Showing posts with label பொதுவுடைமை. Show all posts
Showing posts with label பொதுவுடைமை. Show all posts

Wednesday, April 11, 2018

பொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை

அரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். 

இது நாங்கள் எந்தளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மலட்டு சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றது. மார்க்சியம் அடைய விரும்பும் இலக்கான கம்யூனிச சமுதாயம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், பண்டைய அரசியல் அமைப்பை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானது.

எமக்கு தெரிந்த ஆங்கிலச் சொல்லான "Politics" என்பது உண்மையில் ஒரு கிரேக்கச் சொல். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டத்தில் நாகரீகமடைந்த சமுதாயமான கிரேக்கர்களின் நாடுகள் "Polis" என்று அழைக்கப் பட்டன. போலிஸ் என்றால், தமிழில் ஊர் அல்லது நகரம் என்று அர்த்தம் வரும்.

ஒரு கோயில் அதை சுற்றிய குடியிருப்புகள், அதை சுற்றிய வயல்கள், எல்லையோர காடுகள், மலைகள் என்பனவற்றை உள்ளடக்கியது தான் கிரேக்கர்களின் போலிஸ். ஒரு நகரமயமாக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவுகளை எடுக்கும் செயலுக்குப் பெயர் பொலிட்டிக்ஸ். அதாவது அரசியல் என்ற சொல்லை, நாம் "நகரியல்" என்று இன்னொரு பெயரில் அழைக்கலாம்.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுஸ்தலத்தை, தமிழில் "தேவாலயம்" என்று மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது ஆங்கிலத்தில் "Church" என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ஆங்கில சொல்லான சர்ச், ஜெர்மன் சொல்லான Kirche என்பதில் இருந்து வந்தது. அதன் மூலம் "Kuriake" என்ற கிரேக்க சொல். அதன் அர்த்தம் ஆண்டவரின் இருப்பிடம். (தமிழில்: ஆலயம் அல்லது கோயில்) ஆனால், ஆதி கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை! அவர்கள் "Ekklesia" என்ற சொல்லை பாவித்தார்கள். இன்றைக்கும் கிரேக்க கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பாவிக்கிறார்கள்.

எக்லேசியா என்றால் சபை என்று அர்த்தம் வரும். அதாவது முன்னர் குறிப்பிட்ட போலிஸ் சமூக உறுப்பினர்கள், பொலிட்டிக்ஸ் செய்யுமிடத்தின் பெயர் தான் எக்லேசியா. "பொது மக்கள் கூடுமிடம்" என்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த சொல், ஆண்டவனின் சந்நிதானமாகி, இன்று அரசு என்ற கட்டமைப்பாகி உள்ளது.

அரசு என்ற ஸ்தாபனத்திடம் இருந்து அரசியலை மீட்டெடுப்பதே, இன்றுள்ள மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மேட்டுக்குடி அரசியலை, மக்கள் அரசியலாக்க வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் எந்த அர்த்தத்தில் அரசியலை பயன்படுத்தி வந்தார்கள் என்பதை இன்றுள்ள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிச நாடு ஒன்றை உருவாக்குவதற்கான கோட்பாடு, கார்ல் மார்க்ஸ், லெனினிடம் இருந்து தொடங்கியதாக, இன்றைக்கும் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, 1516 ம் ஆண்டு, Sir Thomas More என்ற ஆங்கிலேயர், "Utopia" என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த நூல், நவீன கம்யூனிச சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல மனிதநேயவாதிகள் அந்த நூலில் வர்ணிக்கப் பட்டதைப் போன்ற நாடொன்றை உருவாக்க வேண்டுமென கனவு கண்டனர்.

கிரேக்க மொழியில் "இல்லாத ஓர் இடம்" என்ற அர்த்தம் வரும் உத்தொபியா என்ற கனவு தேசமான ஒரு தீவு, எல்லோருக்கும் நீதி, சமத்துவம், செல்வச் செழிப்பு என்பனவற்றைக் கொண்டிருக்கும். அனைவருக்கும் தேவையான அளவு உணவு, உறையுள் கிடைக்கும். எவருக்கும் தனிப்பட்ட சலுகையோ, அல்லது அந்தஸ்தோ வழங்கப் பட மாட்டாது.

தனி உடைமை இருக்காது. ஆண்களும், பெண்களும் சமமாக வேலை செய்வார்கள். ஏதாவது தொழிலில் பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள். தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களை சேர்த்து வைக்க வேண்டிய அவசியமிராது. ஒவ்வொருவரும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு சுதந்திரம் இருக்கும். மக்கள் சமாதானமாக வாழ்வார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிடுவதற்கு யாரும் கிடையாது.

தாமஸ் மூர் வாழ்ந்த காலத்தில், இவ்வாறான சிந்தனை வெறும் கனவு மட்டுமே. அத்தோடு, அவர் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர் என்பதால், சில கிறிஸ்தவ நற்பண்புகளையும் குறிப்பிட்டிருந்தார். 19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்கள் சிலர், உத்தொப்பியா போன்றொதொரு நீதியான, சமத்துவமான சமுதாயத்தை, நிஜ உலகில் உருவாக்கும் சாத்தியம் பற்றி சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் அந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 


கம்யூனிசம் என்பது "கார்ல் மார்க்ஸ், லெனினுக்கு பிறகு உருவான கொள்கை" என்று சில "படித்தவர்கள்" கூட தவறாக நினைக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்றப் புரட்சிக் காலத்திலேயே பொதுவுடைமை சிந்தனை, ஒரு அரசியல் இயக்கமாக பரிணமித்திருந்தது.

இங்கிலாந்து மன்னராட்சிக்கு எதிராக, குரொம்வெல் தலைமையில் பாராளுமன்றம் புரட்சி செய்தது. அது இங்கிலாந்து குடியரசாவதற்கான பாராளுமன்றவாதிகளின் புரட்சி மட்டுமல்ல. கத்தோலிக்க மத மேலாதிக்கத்திற்கு எதிரான, புரட்டஸ்தாந்து அடிப்படைவாதிகளின் புரட்சியாகவும் இருந்தது.

அந்தப் புரட்சிகர காலகட்டத்தில், Diggers என்று அறியப்பட்ட அமைப்பினர், நிலங்களை பொதுவுடமையாக்கி, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர். அதனால் விவிலிய நூலில் உள்ள சமநீதிப் போதனைகளை மேற்கோள் காட்டி, துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர்.

*******

//கேள்வி: கம்யூனிச முறையிலான சமுதாய அமைப்பு, குடும்பத்தின் மீது என்ன செல்வாக்குச் செலுத்தும்?

பதில்: ஆடவர், மகளிர் இருபாலினருக்கும் இடையிலான உறவு, அதிலே ஈடுபட்ட இரு நபர்கள் சம்பந்தப் பட்டதும், சமுதாயத்தின் தலையீடுக்கு அவசியமில்லாத, முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக ஆக்கும்.

அவ்வாறு செய்ய முடிந்ததற்கு காரணம், அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. குழந்தைகளுக்கு சமுதாய முறையில் கல்வி போதிக்கிறது. தனியார் சொத்துடைமையால் நெறியாக்கம் செய்யப்பட்டு வந்த, மனைவி அவளது கணவனை சார்ந்திருப்பது, குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருப்பது எனும் அடிக்கல்களை தகர்த்தழிக்கிறது.

கம்யூனிசத்தின் கீழ் மனைவிகள் பொதுவாக்கிக் கொள்ளப் படுவதாக, ஒழுக்க நெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்பும் கூக்குரலுக்கு அளிக்கப்படும் பதிலாகும் இது. மனைவிகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் உறவு முற்றிலும் முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு உரியது. அது இன்றும் விபச்சாரம் என்ற வடிவில் நிலவி வருகின்றது.

விபச்சாரம் தனியார் சொத்துடமையுடன் சம்பந்தப்பட்டது. கம்யூனிச முறையிலான அமைப்பு, மகளிரை பொதுவாக்கிக் கொள்வதை நிலைநாட்டுவதற்கு மாறாக, அதற்கு முடிவு கட்டுகிறது.//

- பி. எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

Saturday, August 19, 2017

21 ம் நூற்றாண்டில் ஒரு க‌ம்யூனிச‌ சொர்க்க‌புரி, இது "டிஸ்னி லேன்ட்" அல்ல‌!


இது "டிஸ்னி லேன்ட்" அல்ல‌, க‌ம்யூனிச‌ சொர்க்க‌புரி! ர‌ஷ்யாவில் இன்றைக்கும் சிற‌ப்பாக‌ இய‌ங்கும் க‌ம்யூனிச‌ ந‌க‌ர‌ம். இது அங்கு வாழும் ம‌க்க‌ளின் தெரிவு. யாரும் அவ‌ர்க‌ளை க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. (இன்றைய‌ ர‌ஷ்யாவில் க‌ம்யூனிச‌த்தை வெறுக்கும் முத‌லாளித்துவ‌ அர‌சு ஆட்சியில் இருப்ப‌தையும் குறிப்பிட‌ வேண்டும்.)

 ஸ்டாலின் கால‌த்தில், சோவிய‌த் யூனிய‌னில் கூட்டுழைப்பு ப‌ண்ணை (Collective farm) முறை கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. நாட்டுப்புற‌ங்க‌ளில், அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்த‌து. அர‌ச‌ ப‌ண்ணைக‌ள் (Sovkhoz) த‌னியாக‌வும், ம‌க்க‌ளின் கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் (Kolkhoz) த‌னியாக‌வும் இருந்த‌ன‌.

தொண்ணூறுக‌ளில், சோவிய‌த் யூனிய‌னின் வீழ்ச்சிக்குப் பின்ன‌ர், பொதுவுடைமைப் ப‌ண்ணைக‌ள் த‌னியார்ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. நில‌ம் சிறு துண்டுக‌ளாக‌ ப‌கிர்ந்த‌ளிக்க‌ப் ப‌ட்ட‌து. விவ‌சாய‌ம் த‌னியார்ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர், ப‌ல‌ ப‌ண்ணைக‌ள் கைவிட‌ப் ப‌ட்ட‌ன‌. செல்வ‌ந்த‌ர்க‌ளால் வாங்க‌ப் ப‌ட்ட‌வை போக‌, எஞ்சிய‌வை த‌ரிசு நில‌மாகின‌. 


ஒரு குறிப்பிட்ட‌ கால‌த்திற்குப் பின்ன‌ர், சில‌ இட‌ங்களில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள், விவ‌சாய‌த்தை த‌னியார்ம‌ய‌மாக்குவ‌தால் த‌ம‌க்கு ந‌ட்ட‌மே உண்டாகும் என்ப‌தை அனுப‌வ‌ம் மூல‌ம் உண‌ர்ந்து கொண்ட‌ன‌ர். தனியொரு குடும்பம் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதை விட, நூறு குடும்பங்கள் சேர்ந்து நூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதால் அதிக நன்மை கிடைக்கும் அல்லவா? "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்றொரு பழமொழி உண்டு.

ஆகவே, அவ‌ர்க‌ள் ப‌ழைய‌ ப‌டி பொதுவுடைமைப் ப‌ண்ணை அமைப்பிற்கு திரும்பினார்க‌ள். அத‌னால் த‌ம‌க்கு ந‌ன்மை உண்டாகும் என்ப‌தை அறிந்து கொண்டார்க‌ள். ரஷ்யாவில் இன்று வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் "விளாடிமிர் லெனின் கூட்டுழைப்புப் ப‌ண்ணை" (Collective farm of Vladimir Lenin) அதில் ஒன்று.

2017 ம் ஆண்டிலும், அந்த‌ப் ப‌ண்ணையில் உள்ள‌ தோட்ட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ விளைச்சல் கிடைக்கிற‌து. இந்த‌ வ‌ருட‌ம் தொன் க‌ண‌க்கில் ஸ்ட்ரோபெரி ப‌ழ‌ங்க‌ளை அறுவடை செய்துள்ள‌தாக பெருமையாக கூறிக் கொண்டனர். (நன்றி: English Russia இணையத்தளம்) அந்த விவசாய விளைபொருட்கள் பிற இட‌ங்க‌ளுக்கு விற்ப‌னைக்கு கொண்டு செல்ல‌ப் ப‌டும்.

ஒரு க‌ம்யூனிச‌ ச‌முதாய‌த்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வ‌தால், அதில் கிடைக்கும் இலாப‌த்தையும் த‌ம‌க்குள் ப‌ங்கிட்டுக் கொள்கிறார்க‌ள். அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளை பூர்த்தி செய்து கொள்கிறார்க‌ள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அவ‌ர்க‌ள் வ‌சிக்கும் வ‌ச‌தியான‌ வீடுக‌ளுக்கு வாட‌கை கிடையாது. 


க‌ம்யூனிச‌ ப‌ண்ணை என்ற‌வுட‌ன், நீங்க‌ள் ஒரு கிராம‌த்தை க‌ற்ப‌னை செய்து விட‌க் கூடாது. அது ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளும் கொண்ட‌ ந‌வீன‌‌ ந‌க‌ர‌ம். அனைத்து உய‌ர்த‌ர‌ தொழில்நுட்ப‌ங்க‌ளும் அங்கே கிடைக்கும்‌. வ‌ய‌ல்க‌ள், தோட்ட‌ங்க‌ள், ப‌ண்ணைக‌ளில் உற்ப‌த்தியாவ‌தை முடிவுப் பொருட்க‌ளாக மாற்றும் தொழிற்சாலைக‌ளும் அங்குள்ள‌ன‌. குழ‌ந்தைக‌ளை ப‌ராம‌ரிக்கும் இட‌ம், தேவ‌தைக் க‌தைக‌ளில் வ‌ருவ‌தைப் போன்று பிரமாண்டமான அழ‌கான‌ க‌ட்டிட‌மாக வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

அதாவது, அது ஒரு தனிநாடு போன்று இயங்குகிறது. தன்னிறைவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பண்ணை உறுப்பினர்கள் எல்லோரும் வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள் என்று கருதி விடக் கூடாது. ஒரு நகரக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், அனைத்து வகையான தொழில் வாய்ப்புகளும் உள்ளன. தொழிற்சாலைகள் இருந்தால் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. பாடசாலைகள் இருந்தால் அங்கு ஆசிரியர்கள் தேவை. மருத்துவமனை இருந்தால் மருத்துவர்கள், தாதியர்கள் தேவை. இவர்கள் எல்லோரும் கூட்டுழைப்பு பண்ணையின் உறுப்பினர்கள் தான்.

ரஷ்யாவில் 35 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலங்கள், ஒன்றில் அரசு அல்லது கூட்டுறவுப் பண்ணைகளுக்கு சொந்தமாக உள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கின்றது. (Russia’s Collective Farms: Hot Capitalist Property, AUG. 30, 2008) பிரித்தானியாவோடு ஒப்பிட்டால் அங்கே மொத்தம் ஆறு மில்லியன் ஹெக்டேயர் நிலங்களில் தான் விவசாயம் செய்யப் படுகின்றது. ஆகவே, கூட்டுறவுப் பண்ணை உற்பத்தி அதிகரித்தால், எதிர்காலத்தில் உலக உணவுத் தேவையில் கணிசமான அளவைப் பூர்த்தி செய்ய முடியும்.

(2017 ம் ஆண்டிலும் இய‌ங்கும் பொதுவுடைமைப் ப‌ண்ணையின் ப‌ட‌ங்க‌ளை இங்கே காண‌லாம். தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி: English Russia)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, June 06, 2017

கோடை விடுமுறையில் சிறார்களுக்கான பொதுவுடைமை ஒன்றுகூடல்


ஐரோப்பிய அரசியல் கட்சிகள், கோடை கால விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஒன்றுகூடல்களை நடத்துவது வழக்கம். அதில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொடர்புள்ள அமைப்புகள் பங்குபற்றும். அரசியல் கலந்துரையாடல்கள் மட்டுமல்லாது, இசை நிகழ்ச்சிகள், பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

ஜெர்மனியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD இன் கோடை கால ஒன்றுகூடலில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. (3-4 ஜூன் 2017) அங்கு வருபவர்கள் தமது கூடாரங்களை கொண்டு வந்து புல்தரையில் தங்க வேண்டும். நாங்களும் ஒரு கூடாரத்தை கொண்டு சென்று தங்கினோம். அது இயற்கையோடு ஒன்றுகலந்து வசிப்பதைப் போலிருந்தது. மழை, வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டோம்.

Camping எனப்படும் கூடாரத்தில் தங்கும் அனுபவம் எனக்கும் புதிது. நானும் எனது மகனும் ஒரு கூடாரத்தில் தங்கி இரண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். ஜெர்மனி முழுவதிலும் இருந்து, நூற்றுக் கணக்கான குடும்பங்கள், பிள்ளைகளுடன் வந்து தங்கி இருந்தனர். முதல் நாள் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் கலந்து கொண்டனர். பலர் கைக்குழந்தைகளையும் எடுத்து வந்திருந்தனர்.


இறுதி நிகழ்வாக, முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்ததை போன்று, சிறுவர்களுக்கான Rotfüchse பயனீர் (Pioneer = சாரணர்கள்) அமைப்பின் அணிநடை இடம்பெற்றது. சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று, சில பருவ வயது இளைஞர்கள் மேள தாளத்துடன் முன்னே செல்ல, சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். உலகில் நடக்கும் போர்களுக்கு எதிரான உரையாற்றினார்கள்.

இதனை சில வலதுசாரிகள் "சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அவதூறு செய்யலாம். போரினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக சிறுவர்கள் பேசுவது "துஸ்பிரயோகம்" என்றால், "இலட்சக் கணக்கான மக்கள் பலியாகக் காரணமான போர்கள் புனிதமானவையா?"   என்ற கேள்வி எழுகின்றது.


மரப் பலகைகளை கொண்டு சிறுவர்கள் தயாரித்த விளையாட்டுப் புகையிரத வண்டி கண்ணைக் கவருவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. "புரட்சிகளே வரலாற்றின் ரயில் எஞ்சின்கள்" என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் பொறிக்கப் பட்ட போஸ்டரும் ஒட்டப் பட்டிருந்தது.

நூறு வருடங்களுக்கு முன்னர், லெனினும் தோழர்களும் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி, பின்லாந்து வழியாக ரஷ்யாவுக்கு புகையிரத வண்டியில் சென்றடைந்தனர். அந்த குறிப்பிட்ட நிகழ்வு ரஷ்யப் புரட்சியின் தொடக்கமாக அமைந்திருந்தது. 

அதே போன்ற புகையிரத வண்டியை தான் விளையாட்டுத் திடலில் வடிவமைத்திருந்தனர். சிறுவர்கள் மகிழ்வுடன் அதிலேறி விளையாடினார்கள். புகையிரதவண்டி பூர்த்தியானதும், பழைய புரட்சிப் பாடல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை ஒருவர் கிட்டார் இசைத்துப் பாடினார்.

அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்ட போதிலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொள்ளும் பொதுநல மனப்பான்மையை காண முடிந்தது. எல்லோரும் நாகரிகமாக நடந்து கொண்டனர். யாருமே மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப் படவில்லை.



ஜெர்மனியின் மேற்குப் பகுதியில், நெதர்லாந்து எல்லையோரம் உள்ள கேள்சென்கிர்ஷன் (Gelsenkirchen)  நகரில், வழமையாக குதிரையோட்ட போட்டிகள் நடக்கும் திடலில் நடந்த ஒன்றுகூடலுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சம்பந்தப் படாத வெளியாட்களும் வந்திருந்தனர். உள்ளூர் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தை பார்த்து விட்டும் சிலர் வந்திருந்தனர்.

அங்கு நடந்த பொதுக் கூட்டங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கலந்து கொண்ட ரஷ்யப் பெண்மணி ஒருவர், சோவியத் யூனியன், ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். ஆனால், MLPD நடத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இவர் போன்ற கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலரும் அங்கு வந்து தமது தப்பெண்ணங்களை மாற்றிக் கொண்டனர்.

அங்கு வந்திருந்த எல்லோரும் ஜெர்மானியர்கள் அல்ல. MLPD கட்சியுடன் தொடர்புடைய நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த மாவோயிச கட்சிகளை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர். அதை விட, குர்திஸ்தான், துருக்கி, பிலிப்பைன்ஸ், சிரியா, ஆப்கானிஸ்தான், டோகோ (ஆப்பிரிக்கா) என்று பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்டெபன் என்கல் 


MLPD கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் சுரங்கத் தொழிலாளியுமான ஸ்டெபன் என்கல் கலந்து கொண்ட கூட்டம் இடம்பெற்றது.


வோல்க்ஸ்வாகன் மக்கள் நீதிமன்றம் 
அது மட்டுமல்லாது, வோல்க்ஸ்வாகன் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கும் மக்கள் நீதிமன்ற அமரவும் இடம்பெற்றது. இதில் ஜெர்மனியின் போராட்டக் குணாம்சம் மிக்க தொழிற்சங்கமும் கலந்து கொண்டது.


ஒன்றுகூடலுக்கு வரும் ஒவ்வொருவரும், வாசலில் நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்னர், உணவுத் தேவைக்காக கூப்பன்கள் வாங்க வேண்டும். அதாவது, தம்மிடமுள்ள யூரோ நாணயத்தை கொடுத்து கூப்பன் துண்டுகளை வாங்க வேண்டும். அது மட்டுமே திடலில் செல்லுபடியாகும்.

உணவுச்சாலையில் சாப்பிடவும், குடிபானங்கள் அருந்தவும், புத்தகங்கள், கைப்பணிப் பொருட்களை வாங்குவதற்கும், அந்த கூப்பன் துண்டுகள் தேவை. அவற்றை விற்கும் கடைகள், நாம் கொடுக்கும் கூப்பன் துண்டுகளை கொடுத்து காசாக மாற்றிக் கொள்ளும்.

எதற்காக காசுக்கு பதிலாக கூப்பன் துண்டுகள் பாவிக்கப் படுகின்றன? இதில் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தெரிய வருகின்றது. பொதுவுடைமை சமுதாயத்தில் பணம் பாவனையில் இருக்காது. அதற்கு முன்னோடியாக இந்த நடைமுறை பின்பற்றப் படுகின்றது.

இரண்டாவதாக, குறிப்பிட்ட கட்சி மட்டுமல்ல, அந்தக் கட்சியுடன் நல்லுறவைப் பேணும் பிற அமைப்புகளும்,  தனிநபர்களும் தமது கடைகளை போட முடியும். ஆனால், வருமானத்தில் ஒரு பகுதி கட்சி நிதிக்கு செலுத்த வேண்டும்.

பணம் பாவனையில் இருந்தால் அதைக் கண்காணிப்பது கடினம். விற்பனையாளர்கள் எவ்வாறேயினும் வாடிக்கையாளரின் கூப்பன் துண்டுகளை காசாக்க வேண்டி இருப்பதால், வியாபாரத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டப் பட்டது என்பது தெரிய வரும்.

நமது தாயகத்தில் இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் இந்த உதாரணத்தை நடைமுறைப் படுத்தலாம். இதன் மூலம், மக்கள் விடுமுறையை பிரயோசனமான முறையில் கழிப்பதுடன், பொதுவுடைமை சமுதாயம் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவும் வழிவகுக்கும்.

******

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD, எஸ்சென் நகரில் நடத்தி வரும் சோஷலிசத்திற்கான வருடாந்த பேரணி.



சர்வதேச தோழர்கள் கலந்து கொண்ட மேடையில் இசைக்கப் பட்ட பிரபல பாஸிச எதிர்ப்புப் பாடல்:  

துருக்கி/குர்திய இசை நடனம்:

Saturday, March 04, 2017

கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு



தயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். "பணம் என்றால் என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி இயங்குகின்றது?" இவை போன்ற அடிப்படை அறிவு இல்லாமல், கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்களுக்கு தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்து அவமானப் படாதீர்கள். 

கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட தமிழ் அறிவுஜீவிகள் பலர், தற்போது அடிக்கடி பிதற்றுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இலங்கையிலும், அதிலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பொதுவுடமைக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு சகிக்க முடியாத அறிவுஜீவிகள், மிகவும் அபத்தமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இலங்கையில் முதலாளித்துவ பத்திரிகையான வீரகேசரியில், ஓர்   அபத்தமான கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை ஒன்று பிரசுரமானது. (27.02.2017)  "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற தலைப்பிலான கட்டுரையில், "முதலாளித்துவத்தின் குறைபாடுகளை" பொதுவுடைமை என்று திரித்து எழுதி பித்தலாட்டம் நடந்துள்ளது. (கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)

அதாவது, கட்டுரையில் முதலாளித்துவம் என்பதற்கு பதிலாக, பொதுவுடைமை என்று மாற்றி எழுதியுள்ளார். அதற்குக் காரணம், அவருக்கு பொதுவுடைமை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ஒரு அறிவுஜீவி தனது அறியாமையை வெளிப்படுத்தி எழுதியுள்ள கட்டுரையின் உண்மைத் தன்மையை ஆராயாமல், வீரகேசரி பத்திரிகை ஞாயிறு வாரமஞ்சரியில் பிரசுரித்து விட்டது. நான் அந்தக் கட்டுரையில் இருந்த அபத்தமான தகவல்களை சுட்டிக் காட்டி எழுதிய விமர்சனக் கட்டுரையை வீரகேசரிக்கு அனுப்பியும் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. (எனது மறுப்புக் கட்டுரை:பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு)

இலங்கையில் பத்தாம் வகுப்பில் இருந்து வணிகவியல் படிக்க முடியும். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்பதை, பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் இலட்சக் கணக்கில் இருப்பார்கள். சாதாரணமான வணிகவியல் மாணவனுக்கே இலகுவாக புரியக்  கூடிய அபத்தமான கருத்துக்களை, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் "பெரும் மதிப்புக்குரிய" வீரகேசரி பத்திரிகை பிரசுரித்தது எப்படி?

எவ்வாறு ஒரு எழுத்தாளர் முதலாளித்துவத்தை பொதுவுடைமை என்று திரித்து தனது வாசகர்களை ஏமாற்ற முடிந்தது? அதற்குக் காரணம் பின்னால் உள்ள வர்க்க விரோத சிந்தனை. அதாவது, கம்யூனிசம் பற்றி நீங்கள் எத்தகைய அவதூறுகளையும் பரப்பலாம். அதற்கு வெகுஜன ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படும். அதைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கூட்டம் தயாராக உள்ளது. குறிப்பாக, படித்த மத்திய தர வர்க்கத்தினர், குட்டி முதலாளிய சிந்தனை கொண்டோர் அதை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர்.

இந்தக் கட்டுரையாளர் தான் "கிழக்கு ஜெர்மனியில் ஏழாண்டுகள் கல்வி கற்றதாகவும், அங்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய நூல்களை ஜெர்மன் மொழியில் கற்று, பரீட்சை எழுதி, சித்தி பெற்றதாகவும்" குறிப்பிட்டுள்ளார். எனது எதிர்வினைக்கு பதில் அளிக்க முடியாமல் சமாளித்து  "மார்க்ஸ் எழுதியதை ஜெர்மன் மொழியில் படிக்குமாறு(?)" பதில் கூறினார். 

விவிலிய நூலை கிரேக்க மொழியில் படிக்குமாறு சொன்னதைப் போன்று அவரது பதில் அமைந்திருந்தது. ஏற்கனவே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கடைகளில் விற்பனையாகின்றன. மொழிபெயர்ப்பு எந்தப் பிழையுமில்லாமல் சரியான பொருள் தருகின்றதா என்பது தான் முக்கியம். அவற்றை ஆங்கிலத்தில் அல்லது ஜெர்மன் மொழியில் படிக்குமாறு சொல்வதெல்லாம் அறிவுஜீவிகளின் தலைக்கனம்.

கட்டுரையில் இருந்து: //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.... அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்!

அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.

சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).

சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)

உண்மையில் இவருக்கு பொருளாதாரம் பற்றிய அரிச்சுவடி தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது. //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.// இதைச் சொல்லி விட்டு அமெரிக்க டாலர், ஸ்டேர்லிங் பவுன்ஸ் என்று தாவுகிறார். நாணயம் என்பது பரிவர்த்தனைக்கான ஊடகம். அது மட்டுமே பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. முதலில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும், சோஷலிச பொருளாதாரத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று பார்த்து விட்டு பணப் புழக்கத்திற்கு வருவோம்.

முதலாளித்துவ பொருளாதாரம் என்பது இயற்கையாக உருவாவது. அதனால் தான் சுதந்திர சந்தை பற்றிய கதையாடல்களும் வருகின்றன. அதாவது, சந்தையில் குறிப்பிட்ட பொருளுக்கு கேள்வி இருக்குமானால் அதை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொட்டுவார்கள். இதனால் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு.

சந்தையில் தாராளமாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ள நன்மை. கேள்வி குறைந்து பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அந்த நேரம் மிதமிஞ்சிய நுகர்வுப் பொருட்களை யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் அழிக்க வேண்டி இருக்கும். இது முதலாளித்துவத்தின் தீய விளைவு.

அதற்கு மாறாக, சோஷலிச பொருளாதாரம் இயற்கையாக உருவாவதில்லை. அது எப்போதும் திட்டமிடப் பட்டதாக உள்ளது. அதனால் தான் சோஷலிச நாடுகளில், ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் பற்றிய கதையாடல்களும் நடந்து கொண்டிருந்தன. அதாவது, ஒட்டு மொத்த சமூகத்திலும் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு எந்தளவு தேவை இருக்கிறது என்பதற்கு அமைய, அந்தப் பொருள் அளவாக உற்பத்தி செய்யப்படும். 

அதற்கு முதலில் ஒரு நாட்டின் சனத்தொகை எவ்வளவு என்பன போன்ற புள்ளிவிபரங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதிலும் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் தேவைகள் பூர்த்தி செய்யப் படுவது ஒரு நன்மை. ஆகையினால், கிடைக்கும் நுகர்வுப் பொருட்களை யாரும் வீணாக்க மாட்டார்கள். ஆனால் அதில் தீமையும் உள்ளது. ஒரு சில நேரம், எதிர்பார்ப்புகள் பிழைத்துப் போவதால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனால் தான் முன்னாள் சோஷலிச நாடுகளில் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது.

மேற்படி பொருளாதார அடிப்படை பற்றி எதுவும் பேசாமால், எடுத்த எடுப்பில் அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுன் என்று பேசுவது பாமரத்தனமானது. ஆம், அது பாமரத் தனமானது தான். சாதாரணமான மக்களுக்கு எப்போதும் டாலர்,பவுன் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். கடினச் செலாவணி (hard currency) எனப்படும் டாலர், பவுன், யூரோக்களை சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று உழைப்பவர் ஏராளம். அது சாதாரண மக்களின் மனநிலை. ஒரு மெத்தப் படித்த அறிவுஜீவி தனது "அனுபவக் குறிப்புகள்" என்று எழுதலாமா?

ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டம் என்று சொல்வார்கள். இது பற்றி லெனின் எழுதிய நூலில் புள்ளிவிபரங்களுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் நவீன காலத்து சர்வதேச வர்த்தகம் தொடங்கியது. அப்போது பிரித்தானியா உலகில் அரைவாசியை காலனிப் படுத்தியதால், அதன் நாணயமான ஸ்டேர்லிங் பவுன்ஸ் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசானது. அதனால், சர்வதேச பொருளாதாரத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் அதிகரித்தது. அதன் நிமித்தம், அமெரிக்க டாலர்களின் பாவனையும் கூடியது.

எதற்காக அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன? அதற்குப் பின்னால் உள்ள பொருளாதார காரணம் என்ன? அதற்கு முதலில் நாங்கள் பணம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பண்டமாற்று மூலமே வர்த்தகம் நடந்த காலத்தில் பணம் கொண்டுவரப் பட்டது. ஆனால், நாம் கண்ணால் காணும் பணம் ஒரு உலோகத் துண்டு அல்லது கடதாசி தான். பாவனையாளர்களான நாங்கள் தான் அதற்கு மதிப்பை கூட்டுகிறோம்.

ஆரம்பத்தில் தங்கம் அல்லது வெள்ளித் துண்டு தான் நாணயமாக பயன்படுத்தப் பட்டது. தங்கத்தின் பெறுமதியும், நாணயத்தின் பெறுமதியும் ஒன்றாக இருந்தது. தங்கத்தை வீட்டில் வைத்திருக்கப் பயந்த மக்கள், அவற்றை பாதுகாப்பாக நகை அடைவுக் கடைக்காரரிடம் கொடுத்தார்கள். அடைவுக் கடைக்காரர் தான் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டை எழுதிக் கொடுத்தார். பின்னர் அதுவே மக்கள் மத்தியில் பரிமாற்றிக் கொள்ள பட்டது. அதாவது, பற்றுச் சீட்டில் எழுதி உள்ள அளவு தங்கம் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில், அது நாணயத் தாள் போன்று பயன்படுத்தப் பட்டது.

முதலாம் உலகப்போர் வரைக்கும், ஒரு நாட்டில் பணத்தாள்களை புழக்கத்திற்கு விடும் மத்திய வங்கி அதற்கு அளவான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டியிருந்தது. டாலர், பவுன்ஸ் போன்ற அந்நிய செலாவணியும் தங்கத்திற்குப் பதிலாக வைத்திருந்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகள் உட்பட, இப்போதும் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளில் பின்பற்றப் படும் நடைமுறை அது தான். தங்கத்திற்கும், பணத்திற்கும் இடையிலான உறவு நூற்றுக்கு நூறு வீதம் சரிசமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முதலாம் உலகப் போர் தொடங்க முன்னரே (குறிப்பாக 1914 இலிருந்து) மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில், மத்திய வங்கி குறைந்த பட்சம் நாற்பது சதவீத தங்கம் வைத்திருந்தாலே போதும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்குக் காரணம், தங்கத்தின் பெறுமதிக்கும், நாணயத்தின் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பு எப்போதோ துண்டிக்கப் பட்டு விட்டது.

தற்காலத்தில், நாணயத்தின் பெறுமதி தனியாக தீர்மானிக்கப் படுகின்றது. சாதாரணமாக பங்குச் சந்தை நிலவரத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்த உண்மை தெளிவாகப் புரியும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, டாலர் சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதே மாதிரி, பிற்காலத்தில் யூரோ நாணயமும் கொண்டு வரப் பட்டது. சுருக்கமாக, முன்பு தங்கம் வகித்த பாத்திரத்தை, தற்போது டாலர், யூரோ நாணயங்கள் நிரப்புகின்றன. அதனால் தங்கத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது.

ஆகவே, ஆசி கந்தராஜா கட்டுரையில் எழுதியது எத்தனை அபத்தமானது என்பது இப்போது நன்றாகப் புரிந்திருக்கும். அவர் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஏதோதோ உளறுகிறார்: //சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது.//

பணம் மட்டும் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. மேலும் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி! இன்றைக்கும் நீங்கள் ஒரு சாதாரண ஐரோப்பியக் குடிமகனிடம் கேட்டாலும் அதைச் சொல்வான். அதை "கார்ல் மார்க்ஸ் சொன்ன பொருளாதார தத்துவம்" என்று திரிப்பது எத்தனை அபத்தமானது? 

உண்மையில் அவருக்கு கார்ல் மார்க்ஸ் சொன்னது எதுவும் தெரியாது. அதே நேரம் பொருளாதாரமும் தெரியாது. பணம் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்கக் கூடாது என்பதற்காக தான், மேற்குலக நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவித்தார்கள். அது தற்போது இந்தியா, இலங்கை போன்ற பழமைவாத கலாச்சாரம் கொண்ட நாடுகளிலும் வந்து விட்டது.

//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும்.// இது ஒரு மிகப் பெரிய பொய். இவர் முதலாளித்துவ நாடுகளின் பணம் பற்றிய கோட்பாட்டை, அதுவும் அரைவேக்காட்டுத்தனமாக, சோஷலிச நாடுகளுடையதாக திரிக்கிறார். தன்னை மாதிரியே, தனது கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் பொருளாதார அடிப்படை எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் மடமையை என்னவென்பது?

முதலாளித்துவ நாடுகளில் பணம் எத்தகைய பங்கு வகிக்கின்றதோ, அதே பங்கை சோஷலிச நாடுகளிலும் வகிக்கும். ஏனென்றால், பணம் என்பது ஒரு பரிவர்த்தனை ஊடகம் மட்டுமே. பணத்தை இல்லாதொழிப்பது தான் கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால இலட்சியம். அதனால், சோஷலிச நாடுகளில் சில இடங்களில் பண்டமாற்று ஊக்குவிக்கப் பட்டது. பிற சோஷலிச நாடுகளுடனும் பண்டமாற்று மூலம் வர்த்தகம் நடந்தது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில் பாவனைக்கும், விற்பனைக்கும் விடப்படும் பொருட்களுக்கும், பணப் புழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆயினும், அங்கே கூட, "பொருளின் பெறுமதிக்கு ஏற்ப பணம் புழக்கத்திற்கு" விடப் படுவதில்லை. அது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. அமெரிக்க பொருளியல் அறிஞர் இர்விங் பிஷர் (Irving Fisher) எழுதிய பணம் பற்றிய கோட்பாடு தான் இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளால் பின்பற்றப் படுகின்றன. அது என்ன கோட்பாடு?

வங்கிகள் பணத்தை உருவாக்கி சமூகத்தில் புழக்கத்திற்கு விடுகின்றன. இதை "பண உற்பத்தி" (M) என்று குறித்துக் கொள்வோம். அந்தப் பணம் கடனாகவோ, ஏற்றுமதியாகவோ பரிமாற்றம் செய்யப் படுகின்றது. அதை "பரிமாற்றம்" (V) என்று குறித்துக் கொள்வோம். பரிமாற்றம் விரைவாக நடந்து கொண்டிருந்தால், புதிய பணமும் உருவாகிக் கொண்டிருக்கும். ஒருவேளை கடன் வாங்க யாருமில்லை, அல்லது எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டார்கள் என்றால், புதிய பணம் உருவாகாது.

சமூகத்தில் பணம் பெருகும் பொழுது, இன்னொரு பக்கத்தில் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கும். அதை "விற்பனைப் பொருட்கள்" (P) என்று குறித்துக் கொள்வோம். பொருட்களின் பாவனையும், விற்பனையும் விரைவாக கூடிக் கொண்டிருக்கும். அதை "விற்பனை" (T) என்று குறித்துக் கொள்வோம்.

ஒரு பக்கத்தில், M கூடும் பொழுது V கூடுகிறது (M x V). மறுபக்கத்தில், P கூடும் பொழுது T கூடுகின்றது (P x T). இவ்விரண்டும் சமமாக இருந்தால் தான் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட முடியும்.

அதாவது, MV = PT.

ஒரு நாட்டில் பணவீக்கம் எப்படி ஏற்படுகின்றது? புதிதாக அச்சடிக்கப் படும் பணத் தாள்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வாங்குவதற்கு தேவையான பொருட்கள் குறைவாகவும் இருந்தால் பணவீக்கம் என்கிறோம். ஆனால், பொதுவாக ஒரு நாட்டில் பணவீக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பணக்கார முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கவே செய்யும். அதற்குக் காரணம் கடன்களும், பரிவர்த்தனைகளும் அதிகமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் புதிய பணத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி பொருளாதார தத்துவத்திற்கு அமையத் தான், அமெரிக்க டாலர்களும், பிரிட்டிஷ் பவுன்களும் உலகம் முழுக்க சுற்றுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிற உலக நாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறன. அதன் அர்த்தம், அதே ஒரு மில்லியன் டாலர்கள் அமெரிக்க நாட்டுக்குள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன. அதாவது, வழமைக்கு மாறாக இரண்டு மடங்கு டாலர்கள் அச்சிடப் பட்டுள்ளன.

இந்த இடத்தில் ஆசி கந்தராஜா ஒரு நகைப்புக்குரிய, அரைவேக்காட்டுத்தனமான காரணத்தை கூறுகின்றார்: //இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.//😄😄😄

கந்தராஜாவின் கூற்றில் உள்ள அபத்தம் என்னவென்று அதை வாசிக்கும் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் அளவு தான் பணத் தாள்களை அச்சிட வேண்டும் என்பது நியதி என்றால், வெளியில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் டாலர்களுக்கு அளவான தங்கத்திற்கு எங்கே போவார்கள்? அருகில் உள்ள கனடா, மெக்சிகோ மீது படை எடுத்து அங்கிருக்கும் தங்கத்தை எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும்! அமெரிக்கா ஒரு "ஜனநாயக" நாடு, அப்படி நடக்காது என்று வைத்துக் கொண்டால், ஏற்கனவே அமெரிக்காவினுள் டாலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு இருக்க வேண்டும். அதாவது அங்கு பணச் சுருக்கம் (deflation) நிலவ வேண்டும்.

அப்படியானால், அமெரிக்காவின் பொருளாதார பலத்தின் சூக்குமம் என்ன? கடன், கடன், கடன் மட்டுமே! நாட்டில் எவ்வளவுக்கெவ்வளவு கடன் அதிகரிக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு பணத் தாள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒருவர் வங்கியில் பத்தாயிரம் டாலர்கள் கடனாக கேட்கிறார். வங்கி தன்னிடம் இருந்த பத்தாயிரம் டாலரை எடுத்துக் கொடுத்து விட்டு, நடப்புக் கணக்கில் எழுதி வைக்கின்றது. நடப்புக் கணக்கு என்பது ஒரு நிரந்தரமில்லாத தற்காலிகமான கணக்கு. ஏன் அதில் குறித்துக் கொள்கிறது? கடனாக கொடுக்கப் பட்ட பத்தாயிரம் டாலருக்கு ஈடாக புதிதாக பத்தாயிரம் டாலர்கள் உருவாக்கப் படுகின்றன. அதாவது, கடனில் இருந்து புதிய பணம் பிறக்கிறது.

ஒரு நாட்டில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் காலத்தில் கடனில் உருவாகும் புதிய பணத்தால் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. ஆனால், ஒரு காலத்தில் எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டால், அல்லது கட்டாமல் ஓடி விட்டால், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உண்டாகும். 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்ததும் அது தான். புதிது புதிதாக வீடுகளை கட்டி, கடனுக்கு விற்று வந்தார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கூட வீடு வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கடனாளிகள் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை உருவானது. அதன் விளைவு? நிதி நெருக்கடி. மிகப் பெரிய அமெரிக்க வங்கிகள் கூட திவாலாகின.

ஆகவே, கந்தராஜா சொல்வது மாதிரி, வெளிநாடுகளில் உள்ள டாலர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தால் அங்கே ஏற்படப் போவது "சடுதியான பணவீக்கம்" அல்ல. மாறாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடையும். ஒரு தேசமே திவாலாகி விடும். பொதுவுடமையை விமர்சிப்பதற்கு முன்னர், முதலாளித்துவம் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்.

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஆதாரமாக Arnold Heertje எழுதிய Economie நூலில் சில பகுதிகளை எடுத்திருக்கிறேன். அவர் ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். ஒரு முதலாளித்துவ நாடான நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக பேராசிரியராக கடமையாற்றி உள்ளார். அவருக்கு எனது நன்றிகள்.)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Monday, February 27, 2017

பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு


இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும்,  வலதுசாரி தமிழ்த் தினசரியான வீரகேசரி,அடிக்கடி கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரைகளை பிரசுரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதற்காகவே இருக்கும் சில "அறிவுஜீவிகள்", அபத்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுப்பார்கள்.

ஆசி கந்தராஜா என்பவர் வீரகேசரி வாரமஞ்சரியில் (26 February 2017) "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார். (அவரது கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)  

சுருக்கமாக சொன்னால், இது இன்னொரு கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை. வாசகர்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள்நோக்கம் கொண்டது. கட்டுரையின் தொடக்கம் முதல் முடிவு வரை அபத்தக் களஞ்சியம் தான்.

முதலில், "பொதுவுடைமை ஒரு சிந்தனைவாதம்" என்ற கட்டுரையின் தலைப்பே அபத்தமானது. "சிந்தனாவாதம்" என்று சொல்வது ஒரு கருத்தியல் முதல்வாதம். அதாவது, உலகில் இருப்பது எல்லாம் சிந்தனாவாதம் மட்டுமே எனும் தத்துவம். அதைத் தான் மதங்கள் பின்பற்றுகின்றன. உதாரணம்: கடவுளை நீங்கள் உணர முடியும், ஆனால் பார்க்க முடியாது. அதாவது கடவுள் என்ற சிந்தனை மட்டுமே நிரந்தரமானது.

மார்க்சியம் கருத்துமுதல்வாத தத்துவத்தை மறுக்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை பின்பற்றுகின்றது. அதாவது உலகில் நாம் கண்ணால் காண்பது மட்டுமே நிஜம். எனும் பொருள்முதல்வாத தத்துவம். அதிலிருந்து தான் விஞ்ஞானம் பிறந்தது. மார்க்சியம் கூட விஞ்ஞானம் தான். கார்ல் மார்க்ஸ் இயங்கியலையும் பொருள் முதல்வாதத்தையும் இணைத்தார். அதையே நாம் இன்றைக்கு மார்க்சியம் என்று சொல்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வில் ஆதிகால பொதுவுடைமை சமுதாயம் பற்றி எழுதி இருக்கிறார். அதாவது ஆதி கால மனித சமூகங்கள் பொதுவுடமை உற்பத்தி அமைப்பைக் கொண்டிருந்தன. சிறு குழந்தைக்கும் புரியும் மொழியில் சொன்னால், வேட்டையாடி வாழ்ந்த ஆதிகால மனிதர்கள், இயற்கை வளங்களை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு குடும்பம் மாதிரித் தான் ஒரு சமூகம் இருந்தது. அதற்கு ஆதாரமாக, 19ம் நூற்றாண்டிலும் பொதுவுடமையை பின்பற்றிய அமெரிக்க செவ்விந்திய பழங்குடியின மரபுகளை எடுத்துக் காட்டுகின்றார். மேலதிக விபரங்களுக்கு எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற நூலை வாசிக்கவும்.

//கம்யூனிச கொள்கைளின் கேள்வி ஞானத்திலே, பொதுவுடமை சித்தாந்தம் பற்றி, முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே, முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவி’தத்தனத்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என, நான் நினைப்பதும் உண்டு.//(ஆசி கந்தராஜா)

கம்யூனிச கொள்கை என்பது கேள்வி ஞானத்தின் ஊடாக வருவதல்ல. அது வர்க்கப் போராட்டத்தின் ஊடாக வருவது. அதாவது, தமது உழைப்பை தொழிற் சந்தையில் விற்று அதற்கு நஷ்டஈடாக கூலி பெற்றுக் கொள்ளும் உழைப்பாளிகள், தமது வாழ்க்கைப் போராட்ட அனுபவத்தின் ஊடாக பெற்றுக் கொள்வது தான் கம்யூனிசக் கொள்கை. முதலாளித்துவ நாடுகளில் எல்லோரும் "சுகபோக" வாழ்க்கை வாழ்வதாக யார் சொன்னார்கள்?

நானும் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் தான் வாழ்கிறேன். இங்கே வந்து வேலை செய்து பாருங்கள். குறைந்தது மூன்று பேர் செய்யும் வேலையே ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். அது இங்கே சர்வசாதாரணம். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் அடிமட்ட தொழிலாளியாக இருந்தாலும், அலுவலக ஊழியராக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு பற்றி முறையிடாதோர் எவருமில்லை. Burn out என்று சொல்வார்கள். இங்கே மிக மோசமான உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும்.

முதலாளித்துவ நாடுகளில், பல உழைப்பாளிகள் மன அழுத்தங்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலருக்கு அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு காரணமாக மார்படைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளது. இருபது வருட கடும் உழைப்பாளி நாற்பது வயதில் மண்டையைப் போடுவது பல இடங்களில் நடந்துள்ளது. பல தமிழர்களும் பலியாகி உள்ளனர்.

அனேகமாக, நிரந்தரமாக பணியில் இருக்கும் ஊழியர்கள் வேலைப்பளு காரணமாக அடிக்கடி சுகயீன விடுப்பு எடுத்து வீட்டில் நிற்கிறார்கள். அதனால் தற்போது எந்தக் கம்பனியிலும் நிரந்தர வேலை கொடுப்பதில்லை. ஒப்பந்தம் முடிந்தவுடன் தூக்கி வீசுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் பதினாறு, பதினெட்டு வயது இளைஞர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரைவாசி சம்பளம். இப்படிப் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில் ந‌ல‌ன்புரி அர‌சு என்ற‌ பெய‌ரில், சோஷ‌லிச‌த்தின் வ‌ச‌திக‌ளை வேறு வித‌மாக‌ ந‌டைமுறைப் ப‌டுத்துகிறார்க‌ள். அது தொழிலாள‌ர் வ‌ர்க்க‌ம் போராடிப் பெற்ற‌ உரிமை. அந்த‌ப் போராட்ட‌ம் இப்போதும் தொட‌ர்கிற‌து. உதார‌ண‌த்திற்கு அண்மையில் பிரான்ஸில் ந‌ட‌ந்த‌ பொது வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தை குறிப்பிடலாம். 

பிரான்ஸில் தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே இருந்த பேரம் பேசும் உரிமைக்கான சட்டத்தை மாற்றினார்கள். அதன் மூலம், ஒரு வேலையாளை இலகுவாக பணி நீக்கம் செய்வதற்கும் அனுமதித்தது. அதற்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு வந்து நெடுஞ்சாலைகளை மறித்து போராடினார்கள். பொலிஸ் படை, அளவுகடந்த வன்முறை பிரயோகித்து தான் போராட்டத்தை அடக்கியது.

//சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று இன்றும் மனதில் நிக்கிறது. ‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப் பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.// (ஆசி கந்தராஜா)

ஆரம்பத்திலேயே "மாற்றுக் கருத்துடன் வாழ்ந்த பேராசிரியர்" என்கிறார். சோஷலிச நாடுகளில் வாழ்ந்த எல்லோரும் அரசை ஆதரித்தவர்கள் அல்ல. எதிர்த்தவர்களும் இருந்தார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருந்தது. (அதை இந்தக் கட்டுரையாளரே உறுதிப்படுத்துகிறார்.) அதிக பட்சம், இனவாதம்  பேசியவர்களை மட்டுமே கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஸ்டாலினின் காலத்திற்குப் பிறகு, சீனாவைத் தவிர வேறெந்த சோஷலிச நாட்டிலும் வர்க்கப் போராட்டம் நடக்கவில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு பதிலாக, குருஷேவ் முன்மொழிந்த "அனைத்து மக்களின் நாடு" கொள்கை பின்பற்றப் பட்டது. அதன் அர்த்தம், அங்கு அறிவுஜீவிகளை கொண்ட மத்தியதர வர்க்கம் இருப்பதற்கு அனுமதிக்கப் பட்டது. அந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பணம், பதவிக்கு ஆசைப் படுவது இயற்கை. அது  அவர்களது வர்க்கக் குணாம்சம்.

//சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை, நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.//(ஆசி கந்தராஜா)

அந்த நாடுகள் எதுவும் முதலாளித்துவ முறைகளை பின்பற்றி "வீறு நடை" போடவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனாவாதம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகம். சம்பளம் குறைவு. வாழ்க்கைச் செலவு அதிகம். இலட்சக்கணக்கான ஏழைகள் வாழ்வதற்கு சிரமப் படுகிறார்கள். அதனால், தேர்தல்களில் தீவிர தேசியவாத அல்லது இனவாத கட்சிகளை வெல்ல வைக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் பொருளாதாரப் பிரச்சினை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தாலும், ருமேனியாவும், பல்கேரியாவும் இன்று வரைக்கும் மிகவும் வறுமையான நாடுகளாக உள்ளன. ருமேனிய, பல்கேரிய தொழிலாளர்கள் மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த கூலிக்கு அடிமை வேலை செய்கிறார்கள்.  அந்த நாடுகளில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவு. அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அண்மையில் கூட ருமேனியாவில் ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் எழுச்சி நடந்தது.

முதலாளித்துவத்தை பின்பற்றி "வீறுநடை போட்ட" அல்பேனியா, திருடர்களையும், பாலியல் தொழிலாளர்களையும் இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அது இன்றைக்கும் ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அரசாங்கத்தில் கூட கிரிமினல்கள் தான் அங்கம் வகிக்கிறார்கள். அதைக் காரணமாகக் காட்டி பலர் அகதியாக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சென்ற வருடம், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர். தாம் கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பு தேடி வந்ததாக காரணம் கூறினார்கள்.

//எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டுமே என்பதை உணர, எனக்கு அதிக காலம் பிடிக்கவில்லை.... கம்யூனிசம் என்ற மாயமான் கொள்கையில் அங்கு கஷ்டப்பட்டவர்கள் பாமர மக்களே.//(ஆசி கந்தராஜா)

எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டும் இருக்கவில்லை. இது கட்டுரையாளரின் கற்பனாவாதம். உண்மையிலேயே அது நடைமுறையில் இருந்தது. (பார்க்க: உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி ) அந்த நாடுகள் "சின்னாபின்னமாகிய" பொழுது, அதாவது முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், மேற்படி வசதிகள் தொடர்ந்தும் இருக்கும் என்று சாதாரண மக்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. 

முன்பு சோவியத் குடியரசாக இருந்து பிரிந்த மோல்டாவியா பற்றிய டச்சு ஆவணப்படம் பற்றிய குறிப்புகளை எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். அந்த ஆவணப் படத்தில் சாதாரண மோல்டாவியா மக்களை பேட்டி எடுக்கிறார்கள். முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் வாழ்க்கை சிறப்பாக இருந்ததாகவும், தமக்கு எல்லா வசதிகளும் கிடைத்தாகவும் அந்த மக்கள் கூறுகின்றார்கள். தற்போது "வீறுநடை போடும்" முதலாளித்துவ காலத்தில் அவர்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள். (பார்க்க: "சோவியத் கால வாழ்க்கை மிகவும் சிறந்தது!" - பொது மக்களின் வாக்குமூலம்)

வீடு, வேலை, இலவச மருத்துவம், இலவச கல்வி போன்ற வசதிகள் மட்டுமல்ல, விடுமுறைக்கு இலவச சுற்றுலா பயணமும் ஒழுங்கு படுத்தப் பட்டது! அதுவும் சாதாரணமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க முடிந்தது. சோவியத் யூனியனில் கிரீமியா பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. குளிர்வலைய பிரதேசத்தில் வாழ்ந்த ரஷ்யர்கள், வெப்ப வலைய பிரதேசமான கிரீமியா கடற்கரைக்கு சென்று உல்லாசமாக விடுமுறையை களித்தனர். பிரயாணச்சீட்டு, தங்குமிட வசதி அனைத்தும் இலவசம்! கிழக்கு ஜெர்மானியர்கள் உல்லாசக் கப்பலில் பல உலக நாடுகளுக்கு சென்று வந்தனர். (பார்க்க: தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை )

//ஜேர்மனியில் நான் கல்வி கற்ற காலங்களில், லெனின், கார்ல் மார்க்ஸ், எங்கிள்ஸ் போன்ற மேதைகள் எழுதிய கருத்துச் சாரங்களை, ஜேர்மன் மொழியிலேயே கல்வி கற்றுத் தேறும் வாய்ப்பு கிட்டியது. அத்துடன் இதில் பரீட்ஷை எழுதி, சிறப்பு சித்தியும் பெற்றுள்ளேன்.// (ஆசி கந்தராஜா)

இதை நான் நம்பவில்லை. யாரும் அவற்றை வாசிக்கவில்லை என்று தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு புளுகுகிறார். ஒன்றில் இவர் எதையும் படிக்கவில்லை, அல்லது படித்தாலும் அதை மறைத்து விட்டு வேண்டுமென்றே தவறான தகவல்களை எழுதுகிறார்.

//கார்ல்மார்க்ஸ், ‘Das Kapital’ (The capital) என்னும் நூலை தன் தாய்மொழியாகிய ஜேர்மன் மொழியில் எழுதினார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புச் சம்பந்தமாக இதுவரை முன் மொழியப்படாத புதிய சித்தாந்தத்தை அது முன் வைத்தது. கம்யூனிச பொருளாதார வாதத்தின் விவிலிய நூல் இதுதான். இது குறித்த பல்வேறு விளக்கங்களை கார்ல் மார்க்ஸ், தமது தோழர் எங்கிள்ஸ் உடன் இணைந்தும் எழுதினார்.// (ஆசி கந்தராஜா)

இவ‌ர் உண்மையிலேயே மூல‌த‌ன‌ம் நூலை ப‌டித்தாரா என்ப‌து ச‌ந்தேக‌த்திற்குரிய‌து. ஏன் என்றால் அதில் முக்கிய‌மான‌ ப‌குதியான‌ உப‌ரிம‌திப்பு ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ க‌ட்டுரையில் இல்லை. மூல‌த‌னம் ஒரு "க‌ம்யூனிச‌" பொருளாதார‌ நூல் அல்ல‌! சுத்த அப‌த்த‌ம். அதில் உள்ள‌து முழுவ‌தும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ம் மீதான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள். அதை விவிலிய நூலுடன் ஒப்பிடுவது மகா அபத்தம். அப்படியானால், ஆடம் ஸ்மித் எழுதிய வெல்த் ஒப் நேஷன்ஸ் நூலைப் பற்றி என்ன சொல்கிறார்? அது லிபரல் பொருளாதாரவாதத்தின் விவிலிய நூல் என்பாரா?

//அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரேநேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.// (ஆசி கந்தராஜா)

அமெரிக்க‌ டால‌ர், மற்றும் பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுன்ஸ் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ரிவ‌ர்த்த‌னைக்கு விட‌ப் ப‌டும் நோக்க‌ம் வேறு. அது ச‌ர்வ‌தேச‌‌ வ‌ர்த்த‌க‌த்தின் மீது ஆதிக்க‌ம் செலுத்தும் நோக்க‌ம் கொண்ட‌து. காலனிய காலத்தில் பிரித்தானியா உலகில் அரைவாசியை ஆண்டது. அதன் கடற்படை சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது ஸ்டேர்லிங் பவுன்ஸ் உலகமெல்லாம் பரவியதில் என்ன ஆச்சரியம்?

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா பிரிட்டனை மிஞ்சிய வல்லரசாக மாறியது. அமெரிக்க டொலர் இன்று பெட்ரோ டொல‌ர் என்றும் அழைக்க‌ப் ப‌டுகின்ற‌து. அதற்குக் காரணம், ஒபெக் நாடுகளின் பெட்ரோல் விற்ப‌னை முழுக்க‌ முழுக்க‌ அமெரிக்க டொல‌ரில் ந‌ட‌க்கிற‌து. ஒரு தடவை, ச‌தாம் ஹுசைன், க‌டாபி ஆகியோர் யூரோவுக்கு மாற‌ விரும்பினார்க‌ள். அத‌ற்குப் பின்ன‌ர் அவ‌ர்க‌ள் ப‌த‌வியில் இருந்து தூக்கியெறிய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)

சோஷ‌லிச‌ நாடுக‌ளின் ம‌த்திய‌ வ‌ங்கிக‌ளிலும் த‌ங்க‌ம் கையிருப்பில் வைத்திருந்தார்க‌ள். இது அடிப்படை பொருளாதாரம். ஒரு நாடு சோஷலிச பொருளாதாரத்தை பின்பற்றினாலும் மத்தியவங்கியும் அதன் செயற்பாடுகளும் ஒன்று தான். ஒரு பொருளின் விலையை உற்பத்தி செலவுகள் தீர்மானிக்கின்றன. அதன் விற்பனை விலையை சந்தை தீர்மானிக்கிறது. ஒரு சோஷலிச நாட்டிலும் அப்படித் தானே இருக்க வேண்டும்? 

பணத்தாள்களை அதிகமாக அச்சிட்டால் அங்கு பணவீக்கம் ஏற்படும். பணத்தின் மதிப்பு குறைவாகவும், பொருளின் விலை அதிகமாகவும் இருக்கும். ஆகவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தாள்களை மட்டுமே புழக்கத்தில் விட முடியும். ஒரு நாடு முதலாளித்துவத்தை பின்பற்றினாலும், சோஷலிசத்தை பின்பற்றினாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தை பரிவர்த்தனை செய்து கொள்வது வழக்கம். அதற்கான விலைகளையும் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு தேச‌த்தின் நாண‌ய‌ம் அந்த‌ நாட்டிற்குள் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌ற்கு ம‌ட்டும் தான். அது ஏன் உல‌க‌ம் முழுக்க‌ சுற்ற‌ வேண்டும்? சோஷ‌லிச‌ பொருளாதார‌த்தை, உல‌க‌ம் முழுவ‌தும் ஆதிக்க‌ம் செலுத்தும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌த்துட‌ன் ஒப்பிடுவதே அபத்தமானது.முதலாளித்துவமானது, இன்று நிதி மூலதான ஏகாதிபத்தியமாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.

//கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).// (ஆசி கந்தராஜா)

ப‌ண‌ம் சுற்றி சுழ‌ல‌ வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூற‌வில்லை! அதை சொன்ன‌து ஆட‌ம் ஸ்மித். அவர் எழுதிய வெல்த் ஒப் நேஷன்ஸ் (The Wealth of Nations) நூலில், அதாவது "லிபரல்வாத விவிலிய நூலில்", அப்படி எழுதப் பட்டுள்ளது. ஆடம் ஸ்மித் ஒரு முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ மேதை. இன்றை‌க்கும் மேற்க‌த்திய‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில் அவரது கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அதாவது, ப‌ண‌ம் சுற்றி சுழ‌லும் கொள்கையும் பின்ப‌ற்ற‌ப் ப‌டுகின்ற‌து. ஒரு உதார‌ணம் த‌ருகிறேன். வ‌ங்கிக‌ள் சேமிப்பை ஊக்குவிப்ப‌தில்லை. அத‌ற்காக‌ மிக‌க் குறைந்த‌ வ‌ட்டி கொடுக்கிறார்கள்.

//விடுமுறையில் நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது, லங்கா சமசமாசக் கட்சிக்கும் கம்யூனிஸ் கட்சிக்கும் தேர்தல் வேலை செய்த பொன்னையா மாஸ்ரர் தொடக்கம், தமிழரசு தம்பித்துரை அண்ணர் வரை கார்ல் மார்க்ஸ்ஸின் ‘பணம் சுற்றிச் சுழல வேண்டிய தத்துவத்தை’ சொல்லிப் பார்த்தேன். சோசலிஷம் எங்களுக்கு சரிவருமோ? என அன்று எனக்கு ஏற்பட்ட ஐயத்துக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.// (ஆசி கந்தராஜா)

"பணம் சுற்றிச் சுழலும் தத்துவம்", லிபரல்வாத விவிலிய நூல் எழுதிய ஆடம் ஸ்மித் கண்டுபிடித்த தத்துவம் என்பது, ஜெர்மனியில் படித்த ஆசி கந்தராஜாவுக்கே தெரியவில்லை. இலங்கையில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? இவர் சோஷலிசம் என்று லிபரலிசத்தை சொல்கிறாரோ என்று எனக்கு ஐயம் ஏற்படுகின்றது. ஏனென்றால், இலங்கையில் முதலாளித்துவம் இருந்தாலும், அது மேற்குலகில் இருப்பதைப் போன்ற நவ- தாராளவாத முதலாளித்துவமாக இருக்கவில்லை. அந்த மாற்றம் தற்போது மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம், இப்போதும் கூட, பெரும்பாலான தமிழ் மக்கள் நகை, காணி போன்ற அசையும், அசையா சொத்துக்களில் பணத்தை பதுக்குவார்கள். அதனால் பணம் சுற்றிச் சுழலுவதில்லை. அதற்கு மாறாக, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் யாரும் காணி, நகைகளில் பணத்தை முடக்குவதில்லை. வீடு வாங்கினாலும் வங்கிக் கடனில் வாங்கி இருப்பார்கள்.

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான மக்களிடம் எந்தச் சொத்தும் கிடையாது. அவசரத் தேவைகளுக்காக கொஞ்சப் பணம் சேமித்து வைத்திருப்பார்கள். பலரிடம் அதுவும் இருப்பதில்லை. தலைக்கு மேலே கடனை வைத்திருப்பார்கள். கடனால் சூழப்பட்ட சமூகத்தில் தான் பணம் சுற்றிச் சுழல்கிறது. 

அந்த நிலைமை தற்போது இலங்கையிலும் வந்து விட்டது. கிரெடிட் கார்ட், லீசிங் என்று மக்களை கடனில் மூழ்கடிக்கும் சாதனங்கள் வந்து விட்டன. நாட்டில் கடனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், பணம் சுற்றிச் சுழல்கிறது. எப்படியோ ஆடம் ஸ்மித்தின் தத்துவம் நடைமுறைக்கு வந்துவிட்டது.


பிற்குறிப்பு:
அவரது கட்டுரைக்கு நான் மறுப்புத் தெரிவித்து எழுதியதும், "மார்க்ஸ் எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை ஜேர்ம‌ன் மொழியில் வாசிக்குமாறு", திரு ஆசி க‌ந்த‌ராஜா என‌க்கு ப‌தில் அளித்திருக்கிறார். என‌க்கு ஜேர்ம‌ன் மொழி தெரியும் என்பது ஒரு புற‌ம் இருக்க‌ட்டும். 

எல்லோரும் எல்லாவ‌ற்றையும் மூல‌ மொழியில் தான் வாசிக்க‌ வேண்டுமா? ஏற்க‌ன‌வே த‌ர‌மான‌ த‌மிழ், ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ள் உள்ள‌ன‌ தானே? விவிலிய‌ நூலை வாசிப்ப‌த‌ற்கு எம‌க்கு கிரேக்க‌ மொழி தெரிந்திருக்க‌ வேண்டுமா? என்ன‌வொரு அப‌த்த‌மான‌ ப‌தில் இது? 

உண்மையில் அவ‌ர் எதையும் ப‌டிக்க‌வில்லை. அதை ம‌றைப்ப‌த‌ற்காக ஜேர்மன் மொழியில் ப‌டித்த‌தாக‌ புளுகுகிறார். த‌ன‌து க‌ட்டுரையை வாசிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, யாருமே மார்க்ஸின் நூல்க‌ளை ப‌டிக்க‌வில்லை என்று அவ‌ர் நினைத்துக் கொள்கிறார். அதை த‌னது க‌ட்டுரையின் தொட‌க்க‌த்திலேயே கூறி விடுகிறார். 

அது மட்டுமல்ல, நான் கொடுத்த இணைப்புகளை கூட "ஏட்டுச் சுரைக்காய்" என்று நிராகரித்துள்ளார். அதில் ஒன்று நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் சொல்லப் பட்ட விடயங்கள். முன்னாள் சோவியத் குடியரசான மொல்டாவியா மக்களை பேட்டி கண்டிருந்தனர். மற்றைய இணைப்பு Le Monde எனும் பிரெஞ்சு பத்திரிகையில் வந்த கட்டுரை ஆகும்.

Wednesday, December 21, 2016

ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (நான்காம் பாகம்)

"தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் நிறையப் பேருண்டு. படிப்பறிவில்லாத பாமரர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், ஒரு சில வணிகவியல் பட்டதாரிகளும் அப்படிச் சொல்வது ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம். ஏனென்றால், பொருட்களை சந்தைப் படுத்தல் தொடர்பான மார்க்கெட்டிங் பாடத்தில், மிகத் தெளிவாக வர்க்கப் பிரிவினைகள் பற்றி விளக்கி இருப்பார்கள்.

சந்தைப் படுத்தலில் வர்க்க வேறுபாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார விதி. பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சி, உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்பதும், அதற்குப் பின்னரே வர்க்க வேறுபாடுகள் தோன்றின என்பதும், எமது நாட்டு பாட நூல்களில் எழுதப் படவில்லை. இலங்கையும் ஒரு காலத்தில் ஆங்கிலேய காலனியாக இருந்ததையும், அப்போது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி அறிமுகப் படுத்தப் பட்டதையும் பலர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனது தந்தைக்கு வர்க்கங்கள் பற்றிய புரிதல் இருந்தது. அதை அவராகவே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கூடவே ஒரு பிழையான தகவலையும் சொன்னார். இலங்கையில் "மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக" கூறினார். எனது தந்தை மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் கூட, அப்படித் தான் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது 28 வயது வரையும், அதை நானும் உண்மை என நம்பி இருக்கிறேன். அப்போது நெதர்லாந்தில் சந்தித்த ஒருவர் மூலம் அறிவுக் கண் திறந்தது. அவர் நெதர்லாந்தில் ஜனநாயகத்தில் அதிக அக்கறை செலுத்தும் D66 என்ற கட்சி உறுப்பினரான இளம் பெண் ஆவார். இலங்கையில் உள்ள வர்க்கங்களின் விகிதாசாரம் பற்றி விசாரித்த பொழுது, நான் அப்பா சொன்ன விளக்கத்தை அப்படியே ஒப்புவித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. நெதர்லாந்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைவு என்று சொன்னார். நான் சொல்வது உண்மையானால், இலங்கை உலகிலேயே தனித்துவமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.

உண்மையில் அதற்குப் பிறகு தான், நானும் வர்க்கங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதே வருடம், நெதர்லாந்தில் பல்கலைக் கழக நுழைவுப் பரீட்சைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது வரலாறு, மற்றும் சமூகவியல் பாட நூல்களில் வர்க்கம் பற்றி எழுதி இருந்ததை ஆழமாக படித்தறிந்தேன். 

மேற்குலக நாடுகளில் உள்ள வர்க்க முரண்பாடு பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வர்க்க மக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள் என்ற உண்மையை, நானும் காலம் தாழ்த்தித் தான் அறிந்து கொண்டேன் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதினான்கு வயது வரைக்கும், நானும் தெய்வ நம்பிக்கை கொண்ட, ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட சாதாரணமான சிறுவனாகத் தானிருந்தேன். எனது முதலாவது கட்டுரையும் சைவ சமயம் பற்றியது தான். கடவுளை வழிபடுவது பற்றி நான் எழுதிய கட்டுரை கொழும்பு சைவ முன்னேற்றக் கழகம் வெளியிட்ட ஆண்டு மலரில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் சிவபுராணம் மனனம் செய்து ஒப்புவித்து பரிசு வாங்கி இருக்கிறேன். தேவாரம் பண்ணோடு பாடுவதற்கு அறிந்து வைத்திருந்தேன். பெரிய புராணம், கந்தபுராணம் நூல்களை எல்லாம் வாசித்திருந்தேன். 


அந்த வயதில் எனக்குள் எழுந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், எதற்காக பணக்காரர்களுக்கு வசதியை அள்ளிக் கொடுத்து, ஏழைகளை கஷ்டப் படுத்தி, மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டும்? அந்த வயதிலேயே, இந்துகளின் "கர்ம வினைப் பயன்" கோட்பாடு அபத்தமாகப் பட்டது.  நான் அறிந்த வரையில் ஏழைகள் தான் அதிக நேரம் கோயில்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

சிறு வயதில், எனது பெற்றோருடன் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பதைக் கண்டேன். கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களும் கடவுளிடம் பிச்சை தான் கேட்டார்கள். ஆனால், அதை அவர்கள் நாகரிகமாக வரம் என்று சொன்னார்கள். வெளியே வந்த பக்தர்கள் தம்மிடம் இரந்தவர் தட்டில் சில்லறைகளை போட்டார்கள். அதை அவர்கள் பிச்சை என்றார்கள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எனக்கு ஒரு தத்துவத்தை போதித்தார்கள். ஒரு சாதாரணமான பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுள் எப்படி சக்தி படைத்ததாக இருக்க முடியும்?

யாழ் மேட்டுக்குடியினரின் பாடசாலை என்று பெருமை தேடிக் கொள்ள விரும்பிய யாழ் இந்துக் கல்லூரி, ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தனது மாணவர்களை மூளைச்சலவை செய்து வந்தது. நான் படித்த காலத்தில் ஓர் இந்து அறிஞர் ஆன்மீக சொற்பொழிவாற்ற வந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் கேள்வி கேட்கச் சொன்னார். "இலட்சக் கணக்கான குழந்தைகள் பாலின்றி தவிக்கும் நாட்டில் எதற்காக சாமி சிலைகளுக்கு குடம் குடமாக பால் ஊற்றுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்டான்.

அதற்கு அவர், "கடவுளுக்கு பாலபிஷேகம் செய்தால் அவர் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கிடைக்க அருள் செய்வார்." என்று சொல்லிச் சமாளித்தார். ஆனால், அந்தப் பதில் எங்களை திருப்திப் படுத்தவில்லை. சாமிக்கு பாலபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டு கால வழக்கம். ஆனால் வறுமை இன்னும் ஒழியவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் பாலும் கிடைப்பதில்லை. பாவம், இதற்கெல்லாம் பதில் கூறும் அளவிற்கு அந்த ஆன்மீக அறிஞர் படித்திருக்கவில்லை.

இலங்கை ஒரு "மதச் சார்புள்ள நாடு". அங்கு பள்ளிக்கூடத்தில் மதத்தை பிரித்துப் பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பாடசாலைகளில், ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். "சரஸ்வதி கல்விக் கடவுள்" என்பது ஒரு சாட்டு மட்டுமே. 

நான் படித்த காலத்தில், எட்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டோம். நாரதரை, சரஸ்வதியை கிண்டலடிக்கும் பகுத்தறிவு நாடகம் அது. ஏதோவொரு புத்தகத்தில் நான் தான் அதை வாசித்து விட்டு நாடகமாக்குவோம் என்று சொன்னேன். நான் அதில் பெண் வேடமிட்டு, அதாவது சரஸ்வதியாக நடித்திருந்தேன். நாடகத்தில் இருந்த நகைச்சுவை வசனங்கள் மாணவர்களை சிரிக்க வைத்தன. பலருக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நாங்கள் ஒன்பதாவது, அல்லது பத்தாவது வகுப்புப் படிக்கும் பொழுது, யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கண்காட்சிகள் நடந்தன. யாழ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கண்காட்சி பார்க்க சென்றிருந்தோம். அப்போது, பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மூளையின் செயற்பாடுகள் குறித்து படம் கீறி வைத்திருந்தனர். மூளாய் (இடத்தின் பெயர்) வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த இடத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன தகவல்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. எமக்கு சிறுவயதில் இருந்தே கடவுளைப் பற்றிய அச்சவுணர்வு திணிக்கப் படுகிறது. அது மூளையில் சேமிக்கப் படுகிறது. வளர்ந்த பின்னர் நாங்கள் அதை உண்மை என்றே நம்புகின்றோம் என்றார். தான் கடவுள் இல்லை என்று சொல்லி வருவதாகவும், அதனால் தனக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்றும் சொன்னார். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர் தான், நூலகத்தில் இருந்து மனோதத்துவ நூல்களை இரவல் எடுத்து வாசித்தேன். கடவுளை நம்புவது மனிதர்களின் உளவியல் பிரச்சினை என்பது அதற்குப் பிறகு தெரிய வந்தது.

நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்களது வகுப்பில் சசிகாந்தன் என்ற நண்பன் இருந்தான். இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்ப தாளில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்திருந்தான். அவன் ஒரு நாள் வகுப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "கடவுள் இல்லை" என்பதே அந்த அதிர்ச்சியான தகவல். வகுப்பில் கெட்டிக்கார மாணவனான அவனை எல்லோரும் விஞ்ஞானி என்று அழைப்போம். தானாகவே சில கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறான். அப்படியான ஒருவன் கடவுள் இல்லை என்று வாதிடும் பொழுது அலட்சியப் படுத்த முடியவில்லை.

எமது வகுப்பில் அடிக்கடி கடவுள் பற்றிய வாக்குவாதங்கள் நடந்தன. சிலர் சசிகாந்தனை தீவிரமாக எதிர்த்தார்கள். பலர் குழம்பினார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே அவன் சொன்னதைக் கேட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடவுள் பற்றிய எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் தந்தான். ஓய்வுநேரங்களில், வண்ணார்பண்ணையில் இருக்கும் அவனது வீட்டுக்கு சென்றும் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது எனக்கு வேறு தொடர்புகள் மூலமாக, மார்க்சியம் பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தது. அது பற்றிய தகவல்களை சசிகாந்தனுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்ற நேரம், என்னிடம் விசாரித்து ஈரோஸ் இயக்கத் தொடர்பை பெற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தான். சில வருடங்களுக்குப் பின்னர், போர்ச் சூழல் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவிய இனந் தெரியாத நோய்க்கு பலியாகி இறந்ததை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் அப்போது புலம்பெயர்ந்து சென்று விட்டேன்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், சாதி, வர்க்கம், மதம் என்பனவற்றுக்கு இடையிலான நெருங்கிய உறவு தெரிய வந்தது. இவையெல்லாம் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருந்தது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்து கொண்டு நிலைத்து நிற்கின்றன.

சாதிப் பாகுபாடு காரணமாக, ஒரே மதத்தை சேர்ந்த மக்களை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டுப்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அப்போது அடக்குமுறையாளர்கள் பக்கம் நின்ற கடவுள் எவ்வாறு சக்தி படைத்தவராக இருக்க முடியும்? இதே கேள்வி தான் கொழும்பில் தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் கொல்லப் பட்ட நேரத்திலும் எழுந்தது. நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து விட்டு, இன ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தால் அங்கும் கடவுளின் சக்தி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

வட பகுதியில் நடந்த விமானக் குண்டுவீச்சுகளில் இந்துக் கோயில்கள் சேதமானதை நேரில் கண்டிருக்கிறேன். அப்போது "இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போயின?" என்று சாதாரண பாமர மக்களே கேட்டிருக்கிறார்கள். போர்ச் சூழலில் வாழ்ந்த படியால், அதன் குரூரங்களை நேரில் கண்ட படியால், என்னைப் பொருத்தவரையில் அது கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது.

போரில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த பிறகும், பலர் கோயில்களில் தவமிருந்தார்கள். இங்கே தான் கடவுள் பற்றிய மனோதத்துவக் கோட்பாடு உதவுகின்றது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்ட மக்கள் ஒன்றில் புரட்சி செய்வார்கள் அல்லது கடவுளிடம் முறையிடுவார்கள்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2.வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!

Tuesday, December 20, 2016

தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(மூன்றாம் பாகம்)

 ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், வேலிப் பிரச்சினைக்கு பக்கத்து வீட்டுக் காரனுடன் சண்டை பிடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தம்முயிரை அர்ப்பணித்து போராட முன்வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. வேலியோரம் நட்ட மரத்தை சரித்து விட்டு, ஆறங்குலம் தள்ளி புதிய வேலி கட்டி, சிறு துண்டு காணியை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள் பலர் இருந்தனர். பக்கத்து வீட்டுக்காரன் அதைக் கண்டு பிடித்து, வாக்குவாதப் பட்டு, கத்தி எடுத்து வெட்டுப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தவர்கள் வேலிக்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், எல்லையோர நகரமான வவுனியாவில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தவர் மீது அவநம்பிக்கை எழக் காரணம் அவர்களது பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) மனப்பான்மை. கொழும்பில் வசித்த தமிழர்களில், அவர்கள்  பெரும்பாலும் அரசாங்க உத்தியோகங்களில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது மாதிரி, கொழும்பில் வேலை செய்து கொண்டு, மணி ஓடர் மூலம் ஊரில் இருந்த பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான வருமானமாக மணி ஓர்டர் பொருளாதாரம் இருந்தது. அந்த நேரம் கொழும்பில் வாழ்ந்த என்னுடைய அப்பா, அம்மாவும் அவர்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர்.

கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த பலர் கொழும்பு வாசிகளாகி விட்டனர். இலங்கையின் பொருளாதார மையத்தில் வீடெடுத்து, உத்தியோகம் பார்த்துக் கொண்டு, நகரத்தின் வசதிகளை அனுபவித்து வந்தனர். 1958, 1977, 1983 என்று அடுத்தடுத்து இனக்கலவரங்கள் நடந்த போதிலும் கொழும்பை விட்டு செல்லவில்லை. கலவரம் நடக்கும் பொழுது அகதிகளாக யாழ்ப்பாணம் சென்று, அதிக பட்சம் ஒரு மாதம் இருந்து விட்டு கொழும்புக்கு திரும்பிச் செல்வார்கள். 1983 க்குப் பின்னர் ஒரு பகுதியினர் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த விடயங்களை நான் எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், "சிங்களவனிடம் அடி வாங்கிய" ஒரு காரணத்தால் மட்டும் யாரும் போராட வருவதில்லை. இனக் கலவரக் காலத்தில் கொழும்பில் நடந்த படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சொத்தழிவுகளை அனுபவித்தவர்கள் கொழும்புத் தமிழர்கள். நாங்களும் அந்தக் கோரக் கதைகளை சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டு வளர்ந்தோம். இருப்பினும், ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட கொழும்புத் தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தது.

உண்மையில், ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டம் கொழும்பில் தான் தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தற்காப்பு நடவடிக்கையாக கூட எதுவும் நடக்கவில்லை. அவர்களில் யாரும் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் இணையவில்லை. அதற்கு மாறாக, தலைநகரில் தாம் ஏற்கனவே செய்து வந்த தொழில்களை தொடர்ந்தார்கள்.  

அதற்குக் காரணம் கொழும்புத் தமிழரின் பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை அன்றி வேறென்ன? ஆயுதப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன், வீட்டைத் துறந்து, பதவியை இழந்து, தலைமறைவு வாழ்க்கை வாழத் தயாராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசியத் தலைவர்களும் கொழும்பில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் கொழும்பில் தான் தமிழ்த் தேசிய கொள்கை வகுப்பது சம்பந்தமான கூட்டங்களை நடத்தினார்கள். நான் சிறுவனாக இருந்த காலங்களில், அந்தக் கூட்டங்களுக்கு அப்பாவுடன் சென்று வருவது வழக்கம். அதைத் தவிர, சைவ சமயத்தின் பேரில் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் சங்கங்களும் செயற்பட்டு வந்தன.

யாழ்ப்பாணத்தை விட, கொழும்பில் தான் தமிழ்க கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருவதாகவும், பக்தியோடு கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை இங்கே அதிகம் என்றும் அப்பாவும், அம்மாவும் அடிக்கடி சொல்லி வந்தனர். மதமும், கலாச்சாரமும் அந்தஸ்தின் அடையாளமாக இருப்பதை நான் கொழும்பில் கண்டுகொண்டேன்.

1983 இனக்கலவரத்திற்கு முன்னரே நாங்கள் கொழும்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். அது வரையும் கொழும்பு வாசிகளாக இருந்த நாங்கள், யாழ்ப்பாணவாசிகளாகி விட்டோம். எனது வாழ்க்கையில் நடந்த இந்த மாற்றம் தான், ஈழப் போராட்ட அரசியலிலும் நாட்டம் கொள்ள வைத்தது. நாங்கள் தொடர்ந்தும் கொழும்பில் வாழ்ந்திருந்தால், இன்று நானும் எனது நண்பர்கள் மாதிரி எதாவதொரு நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். அரசியல் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.

யாழ்ப்பாண வாழ்க்கையில், வர்க்கங்களுக்கு இடையில் ஊடாட முடிந்தது. எங்களது உறவினர்கள் மத்தியில் கூட இரண்டு வர்க்கங்களை காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிலர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்தனர். மறுபுறத்தில், பலர் கூலித் தொழிலாளர்களாக ஏழ்மையில் வாழ்ந்தனர். அப்போது பதினாறு வயதாகி விட்டதால் சமூகத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓய்வுநேரம் கூட எவ்வாறு மாறுபடுகின்றது என்பதைக் கண்கூடாக கண்டேன். மேட்டுக்குடியினர் ஓய்வு நேரத்தில் கூடியிருந்து, அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம், ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினர் எந்தவித அரசியல் ஆர்வமும் இன்றி வாழ்ந்தனர். ஒரு சிலர், ஓய்வு நேரத்தில் குடிப்பதும், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு பொருளாதாரச் சுரண்டல் பற்றிய அறிவு கிடையாது என்று மேட்டுக்குடியினர் நினைக்கின்றனர். அது தவறு. கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் நண்பர்களுடனான உரையாடலில் அவர்களே பல தகவல்களை சொன்னார்கள். தங்களை வேலைக்கு வைத்திருக்கும் தொழில் வழங்குனர்கள், எவ்வாறு குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதை அவர்கள் என்னிடம் விளக்கமாக கூறி இருக்கிறார்கள்.

ஒரு தடவை அப்பா நூலகத்தில் விற்கப் பட்ட பழைய நூல்களை கட்டுக் கட்டாக வாங்கி வந்திருந்தார். அவற்றிற்குள் சில மார்க்சியப் புத்தகங்களும் இருந்தன. லெனின் எழுதிய "நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" என்ற சிறிய நூலும் இருந்தது. அப்போதே அதை வாசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு இலகுவாக எழுதப் பட்டிருந்தது. அந்த நூலைக் கொண்டு சென்று, கூலித் தொழில் செய்யும் நண்பர்களுக்கு காட்டி விளங்கப் படுத்தினேன். லெனின் எழுதிய பல கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். அதற்குக் காரணம், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உள்ளது என்பது தானே?

இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்று சொல்லப் படுவதற்கு ஏற்றவாறு யாழ்ப்பாண பொருளாதார அமைப்பும் இருந்தது. பிரிட்டிஷ் காலனிய காலத்தில் கட்டப் பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையை தவிர வேறு தொழிற்துறைகள் அங்கே இல்லை. அதனால், இந்த இரண்டு தொழிலகங்களை தவிர வேறெங்கும் குறிப்பிட்டளவு தொழிலாளர் வர்க்கம் உருவாகி இருக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் மில்க்வைற் சவர்க்காரம் எல்லாக் கடைகளிலும் விற்பனை செய்யப் பட்டது. உடுப்புகள் கழுவுவதற்கு பாவிக்கப் பட்ட சன்லைட் சவர்க்காரம் ஒரு தென்னிலங்கை சிங்களத் தயாரிப்பு. அதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்து தமிழ் முதலாளியின் உள்ளூர் தயாரிப்பாக மில்க்வைற் இருந்தது. யாழ் குடாநாட்டைப் பொருத்தவரையில், பெருமளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையை கொண்டிருந்தாலும் அது தனி ஒரு முதலாளியால் நடத்தப் பட்டது.

நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நல்லூர்க் கோயிலுக்கு போவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பிக் குளிக்க வேண்டும். நல்லூர்க் கோயில் சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த படியால் நடந்து சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவோம். 

நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புற வீதி

நாங்கள் நல்லூர் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும், அங்கே மில்க்வைற் முதலாளியை அல்லது அவரது எடுபிடிகளை காணலாம். "சிவநெறிச் செல்வர்", "கொடை வள்ளல்", என்று தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக் கொண்ட மில்க்வைற் முதலாளி தனது பக்தியை பறைசாற்றிக் கொண்டிருப்பார். தேவாரம், திருவாசகம் அடங்கிய சிறு பிரசுரங்களை பக்தர்களுக்கு  இலவசமாக விநியோகித்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு பிரசுரத்திலும் "இது மில்க்வைற் அன்பளிப்பு" என்று தவறாமல் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும், பக்தர்களுக்கு தேவாரப் புத்தகம் அன்பளிப்பு செய்யும் சாட்டில், விளம்பரம் தேடும் மில்க்வைற் முதலாளியின் செயல் அருவருப்பை ஊட்டியது. அவரது கடவுள் பக்தி போலியானது என்பது புரிந்தது. யாழ் இந்துக்கல்லூரி சுற்றாடலில் தான் மில்க்வைற் தொழிற்சாலையும் அமைந்திருந்தது. அப்போது தமக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தகவலும் எமது காதுகளுக்கு எட்டியிருந்தது.

வீட்டில் தாயை பட்டினி போட்டு விட்டு மகன் அன்னதானம் செய்தானாம். அது மாதிரி, மில்க்வைற் முதலாளி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்தார். அதைக் கூட ஒழுங்காக கொடுப்பதில்லை. அவரது சவர்க்காரத் தொழில் நட்டத்தில் ஓடியதாக சாட்டுச் சொல்ல முடியாது. (அளவுக்கு மிஞ்சி பணம் சேர்ந்ததால் தானே "கொடை வள்ளல்" ஆனார்?) யாழ் குடாநாட்டு கடைகள் எங்கும், மில்க்வைற் சன்லைட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையானது. சிறுவயதில் பொதுவுடமைக் கருத்துக்களை இயல்பானதாக உள்வாங்கிக் கொள்வதற்கு மேற்படி அனுபவங்கள் காரணமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் முதலாளி தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உழைப்பை சுரண்டுவதும், அவ்வாறு திருடிய பணத்தில் பக்திமானாக கொடை வள்ளல் வேஷம் போடுவதும், சிறு பிள்ளைகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்கள். 

இதற்கெல்லாம் யாரும் மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களைப் படித்து பட்டம் வாங்கியிருக்கத் தேவையில்லை. படிப்பறிவில்லாத பாமரத் தமிழர்களுக்கும் இலகுவாகப் புரியும். ஆனால், ஒரு சில மெத்தப் படித்த தமிழ் அறிவுஜீவிகள் மட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளாத காரணம் என்ன? அவர்களுக்கு அந்தளவு அறிவு இல்லையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: