Friday, January 17, 2014

சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்

(ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (நான்காம் பாகம்)


உலகம் முழுவதும், எல்லா நாடுகளிலும் அரசு இயந்திரங்கள் சிறைச்சாலைகளை நடத்தி வருகின்றன. குற்றம் செய்பவர்கள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவிப்பதாக, சாதாரண மக்கள் நினைக்கிறார்கள். முதலாளித்துவ நாடுகள், அல்லது முதலாளித்துவப் பொருளாதாரம் நிலவும் நாடுகளில், ஒவ்வொரு துறையிலும் வர்க்க வேறுபாடு பிரதானமாக இருக்கும். உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த, ஜனநாயக நாடாக கருதப் படும் அமெரிக்காவில் கூட, வறுமையான பின்னணியை கொண்டவர்களும், சிறுபான்மை இனங்களும் தான் பெரும்பாலும் சிறைச்சாலைகளை நிரப்புகின்றனர்.

அதை விட, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், பல ஆயிரம் பயங்கரவாத சந்தேக நபர்கள், உலகெங்கும் உள்ள இரகசியமான சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஒரு காலத்தில், அமெரிக்க மண்ணிலேயே தடுப்பு முகாம்கள் இருந்துள்ளன. செவ்விந்திய பழங்குடியினர் 19 ம் நூற்றாண்டு வரையில், தடுப்பு முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த காலத்தில், அமெரிக்காவில் வாழ்ந்த ஜப்பானிய குடியேறிகள், அனைவரும் குடும்பத்தோடு பிடித்துச் செல்லப் பட்டு, தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர்.

சிறைச்சாலைகள் வைத்திருப்பதற்கு, அரசாங்கங்கள் பலவித காரணங்களை கூறுகின்றன. குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து பிரித்து வைத்து நல்வழிப் படுத்துவதற்காக, அவர்களுக்கு தண்டனை வழங்கப் படுவாதாக, பொதுவாக சொல்லப் படுகின்றது. நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வும் காரணம் என்று சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள படித்தவர்களும், பணக்காரர்களும் செய்யும் குற்றங்களுக்காக, அவர்கள் பெரும்பாலும் எந்தத் தண்டனையும் அனுபவிப்பதில்லை. சமூகம் அவற்றை கண்டு கொள்வதுமில்லை. பல சந்தர்ப்பங்களில், மேட்டுக்குடியினரும், முதலாளிகளும் குற்றம் புரிவதற்கு சட்டமே இடமளிக்கிறது. பல விடயங்கள், சட்டப் படி குற்றமாக கருதப் படுவதில்லை.

சோவியத் யூனியனில், போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், மேற்குறிப்பிட்ட சமூக நிலைமை தலைகீழாக மாறியது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர், “அனேகமாக ஒரு பெரிய குற்றவாளியாக இருப்பார்” என்று சந்தேகிக்கும் நிலைமை தோன்றியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, அப்படியான சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்து விட்டது. அதன் விளைவு? நிலவுடமையாளர்கள், முதலாளிகள், பணக்காரர்கள் என்று இனங்காணப்பட்ட பலர், மக்களால் பிடித்துக் கொடுக்கப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கும், கடூழிய தண்டனை வழங்குவதற்கும் தடுப்பு முகாம்கள் உருவாக்கப் பட்டன.

"Gulag" என்ற ரஷ்யச் சொல்லை, கம்யூனிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் கேள்விப் பட்டிருப்பார்கள். சைபீரியாவில் பல இடங்களில் இருந்த சிறைத் தடுப்பு முகாம்களை குறிக்கும் சொல் அது. ஆனால், அன்றிருந்த எல்லா சிறை முகாம்களும் குலாக் என்று பெயரிடப் படவில்லை. எல்லா நாடுகளிலும் இருப்பது போல வழமையான சிறைச்சாலைகளும் இருந்தன. அதைத் தவிர, பல்வேறு நோக்கங்களுக்காக, பல்வேறுபட்ட பிரிவினரை அடைத்து வைத்த தடுப்பு முகாம்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். குலாக் அவற்றில் ஒன்று. ஆனால், இறுதியில் குலாக் என்ற பெயர் சரித்திரத்தில் நிலைத்து விட்டது.

ரஷ்யாவின் வட மேற்குப் பிரதேசத்தில் உள்ள, வடக்கே உள்ள வெள்ளைக் கடலை, தெற்கே உள்ள பால்ட்டிக் கடலுடன் இணைப்பதற்காக, ஒரு செயற்கையான ஒரு கால்வாய் தோண்டப் பட்டது. அதற்காக கைதிகள் கட்டாய வேலை செய்ய வேண்டி இருந்தது. கால்வாய் செல்லும் வழியெங்கும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின. பல ஆயிரக் கணக்கான கைதிகள், அந்த முகாம்களில் தங்க வைக்கப் பட்டு வேலை வாங்கப் பட்டனர். பல இடங்களில், கனரக இயந்திரங்கள் அரிதாக பயன்படுத்தப் பட்டதால், மனித உழைப்பு அதிகமாக உறிஞ்சப் பட்டது. உடலை உருக்கும் கடுங் குளிர், அளவுக்கு மிஞ்சிய வேலை காரணமாக, கால்வாய் அமைக்கும் பணியில் பலர் மரணமடைந்துள்ளனர்.

எல்லா சிறை முகாம்களும், ஒரே மாதிரி இருக்கவில்லை. சில முகாம்களில் இருந்த கைதிகள் நன்றாக நடத்தப் பட்டனர். அவர்கள் வேலை செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். வேறு சில முகாம்களில், கைதிகள் மோசமாக நடத்தப் பட்டனர். அவர்களுக்கு சிறை ஒரு நரகமாக இருந்தது. பல குறைபாடுகள் சிறை முகாம் நிர்வாகத்தில் தங்கி இருந்தது. சில முகாம்களில், கைதிகள் மனிதத் தன்மையுடன் நடத்தப் பட்டனர். ஆனால், சில முகாம்களை நிர்வகித்தவர்கள் மனிதப் பேரவலத்திற்கு காரணகர்த்தாக்களாக இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கருதுவது, யதார்த்தத்திற்கு முரணான வாதம்.    

சிறைப் பிடிக்கப் பட்ட கைதிகள், வேலை செய்வதன் மூலம், உடல் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வார்கள். அவர்களை கருத்தியல் ரீதியாக வென்றெடுப்பதும், மறுவார்ப்பு செய்வதுமே தடுப்பு முகாம்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், எல்லா சிறைச்சாலை அதிகாரிகளும் அதனை பின்பற்றவில்லை. சில காவலர்கள், தங்களிடம் ஒப்படைக்கப் பட்ட கைதிகளை, இரக்கமின்றி கொடூரமாக நடத்தினார்கள். கடைசியில், அவ்வாறு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களின் செயல்கள் மட்டுமே, சரித்திரத்தில் பதிவு செய்யப் பட்டமை ஒரு வரலாற்று முரண்நகை. மோசமாக நிர்வகிக்கப் பட்ட முகாம்களில் நடந்த கொடுமைகளை நினைவில் வைத்திருப்பவர்கள், நன்றாக நிர்வகிக்கப் பட்ட முகாம்களில் நடந்த மாற்றங்களை மறந்து விட்டார்கள். உதாரணத்திற்கு, சிலருக்கு நேர்ந்த அனுபவங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சிமினோவ் என்ற ரஷ்ய எழுத்தாளர், ஒரு பாட்டாளி வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் வறுமை காரணமாக கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர். சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர், சுயமாகப் படித்து முன்னேறினார். புதிய சோவியத் அரசு அவரை ஒரு சிறந்த ஊடகவியலாளராக, கவிஞராக மாற்றியது. வெள்ளைக் கடல் கால்வாய் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பற்றி கவிதைகள் எழுத விரும்பினார். அதற்காக சில வாரங்கள், தடுப்பு முகாம் ஒன்றில் தங்கினார். வயதில் குறைந்த இளைஞரான சிமினோவை, தொழிலாளர்கள் யாரும் கணக்கெடுக்கவில்லை.

“குலாக்” கடூழிய சிறை முகாமில் தனது அனுபவத்தை எழுதிய சிமினோவின் குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: “முன்னாள் பூர்ஷுவாக்கள், “கூலாக்” பணக்கார விவசாயிகள், முகாமில் சாதாரண தொழிலாளர்களாக வேலை செய்வதன் மூலம், எவ்வாறு புதிய மனிதர்களாக மாறினார்கள்” என்பதை விபரமாக எழுதி உள்ளார். திறமைசாலிகளுக்கு “சிறந்த உழைப்பாளி விருது” வழங்கப் பட்ட பொழுது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தண்டனைக் காலம் முடிந்து, முகாமை விட்டு வெளியேறிய அனைவருக்கும் போனஸ்களும், பதக்கங்களும் வழங்கப் பட்டன.

முகாமிலிருந்த தொழிலாளர்களிடம் இருந்து கேட்டறிந்த பல கதைகளை சிமினோவ் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பொறியியலாளரின் கதை, அவர் தேடி வந்த புதிய மனிதனுக்கு உதாரணமாக திகழ்ந்தது. போல்ஷெவிக் புரட்சிக்கு முந்திய, இடைக்கால அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்த பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப் பட்டு, அந்த முகாமில் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 58 ம் இலக்க சட்டத்தின் படி, பத்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. வெள்ளைக் கடல் கால்வாய்த் திட்டத்திலும், அவர் ஒரு பொறியியலாளராக பணியாற்றினார். அவரது நன்னடத்தை காரணமாக, தண்டனைக் காலம் மூன்று வருடங்களாக குறைக்கப் பட்டது. விடுதலை செய்யப் பட்ட பின்னர், மொஸ்கோ - வோல்கா கால்வாய்த் திட்டத்தில் தலைமைப் பொறியியலாளராக வேலை செய்தார்.

பாவெல் விட்டன்பூர்க் ஒரு விஞ்ஞானி, திறமையான புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் மீது, "சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளுடன் சேர்ந்து, இரகசியமாக கிளர்ச்சி உண்டாக்க திட்டமிட்ட குற்றச்சாட்டு" சுமத்தப் பட்டது. விசாரணையில் அவராகவே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர், மரண தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அது சிறைத் தண்டனையாக மாற்றப் பட்டது. ரஷ்யாவிற்கு வடக்கே, ஆர்க்டிக் சமுத்திரத்தில் உள்ள வைகாஷ் தீவில் இருக்கும் குளாக் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.

வைகாஷ் தீவில், தங்கமும் வேறு சில விலை மதிப்பற்ற கனிம வளங்களும் இருக்கின்றன. அவற்றை கண்டுபிடிப்பதற்கும், அகழ்ந்து எடுப்பதற்குமாக ஒரு குலாக் முகாம் அமைக்கப் பட்டது. சிறைக் கைதிகளில் அரைவாசிப் பேர், பொறியியலாளர்கள். அந்த முகாமிற்கு பாவெல் வந்த பின்னர், தங்கம் கண்டுபிடிக்கப் பட்டது. வைகாஷ் தீவின் புவியியல் தன்மைகளை ஆய்வு செய்யும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டது. ஒரு சிறைக் கைதியாக இருந்த போதிலும், பாவெலுக்கு ஒரு தனியான வீடும், அலுவலகமும் ஒதுக்கிக் கொடுக்கப் பட்டது. கோடை காலத்தில், குடும்ப உறுப்பினர்கள் வந்து பார்ப்பதற்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டது. வைகாஷ் தீவில் கிடைத்த சலுகைகளை கண்டு வியந்த பாவெலின் மனைவி, சில காலம் அங்கேயே தங்கி இருந்தார். ஒரு மருத்துவரான அவர், முகாம் கைதிகளுக்கு வைத்தியம் பார்த்தார்.

பாவெலின் மனைவி ஜீனா, லெனின்கிராட்டில் விட்டு விட்டு வந்த மகள்மாருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து: “உங்களது அப்பாவின் புகைப்படம் ஒன்றை அனுப்புகிறேன். இங்கே வந்த பின்னர் எந்தளவு கொழுத்து இருக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். நேற்று முகாமில் இருந்து வெளியேறிச் செல்பவர்களின் (கைதிகளின்) பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொண்டோம். உழைப்பாளிகளின் நாயகர்களை பாராட்டும் உரைகளை வெகுவாக இரசித்தோம். இங்கு வந்த ஒவ்வொருவரும் தகைமை பெற்ற, விழிப்புணர்வு கொண்ட உழைப்பாளிகளாக திரும்பிச் செல்வதை கண்டோம்….” (ஆதாரம்: The Whisperers, Private life in Stalin's Russia)


முடியாட்சியை ஆதரிக்கும் பழமைவாதியாக கைது செய்யப்பட்ட பாவெல், தடுப்பு முகாமில் வாழ்ந்த காலத்தில், தானாகவே மார்க்சிய தத்துவத்தில் நாட்டம் கொண்டார். மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றார்.  அவரைப் போன்ற பலரை, குலாக் முகாம் வாழ்வு மாற்றியமைத்தது. அதாவது, மறுவார்ப்புச் செய்தது. பழைமைவாதிகளாக, முதலாளித்துவவாதிகளாக குலாக் முகாம்களுக்கு சென்ற பலர், விடுதலையாகும் பொழுது கம்யூனிஸ்டுகளாக வெளியேறினார்கள். நிச்சயமாக, எல்லோரும் அரசியலில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல. கடைசி வரையும், தங்களது பழைய கொள்கையை மாற்றிக் கொள்ளாத குலாக் கைதிகளும் இருந்தனர்.

உண்மையில், “Gulag” என்ற சொல்லைக் கேட்டாலே பயந்து நடுங்கும் அளவிற்கு, அது ஒன்றும் வதை முகாம் அல்ல. அதனை "தடுப்பு முகாம், சிறை முகாம்" என்று அழைப்பது கூட சரியானதா என்று தெரியவில்லை. அதற்குப் பொருத்தமான சொல், ஆங்கிலத்திலோ, அல்லது பிற மொழிகளிலோ இல்லாத படியால் தான், இன்றைக்கும் குலாக் என்ற சொல்லை பாவிக்கிறார்கள். ஆனால், அந்தச் சொல்லை எதிர்மறையான அர்த்தத்தில் பாவிப்பது, ஒரு சிலரது அரசியல் நலன் சார்ந்தது.

ரஷ்யா முழுவதிலும் இருந்து, ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் குலாக் முகாம்களில் சிறை வைக்கப் பட்டிருந்தனர். குலாக் முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்டவர்கள், தமது திறமையை பரீட்சித்துப் பார்க்க வாய்ப்பளிக்கப் பட்டது. பலர், தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேறினார்கள். எத்தனையோ பேர், குலாக் முகாம் கல்லூரிகளில் படித்து, பட்டம் பெற்று, கணக்காளர்களாக, பொறியியலாளர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். அவரவர் தகுதிகேற்றவாறு ஊதியமும், சலுகைகளும் பெற்றிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு கைதியாக கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு, இவை எல்லாம் வாழ்க்கையில் நினைத்தும் பார்க்க முடியாத வாய்ப்புகள்.

மிகைல் ஒரு பழமைவாத குடும்பப் பின்னணி கொண்டவர். திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தையும் இருந்தது. மிகைல் கட்டடவியல் கல்லூரியில் படிக்கும் காலத்தில், பிற மாணவர்களுடன் இணைந்து சோவியத் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்திருந்தார். அரச எதிர்ப்புக் கலகம் செய்த குற்றச்சாட்டில் இரண்டு தடவை கைது செய்யப் பட்டவர். அவரது மனைவியின் வேலையும் பறிக்கப் பட்டது. கணவன் கைது செய்யப் பட்ட பின்னர், அவரது மனைவியும், மகளும் மொஸ்கோவிற்கு இடம்பெயர்ந்து சென்று வசித்தனர்.

ஒரு திறமையான கட்டிடக் கலைஞர் என்பதால், சைபீரிய தடுப்பு முகாமில் மிகைலுக்கு ஒரு வேலை கிடைத்தது. வடக்கே, ஆர்க்டிக் சமுத்திர கரையோரம் அமைந்துள்ள, ஆர்கான்கெல்ஸ்க் பிராந்தியத்தில், அது வரை காலமும் எந்த நகரமும் உருவாகி இருக்கவில்லை. புதிதாக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் இமாலயப் பணி, மிகைலிடம் ஒப்படைக்கப் பட்டது. புதிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள், பாலங்கள் என்பன, மிகைல் போட்டுக் கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில், குலாக் கைதிகளாக இருந்த தொழிலாளர்களைக் கொண்டு நிர்மாணிக்கப் பட்டது.

மிகைலின் மனைவி, மொஸ்கோ நகரில் சுதந்திரப் பிரஜையாக வாழ்ந்து வந்த போதிலும், வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்ட முடியாமல் கஷ்டப் பட்டார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்த போதிலும், கிடைத்த சம்பளம் உணவுக்கே போதுமானதாக இருக்கவில்லை. அதே நேரம், சைபீரியாவில் கைதியாக அடைபட்டிருந்த மிகைலின் சம்பாத்தியம், அதை விட  அதிகமாக இருந்தது. அவர் அனுப்பிய பணத்தில் தான், அந்தக் குடும்பம் இறைச்சி வாங்கிச் சாப்பிட முடிந்தது. குடும்ப கஷ்டம் காரணமாக, மிகைலின் மனைவி மகளை கூட்டிச் சென்று, "சிறையிலிருந்த" தந்தையின் பராமரிப்பில் விட்டு விட்டு வந்தார். அந்தளவுக்கு, சைபீரிய தடுப்பு முகாம்களில், தாராளமான வசதி வாய்ப்புகள் இருந்துள்ளன.  (ஆதாரம்: The Whisperers, Private life in Stalin's Russia)

இதையெல்லாம் சொன்னால், இன்றைக்கு  யாரும் நம்ப மாட்டார்கள். “ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன். பல இலட்சம் மக்களை வதை முகாம்களில் போட்டு வருத்தினான். உலக வரலாற்றில் அதிகளவு மக்களை படுகொலை செய்த இனப் படுகொலையாளி….” என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் அறிவுஜீவிகள் இதையெல்லாம் கேட்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் வாழும் உலகம் வேறு. பொய்யும், புரட்டும் நிறைந்த கற்பனா லோகத்தில் சஞ்சரிக்கின்றனர். மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியான கட்டுக் கதைகளை, கேள்வி எதுவும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள்.

குலாக் முகாம்கள் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில், பல வசதிக் குறைபாடுகளைக் கொண்டிருந்தது உண்மை தான். ஸ்டாலின் காலத்திற்கு முன்பு, ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள சைபீரியாவில், மனித நடமாட்டம் மிகக் குறைவாக இருந்தது. பல ஆயிரம் மைல்களுக்கு, நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களைக் கூட காண முடியாது. ஆனால், இயற்கை வளம் நிறைந்த பிரதேசம். அவற்றை பயன்படுத்தவும், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும், சாதாரண தொழிலாளர்கள் முன்வரவில்லை என்பதும் உண்மை தான். குடும்பத்தைப் பிரிந்து, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று, குளிர்காலத்தில் -40°C உறை பனிக்குள் வாழ்வது என்பது கடினமானது தான்.

ஆரம்பத்தில், சைபீரிய குலாக் முகாம்களில் குடியேற்றப் பட்ட சிறைக் கைதிகள், காடுகளில் இருந்த மரங்களை தறித்து, சிறு வீடுகளை கட்டிக் கொண்டனர். அவற்றில் குடியிருந்த படியே, சுரங்கம் தோண்டினார்கள், தொழிற்சாலைகளை கட்டினார்கள், வீதிகளை செப்பனிட்டார்கள், புதிய நகரங்களை நிர்மாணித்தார்கள். சிறைக் கைதிகள் கட்டாயத்தின் பேரில் வேலை செய்தாலும், அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப் பட்டது.


சைபீரிய குலாக் முகாம்களில், தண்டனைக் காலம் முடிந்து வீடு திரும்பியவர்கள், கையில் பெருந்தொகைப் பணத்துடன் சென்றார்கள். பிற்காலத்தில், சைபீரியாவில் சுரங்கத் தொழில் செய்து, நல்ல காசு சம்பாதிக்கலாம் என்ற உண்மையை அறிந்து கொண்ட, சாதாரண உழைப்பாளிகள் பலர் புலம்பெயர்ந்து சென்றனர். அன்றைய காலத்தில், ஒரு சைபீரிய சுரங்கத் தொழிலாளியின் மாதாந்த வருமானம், மொஸ்கோ நகரில் மருத்துவராக வேலை செய்த ஒருவரது சம்பளத்தை விட அதிகமாக இருந்தது.

இன்று இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பலர் நான் எழுதியதை வாசித்து விட்டு, ஏளனமாக சிரிக்கலாம். அப்படி சிரிப்பவர்களின் அறியாமையை எண்ணி பரிதாபப் படத் தான் முடியும். நான் சொல்வதை நம்பாதவர்கள், சைபீரியாவுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் மக்களிடம் தகவல்களை கேட்டு அறியலாம். அங்கு போவதற்கு முன்னர் கொஞ்சம் ரஷ்ய மொழி படித்து வைத்துக் கொள்வது நல்லது.

ஆர்கான்கெல்ஸ்க் (Arkhangelsk), நொரில்ஸ்க் (Norilsk) போன்ற சைபீரிய நகரங்களுக்கு ஒரு தடவை விஜயம் செய்து பாருங்கள். நியூ யார்க், பெய்ஜிங் மாதிரி, பல இலட்சம் மக்கட்தொகை கொண்ட, மிகப் பெரிய நவீன நகரங்களாக எம்மை எல்லாம் பிரமிக்க வைக்கும். அந்த இடங்கள், ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்தில் வெறும் காடுகளாக இருந்தன. முதன்முதலாக குலாக் சிறைக் கைதிகள் தான் அங்கே குடியேறினார்கள். அந்தப் பகுதியில் ஏற்பட்ட தொழிற்துறை வளர்ச்சி, அதன் விளைவான நவீன நகரங்களின் நிர்மாணத்திற்கு, அவர்களது உழைப்பு பயன்படுத்தப் பட்டது.

அன்று குலாக் கைதிகளாக இருந்தவர்கள், சோவியத் அரசின் எதிரிகளாக இருந்திருக்கலாம். கம்யூனிச கொள்கைக்கு விரோதிகளாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு அவர்களது பிள்ளைகள் சோவியத் அரசுக்கு விசுவாசமாக உள்ளனர். கம்யூனிச கொள்கையை சிறந்ததாக நம்புகின்றனர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அப்படி நடந்து கொள்ளுமாறு, அவர்கள் கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால், சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் பிறந்த, மூன்றாவது தலைமுறையை சேர்ந்த பிள்ளைகளும், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லையே?

ரஷ்யா, முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றிய பிறகு, நடந்த பொதுத் தேர்தல்களில் எல்லாம், அந்த தொகுதிகளில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு தான் அதிகப் படியான வாக்குகள் கிடைக்கின்றன. அது எப்படி சாத்தியமாகின்றது?  இன்றைக்கும், சைபீரியாவில் உள்ள மாநில சபைகளில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மையான பிரதிநிதிகள், கம்யூனிஸ்ட் அல்லது தீவிர இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் தான். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of the Russian Federation) இன்றைக்கும் ஸ்டாலின் புகழ் பாடும் கட்சி என்பது, எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அந்தப் பிரதேசங்களில், இன்றைக்கு வாழும் இளைய தலைமுறையினர், தமது தந்தை மார், பாட்டன் மாரை வருத்திய, படுகொலை செய்த, ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் எதற்காக  ஆதரிக்க வேண்டும்? நியாயப் படி பார்த்தால், ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் மிகத் தீவிரமாக வெறுக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லவா? ஆனால், யதார்த்தம் நாங்கள் நினைப்பதற்கு மாறாக அல்லவா இருக்கிறது? உண்மையில், நாங்கள் தான், மேற்கத்திய பரப்புரையாளர்களினால் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளோம்.

(தொடரும்)

பிற்குறிப்பு: 
குலாக் முகாம்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்தப் பதிவையும் வாசிக்கவும்: குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?

 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

No comments: