Friday, May 02, 2014

உலகம் முழுவதும் ஓயாத மே தின உரிமைப் போராட்டம்


1 மே 2014, உலகம் முழுவதும் நடந்த மே தின ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு:

********

துருக்கி, இஸ்தான்புல் நகரில், இன்று நடந்த மே தின ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. இடதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸ்காரர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டுள்ளது. வழமையாக துருக்கி இடதுசாரிகள் கூடும் தாக்சிம் சதுக்கத்தில், இன்று மே தின கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. பொலிஸ் தடையையும் மீறி, இன்று அங்கே மே தினக் கூட்டங்கள் நடைபெற்றன. 

 பொலிஸ் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றது. அதனால் அங்கே கலவரம் வெடித்தது. தாக்சிம் சதுக்கத்தை சுற்றிலும் நாற்பதாயிரம் பொலிஸ் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். 1977 ம் ஆண்டு, இதே தாக்சிம் சதுக்கத்தில் நடந்த, தடை செய்யப்பட்ட மே தினக் கூட்டத்தில், பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் நாற்பது பேர் கொல்லப் பட்டனர். துருக்கியில் பல தசாப்த காலமாக மே தின ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன.

துருக்கி:


இஸ்தான்புல் மேதின கலவரம். பொலிஸ் படைகளுக்கும், மக்களுக்கும் இடையிலான மோதல். 

மே தின ஊர்வலத்தை குழப்பிய, பாசிசப் பொலிஸ் படைகளை எதிர்த்துப் போராடும், துருக்கி கம்யூனிஸ்ட் இளைஞர்கள்.

இது ஹோலி பண்டிகை அல்ல. இஸ்தான்புல் நகர காவல் துறையினர், இவ்வாறு பல வர்ணங்களில் தண்ணீரை விசிறியடித்து, மே தினம் கொண்டாடினார்கள்.
**********

ஜெர்மனி:

ஹம்பேர்க் நகரில், மே தின ஊர்வலத்தை மேற்கொண்டு நகர விடாமல், பொலிஸ் படையினர் தடுத்து நிறுத்தினார்கள். அதனால், சில மணிநேரம் அங்கே பதற்றம் நிலவியது. ஹம்பேர்க் நகரம் முழுவதும் பொலிஸ் கவச வாகனங்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன.*******
உக்ரைன்:

உக்ரைனில், டொனியேட்ஸ்க் நகரில் நடந்த மாபெரும் மே தின ஊர்வலம். எண்ணிலடங்காத மக்கள் திரள் ஊர்வலத்தில் பங்குபற்றியதை படத்தில் காணலாம்.

*******
நெதர்லாந்து:
நெதர்லாந்தின் அரசியல் தலைநகரமான டென் ஹாக் (The Hague) நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு மே தின ஊர்வலம்.
********
பெல்ஜியம்:

அன்த்வேர்ப் நகரில் பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியான "தொழிலாளர் கட்சியின்" (pvda) மே தின ஊர்வலம்.


அமெரிக்கா:

டெட்ரொய்ட் நகரத்தில், நூற்றுக் கணக்கான இளைஞர்கள், Chase வங்கி வளாகத்தினுள் ஆர்ப்பாட்டம் செய்தனர். "பொருளாதார நெருக்கடிக்கான விலையை வங்கிகள் கொடுக்கட்டும்" என்று கோஷம் எழுப்பினார்கள்.


வாஷிங்டன் நகரில் நடந்த மே தின ஊர்வலம்.


******* 

உங்களுக்கோர் உண்மை தெரியுமா? 
"ஒரு முதலாளிக்கு தான் தொழிலாளர்கள் தேவை. 
 தொழிலாளர்களுக்கு ஒரு முதலாளி தேவை இல்லை."*******இலங்கையில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும், இளைய தலைமுறையை சேர்ந்த இளைஞர் ஒருவரின் கேள்வி:

//இன்னமும் 90% மான கம்பனிகளில் 8 மணி நேரத்துக்கு அதிகமாகத்தான் வேலை தரப்படுகிறது. தொழிலாளர்களும் 8மணி நேரத்துக்கு அதிகமாகத் தான் வேலை செய்கின்றனர். செங்கொடிகள் தூங்கி விட்டனவா என்ன?//

அலுவலகத்தில் மாடாய் உழைத்துக் களைத்த போதிலும், ஓய்வு நேரத்தில் சமீபத்திய திரைப்படங்கள் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிராமல், தான் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினையை பேச முன்வந்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். ஒரு முதலாளியின் சுரண்டலால் பாதிக்கப் பட்ட ஒருவரின் தன்னிலை விளக்கமாகவே, இந்தக் கேள்வியை கருதுகிறேன்.

இன்றைக்கும், மேற்கத்திய நாடுகளில் ஒருவர், எட்டு மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்வது ஊக்குவிக்கப் படுவதில்லை. அவராகவே விரும்பி, "ஓவர் டைம்" செய்தாலும், 50% வருமான வரி கட்ட வேண்டும். எந்த நிறுவனமும், ஒரு தொழிலாளியை எட்டு மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்று கட்டாயப் படுத்துவதோ, அவ்வாறான ஒப்பந்தம் போடுவதோ சட்டப் படி குற்றமாகும். இதையெல்லாம், மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் தானாக விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஒரு காலத்தில் பலமாக இருந்த தொழிற்சங்கங்கள், சோஷலிச/கம்யூனிச கட்சிகள், இரத்தம் சிந்திப் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமை தான், எட்டு மணிநேர வேலை. அங்கிருந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தெருவுக்கு வந்து போராடினார்கள்.

எட்டு மணி நேர கோரிக்கைக்காக, தமது விலை மதிக்க முடியாத உயிர்களை பலி கொடுத்தார்கள். மேற்குலக தொழிலாளர்களின் இடையறாத போராட்டம் காரணமாக, அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட முதலாளிகளும், அரசுகளும், வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைப்பதற்கு சம்மதித்தன.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின் கீழ், பன்னாட்டுக் கம்பனிகள், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முதலிட்டன. ஏற்கனவே, அந்த நாடுகளில் இருந்த தரகு முதலாளியக் கம்பனிகளும் ஒத்துழைத்தன. இந்த தனியார் நிறுவனங்களில், 8மணி நேரத்துக்கு அதிகமாகத் தான் வேலை தரப் படுகின்றது.

அதற்கு காரணம், இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில், 8மணி நேரத்துக்கு அதிகமாக ஒப்பந்தம் போடுவதை தடுக்கும் சட்டம் கிடையாது. அதே நேரம், வேலை செய்பவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு கிடையாது. தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களின் உரிமைகளுக்காக போராட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. இவையெல்லாம் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்கள்.

ஒரு மேற்கத்திய நாட்டில், முதலாளிகளால் நினைத்தும் பார்க்க முடியாத "சலுகைகளை", ஒரு மூன்றாமுலக நாட்டில் பயன்படுத்திக் கொள்கின்றனர். "முதலாளிக்கு தொழிலாளர்கள் தேவை. ஆனால், தொழிலாளர்களுக்கு ஒரு முதலாளி தேவை இல்லை." இந்த உண்மையை அறிந்திராத, அல்லது தனது சக்தியை உணர்ந்திராத தொழிலாளர்கள் சமூகம் இருக்கும் ஒரு நாட்டில், முதலாளிகள் வேண்டிய மட்டும் சுரண்ட முடியும்.

மேற்கத்திய நாடுகளில், தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடினார்கள். அவற்றை மூன்று தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர். இலங்கையில், இந்தியாவில் வாழும் தொழிலாளர்கள், தங்களது உரிமைகளுக்காக அவர்கள் தான் போராட வேண்டும். எமக்காக இன்னொருவன் வந்து போராட மாட்டான்.

நீங்களும் ஒரு உழைப்பாளி என்றால், உங்கள் முதலாளி எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்கி, உங்களை சுரண்டுவதை உணர்ந்திருந்தால், நீங்கள் தூக்க வேண்டிய கொடி தான் செங்கொடி. அது உங்களுடைய தேசியக் கொடி. செங்கொடிகள் உறங்கவில்லை. நீங்கள் தான் அவற்றை தூக்கிப் பிடிக்க வேண்டும்.

மேற்கத்திய நாட்டு உழைப்பாளர்கள் போராடிப் பெற்றுக் கொண்ட உரிமைகளைப் பற்றி, உங்களது சக தொழிலாளர்களுடன் பேசுங்கள். அவர்களது போராட்ட அனுபவங்கள் பற்றி விவாதியுங்கள். மே தினத்தை உங்களது போராட்ட நாளாக்குங்கள். தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை உண்டாக்குங்கள். உங்களது உரிமைகளுக்கான கோரிக்கைகளை முன் வையுங்கள். தொழிலாளர் சக்தி எனும் உறங்கிக் கிடந்த பூதம் விழித்து எழுந்தால், எந்த முதலாளியாலும் எதிர்த்து நிற்க முடியாது.

****** 

மே தினம் குறித்த முன்னைய பதிவுகள்: 
1. மே தினம்: செங்கொடியை தூற்றும் "அறிவுஜீவிகளின்" அறியாமை
2. உலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுறையும்
3. மே தினம் இராணியின் தினமாக மாறிய கதை
4. யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!
5. மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்

No comments: