Wednesday, November 23, 2016

சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் ஈழத் தமிழரின் வர்க்க முரண்பாடுகள்

"ஈழத் தமிழர் மத்தியில் வர்க்க முரண்பாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கத்தினராக இருப்பது அதிசயமல்ல. நிரந்தரமான வருமானம், வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தமக்கு கீழே உள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். 

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத" சதிகாரர்களின் முகத்திரை கிழியும் போதெல்லாம் இனவாத போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள். "ஐயோ! தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்களே...." என்று ஊளையிடுவார்கள். இவர்களது "இனப் பற்று" பணக்காரர்களை பாதுகாக்கும் கவசம் என்பதை மக்கள் உணர விடாது ஒப்பாரி வைப்பார்கள். 

சமூக கட்டமைப்பில் மேலே உள்ள முதலாளிய வர்க்கத்தையும், கீழே உள்ள உழைக்கும் வர்க்கத்தையும் சமரசப் படுத்தி வைத்து ஆதாயம் அடைந்தவர்கள். போலியான வர்க்க சமரசத்தை உடைய விடாமல் பாதுகாக்கும் நோக்கில் "இன ஒற்றுமை", "மத உணர்வு", "கலாச்சார பாரம்பரியம்" போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வார்கள்.

(ஈழத்) தமிழர்கள் தமக்கிடையிலான வர்க்க முரண்பாடுகளை மறைத்து வந்தாலும், சில நேரங்களில் அவர்களை அறியாமலே வெளிக் கிளம்பி வருகின்றன. புலம்பெயர் நாடொன்றில் வாழும் புதுப் பணக்காரர், தமது மகளின் சாமத்திய (மஞ்சள் நீராட்டு) சடங்கை ஆடம்பரமாக நடத்திய விடயம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

சாமத்திய சடங்கு சரியா, பிழையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது போன்ற பணக்காரர்கள் பகட்டுக் காட்டும் ஆடம்பரமான விழாக்கள் பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்துவதை மறுக்க முடியாது.

ஆடம்பரத்தை எதிர்ப்பவர்கள், "எம்மக்கள் வறுமையில் வாழ்கையில் இத்தகைய ஆடம்பரம் தேவையா? அந்தப் பணத்தை கஷ்டப் படுவோருக்கு கொடுக்கலாமே?" என்று நியாயம் கூறுகின்றனர்.

அதே நேரம், ஆடம்பரத்தை ஆதரிப்பவர்களும் தமக்கென நியாயம் வைத்திருக்கிறார்கள். "அவனுடைய பணம்... அவன் காசு வைத்திருக்கிறான் அதனால் செலவு செய்கிறான்... நீங்க ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது!" என்று பணக்காரத் திமிருடன் நியாயம் பேசுகின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா இனங்களைப் போன்றும், (ஈழத்) தமிழர்களும் இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்ட சமுதாயம் தான். நீண்ட காலமாகவே பரம்பரைப் பணக்காரர்கள் தமது ஆடம்பர விழாக்களை மற்றவர்கள் கண்களுக்கு தெரியா வண்ணம் மூடி மறைத்து வந்தனர். அதனால், எஞ்சிய உழைக்கும் வர்க்க மக்களுக்கும் பணக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

எண்பதுகளுக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்தியில் இருந்து புதிய பணக்கார வர்க்கம் ஒன்று தோன்றியது. அவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும், "அற்பனுக்கு பவுசு வந்த மாதிரி" புதிய பணக்காரர்கள் தமது செல்வத்தை விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொண்டனர். அதில் ஒரு வகை தான் மகளின் சாமத்திய சடங்கை ஆடம்பரமாக நடத்துவது.

பரம்பரைப் பணக்காரர்கள் ஒரு மூடுண்ட சமூகமாக தமது வர்க்கத்தை சேர்ந்தவர்களுடன் மட்டும் பழகுவார்கள். ஈழத்தில் பரம்பரைப் பணக்காரர்களாக இருந்த சமூகம் புலம்பெயர்ந்து, பல தசாப்த காலமாகவே இங்கிலாந்தில் வாழ்கின்றது. அவர்களது வீடுகளில் நடக்கும் ஆடம்பர விழாக்களின் படங்கள், வீடியோக்கள் வெளியே கசிவதில்லை. அந்தளவுக்கு இரகசியம் பேணப் படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களது வர்க்கத்தினரை தவிர, வெளியில் யாருடனும் பழகுவதில்லை.

ஆனால், புதுப் பணக்காரர்களால் அப்படி நடக்க முடிவதில்லை. பத்து, அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் அவர்களும் சாதாரண உழைக்கும் வர்க்கமாக இருந்திருப்பார்கள். அவரது சமூகத்தில் அவர் மட்டும் ஏதோ ஒரு குறுக்கு வழியில் செல்வம் சேர்த்தவராக இருப்பார். முன்பொரு தடவை தனது மகளை சாமத்திய சடங்கிற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றவர், புலிகளுக்காக சேர்த்த பணத்தை சுருட்டியவர் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் புதுப் பணக்காரர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு பழைய பணக்காரர்கள் செல்வதில்லை. அதனால் இன்னமும் தொடர்பில் உள்ள உழைக்கும் வர்க்க உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அப்படி அழைக்கப் படுபவர்கள் தமது உறவினர்/நண்பரின் ஆடம்பர களியாட்டத்தை அம்பலப் படுத்தும் வீடியோ, படங்களை வெளியே கசிய விடுகின்றனர்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதை பொறாமை என்று சொன்னாலும் அதுவும் வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எழுகின்றது. இதற்கு முன்னர் அவர்கள் தமக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

வர்க்க முரண்பாடுகளால் ஏற்படும் இது போன்ற சச்சரவுகள் ஏனைய இனங்களிலும் நடக்கிறது. ஐரோப்பிய மொழிகளைப் பேசும் சமூகங்களில் கூட இந்தப் பிரச்சினை உள்ளது. டச்சு மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Doe maar normaal, dan doe je al gek genoeg!" அதன் மொழிபெயர்ப்பு: "நீ சாதாரணமாக நடந்து கொள், அதுவே மற்றவர்களை கிறங்க வைக்கப் போதுமானது!"

பந்தா காட்டுவது, பகட்டுக் காட்டுவது, இதுவே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் நம்மிடையே உண்டு? "அந்தஸ்து", "கெளரவம்" முக்கியம் என்பதற்காக பலர் தம்மையறியாமலே ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இப்படியான அந்தஸ்து பார்க்கும் செயல்கள் வர்க்க முரண்பாடுகளை அதிகரிக்கும். அதன் விளைவை தான் மேலே பார்த்தோம்.

இந்த வர்க்க முரண்பாடு புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழியில் வர்க்க முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். கீழே உள்ளது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவு. புட்சிட்டி எனப்படும் நவீன சூப்பர் மார்க்கெட்டில் மரக்கறி வாங்கச் சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமாரை ஒருவர் படம் பிடித்து போட்டிருந்தார்.
 

//ஏன்டா டேய் நீ எங்களை மாதிரி சந்தையிலை மரக்கறி வாங்க மாட்டிய டா பூட்சிற்றில வாங்கினாத்தான் சாப்பிடுவியா?//

இது யாழ்ப்பாணத்தில் வாழும் ஒருவரது முகநூல் பதிவு. இதைக் கண்டித்த எல்லோரும் "பிரபலங்களை பின்தொடர்ந்து படம் பிடிக்கும் தவறை" மட்டுமே சுட்டிக் காட்டினார்கள். இந்தப் பதிவை இட்டவர் ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளராக இருக்கலாம். கஜேந்திரகுமார் கட்சியுடன் நடக்கும் குடுமிப்பிடி சண்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அதையும் மீறி அவர் சொல்ல வரும் வர்க்க வேறுபாட்டை யாரும் கணக்கெடுக்கவில்லை. இதில் த.தே.கூ. ஆதரவாளர்களும் அடக்கம்.

ஈழப்போருக்கு பின்னரான உலகமயமாக்கல் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்திலும் Food City என்ற நவீன பல்பொருள் அங்காடிகள் வந்து விட்டன. முன்னொரு காலத்தில், யாழ்ப்பாணத்தவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு, மேற்குலகிற்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது மேற்குலகு அங்கே செல்கின்றது. அது தான் உலகமயமாக்கல்.

இலங்கையில் இன்று இரண்டு முரண்பாடு கொண்ட வர்க்கங்கள் இருப்பது முன்னரை விட துலக்கமாகத் தெரிகின்றது. நகரங்களில் முளைக்கும் நவீன அங்காடிகளில் ஐரோப்பாவில் உள்ள அத்தனை பாவனைப் பொருட்களும் கிடைக்கும். விலையும் ஐரோப்பிய மட்டத்திற்கு உள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே அங்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.

ஏழைகள், வசதி குறைந்தவர்கள் இன்றைக்கும் வழமையான மரக்கறி சந்தைகளை நம்பி வாழ்கின்றனர். சிலபேர் சாதாரண மரக்கறி சந்தையை விட, புட்சிட்டியில் விலை மலிவு என்று வாதாடலாம். சிலநேரம் இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையில் வர்க்கம் சார்ந்த இரண்டு வகையான பொருளாதாரங்கள் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கின்றன. அது தான் இங்கே முக்கியம். பணக்காரர்கள் செல்லும் கடைகள், ஏழைகள் செல்லும் கடைகள் என்று வித்தியாசம் வந்துவிட்டது. அதற்கு இந்தப் பதிவே சாட்சியம்.

கஜேந்திரகுமார் கட்சியுடன் முரண்படும் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இந்தப் பதிவை கண்டித்த காரணமும் அது தான். அவர்களும் பணக்கார மேல்தட்டு வர்க்கத்தின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் தான். என்ன தான் எதிர்ப்பு அரசியல் பேசினாலும், கடைசியில் எல்லோரும் சங்கமிக்கும் இடமும் இது தான்.

சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய நகரங்களுக்கும் வந்து விட்டன. அவற்றில் விற்பனையாகும் பொருட்களின் விலைகளும் ஐரோப்பிய தரம் அளவிற்கு அதிகமாக உள்ளன. "ஐரோப்பிய தரத்திற்கு விலை இருந்தாலும் அது ஒரு பிரச்சினை இல்லை" என்று அங்கு வாழும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்து ஏழைகளும் அங்கு பொருட்களை வாங்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாம்.

அடடே... இலங்கையும் ஒரு பணக்கார நாடாகி விட்டது என்பதை அறியும் பொழுது மெய்சிலிர்க்கிறது. பிறகெதற்கு அங்கிருப்பவர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள்? ஒரு பணக்கார நாடான இலங்கை, எதற்காக IMF, உலகவங்கியிடம் கடன் வாங்குகிறது?

இலங்கையில் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் ஐரோப்பிய விலைகளை ஒத்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு தரமான சட்டையின் விலை 1600 ரூபாய்கள். அதாவது சரியாகப் பத்து யூரோ! அண்மைக் கால விலையேற்றத்தின் பின்னர், மதுபானங்களின் விலை ஐரோப்பாவை விட அதிகம் என்பது வேடிக்கையானது.

பணக்காரர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால், வருமானம் குறைந்த ஏழைகளின் நிலைமை? பெரும்பாலான உழைக்கும் மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

பெட்டிக் கடை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் கூட விலைவாசி உயர்வு குறித்து முறையிடுகிறார்கள். பொருட்களின் விலைகள் ஏறி விட்டதால், கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதனால் முன்னரை விடக் குறைந்த அளவில் விற்பனையாகின்றது. அதை விட தமக்குக் கொடுக்கும் கமிஷனின் அளவையும் குறைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலை ஐரோப்பிய தரத்திற்கு உயர்ந்திருந்தால், அங்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் ஐரோப்பிய தரத்திற்கு சமமாக இருப்பது தானே நியாயம்? விலைவாசியை உயர்த்தியது மாதிரி சம்பளத்தையும் உயர்த்துவது தானே முறை?

இந்தக் கேள்வியை கேட்டால் இனப் பற்றாளர்கள், கருத்துக் கந்தசாமிகள், மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.


No comments: