Thursday, January 09, 2014

யாழ் ஆவா குரூப்பும், தென்னிலங்கை தரகு முதலாளியக் கும்பலும்


யாழ்ப்பாணத்தில் "ஆவா குரூப்" என்ற பெயரில் இயங்கிய பாதாள உலகக் கோஷ்டியை பொலிசார் பிடித்து விட்டதாக, ஒரு செய்தி வெளியாகியது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய வாட்கள், கிரேனேட், மோட்டார் சைக்கிள்களை, பொலிஸ் பார்வைக்கு வைத்திருந்த படங்களும் வெளியாகின. இதற்கு முன்னர், தென்னிலங்கையில் மட்டுமே இது போன்ற கிரிமினல் கும்பல்கள் பிடிபட்டது பற்றிய செய்திகள் வரும். இப்போது தான், முதன் முதலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் கோஷ்டி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தக் கிரிமினல் கும்பலுக்கும், நடப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொலிசாரே அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் இயந்திரமான யாழ் பொலிஸ் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளும், அது ஒரு கிரிமினல் கும்பல் தான் என்ற ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். "கிரனேட் வைத்திருந்த படியால், அந்தக் குழுவை இலங்கை இராணுவம் தான் உருவாக்கியது." என்று சிவாஜிலிங்கம் ஒரு கருத்தைக் கூறினார். ஆனால், தீவிரமான தமிழ்தேசியவாதிகள் கூட, அவரது கருத்தை பொருட்படுத்தவில்லை. இந்த தகவலை வெளியிட்ட பிரபல சிங்கள தேசிய பத்திரிகையும், பிரபல தமிழ் தேசிய பத்திரிகையும், ஒரே மாதிரித் தான் எழுதி இருந்தன. அப்படியானால், எங்கேயோ இவ்விரண்டு அரசியல் சக்திகளுக்கும் இடையில், "ஆவா குரூப்" அல்லது அது போன்ற கிரிமினல் குழுக்கள் தொடர்பாக, பொதுவான கொள்கை உடன்பாடு ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஒரு தசாப்த காலமாக, யாழ் குடாநாட்டில் கிரிமினல் குழுக்கள் இயங்கும் தகவல், அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்கனவே தெரியும். உண்மை என்னவெனில், இவ்வளவு காலமும் அது பற்றிய செய்திகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தக் கிரிமினல் குழுக்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். (பெரும்பாலானோர் பயத்தில் முறைப்பாடே செய்வதில்லை.) அப்போதெல்லாம், ஸ்ரீலங்கா பொலிஸ் அந்த முறைப்பாடுகளை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு வந்தது. பட்டப் பகலில், பலர் பார்த்திற்கும் போதே, பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் நிலையம் பக்கத்தில் இருந்தாலும், காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருந்தது.

ஊழலுக்கு பேர் போன ஸ்ரீலங்கா பொலிஸ் தான் அப்படி என்றால், ஜனநாயகத் தூண்களான தமிழ் பத்திரிகையாளர்களும் அவற்றை கண்டுகொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. தமது பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் மக்களுக்கு அவற்றை தெரிவிப்பதில்லை. யாழ் குடாநாட்டில், கிரிமினல் கும்பல்கள் அட்டகாசம் செய்வதை, அறிந்தும் அறியாதது போல இருக்க வேண்டிய காரணம் என்ன? ஏனென்றால், அந்தக் கிரிமினல் கும்பல்களுக்கு பின்னணியில், கண்ணுக்குப் புலப்படாத அதிகார பலம் இருந்த காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆவா குரூப் தனது எஜமானர்கள் உத்தரவிட்ட பணியை நிறைவேற்றுவதுடன் மட்டும் நின்று கொள்ளாமல், தன்னிச்சையாக களவு, கொள்ளைகளில் ஈடுபட்டதாலேயே, இன்று பிடிபட்டு கம்பி எண்ணுகின்றனர். கிராமப்புற பண்ணையார்கள் முதல், நகர்ப்புற முதலாளிகள் வரை, தாம் சொன்ன வேலையை செய்வதற்கு மட்டும் தான் அடியாட்களை வைத்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்திற்குள் அடங்கும் கிரிமினல் குற்றங்கள், காவல் துறையினாலும் "மன்னிக்கப் படும்".

அதனால் தான், முன்பு ஆவா குரூப்பின் அட்டகாசங்களை வேடிக்கை பார்த்த பொலிஸ் படை, தற்போது ஓடிப் போய் கைது செய்துள்ளது. அநேகமாக, அவர்களை பயன்படுத்திய எஜமான், தேவை முடிந்ததும் கை விட்டிருக்கலாம். அடி தடியை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள், சுயாதீனமாக சமூக விரோத செயல்களை செய்வதன் மூலம், தம்மை ஒரு "யாழ் பாதாளக் குழு" வாக தக்க வைத்துக் கொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களை வளர்த்து விட்டவர்களே, பிடித்துக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

யாழ் பாதாள உலகக் கும்பல்களின் தோற்றத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், இருபதாண்டுகள் பின்னோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இலங்கையில் தாராள பொருளாதாரக் கொள்கை வந்த பின்னர், அரசு நிறுவனங்களின் ஏக போகம் மறைந்து, தனியார் தொழில் துறைக்கு கதவு திறந்து விடப் பட்டது. குறிப்பாக, அரசு நிறுவனமான இலங்கை போக்குவரத்து சபைக்கு போட்டியாக, தனியார் போக்குவரத்து சேவை ஊக்குவிக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் முதல் வைத்திருந்தவர்கள், ஒரு மினி வேன் வாங்கி சேவையில் ஈடுபடுத்தி சம்பாதித்தனர்.

தனியார் போக்குவரத்து சேவையின் துரித வளர்ச்சியினால், அதில் முதலிட விரும்புவோரின் ஆர்வமும் அதிகரித்தது. ஆனால், எல்லோரிடமும் முதலிட தேவையான பணம் இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "லீஸ் கம்பனிகள்" இலங்கையில் தோன்றின. வங்கியில் கடன் எடுக்க வேண்டுமானால், பத்துக்கும் குறையாத கட்டுப்பாடுகளை கடந்து செல்ல வேண்டும்.

வங்கி கேட்கும் பத்திரங்கள், உறுதிமொழிகளை கொடுப்பதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கும். எல்லாம் இருந்தாலும், கடன் கிடைப்பது நிச்சயமில்லை. ஆனால், லீஸ் கம்பனிகளை பொறுத்த வரையில், அதெல்லாம் தேவை இல்லை. கையில் காசில்லா விட்டாலும், அவர்களிடம் இருப்பதை அடமானம் வைத்துக் கொண்டு, கடன் கொடுத்து வந்தன. வாகனங்கள் மட்டுமல்லாது, விரும்பிய விலையுயர்ந்த பொருள் எதையும் வாங்குவதற்கு, லீஸ் கம்பனிகள் கடன் கொடுத்தன. ஆரம்பத்தில், லீஸ் கம்பனிகளின் சுய ரூபத்தை, அப்பாவி மக்கள் அறிந்திருக்கவில்லை.

அநேகமாக, கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பிரிவினரும் லீஸ் கம்பனி விதித்த வலைக்குள் சிக்கினார்கள். ஒரு மினி வேன் வாங்கி சேவையில் விட்டால், குடும்பத்தின் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பி, அதிலே முதலிட்டார்கள். அந்தோ பரிதாபம்! பலரால், வாங்கிய கடனை குறித்த தவணைக்குள் கட்ட முடியவில்லை. இரண்டு, மூன்று மாதம் தவணைப் பணம் கட்டாமல் பாக்கி வைத்தால், அதற்குப் பிறகு தலையில் துண்டைப் போட வேண்டியது தான்.

லீஸ் கம்பனிகளின் அகராதியில் கருணை என்ற சொல்லுக்கே இடமில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் வந்து சேரா விட்டால், அடியாட்களை அனுப்பி, வாகனத்தை பறித்துக் கொண்டு வந்து விடுவார்கள். யாழ்ப்பாணத்தில் ஆவா குரூப், அது போன்றதொரு அடியாட் படையாக செயற்பட்டிருக்க வேண்டும். (அந்தளவு தூரம் யாராவது விசாரிப்பார்களா என்பது சந்தேகமே.)

ஒவ்வொரு மாவட்டத்திலும், லீஸ் கம்பனிக்கு கிளைகள் இருப்பது போல, அடியாட் படைகளும் இருக்கின்றன. சிங்களம் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில், சிங்கள அடியாட்கள் இருப்பார்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில், தமிழ் அடியாட்கள். லீஸ் கம்பனிகளின் உரிமையாளர்கள், அநேகமாக சிங்கள தரகு முதலாளிகள் தான். அவர்களுக்கு அரசாங்க மட்டத்தில் செல்வாக்கும் இருக்கும். அதனால், லீஸ் கம்பனிகள் அடியாட்களை அனுப்பி, வாகனங்களை பறித்துக் கொண்டு சென்று விட்டால், அதைப் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்ய முடியாது. முறைப்பாடு செய்தாலும், எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தெரியும்.

லீஸ் கம்பனிகளின் கொடுமைகளைப் பற்றி, இலங்கை அரசாங்கத்திடம் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திடமும் முறைப்பாடு செய்ய முடியாது. முதலாளித்துவ பயங்கரவாதம் அரசாளும் நாடுகளில் எல்லாம், லீஸ் கம்பனிகளால் பாதிக்கப் பட்ட மக்கள் இருக்கிறார்கள். "சுதந்திரமான, ஜனநாயக" மேற்கத்திய நாடுகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இலங்கையில் உள்ள லீஸ் கம்பனிகள் பல, உள்ளூர் முதலாளிகளால் நடத்தப் படுவதாக தெரிகின்றது. ஆனால், அவற்றில் எத்தனை நிறுவனங்களில், அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது வெளியே தெரிவதில்லை. அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதால், லீஸ் கம்பனிகளின் சொத்து விபரங்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.

1995 ம் ஆண்டு, ஸ்ரீலங்கா அரச படைகள், யாழ் குடாநாட்டை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பின்னர் தான், அங்கே லீஸ் (Lease) கம்பனிகள் ஊடுருவின. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்தில் அவற்றின் செயல்பாடு எதுவும் இருக்கவில்லை. (சிங்கள மூலதனம் மட்டுமல்ல, மேற்கத்திய மூலதனம் கூட புலிகளின் தமிழீழத்தில் ஊடுருவவில்லை.)

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள், லீஸ் கம்பனிகளுக்கு பெரியதொரு தலையிடியைக் கொடுத்து வந்தன. சிங்களப் பிரதேசங்களில், லீஸ் கம்பனி பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட சிங்கள கடனாளிகள் சிலர், தம்மிடமிருந்த வாகனங்களை புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களுக்கு கொண்டு சென்று விற்று விட்டார்கள். அன்று தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இலங்கையில் வேறெங்கும், குறைந்த விலைக்கு வாகனம் வாங்க முடியாது.

இதனால், தென்னிலங்கை லீஸ் கம்பனிகள், புலிகள் அமைப்புடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. உரிய பத்திரங்களை சமர்ப்பித்து, திருட்டுத் தனமாக கொண்டு வரப் பட்ட வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு, புலிகள் அனுமதித்தனர். அவற்றை அடியாட்களை வைத்து பறிக்க முடியாது. கண்ணியமான முறையில், உரிமையாளர் விபரம் சரி பார்க்கப் பட்ட பின்னரே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வாகனங்களை திரும்பப் பெற முடிந்தது. ஆனால், அது எல்லா சந்தர்ப்பத்திலும் சாத்தியப் படவில்லை. புலிகளும், ஸ்ரீலங்கா சட்டங்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை.

லீஸ் கம்பனிகளின் பிரதானமான வருமானம், கடன் வாங்குவோரின் இயலாமையில் தங்கி உள்ளது. லீஸ் கம்பனிகள் கொடுக்கும் கடனுக்கு, வங்கியை விட அதிக வட்டி வசூலிக்கிறார்கள். கந்து வட்டிக்கு கடன் வாங்குவதாலேயே, பலரால் கடனை அடைக்க முடிவதில்லை. மேலும், வாகனத்தின் பதிவுப் புத்தகத்தை கம்பனியில் அடமானம் வைப்பதால், கடன் கட்டி முடிக்கும் வரையில், லீஸ் கம்பனியே உண்மையான உரிமையாளராக கருதப் படுவார். இதனால், லீஸ் கம்பனிகள் சட்டப்படி கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அப்படி இருந்தும், தவணைப் பணம் கட்டாதவரின் வாகனத்தை பறித்து, இன்னொருவருக்கு ஏலத்தில் விற்று விடுகின்றன. அப்படியான நிலைமை வந்தாலும், கடன் வாங்கியவர் கடன் தொகை முழுவதையும் கட்டி முடிக்க வேண்டும்.

நிச்சயமாக, லீஸ் கம்பனிகளின் அடாவடித் தனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வது எதிர்பார்க்கத் தக்கதே. பலர் தமது சக்திக்கேற்ப எதிர்த்துப் போராடுகின்றனர். சில இடங்களில் பறிக்க வந்தவர்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள். சிலர் வாகனங்களை பகுதி பகுதியாக கழற்றி ஒளித்து வைக்கிறார்கள். அப்படியான கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு, ஆவா குரூப் போன்ற கிரிமினல் கும்பல்கள் பயன்படுகின்றன. தற்போது ஆவா குரூப் முழுவதையும் பிடித்து விட்டதாக கொக்கரிக்கும் பொலிஸ், அவர்களோடு தொடர்புடைய 23 வயது இளம் பெண் ஒருவரை வலைவீசித் தேடி வருவதாக அறிவித்துள்ளனர். ஆவா குரூப் பிடிபட்டவுடன், அவர்கள் இவரை காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

அநேகமாக, அவர்கள் அந்தப் பெண்ணை பிடிக்கப் போவதில்லை. ஏனென்றால், எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, அந்தப் பெண் லீஸ் கம்பனி ஒன்றில் வேலை செய்பவர். அவரது வேலை, கம்பனிக்கும் கிரிமினல் குழுவுக்கும் இடையில் தொடர்பாளராக செயற்படுவது. எந்த இடத்தில், எந்த வாகனத்தை பறிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களை, அவர் வழங்கி வந்துள்ளார். வாகனத்தை பறித்துக் கொண்டு வந்து கொடுக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு, குறிப்பிட்ட தொகை பணம் கமிஷனாக கொடுக்கப் படும்.

ஆவா குரூப்பிடம் இருந்து கிரனேட்கள் அகப்பட்டது ஒரு பெரிய விஷயம் அல்ல. தேவைப் பட்டால், தரகு முதலாளியக் கும்பல் அவர்களிடம் நவீன ஆயுதங்களும் கொடுத்து விட்டிருக்கும். ஏனென்றால், யாழ் குடாநாட்டில் இன்னும் சில இடங்களில், மக்களின் போர்க் குணாம்சம் வலுவாக உள்ளது. குறிப்பாக, தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்த, பாட்டாளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில், சாதாரண கிரிமினல்கள் ரவுடித்தனம் காட்ட முடியாது. ஆவா குரூப்பாக இருந்தாலும், ஆவன்னா குரூப்பாக இருந்தாலும், ஊர் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு பிடித்துக் கட்டிப் போட்டு விடுவார்கள். அப்படியான கிளர்ச்சிகரமான பகுதிகளை சமாளிப்பதற்கு, ஆயுத பலத்துடனான அடியாட் படையை அனுப்ப வேண்டிய தேவை, தரகு முதலாளிகளுக்கு உள்ளது.

முப்பதாண்டு கால யுத்தத்தால் பாதிக்கப் பட்ட யாழ்ப்பாணத்தில், இது போன்ற கிரிமினல் குழுக்கள் இயங்குவது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். "முதலாளித்துவம் எப்போதும் போர்களை விரும்புகிறது" என்பது ஒரு நவீன கால உலக யதார்த்தம். போர் நடக்கும் காலத்தில், ஆயுத விற்பனை மூலம் இலாபம் சம்பாதிக்கலாம் என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல. போரில் அனைத்தையும் இழந்து, மீளாத் துயருக்குள் சிக்கி வாடும் மக்களை கடன் என்ற பொறிக்குள் தள்ளி விடுவதும் இலகு. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவே, அந்த நாட்டு மக்களிடம் உள்ள கடனில் தான் உயிர் வாழ்கின்றது. 

ஒரு மனிதரிடம் இருக்கும் கடன், முதலாளிகளின் கைகளில் பணமாக புரள்கின்றது. ஒரு பக்கத்தில் மக்களின் கடன் பெருகிக் கொண்டிருக்கையில்,மறு பக்கத்தில் அது மூலதனமாக திரட்சி அடைகின்றது. பொருளாதார தத்துவங்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக் கடினமானது. ஆனால், அவர்கள் தான் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். "கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று பாடிய கம்பர், அதனை "இலங்கை மக்கள்" என்று திருத்தி எழுதி இருக்க வேண்டும்.

No comments: