Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, September 16, 2023

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த ஈழப்போர்!

 

ஈழப் போர் நடந்த காலத்தில் நிறையப் பேர் தமது கண் முன்னே நடந்த கொடுமைகளைக் கண்டு நாத்திகர்களாக மாறி இருந்தனர். "கடவுள் இல்லை!" என்று பாமர மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசியல் அறிவு, கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் கடவுள் இல்லை என்ற உண்மையை கண்கூடாகக் கண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் தீவிர மத நம்பிக்கையாளர்களாக இருந்த பலர், யுத்த காலத்தில் கோயிலில் சாமி இல்லை என்று கூறி போகாமல் விட்டனர். கோயிலில் குண்டு போட்டால் யார் தான் அப்படி சிந்திக்க மாட்டார்கள்? இது சமூக யதார்த்தம்.

ஆனால், நமது தமிழ் சமூகத்தில் கற்பனை உலகில் வாழும் சில ஜீவன்கள் உள்ளன. சமூக வலைத் தளங்களில் தம்மை தீவிர தமிழ் இனப் பற்றாளர்களாக காட்டிக் கொள்வார்கள். தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழம், சுயநிர்ணயம் என்றெல்லாம் மேதாவி மாதிரி பேசித் திரிவார்கள். வடக்கு கிழக்கில் நடக்கும் தமிழ்த் தேசிய ஆர்ப்பாட்டங்களில் முன்னுக்கு நிற்பார்கள். மேற்கண்ட போலித் தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் நல்லூர் முருகனின் தேர் வலம் கண்டு பக்திப் பரவசத்துடன் கை கூப்பி வணங்குகிறார்கள். இது மது மயக்கம் அல்ல மத மயக்கம்.

ஒரு பக்கம் "இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்! சர்வதேசமே தலையிடு!!" என்று இறந்த மக்களின் உடல்களை காட்டி அரசியல் செய்வார்கள். அவர்களே மறு பக்கம் திரும்பி "இனப்படுகொலையை தடுக்க சக்தியற்றிருந்த "இனத் துரோகி", நல்லூர் "ஒட்டுக்குழு" கந்தனுக்கு அரோகரா!" என்பார்கள். விசித்திரமான உலகம்.

ஏன்டா தற்குறிகளே! அது தான் கடவுள் இல்லை வெறும் கல் என்பதை 30 வருட ஈழப் போர் நிரூபித்து விட்டதே? பிறகேன்டா அதை கும்பிடுகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே போருக்குள் இன்னல் பட்டு வாழ்ந்தீர்களா அல்லது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் சொகுசாக வாழ்ந்தீர்களா?

எந்த வகையிலும் போரினால் பாதிக்கப் படாத சொகுசுப் பேர்வழிகள் தான் பொழுதுபோக்காக தமிழ்த்தேசியம் பேசுகின்றனர். அதனால் தான் எந்த வித கூச்சமும் இல்லாமல், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நல்லூர் கந்தனுக்கு காவடி தூக்க முடிகிறது. அயோக்கியக் கும்பல்.

கடவுளை மற ! 
மனிதனை நினை ! 
கடவுள் இல்லை ! 
கடவுள் இல்லை !! 
கடவுள் இல்லவே இல்லை !!! 
கடவுளை கற்பித்தவன் முட்டாள்! 
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! 
கடவுளை மற! 
மனிதனை நினை! 
- தந்தை பெரியார்

Thursday, December 28, 2017

"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்" எனும் பொய்ப் பிரச்சாரம் குறித்து...


இன்று வ‌ரை ப‌ல‌ரால் ந‌ம்ப‌ப் ப‌டும் பொய் ஒன்றுள்ள‌து. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நாடுகளில் மதம் தடைசெய்யப் பட்டதாகவும், ஆலயங்கள் மூடப் பட்டதாகவும் இன்னமும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலத்தில், மக்கள் அதிகார மையங்களை நொறுக்கும் பொழுது, மத நிறுவனங்களும் தாக்கப்படுவது வழமை. 

மதத்திற்கு எதிரான கிளர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியுடன் ஆரம்பமானது. அதன் விளைவாக மதச்சார்பற்ற அரசுகள் தோன்றின. இன்று பல மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது போன்ற சமூக மாற்றத்தை தான் கம்யூனிஸ்டுகள் ஆண்ட நாடுகளில் கொண்டு வர விரும்பினார்கள். 

ஆனால், முதலாளித்துவ எதிரிகளால் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன. "கம்யூனிஸ்டுகள் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள்" என்று கூறி, மத நம்பிக்கை கொண்ட பாமர மக்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளானர்.

இந்த விடயத்தில், மதம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரையை வாசித்தால் தெளிவு பிறக்கும். 13 மே 1909, புரெலேடார்ட் பத்திரிகையில் லெனின் எழுதியது. லெனின் நூல் திரட்டில் இருந்து எடுத்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். தமிழ் வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுவதற்காக நான் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்திருந்தாலும், லெனினின் மூலப்பிரதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனியில் மதத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளதையும், ரஷ்யாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அந்த நாடுகளில் இருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் மத எதிர்ப்பு பாரம்பரியம், சோஷலிச இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது. 

பிரான்ஸில் என்சீக்லோபீடியர்கள் (Encyclopedists) எனும் தத்துவ அறிஞர்களின் குழு, தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டிருந்தது. தமிழகத்தில் உள்ள திராவிடர் க‌ழ‌க‌ம் முன்னெடுக்கும் நாஸ்திக இயக்கத்துடன் அதை ஒப்பிடலாம். அதே மாதிரி, ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் (Feuerbach) கூட தீவிர மத எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தோன்றிய பூர்ஷுவா வர்க்கத்தினர் எந்தவொரு மத எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. லெனினின் கூற்றுப் படி, "அந்தப் பொறுப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப் பட்டது." அந்தக் காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி) ரஷ்ய விவசாயிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அமைப்பான நரோட்னிக்குகள் (லெனின் அவர்களை "குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகள்" என்று குறிப்பிடுகிறார்.) கூட பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. 

ஆகவே, கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த "மத எதிர்ப்பு இயக்கம்", அந்தக் கால கட்டத்தில் (முதலாளித்துவ) மேற்கு ஐரோப்பாவில் நடந்த சமூக- அரசியல்  மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கருதப் பட வேண்டும். சுருக்கமாக சொன்னால், பிரான்ஸில் நடந்த முதலாளித்துவ புரட்சியின் தொடர்ச்சியாகத் தான், ரஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சியும் மத நிறுவனங்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழித்தது.

லெனின் கூறியதாவது: 
//மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படையானது இயங்கியல் பொருள்முதல்வாதமே. அதையே மார்க்ஸ், எங்கெல்சும் பிரகடனம் செய்தனர். அது 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் தோன்றிய பொருள் முதல்வாத தத்துவத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார். பொருள்முதல்வாதமானது முற்றுமுழுதாக நாஸ்திக வாதமே என்பதுடன், அது மதத்துடன் பகைமை கொண்டுள்ளது.//

பொருள்முதல்வாத தத்துவம் நாஸ்திகமே என்பதைக் கூறும் லெனின், எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" நூலையும் வாசிக்கக் கோருகின்றார். டூரிங் (Düring) என்பவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு சோஷலிச தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியவாதி அல்ல. (அதாவது மார்க்சுடன் கொள்கை முரண்பாடு கொண்டவர்). அப்போது கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதில் மும்முரமாக இருந்த படியால், டூரிங்கின் வாதங்களை மறுக்கும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றிருக்கிறார். "டூரிங்கிற்கு மறுப்பு"(இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை இப்போதும் வாங்கலாம்.) நூலில் தீவிர நாஸ்திகம் எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். அதை லெனின் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு லெனின் எழுதியதை நான் இங்கு இலகுபடுத்தி தருகிறேன். மதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதன் மூலம், அதை தொழிலாளர் கட்சியின் முக்கிய செயற்பாடாகுவதன் ஊடாக, "இடதுசாரிகளாக", "புரட்சியாளர்களாக" காட்டிக் கொள்வோரை எங்கெல்ஸ் கண்டித்துள்ளார். 1874 ம் ஆண்டு, பிரான்ஸில் பிளாங் என்ற சோஷலிச அறிஞர் வழிகாட்டலில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்கடிக்கப் பட்டது. அப்போது பலர் லண்டனில் அகதிகளாக தஞ்சம் கோரி இருந்தனர். அந்த "பிலாங்கிஸ்ட் அகதிகள்" வெளியிட்ட அறிக்கையை எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். இது போன்ற மதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் மதத்திற்கு புத்துயிர் கொடுப்பதுடன், அது தானாகவே அழிந்து போவதைத் தடுத்து விடும் என்று கண்டித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பெரும்பகுதியை புரட்சிகரமாக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே, ஒடுக்கப் பட்ட மக்களை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுதலை செய்யும். மதம் ஒரு கருத்துமுதல்வாதம் என்பதைக் கூறிய தத்துவ அறிஞர் டூரிங்கை பாராட்டிய அதே எங்கெல்ஸ், டூரிங்கின் "சோஷலிச நாட்டில் மதத்தை தடை செய்யும் புரட்சிகர கொள்கையை" கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. எங்கெல்ஸ் அதை "பிஸ்மார்க் செய்தது போன்று முட்டாள்தனமான எதிர்விளைவுகளை தரும்" என்று குறிப்பிடுகிறார். "கலாச்சாரப் போராட்டம்"(Kulturkampf) என்ற பெயரில் அன்றைய ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அதைப் பலப்படுத்துவதில் முடிந்தது என்பதை லெனின் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பிஸ்மார்க் மதத்திற்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்பியமை, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியின் கவனத்தை திசை திருப்பியதுடன், பூர்சுவா வர்க்கத்தின் "மத எதிர்ப்பு போலித்தனத்தையும்" வெளிப்படுத்தியது. பிஸ்மார்க் செய்தது போன்று, டூரிங் வேறு வடிவில் செய்ய நினைக்கிறார் என எங்கெல்ஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளிவர்க்கம் அதற்காக தயார்படுத்தப் பட வேண்டும் என விரும்பினார். பாட்டாளிவர்க்கத்தை பொறுமையாக ஒழுங்குமுறைப் படுத்தி, தெளிவுபடுத்துவதன் மூலம் மதத்தை தானாக அழிய வைக்கலாம். ஆனால், அது மதத்திற்கு எதிரான அரசியல் போராக மாற்றப் படக் கூடாது.

மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம் தான். அது மதத்துடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பகைமை கொண்டுள்ளது. என்சீக்லோபீடியர்கள், போயர்பாக் போன்றோரின் நிலைப்பாடும் அது தான். ஆனால், மார்க்ஸ், எங்கெல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதற்கும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை சரித்திர தளத்துடனும், சமூகவியல் தளத்துடனும் இணைக்கிறது. நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அது பொருள்முதல்வாதத்தினதும், மார்க்சியத்தினதும் தொடக்கமாக உள்ளது.

ஆனால், மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் மேலே செல்கிறது. அதாவது நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கும் முதல், மக்களினதும், நம்பிக்கையினதும் மூலமாக உள்ள பொருள் வாதமாக வெளிப்படுத்தப் பட வேண்டும். மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சாரமாக குறுக்கக் கூடாது. ஆனால், மதத்தின் சமூக வேர்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான நடைமுறையாக பிணைக்கப் பட வேண்டும்.

எதற்காக நகர்ப்புற பாட்டாளிகள், விவசாயிகள் மத்தியில் மதம் நிலைத்திருக்கிறது? "அதற்குக் காரணம் மக்களின் அறியாமை" என்று ஒரு முதலாளிய பொருள்முதல்வாதி கூறுவார். "மதம் ஒழிக, நாஸ்திகம் வாழ்க, எமது முக்கிய கடமை நாஸ்திகத்தை பரப்புவது தான்" என்று ஒரு முதலாளித்துவ முற்போக்குவாதி மேலும் கூறுவார். ஆனால், மார்க்சியர்கள் அதைத் தவறு என்கிறார்கள். ஏனென்றால், இது போன்ற கருத்தானது, மேலோட்டமான, முதலாளிய கலாச்சாரத்திற்கு உட்பட்ட பரப்புகை ஆகும்.

அது போன்றதொரு கருத்து மதத்தின் வேர்களை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை. அதாவது, கருத்தியல் பூர்வமானதே தவிர பொருள்முதல்வாதம் அல்ல. நவீன முதலாளிய நாடுகளில் இந்த வேர்கள் சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளன:
  • முதலாளித்துவத்தின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறை. 
  • மிகப் பலமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத உழைக்கும் மக்களின் கையாலாகத்தனம். 
  • ஒவ்வொரு நாளும் பல தடவைகள் வருத்தி,காயப்படுத்தும் மனிதாபிமற்ற செயல்கள். 
  • அசாதாரணமான நிகழ்வுகளான யுத்தம், நிலநடுக்கம் போன்றன.

பயம் தான் கடவுளரை முன்னுக்கு கொண்டு வந்தது. கண்ணுக்கு புலப்படாத மூலதனத்தின் செயற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக இருந்தது. "கண்ணுக்கு புலப்படாத" என்று சொல்வதற்கு காரணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில், அவர்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் மூலதனத்தின் சக்தி பற்றிய புரிதல் சாதாரண மக்களிடம் இல்லை. இது தான் தற்காலத்தில் ஒரு மதத்தின் வேர். ஒரு பொருள்முதல்வாதி அதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, நாசமாக்கும் சக்தி படைத்த முதலாளித்துவத்தில் தங்கியுள்ள மதத்தின் வேரைக் கண்டறியாமல், நாஸ்திக பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மதத்தை அகற்ற முடியாது.

(பிற்குறிப்பு: "மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் தொடர்பு பற்றி" என்ற தலைப்பில் லெனின் எழுதிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது.)

Wednesday, December 21, 2016

ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (நான்காம் பாகம்)

"தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் நிறையப் பேருண்டு. படிப்பறிவில்லாத பாமரர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், ஒரு சில வணிகவியல் பட்டதாரிகளும் அப்படிச் சொல்வது ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம். ஏனென்றால், பொருட்களை சந்தைப் படுத்தல் தொடர்பான மார்க்கெட்டிங் பாடத்தில், மிகத் தெளிவாக வர்க்கப் பிரிவினைகள் பற்றி விளக்கி இருப்பார்கள்.

சந்தைப் படுத்தலில் வர்க்க வேறுபாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார விதி. பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சி, உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்பதும், அதற்குப் பின்னரே வர்க்க வேறுபாடுகள் தோன்றின என்பதும், எமது நாட்டு பாட நூல்களில் எழுதப் படவில்லை. இலங்கையும் ஒரு காலத்தில் ஆங்கிலேய காலனியாக இருந்ததையும், அப்போது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி அறிமுகப் படுத்தப் பட்டதையும் பலர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனது தந்தைக்கு வர்க்கங்கள் பற்றிய புரிதல் இருந்தது. அதை அவராகவே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கூடவே ஒரு பிழையான தகவலையும் சொன்னார். இலங்கையில் "மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக" கூறினார். எனது தந்தை மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் கூட, அப்படித் தான் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது 28 வயது வரையும், அதை நானும் உண்மை என நம்பி இருக்கிறேன். அப்போது நெதர்லாந்தில் சந்தித்த ஒருவர் மூலம் அறிவுக் கண் திறந்தது. அவர் நெதர்லாந்தில் ஜனநாயகத்தில் அதிக அக்கறை செலுத்தும் D66 என்ற கட்சி உறுப்பினரான இளம் பெண் ஆவார். இலங்கையில் உள்ள வர்க்கங்களின் விகிதாசாரம் பற்றி விசாரித்த பொழுது, நான் அப்பா சொன்ன விளக்கத்தை அப்படியே ஒப்புவித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. நெதர்லாந்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைவு என்று சொன்னார். நான் சொல்வது உண்மையானால், இலங்கை உலகிலேயே தனித்துவமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.

உண்மையில் அதற்குப் பிறகு தான், நானும் வர்க்கங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதே வருடம், நெதர்லாந்தில் பல்கலைக் கழக நுழைவுப் பரீட்சைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது வரலாறு, மற்றும் சமூகவியல் பாட நூல்களில் வர்க்கம் பற்றி எழுதி இருந்ததை ஆழமாக படித்தறிந்தேன். 

மேற்குலக நாடுகளில் உள்ள வர்க்க முரண்பாடு பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வர்க்க மக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள் என்ற உண்மையை, நானும் காலம் தாழ்த்தித் தான் அறிந்து கொண்டேன் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதினான்கு வயது வரைக்கும், நானும் தெய்வ நம்பிக்கை கொண்ட, ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட சாதாரணமான சிறுவனாகத் தானிருந்தேன். எனது முதலாவது கட்டுரையும் சைவ சமயம் பற்றியது தான். கடவுளை வழிபடுவது பற்றி நான் எழுதிய கட்டுரை கொழும்பு சைவ முன்னேற்றக் கழகம் வெளியிட்ட ஆண்டு மலரில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் சிவபுராணம் மனனம் செய்து ஒப்புவித்து பரிசு வாங்கி இருக்கிறேன். தேவாரம் பண்ணோடு பாடுவதற்கு அறிந்து வைத்திருந்தேன். பெரிய புராணம், கந்தபுராணம் நூல்களை எல்லாம் வாசித்திருந்தேன். 


அந்த வயதில் எனக்குள் எழுந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், எதற்காக பணக்காரர்களுக்கு வசதியை அள்ளிக் கொடுத்து, ஏழைகளை கஷ்டப் படுத்தி, மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டும்? அந்த வயதிலேயே, இந்துகளின் "கர்ம வினைப் பயன்" கோட்பாடு அபத்தமாகப் பட்டது.  நான் அறிந்த வரையில் ஏழைகள் தான் அதிக நேரம் கோயில்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

சிறு வயதில், எனது பெற்றோருடன் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பதைக் கண்டேன். கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களும் கடவுளிடம் பிச்சை தான் கேட்டார்கள். ஆனால், அதை அவர்கள் நாகரிகமாக வரம் என்று சொன்னார்கள். வெளியே வந்த பக்தர்கள் தம்மிடம் இரந்தவர் தட்டில் சில்லறைகளை போட்டார்கள். அதை அவர்கள் பிச்சை என்றார்கள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எனக்கு ஒரு தத்துவத்தை போதித்தார்கள். ஒரு சாதாரணமான பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுள் எப்படி சக்தி படைத்ததாக இருக்க முடியும்?

யாழ் மேட்டுக்குடியினரின் பாடசாலை என்று பெருமை தேடிக் கொள்ள விரும்பிய யாழ் இந்துக் கல்லூரி, ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தனது மாணவர்களை மூளைச்சலவை செய்து வந்தது. நான் படித்த காலத்தில் ஓர் இந்து அறிஞர் ஆன்மீக சொற்பொழிவாற்ற வந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் கேள்வி கேட்கச் சொன்னார். "இலட்சக் கணக்கான குழந்தைகள் பாலின்றி தவிக்கும் நாட்டில் எதற்காக சாமி சிலைகளுக்கு குடம் குடமாக பால் ஊற்றுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்டான்.

அதற்கு அவர், "கடவுளுக்கு பாலபிஷேகம் செய்தால் அவர் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கிடைக்க அருள் செய்வார்." என்று சொல்லிச் சமாளித்தார். ஆனால், அந்தப் பதில் எங்களை திருப்திப் படுத்தவில்லை. சாமிக்கு பாலபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டு கால வழக்கம். ஆனால் வறுமை இன்னும் ஒழியவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் பாலும் கிடைப்பதில்லை. பாவம், இதற்கெல்லாம் பதில் கூறும் அளவிற்கு அந்த ஆன்மீக அறிஞர் படித்திருக்கவில்லை.

இலங்கை ஒரு "மதச் சார்புள்ள நாடு". அங்கு பள்ளிக்கூடத்தில் மதத்தை பிரித்துப் பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பாடசாலைகளில், ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். "சரஸ்வதி கல்விக் கடவுள்" என்பது ஒரு சாட்டு மட்டுமே. 

நான் படித்த காலத்தில், எட்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டோம். நாரதரை, சரஸ்வதியை கிண்டலடிக்கும் பகுத்தறிவு நாடகம் அது. ஏதோவொரு புத்தகத்தில் நான் தான் அதை வாசித்து விட்டு நாடகமாக்குவோம் என்று சொன்னேன். நான் அதில் பெண் வேடமிட்டு, அதாவது சரஸ்வதியாக நடித்திருந்தேன். நாடகத்தில் இருந்த நகைச்சுவை வசனங்கள் மாணவர்களை சிரிக்க வைத்தன. பலருக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நாங்கள் ஒன்பதாவது, அல்லது பத்தாவது வகுப்புப் படிக்கும் பொழுது, யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கண்காட்சிகள் நடந்தன. யாழ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கண்காட்சி பார்க்க சென்றிருந்தோம். அப்போது, பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மூளையின் செயற்பாடுகள் குறித்து படம் கீறி வைத்திருந்தனர். மூளாய் (இடத்தின் பெயர்) வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த இடத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன தகவல்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. எமக்கு சிறுவயதில் இருந்தே கடவுளைப் பற்றிய அச்சவுணர்வு திணிக்கப் படுகிறது. அது மூளையில் சேமிக்கப் படுகிறது. வளர்ந்த பின்னர் நாங்கள் அதை உண்மை என்றே நம்புகின்றோம் என்றார். தான் கடவுள் இல்லை என்று சொல்லி வருவதாகவும், அதனால் தனக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்றும் சொன்னார். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர் தான், நூலகத்தில் இருந்து மனோதத்துவ நூல்களை இரவல் எடுத்து வாசித்தேன். கடவுளை நம்புவது மனிதர்களின் உளவியல் பிரச்சினை என்பது அதற்குப் பிறகு தெரிய வந்தது.

நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்களது வகுப்பில் சசிகாந்தன் என்ற நண்பன் இருந்தான். இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்ப தாளில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்திருந்தான். அவன் ஒரு நாள் வகுப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "கடவுள் இல்லை" என்பதே அந்த அதிர்ச்சியான தகவல். வகுப்பில் கெட்டிக்கார மாணவனான அவனை எல்லோரும் விஞ்ஞானி என்று அழைப்போம். தானாகவே சில கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறான். அப்படியான ஒருவன் கடவுள் இல்லை என்று வாதிடும் பொழுது அலட்சியப் படுத்த முடியவில்லை.

எமது வகுப்பில் அடிக்கடி கடவுள் பற்றிய வாக்குவாதங்கள் நடந்தன. சிலர் சசிகாந்தனை தீவிரமாக எதிர்த்தார்கள். பலர் குழம்பினார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே அவன் சொன்னதைக் கேட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடவுள் பற்றிய எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் தந்தான். ஓய்வுநேரங்களில், வண்ணார்பண்ணையில் இருக்கும் அவனது வீட்டுக்கு சென்றும் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது எனக்கு வேறு தொடர்புகள் மூலமாக, மார்க்சியம் பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தது. அது பற்றிய தகவல்களை சசிகாந்தனுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்ற நேரம், என்னிடம் விசாரித்து ஈரோஸ் இயக்கத் தொடர்பை பெற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தான். சில வருடங்களுக்குப் பின்னர், போர்ச் சூழல் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவிய இனந் தெரியாத நோய்க்கு பலியாகி இறந்ததை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் அப்போது புலம்பெயர்ந்து சென்று விட்டேன்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், சாதி, வர்க்கம், மதம் என்பனவற்றுக்கு இடையிலான நெருங்கிய உறவு தெரிய வந்தது. இவையெல்லாம் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருந்தது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்து கொண்டு நிலைத்து நிற்கின்றன.

சாதிப் பாகுபாடு காரணமாக, ஒரே மதத்தை சேர்ந்த மக்களை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டுப்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அப்போது அடக்குமுறையாளர்கள் பக்கம் நின்ற கடவுள் எவ்வாறு சக்தி படைத்தவராக இருக்க முடியும்? இதே கேள்வி தான் கொழும்பில் தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் கொல்லப் பட்ட நேரத்திலும் எழுந்தது. நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து விட்டு, இன ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தால் அங்கும் கடவுளின் சக்தி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

வட பகுதியில் நடந்த விமானக் குண்டுவீச்சுகளில் இந்துக் கோயில்கள் சேதமானதை நேரில் கண்டிருக்கிறேன். அப்போது "இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போயின?" என்று சாதாரண பாமர மக்களே கேட்டிருக்கிறார்கள். போர்ச் சூழலில் வாழ்ந்த படியால், அதன் குரூரங்களை நேரில் கண்ட படியால், என்னைப் பொருத்தவரையில் அது கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது.

போரில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த பிறகும், பலர் கோயில்களில் தவமிருந்தார்கள். இங்கே தான் கடவுள் பற்றிய மனோதத்துவக் கோட்பாடு உதவுகின்றது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்ட மக்கள் ஒன்றில் புரட்சி செய்வார்கள் அல்லது கடவுளிடம் முறையிடுவார்கள்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2.வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!

Tuesday, January 12, 2010

கடவுள் எவ்வாறு தோன்றினார்? - அறிவியல் ஆதாரம்

ஆதி கால மனிதன், கடவுளையும், மதத்தையும் எவ்வாறு உருவாக்கினான்? விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் வீடியோ. நாகரீகம் எட்டிப் பார்க்காத தீவொன்றில் தனித்து விடப்பட்ட ஆதிவாசிகள். அங்கே திடீரென தோன்றும் விமானத்தைக் கண்டு கடவுள் என்று அதிசயிக்கின்றனர். தொடர்ந்து "விமானக் கடவுளுக்கு" ஆலயம் கட்டி வழிபடுகின்றனர். அன்றிலிருந்து தமது வழமையான வேட்டையாடி சேகரிக்கும் தொழிலை மறக்கின்றனர். ஆகாயத்திலிருந்து வரும் ஆண்டவருக்காக காத்திருக்கின்றனர். இது போன்ற (மூட) நம்பிக்கைகள், இன்று நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களிலும் காணக் கிடைக்கின்றன.