Thursday, May 22, 2008

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.


பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.

வெனிசுவேலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.

இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.

தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.

நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.

புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.

ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

__________________________________________________________
வெனிசுவேலா சம்பந்தமான பிற பதிவுகள்:
ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை


_________________________________________________

No comments: