maccabees, the revolt)

இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. மக்காபீக்களின் ஆட்சி மன்னராட்சி அல்ல. அது ஒரு யூத தேசிய குடியரசும் அல்ல. மாறாக, ஆப்கானிஸ்தானில், ஈரானில் இருந்ததைப் போல மதத்தின் ஆட்சி. நாட்டின் தலைவர்களாக ஆட்சி செய்தவர்கள் அனைவரும் மதகுருக்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இஸ்ரேலியரிடம் இருந்து எதையாவது கற்றுக் கொண்டிருந்தால், அது மக்காபீக்களின் வரலாறாக இருந்திருக்கும். தாலிபான் தலைவர் முல்லா ஒமார் கூட மத்ததியாஸ் போல ஒரு கிராமிய மதகுரு என்பதும், மக்காபீக்கள் போல தாலிபான்களும் புனித நூலான குரானை பின்பற்றியவர்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமைகள்.

இருபதாம் நூற்றாண்டில், மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இரு தேசிய அரசுகள் தோன்றின. ஒன்று, இஸ்ரேல். மற்றது, பாகிஸ்தான். இரண்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மக்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். அனைத்து பிரஜைகளும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரு புதிய மொழியை கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் உருது, இஸ்ரேலில் ஹீபுரு. இரண்டுமே வெளியில் இருந்து இறக்குமதியான மொழிகள் தாம். அனைவரையும் இணைக்கும் ஒரே மதம் மட்டும் இல்லையென்றால், பாகிஸ்தானும், இஸ்ரேலும் எப்போதோ துண்டு, துண்டாகி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய மதத்-தேசிய அரசு, நவீன மத அடிப்படைவாதிகள் உருவாகும் விளைநிலமாக உள்ளது.
(தொடரும்)

Saturday, May 06, 2017

யார் இந்த இலுமினாட்டி? - ஓர் அறிவொளி இயக்க வரலாறு


இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர்.

அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18 ம் நூற்றாண்டில் இருந்து தொடரும்  வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20 ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப் படுகின்றது.

யார் இந்த இலுமினாட்டிகள்? அது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.

18ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.

மக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.

ஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்டி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.

இலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789 ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது. தடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.

இந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது. 

முதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன திரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி.  பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது. இதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, "பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக" திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல். 

இலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.

யூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, "சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை" (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் அதற்கு "யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" என்று தலைப்பிட்டுள்ளனர். மூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.

சுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர். அப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது. 

ரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும். அதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை. 

அத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் "சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை". இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார். முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.

1917 ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது. நூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.

அந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர். உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.

இலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், "யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல. 

இலுமினாட்டி பற்றிய முன்னைய பதிவு:

Friday, November 18, 2016

அமெரிக்காவில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட யூதர்கள்


சியோனிஸ்ட் தேசியவாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும், யூதர்களை வரலாறு முழுவதும் ஒடுக்கப் பட்டவர்களாக குறிப்பிடுவார்கள். தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப் பட்டதாக சொல்வார்கள். ஆனால், யூதர்களும் ஒரு காலத்தில் ஒடுக்குபவர்களாக, அடிமைகளை வைத்திருந்ததாக, யாரும் பேசுவதில்லை. ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. சரித்திர நூல்கள் மூடி மறைக்கின்றன. குறிப்பாக, 16 ம் நூற்றாண்டில், யூதர்கள் அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட தகவலை நீங்கள் எங்கேயும் கேள்விப் பட முடியாது.

அட்லாண்டிக் சமுத்திரத்தின் ஊடாக நடந்த, டச்சுக் காரர்களின் அடிமை வாணிபம், ஆரம்பத்தில் யூத வணிகர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரேசிலில் உருவான போர்த்துகேய காலனிகளுக்கு அடிமைகளை விநியோகம் செய்து வந்தனர். பின்னர் டச்சு கயானா (இன்று: சுரினாம்) என்ற நெதர்லாந்து காலனியும், யூத வணிகர்கள் கொண்டு வந்த அடிமைகளை கொண்டு உருவானது. யூதர்கள், டச்சு காலனிய நிறுவனமான "மேற்கிந்தியக் கம்பனி" க்கும், போர்த்துக்கேய காலனிகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்த இடைத் தரகர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட 60% மான அடிமை வர்த்தகம் அவர்களின் கைகளில் இருந்தது.

எவ்வாறு யூதர்கள் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள்? 16 ம் நூற்றாண்டில், ஏராளமான போர்த்துக்கேய யூதர்கள் நெதர்லாந்தில் வந்து குடியேறினார்கள். ஏற்கனவே, போர்த்துக்கல் அடிமை வாணிபத்தில் இறங்கி இருந்த படியால், யூதர்களும் அந்த தொடர்புகளை பேணி வந்தனர். யூதர்களுக்கு, போர்த்துக்கேய மொழியும், டச்சு மொழியும் சரளமாக பேசத் தெரிந்திருந்ததால், இரு தரப்பு வாணிபத்தில் இறங்குவது இலகுவாக இருந்தது.

யூதர்களுக்கும், கறுப்பின அடிமைகளுக்கும் இடையிலான தொடர்பு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு வந்தது. குறிப்பிட்ட சில காலம், கறுப்பின அடிமைகளை யூத மதத்திற்கு மாறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். சில இடங்களில் கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. இதற்கான சான்றுகளை, இன்றைக்கும் போர்த்துக்கல் நாட்டில் உள்ள ஆவணங்களில் காணலாம். ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்த யூதர்கள், கறுப்பின அடிமைகளை வீட்டுப் பணியாளர்களாக வைத்திருந்திருக்கிறார்கள்.

Elieser என்ற, யூத மதத்திற்கு மாறிய கறுப்பின அடிமையின் கல்லறை, இன்றைக்கும் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ளது. Ouderkerk aan de Amstel எனும் இடத்தில் உள்ள யூத கல்லறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அதிலே, ”Sepultura do bom servo Elieser” (போர்த்துகேய மொழியில்: "நல்ல அடிமை எலிசரின் கல்லறை."), என்ற வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் புதைக்கப்பட்ட முதலாவது கறுப்பின அடிமை எலிசர் ஆக இருக்கலாம். கறுப்பின அடிமைகளை வைத்திருந்த யூத எஜமானின் கல்லறையும், அதற்கு அருகில் தான் உள்ளது. (Op Joodse begraafplaats ligt zwarte slaaf Elieser naast slavenhandelaar; http://www.refdag.nl/achtergrond/geschiedenis-cultuur/op_joodse_begraafplaats_ligt_zwarte_slaaf_elieser_naast_slavenhandelaar_1_656045)

Thursday, November 05, 2015

"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்


"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.)  அதில் பல வரலாற்றுத் தவறுகள், தகவல் பிழைகள் உள்ளன. பல இடங்களில், யூதர்கள் பற்றி (வேண்டுமென்றே) தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. முகில் அதனை ஒரு கற்பனை கலந்த நாவலாக எழுதி இருக்கலாம்.

சுவாரஸ்யமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, வரலாற்றை திரிபு படுத்தி இருக்கிறார். அதில் கூறப் பட்டுள்ளது யூதர்களின் "வரலாறு" அல்ல. அதை ஓர் ஆய்வு நூலாக அல்லது வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எழுத்தாளரின் கற்பனை, நூல் முழுவதும் இழையோடுகின்றது. வேண்டுமானால், வரலாற்றை அடிப்படையாக கொண்டு புனையப் பட்ட நாவலாக நினைத்து வாசிக்கலாம். 

நூலாசிரியர் விவிலிய நூலை உசாத்துணையாக எடுத்துக் கொண்டுள்ளார். முதல் ஆறு அத்தியாயங்களிலும் விவிலிய கதைகளை எழுதியுள்ளார். முதலில், பைபிளை யூதர்களின் உண்மையான வரலாறாக எடுத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

நூலாசிரியர் யூதர்களை தனி இனமாக காட்ட விரும்புவது தெரிகின்றது. யூதர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட இனக்குழுவினர் என்பது ஒரு கற்பனையான வாதம். எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்திற்கு செல்ல விரும்பவில்லை. யூதர்கள் மத்தியிலும் பலதரப் பட்ட அரசியல் கொள்கைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

நூலின் முதலாவது அத்தியாயம், இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்த கதையுடன் தொடங்குகிறது. ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு, அது அடிப்படைக் காரணமாக இருந்தது உண்மை தான். ஆயினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க முடியாது. ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு அதை விடப் பல காரணங்கள் உள்ளன. 

உண்மையில், "யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தானா?' என்பதே கேள்விக்குறி. பல நூறாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட விவிலிய நூலில், பல கதைகள் இடைச் செருகலாக புகுத்தப் பட்டன. யூதாஸ் எழுதிய சுவிசேஷம் அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப் பட்டது. அந்தப் பகுதி விவிலிய நூலில் வேண்டுமென்றே அகற்றப் பட்டது. மேற்கத்திய கிறிஸ்தவ சபைகளின் யூத எதிர்ப்பு அரசியல், பல நூறாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மத- அரசியல் கொள்கை ஆகும்.

யூதாஸ் மட்டுமல்ல, இயேசுவும் அவரது சீடர்கள் அனைவரும் யூதர்களாக இருந்தனர். இயேசு கூட, யூத மதத்தை சீர்திருத்த விரும்பினாரே அன்றி, தனியான மதம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்திருக்கவில்லை. இயேசுவை பின்பற்றிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனத்தில் வாழ்ந்த பிற யூதர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்திப் பார்த்தனர். அதற்கு ஓர் அரசியல்- சமூகக் காரணி இருந்தது. அது இந்த நூலில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிலநேரம், நூலாசிரியருக்கே அந்த விடயம் தெரியாமல் இருக்கலாம்.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் காலத்தில், ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பிரதேசம், ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டது. உண்மையில் ஆட்சியாளர்கள் தம்மை "ரோமர்கள்" என்று அழைத்துக் கொண்டாலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். அதனால், பாலஸ்தீனத்திலும் கிரேக்க மொழி ஆட்சி மொழியாக இருந்தது.

ரோமர்களின் அரச அலுவலகர்களாக வேலை செய்ய விரும்புவோர், கிரேக்க மொழியை சரளமாக எழுதப், பேசத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கிரேக்கத்தில் இருந்து வந்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும், அவர்களுக்கு கீழே வேலை செய்த உள்ளூர் மேட்டுக்குடி வர்க்கம் ஒன்றிருந்தது. யூதர்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

ரோமர்களின் கீழ் அரசுப் பதவிகளில் இருந்த யூதர்களை "ஹெலனிக் யூதர்கள்" என்று அழைக்கலாம். அதாவது, அவர்கள் தமது தாய்மொழியான ஹீபுருவை விட, அந்நிய மொழியான கிரேக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பல யூதர்கள் வீட்டிலும் கிரேக்க மொழி பேசினார்கள். நமது நாடுகளில் உள்ள ஆங்கிலம் பேசும் தமிழ் மேட்டுக்குடியினருடன் அவர்களை ஒப்பிடலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம், யூதர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கவில்லை.

ஹீபுரு யூதர்களுக்கும், ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடுகள் கொதி நிலையில் இருந்தன. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல. பொருளாதாரப் பின்னணியும் முக்கிய பங்காற்றியது. ஹெலனிக் யூதர்கள் வசதியான பிரிவினராக இருக்கையில், ஹீபுரு யூதர்கள் ஏழ்மையில் வாழ்ந்தனர். அதற்கான காரணம் மிகத் தெளிவானது. ரோம அரசுடன் ஒத்துழைத்த யூதர்கள் பதவிகளை பெற்று வளமாக வாழ்ந்திருப்பார்கள்.

அன்றைய யூதர்கள் எல்லோரும் ஹீபுரு பேசினார்கள் என்றும் சொல்ல முடியாது. ஹீபுரு, அரபி மொழிகளுக்கு நெருக்கமான அரமைக் மொழி பேசிய யூதர்களும் இருந்தனர். உதாரணத்திற்கு இயேசு அரமைக் மொழி தான் பேசினார். ரோமர்கள் காலத்தில் அரமைக் மொழி முக்கியத்துவம் இழந்து விட்ட போதிலும், அது ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் பரவலாக பேசப் பட்ட வணிக மொழியாக இருந்தது.

அன்றைய பாலஸ்தீன அரசியல் நிலவரம், பிற்காலத்தில் கிறிஸ்தவம் என்ற தனியான மதம் உருவாக காரணமாக இருந்தது. உண்மையில், முதன் முதலாக கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள் என்பது தற்செயல் அல்ல. (விவிலிய நூலின் புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது. "கிறிஸ்து" கூட ஒரு கிரேக்கச் சொல் தான்.) பின்தங்கிய பிரிவினரான ஹீபுரு யூதர்களுக்கும், முன்னேறிய பிரிவினரான ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடு, பிற்காலத்தில் யூத - கிறிஸ்தவ மத முரண்பாடாக பரிணமித்தது.

ஏற்கனவே, கிரேக்க மொழி சரளமாகப் பேசத் தெரிந்த யூதர்கள், கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், பிற யூதர்களிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அது தான் யூத வெறுப்புக்கு காரணமே தவிர, யூதாஸின் காட்டிக்கொடுப்பு அல்ல. ஹெலனிக் யூதர்கள், ஹீபுரு யூதர்களை தம்மை விடக் கீழானவர்களாக பார்த்தார்கள். நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத பழைமைவாதிகள் என்றார்கள். மறு பக்கத்தில், ஹீபுரு யூதர்கள், ஹெலனிக் யூதர்களை, எதிரிகளுடன் ஒத்துழைக்கும் இனத் துரோகிகளாக கருதினார்கள். "மத நம்பிக்கையற்றவர்கள், போலி யூதர்கள், கிரேக்க கைக்கூலிகள்" என்றெல்லாம் தூற்றினார்கள்.

ரோம அரச அதிகாரத்திற்கு எதிராக, ஆங்காங்கே ஹீபுரு யூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்.  யூதர்களின் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ரோமப் படைகள் அனுப்பப் பட்டன. இராணுவ நடவடிக்கைகளுக்கு ஹெலனிக் யூதர்களும் உதவினார்கள். சகோதர இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை காட்டிக் கொடுத்தார்கள், அல்லது போரிட்டுக் கொன்றார்கள். அதே நேரம், யூதக் கிளர்ச்சியாளர்கள், "துரோகிகள் அழிப்பு" என்ற பெயரில் ஹெலனிக் யூதர்களை கொன்றார்கள். அதாவது, "யூதர்களுக்கு எதிராக யூதர்கள்"! ஆகவே, யூதர்கள் எல்லோரும், தொன்று தொட்டு ஒரே சிந்தனை கொண்ட, ஒற்றுமை மிக்க இனமாக வாழ்ந்தனர் என்பது ஒரு கற்பனை.

நூலில் இருந்து: 
//கி.பி. 115 ல் ஈராக், லிபியா, எகிப்து, சைப்ரஸ் ஆகிய இடங்களில் திடீரென யூதர்கள் கலகங்களில் ஈடுபட்டனர். ஆனால், பாலஸ்தீன யூதர்கள் அமைதியாகத் தான் இருந்தார்கள். ரோமானியர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.... இந்தப் புரட்சிகளின் நோக்கம் ஒன்று தான். ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு. அதற்காக நிகழ்ந்த புரட்சிகளை வழிநடாத்த சரியான தலைமை கிடைக்கவில்லை.....//

குறிப்பாக எகிப்தில் அலெக்சாண்ட்ரியா நகரில் யூதர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். உண்மையில், அந்தக் கலவரத்திற்கு காரணம், "ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு" அல்ல! அது வெறும் கட்டுக்கதை. உண்மையான காரணம், நமது காலத்தில் நடப்பதைப் போன்ற, இன/மத முரண்பாடுகளால் வெடிக்கும் இன/மதக் கலவரங்கள்.

இனக் கலவரத்தை தூண்டுவதற்கு சிறு நெருப்புப்பொறி போதுமாக இருந்தது. எங்காவது ஒரு கிரேக்க- கிறிஸ்தவரை, யூதர்கள் கொலை செய்திருந்தால், அதை சாட்டாக வைத்து கலவரம் வெடித்தது. கிரேக்க காடையர்கள், யூதர்களின் வீடுகளை எரித்தனர். கண்ணில் கண்ட யூதர்களை படுகொலை செய்தனர், அல்லது பாலியல் பலாத்காரம் செய்தனர். யூதர்களும் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், எதிர்த் தாக்குதல்கள் நடத்தினார்கள். இப்படியான இனக் கலவரங்கள், ரோம சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் நடந்துள்ளன.

உண்மையில், பண்டைய கால ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு மதம் முக்கியமாகப் படவில்லை. தலைநகர் ரோமாபுரியில் ஈரானிய, எகிப்திய தெய்வங்களுக்கும் ஆலயங்கள் இருந்தன. யூதர்களின் ஆலயமும் (சினகொக்) இருந்தது. ரோமர்கள் சாம்ராஜ்ய நன்மை கருதி, அனைத்து மதங்களையும், இனங்களையும் உள்வாங்கிக் கொண்டனர். 

ஆயினும், பாலஸ்தீன யூதர்கள், சிலை வணக்கத்தை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையில் பற்றுள்ளவர்களாக இருந்த படியால், அவர்கள் தம்மை தனித்துவமானவர்களாக கருதிக் கொண்டனர். இது சிலநேரம் ரோம அதிகாரிகளுடன் மோதல் நிலையை தோற்றுவித்தது. அதனால் அரசுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி நடந்ததும், யூத ஆலயங்கள் இடிக்கப் பட்டதும் உண்மை தான். உண்மையில் அது மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினை. ரோம தெய்வங்களை வழிபட்ட யூதர்களும், மதச் சார்பற்ற யூதர்களும் இருந்துள்ளனர்.

ஆனால், மேற்படி மோதல்களால் ஏற்பட்ட முக்கியமான விளைவை நூல் பதிவு செய்யவில்லை. அதாவது, பாலஸ்தீன யூதர்களின் கிளர்ச்சி அடக்கப் பட்டதும், அங்கு வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிலநேரம், ரோமர்கள் அவர்களை பலவந்தமாக வெளியேற்றி, சாம்ராஜ்யத்தின் பிற பாகங்களில் குடியேற்றினார்கள்.

அதே நேரம், உள்நாட்டுப் போர்களால் பின்தங்கி இருந்த பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி, பொருளாதார நலன்களுக்காக இத்தாலியில் குடியேறிய யூதர்களும் உண்டு. இதனை நாங்கள் பிரிட்டிஷ் காலனியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு காலத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்த இந்தியர்களும், இலங்கையரும், பிரிட்டனிலும், பிற ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் குடியேறியுள்ளதை உதாரணமாக குறிப்பிட்டுச் சொல்லலாம். 

ரோமர்களின் காலகட்டம் முழுவதும், யூதர்களின் பிரச்சினையானது, ஒரு சிறுபான்மையினத்தவரின் அரசியல் - சமூகப் பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் தமது பலம் எது, பலவீனம் எதுவென உணர்ந்திருந்தனர். உருவ வழிபாட்டை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையை தமது பலமாகக் கருதினார்கள். அதே நேரம், அடிக்கடி பாதிக்கப்படும் சிறுபான்மை இனமாக இருப்பதை பலவீனமாகக் கருதினார்கள். அடுத்து வந்த ஆயிரம் வருடங்களுக்கும் அந்த நிலைமை தொடர்ந்திருந்தது. ஆனால், "கிறிஸ்தவ மதப் பரவலை தடுப்பதற்காக, யூதர்கள் அல்லும் பகலும் யோசித்தார்கள்" என்பது ஒரு கற்பனை.

யூதர்களை தனியான இனமாகக் கருதுவது அறியாமை. எத்தியோப்பிய கருப்பின யூதர்களுக்கும், ஐரோப்பிய வெள்ளையின யூதர்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் கிடையாது. ஒரு காலத்தில், யூத மதம் மத்திய கிழக்கில் இருந்து உலகம் முழுவதும் பரப்பப் பட்டு வந்தது.

பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாது, அரேபியாவில் (நஜ்ரான்; http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_13.html), ரஷ்யாவில் (கஸாரியா; http://kalaiy.blogspot.nl/2008/11/blog-post_28.html) கூட யூத ராஜ்ஜியங்கள் இருந்தன. அங்கிருந்தெல்லாம் மதம் பரப்பப் பட்டது. நஜ்ரான் யூதர்கள், இனத்தால் யேமன்- அரேபியர்கள். கஸாரியா யூதர்கள், இனத்தால் துருக்கியர்கள். இவ்வாறு, பிற இனத்தவர்களும் யூதர்களாக மதம் மாறியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  

ஆயினும், ரோமர்கள் காலத்தில், யூதர்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. அதனால், மதம் பரப்பும் கொள்கை எப்போதோ கைவிடப் பட்டு விட்டது. அதே காலகட்டத்தில், கிறிஸ்தவ மதம் பரவியது. கிறிஸ்தவம் யூத மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கிரேக்க வழிபாட்டு முறைகளை பின்பற்றி தனியான மதமாக உருவாகியது. கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவியதும், மன்னரை பின்பற்றி குடி மக்களும் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

யூதர்கள் இயேசுவை தமது "மெசியாவாக" ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதற்காக கிறிஸ்தவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தம்மை ஆண்ட ரோம சாம்ராஜ்யவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், யூதர்களால் என்ன செய்திருக்க முடியும்? 

பிற்காலத்தில் யூதர்கள் போன்று, ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய கிறிஸ்தவ மதத்தினர், யூதர்களை எதிரிகளாக கருதினார்கள். அதுவும், கிறிஸ்தவத்திற்கு மாறிய, கிரேக்க- ரோம சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவு தான். ஆதி கால கிறிஸ்தவ மதம், கிட்டத்தட்ட யூத மதம் போன்றே காணப் பட்டது. இன்றைக்கும், எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றுகிறார்கள்.

உண்மையில், உலகில் மதம் என்ற தோற்றப்பாடு, ஓரிறைக் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட பின்னரே ஏற்பட்டது. (இதனைப் புரிந்து கொள்ள Karen Armstrong எழுதிய நூல்களை வாசிக்கவும்.) மதம் ஒரு நிறுவனமாக உருவாகாத பலதெய்வ வழிபாட்டுக் காலத்தில், ஓரிறைக் கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வந்த யூதர்கள், ஒரு பக்கம் கிறிஸ்தவமும், மறு பக்கம் இஸ்லாமும் தமக்குப் போட்டியாக வந்து விட்டதை உணர்ந்து கொண்டனர்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், நூலாசிரியர் தனது கற்பனைக் குதிரையை தட்டி விடுகிறார்:
 //கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ யூதர்களை வெறுக்கக் காரணம் என்ன? காரணம் யூதர்களின் தலைக்கு மேலிருந்ததாக அவர்கள் நம்பிய மாய ஒளிவட்டம் தான். தாங்கள் தான் உயர்ந்தவர்கள். கடவுளால் பிரத்தியேகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற மனப்பான்மை. கடவுள் தம்மை எந்த நிலையிலும் கைவிட மாட்டார் என்ற அசாத்திய நம்பிக்கை. பொருளாதாரம், கல்வி வளர்ச்சி, புத்திசாலித்தனம் இப்படி எல்லாவற்றிலும் தேர்ந்தவர்களாக இருந்தாலும், உலகில் தங்களின் கலாச்சாரம் மட்டுமே மிக உயர்ந்தது என்ற மனப்பான்மை அவர்களுக்கு எப்போதும் உண்டு. இன்று வரையிலும் கூட. அதனால் தனியாகவே வாழ்ந்தார்கள். தங்களைத் தனியாக அடையாள படுத்திக் கொண்டார்கள்.//

கிறிஸ்தவ ராஜ்ஜியங்களில் யூதர்கள் ஒடுக்கப் பட்ட மாதிரி, இஸ்லாமிய ராஜ்ஜியங்களில் ஒடுக்கப் படவில்லை, வெறுக்கப் படவுமில்லை. இஸ்லாம் தோன்றும் பொழுதே, யூதர்களும், கிறிஸ்தவர்களும் "ஒரே புத்தகத்தின் மக்கள்" என்று வரையறுக்கப் பட்டது. அதனால், கிறிஸ்தவர்கள் மாதிரியே யூதர்களும் நடத்தப் பட்டனர். இரண்டாந்தரப் பிரஜைகளாக இருந்தாலும், வரி கட்டி விட்டு சுதந்திரமாக வாழ முடிந்தது. கிறிஸ்தவர்கள் போலல்லாது, இஸ்லாமியர்கள் யூதர்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. யூதர்களும் "தலைக்கனம் பிடித்தவர்களாக" இருக்கவில்லை. ஒரு சிறுபான்மை இனமாக, தமது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் மட்டும் குறியாக இருந்தனர்.

மத்திய கால, கிறிஸ்தவ ஐரோப்பாவில், யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தோன்றுவதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதம், கடனுக்கு வட்டி அறவிடுவதை தடை செய்திருந்தது. அதனால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்கவில்லை. அந்தத் தொழிலை யூதர்கள் கைப்பற்றிக் கொண்டனர். சாதி அமைப்பு மாதிரி, குலத் தொழில்களை மட்டுமே செய்யும் சமூகங்களை கொண்ட, மத்திய கால ஐரோப்பாவில் யூதர்களுக்கு செய்வதற்கு வேறு தொழில் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம், பல இடங்களில் யூதர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் தடை இருந்தது. 

ஆகவே, யூதர்களுக்கு இருந்த மிகக் குறைந்த தெரிவுகளில் ஒன்று தான் வட்டிக்கு கடன் கொடுப்பது. கடன் வாங்கி பாதிக்கப் பட்ட கிறிஸ்தவ மக்கள் மத்தியில், யூத வட்டிக் கடைக்காரருக்கு எதிரான வெறுப்புணர்வு இருந்தது. கத்தோலிக்க தலைமைப் பீடம், அந்த வெறுப்பை தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்தது. போப்பாண்டவர் முதலாவது சிலுவைப் போரை அறிவித்ததும், ஜெர்மன் பகுதிகளில் ஆயிரக் கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப் பட்டனர். வத்திக்கான் அதைத் தடுக்கவில்லை.

மத்திய கால ஐரோப்பாவை பொறுத்தவரையில், யூதர்கள், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழ்ந்தனர் என்று கூறலாம். ஒரு காலத்தில் ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன. (நூலாசிரியர் இந்த உண்மையை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.) ஆனால், அவற்றை கிறிஸ்தவ மன்னர்கள் கைப்பற்றியதும், அங்கு வாழ்ந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப் பட்ட யூதர்கள், மொரோக்கோவிலும், துருக்கியிலும் பெருமளவில் சென்று குடியேறினார்கள்.

நூலில் இருந்து:
//சிலுவைப்போர்கள் முடிவுக்கு வந்துவிடும் என்றிருந்த சமயத்திலேயே (கி.பி. 1210), யூத நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று பாலஸ்தீனுக்கு சென்று, அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை நிறுவ முடியுமா, அதற்கான சாத்தியங்கள் எவ்வளவு உள்ளன, தாங்கள் இழந்த நிலங்களை மீட்டெடுக்க முடியுமா என்று ஆராய்ச்சிகள் நடத்தி வந்திருந்தது.... அந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு, துருக்கி சுல்தான் பயஸித்திடம் பேசச் சென்றனர். "பாலஸ்தீனத்தில் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தங்கள் தயை வேண்டும்." //

இது பெரும்பாலும் இட்டுக்கட்டிய கற்பனைக் கதை. இதில் பல வரலாற்றுத் தகவல் பிழைகள் உள்ளன. துருக்கி ஓட்டோமான்கள் தலைமையிலான இஸ்லாமிய சாம்ராஜ்யம், 1517 ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உருவானது. முதலாவது துருக்கி சுல்தானின் பெயர் (முதலாம்) செலிம். தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த செலிம், 1517 ம் ஆண்டு தான் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார். அதற்கு முன்னர், அரேபியர்கள் தான் சிலுவைப் போரில் ஈடுபட்டு, பாலஸ்தீனத்தை மீட்டெடுத்தனர்.

1291 ம் ஆண்டு சிலுவைப்போர் முடிவுக்கு வந்தது. போரில் வெற்றி வாகை சூடிய தளபதியின் பெயர் சலாவுதீன். பிறப்பால் அவர் குர்து இனத்தவர். அதனால், மம்மலேக்குகள்" என்ற பெயரில், துருக்கி மொழிபேசும் வீரர்களைக் கொண்ட படையணி உருவாகக் காரணமாக இருந்தார். மம்மேலுக் படைவீரர்கள், பிற்காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, துருக்கியில் ஒரு சிறிய நாட்டை ஆண்டார்கள். அது நடந்தது 1250 ம் ஆண்டு! 

அப்படியானால், எப்படி கி.பி. 1210ல் துருக்கி சுல்தான் ஆண்டதாக நூலாசிரியர் கதை விடுகிறார்? யூதர்கள் ஆயிரமாண்டு காலமாக, ஜெருசலேம் திரும்பக் காத்துக் கிடந்ததாக, தேசியவாத- யூதர்கள் வரலாற்றை திரித்து எழுதியுள்ளனர். தமது இஸ்ரேலிய தாயகக் கோட்பாட்டுக்கு, வலுச் சேர்ப்பதற்காக இது போன்ற வாதங்களை கூறி வருகின்றனர்.

பாலஸ்தீனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த யூதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கேயும் புலம்பெயர்ந்து சென்று திரும்பி வரவில்லை. ஆனால், "ஜெருசலேமுக்கு திரும்பிச் செல்லுதல்" என்ற கொள்கை, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தான், ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள்.

அதற்கு முன்னர், மொரோக்கோ, துருக்கியில் வாழ்ந்த யூதர்கள், ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்தனர். அதாவது, பாலஸ்தீனம், துருக்கி, மொரோக்கோ எல்லாம் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. ஒரே நாடு என்பதால், யூதர்கள் விரும்பிய படி ஒவ்வொரு வருடமும் ஜெருசலேமுக்கு யாத்திரை சென்று வர முடிந்திருக்கும். நிலைமை அப்படி இருக்கையில், அவர்கள் ஜெருசலேமில் தான் குடியேற வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லையே?



உசாத்துணை: 
Rome and Jerusalem, The Clash of Ancient Civilizations, Martin Goodman
A History of Christianity, Diarmaid MacCulloch
The Jewish War, Flavius Josephus 
Vreemd Volk, Integratie en discriminatie in de Griekse en Romeinse wereld, Fik Meijer

Wednesday, August 13, 2014

இஸ்ரேலுக்கு எதிரான இடதுசாரி யூதர்கள்


காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது.

இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிக்கின்றன. இஸ்ரேலை நியாயப் படுத்தும் பெற்றோரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்க்கும் பிள்ளைகளும், அடிக்கடி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், இஸ்ரேல் குறித்த கருத்து முரண்பாடுகள், மாணவர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சியோனிச யூத மாணவர்களும், பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களும் ஓரணியில் நின்று இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். மறு பக்கத்தில், மதச் சார்பற்ற யூத மாணவர்களும், இடதுசாரி மாணவர்களும் எதிர் அணியில் நின்று, இஸ்ரேலை எதிர்க்கிறார்கள்.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அணியினரின் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்கள் அந்த அணியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் பக்க நியாயத்தை கூறும் தகவல்கள், அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருவதும் அதற்கு ஒரு காரணம். தமிழ் பேசும் இணைய சமூகத்திலும் அது போன்ற மாற்றங்களை உணர முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு வரையில் கூட, இஸ்ரேலின் சியோனிச கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வந்த, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர், அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளனர்.

பிரிட்டனில், பாலஸ்தீன நீதிக்கான யூதர்கள் (Jews For Justice For Palestinians) என்ற இடதுசாரிகளின் அமைப்பு, 2003 முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. லண்டனில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரி யூதர்களின் பிரிவு ஒன்று தவறாமல் கலந்து கொள்கின்றது. அமெரிக்க நகரங்களிலும், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களிலும், இடதுசாரி யூதர்களின் அணி ஒன்று, ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும் குழுவில் கலந்து கொள்கின்றது.

லண்டனில், டவுனிங் தெருவில், பட்டப்பகலில் ஓர் இஸ்ரேலிய பிரஜை தனது கடவுச் சீட்டை எரித்து பரபரப்பூட்டினார். அந்த சம்பவத்திற்குப் பின்னர், லண்டனில் வாழும் யூதர்கள் பலர், வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்து பேசும் துணிவைப் பெற்றுள்ளனர். (இவ்வளவு காலமும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள், யூத சமூகத்திற்குள் கடுமையாக அடக்கப் பட்டன.) மேலும், யூதர்களை வெறுக்காமல் இஸ்ரேலை விமர்சிப்பது எப்படி என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம், ஒவ்வொரு ஆரப்பாட்டங்களின் போதும் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகின்றது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து நின்றால் இலங்கை அரசுக்கு கொண்டாட்டம். அதனால், எத்தகைய இடதுசாரி அமைப்பிற்குப் பின்னாலும் மக்கள் சென்று விடாதவாறு, அரசு தனது கைக்கூலிகளைக் கொண்டு எதிர்ப் பிரச்சாரங்களை முடுக்கி விடும். அதே சூழ்ச்சியை, மேற்கத்திய நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

மேற்கத்திய நாடுகளில் வாழும், "ISIS ஆதரவு முஸ்லிம் மதவாதிகள்", பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் புகுந்து, யூதர்களுக்கு எதிரான கோஷம் எழுப்புவார்கள். அத்தகைய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள், "எமது நாட்டில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதால், யூத மக்கள் பயந்து போயிருக்கிறார்கள்" என்று வதந்திகளை பரப்பி விடுவார்கள். அந்த நாடுகளில் உள்ள வலதுசாரி சியோனிச அமைப்புகளும் தரவுகளை தொகுத்து அறிக்கையாக சமர்ப்பிக்கும். இவை எல்லாம், மேற்கத்திய உளவு நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன என்பது இரகசியம் அல்ல. உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும், குறிப்பிட்ட அளவு இனவாதிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை வளர விடாமல் தடுப்பது நாகரிகமடைந்த மக்களின் கடமை ஆகும்.

இஸ்ரேலிலும், இடதுசாரி யூதர்கள், காஸா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இஸ்ரேலில் அரச அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. இஸ்ரேலிய இடதுசாரி கட்சியொன்றை சேர்ந்த, பாலஸ்தீன பூர்வீகத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கினேசெட் எனும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது, "ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று குறிப்பிடவில்லையாம். அந்தக் குற்றத்திற்காக, அவருக்கு ஆறு மாத காலத்திற்கு பாராளுமன்ற பேச்சுரிமை மறுக்கப் பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்தளவு அடக்குமுறை என்றால், பிற சமூக ஆர்வலர்களின் நிலைமை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இஸ்ரேலை வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக கணித்தால், அங்கே தான் வறுமை அதிகமாக உள்ளது. 2011 டெல் அவிவ் நகரில், அரசுக்கு எதிராக Occupy பாணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போர் நடக்கும் காலத்தில் வழமையாகவே தேசியவெறி அதிகரிக்கும். ஹமாசின் ஏவுகணைகளை காட்டி, இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியம் என்று செய்யப் படும் பிரச்சாரங்கள், அப்பாவி மக்களை இலகுவில் கவரக் கூடியவை. "மதம் மக்களின் அபின்" என்றார் கார்ல் மார்க்ஸ். (அவரும் ஒரு யூதர் தான்.) மதம் மட்டுமல்ல, தேசிய வெறியும் மக்களின் அபின் தான் என்று, நூறு வருடங்களுக்கு முன்னரே, தன்னை ஒரு சியோனிச எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டார், மாமேதை ஐன்ஸ்டைன். (அவரும் ஒரு யூதர் தான்.)

(இந்தக் கட்டுரை சில பத்திரிகை செய்திகளை தழுவி எழுதப் பட்டது.)

தகவல்களுக்கு நன்றி :
NRC Handelsblad (நெதர்லாந்து) 
Haaretz (இஸ்ரேல்)

Tuesday, March 11, 2014

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்

(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல்   தவிர்ப்பது நல்லது.)


சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அது யாருடைய சின்னம் என்பது தெரியுமா? 1941 ம் ஆண்டு, உக்ரைனில் யூதர்களை இனவழிப்புச் செய்த, "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN) என்ற உக்ரைனிய நாஸிகளின் சின்னம்! இன்றைய ஜெர்மனி, ஹிட்லரின் ஸ்வாஸ்திகா சின்னத்தை, தனது தேசிய சின்னமாக்கிக் கொண்டால், அது உலகில் எத்தகைய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும்? சோவியத் ஒன்றியத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த உக்ரைனில், பழைய நாஸி சின்னம், இன்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. உலகில் யாரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. 

ஒரு யூதப் பெண்ணை வீதியில் போட்டு அடிக்கும் உக்ரைன் இனவெறியர்கள் 

இன்றைய உக்ரைனிய ஆட்சியாளர்களை, மேற்கத்திய நாடுகள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றன. 1941 ம் ஆண்டு,ஐயாயிரம் யூதர்களை இனப் படுகொலை செய்த, அதே உக்ரைன் தேசியவாத இயக்கம், இன்று ஆட்சி அமைத்துள்ளது. ஜனநாயக பண்பு நிறைந்த மேற்கத்திய கனவான்கள், அந்த அரசைத் தான், "சட்ட பூர்வமான உக்ரைனிய அரசு" என்று அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இது ஒன்றும் புதுமை அல்ல. 2 ம் உலகப்போரின் முடிவில், உக்ரைன் மீண்டும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாகியது. உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றனர். 

உக்ரைன் நாஸி தலைவருடன் கை குலுக்கும் ஜோர்ஜ் புஷ் 

OUN தலைவர்களில் ஒருவரான Yaroslav Stetsko, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சந்தித்து இருந்தார். அப்போது பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியனுக்குள் நுழைந்து, உளவுத் தகவல்கள் திரட்டுவதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தார்கள். அந்தப் பழைய நட்பு, இப்போதும் தொடர்கின்றது. ஒரு பக்கம், யூதர்களை இனப் படுகொலை செய்தவர்களுடன் கை குலுக்கிக் கொண்டே, மறு பக்கம் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்கர்களுக்கு ஒரு முரண்பாடாகத் தெரியவில்லை. அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

வீதியில் ஒரு யூதப்  பெண்ணை ஓட ஓட அடிக்கும் ஒரு பாசிஸ்ட் சிறுவன்  
உக்ரைனில் யூத இனவழிப்பு, 1941 ம் ஆண்டு லிவிவ் (Lviv) நகரில் ஆரம்பமாகியது. லிவிவ் அல்லது லிவோவ் என்று அழைக்கப் படும் நகரம், மேற்கு உக்ரைனில் உள்ளது. போலந்து மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவானது. இன்றைக்கும் அதுவே உக்ரைனிய தேசியவாதத்தின் பிறப்பிடமாக கருதப் படுகின்றது. (உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழிக்கும், போலிஷ் மொழிக்கும் இடைப்பட்ட மொழி ஆகும்.) அண்மையில், உக்ரைனிய தலைநகர் கீவில் நடந்த, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களில் பெரும்பான்மையானோர், லிவிவ் நகரில் இருந்து சென்றவர்கள் தான். கடந்த எழுபதாண்டு காலமாக, லிவிவ் மாநிலம், உக்ரைனிய தேசியவாதத்தின் கோட்டையாக இருந்து வந்துள்ளது.

"ஒப்பெறேஷன் பார்பரோசா" என்ற பெயரில், ஜேர்மனிய நாஸிப் படைகள், சோவியத் உக்ரைன் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தின. ஜெர்மனியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சோவியத் இராணுவம் பின்வாங்கிச் சென்றது. 1941, ஜூலை மாதம், முதலாம் தேதி, உக்ரைனின் லிவிவ் மாநிலம் ஜெர்மனியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டது. 

வீதிகளை கைகளால் சுத்தம் செய்யும் யூதர்கள். உக்ரைனிய இனவெறிக் கும்பல் சுற்றி வர நின்று வேடிக்கை பார்க்கின்றது. 

லிவிவ் நகரில், NKVD (கேஜிபி யின் முன்னோடி) பல சிறைச்சாலைகளை நிர்வகித்து வந்தது. ஜெர்மன் படைகள் வருவதற்கு முதல் நாள், சிறையில் இருந்த கைதிகள் அவசர அவசரமாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அநேகமாக, அந்தக் கைதிகளில் பல தேசியவாதிகள் இருந்திருக்கலாம். ஜெர்மன் ஆக்கிரமிப்பின் பின்னர், வெளியே தலை காட்டிய உக்ரைனிய தேசியவாதிகளின் முதலாவது நடவடிக்கை, யூதர்களுக்கு எதிரானது தான். சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்களை அப்புறப் படுத்தவும், துப்பரவு செய்யவும், யூதர்களை பிடித்து பலவந்தமாக வேலை வாங்கினார்கள்.

பாசிஸ்டுகள் உடைத்து வீழ்த்திய லெனின் சிலையை முத்தமிடுமாறு ஒரு யூதனை வற்புறுத்துகிறார்கள். 

ரஷ்ய சாம்ராஜ்யத்தில், சார் மன்னன் காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனமான யூதர்கள், போல்ஷெவிக் புரட்சியின் பின்னர் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர். அதனால், தேசியவாதிகளினால், யூதர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று பொதுமைப் படுத்திப் பேசப் பட்டனர். அது உண்மையா, பொய்யா என்பதை விட, யூதர்கள் மீதான இனத் துவேஷத்தின் இன்னொரு வடிவமாக அது இருந்தது. அதனால், பாசிஸ்டுகளால் உடைக்கப் பட்ட லெனின் சிலைகளை முத்தமிடுமாறு, யூதர்களை துன்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

நடுத் தெருவில் ஆடை களைந்து அவமானப் படுத்தப் படும் யூதப் பெண் 

உக்ரைனில், யூத இனவழிப்பு ஒரு கேளிக்கை நிகழ்வு போன்று தொடங்கியது. பொது இடங்களில் ஒன்று கூடிய கும்பல்கள், பல்வேறு வழிகளில் யூதர்களை துன்புறுத்தின. தெருவில் யூதர்கள் ஓட ஓட கல்லால் அடித்து விரட்டினார்கள். தெருக்களில் முழங்காலால் நடந்து போகுமாறு கட்டளையிட்டார்கள். ஆண்கள், பெண்கள் பேதம் பாராது, பட்டப் பகலில், நடுத் தெருவில் உடைகளை களைந்து அம்மணமாக்கி அவமானப் படுத்தினார்கள். கேளிக்கை முடிந்த பின்னர் அடித்து, சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். அன்றைய இனப் படுகொலையில் பலியான அப்பாவிகள் செய்த ஒரேயொரு குற்றம், யூதர்களாகப் பிறந்தது தான். 

கும்பல் வன்முறைக்கு பாதிக்கப்பட்ட ஒரு தாயும் மகளும் 

காலங்காலமாக தங்கள் அயலில் வாழ்ந்த யூதர்களை, உக்ரைனிய காடையர்கள் துன்புறுத்தி, சித்திரவதை செய்து கொன்றார்கள். இன்றைய உக்ரைனை ஆளும், அதே "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN), அன்று உக்ரைனிய மக்களுக்கு இனவெறியூட்டி, யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. அன்று இந்த சம்பவங்களை எல்லாம், ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். உக்ரைனில் அன்று நடந்த யூத இனப் படுகொலையில், குறைந்தது ஐயாயிரம் உக்ரைன் யூதர்கள், உக்ரைனிய இனவெறியர்களினால் கொல்லப் பட்டனர்.
தெருவில் முழங்காலால் நடந்து செல்ல வற்புறுத்தப் பட்ட யூதப் பெண் 


அன்று உக்ரைனில் நடந்த யூத இனப் படுகொலையை, இன்றைய உலகம் மறந்து விட்டது. அதனால் வரலாறு திரும்புகின்றது. உக்ரைன் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக, அங்கு வாழும் யூதர்கள் அச்சத்தில் உள்ளனர். கீவ் நகர யூத தலைமை மதகுரு, யூதர்களை லிவிவ் நகரை விட்டு, முடிந்தால் உக்ரைனை விட்டு வெளியேறுவது நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார். இந்த தகவல் எந்த ஊடகத்திலும் வந்திருக்காது.  இன்று வரைக்கும், உக்ரைன் ஆட்சியாளர்களை, "நாஸிகள்/பாசிஸ்டுகள்" என்று குறிப்பிட மறுக்கும் ஊடகங்களிடம் இருந்து, நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இன்றைய உக்ரைன் பிரச்சினையில், மேற்கத்திய ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை மிகவும் கேவலமானது. இப்படித் தானே, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நேரமும் நடந்து கொண்டிருந்திருப்பார்கள்?

ஒரு உக்ரைனிய வன்முறைக் கும்பல், அப்பாவி யூதர்களை தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலில் பங்கு பற்றிய ஒருவரின் அடையாள அட்டை வலது புறம் உள்ளது. அதில் "உக்ரைனிய துணைப் படை உறுப்பினர்" என்று ஜெர்மன், உக்ரைனிய மொழிகளில் எழுதப் பட்டிருப்பதை வாசிக்கலாம்

இன்றைக்கும், உக்ரைன் பேரினவாதிகளின் பாசிச அரசாங்கத்தை ஆதரிக்கும் வகையில், தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உக்ரைனில், யூதர்களையும், போலிஷ் மக்களையும் இனப்படுகொலை செய்த உக்ரைனிய பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது, தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாதிகளை ஆதரிப்பதற்கு சமமானது. ஆனாலும், தமிழ் தீவிர வலதுசாரிகள், மிகவும் துணிச்சலுடன் உக்ரைனிய நாஸி இனப் படுகொலையாளர்களை ஆதரித்து வருகின்றனர். பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு சரியான தகவல்கள் போய்ச் சேராத படியால், "தங்களது பிரச்சாரங்களை மட்டுமே தமிழ் மக்கள் நம்புவார்கள்" என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

இன்றைக்கு பலர், "தாங்கள் உக்ரைன் அரசை ஆதரிக்கவில்லை(?)" என்று சொல்லிக் கொண்டே, பாஸிசத்தின் மீள் வருகையை புறக்கணித்து வருகின்றனர். ஹிட்லர் காலத்திலும் அது தான் நடந்தது. அன்று, மேற்கத்திய அரசாங்கங்களும், ஊடகங்களும் ஹிட்லர் மீது நம்பிக்கை வைத்து புகழ்ந்து கொண்டிருந்தன. சிவபெருமானை எண்ணி தவம் செய்து வரம் கேட்டுப் பெற்ற பஸ்மாசுரன், சிவன் தலை மீதே கை வைக்க முயன்ற போது தான், சிவபெருமானுக்கு தான் செய்த தவறென்ன என்று புரிந்ததாம். இன்று, உக்ரைன் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி வருபவர்களின், எதிர்காலமும் அது தான். பஸ்மாசுரனுக்கு பயந்து சிவபெருமான் தலை தெறிக்க ஓடியது போன்று, இவர்களும் நாஸிகளுக்கு பயந்து ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.





உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

1.மேற்குலக ஜனநாயகம் ஆதரித்த உக்ரைனிய நாஜிகளின் சதிப்புரட்சி
2.கிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாணங்கள்
3.உக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்



Thursday, October 04, 2012

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்

"The Holocaust Industry" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry )  என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)

உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது. 
கேள்வி: நீங்கள், இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம் என்று அழைக்கின்றீர்கள். ஏன்?

பதில்: அப்படிக் கூறுவது எனக்குப் பிடித்திருப்பதால் என்றல்ல, ஆனால் அது தான் உண்மை. அண்மைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இரண்டு, அல்லது மூன்று வருடங்களில், இஸ்ரேல் ஒரு அயல்நாட்டுடன் யுத்தத்தை தொடங்குகின்றது. இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை யார் முதலில் தாக்குவார்கள் என்று ஊடகங்கள் ஆராய்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வீடியோ கேம் விளையாட்டு போல நடந்து கொள்கின்றனர். இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக யுத்ததிற்குள்ளேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமானதல்ல.

2008  டிசம்பர், 2009 ஜனவரி, இரண்டு மாதங்களும் இஸ்ரேல் காசா பகுதியை தாக்கியது. 1400 பேரைக் கொன்றார்கள், அதிலே 1200 பேர் பொது மக்கள், 350 பிள்ளைகள். இஸ்ரேல் பக்கம், 13 இழப்புகள், அதிலே 3 பேர் மட்டுமே பொது மக்கள். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப் பட்டது. ஆனால், சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் காசாவை தாக்குவது பற்றி பேசத் தொடங்கினார்கள்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர், ஜூலை, ஆகஸ்ட் 2006 ல், லெபனான் மீது படையெடுத்தார்கள். 1200 பேரைக் கொன்றார்கள், அதிலே 1000 பேர் பொது மக்கள். பாலங்கள், கட்டுமான அமைப்புகளை அழித்தார்கள். இஸ்ரேலிய ஊடகங்களை வாசித்தீர்கள் என்றால், மீண்டும் லெபனானை தாக்குவது பற்றி யோசிக்கிறார்கள் என்பது புரியும்.
தற்பொழுது இடைவிடாமல் ஈரான் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதம் இரண்டு கேள்விகளாக பிரிந்துள்ளது: இஸ்ரேல் தாக்குமா? அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா? முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா? சர்வதேச சட்டம் அது பற்றி விளக்கமாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் இரண்டாவது ஷரத்து, இன்னொரு நாட்டின் மீது தாக்குவதை தடை செய்கின்றது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. 51 வது ஷரத்தின் படி, மற்ற நாட்டு எம்மை ஆயுதங்களுடன் தாக்கினால், பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் ஈரான் தாக்காது. முல்லாக்கள்  அந்தளவு பைத்தியக்காரர்கள் அல்லர்.  அதனால், இஸ்ரேல் ஒரு முன்கூட்டியே தடுக்கும் யுத்தம் ஒன்றை பற்றிப் பேசுகின்றது. அது நூற்றுக்குநூறு வீதம் சட்டவிரோதம்.

இஸ்ரேல் தான்தோன்றித்தனமாக நடக்கின்றது. சர்வதேச சமூகம் தனது கடமையை செய்யாத படியால் தான் இஸ்ரேல் அந்தளவு தூரம் வந்தது. ஐ.நா. சாசனத்தை மதிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் கட்டாயப் படுத்த வேண்டும். அவர்கள் கூற வேண்டும்: "சட்டத்தை மீறினால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." ஆனால், அதனை யாரும் சொல்வதில்லை. நெதர்லாந்தும் ஒன்றும் சொல்வதில்லை. ஐ.நா. விவாதங்களிலும், சர்வதேச நீதிமன்றத்திலும், நெதர்லாந்து இஸ்ரேல் சார்பாக நடந்து கொள்கின்றது. இது மிலேச்சத் தனம். இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதுடன், தண்டனையில் இருந்தும் தப்பிக் கொள்கிறது.

கேள்வி: ஆனால், இஸ்ரேலை சுற்றி வர எதிரி நாடுகள் உள்ளன. ஈரானிய அதிபர் அஹ்மதினஜாத் இஸ்ரேல் ஒரு புற்றுநோய், அதனால் அழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புக்காக அப்படி நடந்து கொள்ளக் கூடாதா?

பதில்: அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.  2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.

கேள்வி: காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இஸ்ரேல் அதனை ஒரு "தாக்குதல்" என்று அழைத்துக் கொள்கின்றது.  உண்மையில், அவை 98 சத வீதம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகள்.  அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு, இஸ்ரேல், ஹமாஸ் க்கு இடையிலான யுத்த நிறுத்த மீறலாகவே, இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றது. இஸ்ரேல் தான் முதலில் போர் நிறுத்தத்தை மீறியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை வாசியுங்கள். ஏன்? ஏனென்றால், இஸ்ரேல், தான் ஒரு பயங்கரமான இராணுவ சக்தி என்பதை காட்ட விரும்பியது.

2006 ம் ஆண்டு, லெபனானுடன் நடந்த யுத்தத்தில், இஸ்ரேல் அவமானகரமான பின்னடைவை சந்தித்திருந்தது. தான் இழந்த மேலாண்மையை மீளப் பெற விரும்பியது. இதற்கிடையில், இரண்டு தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேலையும் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக, ஹமாஸ் அறிவித்திருந்தது. லெபனானில் ஹிஸ்புல்லா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலும், ஹமாசும் அத்தகைய உடன்படிக்கைக்கு உரித்துடையவர்கள். நாம் அதில் தலையிட  மாட்டோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது.  
கேள்வி: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு அரபு வசந்தம் ஒரு தீர்வைக் கொண்டு வருமா?

பதில்: ஒப்பீட்டளவில் அரபு வசந்தம் ஒரு நேர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேலின் இராணுவ பலத்தைப் பொறுத்த வரையில், அதன் எல்லைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. அன்றைய எகிப்திய அதிபர் முபாரக் எல்லையை மூடி விட்டதால் தான், 2008 காஸா  படுகொலை சாத்தியமானது. பாலஸ்தீனியர்கள், வளைகளுக்குள் அகப்பட்ட எலிகள் போலாகி விட்டனர். இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த புதிய எகிப்திய ஜனாதிபதி மொர்சி, அது போன்ற செயலில் இறங்க மாட்டார்.  அது ஒரு இலாபம். ஆனால், பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அதற்கு ஒரு முடிவு வரும். சட்டத்தின் படி, மேற்கு ஜோர்டான் நதிக்கரை, கிழக்கு ஜெருசலேம், காசா போன்ற பகுதிகளுக்கு பாலஸ்தீனியர்கள் உரித்துடையவர்கள்.

அமெரிக்கா இஸ்ரேலை விழ விடாது பிடித்து வைத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கிக்  கொள்ள வேண்டுமென்று ஒபாமா விரும்பலாம். ஆனால், அவர் அமெரிக்காவின் யூத ஆதரவாளர்களில் தங்கியிருக்கிறார். ஒபாமா இஸ்ரேலின் கையை விட்டாரானால், பணக்கார யூத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமல்ல, தேர்தல் செலவுக்கான நிதியையும் இழக்க வேண்டியிருக்கும். இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதி கட்டப் பட்டு விட்டதா?
பதில்: எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருக்காலும் சமாதான நடவடிக்கை இருக்கவில்லை. அங்கே, நில அபகரிப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டிருந்தது. அதனை மூடி மறைப்பதற்கு, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகமாடியது.   அதை ஒருக்கால் திருப்பிப் பாருங்கள். சமாதான பேச்சுவார்த்தையின் இறுதிக் காலகட்டமான செப்டம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, மேற்கு ஜோர்டான் நதிக்கரையில் 250.000  யூத குடியேற்றக் காரர்கள் மாத்திரமே இருந்தனர்.  இன்று, 20 வருடங்களுக்குப் பிறகு, அங்கே 525.000 குடியேற்றக்காரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும், இது பற்றி இஸ்ரேலிடம் கேட்டால், "அதெல்லாம் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பட வேண்டும்"  என்று கூறுகின்றனர். உண்மையில் இஸ்ரேல் என்றுமே சமாதானத்தை விரும்பியதில்லை. அவர்கள் மேலும் பல நிலங்களை அபகரிக்க விரும்புகின்றனர். யூத குடியேற்றங்கள் மூலம், 10 வீதமான மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்து விட்டார்கள். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த செலவும் இருக்கவில்லை. பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை  அடக்குவதற்காக, அவர்களை சித்திரவதை செய்யும் போலிஸ் வேலையை செய்வதற்காக, கொஞ்சம் காசு கொடுத்து பாலஸ்தீன அதிகார சபையை நியமித்துள்ளது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளுக்கான நிதியுதவி, உதவித் திட்டம் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து வருகின்றது. மேலும் அரசியல் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா பாதுகாப்பளிக்கிறது. உலக வரலாற்றில் முதல் தடவையாக, இங்கே தான் எந்த செலவும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கின்றது.  இந்த நிலைமை மாற்றுவதற்கு இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.  
கேள்வி: இஸ்ரேலும், அமெரிக்காவும் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்றால், தீர்வு எங்கிருந்து வர வேண்டும்?
பதில்: பாலஸ்தீனர்களிடம் இருந்து.
அரபு வசந்தம் அவர்களை கடந்து போகும் வரையில் வாளாவிருப்பதையிட்டு, நாங்கள் புரிந்து கொள்ளலாம். 1967 இலிருந்து, ஐம்பது வருட ஆக்கிரமிப்பு காரணமாக, மக்கள் முடமாக்கப்  பட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மனோவியல் ரீதியாக ஒரு வெறுமையை உணர்கின்றனர். மேற்கு ஜோர்டான் நதிக்கரையில், இஸ்ரேல், அமெரிக்காவின் பணத்தில் இயங்கும் ஒரு நிர்வாகத்தினால், அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அத்துடன் பாலஸ்தீனர்களை அடக்கி வைப்பதே அதன் தலையாய கடமையாக இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள், அவர்களது  தளர்நிலையில்  இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் காந்தி வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.  எப்படி? தடை செய்யப்பட்ட தடுப்புச் சுவரை நோக்கிய நடைப்பயணம் ஒன்றை நான் முன்வைக்கிறேன். இஸ்ரேல் கட்டியுள்ள தடுப்புச் சுவர் சட்டவிரோதமானது என்றும், சர்வதேச சமூகம் அதனை உடைத்து விழுத்த வேண்டும் என்றும்,  2004 ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒரு கையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையை வைத்திருக்க வேண்டும். மற்றக் கையில் சுத்தியலை வைத்திருக்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு பின்வாங்காமல் போராட வேண்டும். இஸ்ரேல் 100.000 பேரை அடக்கலாம். சிலநேரம் 200.000. ஆனால், அந்தப் படங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவும். சர்வதேச சமூகம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஏற்படும். அது இஸ்ரேலுக்கு பதில் கூற முடியாத நிலைமையை உருவாக்கும். அப்படியே ஆக்கிரப்புச் செலவு அதன் தலை மேல் இறங்கும். அதற்குப் பிறகு இஸ்ரேல் தானாகவே வழிக்கு வரும். 

(நன்றி: Trouw, 2-10-2012)

(தமிழ் மொழிபெயர்ப்பு: கலையரசன்)

(மூலப்பிரதி:  'Israël heeft geen enkel recht om aan te vallen',   http://www.trouw.nl/tr/nl/4496/Buitenland/article/detail/3325343/2012/10/02/Israel-heeft-geen-enkel-recht-om-aan-te-vallen.dhtml, )