ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், இன்றைக்கும் உலகம் முழுவதும், அதிகளவில் விற்பனையாகும் பண்டங்களாக உள்ளன. சமூகத்தில் மதிப்புக்குரியதாக கருதப்படும், அல்லது அப்படி காட்டிக் கொள்ளும், "கௌரவமான" ஊடகங்கள் கூட அதற்கு விதி விலக்கல்ல.
"ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி", "கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி" என்று, மஞ்சள் பத்திரிகைகளுக்கு நிகராக, பாலியல் கதைகளை வெளியிடும் அளவிற்கு, நமது "மதிப்புக்குரிய" தமிழ் ஊடகங்களும் தரம் தாழ்ந்து போய் விட்டன. "கடாபி என்ற காமக் கொடூரனின் கன்னி வேட்டை" பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளை, ஆவணப் படமாக எடுத்து வெளியிடவுள்ள, BBC தொலைக்காட்சியே இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்றால், நமது தமிழ் ஊடகங்களை நோவதில் பயனில்லை.
பிரெஞ்சு எழுத்தாளரான Annick Cojean எழுதிய நூல் ஒன்றை (Gaddafi's Harem) அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆவணப் படம் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த நூல், கடந்த வருடமே வெளியான போதிலும், அது பலரை சென்றடையவில்லை. தற்போது. "பெரும் மதிப்புக்குரிய" பிரிட்டிஷ் தொலைக்காட்சியான BBC, "சர்வதேச ஜொள்ளுப் பிரியர்கள் பார்த்து மகிழும் வண்ணம்," அதனை ஒரு ஆவணப் படமாக எடுத்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) அதனை ஒரு ஆவணப்படம் என்பதை விட, ஒரு ஆபாசப்படம் என்பதே பொருந்தும்.
Gaddafi's Harem நூலை எழுதிய Annick Cojean, தனக்கு கிடைத்த தகவல்களை "உறுதிப் படுத்துவதற்காக" பிரான்சில் வாழும் ஒருவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் யார் என்றால், கடாபியின் ஆட்சியை கவிழ்க்க போரிட்ட கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர். (இந்த தகவலை சம்பந்தப் பட்ட எழுத்தாளரே, ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருந்தார்.)
Gaddafi's Harem நூலை எழுதிய Annick Cojean, தனக்கு கிடைத்த தகவல்களை "உறுதிப் படுத்துவதற்காக" பிரான்சில் வாழும் ஒருவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் யார் என்றால், கடாபியின் ஆட்சியை கவிழ்க்க போரிட்ட கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர். (இந்த தகவலை சம்பந்தப் பட்ட எழுத்தாளரே, ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருந்தார்.)
Annick Cojean, அதை விட இன்னொரு ஆதாரத்தையும் காட்டுகிறார். ஏற்கனவே, கடாபியினால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான, மேலைத்தேய பெண் பத்திரிகையாளர்களையும் தனக்குத் தெரியும் என்கிறார். லிபியாவில், கடாபியின் சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்த பெண்களுக்குத் தான், தமக்கு நேர்ந்த கொடுமைகளை கூறும் தைரியம் இல்லை. சுதந்திரமான மேற்கு நாடுகளிலும் நிலைமை அப்படியா? எதற்காக, மேலைத்தேய நாடுகளை சேர்ந்த பெண்கள், இதுவரை காலமும், தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல், மௌனமாக இருந்தார்கள்?
பொதுவாக, பிற அரபு நாடுகளில் காண முடியாத பெண்களுக்கான சுதந்திரம், கடாபி ஆட்சி செய்த லிபியாவில் தாராளமாக இருந்தது. மேற்குலக பெண்களுக்கு நிகராக, லிபியப் பெண்களும் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். கடாபியின் புரட்சிக்குப் பின்னர், பெண்கள் உயர்கல்வி கற்று, உயர் பதவி வகிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். பல்கலைக்கழகங்களில் ஆண் மாணவர்களை விட, பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இதையெல்லாம், கடாபிக்கு முந்திய மன்னராட்சிக் காலத்தில், நினைத்துக் கூட பார்க்க முடியாது.
பெண்களை வீட்டுக்கு வெளியே போக விடாத, பழமைவாத கலாச்சாரத்தில் ஊறிய அரபு நாடுகளின் மத்தியில், பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொண்டதன் மூலம், கடாபி ஒரு பெரிய கலாச்சாரப் புரட்சியை உண்டாக்கி இருந்தார். கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்கள் சர்வதேசப் புகழ் பெற்றனர். நிச்சயமாக, இஸ்லாமிய மதவாதிகள், பழைமைவாதிகள் அதையெல்லாம் விரும்பப் போவதில்லை.
தற்போது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், பழமைவாதிகளும் ஆட்சி செய்யும் லிபியாவில், பெண்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப் படுகின்றன. கடாபியின் காலத்தில் பெண்கள் அனுபவித்த சுதந்திரத்தை, உரிமைகளை, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பப் பெற்று விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல, "கிளுகிளுப்பூட்டும், கடாபியின் செக்ஸ் கதைகளை" உலக மக்களுக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம், கடாபியின் புரட்சியை ஆதரிக்கும் மக்களுக்கு வாய்ப் பூட்டு போடப் படுகின்றது.
ஒரு திறமையான வியாபாரி, காலம், நேரம் பார்த்து விற்பனை செய்யத் தெரிந்து வைத்திருப்பான். இன்று லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. லிபியாவின் தெற்குப் பகுதியில், கடாபிக்கு விசுவாசமான படைகள் இன்னமும் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர், சகாராப் பாலைவனத்தை அண்டிய சபா நகரத்தில் உள்ள விமானத் தளத்தை தாக்கி அழித்து, அந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். லிபிய அரசு, கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றது. லிபியாவின் பிற பகுதிகளிலும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. நூற்றுக் கணக்கான ஆயுதக் குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன.
லிபியா ஒரு தோல்வியுற்ற தேசம் அல்லது செயலாற்ற அரசாங்கத்தை கொண்டிருப்பதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளே குறைப் படுகின்றனர். வெளியுலகில், அதைப் பற்றி எல்லாம் யார் கதைக்கிறார்கள்? அதைப் பற்றி யாருக்கு கவலை? ஆனால், கடாபியின் ஆபாசப் படம் வெளியாகிறது என்றவுடன், காய்ந்து போய்க் கிடந்த ஜொள்ளு மன்னர்கள், அந்த தகவலை தமக்குள் கிளுகிளுப்பாக பகிர்ந்து கொள்கின்றனர்.
என்ன இருந்தாலும், ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், எந்தக் காலத்திலும் அமோகமாக விற்பனையாகும். அதன் மூலம், மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பிரயோசமான தகவல்களை இருட்டடிப்பு செய்ய முடியும். பாலியல் வேட்கை நிரம்பிய மக்களை காலம் முழுவதும் முட்டாள்களாக வைத்திருக்க முடியும்.
என்ன இருந்தாலும், ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், எந்தக் காலத்திலும் அமோகமாக விற்பனையாகும். அதன் மூலம், மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பிரயோசமான தகவல்களை இருட்டடிப்பு செய்ய முடியும். பாலியல் வேட்கை நிரம்பிய மக்களை காலம் முழுவதும் முட்டாள்களாக வைத்திருக்க முடியும்.
லிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!
2.லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
3.இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்
No comments:
Post a Comment