Showing posts with label ஐரோப்பிய அடிமைகள். Show all posts
Showing posts with label ஐரோப்பிய அடிமைகள். Show all posts

Friday, August 22, 2014

அமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்


அமெரிக்கக் கண்டத்திற்கு ஆப்பிரிக்க கருப்பர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், "புதிய உலகம்" என அழைக்கப் பட்ட அமெரிக்கக் கண்டத்தில், வெள்ளையின அடிமைகளும் விற்கப் பட்டனர். இங்கிலாந்தின் முதலாவது காலனியான, அயர்லாந்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், அங்கு வாழ்ந்த ஐரிஷ் மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். ஐந்து இலட்சம் ஐரிஷ் பெண்கள், அமெரிக்காவில் பாலியல் அடிமைகளாக விற்கப் பட்டனர். 

உலகில் பல நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், இனச் சுத்திகரிப்புகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடுகளில் தான் அதிகளவில் நடந்துள்ளன. பாராளுமன்ற ஜனநாயகம் சுதந்திரமான தேர்தல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 19 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் சில நாடுகளில் இருந்த மன்னராட்சி முறைக்கு மாற்றாகத் தான் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டு வரப் பட்டது.

உலக வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்தில் தான் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்பட்டது. மன்னராட்சிக்கு எதிராக கலகம் செய்த, ஆங்கிலேய மேட்டுக் குடியினரின் பிரதிநிதியான ஒலிவர் குரொம்வெல், பேரழிவைத் தந்த உள்நாட்டுப் போரை வழிநடத்தினார். போரின் முடிவில், இங்கிலாந்து மன்னர் சிரச் சேதம் செய்யப் பட்டார். பாராளுமன்றம் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. உலகில் முதல் தடவையாக பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய குரொம்வெல், ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

குரொம்வெல் தலைமையிலான புரட்டஸ்தாந்து படையினர், புரட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மன்னருக்கு ஆதரவான நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை ஒழித்தார்கள். ஆனால், பழைய நிலப்பிரபுக்களின் நிலங்கள், குரொம்வெல்லின் போர்வீரர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பங்கிடப் பட்டது. இன்று பிரிட்டனில் உள்ள நிலவுடமையாளர்கள் பலர், குரொம்வெல் காலத்தில் நிலங்களை அபகரித்தவர்கள் தான். வட அயர்லாந்தில், அது இன்றைக்கும் எரியும் பிரச்சினையாக உள்ளது.

பிரிட்டிஷ் காரர்கள், அயர்லாந்தில் நடத்திய இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்புகளை, பிற்காலத்தில் அனைத்துக் காலனிகளிலும் அறிமுகப் படுத்தினார்கள். வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஐரோப்பிய காலனியவாதிகள், ஆரம்பத்தில் செவ்விந்திய பூர்வ குடிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். கனடா முதல் மெக்சிகோ வரையில், ஆயிரக் கணக்கான கலப்பின காலனிகள் உருவாகி இருந்தன.

அதாவது, ஐரோப்பிய குடியேறிகளும், செவ்விந்தியர்களும் அருகருகே அயல் கிராமங்களாக வாழ்ந்து வந்தனர். நிறைய கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. ஆனால், பிற்காலத்தில் அமெரிக்காவில் அரசு அதிகாரத்தை நிலைநாட்டிய அதிகார வர்க்கத்தினர், இனக் கலப்பை தடை செய்தார்கள். அதற்குப் பிறகு தான், காலனிய விஸ்தரிப்பு யுத்தங்கள் நடந்தன. செவ்விந்திய பூர்வ குடிகள் இனவழிப்பு செய்யப் பட்டனர்.

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மன்னராட்சியை தூக்கியெறிந்து புரட்சி செய்த ஒலிவர் குரொம்வெல், அயர்லாந்து புரட்சியை மிகக் கொடூரமாக ஒடுக்கினார். அயர்லாந்து தீவில், பெருமளவு விவசாய நிலங்கள் ஆங்கிலேய நிலப்பிரபுக்களின் கீழ் இருந்தன. நிலப்பிரபுக்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அந்த மக்கள் எழுச்சியின் போது சுமார் 4000 பேர் கொல்லப் பட்டனர். ஆங்கில நிலப்பிரபுக்கள், ஐரிஷ் தொழிலாளர்களினால் படுகொலை செய்யப் பட்டனர். அது ஒரு வர்க்கப் புரட்சியாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் (17 ஆம் நூற்றாண்டு)கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களுக்கு இடையிலான மதப் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது.

குரொம்வெல் அனுப்பிய ஆங்கிலேயப் படைகள், ஐரிஷ் மக்கள் எழுச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கிலிடப் பட்டனர். அவர்களை பின்பற்றியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால், இரண்டு நிபந்தனைகள். இங்கிலாந்துடன் போரில் ஈடுபட்டிருக்கும் எதிரி நாட்டிற்கு செல்லக் கூடாது. மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும். பெருமளவு ஐரிஷ் கிளர்ச்சியாளர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள். அதனால், அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களும் குழந்தைகளும் தனித்து விடப் பட்டனர்.

அயர்லாந்தின் நிலங்கள் மறு பங்கீடு செய்யப் பட்டன. கிளர்ச்சியை நசுக்குவதற்கு உதவிய பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு ஊதியமாக நிலங்கள் வழங்கப் பட்டன. எஞ்சிய ஐரிஷ் நிலவுடமையாளர்களுக்கு, பிரயோசனமற்ற தரிசு நிலங்கள் ஒதுக்கப் பட்டன. நாடுகடத்தப் பட்ட புரட்சியாளர்களின் குடும்பத்தினர், அந்த நிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1652 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றியது. "தன்னைத் தானே பராமரிக்க முடியாத, அதாவது போதிய வருமானம் இல்லாத ஐரிஷ் பெண்கள், அடிமை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப் படலாம்." அயர்லாந்தை ஆக்கிரமிக்கும் போர் முடிந்த பின்னர் வேலையற்று இருந்த முன்னாள் போர்வீரர்கள், ஐரிஷ் பெண்களையும், குழந்தைகளையும் சுற்றி வளைத்து பிடித்து விற்று விடத் தொடங்கினார்கள். மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து குறி சுடுவது போன்று, பிடிபட்ட ஐரிஷ் அடிமைகளுக்கும் செய்தார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலுடன், அடிமை வியாபாரிகள் ஐரிஷ் பெண்களை கப்பல்களில் கொண்டு சென்று, அமெரிக்காவில் விற்றார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறி இருந்த வசதி படைத்த ஆங்கிலேயர்கள், அழகான இளம் வயது ஐரிஷ் பெண்களை வாங்கி, தமது வீடுகளில் பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். அழகில்லாத பெண்கள், பெருந்தோட்ட முதலாளிகளின் வீடுகளில் பணிப் பெண்களாக விற்கப் பட்டனர். சிலர் சிறுமிகளைக் வாங்கிச் சென்று பாவித்து விட்டு விபச்சார விடுதிகளில் தள்ளி விட்டார்கள்.

பார்படோஸ் தீவுக்கு கொண்டு சென்று இறக்கப் பட்ட வெள்ளையின ஐரிஷ் அடிமைகள், அங்கிருந்த பெருந்தோட்ட முதலாளிகளினால் கால்நடைகளைப் போன்று நடத்தப் பட்டனர். ஐரிஷ் பெண் அடிமைகளுடன் உறவு கொள்ளும் முதலாளிகள், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை விபச்சார விடுதிகளுக்கு விற்றனர். தம்மிடம் இருந்த கறுப்பின அடிமைகளை உறவு கொள்ள வைத்து, ஐரிஷ் பெண்களை பிள்ளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக வைத்திருந்தார்கள். ஏனெனில், கறுப்பு - வெள்ளை கலப்பில் பிறந்த சிறுமிகளை, விபச்சார விடுதிகளில் நல்ல விலைக்கு விற்க முடிந்தது.

பார்படோசில் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஐரிஷ் பெண்களின் வழித்தோன்றல்கள் இன்றைக்கும் அங்கே வாழ்கின்றனர். சுமார் 400 பேரளவில், மிகவும் வறுமையான நிலையில் சேரிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மட்டுமே தமது முன்னோரின் அயர்லாந்து பூர்வீகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில் மிகச் சிறுபான்மையான இனம் என்பதால், பகை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக ஒதுங்கி வாழ்கின்றனர்.

குறைந்தது ஐந்து இலட்சம் ஐரிஷ் அடிமைகள், அமெரிக்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பப் பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப் படும் வரையில், இந்த அடிமை வாணிபம் தொடர்ந்திருக்கிறது. கூடவே இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது. அடிமை வாணிபத்தில் ருசி கண்ட முன்னாள் பிரிட்டிஷ் படையினர், ஏழை ஆங்கிலேய சிறுமிகளை பிடித்தும் அடிமைகளாக விற்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், வெள்ளையின அடிமைகள் தொடர்பாக இங்கிலாந்தில் பல பக்கங்களில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் நூல்களை வாசிக்கவும்: 
White Cargo: The forgotten history of Britain's white slaves in America 
To Hell or Barbados: The Ethnic Cleansing of Ireland

Thursday, August 15, 2013

ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா?

இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த காலம் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. யாரும் தனது நினைவுக் குறிப்புகளை எழுதி வைக்கவில்லை.

மூன்று காரணங்களுக்காக, இந்த வரலாற்றுத் தகவல்கள் மறைக்கப் படலாம். 

  1.  ஐரோப்பியர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள். உலகில் வேறெந்த இனத்திடமும் அடிமையாக இருந்திராதவர்கள் என்ற இனவாத மேலாண்மை குறித்த அரசியல். அது எப்போதும் ஆண்ட பரம்பரைக் கதைகளை மட்டுமே விரும்புகின்றது. அடிமையாக இருந்த கதைகளை மறைக்கின்றது.
  2.  ஒரு காலத்தில் வெள்ளையின-ஐரோப்பிய அடிமைகளை வைத்திருந்த வட ஆப்பிரிக்க பிரதேசம், பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாகியது. அதனால், வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். தமது அவமானகரமான கடந்த காலத்தை மறைத்து விட்டார்கள்.
  3.  அது ஒரு முற்றிலும் மாறுபட்ட காலகட்டம். கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு மதங்களுக்கு இடையிலான, மதப் போர் நடந்து கொண்டிருந்த காலம். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மதப் போர்களின் காலம் முடிந்து விட்டிருந்தது.

மூன்றாவதாக குறிப்பிட்ட காரணத்தில் இருந்து தான், இந்த மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை தேடத்  தொடங்க வேண்டும். சிலுவைப்போர் என்றதும், எல்லோரும் ஜெருசலேமை கைப்பற்றச் சென்ற படைகளை பற்றி மட்டுமே நினைக்கின்றனர். சிலுவைப்போர் ஒரே திசையில் மட்டுமே நடக்கவில்லை. ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளிலும் இன்னொரு சிலுவைப்போர் நடந்தது. அன்று அந்த நாடுகள், "முஸ்லிம் நாடுகளாக" அரேபிய சக்கரவர்த்தியினால் ஆளப்பட்டன. மொரோக்கோ நாட்டில் இருந்து படையெடுத்த மூர்கள் 500 வருடங்களுக்கு மேலாக அந்தப் பிரதேசத்தை ஆண்டு வந்தனர். உள்நாட்டு ஸ்பானிஷ், போர்த்துக்கேய மக்கள் பலர், முஸ்லிம்களாக மாறி இருந்தனர்.

மூர்களுடனான போரில் வென்று, ஸ்பெயின், போர்த்துக்கல்லினை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிறிஸ்தவ அரசர்கள், அந்தப் பிரதேசத்தை நூறு சதவீத கிறிஸ்தவ நாடாக மாற்ற விரும்பினர். அதற்கு முன்னரே, மூர்-அரேபிய ஆளும் வர்க்கத்தினரும், அவர்களின் நாட்டவரும்,பூர்வீகத் தாயகமான  மொரோக்கோவுக்கு பின்வாங்கிச் சென்று விட்டனர். ஸ்பானிஷ் முஸ்லிம்களும், யூதர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர். (அவர்களது பூர்வீகம் ஸ்பெயின் ஆகும்.) ஆனால், கிறிஸ்தவ மன்னனும், கத்தோலிக்க திருச் சபையும் அவர்களின் மதச் சுதந்திரத்தை பறித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான யூதர்களும், முஸ்லிம்களும் அவர்களது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாத குற்றத்திற்காக, சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப் பட்டனர். மரண தண்டனை விதித்து கொலை செய்யப் பட்டனர். 

கத்தோலிக்க சமயத்தை தழுவிக் கொண்ட, முன்னாள் யூதர்களும், முஸ்லிம்களும், அரசு அதிகாரிகளினால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் பட்டனர். அவர்களும் துன்புறுத்தப் பட்டனர். உண்மையில், அன்றைய ஸ்பெயினில் ஒரு இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவ அரசின் கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, இனிமேல் அங்கே வாழ முடியாது என்று தீர்மானித்த ஆயிரக் கணக்கான ஸ்பானிஷ்-முஸ்லிம் குடும்பங்கள், அகதிகளாக மொரோக்கோவுக்கு தப்பி ஓடின. அவர்கள் வட மொரோக்கோ, மற்றும் அல்ஜியர்ஸ், துனிஸ், திரிப்பொலி போன்ற நகரங்களிலும் சென்று குடியேறினார்கள். ஸ்பெயினில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகள், தமது தாயகத்தை ஆளும் கிறிஸ்தவ அரசுக்கு எதிராக, பழிவாங்கும் போர் ஒன்றை தொடங்கினார்கள். அது ஒரு சாதாரண போராக இருக்கவில்லை. 

ஸ்பானிஷ்-முஸ்லிம் அகதிகளுடன், சில மூர் கடற் கொள்ளையரும் சேர்ந்து, கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு எதிரான "ஜிகாத்" ஒன்றை நடத்தினார்கள். வெளியுலகிற்கு மட்டுமே, அது "கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் மதப் போர்". உண்மையில், அது ஸ்பானிஷ் முஸ்லிம் அகதிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தொடங்கியது. ஆனால், பின்னர் அது மதப் போராக மாறியது. இதனை முன் நின்று நடத்தியவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் கடற்கொள்ளையர் ஆவர். அன்றைய மொரோக்கோ மன்னராட்சி, மறைமுகமான ஆதரவு வழங்கினாலும், நேரடியாக படைகளை அனுப்பவில்லை. 

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள், மத்தியதரைக் கடலில் கிறிஸ்தவ கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தார்கள். கப்பலில் வந்த ஐரோப்பியர்களை பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார்கள். துனிஸ், அல்ஜியர்ஸ், மற்றும் சில நகரங்களில், ஐரோப்பிய அடிமைகள் நல்ல விலைக்கு விற்கப் பட்டனர். அடிமை வணிகம் சூடு பிடிக்கவே, கடற்கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுந்தும் அடிமைகளை பிடித்தார்கள். ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், என்றைக்கு அடிமைகளாவோமோ என்ற பயத்துடன் வாழ வேண்டியிருந்தது. அந்தளவுக்கு அந்தப் பகுதிகள், அடிக்கடி கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளாகின.  


வட ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப்பட்ட, குறிப்பிட்டளவு அடிமைகளை, தனியார் வாங்கிச் சென்றனர். எஞ்சியவர்களை அரசு வாங்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் இருந்த பாரிய கப்பல்களில் துடுப்பு வலிக்கும் வேலையில் இந்த அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும், பெரிய கட்டுமானப் பணி, துறைமுகங்கள் கட்டுவது போன்ற கடுமையான வேலைகளும் கொடுக்கப் பட்டன. தனியாரினால் வாங்கிச் செல்லப்பட்ட அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகவும், வயலில் வேலை செய்யவும் ஈடுபடுத்தப் பட்டனர். ஒப்பீட்டளவில், இந்த வேலைகள் கட்டுமானப் பணி, கப்பல் வேலை போன்று கஷ்டமாக இருக்கவில்லை.

கிறிஸ்தவ அடிமைகள் மதம் மாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டது. ஏராளமான ஐரோப்பிய அடிமைகள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் அவர்கள் அடிமைகாகவே இருந்தனர். ஆனால், கடினமான வேலைகளை செய்யப் பணிக்கப் படவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஆயினும், பெரும்பாலான அடிமைகள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்தனர். அவர்கள் மத்தியில் மதச் சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியார்களும் அதற்கு ஒரு காரணம். செத்தாலும் பரவாயில்லை, முஸ்லிமாக மதம் மாறக் கூடாது என்று தடுத்து விட்டனர். அதனால், பல்லாயிரம் அடிமைகள் கடினமான வேலை காரணமாக உடல் சோர்வுற்று, மூப்படையும் முன்னமே மாண்டு போயினர். 

வட ஆப்பிரிக்காவில் எத்தனை இலட்சம் கிறிஸ்தவ அடிமைகள் இருந்தனர் என்பதற்கான சரியான புள்ளிவிபரம் கிடைக்கவில்லை. யாரும் அவற்றை பதிவு செய்து வைக்கவில்லை என்று தெரிகின்றது. அண்ணளவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய அடிமைகள், வட ஆப்பிரிக்காவில் இருந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கறுப்பின அடிமைகளின் தலைமுறையினர் போன்று, வட ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய தலைமுறையினர் யாரும் இல்லை. வெள்ளையின அடிமைகளின் எண்ணிக்கை குறைந்து சென்று, காலப்போக்கில் இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.    

அடிமைகளில் 90% மானோர் ஆண்கள். அவர்கள் குடும்பம் அமைப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் தடுக்கப் பட்டிருந்தது. பலர் கடுமையான வேலை காரணமாக சோர்வடைந்து மரணமடைந்து விட்டனர். அதை விட, பெருந்தொகையான புதிய அடிமைகள், கொண்டு செல்லப் பட்ட பின்னர் பேரம் பேசி, பணம் கிடைத்தவுடன் விடுவிக்கப் பட்டனர். பணம் வைத்திருந்த உறவினர்கள், கேட்ட தொகையை கொடுத்து விடுதலை வாங்கி அழைத்துச் சென்றனர். அதே நேரம், வட்டிக்கு கடன் கொடுக்கும் ஐரோப்பியர்களுக்கு விற்கப் பட்டு, அவர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒப்பந்த அடிமைகளாக வேலை வாங்கப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

வரலாறு முழுவதும், எல்லா சம்பவங்களையும் முன் அனுமானங்களுடன் ஒரே மாதிரி கணித்து விட முடியாது. எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ஐரோப்பிய அடிமைகள் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப் படவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவர்கள், அரபு சமூகத்துடன் இரண்டறக் கலந்து விட்டனர். அது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர்களில் சிலர், கடற்கொள்ளையர்களாக மாறி இருந்தனர். அதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். இத்தாலியை சேர்ந்த முன்னாள் அடிமை ஒருவரின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

இத்தாலியில் நிலவுடமையாளர்களுக்கு கீழே வேலை செய்யும் பண்ணையடிமைகள், அங்கே ஏற்கனவே அடிமை வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தமது (கிறிஸ்தவ) நிலவுடமையாளரை வெகுவாக வெறுத்தார்கள். அப்படியான ஒருவர், முஸ்லிம் கடற்கொள்ளையரினால் அடிமையாக அல்ஜீரியாவுக்கு பிடித்துச் செல்லப் பட்டார். அந்த இத்தாலியர் அல்ஜீரியா சென்ற பின்னர் , இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டார். அது மட்டுமல்லாது, கடற்கொள்ளையரின் கப்பலிலேயே ஒரு  வேலை தேடிக் கொண்டார். 

குறுகிய காலத்திற்குள் மிகவும் விசுவாசமான கடற்கொள்ளைக்காரராக மாறி, ஒரு கப்பலின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அவர் கடற்கொள்ளையரின் கப்பலில், இத்தாலியில் தனது பிறந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கிருந்த தனது குடும்பத்தினரை கப்பலில் ஏற்றுக் கொண்டு அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடி விட்டார். குடும்ப உறுப்பினர்களும், தாமாகவே விரும்பித் தான் கப்பலில் ஏறினார்கள். ஏனெனில், நிலப்பிரபுவினால் சுரண்டப்பட்ட அவர்களுக்கு, இது விடுதலையாகப் பட்டது. அல்ஜீரியா சென்றதும், எல்லோரும் முஸ்லிமாக மாறி அந்த நாட்டிலேயே தங்கி விட்டனர். 

மேற்குறிப்பிட்ட இத்தாலியரின் கதையில் இருந்து, வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் எல்லோரும் அடிமைகள் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். ஐரோப்பாவில், இராணுவத்தை விட்டு தப்பியோடிய போர்வீரர்கள், நிலமற்ற விவசாயிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்ட பண்ணையடிமைகள் ஆகியோர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இஸ்லாமிய வட ஆப்பிரிக்காவில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். கிறிஸ்தவ அடிமைகளை விட, அத்தகைய "கிறிஸ்தவ குடியேறிகளுக்கு" அதிக வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அடிமைகளாகவும் இல்லாமல், முஸ்லிமாகவும் மாறாமல், வியாபாரக் கூட்டணி காரணமாக வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஒரு சிறு பிரிவினரும் உள்ளனர். அந்தக் காலத்தில், நெதர்லாந்தும், பெல்ஜியமும், ஸ்பெயின் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடியவர்கள், முஸ்லிம் கடற்கொள்ளைக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். டச்சுக் கடற்கொள்ளையரும், முஸ்லிம் கடற்கொள்ளையரும் இணைந்து, ஸ்பானிஷ் கப்பல்களை கொள்ளையடித்தார்கள். டச்சுக் கடற்கொள்ளையரும் மொரோக்கோவை தளமாக கொண்டு தான் செயற்பட்டனர்.

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள் ஸ்பெயினுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, ஐஸ்லாந்து வரை சென்று, அங்கேயும் நூற்றுக் கணக்கானோரை அடிமைகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இங்கே குறிப்பிடப் பட்டுள்ள சம்பவங்கள் யாவும், 16 ம் நூற்றாண்டுக்கும், 18 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடந்தவை. 19 ம் நூற்றாண்டில், இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. ஐரோப்பாவில் புதிய வல்லரசுகளாக உருவான பிரிட்டனும், பிரான்சும் வலிமையான கடற்படைகளை அனுப்பி, கடற்கொள்ளையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சுப் படைகள், அல்ஜீரியா, துனீசியாவை ஆக்கிரமித்தன. அன்றிலிருந்து அந்த நாடுகள் பிரெஞ்சுக் காலனிகளாகின. ஸ்பெயின் வட மொரோக்கோவின் சில பகுதிகளை கைப்பற்றியது. வட ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த இலட்சக் கணக்கான ஐரோப்பியர்களும், ஸ்பெயினுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை நடத்திய ஸ்பானிஷ்-முஸ்லிம்களும், வரலாற்றில் இருந்து எந்த சுவடும் இன்றி மறைந்து போனார்கள். யாருக்குத் தெரியும்? இன்று அந்த நாடுகளில் வாழும் பல அரேபியர்களின் உடலில் ஐரோப்பிய இரத்தம் ஓடலாம். 

*************

உசாத்துணை :

1.Rijstpap, tulpen & jihad (Lucas Catherine)
2.Morisco's (Lucas Catherine)
3. Christian Slaves, Muslim Masters: White Slavery in the Mediterranean, the Barbary Coast and Italy, 1500-1800 (Robert C. Davis)