Showing posts with label வர்க்க அரசியல். Show all posts
Showing posts with label வர்க்க அரசியல். Show all posts

Sunday, July 30, 2023

வட இலங்கையில் தொடரும் வர்க்கப் படுகொலைகள்!

 


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்த ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். பொலிஸ் இதை தற்கொலை என்று பதிவு செய்தாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியை வேலைக்கு வைத்திருந்தவர்கள், அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு வைக்க அனுமதிக்கவில்லை. மாதம் 25000 ரூபாய் சம்பளம் பேசி விட்டு 5000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வேலை வழங்குநர் மீது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பிருந்தும், சிறுமியின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடியுள்ளனர். ஏனென்றால் சக்தி வாய்ந்த பணக்காரர்களை ஏழைகளால் எதிர்த்து நிற்க முடியாது. அதிகார வர்க்கம் எப்போதும் பணக்காரர்கள் பக்கமே நிற்கும்.

இதை தற்கொலை என்று பார்த்தாலும், அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து 4 மாதங்களில் ஒரு பணிப்பெண் தற்கொலை செய்கிறாள் என்றால், அந்தளவுக்கு கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கொலை தான். அப்படி இருந்தும் பொலிஸ் அந்த பணக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை.

இலங்கையில் பல இடங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மர்மமான முறையில் இறப்பதும் அதை தற்கொலை என்று சொல்லி மறைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு அமைச்சர் வீட்டில் வேலை செய்த சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலும், இறந்தது மலையக தமிழ்ச் சிறுமி என்பதாலும், அப்போது இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனைய மரணங்கள் ஊடக கவனத்தை பெறுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் நடந்த (தற்)கொலை சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதனை மேற்கொண்டு விசாரிக்காமல் வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. அந்த சம்பவத்தில் பலியானது ஓர் ஏழைச் சிறுமி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள். எப்போதும் பொலிஸும், நீதித் துறையும் பணக்காரர் பக்கமே நிற்கும்.

அது போகட்டும். சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக பேசக் கூடிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதேன்? பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிக்காக நீதி கோரிப் போராடாதது ஏன்? குற்றவாளியும் ஒரு தமிழர் என்பதாலா? பணக்கார வீடென்றால் "தமிழ் வீரம்" புற்றுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

சிங்கள இராணுவத்துடன் நேருக்கு நேர் மோதும் துணிச்சல் மிக்க தமிழ்தேசிய ஊடகவியலாளர் யாரும் இப்படியான விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? குறைந்த பட்சம் அங்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து மக்களுக்கு அறியத் தர வேண்டாமா?

ஏனென்றால் இவர்கள் எல்லோரும் பணக்கார வர்க்க அடிவருடிகள். இலங்கையில் இருப்பதும் வர்க்கப் பிரச்சினை தான். அதாவது பணக்கார வர்க்கமும், அதன் அடிவருடிகளும் ஏழைகள் மீதான ஒடுக்குமுறைகளை மறைப்பதற்காக இனம், தேசியம் என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தப்பித்தவறி ஒருபோதும் ஒரே தேசியத்தின் உள்ளே நடக்கும் வர்க்கப் படுகொலைகள் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் பதில் வராது. பணக்கார அடிவருடித்தனத்தை வெளியே சொல்ல முடியுமா?

Monday, June 05, 2023

"சோத்துக்கு திரண்ட கூட்டம்!"- சுகாஷுக்கு ஒரு திறந்த மடல்

சைக்கிள் கட்சி என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைமுன்னணி (TNPF) தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தும் போராட்டம் குறித்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் அந்த கட்சியின் பிரமுகர் சுகாஷ் இவ்வாறான கூற்றை வெளியிட்டிருந்தார்:

//இது சோத்துக்காகவோ போத்தலுக்காகவோ திரண்ட கூட்டமல்ல...// இந்தக் கூற்று ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே இதே சுகாஷ் தான் வட்டுகோட்டை சாதிய வன்முறையில், (பார்க்க:யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!  ) ஆதிக்க சாதியினர் பக்கம் நின்றார். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இவரது தேர்தல் வெற்றிக்காக உழைத்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் அந்த மக்களுக்காக வாதாட மறுத்தார். வாளால் வெட்டி வன்முறையாட்டம் போட்ட ஆதிக்க சாதி வெறியர்களுடன் சமரசமாக போகும் படி அறிவுரை கூறினார்.  தற்போது மறுபடியும் தனது "உயர்சாதி", மேட்டுக்குடி மனப்பான்மையை வெளியிட்டிருக்கிறார்.

அடித்தட்டு தமிழ் மக்களை இப்படி கேவலமாக சித்தரிக்கும் மேட்டுக்குடி கனவான்கள் தான் தமிழினத் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 😡😡😡 

இவர்கள் என்ன அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டதால், உண்ட களை தீர தினவெடுத்து வந்த கூட்டமோ? ஒருவேளை இந்த கூட்டம் சோத்துக்காக திரண்டால் அதில் என்ன பிரச்சினை? "சோத்துக்கு வழியில்லை" என்பதும் எம் மக்களது அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை தான். அந்த பிரச்சினை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு 3 நேரமும் தவறாமல் சோறு கிடைக்கிறது என்பதற்காக, அதற்கும் வழி இல்லாத மக்களை அவமானப் படுத்துவீர்களோ? நாவடக்கம் வேண்டும் கனவானே! 

Shame on you. 

உங்கள் மேட்டுக்குடித் திமிரை வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு நேர சோற்றுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சோத்துக்காக ஒன்று திரளக் கூடாதா? அது தப்பா? அதென்ன "போத்திலுக்காக"? உங்களிடம் பணமிருக்கிறது. வீட்டில் ஒரு முழுப் போத்தில் வெளிநாட்டு விஸ்கி வாங்கி வைத்து யாருக்கும் தெரியாமல் குடிப்பீர்கள். அவர்களிடம் கால் போத்தில் உள்நாட்டு சாராயம் கூட வாங்க காசில்லாமல் இருக்கலாம். அதற்காக வெட்கத்தை விட்டு "போத்திலுக்காக" வரலாம். இது கிண்டல் அடிக்கும் விடயமா? உங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மாதாந்த வருமானம் கிடைத்தால், அவர்கள் ஏன் சோத்துக்கும், போத்திலுக்கும் திரளப் போகிறார்கள்? முதலில் அதற்காக அல்லவா தாங்கள் போராட வேண்டும்?

Tuesday, February 20, 2018

பண்டைய நாகரிகங்களிலும் வர்க்க முரண்பாடுகள் இருந்தன!


மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய எகிப்திய நாகரிகத்திலும் வர்க்கங்கள் இருந்துள்ளன. வர்க்கப் போராட்டங்கள் கூட நடந்துள்ளன. கூலி உயர்வு கோரி அல்லது சம்பளம் கிடைக்காத காரணத்தினால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள். 


இங்கேயுள்ள பாபிருஸ் ஓவியம், பாரோ மன்னனின் கீழ் வேலை செய்த எகிப்திய தொழிலாளர்கள் வரைந்தது. 

இந்தப் படத்தில், எலி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில், பூனை அதற்கு சேவகம் செய்கின்றது. நிஜ வாழ்க்கையின் எதிர்மறையான விம்பத்தை கலையாக வடித்துள்ளார்கள். நாடகத்தில் மட்டும் ராஜாவாக நடித்து திருப்தி கொள்ளும் நமது காலத்து கலைஞர்கள் போன்று தான், பண்டைய எகிப்தில் வாழ்ந்த தொழிலாளர்களும் இருந்திருக்கிறார்கள். 
(தகவலுக்கு நன்றி: Historia, 1/2015) 
 
வர்க்க அடிப்படையிலான சமுதாய அமைப்பும், வர்க்க (அ)நீதியும் ரோமர்கள் காலத்தில் கூட இருந்துள்ளது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைகளுக்கு உரிமைகள் இருக்கவில்லை. ஆனால், "சுதந்திரமான பிரஜைகள்" சமமாக நடத்தப் படவில்லை. பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்க பேதம் அனைத்தையும் தீர்மானித்தது. 

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்று ரோமர்களின் சட்டம் கூறியது. ஆனால், நடைமுறையில் சட்டம் பணக்காரர்களை மட்டுமே பாதுகாத்தது. நீதிபதிகளை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க முடிந்தது. சட்டத்தை மீறும் எந்தவொரு பிரஜை மீதும், யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம் என்று சட்டம் கூறியது. அனால், நடைமுறையில் பணக்காரர்கள் ஏழைகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குப் போட்டு வந்தனர். 

பணக்காரர்கள் எந்தளவு பாரதூரமான குற்றம் செய்தாலும், ஏழைகள் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாதிருந்தது. அப்படியே வழக்குப் போட்டாலும் வெல்ல முடியாதிருந்தது. நீதிபதிகள், ஜூரிகள், வழக்கறிஞர்கள் எல்லோரையும் பணக்காரர்கள் இலகுவாக வளைத்துப் போட முடிந்தது. 

நீதிபதி என்ன தீர்ப்புக் கூற வேண்டுமென்று ஒரு நிலப்பிரபு எழுதிக் கொடுக்கும் அளவிற்கு செல்வாக்கு இருந்துள்ளது. நீதித்துறையில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த படியாலும், நீதிபதிகள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபடியாலும், Gaius Gracchus எனும் அரசியல்வாதி சட்டங்களை திருத்த விரும்பினார். ஆனால், அதற்காகவே அவர் கொலை செய்யப் பட்டார். 
(தகவலுக்கு நன்றி: Historia, Nr.7/2014) 

கனவான்களே! வர்க்கப் போராட்டம் கம்யூனிஸ்டுகளின் "கண்டுபிடிப்பு" அல்ல. அது மார்க்சிய "வரட்டுச் சூத்திரமும்" அல்ல. அது மூவாயிரம் வருட காலப் பழமையான போராட்டம். உலக நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டம்.

Friday, August 18, 2017

யாருக்கு மார்க்சியம் தேவையில்லை?


"எங்க‌ளுக்கு மார்க்சிய‌ம் தேவையில்லை... மார்க்சிய‌ம் பேசுவ‌து ஒரு இள‌ம்ப‌ருவ‌க் கோளாறு..." என்று பூர்ஷுவா ம‌ன‌ப்பான்மையுட‌ன் பேசும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,

மார்க்சியம் என்பது ஏழைக‌ளின், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அரசியல். அது உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தேவையில்லாம‌ல் இருக்க‌லாம். அதாவ‌து உங்க‌ள‌து ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளுக்கு அது தேவையில்லை. முத‌லாளித்துவ‌ம் தாராள‌மாக‌ வ‌ழ‌ங்கும் வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்கு அது தேவையில்லை.

மார்க்சிய‌த்தால் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், முத‌லாளித்துவ‌ம் உங்களுக்கு போதுமான அளவு வருமானம் கொடுக்கிற‌து. வசதியான வாழ்க்கையை ஏற்ப‌டுத்திக் கொடுத்துள்ள‌து. அத‌னால் உங்க‌ளுக்கு மார்க்சிய‌ம் தேவையில்லை. இதைத் தான் வர்க்கக் குணாம்சம் என்று சொல்வார்கள்.

ஏழைகள் சார்பாகப் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அப்பாவி ம‌னித‌ர்க‌ளை சுர‌ண்டி ப‌ண‌ம் சேர்க்கும் குறுக்கு வ‌ழிக‌ளை, நுணுக்க‌மான‌ திருட்டுக்க‌ளை, ஏமாற்றிப் ப‌ண‌ம் ப‌றிப்ப‌தை, முத‌லாளிக‌ளுக்கு சொல்லிக் கொடுப்ப‌தே நீங்க‌ள் தானே? அத‌ற்காக‌த் தானே நீங்க‌ள் க‌ற்ற‌ க‌ல்வி ப‌ய‌ன்ப‌டுகிற‌து?

முத‌லாளி தான் கொள்ளைய‌டிக்கும் கோடிக் க‌ண‌க்கான‌ ப‌ண‌த்தில், உங்க‌ளுக்கு சில‌ ஆயிர‌ங்க‌ளை கிள்ளிக் கொடுக்கிறான். அந்த‌ பிச்சைக் காசுக்காக‌ விசுவாச‌மாக‌ வாலாட்டுகிறீர்க‌ள். அந்த‌ நாய்க் குண‌த்தை பெருமையாக‌ க‌ருதிக் கொள்கிறீர்க‌ள்.

உங்கள் அளவிற்கு பெரிய படிப்பு படித்திராத‌, சாதாரண அடித்தட்டு மக்களுக்கு மார்க்சியத்தை சொல்லிப் புரிய வைக்க படித்தவர்கள் தான் முன்வர வேண்டும். அத‌ற்கு நீங்க‌ள் உதவி செய்யா விட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களால் முடியாத ஒரு விடயத்தை, இன்னொருவன் செய்யும் பொழுது அதற்கு வழிவிட வேண்டும்.

உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள், எந்த‌க் கால‌த்திலும் உண்மை பேசுவதில்லை. முதலாளித்துவ சுரண்டல் பற்றிப் பேசுவதில்லை. க‌ட‌ன் சுமைக‌ளை க‌ண்டுகொள்வ‌தில்லை.

யுத்த‌ங்க‌ள், பேர‌ழிவுக‌ளை பார்க்கும் போதெல்லாம், அத‌ற்கு "இன‌ப் பிர‌ச்சினை, ம‌த‌ப் பிர‌ச்சினை" என்று கார‌ண‌ம் சொல்லிக் கொள்வீர்க‌ள். ம‌னித‌ அழிவில் இலாப‌ம் ச‌ம்பாதிக்கும் ஆயுத‌ வியாபாரிக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ப் போவ‌தில்லை.

நீங்க‌ள் யாரும் வ‌றுமையைக் க‌ண்டு கொள்வ‌தில்லை. ஒவ்வொருநாளும் ப‌ட்டினியால் இற‌ந்து கொண்டிருக்கும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ளை ப‌ற்றிக் கேள்விப் ப‌ட்டாலும் பாராமுக‌மாக‌ இருக்கிறீர்க‌ள். ஏனென்றால் அது எதுவும் உங்க‌ள் குழ‌ந்தை அல்ல‌.

அதைப் ப‌ற்றி எல்லாம் நீங்க‌ள் பேசுவ‌தில்லை. கேள்விப் ப‌ட்டாலும் பேச‌ மாட்டீர்க‌ள். உங்க‌ள் வாயை திற‌க்க‌ விடாம‌ல் எதுவோ த‌டுக்கிற‌து. ஆனால், அதைப் ப‌ற்றி எல்லாம் மார்க்ஸிஸ்டுக‌ள் பேசுகிறார்கள். அத‌னால் உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்சினை? குற்ற‌முள்ள‌ நெஞ்சு குறுகுறுக்கிற‌தா?

நாய்களுக்கும், மாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர் நாய்கள் போன்றவர்கள். முதலாளிகளுக்கு கீழே வேலை செய்பவர்கள் மாடுகள் போன்றவர்கள்.

நாய்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை. முதலாளிகளின் சொத்துக்களுக்கு காவல் காப்பது மட்டுமே அவற்றின் வேலை. முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும். முதலாளியை எதிர்ப்பவர்களை பார்த்துக் குரைக்கும். கடிக்கச் சொன்னால் கடிக்கும்.

மாடுகள் வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும். மாடுகளின் உழைப்பால் உருவான நெல் முதலாளிகளால் நுகரப் படுவதுடன், சந்தையில் விற்று பணமாக்கிக் கொள்வார்கள். நெல்லைப் பிரித்த பின்னர் கழிவாக அகற்றப்படும் வைக்கோல் மட்டுமே மாடுகளுக்கு உணவாகும்.

இன்றைய முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் அப்படித் தான் இயங்குகிறது. தொழிலாளர்கள் மாடுகள் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தியதர வர்க்க புத்திஜீவிகள், நாய்கள் மாதிரி முதலாளிகளுக்கு சேவை செய்வதில் பெருமை அடைகிறார்கள்.

பாட்டாளிவர்க்க அரசியலுக்கும், பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாவது யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறது. இரண்டாவது கற்பனாவாத உலகை சிருஷ்டிக்கிறது.

பகல் முழுவதும் அலுவலகத்தில் குந்தியிருந்து, முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கும் வழிவகைகளை செய்து கொடுத்து விட்டு, மாலை நேரப் பொழுதுபோக்காக தேசியவாதம், மதவாதம், இனவாதம் என்று பேசித் திரிவது பூர்ஷுவா அரசியல்.

அதற்கு மாறாக, வேலை செய்யும் இடங்களிலும் அரசியல் பேசி சக ஊழியர்களின் உரிமைகளை உணர வைப்பது பாட்டாளிவர்க்க அரசியல். ஐரோப்பாவில் எனக்குத் தெரிந்த பல அரசியல் செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தொழிற்சாலைகளில் சேர்ந்து வேலை செய்துள்ளனர்.

நெதர்லாந்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர். பொருளாதார நெருக்கடி காலத்தில் வேலையிழந்து இருந்த நேரம், தபால்கள் தரம் பிரிக்கும் வேலையில் சேர்ந்தார். ஏற்கனவே பல தபால் ஊழியர்கள் அவரது கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த ஆசிரியர், தபால் தரம் பிரிக்கும் தொழிலகத்தில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். தொழிலாளர் தற்காலிக தீர்வுகளுக்காக அல்லாமல், நிரந்தரமான சோஷலிசப் புரட்சிக்காக போராட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்தத் தொழிலகத்தை சேர்ந்த பலர் தற்போது கட்சி ஆர்வலர்களாக உள்ளானர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. முதலாளித்துவ சுரண்டலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அனுபவமும் அவசியம். ஒரு அரசியல் ஆர்வலர், தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்வதன் மூலம் தேவையான அனுபவ அறிவைப் பெற்றுக் கொள்கிறார். அத்துடன் சக தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கிறார்.

Wednesday, December 21, 2016

ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (நான்காம் பாகம்)

"தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் நிறையப் பேருண்டு. படிப்பறிவில்லாத பாமரர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், ஒரு சில வணிகவியல் பட்டதாரிகளும் அப்படிச் சொல்வது ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம். ஏனென்றால், பொருட்களை சந்தைப் படுத்தல் தொடர்பான மார்க்கெட்டிங் பாடத்தில், மிகத் தெளிவாக வர்க்கப் பிரிவினைகள் பற்றி விளக்கி இருப்பார்கள்.

சந்தைப் படுத்தலில் வர்க்க வேறுபாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார விதி. பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சி, உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்பதும், அதற்குப் பின்னரே வர்க்க வேறுபாடுகள் தோன்றின என்பதும், எமது நாட்டு பாட நூல்களில் எழுதப் படவில்லை. இலங்கையும் ஒரு காலத்தில் ஆங்கிலேய காலனியாக இருந்ததையும், அப்போது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி அறிமுகப் படுத்தப் பட்டதையும் பலர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனது தந்தைக்கு வர்க்கங்கள் பற்றிய புரிதல் இருந்தது. அதை அவராகவே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கூடவே ஒரு பிழையான தகவலையும் சொன்னார். இலங்கையில் "மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக" கூறினார். எனது தந்தை மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் கூட, அப்படித் தான் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது 28 வயது வரையும், அதை நானும் உண்மை என நம்பி இருக்கிறேன். அப்போது நெதர்லாந்தில் சந்தித்த ஒருவர் மூலம் அறிவுக் கண் திறந்தது. அவர் நெதர்லாந்தில் ஜனநாயகத்தில் அதிக அக்கறை செலுத்தும் D66 என்ற கட்சி உறுப்பினரான இளம் பெண் ஆவார். இலங்கையில் உள்ள வர்க்கங்களின் விகிதாசாரம் பற்றி விசாரித்த பொழுது, நான் அப்பா சொன்ன விளக்கத்தை அப்படியே ஒப்புவித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. நெதர்லாந்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைவு என்று சொன்னார். நான் சொல்வது உண்மையானால், இலங்கை உலகிலேயே தனித்துவமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.

உண்மையில் அதற்குப் பிறகு தான், நானும் வர்க்கங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதே வருடம், நெதர்லாந்தில் பல்கலைக் கழக நுழைவுப் பரீட்சைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது வரலாறு, மற்றும் சமூகவியல் பாட நூல்களில் வர்க்கம் பற்றி எழுதி இருந்ததை ஆழமாக படித்தறிந்தேன். 

மேற்குலக நாடுகளில் உள்ள வர்க்க முரண்பாடு பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வர்க்க மக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள் என்ற உண்மையை, நானும் காலம் தாழ்த்தித் தான் அறிந்து கொண்டேன் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதினான்கு வயது வரைக்கும், நானும் தெய்வ நம்பிக்கை கொண்ட, ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட சாதாரணமான சிறுவனாகத் தானிருந்தேன். எனது முதலாவது கட்டுரையும் சைவ சமயம் பற்றியது தான். கடவுளை வழிபடுவது பற்றி நான் எழுதிய கட்டுரை கொழும்பு சைவ முன்னேற்றக் கழகம் வெளியிட்ட ஆண்டு மலரில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் சிவபுராணம் மனனம் செய்து ஒப்புவித்து பரிசு வாங்கி இருக்கிறேன். தேவாரம் பண்ணோடு பாடுவதற்கு அறிந்து வைத்திருந்தேன். பெரிய புராணம், கந்தபுராணம் நூல்களை எல்லாம் வாசித்திருந்தேன். 


அந்த வயதில் எனக்குள் எழுந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், எதற்காக பணக்காரர்களுக்கு வசதியை அள்ளிக் கொடுத்து, ஏழைகளை கஷ்டப் படுத்தி, மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டும்? அந்த வயதிலேயே, இந்துகளின் "கர்ம வினைப் பயன்" கோட்பாடு அபத்தமாகப் பட்டது.  நான் அறிந்த வரையில் ஏழைகள் தான் அதிக நேரம் கோயில்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

சிறு வயதில், எனது பெற்றோருடன் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பதைக் கண்டேன். கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களும் கடவுளிடம் பிச்சை தான் கேட்டார்கள். ஆனால், அதை அவர்கள் நாகரிகமாக வரம் என்று சொன்னார்கள். வெளியே வந்த பக்தர்கள் தம்மிடம் இரந்தவர் தட்டில் சில்லறைகளை போட்டார்கள். அதை அவர்கள் பிச்சை என்றார்கள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எனக்கு ஒரு தத்துவத்தை போதித்தார்கள். ஒரு சாதாரணமான பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுள் எப்படி சக்தி படைத்ததாக இருக்க முடியும்?

யாழ் மேட்டுக்குடியினரின் பாடசாலை என்று பெருமை தேடிக் கொள்ள விரும்பிய யாழ் இந்துக் கல்லூரி, ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தனது மாணவர்களை மூளைச்சலவை செய்து வந்தது. நான் படித்த காலத்தில் ஓர் இந்து அறிஞர் ஆன்மீக சொற்பொழிவாற்ற வந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் கேள்வி கேட்கச் சொன்னார். "இலட்சக் கணக்கான குழந்தைகள் பாலின்றி தவிக்கும் நாட்டில் எதற்காக சாமி சிலைகளுக்கு குடம் குடமாக பால் ஊற்றுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்டான்.

அதற்கு அவர், "கடவுளுக்கு பாலபிஷேகம் செய்தால் அவர் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கிடைக்க அருள் செய்வார்." என்று சொல்லிச் சமாளித்தார். ஆனால், அந்தப் பதில் எங்களை திருப்திப் படுத்தவில்லை. சாமிக்கு பாலபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டு கால வழக்கம். ஆனால் வறுமை இன்னும் ஒழியவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் பாலும் கிடைப்பதில்லை. பாவம், இதற்கெல்லாம் பதில் கூறும் அளவிற்கு அந்த ஆன்மீக அறிஞர் படித்திருக்கவில்லை.

இலங்கை ஒரு "மதச் சார்புள்ள நாடு". அங்கு பள்ளிக்கூடத்தில் மதத்தை பிரித்துப் பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பாடசாலைகளில், ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். "சரஸ்வதி கல்விக் கடவுள்" என்பது ஒரு சாட்டு மட்டுமே. 

நான் படித்த காலத்தில், எட்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டோம். நாரதரை, சரஸ்வதியை கிண்டலடிக்கும் பகுத்தறிவு நாடகம் அது. ஏதோவொரு புத்தகத்தில் நான் தான் அதை வாசித்து விட்டு நாடகமாக்குவோம் என்று சொன்னேன். நான் அதில் பெண் வேடமிட்டு, அதாவது சரஸ்வதியாக நடித்திருந்தேன். நாடகத்தில் இருந்த நகைச்சுவை வசனங்கள் மாணவர்களை சிரிக்க வைத்தன. பலருக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நாங்கள் ஒன்பதாவது, அல்லது பத்தாவது வகுப்புப் படிக்கும் பொழுது, யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கண்காட்சிகள் நடந்தன. யாழ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கண்காட்சி பார்க்க சென்றிருந்தோம். அப்போது, பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மூளையின் செயற்பாடுகள் குறித்து படம் கீறி வைத்திருந்தனர். மூளாய் (இடத்தின் பெயர்) வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த இடத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன தகவல்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. எமக்கு சிறுவயதில் இருந்தே கடவுளைப் பற்றிய அச்சவுணர்வு திணிக்கப் படுகிறது. அது மூளையில் சேமிக்கப் படுகிறது. வளர்ந்த பின்னர் நாங்கள் அதை உண்மை என்றே நம்புகின்றோம் என்றார். தான் கடவுள் இல்லை என்று சொல்லி வருவதாகவும், அதனால் தனக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்றும் சொன்னார். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர் தான், நூலகத்தில் இருந்து மனோதத்துவ நூல்களை இரவல் எடுத்து வாசித்தேன். கடவுளை நம்புவது மனிதர்களின் உளவியல் பிரச்சினை என்பது அதற்குப் பிறகு தெரிய வந்தது.

நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்களது வகுப்பில் சசிகாந்தன் என்ற நண்பன் இருந்தான். இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்ப தாளில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்திருந்தான். அவன் ஒரு நாள் வகுப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "கடவுள் இல்லை" என்பதே அந்த அதிர்ச்சியான தகவல். வகுப்பில் கெட்டிக்கார மாணவனான அவனை எல்லோரும் விஞ்ஞானி என்று அழைப்போம். தானாகவே சில கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறான். அப்படியான ஒருவன் கடவுள் இல்லை என்று வாதிடும் பொழுது அலட்சியப் படுத்த முடியவில்லை.

எமது வகுப்பில் அடிக்கடி கடவுள் பற்றிய வாக்குவாதங்கள் நடந்தன. சிலர் சசிகாந்தனை தீவிரமாக எதிர்த்தார்கள். பலர் குழம்பினார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே அவன் சொன்னதைக் கேட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடவுள் பற்றிய எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் தந்தான். ஓய்வுநேரங்களில், வண்ணார்பண்ணையில் இருக்கும் அவனது வீட்டுக்கு சென்றும் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது எனக்கு வேறு தொடர்புகள் மூலமாக, மார்க்சியம் பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தது. அது பற்றிய தகவல்களை சசிகாந்தனுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்ற நேரம், என்னிடம் விசாரித்து ஈரோஸ் இயக்கத் தொடர்பை பெற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தான். சில வருடங்களுக்குப் பின்னர், போர்ச் சூழல் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவிய இனந் தெரியாத நோய்க்கு பலியாகி இறந்ததை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் அப்போது புலம்பெயர்ந்து சென்று விட்டேன்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், சாதி, வர்க்கம், மதம் என்பனவற்றுக்கு இடையிலான நெருங்கிய உறவு தெரிய வந்தது. இவையெல்லாம் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருந்தது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்து கொண்டு நிலைத்து நிற்கின்றன.

சாதிப் பாகுபாடு காரணமாக, ஒரே மதத்தை சேர்ந்த மக்களை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டுப்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அப்போது அடக்குமுறையாளர்கள் பக்கம் நின்ற கடவுள் எவ்வாறு சக்தி படைத்தவராக இருக்க முடியும்? இதே கேள்வி தான் கொழும்பில் தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் கொல்லப் பட்ட நேரத்திலும் எழுந்தது. நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து விட்டு, இன ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தால் அங்கும் கடவுளின் சக்தி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

வட பகுதியில் நடந்த விமானக் குண்டுவீச்சுகளில் இந்துக் கோயில்கள் சேதமானதை நேரில் கண்டிருக்கிறேன். அப்போது "இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போயின?" என்று சாதாரண பாமர மக்களே கேட்டிருக்கிறார்கள். போர்ச் சூழலில் வாழ்ந்த படியால், அதன் குரூரங்களை நேரில் கண்ட படியால், என்னைப் பொருத்தவரையில் அது கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது.

போரில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த பிறகும், பலர் கோயில்களில் தவமிருந்தார்கள். இங்கே தான் கடவுள் பற்றிய மனோதத்துவக் கோட்பாடு உதவுகின்றது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்ட மக்கள் ஒன்றில் புரட்சி செய்வார்கள் அல்லது கடவுளிடம் முறையிடுவார்கள்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2.வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!

Tuesday, December 20, 2016

தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(மூன்றாம் பாகம்)

 ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், வேலிப் பிரச்சினைக்கு பக்கத்து வீட்டுக் காரனுடன் சண்டை பிடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தம்முயிரை அர்ப்பணித்து போராட முன்வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. வேலியோரம் நட்ட மரத்தை சரித்து விட்டு, ஆறங்குலம் தள்ளி புதிய வேலி கட்டி, சிறு துண்டு காணியை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள் பலர் இருந்தனர். பக்கத்து வீட்டுக்காரன் அதைக் கண்டு பிடித்து, வாக்குவாதப் பட்டு, கத்தி எடுத்து வெட்டுப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தவர்கள் வேலிக்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், எல்லையோர நகரமான வவுனியாவில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தவர் மீது அவநம்பிக்கை எழக் காரணம் அவர்களது பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) மனப்பான்மை. கொழும்பில் வசித்த தமிழர்களில், அவர்கள்  பெரும்பாலும் அரசாங்க உத்தியோகங்களில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது மாதிரி, கொழும்பில் வேலை செய்து கொண்டு, மணி ஓடர் மூலம் ஊரில் இருந்த பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான வருமானமாக மணி ஓர்டர் பொருளாதாரம் இருந்தது. அந்த நேரம் கொழும்பில் வாழ்ந்த என்னுடைய அப்பா, அம்மாவும் அவர்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர்.

கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த பலர் கொழும்பு வாசிகளாகி விட்டனர். இலங்கையின் பொருளாதார மையத்தில் வீடெடுத்து, உத்தியோகம் பார்த்துக் கொண்டு, நகரத்தின் வசதிகளை அனுபவித்து வந்தனர். 1958, 1977, 1983 என்று அடுத்தடுத்து இனக்கலவரங்கள் நடந்த போதிலும் கொழும்பை விட்டு செல்லவில்லை. கலவரம் நடக்கும் பொழுது அகதிகளாக யாழ்ப்பாணம் சென்று, அதிக பட்சம் ஒரு மாதம் இருந்து விட்டு கொழும்புக்கு திரும்பிச் செல்வார்கள். 1983 க்குப் பின்னர் ஒரு பகுதியினர் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த விடயங்களை நான் எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், "சிங்களவனிடம் அடி வாங்கிய" ஒரு காரணத்தால் மட்டும் யாரும் போராட வருவதில்லை. இனக் கலவரக் காலத்தில் கொழும்பில் நடந்த படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சொத்தழிவுகளை அனுபவித்தவர்கள் கொழும்புத் தமிழர்கள். நாங்களும் அந்தக் கோரக் கதைகளை சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டு வளர்ந்தோம். இருப்பினும், ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட கொழும்புத் தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தது.

உண்மையில், ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டம் கொழும்பில் தான் தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தற்காப்பு நடவடிக்கையாக கூட எதுவும் நடக்கவில்லை. அவர்களில் யாரும் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் இணையவில்லை. அதற்கு மாறாக, தலைநகரில் தாம் ஏற்கனவே செய்து வந்த தொழில்களை தொடர்ந்தார்கள்.  

அதற்குக் காரணம் கொழும்புத் தமிழரின் பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை அன்றி வேறென்ன? ஆயுதப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன், வீட்டைத் துறந்து, பதவியை இழந்து, தலைமறைவு வாழ்க்கை வாழத் தயாராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசியத் தலைவர்களும் கொழும்பில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் கொழும்பில் தான் தமிழ்த் தேசிய கொள்கை வகுப்பது சம்பந்தமான கூட்டங்களை நடத்தினார்கள். நான் சிறுவனாக இருந்த காலங்களில், அந்தக் கூட்டங்களுக்கு அப்பாவுடன் சென்று வருவது வழக்கம். அதைத் தவிர, சைவ சமயத்தின் பேரில் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் சங்கங்களும் செயற்பட்டு வந்தன.

யாழ்ப்பாணத்தை விட, கொழும்பில் தான் தமிழ்க கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருவதாகவும், பக்தியோடு கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை இங்கே அதிகம் என்றும் அப்பாவும், அம்மாவும் அடிக்கடி சொல்லி வந்தனர். மதமும், கலாச்சாரமும் அந்தஸ்தின் அடையாளமாக இருப்பதை நான் கொழும்பில் கண்டுகொண்டேன்.

1983 இனக்கலவரத்திற்கு முன்னரே நாங்கள் கொழும்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். அது வரையும் கொழும்பு வாசிகளாக இருந்த நாங்கள், யாழ்ப்பாணவாசிகளாகி விட்டோம். எனது வாழ்க்கையில் நடந்த இந்த மாற்றம் தான், ஈழப் போராட்ட அரசியலிலும் நாட்டம் கொள்ள வைத்தது. நாங்கள் தொடர்ந்தும் கொழும்பில் வாழ்ந்திருந்தால், இன்று நானும் எனது நண்பர்கள் மாதிரி எதாவதொரு நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். அரசியல் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.

யாழ்ப்பாண வாழ்க்கையில், வர்க்கங்களுக்கு இடையில் ஊடாட முடிந்தது. எங்களது உறவினர்கள் மத்தியில் கூட இரண்டு வர்க்கங்களை காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிலர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்தனர். மறுபுறத்தில், பலர் கூலித் தொழிலாளர்களாக ஏழ்மையில் வாழ்ந்தனர். அப்போது பதினாறு வயதாகி விட்டதால் சமூகத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓய்வுநேரம் கூட எவ்வாறு மாறுபடுகின்றது என்பதைக் கண்கூடாக கண்டேன். மேட்டுக்குடியினர் ஓய்வு நேரத்தில் கூடியிருந்து, அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம், ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினர் எந்தவித அரசியல் ஆர்வமும் இன்றி வாழ்ந்தனர். ஒரு சிலர், ஓய்வு நேரத்தில் குடிப்பதும், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு பொருளாதாரச் சுரண்டல் பற்றிய அறிவு கிடையாது என்று மேட்டுக்குடியினர் நினைக்கின்றனர். அது தவறு. கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் நண்பர்களுடனான உரையாடலில் அவர்களே பல தகவல்களை சொன்னார்கள். தங்களை வேலைக்கு வைத்திருக்கும் தொழில் வழங்குனர்கள், எவ்வாறு குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதை அவர்கள் என்னிடம் விளக்கமாக கூறி இருக்கிறார்கள்.

ஒரு தடவை அப்பா நூலகத்தில் விற்கப் பட்ட பழைய நூல்களை கட்டுக் கட்டாக வாங்கி வந்திருந்தார். அவற்றிற்குள் சில மார்க்சியப் புத்தகங்களும் இருந்தன. லெனின் எழுதிய "நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" என்ற சிறிய நூலும் இருந்தது. அப்போதே அதை வாசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு இலகுவாக எழுதப் பட்டிருந்தது. அந்த நூலைக் கொண்டு சென்று, கூலித் தொழில் செய்யும் நண்பர்களுக்கு காட்டி விளங்கப் படுத்தினேன். லெனின் எழுதிய பல கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். அதற்குக் காரணம், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உள்ளது என்பது தானே?

இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்று சொல்லப் படுவதற்கு ஏற்றவாறு யாழ்ப்பாண பொருளாதார அமைப்பும் இருந்தது. பிரிட்டிஷ் காலனிய காலத்தில் கட்டப் பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையை தவிர வேறு தொழிற்துறைகள் அங்கே இல்லை. அதனால், இந்த இரண்டு தொழிலகங்களை தவிர வேறெங்கும் குறிப்பிட்டளவு தொழிலாளர் வர்க்கம் உருவாகி இருக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் மில்க்வைற் சவர்க்காரம் எல்லாக் கடைகளிலும் விற்பனை செய்யப் பட்டது. உடுப்புகள் கழுவுவதற்கு பாவிக்கப் பட்ட சன்லைட் சவர்க்காரம் ஒரு தென்னிலங்கை சிங்களத் தயாரிப்பு. அதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்து தமிழ் முதலாளியின் உள்ளூர் தயாரிப்பாக மில்க்வைற் இருந்தது. யாழ் குடாநாட்டைப் பொருத்தவரையில், பெருமளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையை கொண்டிருந்தாலும் அது தனி ஒரு முதலாளியால் நடத்தப் பட்டது.

நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நல்லூர்க் கோயிலுக்கு போவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பிக் குளிக்க வேண்டும். நல்லூர்க் கோயில் சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த படியால் நடந்து சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவோம். 

நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புற வீதி

நாங்கள் நல்லூர் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும், அங்கே மில்க்வைற் முதலாளியை அல்லது அவரது எடுபிடிகளை காணலாம். "சிவநெறிச் செல்வர்", "கொடை வள்ளல்", என்று தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக் கொண்ட மில்க்வைற் முதலாளி தனது பக்தியை பறைசாற்றிக் கொண்டிருப்பார். தேவாரம், திருவாசகம் அடங்கிய சிறு பிரசுரங்களை பக்தர்களுக்கு  இலவசமாக விநியோகித்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு பிரசுரத்திலும் "இது மில்க்வைற் அன்பளிப்பு" என்று தவறாமல் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும், பக்தர்களுக்கு தேவாரப் புத்தகம் அன்பளிப்பு செய்யும் சாட்டில், விளம்பரம் தேடும் மில்க்வைற் முதலாளியின் செயல் அருவருப்பை ஊட்டியது. அவரது கடவுள் பக்தி போலியானது என்பது புரிந்தது. யாழ் இந்துக்கல்லூரி சுற்றாடலில் தான் மில்க்வைற் தொழிற்சாலையும் அமைந்திருந்தது. அப்போது தமக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தகவலும் எமது காதுகளுக்கு எட்டியிருந்தது.

வீட்டில் தாயை பட்டினி போட்டு விட்டு மகன் அன்னதானம் செய்தானாம். அது மாதிரி, மில்க்வைற் முதலாளி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்தார். அதைக் கூட ஒழுங்காக கொடுப்பதில்லை. அவரது சவர்க்காரத் தொழில் நட்டத்தில் ஓடியதாக சாட்டுச் சொல்ல முடியாது. (அளவுக்கு மிஞ்சி பணம் சேர்ந்ததால் தானே "கொடை வள்ளல்" ஆனார்?) யாழ் குடாநாட்டு கடைகள் எங்கும், மில்க்வைற் சன்லைட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையானது. சிறுவயதில் பொதுவுடமைக் கருத்துக்களை இயல்பானதாக உள்வாங்கிக் கொள்வதற்கு மேற்படி அனுபவங்கள் காரணமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் முதலாளி தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உழைப்பை சுரண்டுவதும், அவ்வாறு திருடிய பணத்தில் பக்திமானாக கொடை வள்ளல் வேஷம் போடுவதும், சிறு பிள்ளைகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்கள். 

இதற்கெல்லாம் யாரும் மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களைப் படித்து பட்டம் வாங்கியிருக்கத் தேவையில்லை. படிப்பறிவில்லாத பாமரத் தமிழர்களுக்கும் இலகுவாகப் புரியும். ஆனால், ஒரு சில மெத்தப் படித்த தமிழ் அறிவுஜீவிகள் மட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளாத காரணம் என்ன? அவர்களுக்கு அந்தளவு அறிவு இல்லையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, December 15, 2016

வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(இரண்டாம் பாகம்)

வர்க்கம் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்கள் நேரடியாகப் பதிலளிக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், "உலகில் வர்க்கங்கள் இல்லாத ஒரே இனம் தமிழினம் மட்டும் தான்!" இன்னும் சில மேதாவிகள் இருக்கிறார்கள். "அதுவா? ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்று இரண்டு உண்டு." என்று புரட்டிப் போடுவார்கள்.

எனது பெற்றோர் ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து சுயமாக படித்து முன்னேறியவர்கள். கொழும்பில் அரசாங்க உத்தியோகமும் கிடைத்த படியால், பாட்டாளி வர்க்கத்தில் இருந்து கீழ் மத்திய தர வர்க்கத்தில் சேர்ந்து கொண்டவர்கள். அவர்களது உறவினர்கள் பலர் இன்னமும் ஏழைகளாக பாட்டாளி வர்க்கத்தினராக இருந்தனர். நாங்கள் உறவுக் காரர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் சமமாக மதித்து வாழ்ந்தாலும், சமூகத்தில் வர்க்க வேற்றுமை இருக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நான் நன்றாக படிக்கா விட்டால் வன்னியில் மாடு மேய்ப்பதற்கு கொண்டு சென்று விட்டு விடுவதாக, எனது தந்தை அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதென்ன பிரமாதம்? எல்லாப் பெற்றோரும் சொல்வது தானே என்று சிலர் "நியாயம்" கூறலாம். ஆனால், "மாடு மேய்ப்பது என்பது படிக்காதவர்கள் செய்யும் இளக்காரமான தொழில்" என்ற எண்ணம் ஏன் உருவானது? இது வர்க்கம் சார்ந்த கண்ணோட்டம் இல்லாமல் வேறென்ன?

இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் எழுபதுகள் ஒரு முக்கியமான அரசியல் காலகட்டம். ஜேவிபி கிளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தோற்றம் போன்றவை இலங்கையை உலுக்கிய காலம் அது. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த அரசாங்கத்தில் சில இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகித்தன. அந்த அரசாங்கம், இந்தியாவில் இருந்த மாதிரி தேசிய முதலாளிகளின் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தது. அன்று இலங்கையில் வாழ்ந்த ஒவ்வொரு பிரஜையின் வாழ்க்கையிலும் அது தாக்கம் செலுத்தியது.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் எந்த வகைப் பொருளாதாரத்தை பின்பற்றுவது என்பதில் குழப்பம் நிலவியது. ஏனெனில் அது வரையும் மிகப்பெரிய பிரிட்டிஷ் நிறுவனங்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரத்தில் உள்நாட்டு முதலாளிய வர்க்கமும் வளர்ந்திருந்தது. ஐம்பதுகளில் பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கும் திட்டம், சிறிமாவோ காலத்தில் பூரணப் படுத்தப் பட்டது.

அன்றைய காலத்தில் பலருக்கு தேசியவாதத்திற்கும், சோஷலிசத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை. இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொண்டார்கள். சிறிமாவோ சோஷலிசத்தின் பெயரில் தேசியவாதப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தினார். பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். உலகம் முழுவதும் நவ தாராளவாத பொருளாதாரத்தை பின்பற்றிய காலத்தில், வன்னியில் புலிகள் வைத்திருந்த "தமிழீழத்தில்" இருந்த தேசியவாதப் பொருளாதாரமும் அத்தகையது தான். (இன்று சிலர் அதை "வள்ளுவம்" புதிய பெயரில் அழைக்கிறார்கள்.) அது வேறு விடயம்.

அந்தக் காலகட்டத்தில், நாங்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டிய பகுதியில் புதிதாக கட்டப் பட்ட அண்டர்சன் தொடர் மாடிக் கட்டிடத்தில் குடியேறி இருந்தோம். எனது அப்பாவும், அம்மாவும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என்பதால் அங்கே வீடு கிடைத்திருந்தது. அவை அடிப்படை வசதிகளை கொண்டிருந்தாலும் மிகவும் சாதாரணமான வீடுகள். இருப்பினும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற அதிக சம்பளம் வாங்கும் உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு வசித்தனர்.

அன்று, மத்திய தர வர்க்கத்தினருக்கு இடையில், குறைந்த பட்சம் வீட்டு விடயத்தில் சமத்துவம் நிலவியது. அதே நேரம், அங்கு வாழ்ந்த எல்லோரும் வசதியானவர்களும் அல்ல. அதே மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்த எனது நண்பர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடியதையும் நேரில் கண்டிருக்கிறேன். அன்றைய காலத்தில் ஓரளவு சகோதரத்துவம் நிலவியது. ஒரே மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்த படியால் வர்க்க வேற்றுமை கடந்து பழகும் வாய்ப்புக் கிட்டியது. ஆனால், இன்று அந்த நிலைமை அடியோடு மாறி விட்டது.

இன்று வெள்ளவத்தையில் ஆடம்பரமான மாடிக் கட்டிடங்கள் வந்து விட்டன. மேற்குலக நாடுகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் அந்த வீடுகளில் உள்ளன. வர்த்தகர்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு குடியேறி வாழ்கிறார்கள். ஆங்கிலத்தில் "Gated community" என்று அழைக்கப் படும், சுற்றி வர மதில்கள் கட்டி, பாதுகாப்பு வேலிகள் போட்டு, சமூகத்தில் இருந்து தனித்து வாழும் பணக்காரர்களின் குடியிருப்புகள் அவை.

மத்திய தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்த அதே நாரஹேன்பிட்டியவில் தான் கொழும்பில் மிகப் பெரிய சேரியும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு, பள்ளிக்கூடம் செல்பவர்கள் அந்த சேரியைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதாவது, நாங்கள் குடியிருந்த அண்டர்சன் மாடிக் கட்டிடங்களுக்கு அருகில் ஏழைகள் குடியிருக்கும் சேரியும் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு எந்த வசதிகளும் இருக்கவில்லை.


அன்றிருந்த சிறிமாவோ அரசாங்கம், ஏழைகளை முன்னேற்றுவதற்கு எதையும் செய்யவில்லை. ஆனால், சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது. ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஊட்டச் சத்து குறைந்திருந்த படியால், "திரிபோஷா" என்ற மாவை அறிமுகம் செய்தது. பல தானியங்களை அரைத்து தயாரிக்கப் பட்ட, சத்தான உணவான திரிபோஷா இலவசமாகக் கொடுக்கப் பட்டது.

பெரும்பாலான ஏழைகள் சத்துணவான திரிபோஷா சாப்பிடவில்லை! அதாவது, எந்த நேரமும் சோறும் கறியும் சாப்பிடும் வாய்களுக்கு அது ருசிக்கவில்லை. அதனால், சேரிகளில் வாழும் ஏழைப் பிள்ளைகள், தமக்குக் கிடைக்கும் திரிபோஷா மாவை கொண்டு சென்று விற்பார்கள். அவர்கள் அந்தக் காசில் சத்துக் குறைந்த அரிசி வாங்கிச் சாப்பிடுவார்கள். எமது மாடிக் குடியிருப்புகளில் திரிபோஷா மாவை கொண்டு வந்து விற்கும் பிள்ளைகளிடம் அம்மா அதை வாங்குவார். ஒவ்வொரு நாளும் நாங்கள் அதைக் களி மாதிரிக் குழைத்து சாப்பிடுவோம். அதைச் சாப்பிடும் பொழுது என்னுள் ஒரு குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன்.

சிறிமாவோ காலத்தில் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது கடுமையாக கட்டுப் படுத்தப் பட்டது. தென்னிந்திய தமிழ் சினிமாப் படம் கூட, வருடத்தில் ஒன்றிரண்டு தான் வெளியானது. அதே நேரத்தில், ஈழத்து சினிமா வளர்ச்சி அடைந்தது. உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட சினிமாக்களை பார்த்து விட்டு விமர்சனம் செய்வது எமது பொழுதுபோக்காக இருந்தது. சில உள்ளூர் நடிகர்கள், பாடகர்கள் கூட எம்மத்தியில் பிரபலமாக இருந்தார்கள்.

"இலங்கை எம்.ஜி.ஆர்." என்று அழைக்கப் பட்ட வி.பி. கணேசன் நடித்த நான் உங்கள் தோழன் திரைப்படம் நூறு நாட்கள் ஓடியது. செங்கை ஆழியானின் பிரபல நாவலை படமாக்கிய வாடைக்காற்றும் நூறு நாட்கள் ஓடியது. ஈழத்து திரைப்பட வரலாற்றில் அது ஒரு பெரிய சாதனை.  அவற்றில் வந்த பாடல்கள் பலரின் வாய்களில் முணுமுணுக்கப் படுமளவிற்கு பிரபலமாக இருந்தன.

நான் உங்கள் தோழன், மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், வாடைக்காற்று வட மாகாணக் கரையோர மீனவர்களையும் முதன்மைப் படுத்தி எடுக்கப் பட்டிருந்தன. திரையுலக முதலாளிகளும் உழைக்கும் வர்க்கத்தை காட்சிப் படுத்தி தான் காசு சம்பாதிக்க வேண்டிய நிலைமை இருந்தது.

எத்தகைய பாவனைப் பொருளானாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தால், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப் பட்டது. இதனால் உள்நாட்டு சிங்கள முதலாளிகள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து தமிழ் விவசாயிகளும் பெருமளவு இலாபம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால், மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களும், மத்திய தர வர்க்க உழைப்பாளிகளும் நிறையக் கஷ்டப் பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. லக்சல, சலுசல போன்ற பெயர்களில், அரசாங்கம் நிறுவிய விநியோக மையங்களில் தான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். கிராமங்களில் கூட்டுறவு சங்கக் கடைகள் பிரதானமான விற்பனை மையங்களாக விளங்கின. இதனால், ஒரு பக்கம் பாவனையாளர்கள் கஷ்டப் பட்டாலும், மறுபக்கம் கூட்டுறவு இயக்கம் வளர்ந்தது.

உடைகளைப் பொறுத்த வரையில் உள்ளூர் உற்பத்தியான பருத்தியில் நெய்யப் பட்ட ஆடைகளைத் தான் அணிய வேண்டும். இன்றும் கூட இலங்கையில் எல்லாப் பெண்களும் வீடுகளில் அணியும் காற்றோட்டமான நீண்ட அங்கியும் அப்போது தான் பிரபலமானது. "பற்றிக்" என்ற பெயரிலான, இலங்கைக்கே உரிய தனித்துவமான ஆடைகள் தான் அந்தக் காலத்தில் நாகரிகம் (பேஷன்).

அந்தக் காலத்தில் ஆடம்பரமான உடைகள் அணிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பணக்காரர்கள் கூட அடக்கமாக நடந்து கொண்டார்கள். ஏற்றத்தாழ்வான சமுதாயத்தில், குறைந்த பட்சம் ஆடையிலாவது சமத்துவம் நிலவுகிறது என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அந்தக் காலத்தில் ஏறக்குறைய எல்லோரும் பருத்தி உடை அணிந்தனர். அதை மட்டும் தான் வாங்கக் கூடியதாக இருந்தது.

எனது பன்னிரண்டாவது பிறந்த நாள் அன்று, வழமை போல அப்பா ஒரு பருத்திச் சட்டை வாங்கித் தந்திருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வீட்டிற்கு வந்த ஒருவர், அதைக் கண்டு முகம் சுழித்தார். "பிறந்தநாளுக்கு பருத்திச் சட்டை அணிவார்களா? பட்டுச் சட்டை வாங்கவில்லையா?" என்று இளக்காரமாகக் கேட்டார். அப்போது அது வர்க்க வேறுபாட்டைக் குறிக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அதே நேரம், பருத்தி அணிவதை நான் ஒரு குறையாகக் கருதவும் இல்லை.

சுமாரான, கண்ணைக் கவரும் டிசைன் இல்லாத, இலகுவில் கசங்கக் கூடிய பருத்தி ஆடை, சமூகத்தில் ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினரின் உடையாக கருதப் பட்டது. தரமில்லா விட்டாலும் அது தான் மலிவானது. ஆனால், சிறிமாவோ காலத்தில் அந்நிய நாட்டு இறக்குமதி தடுக்கப் பட்டதால், எல்லோரும் உள்நாட்டு பருத்தி ஆடை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிச்சயமாக பணக்காரர்கள் அதை வரவேற்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் போல விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிய விரும்பினார்கள். 

பட்டு ஆடைகளின் விற்பனை முற்றாக ஒழிக்கப் பட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த எனது பெற்றோர் அந்தளவு ஆடம்பரமாக வாழ நினைக்கவில்லை. ஆனால், அவர்களது நண்பர்களும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. அதன் விளைவு தான், பன்னிரண்டாவது பிறந்தநாள் அன்று எனக்குக் கிடைத்த வர்க்க வேறுபாடு பற்றிய அறிவுரை.

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். எழுபதுகளின் இறுதியில் இலங்கையில் ஆட்சி மாறியது. பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனே நவ தாராளவாத பொருளாதாரத்தை கொண்டு வந்தார். இறக்குமதிக்கு விதிக்கப் பட்டிருந்த தடைகளை அகற்றி, தனியார்மயத்தை புகுத்தினார். அரச ஏகபோகம் நிலவிய போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வழித் தடங்களில், தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப் பட்டன.

எனது அப்பாவும் தனது சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு மினிவேன் வாங்கினார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வழித்தடத்தில் அது சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. சம்பளத்திற்கு அமர்த்தப் பட்ட சாரதி ஒருவர் அதை ஓடிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும். மினிவேன் ஓடப் பழகி விட்ட நான், ஒரு தடவை யாழ் நகரில் இருந்த கராஜிற்கு திருத்துவதற்கு கொண்டு சென்றேன். அப்போது வழியில் வந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னைக் கண்டு விட்டார்.

நான் மினிவேன் ஓடியதைக் கண்ட அவர், அதற்காக என்னைத் திட்டத் தொடங்கினார். "நீயெல்லாம் சாரதி வேலை பார்க்கக் கூடாது" என்று கடிந்து கொண்டார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. அதாவது, மினிவேன் சாரதி வேலை அடிமட்ட பாட்டாளி வர்க்க தொழிலாளிகளுக்கானது. மத்தியதர வர்க்கத்தினர் அந்த வேலை செய்வது தடுக்கப் பட்டுள்ளது. அதாவது, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதிக்கொரு தொழில் இருந்த மாதிரி, முதலாளித்துவ காலகட்டத்தில் வர்க்கத்திற்கு உரிய தொழில்கள் இருக்கின்றன.

பிற்காலத்தில், அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், நானாகவே உழைக்கும் வர்க்கத்தினர் செய்த வேலைகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. நாட்டுப்புற ஏழை மக்களை அரசியல் மயப் படுத்துவதற்காக, அவர்களது வீடுகளில் தங்கியிருந்து, அவர்கள் உண்ணும் உணவை உண்டு, அவர்களுடன் சில நாட்கள் வேலைக்கு சென்றதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதனால், வர்க்க அரசியலை நடைமுறையில் அறிந்து கொள்ள முடிந்தது.

(தொடரும்)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, December 14, 2016

வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!

"ஈழத் தமிழருக்கும் பொதுவுடமைக்கும் சம்பந்தம் இல்லை... அவர்களுக்கு தமிழ்த் தேசியத்தை தவிர வேறெந்த மண்ணும் தெரியாது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் நடந்த சம்பவங்களை எழுதி இருப்பதால், இதை எனது சுயசரிதையின் ஒரு பகுதியாகவும் கருதலாம்.

எனது பதினாறு வயது வரையில், அதாவது அறியாப் பருவத்தில், நானும் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத் தான் இருந்தேன். எனது தந்தை மிகவும் தீவிரமான தமிழ்த் தேசியவாதி. அவருக்கு கம்யூனிசம் பிடிக்காது. கம்யூனிஸ்டுகள், குறிப்பாக ஸ்டாலின் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தான் அவர் எனக்கு போதித்து வந்தார்.

எமது ஊரில் ஈரோஸ் எனும் ஈழப்புரட்சி அமைப்பிற்கு வேலை செய்தவர்கள் மூலமாகத் தான் மார்க்சியம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். அந்த இயக்கத்தினர் மீது பலதரப் பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் தான் என்னைப் போன்ற பலருக்கு மார்க்சியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.

"கார்ல் மார்க்ஸ், கம்யூனிசத்தை மறந்து போன இரண்டு தலைமுறைகள் வந்து விட்டன..." என்று ஒரு நண்பர் கூறினார். உண்மை தான். எண்பதுகளில் இருந்த என்னுடைய தலைமுறைக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. அது எங்களது தவறா அல்லது கல்வி அமைப்பின் தவறா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் கம்யூனிசத்திற்கு இடமில்லை. பாடநூல்களில் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப் பட்டிருந்தது. பாடசாலை ஆசிரியர்கள், குறிப்பாக சமூகக்கல்வி ஆசிரியர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கொள்கையை போதிக்கத் தயங்கவில்லை.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, சமூகவியல் பாடத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கம்யூனிசம் பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போது, வகுப்பறையில் யாராவது ஒரு மாணவர், தப்பித் தவறி கம்யூனிசம் பற்றி மேலும் விளக்குமாறு கேள்வி கேட்டால், ஆசிரியர்கள் எதிர்மறையான பதில்களை கூறி வந்தனர். அரசாங்கம் அவர்களை அப்படித் தான் பயிற்றுவித்தது. (விதிவிலக்காக மலையகத்தில் ஆசிரியர்கள் தான் பொதுவுடைமை கருத்துக்களை விதைத்தார்கள்.)

அந்த எதிர்மறையான பதில்கள் எல்லா மாணவர்களையும் திருப்திப் படுத்தவில்லை. எமது ஆசிரியர் சொன்ன விளக்கத்தில் இருந்தே கேள்வி கேட்டோம். "பொதுவுடைமைக் கொள்கை சமத்துவத்தை, பகிர்ந்துண்பதை வலியுறுத்துகிறது என்றால், அது எப்படி தவறாகும்?" இந்தக் கேள்விக்கு ஆசிரியரிடம் பதில் இருக்கவில்லை. அவரே குழம்பிப் போனார்.

வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கேட்டேன். "ஸ்டாலின் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை...அதற்குப் பலியான இலட்சக்கணக்கான மக்கள்..." என்றெல்லாம் விளக்கம் கூறத் தொடங்கினார். அவரது உலகப் பார்வை, மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துடன் பெரிதும் ஒத்திருந்தது. எனது தந்தையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எனது தந்தை ஒரு பின்தங்கிய கிராமத்தில், ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தவர். ஆனால், கடின உழைப்பின் மூலம் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பதன் மூலம் முன்னேறிய பிரிவில் ஒருவராக இருந்தார்.

எனது தந்தையின் காலத்தில், அவர்களது முன்னேற்றத்திற்கு உதவிய முதலாளித்துவ சமூக அமைப்பு சிறந்தது என்று அவர் தீர்மானித்ததில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்தில், தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள, எனது தந்தையின் பிறந்த ஊரான சரசாலை, இன்றைக்கும் அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய கிராமமாக இருக்கிறது. என்றும் மாறாத ஏழ்மை மட்டுமல்ல, ஆரம்பப் பாடசாலையைக் கூட தாண்டாத பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட கிராமம். ஐம்பது, அல்லது எழுபது வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இலங்கை அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய பொருளாதார நாடு. இது "நடைமுறைக்கு உதவாத மார்க்சியக் கண்ணோட்டம்" அல்ல. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணக் கிராமங்களில் அதை நேரடியாகத் தரிசிக்க முடியும். பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருந்த உயர் சாதி நிலவுடமையாளர்கள், முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்தனர். 

முதலாளித்துவம் கொண்டு வரும் வசதி வாய்ப்புகள், தம்மால் ஒடுக்கப் பட்ட சமூகப் பிரிவினர் முன்னேற வழிவகுத்து விடும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த எனது அப்பாவும், முதலாளித்துவத்தை முற்போக்கானதாக கருதியதில் வியப்பில்லை. அவர்களது அன்றைய சமூக மாற்றத்திற்கு அமைவாக தமிழ்த் தேசிய இயக்கமும் தோன்றியிருந்தது.

பலர் நினைப்பதற்கு மாறாக, தமிழ்த் தேசிய இயக்கம் ஈழத்திற்கு வெளியே கொழும்பு நகரில் தான் வளர்ந்து வந்தது. யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் அதற்கான வாய்ப்புகளை வழங்கி இருக்கவில்லை. முதலாவது தமிழ்க் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், நிலவுடைமையாளர்கள், உயர் சாதியினரின் கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. 

உண்மையில், அன்று இடதுசாரிக் கட்சிகள் மட்டும் தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தின! தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த தமிழரசுக் கட்சிக்கு சவாலாக இடதுசாரிக் கட்சிகள் இருந்தன. அந்த சவாலை எதிர்கொண்டு, இடதுசாரி ஆதரவுத் தளத்தை உடைப்பதற்கு தமிழ்த் தேசியத்தை விட்டால் வேறு வழி இருக்கவில்லை.

"தமிழருக்குள் ஒற்றுமை இல்லை.... தமிழராக ஒன்று படுவோம்..." போன்ற கோஷங்கள் தமிழரசுக் கட்சிக் காலத்தில் எழுப்பப் பட்டன. பிற்காலத்தில் தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும், குறிப்பிட்ட காலம் இந்தியத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சி உருவானது. அதன் மூலம் அவர்களாக "தமிழரின் ஒற்றுமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இந்தக் காலகட்டத்தில் தான், அதாவது எழுபதுகளில், கொழும்பில் பணியாற்றிய எனது தந்தையும் தமிழ்த் தேசிய அரசியலை தீவிரமாகப் பின்பற்றி வந்தார்.

கொழும்பு நகரில் எந்த நேரமும் கலவரம் நடக்கலாம், தமிழர்கள் கொல்லப் படலாம் என்ற அச்சம் நிலவியது. அப்போது "தமிழரின் தாயகமான" யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வாழலாம் என்று எனது பெற்றோர் முடிவெடுத்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயரும் கால இடைவெளியில், என்னை யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்து விட்டனர். அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தேன். சுமார் ஒரு வருட காலம் விடுதியில் தங்கியிருந்த படியால், தமிழ்த் தேசிய அரசியலையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.


அன்றிலிருந்து இன்று வரையில், யாழ் இந்துக் கல்லூரி ஒரு "தமிழ்த் தேசியப் பாடசாலை" என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நான் படித்த காலத்தில், அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பொதுக் கூட்டங்கள் நடக்கும். மாணவர்கள் அதைச் சென்று பார்வையிடுவதற்கு, பள்ளிக்கூட நிர்வாகம் ஊக்குவித்தது. "தமிழினத் தளபதி" அமிர்தலிங்கம், "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆகியோர் அங்கு உரையாற்றினார்கள். நாங்களும் அதைக் கேட்டு கைதட்டி இரசித்தோம்.

கூட்டணியினரின் உணர்ச்சிகரமான உரைகளால் ஆகர்சிக்கப் பட்ட நானும், தமிழ்த் தேசியவாதக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவற்றை எனது டயறியில் பார்த்த அப்பா, இதையெல்லாம் வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என்றார். அந்தளவுக்கு எனது கவிதைகளும் "உணர்ச்சிகரமான தமிழ் இன உணர்வு மிக்க" கவிதைகளாக இருந்தன. அப்போது எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தான் இருக்கும். அரசியலை பகுத்தறியும் பக்குவமற்ற அந்த வயதில், உணர்ச்சிகரமான தமிழ்த் தேசியம் சிறந்த கொள்கை என்று நம்பியதில் வியப்பில்லை.

பதினாறு வயதான பின்னர், எல்லா வகையான நூல்களையும் வாசித்து அறியும் அளவிற்கு பக்குவம் வந்திருந்தது. ஆள் வளர்ந்த படியால் அறிவும் வளர்ந்திருந்தது. அப்போதே ஆடம்பரமான கொண்டாட்டங்களும், கோயில் திருவிழாக்களும் அந்நியத் தன்மையை உணர்த்தின. சூரன் போர் போன்ற திருவிழாக்களுக்கு குடும்பம் முழுவதும் போனாலும், நான் மட்டும் வீட்டில் தனித்திருந்தேன். காலப்போக்கில் வெள்ளிக்கிழமை கோயில்களுக்கு போவதையும் குறைத்துக் கொண்டேன். எமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு சாமியைக் கும்பிடுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை நானாகவே அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

நூலகங்களில் பெரியாரின் பகுத்தறிவு நூல்கள் இருந்தன. பெரியார் தனது கடவுள் மறுப்புக் கொள்கையை மிகவும் எளிமையாக எழுதி இருந்தார். அதனால் வாசித்து அறிந்து கொள்ளவும் இலகுவாக இருந்தது. பெரியாரின் தர்க்க ரீதியான வாதங்கள் சரியெனப் பட்டன. அதைப் பற்றி வீட்டில் விவாதித்த பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஆனால், எனக்கு அவை சரியாகப் பட்டன. ஒவ்வொரு நாளும் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடும் நேரம் நான் மட்டும் ஒதுங்கி இருந்தேன். கோயிலுக்கு போவதையும் தவிர்த்து வந்தேன்.

எனது பெற்றோர் மதப்பற்று அதிகமில்லாத இந்துக்களாக (அல்லது சைவர்களாக) வாழ்ந்தவர்கள். விரதம் பிடிப்பது போன்ற பல மத சம்பிரதாயங்களை, அவர்களே தவறென நையாண்டி செய்தனர். அவர்கள் பின்பற்ற விரும்பிய இந்து மதம் விஞ்ஞான பூர்வமான மார்க்கமாக இருந்தது. ஆகவே, என்னுடைய கோயிலுக்கு போகாத, சாமி கும்பிடாத பழக்கத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது. சிலநேரம் நான் கோயில் திருவிழாவுக்கு சென்றால், "அது பக்தியால் அல்ல..." என்று அம்மாவே கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது.

1983 ம் ஆண்டிற்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியதொரு அரசியல் சூறாவளி வீசியது. அனேகமாக எல்லா இளைஞர்கள் மத்தியிலும் ஈழப் போராட்டம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட வேண்டும். 

அரசியல் என்றவுடன், "ஈழத் தமிழர்கள் எல்லோரும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" என்ற தவறான எண்ணம் நிலவுகின்றது. ஈழத் தமிழ் தேசியவாதிகள் வேண்டுமென்றே அப்படி ஒரு கருத்துருவாக்கத்தை கொண்டு வந்திருக்கலாம். அது அவர்களது விருப்பம். ஆனால், தமிழ் நாட்டினரும், சிங்கள முற்போக்காளர்களும் கூட அப்படி நினைத்துக் கொள்வது வேடிக்கையானது. நிச்சயமாக அது தவறு தான்.

யாழ் நகரில் உள்ள பூபாலசிங்கம் புத்தக சாலையில் மார்க்சிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. 1982 ம் ஆண்டில் கூட, அவற்றின் விற்பனை குறைவாக இருந்தது. ஆனால், ஈழப்போரின் ஆரம்பமாக கருதப் படும் 1983 ம் ஆண்டிற்குப் பின்னர் கடையில் ஒரு நூல் கூட மிச்சமில்லாமல் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. நம்ப முடியுமா?


மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவல் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகங்களில் அது எப்போதும் இரவல் கொடுக்கப் பட்டு வந்தது. அத்தோடு ராகுல சங்கிருத்தியான் எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலும் அதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்டன. நானே மாதக் கணக்காக காத்திருந்து தான் அந்த நூல்களை வாங்கி வாசித்தேன். அந்தளவுக்கு யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் மார்க்சியம் குறித்த தேடல் பல மடங்கு அதிகரித்திருந்தது.

(தொடரும்)

Wednesday, November 23, 2016

சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் ஈழத் தமிழரின் வர்க்க முரண்பாடுகள்

"ஈழத் தமிழர் மத்தியில் வர்க்க முரண்பாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கத்தினராக இருப்பது அதிசயமல்ல. நிரந்தரமான வருமானம், வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தமக்கு கீழே உள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். 

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத" சதிகாரர்களின் முகத்திரை கிழியும் போதெல்லாம் இனவாத போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள். "ஐயோ! தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்களே...." என்று ஊளையிடுவார்கள். இவர்களது "இனப் பற்று" பணக்காரர்களை பாதுகாக்கும் கவசம் என்பதை மக்கள் உணர விடாது ஒப்பாரி வைப்பார்கள். 

சமூக கட்டமைப்பில் மேலே உள்ள முதலாளிய வர்க்கத்தையும், கீழே உள்ள உழைக்கும் வர்க்கத்தையும் சமரசப் படுத்தி வைத்து ஆதாயம் அடைந்தவர்கள். போலியான வர்க்க சமரசத்தை உடைய விடாமல் பாதுகாக்கும் நோக்கில் "இன ஒற்றுமை", "மத உணர்வு", "கலாச்சார பாரம்பரியம்" போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வார்கள்.

(ஈழத்) தமிழர்கள் தமக்கிடையிலான வர்க்க முரண்பாடுகளை மறைத்து வந்தாலும், சில நேரங்களில் அவர்களை அறியாமலே வெளிக் கிளம்பி வருகின்றன. புலம்பெயர் நாடொன்றில் வாழும் புதுப் பணக்காரர், தமது மகளின் சாமத்திய (மஞ்சள் நீராட்டு) சடங்கை ஆடம்பரமாக நடத்திய விடயம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

சாமத்திய சடங்கு சரியா, பிழையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது போன்ற பணக்காரர்கள் பகட்டுக் காட்டும் ஆடம்பரமான விழாக்கள் பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்துவதை மறுக்க முடியாது.

ஆடம்பரத்தை எதிர்ப்பவர்கள், "எம்மக்கள் வறுமையில் வாழ்கையில் இத்தகைய ஆடம்பரம் தேவையா? அந்தப் பணத்தை கஷ்டப் படுவோருக்கு கொடுக்கலாமே?" என்று நியாயம் கூறுகின்றனர்.

அதே நேரம், ஆடம்பரத்தை ஆதரிப்பவர்களும் தமக்கென நியாயம் வைத்திருக்கிறார்கள். "அவனுடைய பணம்... அவன் காசு வைத்திருக்கிறான் அதனால் செலவு செய்கிறான்... நீங்க ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது!" என்று பணக்காரத் திமிருடன் நியாயம் பேசுகின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா இனங்களைப் போன்றும், (ஈழத்) தமிழர்களும் இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்ட சமுதாயம் தான். நீண்ட காலமாகவே பரம்பரைப் பணக்காரர்கள் தமது ஆடம்பர விழாக்களை மற்றவர்கள் கண்களுக்கு தெரியா வண்ணம் மூடி மறைத்து வந்தனர். அதனால், எஞ்சிய உழைக்கும் வர்க்க மக்களுக்கும் பணக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

எண்பதுகளுக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்தியில் இருந்து புதிய பணக்கார வர்க்கம் ஒன்று தோன்றியது. அவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும், "அற்பனுக்கு பவுசு வந்த மாதிரி" புதிய பணக்காரர்கள் தமது செல்வத்தை விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொண்டனர். அதில் ஒரு வகை தான் மகளின் சாமத்திய சடங்கை ஆடம்பரமாக நடத்துவது.

பரம்பரைப் பணக்காரர்கள் ஒரு மூடுண்ட சமூகமாக தமது வர்க்கத்தை சேர்ந்தவர்களுடன் மட்டும் பழகுவார்கள். ஈழத்தில் பரம்பரைப் பணக்காரர்களாக இருந்த சமூகம் புலம்பெயர்ந்து, பல தசாப்த காலமாகவே இங்கிலாந்தில் வாழ்கின்றது. அவர்களது வீடுகளில் நடக்கும் ஆடம்பர விழாக்களின் படங்கள், வீடியோக்கள் வெளியே கசிவதில்லை. அந்தளவுக்கு இரகசியம் பேணப் படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களது வர்க்கத்தினரை தவிர, வெளியில் யாருடனும் பழகுவதில்லை.

ஆனால், புதுப் பணக்காரர்களால் அப்படி நடக்க முடிவதில்லை. பத்து, அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் அவர்களும் சாதாரண உழைக்கும் வர்க்கமாக இருந்திருப்பார்கள். அவரது சமூகத்தில் அவர் மட்டும் ஏதோ ஒரு குறுக்கு வழியில் செல்வம் சேர்த்தவராக இருப்பார். முன்பொரு தடவை தனது மகளை சாமத்திய சடங்கிற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றவர், புலிகளுக்காக சேர்த்த பணத்தை சுருட்டியவர் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் புதுப் பணக்காரர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு பழைய பணக்காரர்கள் செல்வதில்லை. அதனால் இன்னமும் தொடர்பில் உள்ள உழைக்கும் வர்க்க உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அப்படி அழைக்கப் படுபவர்கள் தமது உறவினர்/நண்பரின் ஆடம்பர களியாட்டத்தை அம்பலப் படுத்தும் வீடியோ, படங்களை வெளியே கசிய விடுகின்றனர்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதை பொறாமை என்று சொன்னாலும் அதுவும் வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எழுகின்றது. இதற்கு முன்னர் அவர்கள் தமக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

வர்க்க முரண்பாடுகளால் ஏற்படும் இது போன்ற சச்சரவுகள் ஏனைய இனங்களிலும் நடக்கிறது. ஐரோப்பிய மொழிகளைப் பேசும் சமூகங்களில் கூட இந்தப் பிரச்சினை உள்ளது. டச்சு மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Doe maar normaal, dan doe je al gek genoeg!" அதன் மொழிபெயர்ப்பு: "நீ சாதாரணமாக நடந்து கொள், அதுவே மற்றவர்களை கிறங்க வைக்கப் போதுமானது!"

பந்தா காட்டுவது, பகட்டுக் காட்டுவது, இதுவே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் நம்மிடையே உண்டு? "அந்தஸ்து", "கெளரவம்" முக்கியம் என்பதற்காக பலர் தம்மையறியாமலே ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இப்படியான அந்தஸ்து பார்க்கும் செயல்கள் வர்க்க முரண்பாடுகளை அதிகரிக்கும். அதன் விளைவை தான் மேலே பார்த்தோம்.

இந்த வர்க்க முரண்பாடு புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழியில் வர்க்க முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். கீழே உள்ளது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவு. புட்சிட்டி எனப்படும் நவீன சூப்பர் மார்க்கெட்டில் மரக்கறி வாங்கச் சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமாரை ஒருவர் படம் பிடித்து போட்டிருந்தார்.
 

//ஏன்டா டேய் நீ எங்களை மாதிரி சந்தையிலை மரக்கறி வாங்க மாட்டிய டா பூட்சிற்றில வாங்கினாத்தான் சாப்பிடுவியா?//

இது யாழ்ப்பாணத்தில் வாழும் ஒருவரது முகநூல் பதிவு. இதைக் கண்டித்த எல்லோரும் "பிரபலங்களை பின்தொடர்ந்து படம் பிடிக்கும் தவறை" மட்டுமே சுட்டிக் காட்டினார்கள். இந்தப் பதிவை இட்டவர் ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளராக இருக்கலாம். கஜேந்திரகுமார் கட்சியுடன் நடக்கும் குடுமிப்பிடி சண்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அதையும் மீறி அவர் சொல்ல வரும் வர்க்க வேறுபாட்டை யாரும் கணக்கெடுக்கவில்லை. இதில் த.தே.கூ. ஆதரவாளர்களும் அடக்கம்.

ஈழப்போருக்கு பின்னரான உலகமயமாக்கல் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்திலும் Food City என்ற நவீன பல்பொருள் அங்காடிகள் வந்து விட்டன. முன்னொரு காலத்தில், யாழ்ப்பாணத்தவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு, மேற்குலகிற்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது மேற்குலகு அங்கே செல்கின்றது. அது தான் உலகமயமாக்கல்.

இலங்கையில் இன்று இரண்டு முரண்பாடு கொண்ட வர்க்கங்கள் இருப்பது முன்னரை விட துலக்கமாகத் தெரிகின்றது. நகரங்களில் முளைக்கும் நவீன அங்காடிகளில் ஐரோப்பாவில் உள்ள அத்தனை பாவனைப் பொருட்களும் கிடைக்கும். விலையும் ஐரோப்பிய மட்டத்திற்கு உள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே அங்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.

ஏழைகள், வசதி குறைந்தவர்கள் இன்றைக்கும் வழமையான மரக்கறி சந்தைகளை நம்பி வாழ்கின்றனர். சிலபேர் சாதாரண மரக்கறி சந்தையை விட, புட்சிட்டியில் விலை மலிவு என்று வாதாடலாம். சிலநேரம் இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையில் வர்க்கம் சார்ந்த இரண்டு வகையான பொருளாதாரங்கள் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கின்றன. அது தான் இங்கே முக்கியம். பணக்காரர்கள் செல்லும் கடைகள், ஏழைகள் செல்லும் கடைகள் என்று வித்தியாசம் வந்துவிட்டது. அதற்கு இந்தப் பதிவே சாட்சியம்.

கஜேந்திரகுமார் கட்சியுடன் முரண்படும் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இந்தப் பதிவை கண்டித்த காரணமும் அது தான். அவர்களும் பணக்கார மேல்தட்டு வர்க்கத்தின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் தான். என்ன தான் எதிர்ப்பு அரசியல் பேசினாலும், கடைசியில் எல்லோரும் சங்கமிக்கும் இடமும் இது தான்.

சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய நகரங்களுக்கும் வந்து விட்டன. அவற்றில் விற்பனையாகும் பொருட்களின் விலைகளும் ஐரோப்பிய தரம் அளவிற்கு அதிகமாக உள்ளன. "ஐரோப்பிய தரத்திற்கு விலை இருந்தாலும் அது ஒரு பிரச்சினை இல்லை" என்று அங்கு வாழும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்து ஏழைகளும் அங்கு பொருட்களை வாங்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாம்.

அடடே... இலங்கையும் ஒரு பணக்கார நாடாகி விட்டது என்பதை அறியும் பொழுது மெய்சிலிர்க்கிறது. பிறகெதற்கு அங்கிருப்பவர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள்? ஒரு பணக்கார நாடான இலங்கை, எதற்காக IMF, உலகவங்கியிடம் கடன் வாங்குகிறது?

இலங்கையில் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் ஐரோப்பிய விலைகளை ஒத்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு தரமான சட்டையின் விலை 1600 ரூபாய்கள். அதாவது சரியாகப் பத்து யூரோ! அண்மைக் கால விலையேற்றத்தின் பின்னர், மதுபானங்களின் விலை ஐரோப்பாவை விட அதிகம் என்பது வேடிக்கையானது.

பணக்காரர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால், வருமானம் குறைந்த ஏழைகளின் நிலைமை? பெரும்பாலான உழைக்கும் மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

பெட்டிக் கடை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் கூட விலைவாசி உயர்வு குறித்து முறையிடுகிறார்கள். பொருட்களின் விலைகள் ஏறி விட்டதால், கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதனால் முன்னரை விடக் குறைந்த அளவில் விற்பனையாகின்றது. அதை விட தமக்குக் கொடுக்கும் கமிஷனின் அளவையும் குறைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலை ஐரோப்பிய தரத்திற்கு உயர்ந்திருந்தால், அங்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் ஐரோப்பிய தரத்திற்கு சமமாக இருப்பது தானே நியாயம்? விலைவாசியை உயர்த்தியது மாதிரி சம்பளத்தையும் உயர்த்துவது தானே முறை?

இந்தக் கேள்வியை கேட்டால் இனப் பற்றாளர்கள், கருத்துக் கந்தசாமிகள், மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.


Monday, May 02, 2016

சாதிவெறி- வர்க்கத் துவேஷிகள் அரசுடன் கைகோர்க்கும் இடதுசாரி எதிர்ப்பரசியல்


இலங்கையில் நடந்த மேதினப் பேரணிகளின் படங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டு வந்தேன். அப்போது, அதற்குள் முன்னிலை சோஷலிசக் கட்சியின் மேதினப் படங்களும் இருந்தன. அதைக் கண்டு கொதித்துப் போன, "தமிழ் இன உணர்வாளர்"(?) ஒருவர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்:

//இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?//

ஒரு காலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இருந்தால், நாங்கள் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவியாக தேர்தலை பகிஷ்கரித்தார்கள். அதற்காக, மகிந்த புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக, மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

"ஒருகாலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள்" என்பது குற்றம், குறை கண்டுபிடிப்பவர்களின் தொழில். அது ஆரோக்கியமான அரசியல் அல்ல. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், கூட்டணி, கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் குறிப்பிட்ட சில காலங்கள் சிங்கள அரசை ஆதரித்து வந்துள்ளன.

இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்த காலத்தில், புலிகள் பிரேமதாச அரசுடன் ஒத்துழைத்து, தென்னிலங்கையில் புகலிடம் பெற்றனர். சிங்கள இராணுவத்திடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர்.

புலிகளின் சரி, பிழைகளுக்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே மாதிரியான கோணத்தில் இருந்து தான் முன்னிலை சோஷலிசக் கட்சியை நாங்கள் பார்க்கவேண்டும். புலிகள் அல்ல, அவர்களை ஆதரித்த மக்கள் தான் முக்கியம். அதே மாதிரி மு.சோ.கட்சிக்கு பின்னால் உள்ள மக்கள் தான் முக்கியம். 

மு.சோ.க., ஜேவிபி இல் இருந்து பிரிந்த கட்சி என்ற உண்மையை மறைத்துக் கொண்டு பேசுவது ஒரு திரிபுபடுத்தல். அவர்கள் ஜேவிபி இல் இருந்த காலத்தில், அது வலதுசாரிக் கட்சியாக தான் இருந்தது. அதிருப்தியடைந்து, விமர்சனங்களை வைத்து பிரிந்து சென்றவர்களின் இது புதிய கட்சி என்பதால் இப்போதும் இடதுசாரிகளாக இருக்கிறார்கள்.

ஒரு வலதுசாரிக் கட்சியானது, மகிந்த அரசை மட்டுமல்ல, ஒபாமா அரசையும் ஆதரிக்கும். ஜேவிபி வலதுசாரிப் பாதையில் சென்று மகிந்த அரசை ஆதரித்த நேரம், அதை எதிர்த்து பிரிந்து சென்றவர்கள் தான், பின்னர் முன்னிலை சோஷலிசக் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கினார்கள். அது குறித்த சுயவிமர்சனங்களையும் வைத்துள்ளனர்.

போர் முடிந்த சில வருடங்களிலேயே, கூட்டமைப்பு சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதும், தற்போது மைத்திரி அரசை ஆதரிக்கும் போதும் கண்டுகொள்ளாதவர்கள், மு.சோ.கட்சியை விமர்சிப்பதற்கு அருகதை அற்றவர்கள்.

"இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?" என்று முன்னிலை சோஷலிசக் கட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகை வாசிப்பது, சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமைவாகவே நடக்கிறது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் எந்தக் காலத்திலும் சேர விடாமல் தடுத்து, அவர்களுக்கு இடையில் பகைமையை வளர்க்கும் உள்நோக்கம் கொண்டது.

இதுவும் அதே "தமிழ் இன உணர்வாளரின்" கேள்வி தான்: 
//இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?//

ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சி மீது, இது போன்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துவோர், உண்மையிலேயே தமிழர் நலனில் இருந்து தான் பேசுகின்றார்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. 

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது கடந்த எழுபது வருட கால வரலாற்றில், இனவாதம் பேசி ஆட்சி நடத்தியதுடன், தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள், இனப்படுகொலைகள் நடத்தி வந்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன், மனோகணேசன் ஆகியோர் மைத்திரி அரசில் மந்திரிகளாக இருக்கிறார்கள்.

அல்லும் பகலும் தமிழர்களின் நலன்களுக்காகவே சிந்திக்கும் தமிழ் இன உணர்வாளர்கள், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் மர்மம் என்னவோ? "இனக்கலவரம், இனப்படுகொலை நடத்திய யு.என்.பி கட்சி புனிதமாகி விட்டதா?" என்று விஜயகலா, மனோ கணேசனிடம் கேட்காத காரணம் என்னவோ?

தமிழ் பேசும் மேட்டுக்குடியினரின் ஆதரவைப் பெற்ற UNP போன்ற வலதுசாரிக் கட்சிகள், எத்தனை தமிழர்களை கொன்று குவித்திருந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஜேவிபி தேர்தலில் இனவாதம் பேசி பிரச்சாரம் செய்தது என்று துள்ளிக் குதிக்கிறார்கள். இது அவர்களது மனதில் உள்ள வர்க்க துவேஷத்தை எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாது சாதிவெறியும் இன்னொரு காரணம்.

தென்னிலங்கையில் உள்ள UNP, SLFP போன்ற வலதுசாரி அரசியல் கட்சிகள், கொவிகம (வெள்ளாளர்) ஆதிக்க சாதியினரால் தலைமை தாங்கப் படுகின்றன. அது மட்டுமல்லாது சிங்கள மேட்டுக்குடியினர், சிங்கள முதலாளிகளின் நிபந்தனையற்ற ஆதரவையும் கொண்டுள்ளன. அதனால் தமிழ் வலதுசாரிகள் அந்தக் கட்சிகளுடன் கூட்டு வைப்பதற்கு பின் நிற்பதில்லை.

இதற்கு மாறாக, ஜேவிபி, மு.சோ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில், இடைத்தர, தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்ளனர். மேலும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பெரும்பாலும் சிங்கள சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் ஆவார்கள். எந்தவொரு சிங்களப் பெரு முதலாளியும் அந்தக்  கட்சிகளை  ஆதரிப்பதில்லை. 

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிவெறியர்களும், வர்க்கத் துவேஷிகளும், ஜேவிபி, மு.சோ.க. ஆகிய அடித்தட்டு மக்களின் கட்சிகளுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் புரிந்து கொள்ளத் தக்கது. அதே "நியாயவான்கள்", UNP போன்ற மேட்டுக்குடி சிங்களவர்களின் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும் கண்கூடு. அவர்கள் தமது ஆதரவை என்றைக்குமே மறைக்கவில்லை.

இனம் இனத்தோடு தான் சேரும். தமிழ் வெள்ளாளர்கள், சிங்கள கொவிகமவுடன் தான் கூட்டுச் சேர்வார்கள். தமிழ் மேட்டுக்குடி வர்க்கம் சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தோடு தான் ஒன்று சேரும். அது தான் வர்க்க அரசியல். 

Thursday, April 16, 2015

சிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீய சக்திகள் தான்


வர்க்கத் துவேஷம் என்பது, இனத் துவேஷத்திற்கு சற்றிலும் குறைவில்லாத தீய குணம் தான். அதனால், வர்க்க விரோதிகளும், இனவெறியர்கள் போன்றே ஆபத்தானவர்களாக கருதப் பட வேண்டும். 

1973 ஆம் ஆண்டு, சிலியில் பினோச்சேயின் சர்வாதிகார ஆட்சி வரும் வரையில், அங்கே எந்தவொரு இடதுசாரி தீவிரவாத அமைப்பும் ஆயுதப் போராட்டம் நடத்தவில்லை. சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஜனநாயக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய அய்யேண்டே ஆட்சிக் காலத்தில், வலதுசாரிகள், முதலாளிய ஆதரவாளர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. 

ஆயினும், இராணுவ ஜெனரல் பினோச்சே தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய, CIA மற்றும் வலதுசாரி சதிப்புரட்சியாளர்கள், இடதுசாரி, கம்யூனிச சக்திகள் மீது கொலைவெறி கொண்டு பாய்ந்தார்கள். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள். சமுதாயத்தில் நிலவும் வர்க்கத் துவேஷம் கூட, இனப்படுகொலைக்கு வழிவகுக்கலாம் என்பதை சிலியில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. 

ஜனநாயகப் பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிச ஜனாதிபதி அய்யேண்டே ஆட்சி நடத்திய காலத்திலேயே, CIA அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. வெனிசுவேலாவில் நடந்ததைப் போன்று, சிலியிலும் மத்தியதர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். முகாம்களில் இருந்த படையினரை உசுப்பி விடுவதற்காக, மத்தியதரவர்க்க பெண்கள் முகாம்களுக்குள் தானியங்களை வீசினார்கள். படையினர் கோழைகள், கோழிகள் போன்றவர்கள் என்று சீண்டுவதே அதன் நோக்கம். அரசுக்கு எதிராக இராணுவத்தை திருப்பி விட இது போதாதா?

இராணுவ சர்வாதிகார அரசு, அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. பிரஜைகளுக்கான சட்டப் பாதுகாப்பை இரத்து செய்தது. சோஷலிசம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கூட கைது செய்யப் பட்டு துன்புறுத்தப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின.

தலைநகரில் உள்ள மிகப் பெரிய விளையாட்டு மைதானமான Estadio Nacional இல், சதிப்புரட்சிக்கு அடுத்த நாள் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களான 600 பேர் கொண்டு வரப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடு திரும்பிச் செல்லவில்லை. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த 17 வருட காலங்களில், குறைந்தது 40000 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.

அய்யேண்டே பதவிக்கு வருவதற்கு தேர்தலில் ஒட்டுப் போட்ட, பெருமளவு வாக்காளர்கள் வாழ்ந்த இடங்களின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப் பட்டது. பினோச்சேயின் நேரடி உத்தரவின் பேரில், நூற்றுக்கணக்கான கைதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். படையினர் அங்கு அவர்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். சிலரை உயிரோடு கொளுத்தினார்கள். பலரது கால் எலும்புகள் முறிக்கப் பட்டன. கண்கள் தோண்டியெடுக்கப் பட்டன. உயிரற்ற உடல்கள் குப்பைக் குவியல்களுடன் வீசப் பட்டன. அன்று பலியானவர்கள் செய்த ஒரேயொரு குற்றம், சோஷலிச மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக அரசை ஆதரித்தது தான்.

நிச்சயமாக, எல்லா இராணுவ அதிகாரிகளும் மக்களுக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், மறுத்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். இரக்கமற்று கொலை செய்யப் பட்டனர். Carlos Prats என்ற இராணுவ அதிகாரி, சதிப்புரட்சியில் ஈடுபட மறுத்து ஆர்ஜெந்தீனாவுக்கு தப்பியோடினார். அங்கு வைத்து கார்க் குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப் பட்டார்.

மக்கள் மத்தியில் பயங்கரத்தை விதைப்பதற்காகவே DINA (Dirección de Inteligencia Nacional) என்றொரு புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது. அந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த Villa Grimaldi எனும் சித்திரவதை முகாமில் சொல்லொணா கொடுமைகள் நடந்துள்ளன. 

1978 ம் ஆண்டு முகாம் மூடும் வரையில், குறைந்தது 4500 இளைஞர்களும், யுவதிகளும் சித்திரவதை செய்யப் பட்டனர். வன்புணர்ச்சி, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நீருக்குள் அமிழ்த்தல், போன்ற கொடுமைகள் தினந்தோறும் நடந்துள்ளன. பெண்கள் விசேடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். பெண்ணுறுப்புக்குள் எலியை அல்லது சிலந்தியை பிடித்து விட்டார்கள். நாய்களுடன், ஆண் குடும்ப உறுப்பினருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென பலவந்தப் படுத்தப் பட்டனர்.

17 வருட கால இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், பினோச்சே இடதுசாரிகள் அனைவரையும் அழிக்க விரும்பினான். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் எல்லோரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது. 

சிலியில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த காலங்களில், குறைந்தது 82000 பேர் கைது செய்யப் பட்டனர். 30000 பேர் சித்திரவதை செய்யப் பட்டனர். 3000 பேர் கொல்லப் பட்டனர். சிலியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள், Report of the Chilean National Commission for Truth and Reconcilliation இல் பதிவு செய்யப் பட்டுள்ளன.  

இராணுவ சதிப்புரட்சியின் பின்னர், அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் சிலி மறுசீரமைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் நவ தாராளவாத கொள்கையின் பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தப் பட்டது. அதாவது, பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது. முதலாளிகளுக்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப் பட்டது. இதனை நிறைவேற்றிய நிபுணர் குழுவில், நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் பிறீட்மன் கூட அங்கம் வகித்திருந்தார். சிலி சதிப்புரட்சியிலும், அதற்குப் பின்னரான இனப்படுகொலையிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

வலதுசாரி இராணுவ சர்வாதிகாரி பினோச்சேயினால், இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்த முடிந்ததே தவிர, முற்றாக அழிக்க முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப் பட்டது. அப்போது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட சிலி கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிசக் கட்சி என்பன தற்போது வளர்ந்து வருகின்றன. 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு சோஷலிஸ்ட், சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப் பட்டார். 

2014 ம் நடந்த தேர்தலில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியான Michelle Bachelet, பினோச்சே சர்வாதிகாரத்தினால் பாதிக்கப் பட்டவர். அவரது தந்தை அல்பேர்ட்டோ படையினரால் கொலை செய்யப் பட்டார். அப்போது நாட்டை விட்டு வெளியேறிய Michelle Bachelet, 1979 ம் ஆண்டு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டார்.

சிலி தொடர்பான முன்னைய பதிவு:
9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்