Wednesday, December 23, 2009

போர்க்களமான புனித பூமி
"இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே?"


"யாருக்குத் தெரியும்? அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது கண்டு வெறுத்துப் போய் சொர்க்கத்திற்கே திரும்பிப் போயிருப்பார்."


இந்த நகைச்சுவை துணுக்கு, மும்மதத்தவராலும் உரிமை கோரப்படும் புனித பூமியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது.இன்று உலகில் அனைவரது பார்வையும் மத்திய கிழக்கு பக்கம் திரும்பியுள்ளது. "மத்திய கிழக்கு" என்ற சொற்பதம் கூட இஸ்ரேலிய மையவாத அரசியலில் இருந்து பிறந்தது தான். பைபிள் காலத்தில், இஸ்ரேல் உலகின் மத்தியில் அமைந்திருப்பதாக நம்பப்பட்டது. அதிலிருந்து இஸ்ரேலின் கிழக்குப் பக்கம் "மத்திய கிழக்கு" என அழைக்கப்பட்டது. அவ்வாறு தான் இஸ்ரேலிற்கு மேற்கே இருப்பதால் ஐரோப்பா "மேற்கத்திய நாடுகள்" என அழைக்கப்பட்டது.


பைபிளில் ஆதியாகமம் கூறுவதன்படி நாம் வாழும் பூமி, கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆண்டவரால் படைக்கப்பட்டதாக யூத மத அடிப்படைவாதிகள் நம்புகின்றனர். ஆனால் அதற்கு மாறாக, கி.மு. 9000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலஸ்தீனத்தில் மனிதர் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் பல பண்டைக்கால நாகரீகங்களின் விளைநிலங்களாக இருந்தன. பைபிள், மற்றும் வரலாற்றுச் சான்றுகளில் இருந்து அங்கே பல்லின மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பினீசியர்கள், பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள் ஆகிய இனத்தவர்கள், கி.மு. 3000 ஆண்டுகளிலேயே நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தனர். இவர்களிடம் இருந்து தான், கிரேக்கர்கள் எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். சிறந்த கடலோடிகளான பினீசியர்கள், இன்றைய துனீசியா, மயோர்க்கா (ஸ்பெயின்) ஆகிய இடங்களிலும் குடியிருப்புகளை அமைத்திருந்தனர். இவர்களின் கடவுளர் "எல்" (EL), பா அல் (Baal ) பற்றி, வேண்டுமென்றே எதிர்மறையான விபரங்கள் பைபிளில் காணப்படுகின்றன.


பினீசிய, கானானிய வழித்தோன்றல்கள், இன்று நாம் காணும் லெபனானியர், அல்லது பாலஸ்தீனியர். ரோமர்களும், கிரேக்கர்களும் இவர்களை பிலிஸ்தீனியர் என்ற பொதுப் பெயரால் அழைத்தனர். இவர்கள் பிற்காலத்தில் அரேபியாவில் இருந்து வந்த முஸ்லிம் படையெடுப்புகளால், மொழியை, மதத்தை மறந்தனர். (அதற்கு முன்னர் கிரேக்கர்கள் அவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வைத்திருந்தனர்.)

கி.மு. 1225 ல், எகிப்தில் இருந்து விடுதலையாகி வந்த இஸ்ரேலிய பன்னிரண்டு குடிகளை மோசேஸ் சினாய் பாலைவனம் வரை வழிநடாத்தி வந்தார். ஆனால் அவரால் வாக்குக் கொடுத்த நிலத்தை காண்பிக்க முடியவில்லை. மோசெசின் மறைவுக்குப் பின்னர், ஆண்டவரின் உத்தரவுப்படி (?) கானான் நாட்டு மக்களை இனப்படுகொலை செய்து, அவர்களது நிலங்களை அபகரித்து, யூத குடியிருப்புகளை நிறுவிக் கொண்டனர். இவ்வாறு தான் "யிஸ்ரா எல்" (Yisra 'el ) உருவானது. (பைபிளின் பழைய ஏற்பாடு கூறும் கதை இது.) சுருங்கக் கூறின், இனவழிப்பு செய்யப்பட்ட கானான் மக்களின் சமாதிகளின் மேலே தான் இஸ்ரேல் என்ற தேசம் கட்டப்பட்டது.


பைபிளானது இஸ்ரேலியரின் வரலாற்றை, அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் நூல் என்பதால், கானானியர் பற்றி அவ்வப்போது சம்பந்தப்படும் பொது மட்டும் குறிப்பிடுகின்றது. பைபிளில் இருந்தும், புதைபொருள் ஆராய்ச்சிகளில் இருந்தும் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்; கானானியர் நகரங்களில் வாழ்ந்த காலங்களில், இஸ்ரேலியர்கள் நாடோடிகளாக இருந்துள்ளனர். கானானிய நாகரீகம் அழிந்த பின்னர் தான், புதிய இஸ்ரேலிய நாகரிகம் தோன்றியது. விக்கிர வழிபாட்டை மறுத்த இஸ்ரேலியர்கள் தமது கடவுளான "ஜாஹ்வே" க்கு "சினஹோக்" என்ற யூத ஆலயங்களை கட்டினார்கள். கடவுள் சிலை வைத்து கோயில் கட்டுவது நாடோடி கலாச்சாரத்திற்கு மாறானது. அனேகமாக இஸ்ரேலியர், கானானிய நாகரீகத்தை தமதாக்கிக் கொண்டனர். ஆரம்பக் காலங்களில் சில யூதக் குடிகள் கானானியரின் கடவுளரையும் வழிபட்டு வந்துள்ளனர். இவர்கள் "கடவுட் சொற்கேளாதோராக" தண்டிக்கப் பட்டனர். அதாவது எஞ்சிய கானானிய குடிமக்களையும் யூதர்களாக மாற்றும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

சவுல் மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட சின்னஞ்சிறிய இஸ்ரேல், டேவிட் மன்னன் காலத்தில் அகண்ட இஸ்ரேலாகியது. இது ஹீபுரு மொழி பேசுவோரின் இராச்சியமாக வரலாற்றில் அறியப்பட்டது. டேவிட் அரசனின் ஆட்சியின் பின்னர் இஸ்ரேல் சிதைவடைந்தது. அதிகாரப் போட்டியால் இரண்டாகப் பிரிந்து, வடக்கு பகுதி இஸ்ரேல் என்றும், தெற்குப் பகுதி யூதேயா என்றும் அழைக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தான் யூதர்கள் என்ற இனம் தெளிவாக அடையாளம் காணப்பட்டது. டேவிட் காலத்திற்கு முன்னர் ஹீபுரு பேசப்பட்டதாக எந்த சான்றும் இல்லை. அதற்கு முன்னர் அரமிய மொழி வழக்கில் இருந்தது. இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியும் அதுவே. ஹீபுரு, அரபு ஆகியவற்றின் மூல மொழியாக கருதப்படக் கூடிய அரமிய மொழி இன்று அழிந்து வருகின்றது.

இன்றைய நவீன யூதர்களின் பாரம்பரிய பூமி கொள்கை, பல யூத அகழ்வாராய்ச்சியாளராலேயே நவீன இஸ்ரேலில் நிலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள், யூதர்களினுடையவை எனச் சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை. பைபிள் கூறுவதன் படி, ஆசிரியர்கள் இஸ்ரேலை பலமுறை ஆக்கிரமித்தனர். அதற்குப் பின்னர் பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், எகிப்தியர்கள் என்று பல சாம்ராஜ்யங்களின் பகுதியாக இருந்தது. இதனால் ஏகாதிபத்திய ஆட்சின் கீழ் வாழ்ந்த யூதர்கள் பல நாடுகளுக்கும் பரவினார்கள். இன்று பல இந்தியர்கள் அமெரிக்கா சென்று குடியேறுவதை போல, அன்று பல யூதர்கள் பாபிலோன் சென்று குடியேறினார்கள். பைபிள் இதனை "அடிமைகளாக பிடித்துச் செல்லப்பட்டதாக" கூறி சுயபச்சாதாபம் தேடுகின்றது.

ரோமர்கள் காலத்தில் வாழ்ந்த இயேசு(கிறிஸ்து என்பது கிரேக்க பெயர்), யூத குலத்தில் பிறந்த மதச் சீர்திருத்தவாதி. பைபிளின் புதிய ஏற்பாட்டின் படி, யூதர்கள் இயேசுவின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் மரணத்தின் பின்னர் வந்த கிறிஸ்தவர்கள் யூதர் மேல் வெறுப்புக் கொண்டனர். ஐரோப்பாவில் கால் பதித்த கிறிஸ்தவர்கள் யூத எதிர்ப்பு (Anti Semitism ) கருத்துகளை விதைத்தனர். ஐரோப்பாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த யூத விரோத கலவரங்கள், ஹிட்லர் காலத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

19 ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் தேசிய அரசுகள் தோன்றின. ஐரோப்பாவில் புறக்கணிக்கப்பட்ட சமுதாயமாக வாழ்ந்த, (ஹீபுரு மொழி பேசாத) யூதர்களும் தேசிய அரசுக் கொள்கையால் கவரப்பட்டனர். யூதருக்கான தாயகத்தை குறிக்கோளாக கொண்ட சியோனிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களது தத்துவாசிரியரான தியோடர் ஹெர்சல் எழுதிய Der Judenstaat (யூத தேசம்) தேசியவாதத்தின் அடிப்படை நூலாகியது. இந்த நவீன யூத தேசியவாதிகள் ஆரம்பத்தில் இருந்து ஒரே தன்மையுடையோராய் காணப்படவில்லை. ஹீபுரு மொழி யாருமே பேசாத, இறந்த மொழியாக இருந்தது. மத்திய அல்லது கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மன் கலந்த "யிட்டிஷ்" மொழி பேசினார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர்கள் என்பதால் சோஷலிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். அதற்கு மாறாக மேற்கைரோப்பா, அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்கள் முதலாளித்துவவாதிகளாக இருந்தனர். அவர்களில் பலர் பெரும் செல்வந்தர்கள், அல்லது வியாபாரிகள். அதனால் சியோனிச இயக்கத்திற்கு அவர்கள் நிதி வழங்கினார்கள்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில், பல யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறினார்கள். அவர்களின் "தாயகமான" இஸ்ரேல் யாருமே வசிக்காத பாலைவனமாக இருக்கவில்லை. அரபு பேசும் மக்களால் நிறைந்திருந்தது. யூத குடியேறிகள் அரபு நிலப்பிரபுக்களிடம் நிலம் வாங்கி குடியிருப்புகளை அமைத்தனர். அந்த நிலங்களில் கம்யூனிச பொருளாதார அடிப்படையில் அமைந்த கூட்டுறவுப் பண்ணைகளை (Kibbutz ) அமைத்தனர். அந்நேரம் அயலில் இருந்த பாலஸ்தீன கிராமங்களுடன் நல்லுறவு நிலவியது. பாலஸ்தீனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த அரபு மொழி பேசும் யூதர்களும் இருந்தனர்.

முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த துருக்கியரிடம் இருந்து பாலஸ்தீனம் ஆங்கிலேயரிடம் கைமாறியது. பிரிட்டிஷ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இருந்த பாலஸ்தீனத்திலும் விடுதலைப்போர் தொடங்கியது. ஆரம்பத்தில் அரபுக்களும், யூதர்களும் தோளோடு தோள் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள். தமது ஆட்சியை எதிர்த்தவர்களை பிரிட்டிஷார் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தினார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத் தலைவரான பென்கூரியன், பின்னாளில் சுதந்திர இஸ்ரேலின் முதல் பிரதமரானார்.


(தொடரும்)பகுதி 2: தனி நாடு கண்ட யூதரும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்


குறிப்பு:


உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.


8 comments:

தமிழ் உதயம் said...

புனிதபூமி மேலும், மேலும் ரத்தக்களறிக்கு தான் உள்ளாகுமே ஒழிய, சமரசத்திற்கான வாய்ப்பு மிக குறைவே. இரண்டாயிரம் வருஷங்களாய் நாடற்றவர்களாய் திரிந்த யூதர்கள், மீண்டும் அந்த நிலையை அடையாமல் இருக்க வேண்டுமெனில், நேர்மையான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மேற்குலகு எவ்வளவு நாளைக்கு இஸ்ரேலுக்கு சார்பாக இயங்க முடியும். இன்று நாம் காணும் உலகம் எத்தனை அழிவுகளை பார்த்து இருக்கும். மனித அழிவை, பேரரசுகளின் அழிவை, மதங்களின் அழிவை மற்றும் இயற்கை அழிவை. எல்லாவற்றையும் பார்த்து கொண்டு விட்டு, நான் நிரந்தரமானவன், என் தேசம் நிரந்தரமானது, என் மதம் அழியாதது என்றெல்லாம் பேசுபவர்களை கண்டால், வேடிக்கையாய் உள்ளது. அழிவைத் தவிர இந்த உலகத்தில் அழியாதது எது.

தர்ஷன் said...

தகவல் களஞ்சியமாய் இருக்கிறீர்களே
உங்களை இன்னுமொரு பா. ராகவன் எனச் சொல்லலாமா

Kalaiyarasan said...

நன்றி, தமிழுதயம், தர்ஷன்.

நானும் பா. ராகவனின் எழுத்துகளை விரும்பி வாசித்திருக்கிறேன், தர்ஷன், பா.ராகவன் எழுதிய பல விஷயங்களை நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். நான் பார்க்கும் கோணம், கொடுக்கும் தகவல்கள் இதுவரை வெகுஜன ஊடகங்கள் எதுவும் கூறாதவையாக இருக்கும்.

ராஜேஷ் said...

மிக்க நன்றி வித்யாசமான பார்வை உண்மையும் இதுவே

பூச்சரம் said...

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

www.poosaram.tk

Siddharthan said...

hi
i felt this real writing
write more
everybody like this kind of writings.
mainly me.

- இரவீ - said...

Expecting more like this...

Anonymous said...

//இவர்களின் கடவுளர் "எல்" (EL), பா அல் (Baal ) பற்றி, வேண்டுமென்றே எதிர்மறையான விபரங்கள் பைபிளில் காணப்படுகின்றன.//

எப்படி உங்களால் இவ்வளவு திட்டவட்டமாகக் கூற முடியும்.


//இனவழிப்பு செய்யப்பட்ட கானான் மக்களின் சமாதிகளின் மேலே தான் இஸ்ரேல் என்ற தேசம் கட்டப்பட்டது.//

கொலையே செய்யப்படாத ஓர் தேசத்தை காட்டுங்கள்? இஸ்ரவேல் மட்டுந்தான் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?


//இஸ்ரேலியர்கள் தமது கடவுளான "ஜாஹ்வே" க்கு "சினஹோக்" என்ற யூத ஆலயங்களை கட்டினார்கள்.//

சினஹோக் என்பது ஆலயம் அல்ல. யூதர்களுக்கு ஜெருசலேம் மட்டும்தான் ஆலயம்.


//டேவிட் காலத்திற்கு முன்னர் ஹீபுரு பேசப்பட்டதாக எந்த சான்றும் இல்லை.//

இஸ்ரேலியர்கள் டேவிட்டுக்கு முன் பேசியது என்ன? அதுதான் ஹீபுரு. விடய விளக்கம் இல்லாமல் எழுத வேண்டாம்.


//ஹீபுரு, அரபு ஆகியவற்றின் மூல மொழியாக கருதப்படக் கூடிய அரமிய மொழி இன்று அழிந்து வருகின்றது.//

ஹீபுரு கானானைட் பிரிவைச் சார்ந்தது. அதன் மூலம் செமிட்டிக் (தமிழுக்கு பிராமி போல) . செமிட்டிகில் இருந்துதான் ஹீபுரு, அரபு, அரமிய மொழி போன்ற மொழிகள் உருவாகின.


// இன்றைய நவீன யூதர்களின் பாரம்பரிய பூமி கொள்கை, பல யூத அகழ்வாராய்ச்சியாளராலேயே நவீன இஸ்ரேலில் நிலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள், யூதர்களினுடையவை எனச் சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை.//

எந்த அடிப்படையில்?


//பைபிள் இதனை "அடிமைகளாக பிடித்துச் செல்லப்பட்டதாக" கூறி சுயபச்சாதாபம் தேடுகின்றது.//

ஆதாரம்? உங்கள் கற்பனைகள் எல்லாம் நிஜமாகாது.