Wednesday, December 16, 2009

இருண்ட ஐரோப்பாவை நோக்கி...

(16 ,17 ஜூன் 1997 ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற Eurotop மாநாடு ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைத்தது. மாநாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியை மையமாக கொண்டு எழுதப்பட்ட எனது கட்டுரை. "சரிநிகர்" பத்திரிகையில் பிரசுரமானது.)

சிறந்த ஜனநாயக மரபுகளை பேணிப் பாதுகாப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் மார் தட்டிக் கொள்வதில் நெதர்லாந்தும் சளைத்ததல்ல. உலகத்தில் சிறந்த பல ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உலக மக்களாலும், தனது சொந்த நாட்டு மக்களாலும், மதிக்கப்பட்ட நெதர்லாந்தின் ஜனநாயக முகமூடி அண்மையில் கிழிபட்டது. தனக்கு எதிராக கிளம்பும் எந்தவொரு தீவிரவாத எதிர்க்கட்சியையும் நெதர்லாந்து அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை அது தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் குறிப்பால் உணர்த்தியது.

ஜூன் 16 ம், 17 ம், திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களது உச்சிமகாநாடு கூட்டப்பட்டது. Eurotop என அழைக்கப்பட்ட இம் மகாநாட்டில் ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கான பொது நாணயமான EMU (European Monetary Union ) ஐ 20 ம் நூற்றாண்டின் இறுதியில் புழக்கத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக இறுதி முடிவுகள் இம் மகாநாட்டில் எடுக்கப்பட்டன.

மேலும் Fort Europe ஒன்றை உருவாக்கி புதிய அகதிகள் வருகையை தடை செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இம்மகாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, தத்தமது நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற எந்த அக்கறையுமின்றி; அதாவது மக்களின் விருப்பை அறியாமலே, ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பில் அந்நாட்டு தலைவர்கள் முழுமூச்சாய் இறங்கினர். யூரோ (EMU ) நாணயத்தின் வருகை, அதனால் வருங்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள், என்பன பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களுக்கு பாதகமாகவும் அமையப் போகின்றது. இதனை முன்கூட்டியே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 331 பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், அவர்களது வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 20 மில்லியன் வேலையற்றோரினதும், 50 மில்லியன் வறிய மக்களினதும் நலன் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அக்கறைப் படவில்லை. சுருங்கக் கூறின் "முதலாளிகளின் ஐரோப்பா" உருவாகப் போகின்றது.

விவாதத்திற்குரிய Eurotop உச்சிமகாநாடு ஐரோப்பாவில் இதுவரை நலிந்து போயிருந்த இடதுசாரிக் கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது. ஜூன் 14 அன்று, ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நெதர்லாந்தின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியாக கருதப்பட்ட இப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து சேர்ந்த, வறிய, வேலை வாய்ப்பற்ற மக்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல்வேறுபட்ட பொதுவுடமைக் கட்சிகள் புதிய உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், புரட்சிக்கான அறைகூவல் விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவற்றை விட தீவிர இடதுசாரி இளைஞர் குழுக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம், நெதர்லாந்து பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதோடல்லாமல், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 200 பேர் அடுத்த நாள் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பொது கைதுசெய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகளின் போது பொலிசாரினால் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாக நேரில் கண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார். கைது செய்ததற்கு காரணங்களாக சில கட்டுக்கதைகளை பொலிசார் சோடித்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், பொலிசார் தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், எந்தவொரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டனர், என நேரில் கண்ட சாட்சிகள் கூறினர். மேலும் எந்த ஊர்வலத்திற்கும் தடையில்லை என நகரபிதா ஏற்கனவே அறிவித்திருந்த போதும், இதை சட்டவிரோத ஒன்றுகூடலாக பொலிஸ் கருதியது வேடிக்கையானது. மேலும் இது கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தடைசெய்யும் ஒரு நடவடிக்கையுமாகும். இந்த ஆர்ப்பாட்டக்காரரின் வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசாரின் இந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்கு மாறானது எனவும், அரசு சட்டத்தை தவறாக கையாண்டிருப்பதாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

எது எப்படியிருப்பினும், நெதர்லாந்து பொலிசாரின் இந்த மனித உரிமைமீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மேலும், கைது செய்யப்பட்ட யுவதிகளின் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும் போலிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்மை துன்புறுத்தியதாக விடுதலையான கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள், இனிவரும் ஐரோப்பிய முதலாளித்துவ சர்வாதிகாரம், தனக்கெதிரான தீவிர இடதுசாரி சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறது என்பதை உணர்த்துகின்றன.
(சரிநிகர், 2-16 ஜூலை 1997)

No comments: