Friday, May 09, 2014

அல்லேலூயாவும் அரசியல் அடிப்படைவாதிகளும்


எனக்குத் தெரிந்த, நெதர்லாந்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில், பல தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தன. பெரும்பாலானோர் இந்து மத நம்பிக்கையாளர்கள். அதில் ஒரு குடும்பம், அல்லேலூயா எனப்படும் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, மிகுந்த மதப் பற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் சிறிய பிள்ளைகளும் இருந்தன.

"அல்லேலூயா தாய்" அந்தப் பிள்ளைகளை, பிற தமிழ்க் குடும்பங்களோடு பழக விடுவதில்லை. அதற்குக் கூறிய காரணம்: "அவர்கள் சாத்தானை, பிசாசை வழிபடுபவர்கள். அவர்களுடன் சேர்ந்தால் பிள்ளைகள் கெட்டு விடும்." என்பது தான். அதே நேரம், பிற தமிழ்க் குடும்பங்கள், அல்லேலூயா குடும்பத்தினரின் மத நம்பிக்கையை கேலி செய்தன. "பிள்ளைகள் கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டுமென கட்டாயப் படுத்துகிறார்கள். சினிமாப் பாடல்களை கேட்க விடுவதில்லை...." இப்படிப் பல.

இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு இவர்கள் செய்வது மூட நம்பிக்கையாகப் படுகின்றது. இவர்களுக்கு அவர்கள் செய்வது மூட நம்பிக்கையாகத் தெரிகின்றது. இரண்டு தரப்பினரும், "பிள்ளைகளை கெடுப்பதாக, அவர்கள் மேல் பெற்றோரின் விருப்பங்களை திணிப்பதாக, துஸ்பிரயோகம் செய்வதாக" ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தார்கள். யார் சொல்வது சரி? அதைத் தீர்மானிப்பது யார்? இது குறித்து, நெதர்லாந்து சட்டங்கள் என்ன சொல்கின்றன?

நெதர்லாந்து, தாராளவாத (லிபரல்) கொள்கையின் அடிப்படையில் இயங்கும் சமுதாயத்தைக் கொண்ட நாடு. அது தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பெற்றோரும் தாம் விரும்பியவாறு தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு சுதந்திரம் உள்ளவர்கள். அவர்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், அல்லது எதையுமே பின்பற்றாத நாஸ்திகர்களாக இருந்தாலும், அந்த நம்பிக்கையை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் சுதந்திரம் உண்டு. ஒரு லிபரல் சமுதாயம், மதச் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. அரசியல் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கின்றது.

ஐம்பது வருடங்களுக்கு முந்திய நெதர்லாந்து மக்கள், மதவாதிகளாக, தேசியவாதிகளாக, சோஷலிசவாதிகளாக, பொதுவுடைமைவாதிகளாக பல சமூகக் கூறுகளாக பிளவு பட்டிருந்தனர். (இதனை டச்சு மொழியில் "Verzuiling" என்று சொல்வார்கள். அதாவது, தனித் தனி தூண்களாக பிரிந்து நிற்றல். ஒரு சமூகத்திற்கும், அதற்கு எதிரான சமூகத்திற்கும் இடையில் தொடர்பு இருக்காது.) பிற்காலத்தில் அந்தப் பிளவுகள் வெளித் தெரியா வண்ணம் மறைந்து விட்டது. ஆனால், தனியாக குடும்ப மட்டத்தில் இன்னமும் அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் தொடர்ந்தும் உள்ளன. அது மறையவே மறையாது. நெதர்லாந்து சட்டம் அதனை ஏற்றுக் கொள்கின்றது.

ஒருவரின் தனிப்பட்ட அரசியல்/ மத உரிமையை அங்கீகரிக்கும் சட்டம், பூர்வீக டச்சு மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டுக் குடியேறிகளின் அரசியல், மத உரிமையையும் அங்கீகரிக்கின்றது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு சராசரி தமிழ்க் குடும்பம், தாம் காவிக் கொண்டு வந்த தமிழீழ தேசியவாத அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமையை வழங்குகின்றது. அதே மாதிரி, மொரோக்கோ குடியேறிகள், அரபு மொழியையும், இஸ்லாமிய பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க உதவுகின்றது. இந்த பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்று கூறுகின்றது.

இன்றைக்கும் சில தமிழர்கள் மத்தியில், அடிப்படை ஜனநாயகம் குறித்த புரிதல் இல்லாமை, ஒரு மிகப் பெரிய குறைபாடு. ஒரு லிபரல் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டே, மேற்கத்திய கொள்கைகளை ஆதரித்துக் கொண்டே, மற்றவர்களின் ஜனநாயக உரிமையை காலில் போட்டு மிதிக்கும் கேலிக் கூத்தும் அரங்கேறுகின்றது.

மத அடிப்படைவாதம் போன்று, இதுவும் ஒரு வகை (அரசியல்) அடிப்படைவாதம் தான். தங்களது அரசியல் கொள்கை மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். அதற்கு மாறாக குழந்தைகளை வளர்த்தால், "பெற்றோரின் விருப்பத்தை திணிக்கிறார்கள்...சிறுவர் துஸ்பிரயோகம்..." என்று அலறித் துடிக்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தமக்குத் தெரிந்த அரசியல்/மதக் கருத்துக்களின் வழியில் தான் பிள்ளைகளை வளர்ப்பார்கள். ஒரு பாசிச நாட்டில் மட்டுமே அந்த உரிமை மறுக்கப் படுகின்றது. உங்களால் மற்றவர்களின் ஜனநாயக உரிமையை மதிக்க முடியாதென்றால், சவூதி அரேபியா போன்ற சர்வாதிகார நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று விடுங்கள்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

1 comment:

வாசகன் said...

ஜனநாயக உரிமையை மதிக்க முடியாதென்றால், சவூதி அரேபியா போன்ற சர்வாதிகார நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று விடுங்கள்.//////////\


எதுக்கு சவூதி... சீனாவுக்கு போக சொல்லுங்க. அங்க மட்டும் என்ன வாழுதாம்..