Tuesday, March 29, 2011

ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 7)

இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஈழ விடுதலை இயக்கங்கள் உரிமை கோரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தது. மாகாண சபைகள் அமைத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்றும் சம்மதிக்கப்பட்டது. சிங்களப் பகுதி மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் சென்றதை, அன்று சில தமிழ் இனவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முரண்நகையாக, தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவென கொண்டு வரப்பட்ட மாகாண சபை, இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினால் வட- கிழக்கில் செயற்படாமல் முடங்கியது. 

இந்தியாவின் திட்டம் நிறைவேறியிருந்தால், வட-கிழக்கு மாகாணம் தனியான போலிஸ், துணைப் படையுடன் சுயாட்சிப் பிரதேசமாக இருந்திருக்கும். ஆனால் இந்தியா தான் விரும்பிய பொம்மை அரசொன்றை நிறுவ முயன்றது. இதற்கு முதற்படியாக "ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி" என்ற பெயரில் ஆயுதக் குழுவொன்றை அமைத்திருந்தது. இந்த புதிய அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.

முன்பு புலிகளால் ஈழத்தில் இயங்க விடாது தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ ஆகிய அமைப்புகளில் இருந்து விலகிய உறுப்பினர்கள். தமிழக முகாம்களில் அடைந்து கிடந்த அகதிகள். இத்தகையோரை சேர்த்து தான் அந்த இந்திய சார்பு அமைப்பு தோன்றியது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் நகரையொட்டி நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் முகாம்களுக்கு அருகில், ஈஎன்டிஎல்ப் முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் பகிரங்கமாக ஆயுதங்களுடன் காவல் காப்பதை வீதியால் செல்லும் அனைவரும் காணக் கூடியதாக இருந்தது. மாகாண சபையின் தலைமையை, அரசியல் ரீதியாக பலம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். பிடம் ஒப்படைக்கவே விரும்பினர். ஆயுதபாணிகளான ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள், இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.

ஒரு முறை யாழ் நகரில், ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவின் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வழமையாக செல்லும் நபர்களை விட, எண்ணிக்கை அதிகமாக்கிக் காட்ட நினைத்தார்கள் போலும். யாழ் நகர் நோக்கிச் சென்ற பேரூந்து வண்டிகளை கூட்டம் நடை பெற்ற இடத்திற்கு திசை திருப்பி விட்டார்கள். எதிர்பாராத விதமாக அகப்பட்டுக் கொண்ட பயணிகள், கூட்டம் முடிவடைந்த பிறகு தான் தத்தமது இடம் நோக்கி செல்ல முடிந்தது. இந்திய அமைதிப் படையினர், இரவிலும் பகலிலும் வீதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கூடச் செல்வார்கள். முன்பு யாழ் குடாநாட்டில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது அரசியலை விட்டொதுங்கி தமது குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். இந்தியப் படையுடன் ரோந்து செல்லும் ஈபிஆர்எல்ப் ஆயுதபாணிகள், முன்னாள் தோழர்களையும் கண்டு பேசி கூட்டிச் சென்றனர். மீண்டும் அமைப்புடன் இணைந்து கொண்டவர்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியது.

ஈஎன்டிஎல்ப், ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை, புலிகள் தமக்கு வந்துள்ள அச்சுறுத்தலாக கருதினார்கள். ஒப்பந்தத்தை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், நிராயுதபாணிகளான தாங்கள் இலக்கு வைக்கப்படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்களது அச்சத்தை மெய்ப்பிப்பது போல, சில இடங்களில் தெருவில் கண்ட புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரும், சில குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது குறித்து புலிகள் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அந்த முறைப்பாடுகளை இந்திய அமைதிப் படை புறக்கணித்தது. ஒரு நாளிரவு, பரந்தனிலும், கிளிநொச்சியிலும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது, இந்திய இராணுவம் திடீர்த் தாக்குதல் நடத்தியது. சிலர் காயமடைந்த தாக்குதலில், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்தியப் படை தனதருகில் ஒரே வேலியைப் பகிர்ந்து கொண்ட ஈஎன்டிஎல்ப் முகாமை தாக்கியது, அன்றைய சிறந்த நகைச்சுவை. அந்த நாடகம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர், மீண்டும் அதே இடத்தில் ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் காட்சி தந்தனர்.

இராணுவ முகாம்களை தாண்டி செல்லும் வாகனங்களை இந்தியப் படையினர் சோதனையிட்டனர். பயணிகளை இறக்கி விட்டு, ஆயுதங்கள் கடத்தபடுகின்றதா என்பதை ஆராய்ந்தனர். இந்தியப் படை வரும் வரையில் யாழ் குடாநாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருந்த புலிகள், தமது ஆயுதங்களை நிலத்தை தோண்டி ஒளித்து வைத்திருந்தனர். "ஆயுதங்களை ஒப்படைத்தது தவறு" என்று பொருள் படும் சுவரொட்டிகள் பொது மக்களின் பெயரில் புலிகளால் ஓட்டப் பட்டன. புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சென்ற வாகனங்களில் இயந்திரத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக நேரில் கண்ட சிலர் கூறினார்கள். அமைதிப் படை நிலை கொண்டிருந்ததாலும், சமாதானம் நிலவியதாலும் யாரும் ஆயுதங்களை பிரயோகிக்க தயங்கினார்கள். இதே நேரம், இரகசியமாக சில கொலைகள் நடப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.

இலங்கையில் வந்திறங்கிய இந்தியப் படையினர் சிலருக்கு, தாங்கள் எந்த நாட்டில் நிற்கிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த படையினர், தாம் பாகிஸ்தானில் வந்திறங்கியதாக நினைத்தனர். கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்ததும், இந்திய இராணுவ சிப்பாய்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்-முஸ்லிம் கிராமங்களுக்கு இடையிலான முரண்பாட்டில், இந்திய இராணுவம் தமிழ் (இந்துக்கள்) பக்கம் சார்ந்து நின்றது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் இந்திய இராணுவம் மீது அதிருப்தி தோன்றியது.

திருகோணமலையில் இந்திய இராணுவம் வன்முறைக்கு உதவியமை தெளிவாகத் தெரிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தென்னிலங்கையில் "பூசா" முகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த தமிழ்க் கைதிகள் விடுதலையாகி ஊர் திரும்பினார்கள். திருகோணமலையை சேர்ந்த முன்னாள் பூசா கைதிகள், இந்திய இராணுவத்தின் உதவியுடன், திருகோணமலை வாழ் சிங்களவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். பல சிங்கள குடியேற்றங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால், சிங்கள மக்கள் இடம்பெயர்ந்தனர். மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தடுக்கும் நோக்குடன், சிறிலங்கா அரசு அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்தது. இன்று வரை, திருகோணமலை அசம்பாவிதங்கள் சிங்கள மக்களுக்கு மறைக்கப் பட்டே வந்துள்ளன.

சிறிலங்கா அரசு, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளரான புலேந்திரன் மேல் இலக்கு வைத்திருந்தது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலங்களில், திருகோணமலை சிங்களப் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக புலேந்திரன் முக்கிய சந்தேக நபராக கருதப்பட்டார். தற்செயலாக புலிகளின் தலைவர்களான, புலேந்திரன், குமரப்பா சென்ற படகு வட இலங்கைக் கடலில் தடுத்து நிறுத்தப் பட்டது. சிறிலங்கா கடற்படையானது, அவர்களை கைது செய்து, பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றது. மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லவிருந்த வேளை, சயனைட் நஞ்சை உட்கொண்டு மாண்டனர். சிறையிலிருந்த அவர்களை பார்வையிடச் சென்ற அன்டன் பாலசிங்கம் போன்றோரே சயனைட் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப் பட்டது. புலித் தலைவர்கள் கொழும்பு கொண்டு செல்லப் படுவதை, இந்திய இராணுவம் விரும்பவில்லை. இருப்பினும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

அதற்கு முன்னர், வட-கிழக்கு மாகான சபையில் புலிகளின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்திய இராணுவம் முன் வந்தது. திரை மறைவில் பேரம் பேசல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் எதுவுமே நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை. புலிகளின் கோரிக்கைகளை முன்வைத்து, அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அமைதிப் படை, திலீபனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டியது. இறுதியாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மரணமடைந்த திலீபனின் பூதவுடல், யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திலீபனின் சாத்வீக போராட்டத்தினால் கவரப்பட்ட பொது மக்கள், பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஹிம்சா வழிப் போராட்டத்தினால் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் திலீபனுக்கு பிறகு யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. புலிகளின் தலைமைப் பீடம் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் கைது நடவடிக்கையால், போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக புலிகள் அறிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் வீதியில் ரோந்து சென்ற படையினர் மீது நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்திய, இலங்கைப் படையினர் அடுத்தடுத்து சென்ற போதிலும்; சிங்களப் படையினர் சென்ற பார ஊர்தி கண்ணி வெடிக்கு இலக்காகியது. புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தி விட்டதை புரிந்து கொண்ட இந்திய இராணுவம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அக்டோபர் மாதம் வழமையான ரோந்துப் பணிகளை முடித்துக் கொண்டு, யாழ் கோட்டை முகாமுக்கு திரும்பிய இந்தியப் படையினரின் வாகனம் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய புலி உறுப்பினர்கள், யாழ் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

யாழ் கோட்டை மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் இருந்த இராணுவ முகாம்கள் யாவும் முற்றுகையிடப் பட்டன. எதிர்பாராத முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட இந்திய இராணுவம், கண்மூடித் தனமான ஷெல் தாக்குதல் நடத்தியது. முகாம்களுக்கு அருகில் இருந்த புலிகளின் காவலரண்கள் மட்டுமல்லாது, குடியிருப்புகளும் ஷெல் வீச்சுக்கு இலக்காகின. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இரண்டு மாத சமாதானத்தின் பின்னர், மீண்டும் யுத்தம் தொடங்கி விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இம்முறை, இந்தியப் படையினரின் தாக்குதல்கள், சிறிலங்காப் படையினரை விட மிகவும் ஆக்ரோஷமாக அமைந்ததிருந்தது. யாழ் குடாநாட்டு மக்கள், மாபெரும் மனிதப் பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:






3 comments:

Mohamed Faaique said...

என் குடும்பத்தவரும் திருகோணமலையில் இருக்கும் போது, இந்தியப் படையால் சுட்டுக் கொள்ளப் பட்டார். எதற்காக சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்? அவர்களுக்குத்தான் வெளிச்சம்.....

sivakumar said...

அதிகாரப்பரவலாக்கல் சிங்களப்பகுதிகளுக்கும் சென்றது என்பது புரியவில்லை. சிங்களர்களும் சுயாட்சி கோரினார்களா ? ஏன் அதை தமிழினவாதிகள் ஜீரணிக்கவில்லை ?

Kalaiyarasan said...

தமிழர்களுக்கென தனியான அதிகாரப் பரவலாக்கல் செய்வதால், சிங்கள மக்களை பகைக்க வேண்டி வரும் என சிறிலங்கா அரசு நினைத்தது. தமிழர்களுக்கு வழங்கப்படும் தனியான சுயாட்சி வருங்காலத்தில் ஈழம் அமைக்க உதவிடும் என்பது சிங்கள மக்களின் அச்சம். அதனால் மாகாண சபைத் திட்டத்தை நாடு முழுவதும் பொதுவாக்கியது. ஆயினும் இந்திய படைகளின் உதவி, ஒத்துழைப்பு காரணமாக வட- கிழக்கு மாகாணத்திற்கு இரகசியமாக மேலதிக உரிமைகள் கிடைத்தன.

தமிழினவாதிகள் எப்போதும் யதார்த்தத்தை உணர மறுப்பவர்கள். தமிழர்கள் மட்டுமே உரிமைகளுக்காக போராடினார்கள், சிங்கள் மக்கள் சும்மா இருந்து விட்டு அனுபவிக்கிறார்கள் என்பது அவர்கள் தரப்பு வாதம். இவை பேசுவதற்கு நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறை அரசியல் வேறாக உள்ளது.