Showing posts with label இனப்படுகொலைகள். Show all posts
Showing posts with label இனப்படுகொலைகள். Show all posts

Tuesday, August 09, 2016

இனப்படுகொலை தொடர்பாக ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்க மடல்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை" என்று கூறியிருக்கிறீர்கள். ஈழத்து, தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகள் மாத்திரம் உங்களது கூற்றை மறுத்து எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று த‌மிழ்/ சிங்கள இடதுசாரிகளும், மேற்குலக நாடுகளை சேர்ந்த இடதுசாரிகளும் சொல்கிறார்கள்.  இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள்" போன்றவர்களையும் "மாற்றுக் கருத்தாளர்கள்" என்று தமிழ் தேசியவாதிகள் வசைபாடி வந்துள்ளனர். இருப்பினும் சர்வதேச அரங்கில் அத்தகைய "மாற்றுக் கருத்தாளர்கள்" தான் இனப்படுகொலை என்ற சொல்லை தொடர்ந்தும் பாவித்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தருகின்றேன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நகரமொன்றில், போலந்தை சேர்ந்த 19 வயது வாலிபனை சந்தித்தேன். அறிமுகத்தின் பின்னர் நான் ஓர் ஈழத் தமிழன் என்று தெரிந்ததும், அவனிடம் இருந்து வந்த வார்த்தைகள் பின்வருமாறு: "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்." இலங்கையில் நடந்த போர் அழிவுகள் பற்றி அனைத்து விபரங்களும் அறிந்து வைத்திருந்தான். 

நீங்கள் நினைப்பது போன்று, அவனும் ஒரு ஈழத்து/தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆனால், அவன் போலந்தை சேர்ந்த இளம் கம்யூனிஸ்டு. கடந்த ஐந்து வருடங்களில், நான் சந்தித்த ஐரோப்பிய கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் இலங்கையில் இனப்படுகொலை நடந்த விபரம் தெரிந்திருக்கிறது. அதை அவர்கள் தமது கூட்டங்களிலும், வெளியீடுகளிலும் சொல்லி வருகின்றனர். 

எதற்காக சர்வதேச இடதுசாரிகளும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்? இந்த விடயம் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மேற்குலக நாடுகளில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். 2009 ம் ஆண்டு, மேற்கத்திய நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரிகள் முன்னின்று ஒத்துழைத்தனர். 

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் புலிகளை தடை செய்து விட்டன. அதனால் பெரும்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் புலிகளை ஆதரித்து யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டியவர்கள் இடதுசாரிகள் தான். அதனால் தான் இன்று வரைக்கும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்." என்றொரு பழமொழி உண்டு. அந்த வகையில், புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினைகளை எதிர்பார்த்து, நீங்கள் இனப்படுகொலை குறித்த கருத்தை கூறியிருக்கலாம். இதுவரை காலமும் அவர்கள் சொல்லி வந்த வாதங்களும் உங்களுக்கு மனப்பாடமாக இருக்கலாம். ஆனால், இனப்படுகொலை பற்றிப் பேசும் ஈழத் தமிழர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்களும் அல்ல, தமிழ் தேசியவாதிகளும் அல்ல.

நான் பிறந்ததில் இருந்து 13 வயது வரையில் கொழும்பு நகரில் வாழ்ந்து வந்தேன். எனது வாழ்நாளில் இரண்டு "இனக் கலவரங்களை" கண்டிருக்கிறேன். 1977, 1983 கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன். 

அவை "இனக்கலவரம்" என்று அரசு சொன்னதும் இனவாத உள்நோக்கம் கொண்டது தான். பொதுவாக, கலவரங்கள் அரசுக்கு எதிரான ஒழுங்கு படுத்தப் படாத மக்கள் எழுச்சியாக அறியப் பட்டுள்ளன. ஆனால், "தமிழர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிங்கள மக்களின் எழுச்சி" என்று அரசு பிரச்சாரம் செய்தது.

சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரிகளாக காட்டுவதன் மூலம், அரசு தனக்கெதிரான கலவரங்களில் இருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 

அதை "இனக்கலவரம்" என்று அழைத்தார்கள்.  ஆனால், உண்மையில் அவை கலவரங்கள் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலைகள். அதற்கு ஆதாரம் என்ன? கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களின் பெயர் விபரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். அதன் படி தமிழர்களின் வீடுகளை தேடிச் சென்று தாக்கினார்கள். 

சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்தது யார்? அப்போது ஆளும்கட்சியாக இருந்த யு.ஏன்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள். தமிழர்களின் வீடுகள் மட்டுமல்லாது, வர்த்தக நிலையங்களும், பாடசாலைகளும், கோயில்களும் தாக்கி எரிக்கப் பட்டன. குறிப்பாக 1983 ம் ஆண்டு, தலைநகரில் இருந்த தமிழர்களின் சொத்துக்கள் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. இதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்த அதே பாணியில் தான், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையும் நடந்தது. அங்கேயும் இந்து மதவெறியர்கள், முஸ்லிம் வாக்காளர்களின் விபரங்களை கையில் வைத்திருந்தார்கள். அதுவும் குஜராத் மாநில பாஜக அரசியல்வாதிகளின் துணையுடன் நடந்தது. ஆகவே, இலங்கையில் தமிழர்கள் மாதிரி, இந்தியாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர் என்று சொல்வதற்கும் ஆதாரங்கள் பலமாக உள்ளன. 

மேலதிகமாக ஓர் உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு சிறிலங்கா அரசை சாரும்! இந்தத் தகவல் உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம். நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே, தென்னிலங்கையில் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததை அறிந்து வைத்திருக்கிறேன். அனுராதபுரத்தில் எமது உறவினர்கள் சிலர் வசித்தனர்.

"தனிச் சிங்கள மாவட்டங்கள்" என்று கருதப்படும், அனுராதபுரம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் வடக்கு, கிழக்கில் இருந்து சென்று குடியேறியவர்கள் அல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அவற்றை பூர்வீக பூமியாக கொண்டிருந்தனர். ஆனால், "இனக்கலவரங்கள்", அதாவது திட்டமிட்ட இனப்படுகொலைகளின் விளைவாக அவர்கள் அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

அவ்வாறு தான் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கென "ஒதுக்கப் பட்ட" பிரதேசமாகியது. அதை "தமிழீழம்" என்ற தனி நாடாக்க கோரியவர்கள், யாழ் மையவாத சிந்தனைக்குள் கட்டுப்பட்டவர்கள் மட்டும் தான். தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் என்று அந்தக் கொள்கை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எண்பதுகளில் ஆயுதமேந்திய இயக்கங்களில், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் ஆகியவை மலையகத்தையும் சேர்த்து ஈழம் என்று உரிமை கோரின. குறிப்பாக ஈரோஸ் மலையகப் பகுதிகளில் சில தாக்குதல்களை நடத்தி இருந்தது. அந்தளவுக்கு மலையகத் தமிழ் போராளிகளும் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

மலையகத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. கொழும்பில் மட்டுமல்லாது, மலையகத்திலும் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. அதன் விளைவாக, மலைநாட்டுப் பகுதிகளில் தமிழர்களை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குவிய வைத்தது. பெருமளவு மலையகத் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி வன்னியில் குடியேறினார்கள். இன்றைக்கும் வன்னிப் பிரதேச சனத்தொகையில் கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள். 

2009 ம் ஆண்டு நடந்த, புலிகளின் அழித்தொழிப்பிற்கு பழிவாங்குவதற்காக சிலர் இனப்படுகொலை அரசியலை முன்னெடுப்பதாக தாங்கள் கருதலாம். அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். நான் முன்னர் கூறிய படி, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்பவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள் அல்ல."

1977, 1983 இனக்கலவரங்களை இனப்படுகொலை என்று அப்போதே பலர் சொல்லத் தொடங்கி விட்டனர். தமிழர்கள் மட்டுமல்ல, இடதுசாரி சிங்களவர்களும் இனப்படுகொலை என்றே சொல்லி வந்தனர். 2009 ம் ஆண்டு இனப்படுகொலை நடக்கலாம் என்று ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தது.

சமாதான பேச்சுவார்த்தையின் போது, புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதுவர் "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்." என்று சூளுரைத்தார். போர் முடிந்த பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பத்திரிகைகள் பின்வருமாறு கூறின: "போர் தொடர்ந்திருந்தால் இதை விட பல மடங்கு இழப்புகள் வந்திருக்கும். இத்துடன் போர் முடிவுக்கு வந்ததால் இது ஒரு ஈடுகட்டக் கூடிய இழப்பு (collateral damage) தான்."

பெரும்பாலானோர் புலிகளும், புலி ஆதரவாளர்கள் சொல்வதும் தான் ஈழத் தமிழரின் அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அதற்குமப்பாலும் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இலங்கையில் நடந்தது "கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் வன்முறை" என்று நீங்கள் விளக்கம் கூறலாம். அதற்கு உதாரணமாக ஜேவிபி கிளர்ச்சியை எடுத்துக் காட்டலாம். "அதுவும் இனப்படுகொலையா?" என்று கேட்கலாம். ஆம், அதுவும் இனப்படுகொலை தான்! இந்த விடயத்தில் நான் ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளுடன் பல தடவைகள் முர‌ண்ப‌ட்டுள்ளேன். அவர்களும் உங்களைப் போன்று "அது இனப்படுகொலைக்குள் அடங்காது" என்று நம்புகிறவர்கள் தான்.

ஜேவிபி கிளர்ச்சியின் போது, சில கிராமங்கள் முற்றாக அழிக்கப் பட்டன. சில பாடசாலைகளில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டனர். "தமிழர்களை படுகொலை செய்வதற்கு காரணம் வேற்றினத்தின் மீதான வெறுப்பு. சிங்களவர்களை படுகொலை செய்வதற்கு என்ன காரணம்?" என்று கேட்கலாம். 

இந்தியாவில் நக்சலைட் ஒழிப்புப் போரில்  படுகொலை செய்யப் பட்டவர்கள் யார்? கூலி விவசாயிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர், ஆதிவாசிகள் போன்றோர் தான். இலங்கையிலும் அது தான் நடந்தது. ஒரே சிங்கள மொழி பேசினாலும், வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு காரணமாக படுகொலை செய்யப் பட்டனர். ஆகவே, அதுவும் இனப்படுகொலைக்குள் அடங்கும்.

இந்தோனேசியா, மலேசியா, போன்ற நாடுகளில் நடந்ததும் இனப்படுகொலையா? ஆம், இனப்படுகொலை தான். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் சந்தேகநபர்கள் மீது நடத்தப் பட்ட இனப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறேன். அது மட்டுமல்ல, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப் பட்ட வரலாறும் இனப்படுகொலைக்குள் அடங்கும். அவற்றைப் பற்றியும் எழுதி இருக்கிறேன்.

அன்புடன்,
- கலையரசன் 



பிற்குறிப்பு:
சிலநேரம் ஜெயமோகன் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்" என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும், ஏதாவதொரு அரசியல் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர். அவர் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. இப்போதும் அந்தக் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு தான் பேசுகின்றார்.

உண்மையில், ஜெயமோகன் மிகவும் தெளிவாக உள்ளார். ஆனால், இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள் தான் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். ஜெயமோகனுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒத்துக் கொண்டால், குஜராத், காஷ்மீர், மணிப்பூரில் நடந்ததும் இனப்படுகொலை தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதை அவரே நேரடியாக சொல்லி இருக்கிறார்.

ஜெயமோகனின் பதிலில் இருந்து சில உதாரணங்கள்: 
//பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இன அழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன்.// 
//மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இன அழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இன அழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.// 
//இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.// 
//இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை. இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை.//

ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறவர்கள், அது பற்றி சிந்திப்பவர்கள், முதலில் தமக்கான அரசியல் சித்தாந்தம் ஒன்றை தெளிவாக வரையறுக்க வேண்டும். "சிங்களப் பேரினவாதம் எமக்கு எதிரி. ஆனால், இந்து பேரினவாதம் எமக்கு நண்பன்." என்ற அளவில் தான் அவர்களது அரசியல் நிலைப்பாடு உள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுகிறவர்கள், காஷ்மீர், குஜராத், மணிப்பூரில் நடந்தவை இனப்படுகொலை இல்லை என்று வாதிடுவார்கள். அப்படியான "தமிழ் தேசியவாதிகள்" பலரை நானே சந்தித்து இருக்கிறேன்.

இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள், இப்போதாவது தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஜெயமோகன்களை கண்டிக்கும் தார்மீக பலத்தையும் இழந்து விடுவார்கள்.

இந்திய, இலங்கை பேரினவாத அரசுக்கள், எப்போதும் இனங்களை பிரித்து வைத்து, அவற்றிற்கு இடையில் பகையை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. ஜெயமோகனும் அத்தகைய பேரினவாத அரசின் நிலைப்பாடை தான் பிரதிபலித்துள்ளார்.

தேசிய இன விடுதலைக்காக போராடும் சக்திகள், இந்திய- இலங்கை அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல், சரியான அரசியல் சித்தாந்தத்தின் வழிநடத்தலின் கீழ் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே ஜெயமோகன் போன்றவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

Saturday, April 25, 2015

கெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா? அல்லது மக்கட்படுகொலையா?

Genocide (கெனோசீடே) என்ற சொற்பதத்தினை தமிழில் இனப்படுகொலை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அது பல தடவைகள் சரியான அர்த்ததுடன் பயன்படுத்தப் படுவதில்லை.

Genos (கெனோஸ்) என்ற கிரேக்க சொல்லுக்கு நிகரான சமஸ்கிருத சொல் "கணம்". அதையொத்த தமிழ்ச் சொல் ஜனம் (மக்கள்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

Genocide என்பது பெரும்பான்மையான உலகமொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப் பட்டாலும், தமிழ் போன்று பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து பாவிக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Völkermord. டச்சு மொழியில் Volkerenmoord, சுவீடிஷ் மொழியில் Folkmord. டேனிஷ் மொழியில் Folkemord / Folkedrabet.

ஜெர்மன் சொல்லான völk ஆங்கிலத்தில் folk, அதாவது மக்கள் என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது. சிங்கள மொழியில் கூட, "மக்கள் அழிப்பு" (ජන සංහාරය - ஜன சங்காரம்) என்று தான் மொழிபெயர்த்துள்ளனர்.

ஆகவே, இதனை தமிழில் "மக்கட்படுகொலை" என்று மொழிபெயர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

//இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.//
அது தொடர்பான என்னுடைய கருத்துக்கள்:
ரஃபேல் லெம்கின் பெருந்திரளான மக்கள் படுகொலையை குறிப்பதற்கு தான் அதைப் பயன்படுத்தினார். ஏற்கனவே யூதப் படுகொலையானது, pogrom (ரஷ்யா), holocaust (ஜெர்மனி) போன்ற ஹீபுரு மொழிச் சொற்களால் அழைக்கப் பட்டு வந்துள்ளன. அதை யூதர்கள் தமக்குரிய சொல்லாக மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ஜேர்மனியர்களும், யூதர்களும் தனிதனி இனமாக இருக்கவில்லை. ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் தான். சியோனிஸ்டுகளும், நாஸிகளும் யூதர்களை தனியான இனமாகக் உருவகித்துக் காட்ட முனைந்தனர். ஆயினும், இன்றைய நாகரிக உலகில் அந்தக் கருத்துக்கள் இனவாதமாக கருதப் படுகின்றன.
பொஸ்னியாவில் சேர்பியர்களினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களும் தனியான இனம் அல்ல. நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், செர்பியர்களுக்கு நெருக்கமானவர்கள். மதம் மட்டுமே வேறு வேறு.

மேலும், இந்தோனேசியாவில், குவாத்தமாலாவில், அரசியல் கொள்கை வேறுபாடு காரணமாக நடந்த genocide பற்றி பெரும்பாலான தமிழர்கள் பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த genocide பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஆனால், அது கூட கம்போடியர்களை கொலை செய்த கம்போடியர்களுக்கு எதிரான நீதிமன்றம் தான். ஒரே மொழி பேசும், ஓரின மக்களுக்கு இடையில் நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.

"ஒரே மொழி பேசும் மக்களுக்குள் படுகொலை நடந்திருந்தால், அது இனப்படுகொலை ஆகாது" என்று சில தமிழ் அறிவுஜீவிகள் வாதாடுகிறார்கள். அது தவறு. யூதர்களும், ஜெர்மனியர்களும் ஒரே மொழி பேசினார்கள். சேர்பியர்களும், பொஸ்னியர்களும் ஒரே மொழி பேசினார்கள். ஆனால், அவை எல்லாம் genocide என்று தான் அழைக்கப்பட்டன.

Genocide என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். genos என்ற கிரேக்கச் சொல்லையும், cide என்ற லத்தீன் சொல்லையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. அப்போது எந்த ஐரோப்பிய மொழியிலும் அப்படி ஒரு சொல் இருக்கவில்லை. genocide என்பது பெருந்தொகையான அளவில் மக்களை படுகொலை செய்வதைக் குறிக்கும். ஐ.நா. வில் அதற்கான வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்த பொழுது கூட பல நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

குறிப்பாக தமிழில் " இனப்படுகொலை" என்று சொல்லும் அர்த்தத்தில்பயன்படுத்துவதை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே காலனிகளில் இருந்த பூர்வகுடி இனங்களை அழித்தொழித்து விட்டிருந்தன. 

அதனால், தமிழில் புரிந்து கொள்ளப்படும் "இனப்படுகொலை" என்ற அர்த்தத்தில், மேற்குலகில் பயன்படுத்தப் படுவதில்லை. Genocide என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்குள் இனம் என்ற அர்த்தம் வரக்கூடாது என்று அமெரிக்கர்கள் பிடிவாதமாக மறுத்து வந்தனர். ஏனென்றால் செவ்விந்தியர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படும் என்ற அச்சம் காரணம்.

நாகரிக உலகின் போக்கிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் திருத்தங்கள் கொண்டு வருவது புதுமை அல்ல. வன்புணர்ச்சி, பாலியல் தொழிலாளி, திருநங்கையர், மாற்றுத் திறனாளி போன்ற பல புதிய சொற்கள், ஏற்கனவே இருந்த விரும்பத்தகாத அர்த்தம் தரும் சொற்களுக்கு மாற்றாக வந்துள்ளன. அதே மாதிரி, இனப்படுகொலை என்பதை மக்கட்படுகொலை என்று திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!
http://kalaiy.blogspot.nl/2014/04/blog-post.html
மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_30.html
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2013/03/blog-post_8.html
அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு
http://kalaiy.blogspot.nl/2013/04/blog-post_17.html
கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள் http://kalaiy.blogspot.nl/2014/06/blog-post_4.html
இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள் http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html 
உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_11.html 
ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_21.html 
இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_6.html

Wednesday, August 11, 2010

காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள்

காஷ்மீர்:
இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும்


சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!

முன்னுரை

காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும்
துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம்
என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே
நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல முகங்களாக வெளிப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசு, பாகிஸ்தான், போராளிக்குழுக்கள் இவற்றின் இடையே சமாதான பேச்சுவார்த்தை என்பது முன்வைக்கப்படும் அதே வேளையில், காஷ்மீர்
பகுதியில், 6 லட்சத்திற்கும் மேலான ராணுவ, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ராணுவப் படையினருக்கும் போராளிக் குழுக்களின் இடையிலான மோதல் என்ற பெயரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000
என்பதாகவும், மோதலில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000க்கும் மேலாகவும் காணப்படுவது இந்திய அரசின் மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான
வெளிப்பாடாகும்.

மோதல்களில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பதற்கு 2004ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய பத்ரபால் படுகொலை ஒரு
சான்றாகும்.

சில நேரங்களில், இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை மறைக்க, போராளிக் குழுக்கள் படுகொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். சட்டீஸ்சிங் புறா என்ற பகுதியில் 35 சீக்கியர்கள் எல்லைப்புற காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அதற்கு பொறுப்பாளியாக போராளிக் குழுக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டன.
இந்திய ராணுவத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை போக்கில் இருந்து மனித உரிமையாளர்களும் கூட தப்பவில்லை. 1996ம் ஆண்டு, மனித உரிமையாளர் அன்டிராபி
அவர்களின் படுகொலை இதற்கு சான்றாகும். அன்டிராபியின் படுகொலையை நிகழ்த்திய ராணுவப் படை தலைவர் மேஜர் அவ்தார் சிங் மீது 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

தற்போது 2008ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை அறக்கட்டளைக்கு அரசு நிலங்களை தாரை வார்த்து மதவெறி மோதலுக்கு (இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக) வழிவகை
செய்து அரசு செயல்பட்டதும், 2009ம் ஆண்டு நடந்த ஷோபியன் கூட்டு பாலியல் வன்முறையில் காவல் துறையின் அட்டூழியத்தை மறைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்ட விதமும்,தற்போது 3 இளஞ்சிறுவர்கள் துணை ராணுவப் படையினரால்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு எழுந்த மனக் கொந்தளிப்பை ஆற்றும் வகையில் செயல்படாமல், துணை ராணுவப் படையினரை ஆதரித்து நிற்கும் மத்திய, மாநில அரசின் நிலையும் காஷ்மீர் மக்களை, மேலும் அன்னியப்படுத்துவதாகவே அமைகிறது.

இவற்றிற்கிடையில் ராணுவத்திற்கான தனிச்சிறப்பு அதிகாரச் சட்டம் 1990களில் ஜக்மோகன் கவர்னராக பணியாற்றியபோது பிறப்பிக்கப்பட்டது. மாறிமாறி வரும் மத்திய, மாநில அரசுகள்
இச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபோதும்,எவரும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இது குறித்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் எத்தகைய ராணுவ அட்டூழியங்களுக்கு துணை நின்றது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும்
அறிவர்.

இப்பதட்டமான நிலையில் மேலும் ராணுவமயமாக்கல் என்பது நிலைமையை மோசமடையவே செய்யும். ராணுவத்தை திரும்பப் பெறுவதன் மூலமே, ராணுவமயமாக்கலை
கைவிடுவதன் மூலமே, ராணுவப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதன் மூலமே பதட்ட நிலையை சீரடைய செளிணிய இயலும்.

இந்திய ராணுவத்தினரின் படுகொலையையும், படுகொலைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளையும் பாதுகாத்து நிற்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையை, போராடும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான விருப்பார்வங்களை ஒடுக்கும்,
கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே கருத இயலும். இந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான இணைந்த குரலை எழுப்ப முன்வருவது அனைத்து ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் உடனடி கடமையாகும்.

இச்சூழலில் காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை இந்தியாவின் அனைத்து மக்கள் தரப்பினரையும் சென்றடைவது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு
எதிரான ஒரு வலுவான குரலை எழுப்பச் சாதகமான நிலையை உருவாக்கும். இந்த முயற்சியின் சிறு அங்கமாக தீர்ப்பாயத்தின் அறிக்கையை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழில் வெளிக்கொணருகிறது.
-------------------------------------------------------------------------------

புதைக்கப்பட்ட சாட்சியங்கள்:

இந்திய நிர்வாகத்தின் கீழ் அடங்கிய காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகளும், நீதி நிலைமைகளும் குறித்த சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!


நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரத்தின் பண்டிபோரா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52
கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.
இவ் ஆவணம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டெடியில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச
மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ, என்ற பத்திரிகையில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர்
உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள்

1999-2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மோதல்களிலும், போலி மோதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களைக் கொண்ட
புதைக்குழிகளைக் குறித்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. நீதிக்கு புறம்பாகவும், ஒருதலைப் பட்சமாகவும், முகாந்திரம் ஏதும் இன்றியும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் - இந்திய ராணுவத்தினராலும், துணை ராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில்
இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.

பல சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதை வழக்கமாக,ஒன்றுக்கும் மேற்பட்ட, அடையாளம் அறியப்படாத, மனித சடலங்கள் அடங்கிய புதைகுழி என அடையாளப்படுத்தலாம்.
மானுடத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும், இனப்படுகொலைகளும் நடத்தப்படும்போது தான் பல சடலங்கள் அடங்கிய புதைகுழிகள் காணப்படுகின்றன என்று கல்வியறிவாளர்கள்
குறிப்பிடுகின்றனர். திரளாக சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதும் இன்றி கொலைகளை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்ட
வர்களை கொலை செய்வதையும், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்படியெனில், இந்திய
ராணுவமும், துணை ராணுவப் படையினரும் இணைந்து “ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான” பரந்த வெளிகளை உருவாக்க, கூட்டாக புதைப்பது என்பதன் ஒரு பகுதியே
பண்டிபோரா, பாராமுல்லா, குப்வாரா ஆகிய இடங்களில் காணப்படும் புதைகுழிகள் ஆகும்.

மரணத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தொடர்ந்து (routine) ராணுவத்தாலும், உள்ளூர் காவல்துறையினரை உள்ளடக்கி, துணை ராண்வப் படையினராலும் கையாளப்பட்டது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரால் அவ்வுடல்கள் “ரகசிய புதைகுழிகளுக்கு” கொண்டு வரப்பட்டன. இப்புதைகுழிகள், உள்ளூரில் சவக்குழியை தோண்டுபவர்களோடு, அவற்றை பாதுகாப்பவர்களாலும் தோண்டப்பட்டு, அவற்றில் சாத்தியப்படும் போதெல்லாம், இஸ்லாமிய மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, சடலங்கள் தனியாகவும், குறிப்பாக ஒட்டுமொத்தமாக அல்லாமல் புதைக்கப்பட்டன.

இப்புதைகுழிகளில், சில விதிவிலக்குகளைத் தவிர,பெரும்பாலும் ஆண்களின் சடலங்கள் காணப்பட்டன. சாதாரண குடிமகனுக்கு எதிரான வன்முறை என்பது விரிவடைந்து
பெண்கள் மீதும் வன்முறை ஏவிவிடப்படுகின்றன. இவ்வாறு காணாமல் போவது, மரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, சிதறிப்போன குடும்பங்களை கவனிக்கும் கடமையை
மேற்கொள்ளும்படியும், நீதியை பெறுவதற்கான பணிகளில் ஈடுபடும்படியும் பெண்கள் உந்தப்படுகின்றனர். இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக
நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது. இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத
அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடடுருவும்
போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின்
வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று
சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர்.

கணிசமான நிகழ்வுகளில், சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில்
காஷ்மீர் நெடுகிலும் நடந்த “மோதல் கொலைகள்” யாவும் “போலி மோதல் கொலைகளே” என்று உண்மையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. சில நிகழ்வுகளில் சடலங்கள் புதைக்கப்
பட்டதற்கு பின்னர், அவற்றை அடையாளம் காண்பதற்கு இரு வழிமுறைகள் கையாளப்பட்டன. அவை (1) சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காண்பது (2) புகைப்படங்களை பயன்படுத்தி அடையாளம் காண்பது என்பன.

காஷ்மீரத்தின் எண்ணற்ற மாவட்டங்களில், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய 50க்கும் மேற்பட்டதான மோதல் படுகொலைகள் என்று குறிப்பிட்டவை குறித்தும், இவ்வறிக்கை
ஆளிணிவு செளிணிதது. இவ்வாறு கொலை செளிணியப்பட்டவர்களில் 39பேர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 4 பேர் இந்து மதத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 7 பேர் எத்தகையினர் என தீர்மானிக்கப்பட இயலவில்லை. இந்த நிகழ்வுகளில் 49 பேர்கள்
பாதுகாப்பு படையினரால் “அயல்நாட்டு தீவிரவாத கலகக்காரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஒரு சடலம் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. தொடர்ந்த
ஆளிணிவுகளின் அடிப்படையில் இவர்களுள் 47 பேர் போலி மோதல் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் ஒருவர் உள்ளூர் தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டது.

சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களில் மட்டுமே, பகுதியளவில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. எங்களது
ஆய்வுகளும், துவக்கநிலை சாட்சியங்களும் அங்கு நிலவும் கடுமையான நிலைமையை சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து 10 மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் 1989ம் ஆண்டில் இருந்து காணாமல் போக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் 8000க்கும் மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என மதிப்பிடுவது நியாயமானதாகவே இருக்கும். இது முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளில் காணப்படும் சடலங்களின் எண்ணிக்கையுடன் இணையாக உள்ளது.

குற்றச்சாட்டுகள்

தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் என்ற பின்னணியில் இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரத்தில் கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்த கையாண்ட வழிமுறைகளும், திட்டங்களும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரத்தில், இந்திய ஆட்சி முறையானது மரணத்தையும், கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாட்டிற்கான தந்திரங்களாக கையாண்டு வருகிறது.
கட்டுப்பாடானது கண்காணிப்பினாலும், தண்டனையாலும்,அச்சத்தாலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. “சட்டத்திற்கு புறம்பான” வழிகளிலும், சட்டத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களாலும் மரணங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன.
ஆள்வதற்கான இந்த தந்திரங்கள் கொல்வதற்கும், சாவைப் பற்றிய அச்சத்தை மட்டுமல்லாது கொலை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரந்த அளவிலும் தீவிரமான முறையிலும் நடத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அரசின் ராணுவத்தாலும், துணை
ராணுவப் படையினராலும் தொடர்ச்சியாகவும் விரிந்த அளவிலும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும். சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இந்த அறிக்கையில் முன்வைத்துள்ள
சாட்சியங்களை பரிசீலிக்கவும், ஒப்பீட்டு பார்க்கவும், பொருத்தமானதா என பரிசீலனை செய்யவும், நம்பத்தகுந்த சுயேச்சையான சர்வதேச அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. இது
மட்டுமன்றி, இவ்வமைப்புகள் இந்திய அரசை இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும்படி கோர வேண்டும் என முன்வைக்கிறது.

ஜம்மு-காஷ்மீரத்தில் இந்திய நிர்வாகம் மானுடத்திற்கு எதிராக கொடுமைகள் இழைத்துள்ளது என்ற கருத்தை சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பரிசீலிக்கவில்லை. ஐக்கிய
நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் இந்திய அரசால் காஷ்மீரம் ராணுவமயப்படுத்தப்படுவதன் மோசமான விளைவுகளை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ ஆற்றலற்ற வகையில் உள்ன என நாங்கஷீமீ குறிப்பிட விரும்புகிறோம். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும்
சாட்சியங்கள் குற்றவாளிகளை தண்டித்து பிற நீதித்துறை சமூகபோக்கின் ஊடே நீதியை பெறவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

1989க்கும், 2009க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம் ராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் 70,000க்கும்
மேற்பட்ட சாவுகள் நிகழ்ந்துள்ளன. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல் படுகொலைகள்,சிறைக் கொடுமைகள், பிற வழிகளிலான கொடுமைகள் மூலமாக
நிகழ்த்தப்பட்டு உள்ளன. நிகழ்ந்து வரும் சச்சரவுகளில் (conflict) எந்தவித தண்டனையும் இன்றி, 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினர் தொடர்ந்து செயல்படுவதுடன் தொடர்ந்து காஷ்மீரத்தில் சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அரசே கூட சட்டம், அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மோதல்கள் நீடித்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்தி வருகிறது.

xxxxxxxx

இந்திய அரசே!

* ராணுவ மயமாக்கலை உடனே கைவிடு

* காஷ்மீரத்தில் உள்ள 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினரை வாபஸ் வாங்கு!

* ராணுவப் படையினருக்கான தனிச்சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் வாங்கு!

* அப்பாவி மக்களை மோதல் படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வகை செய்!

* காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்து!
///////////////////////////////////////////////////////////////////////////////

வெளியீடு:
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
17, பாலாஜி மேன்சன், முள்ளுவாடி கேட் அருகில், சேலம் - 1