Tuesday, May 13, 2014

இலங்கையில் பௌத்த மதத்தை உயிர்ப்பித்த டச்சு காலனியாதிக்கம்

இலங்கையில் வாழும்
நெதர்லாந்து பௌத்த துறவி
ஆனந்தா ஒலாண்டே, தலாய் லாமாவுடன்.
இலங்கை  சுமார் 500 வருட காலமாக ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. ஆயினும், 2000 வருடங்களுக்கும் அதிகமாக, அங்கே பௌத்த மதம் அரச மதமாக வீற்றிருக்கின்றது. பௌத்த மதம் 2000 வருட தொடர்ச்சியை இலங்கையில் மட்டுமே பேணி வருகின்றது என்பதால், சிங்கள பௌத்தர்களுக்கு அது குறித்த கர்வமும் உண்டு. மிகக் கடும்போக்கான மதவாத, இனவாத அரசியலும் அதிலிருந்தே பிறக்கிறது. அந்நிய மேலாதிக்க சக்திகளிடம் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு, சிங்கள- பௌத்தர்களை எத்தகைய தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கவும் தூண்டி விடுகின்றது.

இன்று சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள காலத்தில், மகாவம்ச கால கதைகளை புதுப்பித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சோழர்கள் காலத்தை விட, போர்த்துக்கேயர் காலத்தில் தான் பௌத்த மதம் பேரழிவைக் கண்டது. கடும்போக்கு கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளான போர்த்துக்கேயர்கள், இலங்கையில் வேறெந்த மதத்தையும் அனுமதிக்கவில்லை. பௌத்த, இந்து, இஸ்லாமிய  மத நம்பிக்கையாளர்களை படுகொலை செய்து, அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களை அழித்தார்கள். உடைக்கப்பட்ட இந்து, பௌத்த ஆலயங்களில் இருந்த கற்களை பெயர்த்தெடுத்து, கத்தோலிக்க தேவாலயங்களை கட்டினார்கள்.

போர்த்துகேயர்களின் மத அடக்குமுறையானது, இலங்கையை 100% கிறிஸ்தவ நாடாக மாற்றும் நோக்கத்தை கொண்டிருந்தது. பிற மதங்களுக்கான சுதந்திரம் மறுக்கப் பட்டதால், கிறிஸ்தவர்களாக மாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. யாழ் குடாநாட்டில் தொண்ணூறு சதவீதமான தமிழர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள்.

போர்த்துக்கேயர்கள், இலங்கையில் இருந்த பௌத்த மத சங்கங்களை, விகாரைகளை எல்லாம் அழித்தார்கள். அங்கிருந்த பிக்குகளை கொன்றார்கள். அதனால், ஒரு கால கட்டத்தில், இலங்கையில் பௌத்த மதக் கல்வி போதிப்பதற்கு ஆள் இருக்கவில்லை. ஒரு சாதாரணமான வழிபாட்டுக்கு தலைமை தாங்கவும், மக்களின் மதச் சடங்குகளை செய்யவும், பிக்குகள் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றில் கொலை செய்யப்பட்டு விட்டனர், அல்லது வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனர்.

இதற்கிடையே, ஐரோப்பாவில், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய தாழ்நில மாநிலங்கள், ஸ்பெயின் சாம்ராஜ்யத்தில் இருந்து விடுதலை அடைவதற்காக போராடிக் கொண்டிருந்தன. 80 ஆண்டு கால போரின் இறுதியில், நெதர்லாந்து என்ற தனி ராஜ்ஜியம் உருவானது. ஸ்பானிஷ் காரர்கள் கத்தோலிக்கர்கள் என்பதும், டச்சுக் காரர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் என்பதும் போருக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது. கடல் கடந்து வாணிபத்தில் ஈடுபட்ட புரட்டஸ்தாந்து டச்சு வணிகர்கள், ஸ்பானிஷ்காரர்களின் எதிரிகளான துருக்கி, மொரோக்கோ போன்ற இஸ்லாமிய நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். பிற்காலத்தில், நவீன முதலாளித்துவ சமுதாயம் உருவாவதற்கு, இது போன்ற அரசியல் மாற்றங்களும் காரணமாக அமைந்தன.

அன்றிருந்த போர்த்துக்கேயர்கள், ஸ்பானிஷ்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பல உலக நாடுகளை காலனிப் படுத்தி இருந்தனர். அதனால், இலங்கைத் தீவை போர்த்துக்கேயர்கள் ஆண்டாலும், ஸ்பெயினின் கூட்டாளிகள் என்பதால், டச்சுக் காரர்கள் படையெடுத்தனர். போர்த்துக்கேயர்கள் வெளியேறிய பின்னர், VOC எனப்படும் கிழக்கிந்தியக் கம்பனி, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. VOC இனை, உலகின் முதலாவது தேசங் கடந்த வர்த்தகக் கழகம் என்று கூறலாம். அதனால், VOC ஆட்சிக் காலத்தில் இலங்கையில் நடந்த மாற்றங்கள் சில, இன்றைய முதலாளித்துவ காலகட்டத்துடன் பெரிதும் ஒத்துப் போகின்றது. இந்தப் பின்னணியிலேயே, மதம் குறித்த டச்சு ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

டச்சுக் காரர்கள், இலங்கையில் மீண்டும் பௌத்த, இந்து மதங்கள் தழைப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். பௌத்த மதத்தை பொறுத்தவரையில், மீண்டும் எழுந்திருக்க முடியாதவாறு வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கையில் பௌத்த மதத்தை மீள உயிர்ப்பிக்க வேண்டுமானால், மதக் கல்வி கற்ற பிக்குகள் அவசியம். அப்படி யாரும் அங்கே இருக்கவில்லை. அந்தத் தருணத்தில், கிழக்கிந்தியக் கம்பனி, சிங்கள பௌத்தர்களுக்கு உதவ முன்வந்தது. VOC வணிகக் கப்பல் ஒன்று, பர்மாவில் (இன்று மியான்மார்) இருந்து ஆயிரக் கணக்கான பௌத்த பிக்குகளை ஏற்றிக் கொண்டு வந்து இறக்கியது. அதற்குப் பிறகே, இலங்கையில் மீண்டும் பௌத்த மதம் பல்கிப் பெருகியது. அது வரலாறு.

இன்றைய நெதர்லாந்து நாட்டில், சில நூறு பௌத்தர்கள் வாழ்கிறார்கள். அதாவது, பௌத்த மதத்திற்கு மாறிய பூர்வீக டச்சு வெள்ளையினத்தவர்கள். அவர்கள் தமக்கென வீடியோ நிகழ்ச்சிகளை தயாரித்து, அரச தொலைக்காட்சி சேவையில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்புவார்கள். இந்த வார நிகழ்ச்சியில், இலங்கையில் பௌத்த மதம் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பினார்கள். "இலங்கை, அத்துமீறப் பட்ட சொர்க்கம்" (Sri Lanka, het geschonden paradijs) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியின் தொடக்கத்தில், 83 கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் பேட்டி காண்கிறார்கள். அவர் ஒரு பறங்கிய (கலப்பினம்) பெண்மணி, ஆனால் தமிழரை திருமணம் முடித்தவர். 83 கலவரமானது ஒரு தமிழினப் படுகொலை என்று வர்ணித்து, அப்போது நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

அதற்கு அடுத்ததாக, சர்வோதய அமைப்பின் தலைவரை (A.T. Ariyaratne) பேட்டி கண்டார்கள். காந்தீயத்தில் நம்பிக்கை கொண்ட, இலங்கையில் எழுபதுகளில் இயங்கிய ஒரேயொரு அரசு சாரா நிறுவனம் (NGO) அதுவாகும். ஈழப்போரின் ஆரம்பத்தில், தமது அமைப்பின் யாழ்ப்பாண பொறுப்பாளர் கதிரமலை புலிகளால் கொலை செய்யப் பட்டதாகவும், ஆயினும் போர் நடந்த காலம் முழுவதும் அஹிம்சையை போதித்து வந்ததாகவும் கூறினார். சர்வோதயம் ஒரு தொண்டு நிறுவனமாக இருந்த போதிலும், அதில் மிதவாத பௌத்த சிந்தனைகளும் காணப் படுகின்றன. இது கிட்டத்தட்ட காந்தியின் அரசியல் சித்தாந்தம். இந்தியாவில் மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்ட இயக்கம் அனைத்து மத மக்களையும் உள்வாங்கி இருந்தாலும், மிதவாத இந்து மதக் கொள்கையும் அதற்குள் இழையோடியது.

ஆவணப் படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையில் அவர்கள் வலியுறுத்துவது இதைத் தான். இலங்கையில் பொது பல சேனா போன்ற மதவெறியர்கள், பௌத்த மதத்திற்கு களங்கம் கற்பிக்கிறார்கள். அதுவல்ல பௌத்த மதம். சமாதானத்தையும், கருணையையும் போதிக்கும் மிதவாத பௌத்த மதமே இலங்கைக்கு தேவையானது. அதற்காக, இலங்கையில் நாற்பது வருடங்களாக வசித்து வரும், பூர்வீக டச்சு பௌத்த துறவி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பினார்கள்.
 
ஆனந்தா ஒலாண்டே (Ananda Olande) என்ற டச்சுக்காரர், தேரவாத பௌத்த மதத் துறவியாக, இலங்கையில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். அவரின் கூற்றுக்கள் சில:

- பி.பி.சி. போன்ற வெளிநாட்டு ஊடகங்களில், "பௌத்த- சிங்களவர்களுக்கும், இந்து- தமிழர்களுக்கும் இடையில்" யுத்தம் நடப்பதாக, அடிக்கடி கூறுகின்றார்கள். அது தவறு. இலங்கையில் நடப்பது மதங்களுக்கு இடையிலான யுத்தம் அல்ல. வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் விடுதலைப் போராட்டமாக அது உள்ளது. அங்கே மதம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கவில்லை.

- ஆயுதமேந்திப் போராடிய புலிகள், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தமது தாயகமான தமிழீழம் என்று கூறி உரிமை கோரினார்கள். அவர்களது தமிழீழ வரைபடத்தில், இலங்கையின் 75% கடல் பகுதி அடங்கியிருந்தது. அந்தளவுக்கு விட்டுக் கொடுப்பதற்கு யாரும் சம்மதிக்க மாட்டார்கள்.

- இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து. பௌத்தர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அபாயம். இது போன்ற அச்சங்களை காரணமாக கட்டி, பல பௌத்த துறவிகள் அரசியலில் ஈடுபடுகின்றனர்.

- இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு, புதிய பிக்குகளாக சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றமை ஒரு காரணம். முன்பெல்லாம், ஒரு குடும்பத்தில் ஆறேழு பிள்ளைகள் இருந்தால், ஒரு பிள்ளையை பிக்குவாக்குவதற்கு பெற்றோர் முன்வருவார்கள். இந்தக் காலங்களில், மிகவும் வறுமைப் பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் தான் பிக்குவாக முன்வருகிறார்கள்.

- பொது பல சேனா போன்ற மதவெறியர்கள் பேசுவது பௌத்த மதம் அல்ல. சமாதானத்தை போதிக்கும் பௌத்த மதத்தில், வன்முறைக்கும், துவேஷத்திற்கும் இடமில்லை.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கையில் புத்தம் பற்றிய நிகழ்ச்சியின் வீடியோவை பார்ப்பதற்கான இணைப்பு:

Sri Lanka, het geschonden paradijs

http://www.bosrtv.nl/uitzending.aspx?lIntEntityId=1715இது தொடர்பான முந்திய பதிவுகள்:

No comments: