(ஸ்டாலினின் மறு பக்கம்:
உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்)
(ஆறாம் பாகம்)
“சோவியத் யூனியனில், ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில், உண்மையான கம்யூனிஸ்டுகள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். தனக்கு போட்டியாக இருந்தவர்களை கொன்று குவித்து விட்டு, ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றினார். அதனால் தான் ஸ்டாலினை ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி என்று அழைக்கிறோம்.” இவ்வாறு பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மேற்கத்திய நாடுகள், முதலாளியத்தை ஆதரிப்போர் மட்டுமல்ல, ட்ராஸ்கியவாதிகள், ஜனநாயகவாதிகள் கூட, ஸ்டாலின் மேல் மேற்படி விமர்சனத்தை வைக்கின்றனர்.
“ஸ்டாலினின் பயங்கரவாத ஆட்சி" என்று வர்ணிக்கப் படும், 1937 - 1938 காலப் பகுதியில் நடந்த களையெடுப்புகளின் போது, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில், அரைவாசிக்கும் அதிகமானோர் காணாமல்போனார்கள். செம்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த, நூற்றுக் கணக்கான இராணுவ ஜெனரல்கள் சிறையில் அடைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டனர். இவ்வாறு, ஸ்டாலின் தனது அரசாங்கம், கட்சி, மற்றும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களை அழிக்கும் அளவிற்கு, அங்கே அப்படி என்ன நடந்தது?
அன்று நடந்த களையெடுப்புகள், கொலைகள் எல்லாவற்றுக்கும், "ஸ்டாலினின் அதிகார வெறி" மட்டும் தான் காரணம் என்று, ஒரே பதிலை எப்போதும் சொல்லித் தப்பி விட முடியாது. சில சரித்திர ஆசிரியர்கள் இன்னொரு காரணத்தை கூறுகின்றனர். 1934 ம் ஆண்டு, லெனின்கிராட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான கிரோவ், இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அரசியல் படுகொலையின் விளைவாக, "இன்னமும் எதிரிகள், சதிகாரர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்" என்ற காரணத்தை காட்டி, நாடு முழுவதும் பலர் கைது செய்யப் பட்டனர் என்று கூறுகின்றனர்.
"கிரோவ் மிகப் பிரபலமான தலைவராக இருந்த படியால், ஸ்டாலினே ஆள் வைத்து கொலை செய்து விட்டு, அந்தப் பழியை மக்கள் விரோதிகள் தலையில் போட்டு விட்டு, தனது சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக, பல இலட்சம் பேரை கைது செய்து, கொலை செய்ததாக," மேலைத்தேய சரித்திர ஆசிரியர்கள் ஒரு காரணத்தை கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.
அந்த சரித்திர ஆசிரியர்களின் ஊகம், இன்று பல மேற்கத்திய பாடநூல்களிலும் எழுதப் பட்டுள்ளன. கிரோவ், ஸ்டாலின் அனுப்பிய கொலைகாரர்களால் கொல்லப் பட்டதாக , கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் நம்பினார்கள். அது வெறும் வதந்தி மட்டுமே. அதை நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன.
கிரோவ் கொலை செய்யப் பட்டது, 1934 ம் ஆண்டு. மாபெரும் களையெடுப்புகள் நடந்த காலம், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்கள். இடையிலே இரண்டு வருடங்கள் உள்ளனவே? அந்த இரண்டு வருடங்களிலும் எதுவுமே நடக்காத காரணம் என்ன? மேலும், கிரோவ் கொலையை தொடர்ந்து, லெனின்கிராட் பகுதியில், சந்தேகத்தின் பேரில் பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். நாட்டின் பிற பாகங்களில், எந்தக் கைதும் இடம்பெறவில்லை.
முதலாவதாக, இடையில் இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த மர்மம் என்ன? இரண்டாவதாக, எதற்காக சர்வதேச COMINTERN அமைப்பை சேர்ந்த, ஆயிரக் கணக்கான வெளிநாட்டுக் கம்யூனிஸ்டுகள் கொல்லப் பட்டனர்? அவர்கள் எக் காலத்திலும், உள்நாட்டில் ஸ்டாலினின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக வரும் வாய்ப்பில்லை.
மூன்றாவதாக, எதற்காக அரசு நிறுவனங்களில் பெரிய பதவி வகித்தவர்கள், நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் மட்டும், கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்? பொதுவாகவே அரசியலில் நாட்டமில்லாத சாதாரண உழைக்கும் மக்கள் யாரும் "ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு" பலியாகவில்லை. (அடித்தட்டு மக்களிலும் சிலர் கைது செய்யப் பட்டனர். ஒன்றில் அவர்கள் ஓரளவு அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள், அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசை விமர்சித்து இருப்பார்கள்.)
அன்றைய சோவியத் நாட்டில், ஒரு நகைச்சுவை துணுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நடுநிசியில் ஒரு வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள்.
- “யார் அது?” வீட்டுக் காரர் கதவைத் திறக்காமலே வந்தவர்களை வினவுகின்றார்.
- “கதவைத் திற, நாங்கள் NKVD” பதில் வருகின்றது.
- “மன்னிக்கவும், நீங்கள் தவறான முகவரிக்கு வந்து விட்டீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மேல் மாடியில் குடியிருக்கிறார்!” என்று வீட்டுக்காரர் பதிலளிக்கிறார்.
அதாவது, அன்று நடந்த கைதுகளும், கொலைகளும், மேல் மட்டத்தில், ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட தகராறுகள், முரண்பாடுகளின் விளைவு, என்று தான் பெரும்பான்மையான சோவியத் மக்கள் நம்பினார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியானவர்களின் சமூகப் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அது தெரிய வரும். பெரும்பான்மையான கைதிகள், நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர், வசதியாக வாழும் வாய்ப்புக் கிடைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள்.
ஒரு சோஷலிச நாட்டில், "மேட்டுக்குடி வர்க்கம் இருப்பது எப்படி சாத்தியமாகிற்று?" என்று கேட்கலாம். உலகில் எந்த நாட்டில், ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தாலும், அது ஒரே நாளில் சோஷலிச நாடாக மாறி விடாது. படிப் படியாக தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு, பெரிய முதலாளிகளை விரட்டி விட்டு, அவர்களது நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கலாம். ஆனால், நிறுவனங்களை நடத்துவதற்கு முகாமையாளர்கள் தேவை. ஒரு அரச நிறுவனமாக இருந்தாலும், பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பங்களிப்பு தேவை. சிலநேரம், வெளிநாட்டு நிபுணர்களின் சேவையையும், பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவில் இருந்து கூட, சில தொழில்துறை வல்லுனர்கள், அதிக சம்பளத்திற்கு அமர்த்தப் பட்டிருந்தனர்.
அதே போன்று தான், ஒரு அரசாங்கம் நடத்துவதற்கும் அரச அறிவியல், அமைப்பியல் தெரிந்த அறிவுஜீவிகள் தேவை. அப்படியானவர்கள் எல்லோரும், மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அதை நாங்கள் தவிர்க்க முடியாது. ஏனென்றால், காலங்காலமாக மேட்டுக்குடி, அல்லது நடுத்தர வர்க்க மக்கள் தான், உயர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தனர். ஒரு சிறிய தொழிலகத்தை நிர்வகிப்பது முதல், அரசாங்கத்தை நடத்துவது வரையில், தேவையான அறிவு அவர்களிடம் தான் உள்ளது. முரண்நகையாக, “பாட்டாளிவர்க்க கட்சியான” கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும், அவர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும்.
1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சி வென்றிருந்தாலும், ஒரு கம்யூனிச மாமேதையான லெனின் ஆட்சி நடத்தி இருந்தாலும், ஒரு தசாப்த காலமாக முதலாளித்துவத்திற்கு சுதந்திரம் கொடுக்கும், புதிய பொருளாதாரக் கொள்கை அமுலில் இருந்தது. கிராமப் புறங்களில் பணக்கார விவசாயிகளும், நகர்ப்புறங்களில் பணக்கார முதலாளிகளும், லெனினின் ஆட்சிக் காலத்தில் புதிதாக உருவாகி இருந்தனர். அதை விட, நிர்வாகத் திறமை வாய்ந்த அறிவுஜீவிகள் சமுதாயமும் புதிதாக உருவாகி இருந்தது. அந்த நிலைமை ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்திருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், அல்லது சோவியத் அரசில் பதவி வகித்தவர்கள், புதிய மேட்டுக்குடியாக மாறி இருந்தனர். அவர்களது கல்வித் தகுதிகேற்றவாறு கிடைத்த வருமானம், வசதியான வாழ்க்கைத் தரத்திற்கேற்ப உயர்வாக இருந்தது. அவர்களின் குடும்பங்கள், பல அரசு சலுகைகளை அனுபவித்து வந்தன. அவர்களது நுகர்வுக்கேன்றே உருவான விசேட ஆடம்பரக் கடைகள், ஒவ்வொரு நகரத்திலும் தோன்றின. சாதாரண மக்களுக்கான கடைகளில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவினாலும், மேல்தட்டு மக்கள் பிரிவுக்கான ஆடம்பர கடைகளில் அனைத்தும் கிடைத்தன. இந்த நிலைமை, ஸ்டாலின் ஆரம்ப கால ஆட்சிக் காலத்திலும், அதாவது 1937 வரையில் தொடர்ந்தது.
1937 க்குப் பின்னர் என்ன நடந்தது? அது வரை காலமும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் குடும்பங்கள் சிதைக்கப் பட்டன. அரசாங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில், அல்லது ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்த குடும்பத் தலைவன், NKVD யினால் கைது செய்யப் பட்டிருப்பார். அதற்கு முன்னர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர், அன்று முதல் “மக்களின் விரோதி” என்று குற்றஞ் சாட்டப் படுவார். அதன் விளைவு என்ன?
ஒரு மக்கள் விரோதியின் மனைவியின் வேலை பறிக்கப் படும். சில நேரம், கணவனுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மனைவியையும் கைது செய்வார்கள். அந்த நேரத்தில், பிள்ளைகள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்படும். மத்தியதர வர்க்க குடும்பம் என்பதால், வசதியான வீட்டில் வாழ்ந்திருப்பார்கள். தற்போது நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும். அந்தக் குடும்பம் சேர்ந்து வைத்திருந்த ஆடம்பரப் பொருட்கள், தளபாடங்கள் எல்லாவற்றையும் அரசு பறிமுதல் செய்யும். இல்லாவிட்டால், அயலவர்கள் திருடிக் கொண்டு செல்லப் பார்ப்பார்கள். பெரும்பாலான தருணங்களில், நடுத்தெருவில் விடப்பட்ட பிள்ளைகள், குடும்பத்தின் உடைமைகளை விற்று சாப்பிட வேண்டி இருக்கும்.
திருமணமான தம்பதிகளில், கணவனோ அல்லது மனைவியோ தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டால், விவாகரத்து செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டார்கள். அது சிலநேரம் அவர்கள் மீதான சந்தேகத்தை வர விடாமல் தடுக்கும். கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள் வழமை போல பாடசாலைக்கு சென்று வர முடிந்தது. ஆனால், பாடசாலையில் சில ஆசிரியர்களும், சில மாணவர்களும், “மக்கள் விரோதிகளின் பிள்ளைகள்” என்று, அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். எல்லா ஆசிரியர்களும், எல்லா மாணவர்களும் அப்படி அல்ல.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள், தமது பெற்றோருடனான தொடர்பை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. பாடசாலைகளில் அதைப் பற்றி எதுவும் கதைக்காமல், பாடங்களில் கவனத்தை செலுத்தினார்கள். சில பிள்ளைகள், தாமாகவே முன் வந்து, தமது பெற்றோரை மக்கள் விரோதி என்று பிரகடனம் செய்தனர். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக, பிள்ளைகள் தாமாகவே பெற்றோரின் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். ("மக்கள் விரோதியின் பிள்ளை" என்ற பட்டம், அன்றைய சமூகத்தில் ஒரு பெரிய அவமானச் சின்னமாக கருதப் பட்டது.) பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறிய பிள்ளைகள் என்றால், அவர்களது இரு பெற்றோரும் கைது செய்யப் பட்டிருந்தால், அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப் பட்டனர்.
நமது நாடுகளில், நமது சமுதாயத்தில், "வசதியான வாழ்க்கை வாழும் குடும்பங்கள், ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து பிச்சையெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதை," ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வருவோம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்றால், அதற்காகவே அவர்கள் ஸ்டாலினை கடுமையாக வெறுப்பார்கள். இல்லாத அவதூறுகளை எல்லாம் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.
நமது சமூகத்தில், ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களை கூறும் பலர், வசதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ரஷ்யாவில், பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. தமது சொந்த எதிர்காலத்தை எண்ணி கலவரம் அடைகிறார்கள். தங்கள் நாட்டிலும், “ஸ்டாலினிச ஆட்சி” ஏற்பட்டால், தாங்கள் அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வர வேண்டி இருக்கும் என்பதை, தெரிந்து கொண்டு பதறுகிறார்கள்.
மக்கள் விரோதிகள் என்று குற்றம் சுமத்தப் பட்ட அனைவரும், ஸ்டாலினால், அல்லது NKVD யினால் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, மனம் போன போக்கில் கைது செய்யப் பட்டனரா? அப்படி நினைப்பது சிறுபிள்ளைத் தனம். அன்று நடந்த ஒவ்வொரு கைது நடவடிக்கையையும், சோவியத் மக்கள் அங்கீகரித்திருந்தார்கள். “நெருப்பில்லாமல் புகையாது” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். “சும்மா காரணம் இல்லாமல் கைது செய்வார்களா? அவர்கள் ஏதாவது சதியில் ஈடுபட்டிருப்பார்கள், அந்நிய கைக்கூலியாக இருப்பார்கள், அந்நிய நாட்டிற்காக உளவு பார்த்திருப்பார்கள்….” என்று பொது மக்கள் பல காரணங்களை தாமே கண்டுபிடித்து கூறிக் கொண்டனர். பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து, தமக்குள்ளே விவாதித்தார்கள்.
சுருக்கமாக, அன்றிருந்த சோவியத் பொது மக்களில் யாருமே, "ஸ்டாலினால் கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகளாக இருப்பார்கள்" என்று நினைக்கவில்லை. ஈழப் போராட்டம் நடந்த காலத்திலும் அது போன்ற சூழ்நிலை காணப் பட்டது. புலிகள் யாரையாவது பிடித்துச் சென்றால், அல்லது பகிரங்க மரண தண்டனை வழங்கினால், தமிழ்ப் பொது மக்கள் அதனை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். இன்றைக்கும், ஈழத் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், தமிழ் தேசிய ஊடகங்கள் கூறும் எல்லா தகவல்களையும், அப்படியே நம்புகிறார்கள். அவர்களைப் போன்று தான், ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த சோவியத் மக்களும், ஊடகங்கள் சொல்பவற்றை உண்மை என்று நம்பினார்கள்.
“புலிகள் யாரையாவது சும்மா பிடித்து சுடுவார்களா? ஏதாவது காரணம் இருக்கும். அவன் ஏதாவது பிழை விட்டிருப்பான். இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்திருப்பான் அல்லது அரச ஒட்டுக் குழுவை சேர்ந்தவனாக இருப்பான்,” என்று ஈழத் தமிழ் மக்கள் தமக்குள்ளே பேசிக் கொள்வார்கள். விடுதலைப் புலிகளோ, ஸ்டாலினோ, தமது அதிகாரத்தை இழக்காமல், தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டமைக்கு காரணம், பெரும்பான்மை மக்களின் ஆதரவு தான். மக்களின் ஆதரவை எப்படிப் பெறுவது என்பது ஒரு தனியான அரசியல் கலை. அரசியல் தத்துவ அறிஞர்கள் அது பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.
ஸ்டாலின் காலத்தில், அரச புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுப்பவர்கள் இலட்சக் கணக்கில் இருந்தார்கள். கொள்கைப் பிடிப்பு காரணமாக, மேலதிக வருமானத்திற்காக, பதவி உயர்வுக்காக, அல்லது வேறு ஏதாவது சலுகைக்காக, அயலவர்களை வேவு பார்த்தார்கள். பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள், தமது ஆசிரியர்களின், சக மாணவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை கண்காணித்தார்கள்.
தொழிலகங்களில், அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், தமது முகாமையாளர்களை, சக தொழிலாளர்களை கண்காணித்தார்கள். அவர்களது அரசியல் கருத்துக்கள், நடத்தைகள் தவறாக இருந்தால், NKVD க்கு தகவல் கொடுத்தார்கள். அவ்வாறு தான், பலர் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடக்கும் பொழுதும், உளவு பார்த்தவர்கள் சமூகமளித்து, தாம் கண்டதை, கேட்டதை, குற்றம் சாட்டப் பட்டவரின் முகத்திற்கு நேரே சொன்னார்கள்.
வெளியுலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்கள், மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அன்றைய சோவியத் யூனியனில் “ஸ்டாலினிச கொடுங்கோன்மை மக்களை வருத்தியதாக” தெரியும். ஆனால், உண்மை நிலவரம் வேறு. பெரும்பான்மையான சோவியத் பொது மக்கள், அதனை “ஸ்டாலினிச பொற்காலம்” என்று அழைப்பார்கள். ஏனென்றால், அந்தக் காலங்களில் நாடு முழுவதும் ஒரு வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
நிறுவனங்களுக்கு, தொழிலகங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகள், முகாமையாளர்கள், தங்களின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பயந்து நடுங்கினார்கள். அரசு அதிகாரிகள், தமக்கு கீழ்ப்படிவான சாதாரண ஊழியர்களுக்கு பயந்தார்கள். பணக்கார எஜமானர்கள், தம் வீட்டுப் பணிப்பெண்களுக்கு பயந்து நடந்தார்கள். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.வீடுகளில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நண்பர்களாக நடந்த வேண்டியிருந்தது.
மேல் தட்டில் இருந்தவர்கள், கீழ்த் தட்டில் இருந்தவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டால் கூட, அடுத்த நாள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருக்கும். இன்று, "சுதந்திரமான", மேற்கத்திய நாடொன்றில் வாழும் மக்கள் கூட, அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்து நடக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில், அதிகார வர்க்கம் தான் மக்களுக்கு அடிபணிந்து நடந்தது. இன்று, அனைத்து வகை அதிகாரத்தையும் எதிர்த்துப் போரிட விரும்புபவர்கள், ஸ்டாலினிச பொற்காலத்தை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.
தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், தங்களது நிர்வாகிகளை பிடித்துக் கொடுத்தார்கள். அலுவலக ஊழியர்கள், தங்களது முகாமையாளர்களை பற்றி தகவல் கொடுத்தார்கள். பாடசாலை மாணவர்கள், தங்களது ஆசிரியர்கள், அதிபர்களை காட்டிக் கொடுத்தார்கள். சோவியத் யூனியன் முழுவதும், ஏராளமான அரசு அதிகாரிகள், நிர்வாகிகள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டு, சிறையில் போட்டு வருத்தப் பட்டார்கள், மரண தண்டனை விதிக்கப் பட்டார்கள். அவர்களை பற்றிய தகவல்களை NKVD புலனாய்வுத் துறைக்கு கொடுத்தது யார்? அவர்களுக்கு கீழே வேலை செய்த சாதாரண தொழிலாளர்கள். அன்றைய ஸ்டாலின் அரசு, மக்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாட்டை ஊக்குவித்தது.
சோவியத் யூனியனில் அன்று நடந்தது, “இரண்டாவது புரட்சி” என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பாட்டாளி வர்க்க மக்கள், அரசியல்-இராணுவ-பொருளாதார அதிகாரத்தை, மேட்டுக்குடியினரிடம் இருந்து பறித்தெடுத்தனர். ஸ்டாலின் அதற்காக தெரிந்தெடுத்த நடைமுறை தான், இன்றைக்கும் மேட்டுக்குடியினரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக, லெனின் காலத்தில் உருவான, “சேக்கா” என்ற புலனாய்வுப் பிரிவு கலைக்கப் பட்டது. NKVD என்ற புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது.
NKVD தலைமை அதிகாரியாக, ஸ்டாலினால் நியமிக்கப் பட்ட ஏசுவா, ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்தவர். ஒரு பாட்டாளி வர்க்க பின்னணியை கொண்ட அதிகாரி தான், மேட்டுக்குடியினரை ஈவிரக்கமின்றி கைது செய்து, மரண தண்டனையை நிறைவேற்றுவான் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டிருக்கலாம். சோவியத் அதிபராக இருந்த ஸ்டாலின் கூட, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
(தொடரும்)
1.
2.
3.
4.
5.
____________________________________________________________________________________________
1.
2.
3.
4.
5.