Sunday, June 19, 2016

அச்சே கடலோரம் தமிழ் அகதிகளின் அவலம் கண்டீரோ?


இந்தோனேசியாவில் அச்சே மாநிலக் கரையோரம் ஒதுங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் அவலம் இன்னமும் தொடர்கின்றது. ஒரு படகில் வந்த நாற்பது அகதிகளில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், பல பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த படகு பழுதடைந்து கரை ஒதுங்கிய போது, அச்சே மாநில காவல்படை அவர்களை கரைக்கு வர அனுமதிக்கவில்லை. சில பெண் அகதிகள் தாமாகவே கரையில் இறங்கிய பொழுது, பொலிசார் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து அவர்களை திருப்பி அனுப்பினார்கள்.

சர்வதேச மன்னிப்புச்சபை, மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக, இந்தோனேசிய அரசு அகதிகளை கரைக்கு வர அனுமதிக்க ஒத்துக்கொண்டது. படகை திருத்திக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டது. ஆனால், அச்சே மாநில அரசு தொடர்ந்தும் மறுத்து வந்தது. அகதிகளை இலங்கைக்கே திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.

இந்தியப் படகொன்றில் பயணம் செய்த அகதிகள், நேரடியாக இலங்கையில் இருந்து கிளம்பிச் சென்றனரா என்பது தெரியவில்லை. அவர்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வசித்தவர்கள் என்றும் கருதப் படுகின்றது. அவர்கள் அவுஸ்திரேலியா சென்றாலும், அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. திருப்பி அனுப்பினால் அவர்கள் இலங்கைக்கு செல்வார்களா, இந்தியாவுக்கு செல்வார்களா என்பதிலும் தெளிவில்லை.

தமிழகத்தை சேர்ந்த "தமிழ் உணர்வுத்" தலைவர்களில் வைகோ மட்டுமே அகதிகளின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்கிடையே, மலேசியா பினாங்கு மாநிலத்தின் பதில் முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, "அச்சே மாநில அரசுக்கு தான் எழுதிய கடிதத்தின் பின்னர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக" அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

அகதிகளின் அவலத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதாகவே, பேராசிரியர் ராமசாமியின் அறிக்கை அமைந்துள்ளது. ஆளும் கட்சியான DAP உறுப்பினர். மலேசிய அரசுக்கு மிகவும் வேண்டப் பட்டவர். அவர் தமிழ் தேசியவாதி வேஷம் போடும் கொடுமை சகிக்கவொண்ணாத ஒன்று. 

விடுதலைப் புலிகளை தடைசெய்த மலேசிய அரசின் பிரதிநிதி, தமிழ் தேசியம் பேசுவது ஒரு சிறந்த நகைச்சுவை. அவரது தமிழீழ ஆதரவு உண்மையானது என்று நம்பும், தமிழ் உணர்வாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த அறிக்கையில் அளவுக்கு அதிகமாக தமிழ் தேசிய வாடை அடிப்பதால், பல தமிழ் உணர்வாளர்களும் தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பேராசிரியர் இராமசாமியின் அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:

//பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்...

ஆச்சே மக்கள் மனிதாபிமான மிக்க மக்கள்; தங்களைப் போலவே, நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களை எப்பொழுதும் அரவணைப்பார்கள் என்று நம்புகின்றேன். இன்று, ஆச்சேயின் சுயாட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலையால் நசுக்கப்பட்டு, இப்பொழுது அரசியல் வடிவம் கண்டுள்ளது. ஆச்சே மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தமிழீழ மக்கள் ஆதரவாகவே இருந்துள்ளனர். இவ்வேளையில் அதனையும் ஆச்சே மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று பேராசிரியர் இராமசாமி கூறியிருந்தார்....//

ஈழத்தமிழ் அகதிகள் ஒரு வார காலமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். உணவின்றி நீரின்றி கஷ்டப் பட்டார்கள். இந்த அவலத்தை கண்ணுற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பதறித் துடித்த அளவிற்கு அச்சே மாநில அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இந்தோனேசிய மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்த போதிலும், அச்சே மாநில அரசு அகதிகளை கரையொதுங்க அனுமதிக்க மறுத்தது.

கடந்த வருடம், இதே மாதிரி கடலில் தத்தளித்த ரோஹிங்கியா (மியான்மர்) அகதிகளை, அச்சே மாநில அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அந்தச் சம்பவத்தை சுட்டிக் காட்டி உதவி கோரின. ஆயினும், "ரோஹிங்கியா அகதிகள் நாடற்றவர்கள்... தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லலாம்..." என்று அச்சே மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது. அச்சே மாநில பொலிஸ் தான், படகில் இருந்து குதித்து கரைக்கு வர முயன்ற அகதிகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து பயமுறுத்தியது.

பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டது போன்று, "அச்சே மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் தேசியவாத மட்டத்தில் கொள்கை உடன்பாடு இருப்பதாக" அங்கு யாரும் கருதவில்லை. அச்சே தனி நாடாக வேண்டுமென்று ஒரு தேசியவாத விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது உண்மை தான். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த அதே காலகட்டத்தில் தான், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் பேச்சுவார்த்தை நடத்தின. அவர்களுக்கும் நோர்வே தான் அனுசரணையாளர்.

இறுதியில், நோர்வேயின் மத்தியஸ்தத்தின் பின்னர், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் சமாதானப் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அந்த நேரத்தில் தான் சுனாமி ஆழிப் பேரலைகளினால் அச்சே மாநிலம் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. சமாதான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அப்போது நோர்வேயும் சர்வதேச சமூகமும், அச்சே உதாரணத்தை பின்பற்றி, புலிகளும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்திருந்தன. அப்போது, "அச்சே வேறு, தமிழீழம் வேறு. இரண்டையும் ஒப்பிட முடியாது" என்று புலிகளும், ஆதரவாளர்களும் வாதாடி வந்தனர்.

அச்சே தேசிய இயக்கத்திற்கும், தமிழீழ தேசிய இயக்கத்திற்கும் இடையில், எந்தக் காலத்திலும் ஒருமைப்பாடு இருக்கவில்லை. அதற்குக் காரணம் தேசியவாத கொள்கையில் உள்ள குறைபாடு. உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், "தமது மொழி பேசும், தம்மின மக்களை" பற்றித் தான் அதிகம் அக்கறைப் படுவார்கள். அவர்கள் பிற இன மக்களை கண்டுகொள்வதில்லை. மொழி கடந்த ஒருமைப்பாடு இருக்குமாக இருந்தால், அது மதம் சார்ந்ததாக இருக்கும்.

தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்கு அப்பால் உலகில் ஏதும் இல்லை. இருப்பினும், தமிழ் தேசியவாதிகளில் பெரும்பான்மையானோர் (புலி ஆதரவாளர்கள் உட்பட), இந்து மத ஒருமைப்பாட்டின் அடிப்படையில், இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அச்சே தேசியவாதிகளும் அப்படித் தான். எந்த வித்தியாசமும் கிடையாது. அச்சே மொழி பேசும் மக்களைப் பற்றி மட்டுமே அவர்களது கவலை இருக்கும். அதற்கும் அப்பால், உலக இஸ்லாமியர்களைப் பற்றிக் கவலைப் படுவார்கள்.

இந்தோனேசியாவில், அச்சே மொழிச் சிறுபான்மையினருக்கும், ஜாவா மொழிப் பெரும்பான்மையினருக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அச்சே தனி நாட்டுக்கான போராட்டம் மதம் சார்ந்து எழுந்தது. ஜாவா மொழி பேசும் பெரும்பான்மையினரும், அச்சே மொழி பேசும் சிறுபான்மையினரும் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தான். 

இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்றுவதில்லை. அதற்கு மாறாக, அச்சே சிறுபான்மையினர் பெருமளவில் மத அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை கறாராக பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஷரியா சட்டம் கொண்டு வர வேண்டுமென்பது, அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கான முக்கியமான கோரிக்கையாக இருந்தது.

அச்சே மாநில அரசு, ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக் கொண்ட காரணம், அவர்கள் முஸ்லிம்கள் என்பது தான். தற்போது கரையொதுங்கியுள்ள தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு அப்படி எந்தக் காரணமும் இருக்கவில்லை. பேராசிரியர் இராமசாமி குறிப்பிடுவது போன்று, "பொதுவான தேசியவாத உணர்வு" எதுவும் உலகில் இல்லை. தேசியவாதிகளுக்கு இடையில் அப்படி ஓர் ஒருமைப்பாடு ஏற்படுவது சாத்தியமே இல்லை. அவரவருக்கு அவர்களது மொழியும், இனமும் தான் பெரிதாகத் தோன்றும். அல்லாவிட்டால் ஒரே மத ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் தேசியவாதம்.


அச்சே கடலோரம் கரையோதிங்கிய தமிழ் அகதிகள் பற்றி இந்தோனேசிய தொலைக்காட்சி செய்தி அறிக்கை: 

No comments: