Thursday, December 03, 2009

சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்

உலகின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம் ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவில் குவிந்து கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மிகப் புனிதமான இரண்டு மசூதிகளின் பாதுகாவலன் மன்னன் அப்துல்லாவிற்கு வேறு வேலை இருந்தது. சவூதி அரேபியாவின் கொல்லைப்புற நாடான யேமன் முஸ்லிம்களை கொல்லும் கொடிய யுத்தத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். முதலில் சவூதி விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் யேமன் வான் பரப்பினுள் நுழைந்து குண்டு வீசின. பின்னர் சவூதி இராணுவம் எல்லை தாண்டிச் சென்று கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினார்கள்.

கிராமங்கள் மீது கடும் சேதம் விளைவிக்கும் வெள்ளை பொஸ்பரஸ் துகள்கள் தூவப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சர்வதேச மன்னிப்புச் சபை இது குறித்து சவூதி அரசிடம் விளக்கம் கோரியது. சவூதியின் ஆக்கிரமிப்பு காரணமாக மட்டும், குறைந்தது ஐம்பதினாயிரம் யேமன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே நான்காண்டுகளாக நடக்கும் யுத்தத்தினால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அகதிமுகாம்களுக்குள் முடங்கிய குழந்தைகள் போஷாக்கின்மையால் மடிந்து கொண்டிருக்கின்றன.

உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான யேமன் கடந்த நான்காண்டுகளாக வெல்ல முடியாத போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. சவூதி அரேபியா, ஈரான் போன்ற அந்நிய சக்திகள் யேமன் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரை இது ஒரு பதிலிப் போர். நேருக்கு நேர் சந்திக்க தயங்கும் பகைவர்களான சவூதியும், ஈரானும் தமது பதிலிகள் மூலம் போரிடுகின்றன. யேமன் அரசு, ஹூதி போராளிகள், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள், இவர்கள் மத்தியில் சிக்கி திணறும் மக்கள் செத்து மடிகிறார்கள். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் Unicef, மக்கள் சில இடங்களில் பட்டினியால் வாடுவதாக தெரிவிக்கின்றது. யேமன் முழுவதும் தினசரி 250 குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி மரிக்கின்றன. இந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. இன்றுவரை ஐ.நா. சபை, சவூதி படையெடுப்பை கண்டிக்க அவசர கூட்டம் கூடவில்லை. உலகமே பாராமுகமாக இருக்கும் வேளை, யேமனில் மனித அவலம் அரங்கேறுகின்றது.

சவூதி இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு யேமன் அரசு அனுமதியளித்தது. தன்னால் அடக்க முடியாத "ஹூதி" கிளர்ச்சியாளர்களை அடக்க சவூதி படைகளை வலிந்து அழைத்தது. யேமனில் இரு தசாப்தங்களுக்கு மேலாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே க்கு இது மூன்றாவது போர்முனை. தொன்னூறுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்களின் நிராசையான தென் யேமன் பிரிவினைப் போரை, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் துணை கொண்டு அடக்கினார். 9/11 க்கு பின்னர் அமெரிக்கா நெறிப்படுத்திய பயங்கரவாத எதிர்ப்பு போர் யேமனையும் விட்டு வைக்கவில்லை. அல் கைதா தலைவர் பின் லாடனின் தாயகப் பூமியல்லவா? அல் கைதாவை ஒடுக்கி விட்டதாக யேமன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய சவூதி படையெடுப்பு, அல் கைதா பூதம் அடைபட்டிருந்த புட்டியை திறந்து விடுமோ, என்ற அச்சம் தோன்றியுள்ளது. மேற்குறிப்பிட்ட யுத்தங்களிலும் சவூதி அரேபியாவின் பங்களிப்பு இருந்துள்ளது. ஆனால் திரை மறைவில். யேமன் அரசுக்கு தேவையான ஆயுதங்களும், ஆலோசனைகளும் தாராளமாக வழங்கப்பட்டன.

2004 ம் ஆண்டு, வட யேமனில் புதிய போர்முனை தோன்றியது. வட-மேற்கு பிரதேசத்தை சேர்ந்த சையது மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். மேலெழுந்தவாரியாக யேமன் அரபு மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் வாழும் நாடு போல தோற்றமளிக்கிறது. குலம் அல்லது சாதி ரீதியாக, மதவாரியாக பிரிந்துள்ள சமூகம் வெளி உலகின் கண்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக வட-மேற்கு Sadah மாகாணத்தை சேர்ந்த சையது மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் யேமனில், ஷியா இஸ்லாமிய மதம் அவர்களின் பண்டைய இனத்தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கிறது. இவர்கள் நீண்ட காலமாக யேமனில் ஆட்சி புரியும் வகுப்பினராக இருந்துள்ளனர். சையது ஷியா மதத் தலைவரின் அரசியல் சர்வாதிகாரம், 1960 ல் ஏற்பட்ட தேசியவாதிகளின் சதிப்புரட்சியால் முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து பெரிதும் பின்தங்கி விட்ட சமூகமாகி விட்ட சையிது மக்கள் தற்போது கிளர்ந்து எழுந்துள்ளனர்.

சையிது சமூகத்தில் இருந்து தோன்றிய "ஹூதி" இயக்க உறுப்பினர்கள் குறைந்தது 5000 பேர் அளவில் இருக்கலாம். கெரில்லாக்களுக்கு ஏற்ற மறைவிடமாக விளங்கக் கூடிய மலைகளும், குகைகளும், சுரங்கப்பாதைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. முன்னாள் படைவீரர்கள் பலர் ஹூதி போராளிகளாக மாறியுள்ளனர். யேமன் இராணுவத்தில் கணிசமான சையிது சிப்பாய்கள் கடமையாற்றுவது குறிப்பிடத் தக்கது. சையிது படை வீரர்கள் தமது மக்களின் குடியிருப்புகள் மீது குண்டு போட தயங்கியதும், சவூதி இராணுவ தலையீட்டுக்கு ஒரு காரணம். சமீபத்தில் அமெரிக்க ஆயுத சந்தையில் வாங்கிய F-15 , Tornado ஜெட் விமானங்கள் போராளிகளின் நிலைகள் மீது குண்டு போடுகின்றன. தமது எல்லைக் காவல் படைவீரர் ஹூதி போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே தானும் போரில் குதித்ததாக சவூதி அரேபியா கூறி வருகின்றது. யேமன் இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம்மை எல்லை கடந்து அத்துமீறிய சவூதி விமானங்கள் தாக்குவதாக போராளிகள் கூறுகின்றனர். யேமனுக்குள் ஊடுருவிய சவூதி யுத்த தாங்கி ஒன்றை கைப்பற்றியதாக காட்டும் வீடியோ ஒன்றையும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பியிருந்தனர்.

இதற்கிடையே ஹூதி இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அனுப்பபட்ட ஈரானிய கப்பல் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக யேமன் அரசு அறிவித்தது. இது பற்றிய மேலதிக தகவல் எதுவும் பின்னர் வராததால், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஷியா முஸ்லிம்களின் இராஜ்யமான ஈரான் ஹூதி போராளிகளுக்கு உதவி வருகின்றது என்ற அச்சம் யேமன், சவூதி அரச மட்டத்தில் நிலவுகின்றது. தென் லெபனானில் ஷியா பிரிவை சேர்ந்த ஹிஸ்புல்லா தனக்கென கட்டுப்பாட்டு பிரதேசத்தைக் கொண்டுள்ளது. அது போல, யேமனுக்கும், சவூதி அரேபியாவுக்கும் நடுவில் இன்னொரு ஷியா கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாக்கி வருவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அதே நேரம், இரு நாடுகளுக்கும் நடுவில் பத்து கிலோமீட்டருக்கு சூனியப் பிரதேசம் அமைக்க இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

ஹூதி போராளிகள் தனது நாட்டினுள் ஊடுருவியதாக இன்னொரு காரணத்தை சவூதி அரசு எடுத்து விட்டது. இந்த அறிவிப்பானது சவூதி அரேபியா ஏன் யேமன் பிரச்சினையில் தலையிட்டது என மறைமுகமாக சுட்டி நிற்கின்றது. யேமன் எல்லையோர சவூதி அரேபியாவில் சையிது, மற்றும் இஸ்மாயில் சமூக மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஷியா மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, தோற்றத்தில் யேமனியர்கள் போன்றிருப்பர். நிச்சயமாக அவர்களின் மனதின் ஓரத்தில் ஹூதி போராளிகள் மீது அனுதாபம் இருக்கும். இதனால் சவூதி அரசு இந்தப் பிரிவினரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றது. அந்தப் பிரதேசம் ஏற்கனவே ஒரு அடக்கப்பட்ட கிளர்ச்சியை கண்டுள்ளது. (முன்பொரு தடவை சவூதி படையினர் நிகழ்த்திய ஷியா இனப்படுகொலை இதுவரை எந்த ஊடகத்திலும் வரவில்லை.) யேமனிய சகோதர இயக்க உதவியுடன் மீண்டும் தனக்கெதிரான கிளர்ச்சி தோன்றும் என சவூதி அரேபியா அஞ்சுகின்றது.

நான்காண்டுகளாக போரிட்டும் வெல்ல முடியாத யேமன் இராணுவத்தின் கையாலாகத்தனம். இந்த இடைவெளியில் நுழைந்துள்ள ஈரான். இதனால் பலம்பெற்ற ஹூதி போராளிகள் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அதனை முளையிலேயே கிள்ளியெறிய சவூதி அரேபியா விரும்புகின்றது. அல் கைதா, (அல் கைதா என்பது வெளியுலகம் அறிந்த பொதுப் பெயர்) இப்போது இந்தப் போரை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அல் கைதா சுன்னி முஸ்லிம் பிரிவினரின் குழுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்று எம் முன்னால் எழுந்துள்ள கேள்வி. ஹூதி இயக்கத்தை அழிப்பதில் சவூதி இராணுவம் வெற்றி பெறுமா? சவூதி இராணுவ நடவடிக்கை தோல்வியுற்றால், அல் கைதா போன்ற பிற ஆயுதக் குழுக்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அது மீண்டும் சவூதி அரேபியாவினுள் ஆயுதப் போராட்டத்தை தூண்டி விடும். சவூதி அரசு தான் விதைத்த வினைகளை அறுவடை செய்து கொண்டு வீட்டிற்கு வரும் காலம் தொலைவில் இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யேமன் பிரச்சினையை ஆழமாக அறிந்து கொள்ள இந்தப் பதிவையும் வாசிக்கவும்:
யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்

5 comments:

தமிழ் உதயம் said...

ஏற்றத்தாழ்வுகளை நீக்காத சமூகமாக எந்த சமூகமும் இல்லை. இது வரை அதிகம் அறியாத தகவல்களாக இந்த இடுகை இருந்தது. எல்லா அரசுகளுமே போராளிகளை ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது. எல்லா ஆட்சியாளர்களுக்கும் உள்ள சிந்தனை... தங்களை எப்படி காப்பாற்றி கொள்வது குறித்து தான். குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் இறப்பது குறித்து அவர்களுக்கு என்ன கவலை. மாற்று மதத்தவர்கள் கூட முஸ்லிம்களின் புனித மாதங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள். ஆனால் சவூதி அரசருக்கு அந்த சிந்தனை இல்லை போலும். உலகம் ஒரே மதத்தின் கிழ் வந்தால் கூட யுத்தங்களும், யுத்த மரணங்களும் நிற்க போவதில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக செயல் படும் மேற்குலக நாடுகளை குற்றம் சாட்டும் இஸ்லாமிய அரசுகள், தங்களுக்கு இடையே நடக்கும் மனித அழிவுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா.

Kalaiyarasan said...

சளைக்காமல் பின்னூட்டமிடும் தமிழுதயத்திற்கு நன்றி. உங்கள் பதில்கள் மற்றவர்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

Unknown said...

நல்ல பதிவு தோழர்!
அருமையான, சிந்திக்கவேண்டிய விடயங்களை உங்களுக்கே உரிய நடையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்...
தோழமையுடன் இ.அரவிந்த்.

கிட்டுவின் மருமோ(மக)ன் said...

இங்கு நடக்கும் போர் சவுதி அரசுக்காக அமெரிக்காதான் நடத்துகிறது .

சவுதி படையுடன் நடந்தால் ஒருமாதத்தில் சவுதி தோற்க்கடிக்கடிக்கபடும்,என்பதை சவுதியர்களே அறிவர் .
சவுதி படையில் "பது" என்றழைக்கப்படும் கறுப்பின பூர்விக குடிகளைப்போல் உள்ள அமெரிக்க கறுப்பின அதிகாரிகளால் நெறிபடுத்த படுகிறது .இது சவுதி பெயரால் நடத்தப்படும் வல்லதிக்கபோர் .

நிற்க :பாலையில் பறங்கியர் நிரந்தரமாக வெல்ல முடியாது .என்பதற்கு இது இரெண்டாவது சான்று .
ஆங்காங்கே கொரில்லா போராளிகள் நிகழ்த்தும் தாக்குதலில் சவுதி வெலவெலத்து நிற்பது உண்மையே

களத்திலிருந்து
கிட்டுவின் மருமோன் (மருமகன்)

கிட்டுவின் மருமோ(மக)ன் said...

இங்கு நடக்கும் போர் சவுதி அரசுக்காக அமெரிக்காதான் நடத்துகிறது .

சவுதி படையுடன் நடந்தால் ஒருமாதத்தில் சவுதி தோற்க்கடிக்கடிக்கபடும்,என்பதை சவுதியர்களே அறிவர் .
சவுதி படையில் "பது" என்றழைக்கப்படும் கறுப்பின பூர்விக குடிகளைப்போல் உள்ள அமெரிக்க கறுப்பின அதிகாரிகளால் நெறிபடுத்த படுகிறது .இது சவுதி பெயரால் நடத்தப்படும் வல்லதிக்கபோர் .

நிற்க :பாலையில் பறங்கியர் நிரந்தரமாக வெல்ல முடியாது .என்பதற்கு இது இரெண்டாவது சான்று .
ஆங்காங்கே கொரில்லா போராளிகள் நிகழ்த்தும் தாக்குதலில் சவுதி வெலவெலத்து நிற்பது உண்மையே

களத்திலிருந்து
கிட்டுவின் மருமோன் (மருமகன்)