Tuesday, January 21, 2014

புலிகள் ஒரு "ஸ்டாலினிச" இயக்கம்! - ட்ராஸ்கிஸ்டுகளின் கண்டுபிடிப்பு!!


"இலங்கையில் உங்களுக்குப் பிடித்த சிங்கள இடதுசாரி யார்?" என்று நமது தமிழ் தேசியவாதிகளிடம் கேட்டால், எல்லோரும் ஒரே குரலில் "விக்கிரமபாகு கருணாரத்னா" என்று பதில் சொல்வார்கள்.

தமிழர்களின் பிரச்சனைகளை, அனுதாபத்துடன் ஆதரிக்கும் ஒரேயொரு சிங்கள இடதுசாரி அவர் மட்டுமல்ல. (வேறு சிலரும் உள்ளனர். ஆனால், அவர்கள் புலிகளை ஆதரிக்காத படியால், யாருக்கும் பிடிக்காது.) தென்னிலங்கை இடதுசாரிகளில் விக்கிரமபாகு கருணாரத்னவும், அவரது கட்சியும் விதி விலக்குகள். அவர் மட்டுமே, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்து வந்துள்ளார். அவரது கட்சி, "தமிழீழம், ஸ்ரீலங்கா என்ற இரண்டு தேசியங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. (நிச்சயமாக, அந்த இரண்டு தேசியங்களும் சோஷலிசத்தை இறுதி இலக்காக கொண்டிருக்கும் என்பதை குறிப்பிடத் தவறுவதில்லை.)

விக்கிரமபாகு கருணாரத்ன தலைமை தாங்கும், நவ சமசமாஜக் கட்சி (NSSP) ஒரு ட்ராஸ்கிச சோஷலிசக் கட்சி ஆகும். இன்று அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும், வாசுதேவ நாணயக்காராவின் லங்கா சமசமாஜக் கட்சியில் (LSSP) இருந்து எப்போதோ பிரிந்து வந்து விட்டது. ஆனால், இரண்டுமே நான்காம் அகில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட ட்ராஸ்கிச கட்சிகள் தான். ட்ராஸ்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்ல. இன்னும் தெளிவாக சொன்னால், "ஸ்டாலினிஸ்டுகள் அல்ல".

காலனிய கால இலங்கையில் தோன்றிய, ஆரம்ப கால சோஷலிச இயக்கம், "ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரிவினை" க்குப் பிறகு, ட்ராஸ்கியை பின்பற்றியது. ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளின் குறிக்கோள், ட்ராஸ்கிசவாத கட்சிகளுக்கும் பொருந்தும். அதாவது, கத்தியின்றி, இரத்தமின்றி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சோஷலிசத்தை கொண்டு வருவதே அவர்களது குறிக்கோள். அதனால் தான், வாசுதேவ நாணயக்காராவின் LSSP, மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி அரசை ஆதரிக்கின்றது. அதாவது, ஒரு மத்திய இடது சார்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் மூலம், ஒரு முதலாளிய அரசை வழிக்குக் கொண்டு வர முடியுமாம். (இலங்கை சுதந்திரக் கட்சி, அடிப்படையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியலை கொண்டுள்ளது.)

விக்கிரமபாகு கருணாரத்னவின் NSSP, நடப்பில் உள்ள மகிந்த அரசுடன் முரண்படுகின்றது. அது ஒரு மிகச் சரியான நிலைப்பாடு தான். ஆனால், சர்வதேச மட்டத்தில், அதைப் போன்ற ட்ராஸ்கிசவாத கட்சிகள், ஒரு ஆயுதப் புரட்சியை நம்பி இருக்கவில்லை. அதன் அர்த்தம், தேர்தல் ஜனநாயக அரசியலில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது. அடித்தட்டில் இருக்கும் மக்கள் புரட்சி செய்வார்கள், அப்போது அவர்களை வழிகாட்டலாம் என்று காத்திருக்கிறார்கள்.

விக்கிரமபாகுவின் NSSP கட்சிக்கும், சர்வதேச ட்ராஸ்கிச கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ட்ராஸ்கிஸ்டுகள், ஒரே நாட்டில் சோஷலிசத்தை கட்டுவதனை, ஒரு "ஸ்டாலினிச கோட்பாடு" என்று நிராகரிப்பவர்கள். அதற்குப் பதிலாக, "நிரந்தரப் புரட்சி" என்று சர்வதேச மட்டத்தில் சிந்திப்பவர்கள். அதாவது, ஒரு சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் "உலகப் புரட்சி" ஏற்பட்டால் மட்டுமே, தமிழீழம், ஸ்ரீலங்கா ஆகிய சோஷலிச நாடுகளும் உருவாகும் என்று நம்புவோர் தான் NSSP யினர்.

NSSP க்கு, நான்காம் அகிலம் போன்ற சர்வதேச ட்ராஸ்கிசவாத அமைப்புகளுடன் தொடர்புண்டு. குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில் இயங்கும் தீவிர ட்ராஸ்கிச Grenzeloos கட்சியுடன், நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தில் கூட்டப்படும் சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொள்கின்றனர். உலகெங்கும் உள்ள ட்ராஸ்கிச கட்சிகளின் பிரதிநிதிகள், அந்தக் கருந்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ட்ராஸ்கிச இயக்கத்திற்குள் நிறைய பிரிவுகள் உள்ளன. NSSP போன்று, Grenzeloos கட்சியும் அரசை ஆதரிப்பதில்லை. எந்தப் பெரும்பான்மை கட்சி ஆட்சி அமைத்தாலும், அதன் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து வருகின்றது. NSSP யின் நிலைப்பாடும் அது தான். அந்த விடயத்தில் அவர்களின் நேர்மையை பாராட்டலாம்.

Grenzeloos என்பது, நெதர்லாந்தில் இயங்கும் ஒரு சிறிய மார்க்சிய-ட்ராஸ்கிச கட்சி ஆகும். நெதர்லாந்து ஆளும் கட்சிகளில் ஒன்றான, அடிப்படையில் சமூக ஜனநாயக கட்சியான PvdA (தொழிற்கட்சி, பிரிட்டிஷ் Labour Party போன்றது), பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, வலதுசாரி பாதையில் செல்லத் தொடங்கியது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பேசிய மார்க்சியம், சோஷலிசம் எல்லாவற்றையும் கை விட்டு விட்டு, முதலாளித்துவ ஆதரவு கட்சியாகி விட்டது. கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டுடன் முரண்பட்ட இடதுசாரி மார்க்சிய நம்பிக்கையாளர்கள், Grenzeloos (கிரென்செலோஸ்: எல்லையற்றது) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.

அவர்கள் தற்போது, PvdA யுடன் எந்த தொடர்புமற்று, தனியான கட்சியாக இயங்கி வருகின்றனர். அவர்கள் மார்க்சிஸ்டுகள் என்றாலும், ட்ராஸ்கிசத்தை கட்சிக் கொள்கையாக பின்பற்றி வருகின்றனர். தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்பாளர்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வாழ்க்கைத் தரம் உயர்ந்து வசதியான வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில், ட்ராஸ்கிஸம் இலகுவில் எடுபடும்.

ட்ராஸ்கிசவாதிகள், "வன்முறைப் புரட்சி மூலம், முதலாளித்துவ அரசை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசை நிறுவ விரும்பும் ஸ்டாலினிசத்தை" நிராகரிக்கின்றனர். அதனால், இரத்தம் சிந்திப் போராட விரும்பாத நடுத்தர வர்க்க மனப்பான்மை கொண்ட மக்கள் மட்டுமல்ல, முதலாளிகளும் ட்ராஸ்கிசத்தை ஆதரிப்பார்கள். ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகளால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான (உயிர்)ஆபத்தும் ஏற்படாது.

நெதர்லாந்தில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களுடனும் எனக்குப் பழக்கம் உண்டு. Grenzeloos கட்சி உறுப்பினர்களை, பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, பல்வேறு சமூக நிகழ்வுகளில், அரசியல் ஆர்ப்பாட்டங்களில், அவர்களை சந்தித்திருக்கிறேன். நான் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு சமூக ஆர்வலர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அப்போதெல்லாம், எமது உரையாடலில், தவிர்க்கவியலாது இலங்கை நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறும். அநேகமாக, ஐரோப்பாவில் அரசியல் ஆர்வமுள்ள பலர், இலங்கைப் பிரச்சினை பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். ஈழப்போர், ஈழத்தில் மனிதப் பேரவலம், போரிடும் தரப்பினர், அவர்களது இராணுவ- அரசியல் நிலைப்பாடுகள், இவை குறித்தெல்லாம் ஆர்வத்தோடு தேடிப் படித்திருப்பார்கள்.

ஈழப் போராட்டம், மற்றும் விடுதலைப் புலிகள் குறித்து Grenzeloos உறுப்பினர்களின் கொண்டிருந்த கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. "புலிகள் ஒரு (தமிழ்) தேசியவாத இயக்கம், ஒரு தேசியவாத அரசு அமைப்பதே அவர்களது குறிக்கோள்." என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அதனை மறுத்துரைத்த Grenzeloos கட்சி உறுப்பினர்கள், "விடுதலைப் புலிகள் ஒரு ஸ்டாலினிச இயக்கம். தமிழீழத்தில் ஸ்டாலினிச ஆட்சியை கொண்டுவருவதே அவர்களது குறிக்கோள்" என்று வாதிட்டனர். அது மட்டுமல்ல, கியூபா, வியட்நாமில் ஸ்டாலினிச ஆட்சி நடப்பதாகவும், புலிகளும் அந்தப் பாதையில் செல்வதாகவும் வாதிட்டனர்.

இன்று, ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகளுடன் தொடர்புடைய தமிழர்கள் சிலர், தம்மை "தீவிரமான புலி ஆதரவாளர்களாக" காட்டி வருகின்றனர். உண்மையில் அது ஒரு இரட்டை வேடம். Grenzeloos மட்டுமல்ல, ஐரோப்பிய ட்ராஸ்கிசவாத கட்சிகள் பலவும் புலிகளை ஒரு ஸ்டாலினிச இயக்கமாகவே கருதுகின்றன. விடுதலைப் புலிகள் ஒரு "ஸ்டாலினிச இயக்கம்" என்பதற்கு, ட்ராஸ்கிசவாதிகள் கூறும் காரணம் முக்கியமானது. முதலில் ஸ்டாலினிசம் என்றால் என்ன? அதற்கு வரைவிலக்கணம் என்ன?

"ஸ்டாலினிசம்" என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிசவாதிகள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை, நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். "வன்முறைப் போராட்டத்தில் நாட்டம், கடும்போக்குத் தன்மை, பல கட்சி ஜனநாயகத்தை மறுப்பது, மாற்றுக் கருத்தாளரை அழித்தொழிப்பது, எதேச்சாதிகாரம்..." இது போன்ற பல அம்சங்களை, அவர்கள் ஸ்டாலினிசம் என்று கருதுகின்றனர். 

ட்ராஸ்கிஸ்டுகளை பொறுத்தவரையில், "ஸ்டாலினின் கொள்கைகளை பின்பற்றித் தான், கியூபாவில் காஸ்ட்ரோயிஸ்டுகளும், வியட்நாமில் வியட்- காங் இயக்கமும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." அதாவது, "அவர்கள் கம்யூனிஸ்டுகளோ, இடதுசாரிகளோ அல்ல, ஸ்டாலினிஸ்டுகள்." ஏனென்றால், ஆயுத வன்முறை மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள். "விடுதலைப் புலிகளும், அவ்வாறு ஆயுத வன்முறையில் நம்பிக்கை கொண்ட இயக்கம் தான். அதனால் தான், புலிகளும் ஸ்டாலினிஸ்டுகள் ஆவர்." என்பது ட்ராஸ்கிச கட்சிகளின் அரசியல் புரிதல் ஆகும். 

மேற்கு ஐரோப்பாவில் இயங்கும், எந்தவொரு ட்ராஸ்கிச அமைப்பும், முதலில் தன்னை முதலில் "ஸ்டாலினிஸ்ட் இல்லை" என்று நிரூபிப்பதில் குறியாக இருக்கும். அதற்குக் காரணம், ஐரோப்பிய அரசுகள் "ஸ்டாலினிசம் என்பது சர்வாதிகாரம், அல்லது எதேச்சாதிகாரத்தின் மறுபெயர்" என்று பிரச்சாரம் செய்து, தமது மக்களை நம்ப வைத்திருக்கின்றன. அதனால் தான், ஆயுத பலம் மூலம் அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் தேசியவாத இயக்கங்களும், ட்ராஸ்கிசவாதிகளின் கண்களுக்கு "ஸ்டாலினிஸ்டுகளாக" தெரிகின்றன.

ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகள், புலிகளை "ஸ்டாலினிஸ்டுகள்" என்று கூறி நிராகரிப்பதற்கு, இன்னொரு காரணமும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஸ்டாலினிச" (கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட்) கட்சிகள், அமைப்புகள் தான், புலிகளையும், அவர்களது ஈழப் போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றனர். புலிகளின் போராட்டத்தை, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசிய விடுதலைப் போராட்டம் என்று கூறி வருகின்றனர். அது ஒரு வகையில் "ஸ்டாலினின் கோட்பாடு". (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசிய இனப் பிரச்சினை குறித்த ஆய்வுகளை செய்தவர்களில் ஸ்டாலின் முக்கியமானவர்.) அத்தகைய கொள்கை வேறுபாடும், ட்ராஸ்கிச கட்சிகள் தேசியவாதிகளான புலிகளை நிராகரிக்க காரணமாக உள்ளது.


No comments: