Sunday, November 16, 2014

மார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் பாட்டாளிகள்


"ஆங்கிலம் படித்தால், உலகம் முழுக்க போகலாம்" என்று சொல்லும் பலரை இன்றைக்கும் பார்க்கிறேன். உலகம் முழுவதும் நாடோடிகளாக அலைந்து, அந்நிய நாட்டு அறிவுச் செல்வங்களை கொண்டு வரும் நோக்கில் அப்படிப் பேசுகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால், உலகம் சுற்ற விரும்பிய வாலிபர்கள், யுவதிகள், ஏதோ ஓர் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாட்டில் தங்கி விட்ட பிறகு, அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான், அவர்கள் சொல்ல வருவது தெளிவாகும். அதாவது, "உலகில் எந்த முதலாளி எனது உழைப்புக்கு அதிக விலை கொடுக்கிறானோ, அவனுக்கு எனது உழைப்பை விற்பதற்கு தயாராக இருக்கிறேன்..." என்பது தான் அவர்கள் சொல்ல விரும்பிய, ஆனால் சொல்லாமல் மறைத்த உண்மை ஆகும்.

சர்வதேச சந்தையில் உழைப்பை விற்பதற்கு, ஆங்கிலப் புலமை உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களில் யாருக்கும் தாய்நாடும் கிடையாது, தாய்நாட்டுப் பற்றும் கிடையாது. அதைத் தான், கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே எடுத்துக் கூறினார்: "பாட்டாளி வர்க்க மக்களுக்கு தாய் நாடு கிடையாது!" இன்று புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனும், மார்க்ஸின் கூற்று உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"மேலும் தாய்நாட்டையும், தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றஞ் சாட்டப் படுகின்றார்கள். தொழிளார்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் இருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றிற்கும் முதலாக அரசியல் மேலாண்மை பெற்றிருக்க வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கமும் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால், அந்த சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)

சோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு? என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: "எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்..."

அதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, "அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்..."

அதெல்லாம் உண்மையா? ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது? போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும். பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.

"சோம்பேறிகளை" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, "உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன." இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு?

நெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:
 //அதிக வேலைப்பளு (Burn out) காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.

அதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் "சுகாதார நிர்வாகி" ஒருவர் நியமிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும். ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்? இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)

இந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.

சாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள்.

மேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள்? ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.

"ஓர் உழைப்பாளி தனது இயற்கைக்கு மாறான அதிகப் படியான வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றார். அதனால் அவர் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக துன்பத்தை அனுபவிக்கிறார். சுதந்திரமாக வளர்ச்சி அடைய முடியாமல், அவரது உடல் நலனும், மன நலனும் குன்றுகின்றது.உடலளவில் சோர்வுற்று, மனதளவில் தாழ்த்தப் படுகின்றார். வேலை செய்யும் இடத்தில் ஓர் அந்நியத் தன்மையை உணர்கின்றார்..." - கார்ல் மார்க்ஸ்

No comments: