Thursday, September 18, 2008

"கொல்லுவதோ இனிமை!" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்

ஈராக்கில் ஒரு சாதாரண நகரத் தெருவில், காவல் கடமையில் அமெரிக்க வீரர்கள். அவர்களை நோக்கி ஒரு பெண் நடந்து வருகிறாள். அவள் கையில் ஒரு பெரிய பை. உடனே கிரேனேட் லோஞ்சர் வைத்திருக்கும் போர்வீரனின் மனதில் எச்சரிக்கை மணி அடிக்கிறது. ஆபத்து நெருங்குகிறது. ஒரு நிமிடமேனும் தாமதிக்காமல், துப்பாக்கியின் விசையை இழுக்கிறான். அந்த பெண்ணின் உடல் கிரேனேட் வெடி பட்டு துண்டுதுண்டுகளாக சிதறுகிறது. தூசுப்படலம் அகன்ற பின்னர் தான் தெரிந்தது, அந்தப்பெண்ணின் பையில் இருந்தது, கடையில் இருந்து வாங்கி வந்த உணவுப்பொருட்கள் என்று. ஒரு வேளை அதனை அங்கு நின்ற இராணுவவீரர்களுக்கு கொடுப்பதற்கும் எடுத்து வந்திருக்கலாம். இது ஈராக் போரில் கடமை புரிந்து விட்டு வந்துள்ள முன்னாள் அமெரிக்க போர்வீரன் ஒருவனின் வாக்குமூலம்.

தமது அரசாங்கம் காட்டிய அழகான படத்திற்கு மாறாக, ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படையில் பணியாற்றிய சாதாரண படைவீரர்கள், தாம் மனிதநேயமற்ற போருக்குள் மாட்டிக் கொண்டதை உணர்கின்றனர். போர் தீவிரமடையும் காலங்களில் "அரண்டவன் கண்ணுக்கு நெருங்குவதெல்லாம் எதிரி" என்ற வகையில், கண்டபடி சுட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரத்திற்கு, உயர் அதிகாரிகளே உத்தரவிடுகின்றனர். சிலவேளை "போர் என்றால், எதுவும் செய்யலாம்" என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. அப்பாவி மக்களை படுகொலை செய்வது, ஒரு சில "கெட்டவர்கள்" மட்டுமே, என்று வெளியில் பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையே நீதி, நியாயம் பற்றி அக்கறை கொள்ளாததாகவே உள்ளது.

ஈராக்கில் நடைபெறும் நியாயமற்ற போர், பல போர் வீரர்களின் கண்களை திறந்துள்ளது. அவர்கள் "போருக்கு எதிரான முன்னாள் இராணுவவீரர்கள்" என்ற அமைப்பாக திரண்டு, அமெரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, ஈராக்கில் அமெரிக்க படைகள் செய்த அட்டூழியங்களை, தாமே நேரே பார்த்த சம்பவங்களை கூறும் பல முன்னாள் இராணுவவீரர்களின் சாட்சியங்கள் அடங்கிய, "Winter Soldier Iraq and Afghanistan: Eyewitness Accounts of the Occupation," என்ற நூல் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பல அதிர்ச்சியளிப்பன.

வீதிகளில் ரோந்து செல்லும் படையினர், தமது வண்டிகளில் மேலதிக துப்பாக்கிகளையும் எடுத்துச் செல்வது வழமை. ஒருவேளை "எதிர்பாராத தாக்குதலில்" அப்பாவி பொதுமகன் யாராவது கொல்லப்பட்டால், அந்த பிணத்திற்கு அருகில் துப்பாக்கியை வைத்து விட்டு செல்வார்கள். தாம் "பயங்கரவாதிகளை நேரடி மோதலில்" கொன்றதாக காட்ட அது உதவும். பலூஜா இராணுவ நடவடிக்கையின் போது, வெள்ளைக்கொடி ஏந்தி வரும் பொதுமக்களையும் சுடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஏனெனில் எதிரிகள் வெள்ளைக்கொடி ஏந்தியபடி நெருங்கி வந்து திடீரென சுடலாம் என காரணம் கூறப்பட்டது.

அபு கிரைப் சிறைச்சாலையில், கைதிகளை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து, அதனை படம்பிடித்து மகிழ்ந்த நிழற்படங்கள், அமெரிக்க இராணுவத்திற்கு உலகளவில் களங்கத்தை தேடித்தந்தன. அதுபோன்ற சம்பவங்கள் ஈராக்கில் சர்வசாதாரணம் என்று, முன்னாள் இராணுவவீரர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சிலவேளை வீதிகளில் கொல்லப்படும் ஈராக்கியரின் உடலங்கள் மீது, கவச வாகனங்களை ஏற்றி விட்டு, படம் பிடித்து குரூர திருப்தியடைவார்கள். வாகனங்களில் வீதி ரோந்து செல்லும் போது, சில வக்கிரம் பிடித்த படையினர், வண்டியினுள் இருந்து சிறுநீர் கழித்த போத்தல்களை, வீதியோரங்களில் நிற்கும் சிறுவர்கள் மீது வீசியெறிந்து மகிழ்வார்கள்.

அமெரிக்க படையினர் சிறுவர்களுக்கு இனிப்புகளை பரிமாறுவது கூட, ஈராக்கியரின் மனங்களை வெல்வதற்கு மட்டுமல்ல, தம்மை சுற்றிவளைக்கும் சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொள்வதே முதன்மையான நோக்கம்! ஏனெனில் சிறுவர்கள் இருக்குமிடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

இந்தப் புத்தகத்தில் சாட்சியமளித்திருக்கும் ஒவ்வொருவரும், வித்தியாசமான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். ஈராக்கிற்கு புதிதாக அனுப்பப்பட்ட வீரர் ஒருவருக்கு, கண்ணில் படும் டாக்சிகள் எல்லாவற்றையும் சுடுமாறு மேலதிகாரி உத்தரவிட்டார். ஈராக்கில் தீவிரவாதிகள், தமது போக்குவரத்திற்கு பொதுமக்கள் செல்லும் வாடகைவண்டிகளை பயன்படுத்துவதாக தெரியவந்ததால், அப்படி ஒரு உத்தரவாம்.

முன்னாள் அமெரிக்க இராணுவவீரர்கள், ஈராக்கில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதையும், போரின் கடுமையையும், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கோடு தான், தாம் இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றனர். ஈராக்கிற்கு அதிகளவில் படைகளை அனுப்பியதால் தான், அங்கே தற்போது வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறுகின்றார். ஆனால் அங்கே தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் அமெரிக்க எதிரிகளுடன், உடன்பாடு கண்டு சமரசமாக போனதாலே தான், ஈராக்கில் ஓரளவிற்கு இயல்பான சூழல் உருவாகியுள்ளது, என்ற உண்மையை அமெரிக்க அரசாங்கம் சொல்லப்போவதில்லை.

________________________________________________________
முன்னைய பதிவு:
ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு
_______________________________________________________

No comments: