Sunday, December 13, 2009

இந்தோனேசிய சதியில் டச்சு அரச குடும்பத்தின் பங்கு

எந்தவொரு காலனியாதிக்க நாடும், தனது காலனியின் சுதந்திரத்தின் பின்னரும், சொந்த நலன்களை நிலை நிறுத்திக் கொள்ள தயங்கியதில்லை. செல்வம் கொழிக்கும் இந்தோனேசியாவை நெதர்லாந்து காலனியாக வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரால் சில காலம் ஆக்கிரமிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் இந்தோனேசியாவிற்கு சுதந்திரம் கொடுக்க நெதர்லாந்து முன்வரவில்லை. நான்காண்டு காலம் நீடித்த சுதந்திரத்திற்கான போர், டச்சுப் படையினரின் இனப்படுகொலைகள், போன்ற கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் தான் சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுகார்னோ தலைமையில் சுதந்திர இந்தோனேசியக் குடியரசு மலர்ந்தது. சுகார்னோவின் தேசியமயமாக்கல் கொள்கையினால், ஏகபோக உரிமை கொண்டாடிய நெதர்லாந்து கம்பனிகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. ஒரு பணக்கார காலனி தனது கையை விட்டுப் போவதை, நெதர்லாந்து இராணியின் கணவரான பெர்னார்ட் பிரபுவால் பொறுக்க முடியவில்லை. இந்தோனேசிய மக்களை இனவழிப்பு செய்த டச்சு ஜெனரல்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இதன் படி இரகசியமாக ஆயுதங்களைக் கடத்துவதற்கும், சதிப்புரட்சி மூலம் சுகார்னோவை ஆட்சியில் இருந்து அகற்ற திட்டம் தீட்டப்பட்டது.

டச்சு அரச குடும்பத்தினரின் கிரிமினல் சதிவேலைகள் பற்றிய தகவல்கள், இதுவரை திறக்கப்படாத ஆவணம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அரச ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு பத்திரிகையாளரும்(Jort Kelder), சரித்திரவியலாளரும் (Harry Veenendaal) இது சம்பந்தமாக நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அண்மையில் இந்த நூலின் சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் குறித்து நெதர்லாந்து ஊடகங்கள் பரபரப்பூட்டின. (செய்தி வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) நெதர்லாந்து அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்பு காரணமாக, இராணி உலகின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக திகழ்கின்றார். இந்தோனேசியா போன்ற காலனிகளில் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததனால் பணக்காரர் ஆனவர்கள். இலகுவில் தமது வருமானத்தை இழக்க முன்வருவார்களா?


இந்நாள் நெதர்லாந்து இராணி Beatrix சின் தந்தையும், முன்னாள் இராணி Juliana வின் மறைந்த கணவருமான Bernhard சர்ச்சைக்குள் மாட்டியது இதுவே முதல் தடவையல்ல. ஏற்கனவே அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான Lockheed , ஒரு மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கிய விவகாரம் வெளிவந்து, பெருத்த அவமானத்தை தேடித் தந்தது. ஜெர்மன் பிரபுக் குடும்பத்தை சேர்ந்த பெர்னார்ட், நாஸிஸ அரசுடனும் நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு:
Historians quarrel about prince's role in Indonesia coup

2 comments:

Unknown said...

தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!

உண்மைத்தமிழன் said...

புதிய, அவசியமான தகவலுக்கு மிக்க நன்றி கலை..!