Saturday, September 27, 2008

ஓர் உலக வல்லரசு உருவாகின்றது

"அமெரிக்காவை அழிக்க கூடிய ஒரேயொரு உலகசக்தி ரஷ்யா மட்டுமே!" - அமெரிக்க இராணுவத் தலைமையகமான "பெண்டகன்", 1992 ல் உள்ளக சுற்றுக்கு விடப்பட்ட கொள்கை வகுப்பு அறிக்கையிலிருந்து.

ஜோர்ஜியாவில் ரஷ்ய படை நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும்,
கடந்த பதினைந்து ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும், அமெரிக்கா அல்லது மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் நிலவிய இராஜதந்திர உறவுகளை/விரிசல்களை அவதானித்து வருபவர்களுக்கு இன்று நடப்பன எதுவும் புதுமையாக தெரியாது. சோவியத் யூனியன் உடைவுக்கு அடிகோலிய ரஷ்ய மாபியா பணக்காரர்களும், உயர் மத்தியதர வர்க்கமும், ரஷ்ய பொருளாதாரத்தை முதலலாளித்துவ பாதையில் கொண்டு செல்லும் போது,தாம் அமெரிக்க முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். இது உலகெங்கும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு தான், அவர்களது இயற்கையான வர்க்க குணாம்சம். அதற்கு ரஷ்யர்களும் விதிவிலக்கல்ல.

ஆரம்பத்தில் புதிய சந்தைகளை தேடும் அமெரிக்க முதலீட்டாளர்களையும், அதிக செலவை வைக்கும் ஆலோசகர்களையும், ரஷ்யர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். மேலைத்தேய கல்வி, முகாமைத்துவம், வர்த்தக நடைமுறை போன்றவற்றை தாமும் பின்பற்ற விரும்பினர். தாம் முன்பு கம்யூனிச நாடாக இருந்த படியால் தான் மேற்குலகம் தம்மை எதிரியாக பார்த்ததாகவும், தற்போது தாமும் அவர்களின் முதலாளித்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை வரித்துக்கொண்ட, உற்ற நண்பர்களானதாகவும் கருதிக்கொண்டனர். அந்தோ பரிதாபம்! அவர்களது நாட்டினரான லெனின் எப்போதோ எழுதிவைத்து விட்டுப்போன "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" என்ற நூலை ஒரு தடவை புரட்டிப் படித்திருந்தால், பல மாயைகள் அன்றே அகன்றிருக்கும்.

19 ம் நூற்றாண்டில், அன்றைய உலக வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சிற்கு இடையேயான வல்லரசுப்போட்டியில் சார் கால ரஷ்யாவும் பங்குபற்றியது. 20 ம் நூற்றாண்டில் அவை மூன்றையும் ஓரங்கட்டி விட்டு அமெரிக்கா சர்வ வல்லமை பொருந்திய ஏகாதிபத்தியமாக உருவானதுமான பின்னணியில் லெனின் அந்த நூலை எழுதியிருக்கலாம். அப்போது கூட இந்த வல்லரசுகள் நேரடியாக போரிடாமல், பதிலி போர்களின் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டன. இதன் மூலம் ஒரு வல்லரசின் காலனிகளை, போட்டி வல்லரசு கைப்பற்றி, தமக்கிடையே நேரடி மோதலை தவிர்த்துக் கொண்டன. ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு இந்தியா வரை வரவிடாமல் தடுக்க, இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து நடுநிலைப்படுத்தியது.

இதையெல்லாம் இங்கே நினைவுபடுத்துவதன் நோக்கம், இன்று பலர் "பனிப்போர்" என்ற மேற்கத்திய கண்டுபிடிப்பான சொற்பதத்தை, சித்தாந்த வேறுபாட்டை வைத்து கணிப்பிடுவது தான். "யால்ட்டா ஒப்பந்த காலகட்டம்" இன்று இல்லை, என்று கூறிய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, தெளிவாக சொல்ல விரும்பியது, வல்லரசுகள் பிற நாடுகளை தமக்குள் பங்குபோட்ட காலம் மறைந்து விட்டது என்பது. 2 ம் உலகப்போர் முடிவில் உண்டான நேச நாடுகளின் ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பா சோவியத் ஆதிக்கத்தின் கீழும், மேற்கு ஐரோப்பா அமெரிக்க-பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழும் வந்தன. சார்கொசியின் வியாக்கியானம், பனிப்போர் பீதியில் உறைந்து போயுள்ள சிலருக்கு, அதாவது மீண்டும் சோவியத் யூனியன் என்ற பூதம் சீசாவை விட்டு வந்துவிடுமோ என்று அஞ்சுவோருக்கு, சற்று தெம்பை கொடுத்திருக்கும்.

இன்று அமெரிக்க-ரஷ்ய வல்லரசு போட்டியை குறிக்க, மீண்டும் பனிப்போர் என்ற சொற்பதம் பரவலாக பாவிக்கப்பட்டாலும், இந்த "21 ம் நூற்றாண்டுப் பனிப்போர்" முதலாளித்துவம் வேண்டுமா? அல்லது கம்யூனிசம் வேண்டுமா? என்று ஏதோவொரு அரசியல் கொள்கை அடிப்படையில் வரவில்லை. தமது அரசியல்-பொருளாதார நலன்களை மிக அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் வல்லரசு போட்டி இது. அதனால் தான் அண்மையில் ரஷ்யா, கியூபாவை அணுகி இராணுவ-பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது பற்றி கேட்ட போது, கியூபா தயங்கியது. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா மட்டுமே ( எந்த நேரம் அமெரிக்க இராணுவ தலையீடு வருமோ என்ற அச்சத்தில்), ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்த இராணுவ/கடற்படை ஒத்திகைகளை நடாத்தியுள்ளது.

அணுவாயுதம் பொருத்திய "மஹா பீட்டர்" யுத்த கப்பலும், அதனோடு இரண்டு விநியோக கப்பல்களும், வட ரஷ்ய துறைமுகமொன்றில் இருந்து வெனிசுவேலா நோக்கி செல்லும் வழியில், சிரியாவின் மத்தியதரைக்கடல் துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது. இதற்கிடையே சிரியாவுக்கு செய்மதி படங்களை கொடுப்பதாக, இஸ்ரேல் குற்றச்சாட்டு வேறு உள்ளது. கடந்த மாதம் ஜோர்ஜியாவுக்கு அமெரிக்கா யுத்தகப்பல்களை அனுப்பியதன் பதிலடியாகவே, ரஷ்யா-வெனிசுவேலா கடற்படை ஒத்திகை அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் இடம்பெறுகின்றது.

வெனிசுவேலா அதிபர் சாவேஸ், மொஸ்கோ விஜயத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா அணு உலை அமைக்கும் தொழில்நுட்பத்தை வெனிசுவேலாவிற்கும் விற்க உள்ளது. ரஷ்யாவின் பெற்றோலிய ஏகபோக நிறுவனமான Gasprom, வெனிசுவேலாவின் தேசிய பெற்றோலிய நிறுவனமான PDVSA ஆகியன பொது வேலைத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். அதேநேரம் வெனிசுவேலா ஆயுதங்கள் வாங்கவென ரஷ்யா பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகின்றது. இது மீண்டும் முன்புபோல ஆயுத உற்பத்திப்பெருக்கத்திற்கு வழிவகுக்கலாம். ரஷ்யா தனது பாதுகாப்பு செலவினத்தை 26 சத வீதமாக அதிகரிக்கவுள்ளது.

ஜோர்ஜிய பிரச்சினையின் போது, மேற்கத்திய ஊடகங்கள் "ரஷ்ய ஆக்கிரமிப்பு" என்று கூறி ரஷ்யாவை வில்லனாக சித்தரித்த விதம், ரஷ்ய ஆட்சியாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது. அந்த பிரச்சினையில் ஜோர்ஜியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஒரு பக்க சார்பான செய்தி வெளியிட்டமையால், இனிமேல் மேற்குலகம் "ஊடக சுதந்திரம்" பற்றி எமக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம், என்று ரஷ்ய ஊடகவியாலாளர்கள் கூறிவிட்டனர். அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும், ஜோர்ஜியா தான் பிரச்சினையை தொடக்கியது(தெற்கு ஒசேத்தியா மீது ஜோர்ஜியபடைகளின் தாக்குதல்) என்ற உண்மையை இன்றுவரை பகிரங்கமாக சொல்ல மறுப்பதேன்? என்ற கேள்வி இராஜதந்திர மட்டத்தில் ரஷ்யாவால் கேட்கபடுகின்றது.

போலந்து, செக் குடியரசில் அமெரிக்கா நிறுவப்போகும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நிலையத்தை கண்காணிக்க ரஷ்ய பரிசோதகர்களை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. (சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போது, அங்கிருந்த ஏவுகணை நிலையங்களில் அமெரிக்க பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டனர்.) செக்-போலந்து ஏவுகணைகள் ஈரானை குறிபார்க்கின்றன என்றும், ரஷ்யா இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அமெரிக்கா கூறிவருகின்றது. செக் குடியரசில் மக்கள் ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் நடத்தும், அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்யா நிதியுதவி வழங்குவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் கலாச்சார தளத்திலும், மேற்கத்திய(அல்லது அமெரிக்க) செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் கலாச்சார சீரழிவை உருவாக்கும் "சிம்ப்சன்ஸ்" போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இனி ஒளிபரப்பப்பட மாட்டாது. அதற்கு மாறாக நாட்டுப்பற்றை வலியுறுத்தும் தொடர்கள் காண்பிக்கப்பட உள்ளன. ஜோர்ஜியா பிரச்சினையில் மேற்குலக நாடுகள் நடந்து கொண்ட விதம், பொதுமக்கள் மத்தியிலும் மேற்கத்திய வெறுப்பையும், தேசாபிமானத்தையும் உருவாக்கியுள்ளது. இதனால் இந்த மாற்றங்களுக்கு வெகுஜன ஒப்புதல் கிடைக்கலாம்.

அமெரிக்காவா? ரஷ்யாவா? என்ற போட்டியில் இடையில் அகப்பட்டது, (அன்றைய பனிப்போர் காலகட்டம் போல), ஐரோப்பிய நாடுகள் தான். பொது நாணயம் கண்ட ஐரோப்பிய யூனியன், தனக்கென பொது இராணுவம் இல்லாத குறைக்காக, கழிவிரக்கம் கொள்கின்றது. அனைத்து உறுப்பினர் நாட்டு இராணுவங்களை கூட்டினால் வரும் "இரண்டு மில்லியன் பேரைக்கொண்ட ஐரோப்பிய இராணுவம்", ரஷ்ய இராணுவத்தை விட பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டாம் உலகயுத்ததிற்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளில் இராணுவம் முக்கியமற்ற ஒன்றாக கருதப்பட்டது.(போர் அழிவு தந்த பாடம்) ஐரோப்பிய யூனியன் பலமடைந்த வேளை, ஐரோப்பா எதிர்காலத்தில் ஒரு இராணுவ வல்லரசாக மாறுவதை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா நேட்டோ அமைப்பை தனது ஆதிக்கத்தின் கீழ் தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம். அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருவதால், அமெரிக்கா என்ற சாம்ராஜ்யத்தின் கதை முடிவுக்கு வருகின்றதென, ஜேர்மனிய அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
__________________________________________________
முன்னைய பதிவுகள்:
*ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்
*இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்
*விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
*CNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ
__________________________________________________

4 comments:

MSK / Saravana said...

//வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.//


நன்றி நண்பரே.. உங்கள் பணி சிறக்கட்டும்..

இதுமாதிரியான பொது மக்களிடம் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் நிச்சயம் மக்களின் பார்வைக்கு வர வேண்டும்..

உங்களை என் தளத்தில் குறித்து வைத்து கொள்கிறேன்..

[pls remove the word verification, this will reduce your viewer's comment]

Nimal said...

உங்களின் கட்டுரைகளை இன்றுதான் படித்தேன். மிகவும் பயனுள்ள விடையங்களை எழுதுகிறீர்கள்.

தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்லதொரு ஆக்கத்தை தந்தமைக்கு நன்றிகள்

Unknown said...

நல்லதொரு ஆக்கத்தினை தந்தமைக்கு நன்றி
அத்துடன் எனக்கு அமெரிக்கா-வடகொரியா பிரச்சினை தொடர்பான தகவல்களை தருவீர்களா?