Showing posts with label யாழ் குடாநாடு. Show all posts
Showing posts with label யாழ் குடாநாடு. Show all posts

Sunday, November 08, 2015

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்

யாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை. 

"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக" முஸ்லிம்களை வெளியேற்றியதாக "நியாயம்" கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், "முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக" பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, "தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக" கூறினார்.

அந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் "புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்." ஆங்கில ஊடகங்களில் "புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்." சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக "மன்னிப்பு" என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக "வருத்தம்" என்ற வார்த்தையும் பயன்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, இறுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.

பின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் "முஸ்லிம் கொள்கையை" தீர்மானித்தன:


  1. கிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.
  2. யாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.


வலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

ஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்தனமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.

புலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. "வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்?" என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

வட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.

அதே மாதிரித் தான், GTV இல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். "யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக..." நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.

ஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.

தொடர்ந்து பேசிய இரண்டு "ஆய்வாளர்களும்", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். "தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்." என்று கூறினார்கள்.

இதற்குத் தீர்வாக, "இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்." என்று "அன்பான" உத்தரவு பிறப்பித்தார்கள்.

4-11-2015 அன்று ஒளிபரப்பான GTV அரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTV சொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்: 
//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்!// 
AK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, March 31, 2011

ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 8)

இந்திய இராணுவத்துடன் யுத்தம். பலரால் நம்ப முடியாமல் இருந்தது. கோட்டை முகாமில் இருந்து யாழ் நகரை நோக்கி, சரமாரியான எறிகணை வீச்சுகள் நடந்தன. இதனால் யாழ் நகருக்கு வேலைக்கு சென்ற அனைவரும், நேரத்தோடு வீடு திரும்பினார்கள். என்ன நடக்கின்றது என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. யாழ் நகர வீதிகள் எங்கும் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யுத்தம் நினைவுக்கு வந்தது. இப்போதும் இலங்கை இராணுவமே மோதுவதாக நினைத்தனர். ஆனாலும், அவர்கள் எப்படி திரும்ப வந்தார்கள்? எல்லோர் மனதிலும் குழப்பம். ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட புலிகளும், ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்தையே குறி வைத்து தாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த கண்ணி வெடிச் சம்பவத்தில், இந்தியப் படையின் டிரக் வண்டிக்கு பின்னால் சென்ற, சிறிலங்கா படையினரின் வாகனமே தாக்கப்பட்டது.

இந்திய அமைதிப் படையும், தமிழர்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு திருகோணமலையை ஈழ சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாக்குவதற்கு இந்திய இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியது. வருங்கால மாகாண சபையும் அங்கேயிருந்து இயங்கவிருந்தது. அதற்கு முதல் படியாக, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை அப்புறப் படுத்த உதவியது. அத்தகைய சம்பவத்தை, அதற்கு முன்னரும், பிறகும் இலங்கை வரலாற்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தென்னிலங்கையில் சிறை வைக்கப்பட்ட சிங்கள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, தமிழர் பகுதியில் குடியேற அனுப்பி வைத்தது. பாரம்பரிய தமிழர்களின் நிலங்களை அபகரித்து, தங்கள் குடும்பத்தை தருவித்து குடியேறினார்கள். 1983 கலவரத்திற்கு முன்னரே, திருகோணமலை கலவரப் பூமியாக காட்சியளித்தது. கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைத்து வந்தது. இந்திய இராணுவத்தின் வருகையுடன் நிலைமை தலைகீழாக மாறியது. திருகோணமலை நகரிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் குடியேறிய சிங்களவர்களை விரட்டியடித்த தமிழ் இளைஞர்களுக்கு கிரேனேட் விநியோகம் செய்தது. முன்னர், சிங்களக் குடியேறிகளால் பாதிக்கப் பட்டு, பூசா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு விடுதலையானவர்கள் பழி தீர்க்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதினார்கள்.

கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இலங்கையின் இனப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூவின மக்கள், இன அடிப்படையில் பிளவுண்டு மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகும். சிறிலங்கா அரசு, சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படை அமைத்து, ஆயுதங்களைக் கொடுத்திருந்தது. (இந்தியா, ஒரிசாவில் உள்ள "சல்வா ஜூடும்" போன்றது.) சிறிலங்கா இராணுவத்துடனான யுத்தம் நடைபெற்ற காலங்களில், ஊர்காவல் படைகளால் பல தமிழ்க் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டிருந்தது. இதனால் பெருமளவில் முஸ்லிம் கிராமங்களும், சிறிதளவு சிங்களக் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இலங்கையின் இனப்பிரச்சினையை, இந்தியாவும் எளிமையாக புரிந்து கொண்டதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை வளம் நிறைந்த கிழக்கு மாகாணத்தில், இனங்களிடையே பகை முரண்பாடுகளை சிறிலங்கா அரசு, திட்டமிட்டு வளர்த்திருந்தது.

இனப்பிரச்சினைப் புயல் கிழக்கில் மையங் கொண்ட போதிலும், போர் மேகங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறிய நிலப்பகுதியைத் தவிர, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள, யாழ் குடாநாட்டின் பூகோள அமைவிடம் எப்போதும் இராணுவத்திற்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. இராணுவ முகாம்கள் அனேகமாக கடற்கரைப் பகுதியை ஒட்டியே இருந்ததால், அவற்றை முற்றுகையிடுவது போராளிகளுக்கு இலகுவாக இருந்தது. சிங்கள இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு சூனியப் பிரதேசம் இருக்கும். மயான பூமியாக காட்சி தரும் அந்த இடத்திற்கு அருகில் செல்லக் கூட, மக்கள் அஞ்சுவார்கள். சமாதான காலத்தில், இந்தியப் படையினர் முகாம் அருகாமையில் செல்லும் வீதிகள் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டன.

எமது உறவினர்கள் சிலர், காங்கேசன்துறை முகாம் அருகில் மீள்குடியேற்றத்திற்காக சென்றிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழியில், முகாமின் மத்தியில் இருந்த மைதானத்தில் ஆர்ட்டிலறி பீரங்கிகள் துருத்திக் கொண்டு நின்றன. முன்பு சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசையை மட்டும் கேட்டு வந்தோம். எறிகணைகளை ஏவும் ஆர்ட்டிலறிகளை அப்போது தான் நேரில் பார்த்தோம். இன்னும் சில வாரங்களில், இந்திய இராணுவம் இதே ஆர்ட்டிலரிகளை பயன்படுத்தி பொது மக்களின் குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று, அப்போது யாரும் நினைக்கவில்லை. இலங்கை இராணுவம் காசுக் கணக்குப் பார்த்து ஷெல் வீசியிருப்பார்கள். இந்திய இராணுவத்தினர் வகை தொகையின்றி அள்ளிக் கொட்டினார்கள். நிமிடத்திற்கொரு ஷெல் வந்து விழுந்து வெடித்தது.

காங்கேசன்துறை, பலாலி முகாம்களில் இருந்த படையினரே முதலில் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதனால், அந்த முகாம்களை சுற்றி பத்து மைல் சுற்றாடலில் இருந்த வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. இந்தியப் படையினர் முன்னேறுவதற்கு டாங்கிகளும் பெருமளவு உதவின. வீதிகளில் கண்ணி வெடி புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்பதால், டாங்கிகள் வீட்டு வளவுகளைக் கடந்து முன்னேறின. எதிரில் அகப்பட்ட மதில் சுவர், மரம்,செடி எல்லாவற்றையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறின. சில இடங்களில் அலறி ஓடிய பொது மக்கள் மீதும் டாங்கிகள் ஏறிச் சென்றன. இந்திய இராணுவத்தின் போரிடும் முறை, சிறிலங்கா இரானுவத்தினதை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. நிலங்களை கைப்பற்ற முன்னேறும் சிறிலங்கா படையினர், தமது பக்கத்தில் அதிக இழப்பு ஏற்பட்டால் பின்வாங்கி விடுவார்கள். ஆனால் சனத்தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவை சேர்ந்த இராணுவத்திற்கு, ஆட்பற்றாக்குறைப் பிரச்சினை இருக்கவில்லை. எத்தனை போர் வீரர்கள் செத்து மடிந்தாலும், அலை அலையாக வந்து கொண்டே இருந்தனர்.

இவ்வளவு தீவிரமாக போரிட்டும், இந்தியப் படை யாழ்நகரை அடைவதற்கு ஒரு மாதம் எடுத்தது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி பெருமளவு நகரமயக்கப் பட்டிருந்தது. குடாநாட்டிலேயே சன நெரிசல் அதிகமுள்ள பிரதேசமும் அது தான். வலிகாமம் என்றழைக்கப்படும் செம்மண் பிரதேசம் முழுவதும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டையில் சிக்கி சின்னாபின்னப் பட்டது. ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, யாழ்குடாநாடு சந்தித்த முதலாவது மனிதப் பேரவலம் அப்போது தான் ஏற்பட்டது. வடக்கே காங்கேசன்துறையில் இருந்து, தெற்கே யாழ் நகரம் வரையிலான பகுதி, யாருமற்ற சூனியப் பிரதேசமாகிக் கொண்டிருந்தது. மக்கள் சாரிசாரியாக கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.

யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியான, வடமராட்சியும், தென்மராட்சியும் அமைதியாக காட்சியளித்தன. அங்கே வந்து சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள், தமக்குத் தெரிந்த உறவினர்கள் வீடுகளில் தங்கினார்கள். உறவினர்கள் இல்லாதோர் பாடசாலைகளில் தங்கினார்கள். இன்னும் சிலர் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இந்திய இராணுவம், யாழ் நகரம் வரை வந்து விட்டதால், புலிகளும் தென்மராட்சி ஊடாக வன்னிக் காடுகளை நோக்கி பின்வாங்கினார்கள். தென்மராட்சிப் பகுதி, யாழ் குடாநாட்டை வன்னி பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவிருந்தது. அதனால் அங்கே யுத்தம் நடக்காமல் தவிர்க்கப் பட்டது. இருப்பினும் தென்மராட்சியை கைப்பற்றும் நோக்குடன், இந்திய இராணுவம் அதிர்ச்சி தரும் படுகொலையை நடத்தியது.

(தொடரும்...)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:







Thursday, October 08, 2009

ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்


இலங்கையில் சிறந்த தரமுள்ள (தமிழ்) கல்வி நிலையங்கள் யாழ் குடாநாட்டிலேயே அமைந்திருந்தன. சில பாடசாலைகள் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டவை. அதிகளவில் சித்தி பெறும் மாணவர்களை உருவாக்கும் பெருமையை பெற்றவை. சிறந்த ஆசிரியர்களையும் அங்கே தான் காணலாம். இதனால் மட்டக்களப்பில் இருந்து கூட (வசதி படைத்த) மாணவர்கள் வந்து யாழ் பாடசாலைகளில் கல்வி கற்றுவந்தனர். யாழ் குடாநாடு ஆறுகளற்ற வறண்ட நிலத்தை கொண்டிருப்பதால், யாழ்ப்பாணத்தவர்கள் காலனிய காலத்திலேயே விவசாயத்தை விட்டு விட்டு உத்தியோகம் பார்க்க கிளம்பியவர்கள். கிழக்கு மாகாணத்திலும், சிங்களப் பகுதிகளிலும் நிலைமை வேறுவிதமாக இருந்தது. பெரும்போகம், சிறுபோகம் என்று வருடம் முழுவதும் நெல் விளையும் பூமி அது. அங்குள்ளவர்களின் வாழ்க்கை விவசாயத்தால் வளம் பெற்றதால், படிப்பில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.

யாழ் மத்திய தர வர்க்க குடும்பங்களில் தமது பிள்ளைகள் பொதுத் தராதரப் பரீட்சைகளில் திறமைச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் சென்றதை பெருமையோடு பேசிக் கொள்வார்கள். அந்தப் பெருமையில் அரசின் தரப்படுத்தல் கொள்கை மண் அள்ளிப் போட்டது. சிறி லங்கா அரசு தமிழரை அடக்குவதென்றால், அவர்களுக்கு பதவி வழங்கும் கல்வியை தடை செய்ய வேண்டும் என நினைத்தது. பட்டப்படிப்பு, உத்தியோகம், கைநிறைய சம்பளம் என்ற சுழற்சியிலே சிந்தித்துக் கொண்டிருந்த மத்தியதர வர்க்கம், தமது கனவுகள் நொறுங்குவதாக உணர்ந்தனர். யாழ் நடுத்தர வர்க்க பிரச்சினை அனைத்துத் தமிழரின் பிரச்சினையாக்கப்பட்டது. விரக்தியடைந்த இளைஞர்கள் தமிழ் தேசியவாத அலையில் இலகுவாக உள்வாங்கப்பட்டனர். தமிழரின் உயர் கல்வியை மறுத்த அதே அரசாங்கம், மறுபக்கத்தில் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு இலவச பாடநூல்களை வழங்கிக் கொண்டிருந்தது. இனப்பிரச்சினை தூண்டி விடப்பட்டு, வர்க்கப் பிரச்சினை மழுங்கடிக்கப்பட்டது.

இதற்கிடையே மித மிஞ்சிய செல்வம் படைத்த உயர் மத்தியதரத்தை சேர்ந்த பிள்ளைகள், அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் உயர்கல்வி கற்க சென்றனர். இவர்களில் அநேகமானோர் அங்கேயே தங்கி விட்டனர். முன்னொரு காலத்தில் பிரிட்டனில் பெற்ற கல்வியை கொண்டு, இலங்கையில் அரச உத்தியோகங்களை இலகுவில் பெற்ற தமிழர்கள், தற்போது முன்னாள் காலனியாதிக்க எஜமானர்களிடம் சேவையை தொடர்ந்தனர். இதே நேரம், யாழ்ப்பாணத்தில் இருந்த அனைவருக்கும் பவுன்களை, டாலர்களை கொட்டி வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இந்த இளைஞர்களே பிற்காலத்தில் ஆயுதமேந்திய எழுச்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர். ஆயுதமேந்த விரும்பாதவர்கள் அகதிகளாக மேற்குலக நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

வெளிநாடு செல்வதென்பது ஒரு காலத்தில் பணக்காரருக்கு மட்டுமே சாத்தியமான விடயமாக இருந்தது. யு.என்.பி.யின் நவ-லிபரல் அரசு கடவுச் சீட்டு எடுப்பதற்கான கட்டுப்பட்டுகளை பெருமளவு தளர்த்தி இருந்தது. அப்போதும் கூட, சாதாரணமாக எடுக்கும் பாஸ்போர்ட் இந்தியாவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மட்டும் செல்லவே அனுமதி அளித்தது. அனைத்து நாடுகளுக்கும் செல்லும் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க, அதிக சம்பளம் பெறும் பதவியில் இருக்கும் ஒருவரின் கையொப்பம் தேவைப்பட்டது. உழைக்கும் வர்க்க மக்கள் மத்திய கிழக்கில் தமது உழைப்பை விற்பதற்கும், மத்திய தர மக்கள் உலகம் முழுவதும் தமது மூளை உழைப்பை விற்பதுக்கும் என பொருளாதார பாகுபாட்டை இந்த நடைமுறை உறுதிப்படுத்தியது.

உழைக்கும் வர்க்க மக்கள் சிறு தொகையுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று, "பணக்காரர்களாக" திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வடக்கே பருத்தித்துறை முதல் தெற்கே அம்பாந்தோட்டை வரையுள்ள இலங்கையின் கிராமங்கள் எங்கும், "மத்திய கிழக்குப் பணம்" ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பொது மக்கள் மெல்ல மெல்ல தம் மீது நடந்த நவ-லிபரல் தாக்குதல்களை மறந்து, ஆளும் யு.என்.பி.யின் ஆதரவாளர்களாக மாறத் தொடங்கிய காலம் அது. உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் இலங்கை 1977 ம் ஆண்டே (அதாவது இனக்கலவரம் நடந்த ஆண்டு) இணைந்து கொண்டது. இதனால் அயல்நாடான இந்தியாவை கூட திரைப்படங்களாலும், சஞ்சிகைகளாலும் மட்டுமே அறிந்திருந்த தமிழ் மக்களும், உலக நாடுகளை ஆராய கிளம்பினர்.

தமிழ் இளைஞர்கள், தீவிரவாதிகளாக இனங்காணப்பட்ட காலம் அது. எங்கிருந்தோ வரும் சில இளைஞர்கள் அரச படைகளை சேர்ந்தவர்களையும், ஆளும் கட்சிகளை சேர்ந்தவர்களையும் குறி பார்த்து சுட்டு விடு ஓடி விடுவார்கள். இத்தகைய தாக்குதல் எல்லாம் முதலில் யாழ் குடாநாட்டுக்குள், அல்லது வட மாகாணத்திலேயே நடந்து கொண்டிருந்தது. தாக்கியது யார் என்று இனம் காணமுடியாத காவல்துறை (அதில் தமிழர்களும் இருந்தனர்) சந்தேகத்தின் பேரில் அப்பாவி இளைஞர்களையும் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்படுவோர் சித்திரவதைக்குள்ளாவது சகஜம்.

யாழ் குடாநாட்டில் இருந்து ஈழநாடு, சுதந்திரன் என்ற இரு பிராந்திய பத்திரிகைகள் வெளி வந்து கொண்டிருந்தன. எந்த தமிழ் இளைஞர், எந்த சம்பவத்தில், எப்போது கைது செய்யப்பட்டார், விடுதலையாகும் போது எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டிருந்தார், போன்ற செய்திகளை தமிழ் பத்திரிகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்த பத்திரிக்கை செய்திகள் பல தடவை அரசால் தணிக்கை செய்யப்பட்டன. இதனால் வதந்திகள் பரவுவது அதிகரித்தது. எங்காவது துப்பாக்கிச் சூட்டு, அல்லது குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் பதற்றம் தோன்றினாலும் பின்னர் தணிந்து விடும். வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கவே காவல்துறையால் சமாளிக்கமுடியாமல் போனது. இதனால் இராணுவம் வடக்கு நோக்கி அனுப்பப்பட்டது.

பொலிஸ் நிலையங்கள் அடிக்கடி தாக்கப்பட்டதால், சிறியதும், பெரியதுமாக புதிய இராணுவ முகாம்கள் உருவாகின. வேட்டைத்துப்பாக்கி வைத்திருந்த பொலிசிற்கு பதிலாக, தானியங்கி துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் நடமாடினர். இராணுவத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மக்கள் தொடர்பற்றவர்கள் என்பதும் நிலைமையை மோசமாக்கியது. தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள இளைஞர்கள் பலர் அதுவரை தமிழரையே பார்த்திராதவர்கள். தமிழர் பற்றிய எதிர்மறையான கதைகளை மட்டுமே கேள்விப்பட்டவர்கள். இதிலே மொழிப்பிரச்சினை வேறு நிலைமையை மோசமாக்கியது. சிங்களம் தெரியாத தமிழர்களும், தமிழ் தெரியாத சிங்களவர்களுமாக ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதிக்கொண்டனர்.

எப்போதாவது இராணுவம், அல்லது போலிஸ் மீது தாக்குதல் நடந்தால், அவ்விடத்தில் வருவோர் போவோரை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு சுட்டுக் கொல்வது வழமையாகி விட்டது. மரணிப்பது தமிழ்ப் பொதுமக்கள் என்பதால் அரச மட்டத்திலும் அக்கறை இருக்கவில்லை. அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று முழுத் தமிழர்களை எதிரிகளாக காட்டிக் கொண்டிருந்தார். பகிரங்கமாக இனவாதம் பேசிய Oxford பட்டதாரியின் ஆட்சிக்கு அமெரிக்காவும், பிரிட்டனும், இஸ்ரேலும் உதவி வழங்கின. இலங்கை பாதுகாப்புப்படைகளுக்கு பயிற்சி வழங்கின. இருப்பினும் அதற்கு முதல் ஒரு நாளும் போரியல் அனுபவம் பெற்றிராத இலங்கை இராணுவம் கெரில்லா யுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.

நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த சில தமிழருக்கு, நாட்டின் பிரச்சினைகளை சொன்னால் மேற்குலக நாடுகளில் அகதித் தஞ்சம் கோரலாம் என்ற தகவல் கிடைத்தது. அநேகமாக பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு படிக்க சென்றவர்களே அந்த தகவல்களை கொடுத்திருக்க வேண்டும். முன்னாள் காலனிய நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து பலர் அகதிகளாக வந்து கொண்டிருந்த காலம் அது. கல்வி கற்க சென்ற மாணவர்கள், மேற்குலகில் அகதியாக பதிந்து கொள்வதென்பது எளிமையான விடயம் எனக் கண்டுகொண்டனர். அந்தக் காலத்தில் அகதியாகப் பதிந்து கொள்வதற்கு கடவுச் சீட்டு, அடையாள அட்டை எதுவும் தேவையில்லை. அனைத்தையும் இழந்தவன் அகதி என்ற யதார்த்தத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொண்ட காலம் அது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.தலைநகரத் தமிழரும் தமிழீழக் கனவுகளும்
1.கொழும்புக் கலவரத்தின் நீங்காத நினைவுகள்

__________________________________________________________________________

"உயிர்நிழல்" (January-July 2009) இதழில் பிரசுரமானது.