Thursday, December 01, 2011

சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!


(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - மூன்றாம் பாகம்)

நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை சைவ சமயத்தை பற்றியது. 12 வயதில் எழுதிய அந்தக் கட்டுரை, கொழும்பு இந்து-தமிழ் சங்கத்தினர் வெளியிட்ட சிறப்பு மலரில் பிரசுரமானது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவ சமய பாடத்திற்கு தான் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அதே நேரம், யாழ் சைவ சித்தாந்தக் கழகம் நடத்தும் பரீட்சைகளின் சான்றிதல்கள் கூட கிடைத்துள்ளன. எதற்காக "சைவ சித்தாந்தம்" என்று அழைக்கிறார்கள் என்று, அந்த வயதில் எழுப்பிய கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. பாடசாலையில் இந்து நாகரீகம் போதிக்கும் நூலிலும், சைவ சமயம் தென்னிந்தியருக்கே பிரத்தியேகமான மதம் என்று தான் எழுதப் பட்டிருந்தது.

அதே நூலின் இன்னொரு இடத்தில், சிந்து வெளி மக்களால் வழிபடப் பட்ட பசுபதி தெய்வ இலச்சினை, சிவனாக இருக்கலாம் என்ற குறிப்பும் காணப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் விளைவாக, அத்தகைய கண்டுபிடிப்புகள் வரலாற்றை திரிக்கவும் பயன்பட்டுள்ளன. திராவிடர்கள் சிந்து வெளியிலும் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரமாக சிவ வழிபாடு எடுத்துக் காட்டப் படுகின்றது. இவை போன்ற கருத்துக்கள், ஆங்கிலேயரின் இனவாத தத்துவத்தை வலுப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், வட இந்தியாவில் வாழ்ந்த காஷ்மீர் இன மக்களும், திபெத்திய இன மக்களும் நீண்ட காலமாகவே சிவனை வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில், காஷ்மீரிகள் முஸ்லிம்களாகவும், திபெத்திய இனங்கள் பௌத்தர்களாகவும் மாறி விட்டனர். ஆங்கிலேயர்களும், தென்னிந்திய சைவர்களும், வட இந்தியாவில் பரவியிருந்த சைவ சமயத்தை மறைத்த காரணம் என்ன?

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த சிவனை வழிபடும் மதம், ஆரியரின் வருகையினால் இரண்டாகப் பிளவு பட்டது. வரலாற்றில் எப்போதும், எதிரிகளுடன் ஒத்துழைக்கும் மக்களே தப்பிப் பிழைத்து வாழ்வதை அவதானிக்கலாம். ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மன், திப்புசுல்தான்களின் சந்ததிகள் அழிக்கப் பட்டு விட்டன. ஆங்கிலேயருடன் ஒத்துழைத்த தொண்டைமான், நிசாம்களின் சந்ததிகள் இன்றைக்கும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றன. அது போன்றே, அன்றைக்கு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களான ஆரியருக்கு காட்டிக் கொடுத்து, ஒத்துழைத்த பிரிவினரே சைவ சித்தாந்தவாதிகள். அதனால் தான், சைவ சமயம், இந்து மதத்தின் பிரிவாக கருதப் படுகின்றது. சைவக் கோயில்களில் பிராமண புரோகிதர்கள் பூசை செய்கின்றனர்.

ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் கூறுவது போன்ற "ஆரியப் படையெடுப்பு" நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், ஆரியரின் புலம்பெயர்வு நடந்திருக்க வாய்ப்புண்டு. அவர்களின் முக்கிய நோக்கம், நிலங்களை அபகரிப்பதும், செல்வத்தை சூறையாடுவதுமாக இருந்திருக்கலாம். வரலாறு நெடுகிலும் இது போன்ற உதாரணங்கள் பல காணக் கிடைக்கின்றன. ஸ்கண்டிநேவிய வைகிங் குழுக்கள், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு கொள்ளையடிக்க சென்ற பொழுது தான் நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். கிறிஸ்தவ மதத்தையும் தழுவினார்கள். துருக்கிய இனக் குழுக்கள் பாக்தாத்தை அழித்த பின்னர் தான், இஸ்லாமிய நாகரீகம் பற்றி அறிந்து கொண்டனர். அதே போன்று, ஆரியர்கள் வட இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்த பிறகு தான், "இந்து மதம்" உருவெடுத்தது. இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம் போன்ற ஆறு பிரிவுகள் இருப்பதாக, நமது காலத்து பாடநூல்களில் எழுதப் பட்டுள்ளது. உண்மையில், ஒன்றுகொன்று தொடர்பற்ற, தனித் தனியாக வழிபடப் பட்ட மதங்களே இவை. இந்து மதம் பற்றிய வரைவிலக்கணம் எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அயல் நாடுகளை ஆக்கிரமிக்கும் வல்லரசுகள், அவற்றை தமது மாநிலங்களாக அறிவிப்பது போன்ற அரசியல் செயற்பாடு இது.

இன்றைக்கும் பல ஆப்பிரிக்க இனங்கள், தமக்கென தனியான கடவுள்களும், மத வழிபாடுகளையும் கொண்டிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பழங்குடியின மக்கள், எளிமையான மூத்தோர் வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர். பண்டைய இந்தியாவிலும் அது போன்ற நிலைமை இருந்திருக்கும். சிவன், கணபதி, காலபைரவர், காளி, முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட மக்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தனர். உதாரணத்திற்கு, சிவனை வழிபடுவோர் காஷ்மீர் போன்ற மேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். அதே போன்று, காளியை வழிபடுவோர் கிழக்கு இந்தியாவில் அதிகமாக வாழ்ந்துள்ளனர். இந்த தெய்வங்களுக்கெல்லாம் பொதுவான ஓர் அம்சம் ஒன்றுண்டு. சிவன், காளி, விஷ்ணு, கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் நீல வர்ணத்துடன் காட்சி தருகின்றன. உண்மையில், இவை எல்லாம் கரு நிற மேனிகளை கொண்ட தெய்வங்கள். அதாவது, கறுப்பர்களின் கடவுள் கறுப்பாகத் தானே இருப்பார்?

ஆரியரின் வருகைக்கு முன்னர், இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் கருப்பர்களாகவிருந்தனர். பிந்திய சமூக-விஞ்ஞான ஆய்வாளர்கள் அவர்களுக்கு திராவிடர்கள் என்று நாமம் சூட்டினார்கள். வட கிழக்கு இந்தியப் பகுதிகளில், சீனர்கள் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். நவீன கால சமூக விஞ்ஞானிகள், இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடைப்பட்ட இனம் என்று அர்த்தம் தொனிக்கும் "தீபெத்தோ-இந்தியர்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். சமஸ்கிருதம் பேசிய ஆரியர்கள், அவர்களை நாகர்கள் என்று அழைத்தனர். நாகர்கள் ஒரு காலத்தில், இலங்கைத் தீவு வரையில் பரவியிருந்தனர். இன்றைக்கும் "நாகர்" என்ற பெயர் கொண்ட ஊர்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன. ஆயிரம் வருடங்களாக, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த, ஆரிய, திராவிட, நாகா இனங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றமும், இனக்கலப்பும் நடைபெற்றிருக்கும். இனவாத சிந்தனை கொண்ட ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தான், இவ்வாறு இன அடிப்படையில் பாகுபடுத்தி பார்த்தனர். இன்றைக்கு யாருமே தூய்மையான இனம் என்று உரிமை கோர முடியாது. தென் சீனப் பகுதி மக்களின் மரபணுக்கள், தென்னிந்திய தமிழர் உடலிலும் கலந்திருக்கலாம்.

இந்திய உப கண்டத்தில், ஹரப்பா பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தான் உயர்ந்த நாகரீகம் காணப்பட்டது. பிற இந்தியப் பகுதிகளில், பல்வேறு இனக்குழுக்கள், தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வகித்து வந்தனர். ஹரப்பா நாகரீகம் ஆரியர் வருகைக்கு முன்னரே அழிந்திருக்கலாம் என்பது அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் வட இந்தியாவில் தோன்றிய ஆரியர்கள், தூய்மையான வெள்ளை இனத்தவர்கள் என்று கருத முடியாது. உள்ளூர் இனங்களுடன் கலந்து, ஆரியர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்திருப்பார்கள். ஆரியர் என்றால் மேன் மக்கள் என்றும் அர்த்தப் படும். ஆரியப் படையெடுப்பு என்ற கோட்பாடு, ஐரோப்பிய இனவாத சமூக-விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று குற்றம் சாட்டப் படுகின்றது. அதாவது, ஒரு காலத்தில் வெள்ளை இனத்தவர்கள் உலகம் முழுவதும் பிடித்து ஆண்டனர் என்று நிரூபிப்பதே அவர்களது நோக்கம்.

ஆங்கில வரலாற்றாசிரியர்கள் போதித்த "ஆரியர் படையெடுப்பு" கோட்பாட்டை, சில இந்திய ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். ஆனால், அதற்காக வெள்ளையின ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையவேயில்லை, என்று வாதிட முடியாது. சமஸ்கிருதத்திலும், ஐரோப்பிய மொழிகளிலும் நிறைய சொற்கள் ஒரே மாதிரியாக வருகின்றன. அதே போன்று, ஜெர்மனியக் கடவுளரும், கிரேக்க கடவுளரும், இந்திய-ஆரியரின் கடவுளரும் ஒரே மாதிரியாக உள்ளன. உதாரணத்திற்கு, இயற்கையில் தோன்றும் இடி மின்னல், சக்தி வாய்ந்த கடவுளாக வணங்கப் பட்டது. இந்திய-ஆரியர்கள் இடியின் கடவுளை "இந்திரன்" என அழைத்தனர். கிரேக்கர்கள் "செயுஸ்"(Zeus) என்று வணங்கினார்கள். ஜெர்மனியர்கள் "தொர்"(Thor) என்று பெயரிட்டு அழைத்தனர். இதே போன்று, சமுத்திரம், மழை, காற்று, இவையெல்லாம் கடவுள்களாக இருந்துள்ளன. இருப்பினும், "இந்து நாகரீகம்" இந்திய ஆரியர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அதற்கு காரணம், இந்திய இனக்குழுக்களால் வழிபடப் பட்ட தெய்வங்களை ஆரியர்களும் ஏற்றுக் கொண்டமை தான்.

"போதிதர்மன் காஞ்சியில் பிறந்ததால் பெருமைப்படும் தமிழர்களும், புத்தர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதால் பெருமையுறும் இந்தியர்களும், சீன தேசத்தில் வசிக்கும் சிவபெருமானுக்காகவும் பெருமை கொள்வார்களா?" இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்தமாகத் தோன்றினால், குருட்டுத் தனமான தேசியவாதமும் அபத்தமானது என்றே பொருள் படும். காஷ்மீரிலும், திபெத்திலும், வட-மேற்கு இந்திய மாநிலங்களிலும் சிவனை வழிபடும் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஒரு யோகியான சிவபெருமான் கைலாய மலையில் வாழ்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கைலாய மலையானது, சீனாவின் மாநிலமான திபெத்தில் உள்ளது. அந்தப் பகுதி, என்றைக்குமே இந்தியாவுடன் இணைந்திருக்கவில்லை.

கைலாய மலையானது, வரலாறு தெரிந்த நாளில் இருந்து, ஒன்றில் சீனாவுக்கு, அல்லது திபெத்திற்கு சொந்தமாக இருந்துள்ளது. "சிவபெருமான் வசிக்கும் மலை என்பதால், இந்திய சைவர்களுக்கு கைலாய மலை புனிதமானது. அதே நேரம், சமண மதத்தவர்களுக்கும், திபெத்திய பௌத்தர்களுக்கும், திபெத்திய பொன் மதத்தவர்களுக்கும் கைலாய மலை புனிதமானது. இவ்வாறு சீன, இந்திய மதங்கள் எல்லாம் கைலாய மலைக்கு உரிமை கோருவதற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். வேத காலத்திற்கு முந்திய, உலகின் பழைமையான மதங்களில் ஒன்றான "தாந்திரிய மதம்", அந்தப் பகுதியெங்கும் பரவியிருந்தது. சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் முக்கியமான கடவுளர்கள். வேத மதமான "இந்து" மதத்தின் ஆதிக்கத்தால், இந்தியாவில் தாந்திரீய மதம் ஏறக்குறைய அழிந்து விட்டது. ஆனால், திபெத்தில் "வஜ்ராயனம்" என்ற பெயரில், திபெத்திய பௌத்த சமயத்தினால் உள்வாங்கப் பட்டது.


(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்

7 comments:

Kannan said...

சிறிய குழப்பம்

ஒரு புறம் //இந்த தெய்வங்களுக்கெல்லாம் பொதுவான ஓர் அம்சம் ஒன்றுண்டு. சிவன், காளி, விஷ்ணு, கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் நீல வர்ணத்துடன் காட்சி தருகின்றன.// என்று சொல்கிறீர்கள். இன்னொருபுறம், சிவன் சீனாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகிறீர்கள். சீனாவை சேர்ந்தவர் அனைவரும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் அல்லவா இருப்பார்கள்?

Kalaiyarasan said...

//சிவன் சீனாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகிறீர்கள். சீனாவை சேர்ந்தவர் அனைவரும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் அல்லவா இருப்பார்கள்?//

நியாயமான கேள்வி. அடுத்த பாகத்தில் சிவன் பற்றி விரிவாக எழுதவுள்ளேன். அதற்கு முன் ஒரு சிறிய விளக்கம். நாம் சீனர்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்தியா போன்று, சீனாவும் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறான இனங்களைக் கொண்ட நாடு ஆகும். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மொழிகளைப் பேசும், வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட இனங்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில், பர்மியர்கள், தாய்லாந்துக் காரர்கள் போன்ற தோற்றமுடைய மக்கள் வாழ்கின்றனர். இவர்களை தீபெத்தோ- பர்மிய, அல்லது தீபெத்தோ-இந்திய இனங்கள் என்று வரையறுப்பார்கள். இவர்கள் ஒரு காலத்தில் இலங்கைத் தீவு வரையில் பரவி இருந்தனர். பண்டைய காலத்தில், தென் சீனாவிலும், இந்திய உபகண்டம் முழுவதும் கறுப்பின மக்கள் வாழ்ந்தனர். அவர்களை பொதுவான ஆப்பிரிக்க கறுப்பர்களுடன் சேர்த்துப் பார்க்காது, எத்தியோப்பிய அல்லது சோமாலிய கறுப்பர்களுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கும் இந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

naren said...

தொடரை படித்துக் கொண்டிருக்கிறேன், சில சந்தேகங்கள் எழுகின்றன. அடுத்த வரும் பகுதிகளில் விடை இருக்கும் என நினைக்கிறேன். தொடர் முடிவில் இறுதி மறுமொழியிடுகிறேன்.

Unknown said...

எல்லாம் சரி தன், ஆனால் இந்தியாவில் இந்து மதம் திபெத்தியக்கு சென்டிருக்கலம் அல்லவா???
நீங்கள் கூறுவது பல சான்று ஏதும் இல்லாதது போல் இருக்கு

Kalaiyarasan said...

//எல்லாம் சரி தன், ஆனால் இந்தியாவில் இந்து மதம் திபெத்தியக்கு சென்டிருக்கலம் அல்லவா???//
நீங்கள் இந்தியா என்று எதைக் கூறுகின்றீர்கள்? நூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியா என்றொரு தேசம் இருந்ததா?

Kalaiyarasan said...

எனது அடுத்த தொடரில், சீனாவில் தமிழர்கள் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து வந்த கருப்பர்கள் வாழ்ந்த சான்றுகளை தரவிருக்கிறேன்.

சித்தர்களின் ஒளி/ஒலி said...

உண்மை என்னவெனில் ஆரியர்கள் பரத கண்டத்திற்குள் நுழைவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தென் தமிழ்நாட்டில் சிவனீயம் திருமாலீயம் மற்றும் முருக வழிபாடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சங்க இலக்கியங்கள் கூட தெளிவாக எடுத்துரைக்கின்றன. Cut copy paste செய்வதை விட்டு படித்து தெளிவுற வேண்டுகிறேன். நமது இலக்கியங்கள் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.