Tuesday, May 20, 2014

மோடியால் எதையும் சாதிக்க முடியாது


நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவானதற்கு, மேற்கத்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அது ஏன் என்ற காரணத்தையும் பகிரங்கமாக கூறி விடுகின்றன. அதாவது, மேலைத்தேய மூலதனம் போடும் தாளத்திற்கு ஏற்றவாறு, மோடி ஆடுவார் என்று கணிப்பிடுகின்றன. நிதி மூலதன நிறுவனங்கள் கோரும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவார். "இந்தியாவின் மார்க்கிரட் தாட்சர்" ஆக வருவார் என்றெல்லாம் புகழாரம் சூட்டுகின்றன.

மோடியால் எந்தளவுக்கு சாதிக்க முடியும் என்பது பற்றி, NRC Handelsblad பத்திரிகையில், புருசல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் Jonathan Holslag, மிகவும் ஆழமான ஆய்வொன்றை செய்துள்ளார். அவர் கூறுவதன் படி, மோடி பெரிய சாதனை எதையும் நிகழ்த்திக் காட்டப் போவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கப் படும், பொருளாதார சீர்திருத்தம் வெற்றியடையப் போவதில்லை. மறுபக்கம், இந்திய தேசியவாதிகளையும் அவர் திருப்திப் படுத்தப் போவதில்லை.

"இந்திய மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால், இந்தியா மாற்றமடையும்" என்று வெற்றி விழாவில் மோடி கூறினார். அது ஒரு கனவு. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கலாம். பாராளுமன்றத்தில், பாஜக 51% ஆசனங்களை கைப்பற்றி இருக்கலாம். ஆனால், வெறும் 31% வாக்காளர்களின் ஓட்டுக்களைப் பெற்றுத் தான், பாஜக பெரும்பான்மை ஆசனங்களை வென்றது என்பதை மறந்து விடலாகாது. கிட்டத்தட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், பிராந்திய மட்டத்திலான சிறிய கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். இதன் மூலம், இந்திய வாக்காளர்கள் மிகவும் ஆழமாக பிளவு பட்டிருக்கின்றமை தெளிவாகின்றது.

மோடிக்கு முன்னால் உள்ள முக்கியமான சவால்: பொருளாதாரம். அடுத்த பத்து வருடங்களில், இந்தியாவில் 15 மில்லியன் பேர், புதிதாக வேலை தேடி தொழிற் சந்தையில் நுழையப் போகிறார்கள். அவர்களுக்காக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டி இருக்கும். இந்தியாவின் இரண்டு முக்கியமான பாரம்பரிய பொருளாதார ஆதாரங்கள் சரிவர இயங்குவதில்லை. அளவுக்கு மிஞ்சிய செயற்கை உரங்களின் பாவனை காரணமாக, விவசாய உற்பத்தி துறை பெரிதும் நலிவடைந்துள்ளது. நகரங்களுக்கு தேவையான மலிவு விலைப் பொருட்களை விநியோகித்து வந்த, ஒழுங்கமைக்கப் படாத சிறு வணிகம் தற்போது இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக, உள்கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தப் போவதாக மோடி அறிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின்சாரமயமாக்கல், தொழிற்சாலைகள் எல்லாம் உடனடித் தேவைகள். ஆனால், அதற்காக உள்ளூர் அதிகார பீடங்களுடன் மல்லுக் கட்ட வேண்டியிருக்கும். ஊழலை ஒழிக்க முடியாத அளவிற்கு, அவரது சொந்தக் கட்சியினரே ஊழலில் மாட்டிக் கொண்டுள்ளனர். உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இன்னமும் மீளவில்லை.

அரசாங்கம் உள்நாட்டு நுகர்வோர்களை நம்பி இருக்க முடியாது. இந்தியாவின் உள்நாட்டு நுகர்வோர்களின் அதிசயப் படத் தக்க வளர்ச்சி என்பது ஒரு மிகைப் படுத்தல். நீண்ட காலமாகவே, இந்தியாவின் பொருளாதாரம், சீனாவுடையதை விட நான்கு மடங்கு சிறியதாக இருந்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரம் பல பற்றாக்குறைகளின் மேலே கட்டியெழுப்ப பட்டது. வணிக நிலுவையில் பற்றாக்குறை. அதிகரித்துச் செல்லும் கடன் சுமை. இதை விட அரசாங்கத்தின் பற்றாக்குறை தனியானது.

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை,இந்திய அரசு மானியங்களுக்காக செலவு செய்கின்றது. அதன் உதவியால் தான், வறிய குடும்பங்களை தலைநிமிர வைக்க முடிகின்றது. மோடி அதில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார். ஆனால், வேறு மாற்றீடு எதுவும் இல்லாமல், மானியங்களை குறைப்பது ஒரு அரசியல் தற்கொலை செய்வதற்கு சமமானது. ஆனால், மானியங்களை தொடர்ந்தும் வைத்திருந்தால், மோடி வாக்குறுதி அளித்த கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற முடியாது.

இந்தியாவின் புதிய அரசியல் நட்சத்திரம், அந்த நாட்டை சூழவுள்ள சிக்கலான பாதுகாப்பு நிலவரங்களுக்கு வாரிசு உரிமை பெற்றுள்ளது. அவரது கட்சியினர் எதிர்பார்ப்பது போல, பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்து கொள்ள முடியாது. பங்களாதேஷ் விஷயத்திலும் அதுவே நடக்கும். சீனா மென்மேலும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில், வாக்குறுதி அளித்த பொருளாதார மாற்றம் எதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், அவரால் தேசியவாத உணர்வுகளை எதிர்த்து நிற்க முடியுமா? நான் எதிர்பார்க்கும் பதில்: "முடியாது, அது அவரால் முடியாது."

(நன்றி:NRC Handelsblad, 19-05-2014)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

No comments: