Thursday, September 11, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு


ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா? அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, "தமிழீழ ஆதரவாளர்கள்" என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், "What about Tamileelam?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன? "ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே?

குறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.

முதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா? இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். 

இது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.

SNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன. 

மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.

Glasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், "ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வரும் வருமானம் அதற்கு செலவிடப் படும்" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது. 

SNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள். 

மேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம். 

சுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.

Tuesday, September 09, 2014

மதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உறவுகள்


தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமிழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங்கள் உருவாகி இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அதற்கு முன்னர் இருந்த சமுதாயங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நாகரிகமடைந்து வந்துள்ளன.

மகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு, விஜயனின் வருகையுடன் ஆரம்பமாகின்றது. வட இந்தியாவில் இருந்து கப்பலில் வந்திறங்கிய விஜயனும், அவன் தோழர்களும் சிங்களவர்கள் அல்ல. அவர்கள் சிங்களம் பேசியதாக மகாவம்சமும் குறிப்பிடவில்லை. ஆனால், வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தவறான தகவல். பௌத்த மத மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த பிக்குகளால் மகாவம்சம் எழுதப் பட்டது. அதனால், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, விஜயனின் பூர்வீகம் வங்காள தேசம் என்று எழுதினார்கள். ஏனெனில், வங்காள தேசத்தில் இருந்து தான் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப் பட்டது.

அப்படியானால், விஜயனின் தாயகம் எது? சரித்திர அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியாளர்களின் நீண்ட கால ஆய்வுக்குப் பின்னர், அது குஜராத் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. கி.மு. 5௦௦ ஆண்டளவில் குஜராத் கடலோடிகள் தெற்காசியாவின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இலங்கைத் தீவுக்கு செல்லும் கடல் பாதையில் உள்ள மாலைதீவிலும் அவர்கள் குடியேறி இருக்கலாம். ஜாதக, புராணக் கதைகளில் அது தொடர்பான குறிப்புகள் உள்ளன. சிங்களவர், குஜராத்திகளின் படகு கட்டும் பாணியும் ஒரே மாதிரி உள்ளது. அது மட்டுமல்லாது, இலங்கையிலும், குஜராத்திலும் ஒரே மாதிரியான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே, சிங்களவர்களின் மூதாதையர் குஜராத்தில் இருந்து வந்திருக்கலாம்.

சிங்கள மொழி கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய புதிய மொழி. பாளி,சமஸ்கிருதம்,தமிழ் ஆகிய மொழிகள் ஒன்று கலந்து உருவானது. விஜயனின் கதை உண்மையா என்பது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. அனேகமாக, குஜராத்தில் இருந்து அந்நிய நாடொன்றுக்கு வாணிபம் செய்வதற்கு சென்ற கடலோடிகளின் கப்பல் உடைந்து, இலங்கைக் கரையை வந்து சேர்ந்திருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், விஜயன் வந்த காலத்தில், தென்னிந்தியாவில் பாண்டியர்களின் நாடு இருந்திருக்கிறது. குவேனி உள்நாட்டு ஆதிவாசிப் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்ற விஜயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணம் முடித்திருக்கிறான். பாண்டிய மன்னனும் பல நூறு பெண்களை இலங்கைக்கு அனுப்பி, விஜயனின் தோழர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிய வருகின்றது. விஜயனும் அவன் தோழர்களும் ஆரம்பத்தில் குஜராத் மொழி பேசி இருக்கலாம். ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு வகையில் பாண்டியர்களாக அல்லது தமிழர்களாக மாறி விட்டனர். இதற்குப் பல ஆதாரங்களைக் காட்டலாம். பாண்டிய நாட்டின் தலைநகராக மதுரை இருந்தது. தென்னிலங்கையில் உள்ள மாத்தறை நகரம், மதுர என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், மாத்தறையிலும், அம்பாந்தோட்டையிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று பாழடைந்து போயுள்ள இந்துக் கோயில்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன.

பாண்டிய நாட்டின் நாகரிகம் வளர்ந்த நதியின் பெயர் தாமிரபரணி ஆறு. விஜயனும் தோழர்களும், தம்பபண்ணி எனும் இடத்தில் வந்திறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது. தம்பபண்ணி என்பது இலங்கையின் புராதன காலப் பெயர். அத்தோடு, இன்றைய புத்தளம் பகுதியில் இருந்த பழைய நகரம். கிரேக்கர்கள் தப்ரோபானே(Tabrobane) என்று அழைத்தார்கள்.

அனேகமாக, தப்ரபேன், தம்பபண்ணி ஆகிய சொற்கள் தாமிரபரணி என்ற பெயரின் திரிபாக இருக்கலாம். இலங்கையில் நடந்த சம்ஸ்கிருதமயமாக்கலை தொடர்ந்து, பௌத்த பிக்குகள் சிஹலம், சீலம் போன்ற சொற்களை விரும்பிப் பாவித்தனர். வெனிஸ் நாட்டு கடலோடியான மார்க்கோ போலோ, அதனை செய்லான் என்று குறிப்பிட்டார். அதனால் தான் போர்த்துக்கேயர்கள் செய்லோன் என்றும், ஆங்கிலேயர்கள் சிலோன் என்றும் அழைத்து வந்தனர்.

கிறிஸ்துவுக்கு முந்திய காலகட்டத்திலேயே, இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்துள்ளது. அதற்கு காரணம், நீரைத் தேக்கி வைக்க கட்டப்பட்ட அணைக் கட்டுகள், மற்றும் பல நாடளாவிய நீர்ப்பாசன திட்டங்கள். ஆங்கிலத்தில் "Anicut" என்றால், தமிழில் அணைக்கட்டு. ஆங்கிலம் கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் அதுவும் ஒன்று. இந்தியாவின் மிகப் பழைய அணைக்கட்டு, தாமிரபரணி ஆற்றை மறித்துக் கட்டப் பட்டது. அநேகமாக, அணைக்கட்டு கட்டும் தொழில்நுட்ப அறிவு, அன்றைய பாண்டிய நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் பரிமாறப் பட்டு வந்துள்ளது.

மகாவம்சம் குறிப்பிடும், விஜயனின் வம்சாவளியில் வந்த முக்கியமான அரசன் ஒருவனின் பெயர் "பண்டுகாபயன்." பண்டு என்பது பாண்டியர்களைக் குறிக்கும் சொல். உண்மையில், பண்டு அல்லது பண்டைய என்ற சொல் தான் பாண்டியர்கள் என்று மருவி வந்திருக்க வேண்டும். அனேகமாக, பாண்டியர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் அரச வம்சமாக, இன்னும் சொல்லப் போனால் புராதன தமிழ்க் குடியாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில், பாண்டிய மன்னர்களும், மக்களும் ஆதி கால வரலாற்றில் மறவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். இன்றைக்கும் ராமேஸ்வரம் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள மறவர் சாதியினர் அந்த தொடர்பை நினைவுபடுத்தலாம். காலனிய காலத்திற்கு சற்று முந்திய நாயக்கர் ஆட்சிக் காலம் வரையில், மறவர்கள் போர்க்குணாம்சம் மிக்க தென்னிந்திய சத்திரியர்கள் போன்று கருதப் பட்டனர்.

பாண்டியர்கள் என்பது சம்ஸ்கிருதமயமாகிய பெயர்ச் சொல். ரோம சாம்ராஜ்யத்திற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்துள்ளன. ரோமர் காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான பிளினி, பாண்டிய நாட்டைப் பற்றிப் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாண்டியர்களை "பாண்டியோனிஸ்" என்று கிரேக்க மயப் படுத்தி உள்ளார். மதுரை நகரம் "மெதூரா" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இன்றைய ராமேஸ்வரம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ஏனெனில், பிளினியின் வரலாற்று நூலில் அது பாம்பன் தீவு என்று எழுதப் பட்டுள்ளது. மேலும், பாண்டிய நாட்டின் வரலாற்றையும் பிளினி கிரேக்க கண்ணோட்டத்துடன் எழுதி உள்ளார். (இந்திய) ஹெர்குலஸ் தெய்வத்தின் ஒரே மகளான பாண்டியா அரசி ஆட்சி செய்த படியால், அதற்கு பாண்டிய நாடு என்று பெயர் வந்த கர்ண பரம்பரைக் கதையை கூட எழுதி இருக்கிறார்.

சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் சமூகத்தில் மூவேந்தர்கள் என்று கொண்டாடப் படுகின்றனர். ஆனால், அன்றைய காலத்தில் அந்த மன்னர்களுக்கு இடையில், ஓர் "இன அடிப்படையிலான ஒற்றுமை உணர்வு" இருந்திருக்கவில்லை. உண்மையில் மொழி உணர்வு, தேசியவாதம் என்பன இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களினால் அறிமுகப் படுத்தப் பட்ட அரசியல் கொள்கைகள் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களிடம் அப்படி எந்த உணர்வும் இருக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இருக்கவில்லை. ஆகவே, பண்டைய சமூகங்களின் வரலாற்றை, மொழி அடிப்படையில் பார்ப்பது எமது தவறு.

சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள், கிட்டத்தட்ட தமிழ் போன்று ஒலிக்கும் பல வட்டார மொழிகளைப் பேசி இருப்பார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய மொழிகளாக இருக்கலாம். ஆனால், இன்றிருப்பதைப் போன்று, அன்றைய மக்கள் எல்லோரும் ஒரே பொது மொழியை பேசியதாக கூற முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.

சங்க காலத்தில் இலக்கியங்கள் புனைவதற்கும், செய்யுள்கள் இயற்றுவதற்கும் தமிழ் மொழி பயன்பட்டது. சமுதாயத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிரபுக்களும், புலவர்களும் செம் மொழியான தமிழைப் பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதற்காக, பண்டைய காலங்களில் வாழ்ந்த "தமிழர்கள்" செந்தமிழ் பேசினார்கள் என்று நாம் நினைத்துக் கொள்வது அறியாமை.

சிங்களமும் பல நூறாண்டுகளாக பிரபுக்களாலும், பிக்குகளாலும் மட்டுமே பேசப் பட்டது. பண்டைய காலங்களில் வாழ்ந்த "சிங்களவர்கள்" எல்லோரும் சிங்களம் பேசினார்கள் என்று நினைத்துக் கொள்வது அவர்களது அறியாமை. சாதாரண மக்களும் சிங்களம் படிக்கும் உரிமை, சாதியின் பெயரால் மறுக்கப் பட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் கோலோச்சிய காலங்களில் சூத்திரர்கள் அதனைப் படிப்பது தடுக்கப் பட்டது. அமெரிக்கக் கண்டங்களில், கருப்பின அடிமைகள் ஐரோப்பியரின் மொழிகளை கற்பது தடை செய்யப் பட்டிருந்தது.

உலகில் பல நாடுகளில், அரசர்களின் மொழியும், குடிமக்களின் மொழியும் வேறு வேறாக இருந்துள்ளன. அதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். இங்கிலாந்து அரச வம்சத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். நோர்வீஜிய பிரபுக்கள் டேனிஷ் மொழி பேசினார்கள். ஹங்கேரி நாட்டு மேட்டுக்குடியினர் ஜெர்மன் மொழி பேசினார்கள். இந்தியாவில் மொகலாயர்கள் பாரசீக மொழி பேசினார்கள். இவை எதுவும் அவர்களின் சொந்த மொழியும் அல்ல, அதே நேரத்தில் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களாலும் பேசப் படவில்லை.

ஐரோப்பாவில்,19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட, அரசியல் பொருளாதார மாற்றங்களின் காரணமாகத் தான், உலகம் முழுவதும் தேசிய மொழிகளின் அவசியம் உணரப் பட்டது. ஆனால் அந்த தேசிய மொழிக் கொள்கை, வட்டார மொழிகளின் அழிவின் மேல் நிலைநாட்டப் பட்டது.


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்: 
1.The International Institute for Asian Studies (IIAS) 
2.A History of Tinnevelly, Bishop R. Caldwell 
3.The Hindus: An Alternative History, Wendy Doniger


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, September 06, 2014

அமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்!


அமெரிக்காவில் 6 அல்லது 7 வயது குழந்தைகள் மத்தியில் கூட, துப்பாக்கி வைத்திருக்கும் கலாச்சாரம் பரவி வருகின்றது. உலகிலேயே அதிகளவு தனிநபர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். கோடிக் கணக்கான ஆயுதங்கள், தனிநபர்களின் பாவனையில் உள்ளன. அந்த நாட்டில் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சட்டமும் இடம் கொடுக்கிறது.  

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு மில்லியன் குழந்தைகள், தோட்டாக்கள் நிரப்பப் பட்ட துப்பாக்கிகள் உள்ள வீடுகளில் வளர்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர். "ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்கர்களின் பிறப்புரிமை" என்று வாதாடும் NRA எனும் அரசு சாரா நிறுவனம், தற்போது குழந்தைகளை குறிவைத்துள்ளது.  பாடசாலைகளுக்கு செல்லும் NRA, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

அமெரிக்க குழந்தைகள் தமக்கென தனியான துப்பாக்கி வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். "இது எனது முதல் துப்பாக்கி!" என்று சொல்லிக் கொள்வது, சிறுவர்கள் மத்தியில் ஒரு கலாச்சாரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயுத நிறுவனங்களும், சிறுவர்களைக் குறி வைத்து விளம்பரம் செய்கின்றன. குழந்தைகள் விரும்பும் வகையில், பல வர்ணங்களில் துப்பாக்கிகளை வடிவமைக்கின்றன. அந்தக் "குழந்தைத் துப்பாக்கி" ஒன்றை, நூறு டாலருக்கு வாங்க முடியும். "எனது முதல் துப்பாக்கி" கலாச்சாரம் பரவத் தொடங்கிய 1996 ஆம் ஆண்டு முதல், 60000 "குழந்தைத் துப்பாக்கிகள்" விற்கப் பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கான அமெரிக்கக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பல இடங்களில் சிறுவர்களுக்கென  விசேடமாக பயிற்சி அளிக்கும் நிலையங்கள் உள்ளன. அது குறித்து பகிரங்கமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரிசோனாவில் ஒரு ஒன்பது வயது சிறுமி Uzi துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம், தவறுதலாக பக்கத்தில் நின்ற பயிற்சியாளரை சுட்டுக் கொன்று விட்டாள். ஆயினும் என்ன? பெற்றோரைக் கேட்டால், அது பயிற்சியாளரின் தவறு என்று காரணம் சொல்வார்கள். 

அமெரிக்காவில் பல இடங்களிலும், சிறுவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக, அயலில் இருந்த சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அப்படியான துயரச் சம்பவங்கள், யாருடைய மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று அப்படி நடக்கலாம் என்று சமாளிப்பார்கள். "துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் இறக்கும் குழந்தைகளை விட, நீச்சல்குளங்களில் அதிகளவு குழந்தைகள் பலியாகின்றன" என்று குதர்க்கமாக வாதம் செய்வார்கள்.

சிறுவர்கள் ஆயுதங்களை கையாளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் எதுவும் அமெரிக்காவில் கிடையாது. ஆயுதப் பாவனை குறித்த சட்டம் இயற்றும் விடயத்தில், மத்திய அரசு மாநில அரசுக்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது. முப்பது மாநிலங்களில் சிறுவர்கள் சட்டப்படி ஆயுதம் வைத்திருக்கலாம்! அதற்கு வயதெல்லை கிடையாது!! 

மிச்சிக்கன் மாநிலத்தில் 18 வயதிற்குப் பிறகு தான் ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், அங்கே கூட வயதுவந்தோரின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பழக முடியும். "ஆயுத உரிமைகள் நிறுவனம்" NRA, குழந்தைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவில் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், பிள்ளைகளுக்கு ஆயுதக் கலாச்சாரத்தை திணிப்பவர்களும், பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அதனால் தான் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கிறது. இதே அமெரிக்க அரசாங்கம், பாலஸ்தீனத்தில், ஈழத்தில், அல்லது ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில் சிறுவர்கள் ஆயுதமேந்தி இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. குழந்தைகள் கொடி பிடித்தாலே சிறுவர் துஸ்பிரயோகம் என்று அலறித் துடிக்கும் அமெரிக்க அடிவருடிகள், ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்க குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரிக்க விசுவாசிகள் கூட இரட்டை வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள் தான். 

(தகவல்களுக்கு நன்றி: NRC Handelsblad, 6 september 2014)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"
2.அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

Friday, September 05, 2014

மலபார் தமிழ் : காலனிய காலத்தில் ஏற்பட்ட நவீன தமிழின் உருவாக்கம்


"தமிழர்" என்ற சொல், எந்தக் காலத்தில் இருந்து ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லானது? நிச்சயமாக, இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது, அந்நியர்கள் கூட "தமிழர்" என்ற வார்த்தையை பாவித்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஆனால், தென்னிந்தியாவில் தமிழர்கள், மலையாளிகளுக்கு பொதுவாக "மலபாரிகள்" என்ற பெயர் இருந்துள்ளது. அந்நிய நாட்டவர்கள், பல நூறு வருடங்களாக தமிழர்களையும் "மலபாரிகள்" என்று தான் அழைத்து வந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், அநதச் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.

ரொட்டர்டாம் நகரில் நடந்த
மலபாரிகளின் (தமிழர்) கண்காட்சி.
அந்தக் காலங்களில், காலனிய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களை கூட்டிக் கொண்டு வந்து, அவர்களை வேடிக்கையான காட்சிப் பொருளாக்குவது சர்வசாதாரணம். ஐரோப்பியர்கள் தமிழர்களையும், மிருகங்கள் போன்று மனிதக் காட்சிச் சாலையில் வைத்திருந்தார்கள். 

1902 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தமிழர்களின் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 50 பேர் கொண்ட தமிழ்க் குடும்பங்கள், "பாம்புக்கு மகுடி ஊதுவது, கயிற்றின் மேல் நடப்பது" போன்ற பாரம்பரிய கலைகளை, ஐரோப்பியர்களின் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும். ரொட்டர்டாம் நகரில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியை பார்க்க வருமாறு, டச்சு மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதற்காக ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது. 
(ஆதாரம்: De exotische mens; Andere culturen als amusement)

ரொட்டர்டாம் நகரில் நடந்த கண்காட்சி பற்றிய துண்டுப்பிரசுரத்தில், "மலபாரிகள் (அதாவது இன்றைய தமிழ்நாட்டவர்கள்) தமது பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டுவதாகவும், அதனைக் கண்டுகளிக்க வருமாறும்" எழுதப் பட்டுள்ளது. ஓரிடத்தில் "மலபாரிகளின் பாடசாலை" கீறிக் காட்டி, அதிலே கரும்பலகையில் "கடவுள்" என்று தமிழ் எழுத்துக்கள் இருந்தன. வீணை வாசிப்பவர்கள், மிருதங்கம் அடிப்பவர்களும் வரையப் பட்டிருந்தனர்.

காலனிய காலத்தில், கிறிஸ்தவ மதத்தை தழுவிய மலபாரிகள் (இன்றைய தமிழர்கள்) பேசிய மொழி, ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களினால் "தமுள்" (தமிழ்) என்று அழைக்கப் பட்டது. அதுவே நாங்கள் இன்று பேசும், எழுதும் நவீன தமிழ் மொழி ஆகியது. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

முதன்முதலாக அச்சிடப் பட்ட தமிழ் நூல் 
இந்தியாவில் முதன்முதலாக அச்சிடப் பட்ட நூல், ஒரு தமிழ் நூல். 1578 ஆம் ஆண்டு, கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அச்சிடப் பட்ட அந்த நூலின் பெயர் Doctrina Christam. இன்றைய கேரளாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அது எழுதப் பட்டது.

இருபது வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அச்சிடப் பட்ட அதன் பெயர் "Doctrina Christam In Lingua Malabar Tamul" என்றிருந்தது. போர்த்துகேய எசுயிஸ்ட் பாதிரியார் ஹென்றிக், அதனை தொகுத்திருந்தார். ஆரம்பத்தில் லத்தீன் எழுத்துக்களைக் கொண்டும், பின்னர் மலையாள, தமிழ் எழுத்து வடிவங்களிலும் எழுதப்பட்டது. இந்தியாவில் இருந்த போர்த்துகேய காலனியான கோவாவில் அது அச்சிடப் பட்டது.

காலனிய காலத்தில், ஐரோப்பியர்கள் தென்னிந்தியர்கள் அனைவரையும் "மலபாரிகள்" என்று அழைத்து வந்தனர். வடக்கு கேரளாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பேசிய மொழி தனியாக "தமுள்" என்று அழைக்கப் பட்டது. வடக்கு கேரளாவில் ஏற்கனவே சிரிய கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் மூலமும் "தமுள்" என்ற சொல் வந்திருக்கலாம். தமுள் என்பது, இன்றைய சிரியா, ஈராக்கில் வாழ்ந்த புராதன மக்கள் இனமான அசிரியர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் ஆகும்.

1716 ஆம் ஆண்டு, Ziegenbalg எனும் டச்சு கத்தோலிக்க பாதிரியார் தமிழ் இலக்கண நூல் எழுதினார். அதிலும் அவர், தமிழை, "மலபாரி மொழி" என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கான நூல் என்பதால், மெட்ராஸ் பகுதியை ஆண்ட ஆங்கிலேயர்கள் "Ziegenbalg's Grammatica Damulica" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.

Philippus Baldaeus எனும் இன்னொரு டச்சு பாதிரியார், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து ஈழத் தமிழ் மக்களின் மொழியை கற்றுத் தேறினார். அவர் "ஈழத் தமிழ் மக்களை மலபாரிகள்" என்று தான் அழைத்துள்ளார். Philippus Baldaeus எழுதிய முக்கியமான நூலான "Nauwkeurige beschrijving Malabar en Choromandel" தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது.

ஐரோப்பிய பாதிரிகளால் எழுதப் பட்ட தமிழ் இலக்கண நூல்கள் யாவும், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் தான் எழுதப் பட்டுள்ளன. அனேகமாக, ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டவர்கள் தமிழ் பிராமணர்கள். அதனால், தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட கிறிஸ்தவ போதனைகளில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன.

எது எப்படி இருந்த போதிலும், காலனிய ஆட்சிக் காலமும், கிறிஸ்தவ மதப் பரப்புரைகளும், நவீன தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வாழ்ந்த கிறிஸ்தவ மலபாரிகள் பேசிய "தமுள்", இன்றைக்கு நாம் பாவிக்கும் தமிழாகி உள்ளது.

தமிழ் மொழி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தான். ஆனால், பண்டைய கால, மத்திய கால தமிழர்கள் பேசிய தமிழ் எமக்கு சுத்தமாகப் புரியாது. சிலநேரம் அது வேறொரு மொழியாகத் தோன்றும். நாங்கள் இன்றைக்குப் பேசும் நவீன தமிழ் மொழி, காலனிய காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய மக்களின் மொழியாக இருந்தது. அது ஆரம்பத்தில் மலபாரிகளின் மொழி என்று அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவர் அல்லாத மலபாரிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவை உணரப் பட்டது. அதனால், தமுள்-மலையாளம் என்றும், கடைசியில் தமிழ் என்றும் அழைக்கப் பட்டது.

கன்னடம் தெலுங்கு, மலையாளம் என்பவற்றிற்கு தாய் தமிழ் என்று மொழியாய்வாளர்கள் சொல்கிறார்கள். அது இன்றைக்கு நாங்கள் பேசும் நவீன தமிழ் என்று, நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது மொழி இருந்திருக்க வேண்டும். அதன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாம் இன்று பேசும் தமிழ் மொழி, சம்ஸ்கிருதம் அதிகளவில் கலக்காத மொழி. அதனால், அது புராதன கால பொது மொழியுடன் தொடர்புடையது என்று நம்ப இடமுண்டு.

இன்றைய தமிழுக்கும், மலையாளத்திற்கும் முந்திய மொழியை, மொழியியலாளர்கள் தமிழ் என்றே குறிப்பிட்டு வந்தனர். கல்வியாளர்கள் படிப்பதற்கு இலகுவாக ஒரு சொல்லை பாவித்தார்கள். உயிரியலில் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவான பெயர் சூட்டி படிப்பது மாதிரித் தான் இதுவும்.

 தென்னிந்தியர்களுக்கு இடையிலான பொதுவான தன்மையை குறிப்பிடுவதற்கு, சமூக விஞ்ஞானிகள் "திராவிடர்" என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். ஆனால், உண்மையில் திராவிடர் என்ற இனம் அல்லது மொழி இருக்கவில்லை. சமூக - விஞ்ஞானிகள் தாம் இலகுவாக கற்பதற்கு வசதியாக பாவித்த கலைச் சொற்களை, அரசியல்வாதிகள் தமது அரசியல் கொள்கைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தமிழில் இருந்து மலையாளம் பிறந்தது என்று, தமிழர்களான நாங்கள் மட்டும் தான் சொல்கிறோம். மலையாளிகள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெர்மன் மொழியில் இருந்து, டேனிஷ், டச்சு மொழிகள் உருவாகின என்று ஜெர்மன் காரர்கள் சொல்லலாம். ஆனால், டேனிஷ், டச்சு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இன்றைய ஜெர்மன், டேனிஷ், டச்சு மொழிகளுக்கு பொதுவான புராதன ஜெர்மன் மொழி ஒன்று இருந்தது என்று தெளிவாக கூற வேண்டியுள்ளது. அது தான் உண்மையும் கூட.

ஆங்கிலம் கூட ஒரு ஜெர்மானிய மொழி தான். ஆனால், அதன் அர்த்தம் இன்றைக்கு பேசப்படும் ஜெர்மன் மொழியில் இருந்து ஆங்கிலம் வந்தது என்பதல்ல. முற்கால ஜேர்மனிய இனமான ஆங்கிலோ - சாக்சன் மக்கள் பேசிய முற்கால ஜெர்மன், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ், கெல்டிக் மொழிகளுடன் கலந்து தான் நவீன ஆங்கிலம் உருவானது. அதே மாதிரி தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மலையாளம் உருவானது. ஆனால், அந்தத் தமிழ், இன்றைக்கு நாங்கள் பேசும் அதே தமிழ் அல்ல.

பண்டைய கால ஆங்கிலம் ஐஸ்லாந்து மொழி போல எழுதப் பட்டிருக்கும். அதனை இன்றுள்ள ஆங்கிலேயர்களினால் வாசித்தறிய முடியாது. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளும் மாற்றங்களுக்கு உள்ளாகித் தான் வளர்ந்து வந்துள்ளன. அவற்றைப் பேசும் மக்களும் வெவ்வேறு இனங்களில் இருந்து கலந்து உருவாகினார்கள். இது உலக நியதி. அதை மாற்ற முடியாது. 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
2.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்

Monday, September 01, 2014

ஒரு தமிழ் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நினைவுக் குறிப்புகள்

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" - திருக்குறள் 

சிறு வயதில் இந்தக் குறளைச் சொல்லி வளர்த்த எனது தந்தை இப்போது இயற்கை எய்தி விட்டார். சில தினங்களுக்கு முன்னர், கடுமையாக நோய் வாய்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், தனது 79 ஆவது வயதில் காலமான எனது தந்தைக்கு, தமது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும், முதற்கண் எனது நன்றிகள். 

சின்னர் தர்மலிங்கம் ஆகிய எனது தந்தை, யாழ்ப்பாணத்தில் எங்களது கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாக அறியப் பட்ட ஒரு சமூக ஆர்வலர். அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வது, ஒரு மகனாக தந்தைக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட எனது அப்பா, கடைசி வரைக்கும் தனது கொள்கையில் இருந்து வழுவாது நின்றவர். அரசியலை வைத்து பிழைப்பு நடத்தாமல், மக்கள் சேவையை தலையாய கடமையாக கொண்டியங்கியவர். இறுதிக் காலங்களில், கடும் சுகயீனமுற்று வருடத்தில் பாதி நாட்கள் மருத்துவமனையில் காலம் கழிக்கும் வரையில், முதுமையிலும் தளராது தனது சமூகக் கடமைகளை நிறைவேற்றியவர். அவரைப் பற்றிய சுருக்கமான நினைவுக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வட இலங்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சரசாலை எனும் கிராமத்தில் வாழ்ந்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த "சின்னர்" எனும் ஏழை விவசாயிக்கு ஒன்பது பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் பிள்ளையும் பிறந்தன. அந்த விவசாயியின் ஒரேயொரு புதல்வன் தான், "தர்மலிங்கம்" என்ற பெயர் கொண்ட எனது அப்பா. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், 1935 ஆம் ஆண்டு பிறந்தார். வறுமை, அல்லது மரபு காரணமாக, எனது தாத்தா தனது மகனை மட்டும் படிக்க வைத்தார்.

அன்று யாழ் குடாநாட்டில் நிலவிய, கடுமையான நிலப்பிரபுத்துவ சுரண்டலில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி, கல்வி கற்பது தான். ஆனால், அது முழுவதும் ஆங்கில மயமாகி இருந்த படியால் ஒரு சிலரால் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. அந்த வகையில், படித்து உத்தியோகம் பார்க்கும் ஒருவர், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உதாரண புருஷராக அல்லது வழிகாட்டியாக கருதப் பட்டதில் வியப்பில்லை. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து படித்து, உழைப்பால் உயர்ந்த எனது தந்தை, ஒரு கீழ் மத்தியதர வர்க்கப் பிரதிநிதியாக மாறிய பின்னர், தமிழ் தேசிய அரசியலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், அரசாங்கம் மட்டுமே, நாட்டில் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு தரும் பெரிய நிறுவனமாக இருந்தது. அதனால், சிங்கள - தமிழ் இன முரண்பாடும், ஒரு மத்திய தர வர்க்கப் பிரச்சினையாக ஆரம்பித்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் "படித்தவர்களின் பிரதேசம்" என்று அழைக்கப் படும் யாழ் குடாநாட்டை சேர்ந்த முன்னேறிய பிரிவினர், பிரிட்டன் வரை சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று, அரசு நிர்வாகத்திலும் உயர் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த, வறுமையான பின்னணி கொண்ட எனது அப்பா போன்றவர்கள், இடைத்தரக் கல்வியுடன் இடைத்தர அரசு ஊழியராக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவருக்கு அந்த வாய்ப்பு இராணுவத்தில் கிடைத்தது. முன்பு பிரிட்டிஷ் காலனிய இராணுவமாக இருந்து, சுதந்திரமடைந்த இலங்கையின் தேசிய இராணுவமாக மாறிய ஓர் அரசு நிறுவனத்தில், ஒரு சாதாரண எழுதுவினைஞர் (Clerk) பணியில் சேர்ந்து கொண்டார். பல வருட கால சேவை அனுபவம் காரணமாக, தலைமை லிகிதராக (Chief Clerk) பதவியுயர்வு பெற்றார். 

எனது தந்தை இராணுவத்தில் வேலை செய்து கொண்டே மருந்தாளராக (Pharmacist) தொழிற் கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். அதனால், கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள இராணுவ தலைமையகத்தின் மருத்துவப் பிரிவில் வேலை செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

அறுபதுகளில், ஆப்பிரிக்காவில் புதிதாக சுதந்திரமடைந்த கொங்கோவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அங்கு சமாதானத்தை நிலைநாட்ட அனுப்பப்பட்ட ஐ.நா. சமாதானப் படையில், இலங்கை இராணுவமும் இணைந்து கொண்டது. எனது தந்தையும், கொங்கோ நாட்டிற்கு அனுப்பப் பட்ட ஐ.நா. சமாதானப் படையில் ஒரு வீரராக தெரிவு செய்யப் பட்டார். அவர் கொங்கோவில் பணியாற்றிய காலத்தில், எடுத்த புகைப்படங்கள், சேகரித்த தகவல்கள், எனது சர்வதேச அரசியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டி விட்டன எனலாம்.  

எனது அப்பா இராணுவத்திற்குள் வேலை செய்த படியால், எவ்வாறு இனவாதம் சிங்களப் படையினர் மத்தியில் நிறுவன மயப் படுகின்றது என்பதை நேரடியாக கண்டுணர்ந்தார். ஒரு காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த சிங்கள ஊழியர்கள், குறிப்பிட்ட கட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். எனது தந்தை மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சிலர் இனவாதத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்பாவுடன் கூட வேலை செய்த சிங்கள ஊழியர்கள், தாம் பேசுவதை இனவாதமாக கருதாமல், அதை நியாயப் படுத்தி வந்தனர். சிங்களப் பிரதேசத்தில், சிங்களவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை தமிழர்கள் தட்டிப் பறிப்பதாக குற்றம் சாட்டினார்கள்.   ஆனால், "தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள்" என்பது ஒரு கற்பனையான வாதம் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை. இது போன்ற ஒரு பக்கச் சார்பான அரசியல் கருத்துக்கள், பிற்காலத்தில் பல இலட்சம் மக்களை பலி கொண்ட போருக்கு இட்டுச் சென்றது.

இராணுவ தலைமை அலுவலகத்தில், சிங்கள ஊழியர்களுடன் அடிக்கடி நடக்கும் அரசியல் வாக்குவாதங்கள், எனது அப்பாவையும் தமிழ் தேசியவாத அரசியலுக்குள் இழுத்துச் சென்றதில் வியப்பில்லை. இலங்கையின் புத்திஜீவிகள், மத்திய தர வர்க்கத்தினர், "சிங்களவர், தமிழர்" என்று இரு துருவங்களாக பிரிந்து சென்று, அவரவர் தமக்குரிய அரசியலை அமைத்துக் கொண்டனர். அந்தப் பிளவு இன்று வரை தொடர்கின்றது. 

தமிழர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கொழும்பில் மட்டுமே பெருமளவு செயற்பட்டு வந்தனர். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியாக வட-கிழக்கு தமிழர்களின் ஏகபோக பிரதிநிதித்துவம் பெற்ற பின்னரும், கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் பெருமளவு மாறவில்லை. அதனால், அந்தக் காலத்தில் "கொழும்புத் தமிழர்களாக" வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் குடும்பமும், மிக இலகுவாக தமிழ் தேசிய அரசியலுக்குள் அமிழ்ந்ததில் வியப்பில்லை.

தமிழ் தேசிய அரசியல் பற்றிய கலந்துரையாடல்கள் பல எங்களது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராசலிங்கம் அப்பாவின் நெருங்கிய நண்பர். அவர் அடிக்கடி எமது வீட்டிற்கு வந்து போயுள்ளார். அப்படியான தொடர்புகள் காரணமாகவும் எனது அப்பா கூட்டணி அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். 

கொழும்பில் நடந்த கூட்டணியின் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சிறுவனான எனக்கு அரசியல் சரியாகப் புரியாவிட்டாலும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களின் தமிழ் இன மான உணர்ச்சியை தூண்டும் கவிதைகள், பேச்சுக்கள் கூறும் மொழி மட்டும் நன்றாகப் புரிந்தது. சிறு வயதில் நானும் ஒரு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால், அது அதிசயம் அல்ல. ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் நானும் காசி ஆனந்தன் பாணியை பின்பற்றி, "தமிழ் இன உணர்ச்சிக் கவிதைகள்" எழுதி இருக்கிறேன். அன்றைய சூழல் அப்படித் தான் இருந்தது. 

எது எப்படி இருந்த போதிலும், எனது தந்தை, "தமிழர்களுக்கு தமிழீழம் என்ற தனிநாடு வேண்டும்" என்று மனப்பூர்வமாக நம்பிய ஒருவராக இருந்தார். அந்தக் கொள்கைப் பற்று காரணமாக, ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்தில், கூட்டணியை துறந்து புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் புலிகள் இயக்கம் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். 

1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் நடப்பதற்கு முன்னரே, கொழும்பு தமிழர்களுக்கு பாதுகாப்பான பிரதேசம் அல்ல என்று அப்பா உணர்ந்து கொண்டார். அதனால், சாவகச்சேரியில் பரம்பரைக் காணி ஒன்றில் வீடு கட்டி, ஒரேயடியாக தமிழரின் பூர்வீக பிரதேசத்தில் குடியேறி விட வேண்டுமென்று முடிவெடுத்தார். ஏறத்தாள வீடு கட்டி முடியும் நேரத்தில், 83 இனக் கலவரம் நடந்தது. 

நான் அப்போது யாழ் இந்துக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவும், அம்மாவும், தங்கையும் இன்னமும் கொழும்பில் தங்கி இருந்தார்கள். ஆடிக் கலவரம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சாவகச்சேரி வீட்டில் விடுமுறையை கழித்த படியால், தெய்வாதீனமாக உயிர் தப்பி விட்டனர். கொழும்பில் நாங்கள் குடியிருந்த வாடகை வீடும், அதனோடிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளும், சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்தப் பிரதேசத்தில் இருந்த தமிழர்களின் வீடுகள் ஒன்று கூட விடாமல் எரிக்கப் பட்டன. ஒன்றுமறியாத அப்பாவிகள் பலர் கொல்லப் பட்டனர்.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர், எங்களது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக தங்கி விட்டது. அந்தக் காலகட்டத்தில் ஐம்பது வயதான எனது அப்பா, இராணுவத்தில் பணிபுரிவோர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் சலுகையை பயன்படுத்திக் கொண்டார். கொழும்பில் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய எனது அம்மாவும், ஊரில் உள்ள ஆரம்பப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்தார். அதற்குப் பிறகு, எங்களது குடும்பத் தொடர்புகளும், அப்பாவின் அரசியல் ஈடுபாடும் யாழ்ப்பாணத்தை சுற்றியே மையப் படத் தொடங்கின.

ஆடிக் கலவரத்திற்குப் பின்னர், யாழ் குடாநாட்டில் கூட்டணியினரின் பாராளுமன்ற தமிழ் தேசிய அரசியல் மங்கத் தொடங்கியது. அந்த வெற்றிடத்தில், ஆயுதமேந்திய தீவிரவாத தமிழ் தேசிய அரசியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்களின் இராணுவத் தாக்குதல்கள், பிரச்சார நடவடிக்கைகள் யாவும், யாழ் நகரை அண்டிய பகுதிகளிலேயே அதிகளவில் இடம்பெற்றன. 

எண்பதுகளில், எனது தந்தை, யாழ் நகரில் ஒரு சிறு தொழில் வளாகத்தில் மனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார். அதனால், போராளிக் குழுக்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகள் போன்றன அவருக்கு இலகுவாக கிடைத்து வந்தன. அந்தக் காலகட்டத்தில் அப்பாவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் கவரப் பட்டார். தமிழ்நாட்டில் அச்சிடப் பட்டு, யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப் பட்ட, புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" பத்திரிகை பிரதிகளை வீட்டிற்கு கொண்டு வருவார். அவர் மூலமாகத் தான் எனக்கும் புலிகளின் அரசியல், இராணுவ கொள்கைகள் அறிமுகமாகின.

1984 ஆம் ஆண்டு, திம்புப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிறிலங்கா இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப் பட்டது. யாழ் குடாநாட்டிற்குள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் யாவும், "விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக" கருதப் பட்டது. எல்லா இடங்களிலும் ஈழ விடுதலை இயக்கங்கள் அலுவலகங்களை திறந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்த்து பல்கிப் பெருகினர். அன்றைய காலத்தில் ஒரு சிவில் சமூகமாக இயங்கிய பிரஜைகள் குழுவில், ஊரில் பெரிய மனிதரான அப்பாவும் பங்கு பற்றினார். பிற்காலத்தில் அது புலிகளின் வெகுஜன அமைப்பாக தவறாகக் கருதப் பட்டது.

புலிகள் அமைப்பில், சாவகச்சேரி பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்ட கேடில்ஸ் தலைமையில், அவர்களது அரசியல் நடவடிக்கைகளும் அதிகரித்தன. பிரஜைகள் குழு போன்ற வெகுஜன அமைப்புகளுக்குள் புலிகளின் தலையீடு அதிகரிப்பதற்கு, கேடில்சின் நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக அமைந்திருந்தன. நான் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த காலத்தில், கேடில்ஸ் எனக்கு சீனியர் மாணவனாக ஒரே விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், அதே மாணவன் புலிகளின் சாவகச்சேரிப் பகுதிப் பொறுப்பாளராக வருவான் என்று நான் கனவிலும் நினைத்திருக்க முடியாது.

ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் புரியப் பட்ட மனித உரிமை மீறல்கள் ஆவணப் படுத்தப் பட்டன. எனது அப்பா அந்த துறையில் மிகவும் உற்சாகமாக செயற்பட்டு வந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) செயற்பாட்டாளராக மாறினார். அவர் சேகரித்துக் கொடுத்த தகவல்கள் பல, இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. 

ஒரு தடவை, சர்வதேச மன்னிப்புச்சபையின் இரண்டு வெளிநாட்டு ஆர்வலர்கள், எங்களது வீட்டிற்கு வந்து தங்கியிருந்து, விருந்துண்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது சிறுவனாக இருந்த நான், அவர்களுக்கு பல இடங்களை கூட்டிச் சென்று காட்டியமை நினைவில் உள்ளது. ஒரு வெள்ளையினத்தவரும், கருப்பினத்தவரும் எங்களது கிராமத் தெருக்களில் வலம் வந்த நேரம், மக்கள் கூடி நின்று விடுப்புப் பார்த்தமை ஞாபகம் இருக்கிறது. சில வருடங்களுக்குப் பின்னர், மேற்கத்திய அரசு சாரா நிறுவனங்களும், அவற்றின் வெள்ளையின பிரதிநிதிகளும் எங்கள் மண்ணில் நிரந்தரமாகத் தங்கி இருந்து  செயற்படத் தொடங்கினார்கள். ஆனால், அந்தக் காலத்தில் அதெல்லாம் மிகவும் அருமையாக நடப்பவை.

"சிறிலங்காப் படைகளிடம் இருந்து விடுவிக்கப் பட்ட யாழ் குடாநாட்டில்" ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இடையே ஆயுத மோதல்கள் நடந்து, இறுதியில் புலிகள் மட்டுமே முழுமையாக அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். 1987 ஆம் ஆண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்திறங்கியது. சில வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தடை செய்யப் பட்ட பிற இயக்கங்கள், இந்திய படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப் பட்டன.

தற்போது இந்திய இராணுவத்தின் துணைப் படைகளாக மட்டுமே செயற்பட்ட ஆயுதக் குழுக்கள், புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை வேட்டையாடிக் கொன்றன. வெகுஜன அமைப்புகளான பிரஜைகள் குழுக்கள் போன்றனவும் தப்பவில்லை. புலி ஆதரவாளர்களாக சந்தேகிக்கப் பட்ட புத்திஜீவிகள் சுட்டுக் கொல்லப் பட்ட காலத்தில், அப்பாவும் தலைமறைவாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தொண்ணூறுகளுக்கு பிந்திய காலத்தில், வன்னிப் பகுதி புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது சில வருடங்கள், வன்னியில் அரசியல் ஆர்வலராக செயற்பட்டு வந்த அப்பாவும், பின்னர் யாழ் குடாநாட்டிற்கு திரும்பிச் சென்றார். ஆனால், காலம் மாறி விட்டிருந்தது. யாழ் குடாநாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிலங்கா இராணுவம், அரசியல் செயற்பாட்டாளர்களையும் கண்காணித்து வந்தது. 

அதனால், அரசியல் பேசாத சமூக சேவைகள் என்ற மட்டத்தில் மட்டுமே அப்பா செயற்பட்டு வந்தார். இந்து மத தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட அப்பா, தனது வாழ் நாள் முழுவதும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக நான் அவரை சந்தித்து விடை பெற்ற நாட்களிலும், தான் அறிந்த ஆன்மீக உண்மைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

சாதிய, பார்ப்பனிய சடங்குகளில் இருந்து இந்து மதத்தை மீட்டெடுத்து, தத்துவங்கள் மூலம் தூய்மைப் படுத்தலாம் என்று நம்புகிறவர்களில் அப்பாவும் ஒருவர். கொழும்பில் நாம் வாழ்ந்த காலங்களில், ஹரிதாஸ் எனும் இந்திய சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பார். வெள்ளிக்கிழமைகளில் ஒழுங்காக கோயிலுக்கு சென்று வருவார். மாட்டிறைச்சி உண்ண மாட்டார். 

சிறுவயதில் நானும் இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுதே, ஒரு நாஸ்திகனாக மாறியதும், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாததும் ஏற்கனவே அவருக்கு தெரியும். ஆனால், "பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்ட" சில பழமைவாத, மத சம்பிரதாயங்களை, நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அந்த விடயத்தில் மட்டும், இறுதிக் காலத்தில் என்னுடன் மனஸ்தாபப் பட்டார்.

அப்பா தனது வயோதிப காலத்தில், நோய்களால் உடல் பாதிக்கப் பட்டிருந்த போதிலும் சளைக்காமல் சமூகப் பணி செய்து வந்தார். யுத்தம் காரணமாக, யாழ் குடாநாட்டில் மருத்துவ வசதிகள் மோசமான நிலைமையில் இருந்தமையும் அவரது நோய்களுக்கு ஒரு காரணம். 

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்ட படியால், பாதிக்கப் பட்ட நோயாளிகளில் அப்பாவும் ஒருவர். அவருக்கு நடந்த அறுவைச் சிகிச்சைகள் பல எதிர்மறையான விளைவுகளை தந்தன. ஒரு நோயை குணப் படுத்தி, இன்னொரு நோயை வாங்கிக் கொண்டு வந்தார். இறுதியில், சில வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு அளிக்கப் பட்ட சிகிச்சையின் எதிர்மறையான விளைவு அவருக்கு எமனாக வந்தது.

சாவகச்சேரியில் இருக்கும் எங்களது வீடு, 2000 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கடுமையாக சேதமடைந்திருந்தது. வீட்டில் இருந்த எங்கள் உடைமைகள் எல்லாம் அழிந்து நாசமாகி இருந்தன. இருப்பினும் சமாதான காலத்தில் அதைத் திருத்தி, அப்பா இறுதி வரை அங்கேயே வாழ்ந்து வந்தார். எங்கள் ஊரில் இருந்த பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும், இடம்பெயர்ந்து பெரிய நகரங்களுக்கும் சென்று விட்டனர். ஆனால் அப்பா மட்டும் அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஊரிலேயே தங்கி விட்டார்.

எனது அப்பா ஊரை விட்டு வெளியேற விரும்பாமல், சாகும் வரை அங்கேயே இருந்தமைக்கு, சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், பருவ வயதை எட்டியிருந்த எனது தங்கை, எதிர்பாராவிதமாக இரத்தப் புற்றுநோய் வந்து இறந்தார். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அம்மா ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதனால் அப்பாவுக்கு அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமின்றி, அந்திமக் காலத்தில் நோய்களுடன் போராடிக் கொண்டே வாழ்ந்து வந்தார். இரண்டு தம்பிகள், இன்னொரு தங்கை அந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். சில உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிட்டியிருந்தது.

இருப்பினும், எனது தந்தை யாருடைய உதவியையும் எதிர்பாராமல், இறுதிவரையில் தனது சொந்தப் பலத்தில் வாழ விரும்பினார். ஓர் ஈழத் தமிழ் அரசியல் - சமூக ஆர்வலரான எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தி, இந்தக் கட்டுரையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். எனது தங்கையுடனும், அம்மாவுடனும், விண்ணுலகில் சேர்ந்து கொண்ட அப்பாவின் ஆத்மா சாந்தி அடைவதாக.