Monday, November 24, 2014

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்மூலதனம் வாசிப்பு 

கம்யூனிசத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு கூட, ஒரு தகுதி வேண்டும். அவர்கள் முதலில் முதலாளித்துவத்தை பற்றி சிறிதளவேனும் அறிந்து வைத்திருக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் முதலாவது பாகத்தின் தலைப்பு இது: "முதலாளித்துவ பொருளுற்பத்தி." 

மூலதனம் நூலை வாசித்து புரிந்து கொள்ளக் கஷ்டப் படுபவர்களுக்கும், வாசிக்க விரும்பாமல் எதிர்ப்பவர்களுக்கும் பிரயோசனப் படும் வகையில், ஒவ்வொரு பகுதியாக எடுத்து விவாதிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மூலதனம் வாசிப்பில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் எல்லோரும் ஆசிரியராகவும், மாணவராகவும் இருக்கலாம். 

முன்னாள் சோஷலிச நாடுகளில், ஒவ்வொரு தொழிலாளியும், சனிக்கிழமைகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டும். அங்கே பொருளியல் பாடம் படிக்க வேண்டும். அந்த எட்டு மணித்தியாலமும், வேலை நேரமாகக் கணிக்கப் பட்டு சம்பளம் கொடுத்து வந்தார்கள்.

உலகில் எந்த சர்வாதிகாரி தனது மக்களைப் படிக்க வைப்பான்? மேற்கத்திய முதலாளித்துவ "ஜனநாயக" நாடுகளில் கூட, தொழிலாளர்களுக்கு பொருளியல் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 
(மூலதனம், முதலாம் பாகம், புத்தகம் ஒன்று)

அத்தியாயம் ஒன்று : சரக்கு 

பிரிவு 1 : பயன் மதிப்பும், மதிப்பும் 


1. பயன் மதிப்பு 

உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் பயன் மதிப்பு (use value) இருக்கும். ஒரு சடப் பொருளின் "உள்ளார்ந்த தன்மை" என்ற தத்துவத்தின் படியும் அதைக் கூறலாம். ஒரு பொருள் பயன்படுத்தப் படுவதால், அல்லது நுகரப் படுவதால் பயன்மதிப்பு உண்டாகின்றது.

ஒரு பொருள், மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால், அதற்கு பயன்மதிப்புக் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, அரிசி உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றது. அதே போன்று, உடை காலநிலைக்கு ஏற்றவாறு உடலைப் பாதுகாப்பதற்கும், மானத்தை மறைப்பதற்கும் உதவுகின்றது.

அநேகமாக, எல்லாப் பொருட்களுக்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாம் சரக்கு ஆவதில்லை. பண்டமாற்றுக்கு அல்லது வர்த்தகப் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லப்படும் பொருள் மட்டுமே சரக்கு (Commodity) ஆகின்றது.

உதாரணத்திற்கு, காட்டில் இருக்கும் மாமரத்தில் காய்க்கும் மாங்கனிகளுக்கும் பயன்மதிப்பு இருக்கிறது. (அவற்றை நுகர முடியும்.) ஆனால், அவை சரக்காக மாட்டாது. ஏனென்றால், யாரும் அவற்றை பறித்துச் சென்று விற்பதில்லை. ஆனால், வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் மாமரத்தில் இருந்து கிடைக்கும் பழங்களை சந்தையில் கொண்டு சென்று விற்கின்றனர். ஆகவே, அந்தப் பழங்கள் சரக்குகள் ஆகின்றன.

பயன்மதிப்பு கொண்ட பொருட்கள், பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லப் படுகின்றன. இன்றைய காலத்தில் பணத்தின் மூலம் பரிவர்த்தனையை இலகுவாக தீர்மானிக்க முடிகின்றது. ஆனால், பணம் புழக்கத்தில் இல்லாத பண்டைய காலங்களில் பண்டமாற்று மூலம் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப் பட்டன.

வித்தியாசமான பௌதிகத் தன்மை கொண்ட பொருட்களை, ஒன்றுக்கொன்று சமமாக பண்டமாற்று செய்வது எப்படி?


2. பரிவர்த்தனை மதிப்பு

ஒரு பொருளின் பயன் மதிப்பை அறிந்து கொள்வது இலகு. அதன் பௌதிக, இரசாயனத் தன்மை மாற்றங்களைக் கொண்டு விலை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, நமது தோட்டத்தில் பறித்த மாம்பழங்கள், அல்லது வளர்த்த கோழியை கொண்டு சென்று சந்தையில் விற்கும் பொழுது, வாங்குவோரின் நுகர்வுத் தேவையை பொறுத்து, அதன் பயன் மதிப்பை (அல்லது விற்கும் விலையை) முடிவு செய்கிறோம். ஆனால், நாணயப் புழக்கம் இல்லாத பண்டைய காலத்தில், அவற்றை வேறொரு பொருளுடன் பண்டமாற்று செய்ய வேண்டியிருந்திருக்கும்.

ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட அளவு அரிசித் தானியத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடை அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளுடன் பண்டமாற்று செய்து கொள்கிறார். இவை யாவும் வெவ்வேறு பயன் மதிப்புக் கொண்டவை. அது மட்டுமல்லாது, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற, வேறு பட்ட அளவீடுகளை கொண்டவையாக உள்ளன.

சந்தைக்கு வந்த விவசாயி ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக, குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடையை கைமாற்றிக் கொண்டு செல்கிறார். அப்படியானால், குறிப்பிட்ட பொருட்களுக்கு இடையில், ஒன்றுக்கொன்று சமமாக மாற்றிக் கொள்ளத்தக்க பரிவர்த்தனை மதிப்பு ஒன்று இருக்க வேண்டும்.

கணிதத்தில், ஒரு வடிவத்தின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கு, அதனை பல முக்கோணங்களாக பிரித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முக்கோணத்தையும் அளப்பதற்கு, அடிப் பாகத்தின் பாதியையும், செங்கோட்டின் உயரத்தையும் பெருக்கி விடையைத் தெரிந்து கொள்கிறோம். அந்தக் கணித சூத்திரம் கண்ணுக்குப் புலப் படாத ஏதோ ஒன்றால் பெறப் படுகின்றது.

அதே போன்று, பொருட்களுக்கு இடையிலான பரிவர்த்தனை மதிப்பையும், கண்ணுக்குப் புலப் படாத "ஏதோ ஒன்று" தீர்மானிக்கிறது. அது எது? ஒவ்வொரு சரக்கிற்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வேறுபட்ட தன்மை கொண்டவை. அரிசியையும், இரும்பையும், சமப் படுத்துவது எப்படி? ஆகவே, ஒரு பொருளின் பயன் மதிப்பை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், ஒரு பொதுவான குணவியல்பு எஞ்சியுள்ளது.

ஆகவே, சரக்குகளை கைமாற்றிக் கொள்ளும் பொழுது வெளிப்படும், பொதுவான குணாம்சம் தான் உண்மையான மதிப்பு ஆகும். அந்தப் பொதுவான குணாம்சம், மனித உழைப்புத் தான். ஒரு தானியத்தை பயிரிடுவதற்கும், ஒரு தளபாடத்தை செய்வதற்கும், ஓர் ஆடையை நெசவு செய்வதற்கும் மனித உழைப்பு செலவிடப் படுகின்றது. அந்த மனித உழைப்பு தான், பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிக்கிறது.

இப்போது இன்னொரு பிரச்சினை எழுகின்றது. மனித உழைப்பின் விலையை தீர்மானிப்பது எப்படி? மணித்தியாலங்கள், நாட்கள், வாரங்கள் என்பன, ஒரு பொருளைத் தயாரிப்பதற்கு எந்தளவு மனித உழைப்பு செலவிடப் பட்டது என்பதை கணிக்க உதவுகின்றது.

அப்படியானால், ஒரு சோம்பேறி அதிக நேரம் எடுத்து ஆறுதலாக வேலை செய்து முடித்தால், குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி நினைத்துக் கொள்வது தவறு. மனித உழைப்பு எனும் பொழுது, அது ஒரு தனி மனிதனின் உழைப்பைக் குறிப்பதல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பைக் குறிக்கின்றது.

அதாவது, ஒரு சோம்பேறி, ஒரு சுறுசுறுப்பானவன், இரண்டுக்கும் இடையிலான சராசரி தொழிலாளியின் சராசரி உழைப்புத் தான், ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பில் அடங்குகின்றது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கிறது. அதுவே, ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பு. அதாவது ஒரு பொருளின் உண்மையான மதிப்பு.


3. மனித உழைப்பும் உற்பத்தித் திறனும் 

"கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்றைய உலகம் எவ்வளவோ மாற்றத்தைக் கண்டு விட்டது. அதனால், அன்று மார்க்ஸ் கூறியவை இன்றைக்கு செல்லுபடியாகாது..." என்று வாதாடுவோர் பலருண்டு. அவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை வாசித்திருக்க மாட்டார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவினால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மூலதனம் நூலில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

ஒரு காலத்தில், மடிக் கணணி, கைத் தொலைபேசி என்பன மிகவும் விலை அதிகமான ஆடம்பரப் பொருட்களாக இருந்துள்ளன. அதற்குக் காரணம், அவற்றைத் தயாரிக்கத் தேவையான கொல்த்தான் எனும் மூலப் பொருள், பூமியில் மிக அரிதாகக் கிடைத்து வந்தது. பிற்காலத்தில் கொங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக கொல்த்தான் உற்பத்தியை அதிகரித்தது. அதனால், மடிக் கணணி,கைத் தொலைபேசி என்பனவற்றின் விலைகளும் மட மடவென சரிந்தன.

மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் கிண்டலாக ஓர் உண்மையைக் கூறுகின்றார். "நிலக்கரியை வைரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தார்கள் என்றால், வைரத்தின் விலை செங்கல்லை விடக் குறைவாக இருக்கும்." வைரம், தங்கம் போன்ற கனிம வளங்கள், இயற்கையில் மிக அரிதாகக் கிடைப்பதால், அதைத் தேடுவதற்கான மனித உழைப்பும் அதிகரிக்கின்றது. அதனால் அதன் விலையும் அதிகமாக உள்ளது. இதிலே சுரங்கத் தொழிலாளரின் உடல் உழைப்பு மட்டுமல்ல, பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் மூளை உழைப்பும் சம்பந்தப் பட்டுள்ளது.

ஒரு சரக்கின் உற்பத்திக்கு தேவையான உழைப்பு மாறாது இருந்தால், அதன் மதிப்பும் மாறாமல் இருக்கும். ஒரு காலத்தில், கையால் நெசவு செய்பவரின் உழைப்பு, உடுக்கும் ஆடையில் மதிப்பாக இருந்தது. அதே உழைப்பு இன்றைக்கும் தொடருமானால், உடைகளின் விலையும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால்,நெசவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உடைகளின் விலை பெருமளவு குறைந்தது.

முன்பு விசைத் தறியில் நெசவு செய்த தொழிலாளர்களின் அதே உழைப்பு நேரம், பின்னர் தொழிற்சாலைகளிலும் மாறவில்லை. ஆனால் உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்தது. ஆகவே மனித உழைப்பு மட்டுமல்லாது, உற்பத்தித் திறனும் ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. உண்மையில் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளில் நெசவு இயந்திரங்கள் வந்த பின்னர், உழைப்பின் நேரம் அரைவாசியாகக் குறைந்தது.

அதாவது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்புத் தான், ஒரு பண்டத்தின் மதிப்பையும், பருமனையும் நிர்ணயிக்கின்றது. பொதுவாக, உற்பத்தித் திறன் (நவீன தொழில்நுட்பம்) உயர்வாக இருந்தால், ஒரு பண்டத்தின் உற்பத்திக்கு தேவைப் படும் உழைப்பின் நேரமும் குறையும். அதன் மதிப்பும் குறையும். கடந்த தசாப்த காலமாக, கணனித் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பொருள் உற்பத்திக்கான செலவும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நோக்கத்தோடு தான், வருங்காலத்தில் ரோபோக்கள் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

எந்த இடத்தில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு பண்டத்திற்கு தேவைப்படும் மனித உழைப்பின் அளவும், மதிப்பும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவில் பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளியின் விலை சந்தையில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அதை உற்பத்தி செய்வதற்கான மனித உழைப்பு அதிகம்.

அதே இந்திய சந்தையில், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட தக்காளிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களது விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு என்பன உற்பத்தித் திறனை உயர்த்தி உள்ளது. மனித உழைப்பை குறைத்துள்ளது. அதனால் விலையும் குறைந்துள்ளது.

ஒரு பயன்மதிப்பு கொண்ட பண்டத்தில், கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பு இறுகி இருப்பதாலேயே அது மதிப்பைப் பெற்றிருக்கிறது. (விற்பனைக்கான சரக்காக மாறுகிறது.) ஆயினும், பயன் மதிப்புக் கொண்ட எல்லாம், மதிப்புப் பெறுவதில்லை. காற்று, தரிசு நிலம், புல்வெளிகள் என்பன பயன் மதிப்புக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவில் ஒரிசா மாநிலக் காடுகளில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனம் வரும் வரையில், அந்த இடத்தின் பயன்மதிப்புக் குறித்து யாரும் அக்கறைப் படவில்லை.

ஒரு பொருள் விற்பனைக்கான சரக்காக மாறாமலே, அது மனித உழைப்பைக் கொண்டதாகவும், மனிதர்களுக்கு பிரயோசனமானதாகவும் இருக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது தேவைக்காக, தானாகவே ஒரு மேசையை உற்பத்தி செய்கிறார். அவர் அந்தப் பொருளில் பயன் மதிப்பை உருவாக்குகிறார். ஆனால், அது விற்பனைக்கான சரக்கு அல்ல.

ஒருவர் உற்பத்தி செய்யும் பொருள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதாவது, அதற்கு ஒரு சமுதாயப் பயன் மதிப்பு கிடைக்க வேண்டும். ஆயினும், நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு குடியானவன் தனது தானிய உற்பத்தியில் ஒரு பகுதியை நிலவுடமையாளருக்கும், கோயிலுக்கு தானமாகவும் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆகவே, ஒரு பொருள் உறபத்தி செய்யப் பட்டு, மற்றவர்களுக்கு பயன்பட்டாலும் எப்போதுமே அது சரக்காகி விடுவதில்லை. அந்தப் பொருளின் பயன் மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும் இன்னொருவருக்கு, பரிவர்த்தனை மூலம் கைமாற வேண்டும். அதாவது பண்டமாற்று செய்யப் பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பயன் எதுவும் கிடையாது. அதில் அடங்கி இருக்கும் உழைப்பும் மதிக்கப் படுவதில்லை.

பெரும்பாலும் உழைப்பாளர்களாக இருக்கும் நாங்கள், எங்களது உழைப்பை முதலாளி கொடுக்கும் பணத்துக்காக பரிவர்த்தனை செய்து கொள்கிறோம். அவ்வாறு தான், முதலாளித்துவ உற்பத்தியில், எமது உழைப்பு கூட விற்பனைச் சரக்காக மாறுகின்றது.

6 comments:

வலிப்போக்கன் said...

இருந்த ,இருக்கிற சர்வாதிகாரிகள் எல்லாம் மக்களுக்கு எதிராக இருந்தார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரியோ முதலாளிகளுக்கு எதிராக இருந்தார். அதனால்தான் தனது மக்களைப் படிக்க வைக்கிறார்.

Unknown said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள். என்னிடமும் மூலதனம் புத்தகம் உள்ளது. படிக்க தொடங்கி சிறிது நேரத்திலேயே சோர்ந்து விட்டேன். புரியவில்லை. பின் அதை படிக்க விருப்பமில்லாமல் அப்படியே விட்டுவிட்டேன். இப்போது இந்த தொடர் மூலம் படிக்க ஆவலாக உள்ளது.

மேலும் எனக்கு ஒரு சந்தேகம் வலதுசாரி, இடதுசாரி அப்படி என்றால் என்ன? என்பதை எனக்கு விளக்கவும்.

Kalaiyarasan said...

X Muslim
உங்களது பிரச்சினை நிறையப் பேருக்கு இருக்கிறது. எனக்கும் தான். எல்லோரும் ஓர் ஆர்வத்துடன் தொடங்குகிறார்கள். ஆனால் வாசிக்க முடிவதில்லை. நான் இரண்டு தடவைகள் மார்க்சிய வகுப்புகளில் படித்த அறிவைக் கொண்டு, இந்த தொடரை ஆரம்பித்தேன். எனக்கும் இது ஒரு அனுபவமாக இருக்கும்.

வலதுசாரி, இடதுசாரி என்பது அரசியல் வகைப் படுத்தல். அதிலே பல கட்சிகள், இயக்கங்கள், தனி நபர்கள் இருக்கலாம். ஆனால், பொதுவான கொள்கை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக அந்த சொற்பதங்களை பாவிக்கிறோம்.

சதீஷ் செல்லதுரை said...

உங்கள் தளம் எனது பல தேடல்களுக்கு விடை தரும் என நம்பிக்கை தந்துள்ளது.மூலதனம் படிக்க வெகுவாக விருப்பம் உண்டு. புரியுமா என்ற பயம் உள்ளது. இப்போ நம்பிக்கை வருகிறது.நன்றி சகோ

Kannan said...

வெகு சுவாரஸ்யமாக, எழிமையாக எழுதி உள்ளீர்கள். இன்னும் படிக்க ஆர்வமாக உள்ளேன். எத்தனையோ மேடை பேச்சுகளில் இவர் பெயர் (கார்ல் மார்க்ஸ்) உச்சரிக்க படுவதை கேள்விபட்டுள்ளேன். படித்ததில்லை. அதோடு சேர்த்து ரஷ்யாவை பார் , சீனாவை பார் என்றும் கேள்விப்பட்டதால், முதலில் சென்னையை பாப்போம் பிறகு அவற்றை பார்போம் என்று விட்டு விட்டேன்.

kaja said...

very intresting. Eager to read. waiting for more useful article. thx.