Tuesday, May 06, 2014

அகதிகளை வெளியேற்ற போலி விசா தயாரித்த மேற்கத்திய அரசாங்கம்


ஒரு அகதி, போலி பாஸ்போர்ட், போலி விசாவில் பயணம் செய்வது குற்றமாகக் கருதப் படுகின்றது. ஆனால், ஒரு மேற்கத்திய நாட்டு அரசாங்கம், அதே போலி ஆவணங்களை தயாரித்து, ஒரு அகதியை நாடுகடத்துவது குற்றமாகாதா?

மேற்கத்திய நாடுகளில் ஊழல் கிடையாது என்று பெரும்பாலும் நம்பப்படுகின்றது. ஆனால், அவர்கள் மூன்றாமுலக நாடுகளில் நிலவும் ஊழல்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அண்மையில், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் மறுக்கப் பட்டு நாடுகடத்தப் படும் அகதிகள் விஷயத்தில் ஊழல் நடப்பதாக, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டினார்கள். (http://tvblik.nl/zembla/omkopen-en-uitzettenநெதர்லாந்து தொலைக்காட்சியில், ZEMBLA எனும் நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளர்கள், திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளின் நாட்டிற்கு சென்று, தகவல்களை சேகரித்துள்ளனர்.

நீண்ட காலமாகவே, தஞ்சம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்புவது, நெதர்லாந்து அரசுக்கு தலையிடியை கொடுக்கும் வேலையாக உள்ளது. ஏனெனில், அகதிகள் தாமாகவே விரும்பி, தாயகம் திரும்பிச் செல்ல சம்மதித்தாலும், அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதில்லை. பாஸ்போர்ட், அடையாள அட்டை எதுவும் இல்லாதபடியால், சம்பந்தப் பட்ட தூதுவராலயத்தில் நாடு திரும்பும் விசா எடுக்க முடியாமல் உள்ளது. உடனடியாக ஒரு புதிய கடவுச்சீட்டை கொடுப்பதற்கு முன்னர், "தம்மிடம் ஒப்படைக்கப் பட்ட அகதி, தமது நாட்டுப் பிரஜை என்பதற்கு என்ன ஆதாரம் ?" என்று கேட்கின்றன. அதற்குப் பின்னரே, தாயகம் திரும்புவதற்கான விசா கொடுத்து ஏற்றுக் கொள்கின்றன. இது வழமையான நடைமுறை. உண்மை நிலவரம் என்னவெனில், திருப்பி அனுப்பும் விசா கொடுப்பதற்கு, பல சமயங்களில், தூதுவரலாயங்கள் ஒத்துழைப்பதில்லை.

ஆப்பிரிக்காவில் உள்ள கினே (Guinee) நாடு, உலகில் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று. அதனால், ஊழலும் மலிந்த நாடு. நெதர்லாந்து அரசு, அகதிகளை திருப்பி அனுப்புவதற்காக, கினே அரசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது. அவர்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, அகதிகளை திருப்பி அனுப்பத் தேவையான விசாக்களை பெற்றுக் கொள்கின்றது. ஆனால், அதிலும் பல முறைகேடுகள் நடக்கின்றன. கணனியில் வடிவமைத்து, அல்லது போட்டோகொப்பி எடுத்து, உண்மை போன்று தோன்றும் போலிப் பத்திரங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. 

கினே தூதுவராலயம், ஒரு அகதியின் விபரங்களை ஆராயாமலே கேட்டவுடன் விசா வழங்குகின்றது. அதாவது, முழுக்க முழுக்க அது ஒரு போலி விசா. நெதர்லாந்து அரசு, கினே தூதுவராலயத்தில் யாரை கொண்டு போய் நிறுத்துகின்றதோ, அவருக்கு உடனே கினே செல்லும் விசா வழங்கப் படுகின்றது. அந்த அகதி, உண்மையில் வேறொரு ஆப்பிரிக்க நாட்டவராக இருந்தாலும், கினே யுக்கு நாடுகடத்தப் படும் அபாயமும் உள்ளது. நெதர்லாந்து, பெல்ஜியத்தில் உள்ள, கினே தூதுவராலயம், எதையும் ஆராயாமல் விசா வழங்குவதாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக, ZEMBLA ஊடகவியலாளர்கள் கினே சென்றனர்.

ZEMBLA,  தீர விசாரித்து ஆராயும் ஊடகவியலை கடைப்பிடிக்கின்றது. அதன் ஊடகவியலாளர்கள், ஒரு விடயத்தை தேடி, துப்புத் துலக்கி, உண்மையை ஆராய்ந்து, அதனை உலகிற்கு அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே, ZEMBLA தான், அயான் ஹிர்சி அலி என்ற சோமாலிய இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதியின் வண்டவாளங்களை வெளிக் கொணர்ந்தது.

கினே தலைநகர் கொனாகிரிக்கு சென்ற ZEMBLA குழுவினர், விசா வழங்கிய "உள்துறை அமைச்சு" அதிகாரிகளை, அமைச்சரை சந்தித்துப் பேச விரும்பினார்கள். என்ன ஆச்சரியம், கினேயில் தற்போது "உள்துறை அமைச்சு" என்ற பெயரில் எந்தவொரு அமைச்சும் கிடையாது! அது வேறு பெயரில் இயங்குகின்றது. அனேகமாக, இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அமைச்சு ஒன்றின் பெயரில், யாரோ போலி ஆவணங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது சட்டவிரோதமானது. ஆனால், நெதர்லாந்து அரசுக்கு அதைப் பற்றிய கவலை எதுவும் கிடையாது. விசா ஆவணம் உண்மையா, போலியா என்று ஆராய வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது. தனது நாட்டை விட்டு ஒரு அகதியை வெளியேற்றி விட்டால் போதுமானது என்று, நெதர்லாந்து அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விடும்.

தாயகம் திரும்பும்/ திருப்பி அனுப்பப் படும் அகதிகளுக்கு, இல்லாத ஒரு அமைச்சின் பெயரால் போலி கடவுச்சீட்டு, போலி விசா வழங்கப் படுகின்றது.   நெதர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப் படும் அகதிகளின் விசா ஆவணத்தில் காணப்பட்ட, அமைச்சு சீல் போலியானது. விசா பத்திரத்தில் கையொப்பமிட்ட அதிகாரியை பற்றி விசாரித்த பொழுது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த அதிகாரி, நெதர்லாந்து அரசுடனான தொடர்பாடலுக்காக நியமிக்கப் பட்டதாக, அமைச்சர் கூறினார்.

விசா பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அதிகாரிக்கு, அதற்கான அதிகாரம் கிடையாது. "ஆவணத்தில் உள்ள அமைச்சின் பெயர், சீல், அனைத்தும் போலியானது என்று உறுதிப் படுத்துவதாகவும், சம்பந்தப் பட்ட அதிகாரியை நெதர்லாந்து அரசு பயன்படுத்திக் கொள்வதாகவும்..." அமைச்சர் தெரிவித்தார். ஆயினும், இந்த மோசடியில் அனைவருக்கும் பங்கிருக்கலாம், அந்த அமைச்சருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். இந்த வீடியோ ஒளிபரப்பப் பட்ட பின்னர், "அதிலே கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு மாறானவை..." என்று நெதர்லாந்து அரசு ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. (Uitzending Zembla over terugkerende Guineeërs

நெதர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட கோனே எனும் முன்னாள் அகதியை, ஊடகவியலாளர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். அந்த அகதியின் மனைவியும், நான்கு வயது மகனும் இன்னமும் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். நான்கு வயது குழந்தை, தந்தையை காணாமல் எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருப்பதாக, தாய் கூறி வருத்தப் பட்டார். அதை விட, திருப்பி அனுப்பப் பட்ட அகதி, கண் பார்வைக் குறைபாடு கொண்டவர். அவரது சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கினேயில் கிடைப்பதில்லை. அவரிடம் கையில் பணமும் இல்லை. தற்போது வசிக்கும், கினே தலைநகர் கொனாகிரியில் தெரிந்தவர் யாரும் இல்லை.

தனக்குத் தந்த விசா போலியானது என்பதை, திருப்பி அனுப்பப் பட்ட கோனே எனும் அகதியும் உறுதிப் படுத்துகின்றார். நெதர்லாந்தில் இருந்து, கினே விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுதே, பிரச்சினைகள் ஆரம்பமாகி விட்டன. அவரது கையில் இருந்த விசா, பெல்ஜியத்தில் உள்ள கினே தூதுவராலயத்தால் வழங்கப் பட்டிருந்தது. (ZEMBLA தொடர்பு கொண்ட பொழுது, தாங்கள் அப்படி ஒரு விசா கொடுக்கவில்லை என்று தூதரக அதிகாரிகள் மறுத்திருந்தனர்.)

நெதர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட கோனே என்ற அகதியுடன், ஒரு டச்சு இராணுவ- பொலிஸ் வீரர் பயணம் முழுவதும் கூடவே சென்றுள்ளார். கொனாகிரி விமான நிலையத்தில் இறக்கி விட்டு திரும்பியுள்ளார். இவ்வளவும் இருந்த போதிலும், விமான நிலையத்தில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அந்த அகதியை நாட்டிற்குள் விட மறுத்தனர். போலி விசாவில் வந்திறங்கியதாக காரணத்தைக் கூறி, அவரை அங்கேயே தடுத்து வைக்க முயன்றுள்ளனர். இறுதியில், நூறு யூரோ லஞ்சமாக வாங்கிக் கொண்டு தான் வெளியே விட்டுள்ளனர். (கினே நாட்டில், அது ஒருவரின் ஒரு மாத சம்பளம்.)

சாதாரண அகதிகள், போலி விசாவில் ஒரு நாட்டிற்குள் நுழைய முயன்றால், அதனை குற்றமாகக் கருதி தண்டனை கொடுக்கிறார்கள். போலி விசா தயாரித்துக் கொடுக்கும் கிரிமினல்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை வழங்குகிறார்கள். ஆனால், அதே போலி விசாவை ஒரு அரசாங்கம் தயாரித்தால், அது குற்றமாகாதா? அதற்குப் பொறுப்பானவர்கள் யாரும் தண்டிக்கப் படுவதில்லை.

ZEMBLA நிகழ்ச்சியின் வீடியோவை கீழே உள்ள இணைப்புகளில் முழுமையாகப் பார்வையிடலாம்:Omkopen en uitzetten

http://tvblik.nl/zembla/omkopen-en-uitzetten2 comments:

Massy spl France. said...

ஆஹா! என்ன ஒரு அற்புதமான தேடல்! என்னே உமது கண்டுபிடிப்பு!
நம்ம கலையரசன் (பனை தென்னை) பன்னாடை மாதிரி. நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் தக்தக்கவைத்துகொள்ளும் வடிகட்டி.
அகில உலகிலிருந்து வரும் கோடான கோடி அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் வாழவைத்து அனைத்து சுதந்திரம் பாதுகாப்பு தரும் மேற்கத்திய நாடுகளில் உள்ள சொகுசு வாழ்க்கை நடத்தும் அகதிகள் இவர் கம்யூனிச திரை விழுந்த கண்களுக்கு தெரியவில்லை போலும்.
ஐயோ பாவம்! இவரை பார்த்தால் பரிதாமாக இருக்கிறது. ஏதாவது ஒரு நல்ல மனநோய் மருத்தவரிடம் போய் சிதைந்து போன உங்க மனதை செப்பனிட்டு கொள்ளவும்.

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்