Friday, May 16, 2014

தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை, அகதிக்கு மெய்யுரைக்க யாருமில்லை

அகதி முகாம் ஒன்றினுள், பல்லின அகதிகள் 
"சோஷலிச நாடுகளில், மக்களின் வாழ்க்கைத்தரம் நன்றாக இருந்தது என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். நீங்கள் எதற்காக சீனா, கியூபா மாதிரி கம்யூனிச நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழாமல், முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றீர்கள்?" என்று பல அறிவுஜீவிகள், என்னைப் பார்த்து கேட்கின்றனர். அப்படிக் கேள்வி கேட்டு விட்டு, தங்களது புத்திசாலித்தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

வாஸ்தவம் தான். நானும் அவர்கள் அளவிற்கு மெத்தப் படித்திருந்தால், "உலகில் முதலாளித்துவ நாடுகள், கம்யூனிச நாடுகள் என்றெல்லாம் இருக்கின்றன" என்று தெரிந்து வைத்திருப்பேன். அவர்கள் படித்த பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு நானும் சென்றிருந்தால், முதலாளித்துவ, சோஷலிச நாடுகளில் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்பதை அறிந்து வைத்திருந்திருப்பேன். என்ன செய்வது? நான் உலகப் பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன். அதனால் தான், அனுபவத்தின் மூலம், இந்த உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு சிறிது காலம் எடுத்தது.

என்னிடம் கேள்வி கேட்ட அறிவுஜீவிகள் பிறந்த நாட்டில் தான் நானும் பிறந்தேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் "தமிழனுக்கு தாய்நாடு இல்லை" என்பது மட்டும் தான். "உலகில் உள்ள எல்லா இனங்களுக்கும் ஒரு தாய்நாடு இருக்கிறது. ஆனால், தமிழனுக்கு மட்டும் இல்லை." என்று தான், நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். தமிழ் தேசியவாத அரசியல் ஆதிக்கம் செலுத்திய ஊரில் பிறந்து வளர்ந்த என்னிடம், வேறெந்த அரசியல் கொள்கையை எதிர்பார்க்கின்றீர்கள்?

ஒரு மேற்கத்திய நாட்டுக்கு அகதியாக சென்று புகலிடம் கோரும் வரையில், "உலகில் தமிழனுக்கு மட்டுமே பிரச்சினை இருக்கிறது." என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன். அகதி முகாம்களில் தமிழர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் நினைத்தேன். ஆனால், "தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் பல இனங்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது," என்பது, நான் புலம்பெயர்ந்த பின்னர் தான் தெரிந்தது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில், தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், முஸ்லிம்களும் இருந்தார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், ஈரான், துருக்கி, சூடான், சோமாலியா, எத்தியோப்பியா, சியாரா லியோன், ஆர்மீனியா, ரஷ்யா, யூகோஸ்லேவியா, பொஸ்னியா... இப்படி உலகின் பல பாகங்களில் இருந்தும் அகதிகள் வந்திருந்தார்கள். "அடடே... இவர்கள் எல்லோருக்கும் ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறதா?"

அப்போது தான், உலகில் தமிழனுக்கு மட்டுமல்ல, இன்னும் பல இனங்களுக்கும் இதே பிரச்சினை இருக்கின்றது என்பது, இந்த மர மண்டையில் உறைத்தது. ஊரில் வாழ்ந்த காலத்தில், இந்த உண்மை தெரியாமல் இருந்து விட்டேனே, என்று என் அறியாமையை சபித்துக் கொள்ள நேரிட்டது.

முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை, அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகள் தான் எனக்குச் சொன்னார்கள். அதற்குப் பிறகு தான், சோஷலிசம், கம்யூனிசம் என்பதற்கு அர்த்தம் என்னவென்று புரிந்தது.

உலகில் இப்படி எல்லாம் இருக்கிறது என்பதை, உங்களை மாதிரி பல்கலைக்கழக பட்டம் வாங்கிய அறிவுஜீவிகள் சொல்லிக் கொடுத்திருந்தால் தெரிந்திருக்கும். எங்களைப் போன்ற பாமர மக்கள், உலகம் முழுவதும் அகதியாக சென்று தான், இதை எல்லாம் அறிய வேண்டி இருக்கிறது.

தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை, 
அகதிக்கு மெய்யுரைக்க யாருமில்லை

4 comments:

Unknown said...

சரி, இந்த கட்டுரையின் வாயிலாக நீங்கள் சொல்லவருவது என்ன.. முதலாளித்துவ நாடுகளுக்கு நீங்கள் அகதியாக சென்ற பொழுது சரியாக உங்களை ஆரத்தி எடுத்து வரவேற்கவில்லையா. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய,கனடா நாடுகளுக்கு சென்ற ஈழ தமிழர்களின் வாழ்நிலை நன்றாக தானே இருக்கின்றது. சோவியத் ரஷ்யா போன்ற சோசியலிச நாடுகள் இந்நேரம் இருந்திருந்தால் உங்கள் வாழ்கை தரம் இன்னும் முன்னேறி இருக்கும் என்று கூற வருகிறீர்களா.

Kalaiyarasan said...

//முதலாளித்துவ நாடுகளுக்கு நீங்கள் அகதியாக சென்ற பொழுது சரியாக உங்களை ஆரத்தி எடுத்து வரவேற்கவில்லையா.//
ஒரு தடவை, ஈராக்கை முன்பு சதாம் ஆண்ட காலத்தில், சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரிய ஈராக்கிய அகதியை விசாரிக்கும் பொழுது கேட்டார்கள். எதற்காக சுவிட்சர்லாந்து வந்தீர்கள் என்று. அதற்கு அந்த அகதி சொன்ன பதில்: " எங்கள் நாட்டு சர்வாதிகாரி சதாம் ஹுசைன் எங்கள் நாட்டில் கொள்ளையடித்த இலட்சக் கணக்கான பணத்தை உங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்." மேற்கத்திய நாடுகளுக்கு வரும் அகதிகள், அந்த நாடுகளுக்கு செல்வதற்கு உரிமை உடையவர்கள் என்று பலர் நினைப்பதில்லை. காலனிய கால சுரண்டல் மட்டுமல்ல, இன்றைய நவ- காலனிய காலகட்டத்திலும், இந்த மேற்கத்திய நாடுகள் எமது நாட்டு செல்வத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. அதிலே சிறு தொகையை அகதிகளை பராமரிப்பதற்கு கொடுத்தால் என்ன குறைந்து விடும்? இந்த உண்மை தெரியாத நம்மவர் சிலர் இருப்பது வேதனைக்குரியது.

Kalaiyarasan said...

//இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய,கனடா நாடுகளுக்கு சென்ற ஈழ தமிழர்களின் வாழ்நிலை நன்றாக தானே இருக்கின்றது.//

பொருள் தேடுதல், பணம் தேடுதலை மட்டும் நீங்கள் கவனத்தில் எடுக்கிறீர்கள். இதை எல்லாம் அவர்கள் தேடிச் சம்பாதிப்பதற்கு முன்னர், அவர்களது உழைப்பில் முதலாளித்துவ நாடுகள் செல்வம் சேர்த்து விடும். இந்த நாடுகளின் அரசுகளும் சொந்த நலனை தான் முதலில் பார்க்கின்றன. அந்த நாடுகளில் தகுதி குறைந்த தொழில்களை செய்வதற்கான தொழிலாளர்கள் தேவை. அதனால் தான் அகதிகளை அங்கீகரித்து நன்றாகப் பராமரித்தார்கள். ஆனால், தங்களது காலனிய கடந்த காலம், தற்போது நடக்கும் நவ- காலனிய சுரண்டல், ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் இலாபத்திற்காக நடக்கும் போர்கள், இவற்றின் விளைவாகத் தான் அகதிகள் வருகிறார்கள் என்ற உண்மையை மறைக்கின்றார்கள்.

Kalaiyarasan said...

//சோவியத் ரஷ்யா போன்ற சோசியலிச நாடுகள் இந்நேரம் இருந்திருந்தால் உங்கள் வாழ்கை தரம் இன்னும் முன்னேறி இருக்கும் என்று கூற வருகிறீர்களா.//

நான் இங்கே எனது வாழ்க்கைத்தரம் பற்றி மட்டுமல்ல, உங்களுடைய வாழ்க்கைத்தரம் பற்றியும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இலங்கை, இந்தியா போன்ற வறிய நாடுகள் வளர்ச்சி அடைவதற்கு, முன்னாள் சோஷலிச நாடுகள் உதாரணமாக இருக்கலாம். நீங்கள் அங்கே புலம்பெயர்ந்து சென்று வாழத் தேவையில்லை. உங்களது சொந்த நாட்டை ஒரு சோஷலிச நாடாக்கிக் காட்டுங்கள், அது போதும். உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுக்கும் அதனால் நன்மை கிடைக்கும் அல்லவா?