Friday, September 05, 2008

ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, பல அமெரிக்க தனியார் கம்பனிகளுக்கு லாபம் தரும் வர்த்தகமாக மாறியுள்ளது. "ஈராக் விற்பனைக்கு" என்ற ஆவணப்படம், அமெரிக்க அரசு ஈராக்கை எவ்வாறு தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்றுள்ளது, என்பதை சாட்சிகளின் அடிப்படையில் விளக்குகின்றது. Halliburton, Titan, Parsons, Dyncorp, Black Water, Transatlantic Traders... இவையெல்லாம் ஈராக் போரில் லாபம் சம்பாதிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல்.

ஈராக்கின் பாதுகாப்பு கடமைகளை(அல்லது ஆக்கிரமிப்பு வேலையை), அமெரிக்க அரச படைகளிடம் இருந்து, Black Water என்ற தனியார் இராணுவம் பொறுப்பெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் முகாமையாளர்கள் பலர் முன்னாள் இராணுவ அதிகாரிகள். அதிக சம்பளம் கிடைப்பதால், பல சாதாரண முன்னாள் இராணுவவீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்துள்ளனர். அமெரிக்க அரச படைக்கும், தனியார் இராணுவத்திற்குமிடையில் என்ன வித்தியாசம்? ஈராக் மக்களின் கொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் தனியார் இராணுவம் காரணமாக இருந்தால், அந்த நிறுவனம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. தனியார் இராணுவ வீரர்கள், அப்பாவி மக்களை கொலை செய்த விவகாரம் வெளியே வந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதே உயர்ந்த பட்ச தண்டனையாக இருக்கும். அதேநேரம் அமெரிக்க அரச படையினராக இருந்தால், இராணுவ நீதிமன்றத்தில் தண்டனைக்குள்ளாக வேண்டி இருக்கும். ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவத்தை தனியார்மயப்படுத்தியிருப்பதால், அமெரிக்க அரசாங்கமும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்கின்றது.

ஈராக்கில் சிறைச்சாலைகள் கூட தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதால், சிறைக்கைதிகளை அவர்கள் விரும்புவது போல சித்திரவதை செய்ய முடியும். சித்திரவதை மூலம் பெறப்படும் தகவல்கள் கூட எந்த அளவிற்கு நம்பகரமானவை? ஏனெனில் அரபு-ஆங்கில மொழிபெயர்பாளர்கள் எல்லோரும் தகுதியானவர்களுமல்ல. அமெரிக்க இராணுவத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களை வழங்கும் தனியார் நிறுவனம், அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்களையும் பணிக்கமர்த்தியுள்ளது.

இந்த தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்க மட்டத்தில் ஆளும் ரிப்பப்ளிக்கன் கட்சி தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதால், பல ஒப்பந்தங்களை போட்டி இன்றியே எடுக்கின்றனர்.(ஊழல்?) ஒப்பந்த காலத்திற்கு இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கும் பணம், அமெரிக்க அரசாங்க கஜானாவில் இருந்தே வருகின்றது. அதாவது பொது மக்களின் வரிப்பணம்.

போர் என்பது உயிரிழப்புகளையும், சொத்தழிவையும் மட்டுமே கொண்டுவருவதில்லை. மனித அழிவுகளில் இருந்து லாபம் சம்பாதிக்க பல வியாபாரிகள் எப்போதும் காத்திருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரை போர் என்பது லாபம் தரும் வணிகம். இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்ததன் மூலம் கொள்ளை லாபமீட்ட ஆரம்பித்த அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள், ஈராக் போரையும் தமது வியாபாரத்திற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக பார்ப்பதில் வியப்பில்லை.

IRAK FOR SALE

BLACK WATER

4 comments:

சரண் said...

மிக நல்ல பதிவு.. இது போன்ற ஆவணப் படங்களிலிருந்துதான் உண்மையாக என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்.

இப்போது தேர்தல் நேரம் என்பதால் குடியரசு கட்ட்சியினர் ஈராக் போர் வெற்றி என்ற மாயை உருவாக்கி வருகின்றனர். அமெரிக்காவில் 90% மக்களுக்கு உண்மையில் ஈராக் எங்கே இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதே தெரியாது.

எல்லாம் எங்கு சென்று முடியுமோ தெரியவில்லை...

சரண் said...

To get follow up comments..

Kalaiyarasan said...

நன்றி சூர்யா, இன்று ஈராக்கில் நடப்பது நாளை வேறு நாட்டிலும் நடக்கலாம்.

ரகுராமன் said...

Very nice article.