Thursday, January 09, 2014

யாழ் ஆவா குரூப்பும், தென்னிலங்கை தரகு முதலாளியக் கும்பலும்


யாழ்ப்பாணத்தில் "ஆவா குரூப்" என்ற பெயரில் இயங்கிய பாதாள உலகக் கோஷ்டியை பொலிசார் பிடித்து விட்டதாக, ஒரு செய்தி வெளியாகியது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய வாட்கள், கிரேனேட், மோட்டார் சைக்கிள்களை, பொலிஸ் பார்வைக்கு வைத்திருந்த படங்களும் வெளியாகின. இதற்கு முன்னர், தென்னிலங்கையில் மட்டுமே இது போன்ற கிரிமினல் கும்பல்கள் பிடிபட்டது பற்றிய செய்திகள் வரும். இப்போது தான், முதன் முதலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் கோஷ்டி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தக் கிரிமினல் கும்பலுக்கும், நடப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொலிசாரே அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் இயந்திரமான யாழ் பொலிஸ் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளும், அது ஒரு கிரிமினல் கும்பல் தான் என்ற ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். "கிரனேட் வைத்திருந்த படியால், அந்தக் குழுவை இலங்கை இராணுவம் தான் உருவாக்கியது." என்று சிவாஜிலிங்கம் ஒரு கருத்தைக் கூறினார். ஆனால், தீவிரமான தமிழ்தேசியவாதிகள் கூட, அவரது கருத்தை பொருட்படுத்தவில்லை. இந்த தகவலை வெளியிட்ட பிரபல சிங்கள தேசிய பத்திரிகையும், பிரபல தமிழ் தேசிய பத்திரிகையும், ஒரே மாதிரித் தான் எழுதி இருந்தன. அப்படியானால், எங்கேயோ இவ்விரண்டு அரசியல் சக்திகளுக்கும் இடையில், "ஆவா குரூப்" அல்லது அது போன்ற கிரிமினல் குழுக்கள் தொடர்பாக, பொதுவான கொள்கை உடன்பாடு ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஒரு தசாப்த காலமாக, யாழ் குடாநாட்டில் கிரிமினல் குழுக்கள் இயங்கும் தகவல், அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்கனவே தெரியும். உண்மை என்னவெனில், இவ்வளவு காலமும் அது பற்றிய செய்திகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தக் கிரிமினல் குழுக்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். (பெரும்பாலானோர் பயத்தில் முறைப்பாடே செய்வதில்லை.) அப்போதெல்லாம், ஸ்ரீலங்கா பொலிஸ் அந்த முறைப்பாடுகளை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு வந்தது. பட்டப் பகலில், பலர் பார்த்திற்கும் போதே, பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் நிலையம் பக்கத்தில் இருந்தாலும், காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருந்தது.

ஊழலுக்கு பேர் போன ஸ்ரீலங்கா பொலிஸ் தான் அப்படி என்றால், ஜனநாயகத் தூண்களான தமிழ் பத்திரிகையாளர்களும் அவற்றை கண்டுகொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. தமது பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் மக்களுக்கு அவற்றை தெரிவிப்பதில்லை. யாழ் குடாநாட்டில், கிரிமினல் கும்பல்கள் அட்டகாசம் செய்வதை, அறிந்தும் அறியாதது போல இருக்க வேண்டிய காரணம் என்ன? ஏனென்றால், அந்தக் கிரிமினல் கும்பல்களுக்கு பின்னணியில், கண்ணுக்குப் புலப்படாத அதிகார பலம் இருந்த காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆவா குரூப் தனது எஜமானர்கள் உத்தரவிட்ட பணியை நிறைவேற்றுவதுடன் மட்டும் நின்று கொள்ளாமல், தன்னிச்சையாக களவு, கொள்ளைகளில் ஈடுபட்டதாலேயே, இன்று பிடிபட்டு கம்பி எண்ணுகின்றனர். கிராமப்புற பண்ணையார்கள் முதல், நகர்ப்புற முதலாளிகள் வரை, தாம் சொன்ன வேலையை செய்வதற்கு மட்டும் தான் அடியாட்களை வைத்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்திற்குள் அடங்கும் கிரிமினல் குற்றங்கள், காவல் துறையினாலும் "மன்னிக்கப் படும்".

அதனால் தான், முன்பு ஆவா குரூப்பின் அட்டகாசங்களை வேடிக்கை பார்த்த பொலிஸ் படை, தற்போது ஓடிப் போய் கைது செய்துள்ளது. அநேகமாக, அவர்களை பயன்படுத்திய எஜமான், தேவை முடிந்ததும் கை விட்டிருக்கலாம். அடி தடியை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள், சுயாதீனமாக சமூக விரோத செயல்களை செய்வதன் மூலம், தம்மை ஒரு "யாழ் பாதாளக் குழு" வாக தக்க வைத்துக் கொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களை வளர்த்து விட்டவர்களே, பிடித்துக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

யாழ் பாதாள உலகக் கும்பல்களின் தோற்றத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், இருபதாண்டுகள் பின்னோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இலங்கையில் தாராள பொருளாதாரக் கொள்கை வந்த பின்னர், அரசு நிறுவனங்களின் ஏக போகம் மறைந்து, தனியார் தொழில் துறைக்கு கதவு திறந்து விடப் பட்டது. குறிப்பாக, அரசு நிறுவனமான இலங்கை போக்குவரத்து சபைக்கு போட்டியாக, தனியார் போக்குவரத்து சேவை ஊக்குவிக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் முதல் வைத்திருந்தவர்கள், ஒரு மினி வேன் வாங்கி சேவையில் ஈடுபடுத்தி சம்பாதித்தனர்.

தனியார் போக்குவரத்து சேவையின் துரித வளர்ச்சியினால், அதில் முதலிட விரும்புவோரின் ஆர்வமும் அதிகரித்தது. ஆனால், எல்லோரிடமும் முதலிட தேவையான பணம் இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "லீஸ் கம்பனிகள்" இலங்கையில் தோன்றின. வங்கியில் கடன் எடுக்க வேண்டுமானால், பத்துக்கும் குறையாத கட்டுப்பாடுகளை கடந்து செல்ல வேண்டும்.

வங்கி கேட்கும் பத்திரங்கள், உறுதிமொழிகளை கொடுப்பதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கும். எல்லாம் இருந்தாலும், கடன் கிடைப்பது நிச்சயமில்லை. ஆனால், லீஸ் கம்பனிகளை பொறுத்த வரையில், அதெல்லாம் தேவை இல்லை. கையில் காசில்லா விட்டாலும், அவர்களிடம் இருப்பதை அடமானம் வைத்துக் கொண்டு, கடன் கொடுத்து வந்தன. வாகனங்கள் மட்டுமல்லாது, விரும்பிய விலையுயர்ந்த பொருள் எதையும் வாங்குவதற்கு, லீஸ் கம்பனிகள் கடன் கொடுத்தன. ஆரம்பத்தில், லீஸ் கம்பனிகளின் சுய ரூபத்தை, அப்பாவி மக்கள் அறிந்திருக்கவில்லை.

அநேகமாக, கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பிரிவினரும் லீஸ் கம்பனி விதித்த வலைக்குள் சிக்கினார்கள். ஒரு மினி வேன் வாங்கி சேவையில் விட்டால், குடும்பத்தின் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பி, அதிலே முதலிட்டார்கள். அந்தோ பரிதாபம்! பலரால், வாங்கிய கடனை குறித்த தவணைக்குள் கட்ட முடியவில்லை. இரண்டு, மூன்று மாதம் தவணைப் பணம் கட்டாமல் பாக்கி வைத்தால், அதற்குப் பிறகு தலையில் துண்டைப் போட வேண்டியது தான்.

லீஸ் கம்பனிகளின் அகராதியில் கருணை என்ற சொல்லுக்கே இடமில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் வந்து சேரா விட்டால், அடியாட்களை அனுப்பி, வாகனத்தை பறித்துக் கொண்டு வந்து விடுவார்கள். யாழ்ப்பாணத்தில் ஆவா குரூப், அது போன்றதொரு அடியாட் படையாக செயற்பட்டிருக்க வேண்டும். (அந்தளவு தூரம் யாராவது விசாரிப்பார்களா என்பது சந்தேகமே.)

ஒவ்வொரு மாவட்டத்திலும், லீஸ் கம்பனிக்கு கிளைகள் இருப்பது போல, அடியாட் படைகளும் இருக்கின்றன. சிங்களம் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில், சிங்கள அடியாட்கள் இருப்பார்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில், தமிழ் அடியாட்கள். லீஸ் கம்பனிகளின் உரிமையாளர்கள், அநேகமாக சிங்கள தரகு முதலாளிகள் தான். அவர்களுக்கு அரசாங்க மட்டத்தில் செல்வாக்கும் இருக்கும். அதனால், லீஸ் கம்பனிகள் அடியாட்களை அனுப்பி, வாகனங்களை பறித்துக் கொண்டு சென்று விட்டால், அதைப் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்ய முடியாது. முறைப்பாடு செய்தாலும், எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தெரியும்.

லீஸ் கம்பனிகளின் கொடுமைகளைப் பற்றி, இலங்கை அரசாங்கத்திடம் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திடமும் முறைப்பாடு செய்ய முடியாது. முதலாளித்துவ பயங்கரவாதம் அரசாளும் நாடுகளில் எல்லாம், லீஸ் கம்பனிகளால் பாதிக்கப் பட்ட மக்கள் இருக்கிறார்கள். "சுதந்திரமான, ஜனநாயக" மேற்கத்திய நாடுகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இலங்கையில் உள்ள லீஸ் கம்பனிகள் பல, உள்ளூர் முதலாளிகளால் நடத்தப் படுவதாக தெரிகின்றது. ஆனால், அவற்றில் எத்தனை நிறுவனங்களில், அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது வெளியே தெரிவதில்லை. அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதால், லீஸ் கம்பனிகளின் சொத்து விபரங்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.

1995 ம் ஆண்டு, ஸ்ரீலங்கா அரச படைகள், யாழ் குடாநாட்டை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பின்னர் தான், அங்கே லீஸ் (Lease) கம்பனிகள் ஊடுருவின. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்தில் அவற்றின் செயல்பாடு எதுவும் இருக்கவில்லை. (சிங்கள மூலதனம் மட்டுமல்ல, மேற்கத்திய மூலதனம் கூட புலிகளின் தமிழீழத்தில் ஊடுருவவில்லை.)

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள், லீஸ் கம்பனிகளுக்கு பெரியதொரு தலையிடியைக் கொடுத்து வந்தன. சிங்களப் பிரதேசங்களில், லீஸ் கம்பனி பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட சிங்கள கடனாளிகள் சிலர், தம்மிடமிருந்த வாகனங்களை புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களுக்கு கொண்டு சென்று விற்று விட்டார்கள். அன்று தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இலங்கையில் வேறெங்கும், குறைந்த விலைக்கு வாகனம் வாங்க முடியாது.

இதனால், தென்னிலங்கை லீஸ் கம்பனிகள், புலிகள் அமைப்புடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. உரிய பத்திரங்களை சமர்ப்பித்து, திருட்டுத் தனமாக கொண்டு வரப் பட்ட வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு, புலிகள் அனுமதித்தனர். அவற்றை அடியாட்களை வைத்து பறிக்க முடியாது. கண்ணியமான முறையில், உரிமையாளர் விபரம் சரி பார்க்கப் பட்ட பின்னரே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வாகனங்களை திரும்பப் பெற முடிந்தது. ஆனால், அது எல்லா சந்தர்ப்பத்திலும் சாத்தியப் படவில்லை. புலிகளும், ஸ்ரீலங்கா சட்டங்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை.

லீஸ் கம்பனிகளின் பிரதானமான வருமானம், கடன் வாங்குவோரின் இயலாமையில் தங்கி உள்ளது. லீஸ் கம்பனிகள் கொடுக்கும் கடனுக்கு, வங்கியை விட அதிக வட்டி வசூலிக்கிறார்கள். கந்து வட்டிக்கு கடன் வாங்குவதாலேயே, பலரால் கடனை அடைக்க முடிவதில்லை. மேலும், வாகனத்தின் பதிவுப் புத்தகத்தை கம்பனியில் அடமானம் வைப்பதால், கடன் கட்டி முடிக்கும் வரையில், லீஸ் கம்பனியே உண்மையான உரிமையாளராக கருதப் படுவார். இதனால், லீஸ் கம்பனிகள் சட்டப்படி கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அப்படி இருந்தும், தவணைப் பணம் கட்டாதவரின் வாகனத்தை பறித்து, இன்னொருவருக்கு ஏலத்தில் விற்று விடுகின்றன. அப்படியான நிலைமை வந்தாலும், கடன் வாங்கியவர் கடன் தொகை முழுவதையும் கட்டி முடிக்க வேண்டும்.

நிச்சயமாக, லீஸ் கம்பனிகளின் அடாவடித் தனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வது எதிர்பார்க்கத் தக்கதே. பலர் தமது சக்திக்கேற்ப எதிர்த்துப் போராடுகின்றனர். சில இடங்களில் பறிக்க வந்தவர்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள். சிலர் வாகனங்களை பகுதி பகுதியாக கழற்றி ஒளித்து வைக்கிறார்கள். அப்படியான கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு, ஆவா குரூப் போன்ற கிரிமினல் கும்பல்கள் பயன்படுகின்றன. தற்போது ஆவா குரூப் முழுவதையும் பிடித்து விட்டதாக கொக்கரிக்கும் பொலிஸ், அவர்களோடு தொடர்புடைய 23 வயது இளம் பெண் ஒருவரை வலைவீசித் தேடி வருவதாக அறிவித்துள்ளனர். ஆவா குரூப் பிடிபட்டவுடன், அவர்கள் இவரை காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

அநேகமாக, அவர்கள் அந்தப் பெண்ணை பிடிக்கப் போவதில்லை. ஏனென்றால், எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, அந்தப் பெண் லீஸ் கம்பனி ஒன்றில் வேலை செய்பவர். அவரது வேலை, கம்பனிக்கும் கிரிமினல் குழுவுக்கும் இடையில் தொடர்பாளராக செயற்படுவது. எந்த இடத்தில், எந்த வாகனத்தை பறிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களை, அவர் வழங்கி வந்துள்ளார். வாகனத்தை பறித்துக் கொண்டு வந்து கொடுக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு, குறிப்பிட்ட தொகை பணம் கமிஷனாக கொடுக்கப் படும்.

ஆவா குரூப்பிடம் இருந்து கிரனேட்கள் அகப்பட்டது ஒரு பெரிய விஷயம் அல்ல. தேவைப் பட்டால், தரகு முதலாளியக் கும்பல் அவர்களிடம் நவீன ஆயுதங்களும் கொடுத்து விட்டிருக்கும். ஏனென்றால், யாழ் குடாநாட்டில் இன்னும் சில இடங்களில், மக்களின் போர்க் குணாம்சம் வலுவாக உள்ளது. குறிப்பாக, தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்த, பாட்டாளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில், சாதாரண கிரிமினல்கள் ரவுடித்தனம் காட்ட முடியாது. ஆவா குரூப்பாக இருந்தாலும், ஆவன்னா குரூப்பாக இருந்தாலும், ஊர் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு பிடித்துக் கட்டிப் போட்டு விடுவார்கள். அப்படியான கிளர்ச்சிகரமான பகுதிகளை சமாளிப்பதற்கு, ஆயுத பலத்துடனான அடியாட் படையை அனுப்ப வேண்டிய தேவை, தரகு முதலாளிகளுக்கு உள்ளது.

முப்பதாண்டு கால யுத்தத்தால் பாதிக்கப் பட்ட யாழ்ப்பாணத்தில், இது போன்ற கிரிமினல் குழுக்கள் இயங்குவது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். "முதலாளித்துவம் எப்போதும் போர்களை விரும்புகிறது" என்பது ஒரு நவீன கால உலக யதார்த்தம். போர் நடக்கும் காலத்தில், ஆயுத விற்பனை மூலம் இலாபம் சம்பாதிக்கலாம் என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல. போரில் அனைத்தையும் இழந்து, மீளாத் துயருக்குள் சிக்கி வாடும் மக்களை கடன் என்ற பொறிக்குள் தள்ளி விடுவதும் இலகு. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவே, அந்த நாட்டு மக்களிடம் உள்ள கடனில் தான் உயிர் வாழ்கின்றது. 

ஒரு மனிதரிடம் இருக்கும் கடன், முதலாளிகளின் கைகளில் பணமாக புரள்கின்றது. ஒரு பக்கத்தில் மக்களின் கடன் பெருகிக் கொண்டிருக்கையில்,மறு பக்கத்தில் அது மூலதனமாக திரட்சி அடைகின்றது. பொருளாதார தத்துவங்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக் கடினமானது. ஆனால், அவர்கள் தான் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். "கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று பாடிய கம்பர், அதனை "இலங்கை மக்கள்" என்று திருத்தி எழுதி இருக்க வேண்டும்.

Monday, January 06, 2014

மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?

(ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (மூன்றாம் பாகம்)

உலகில் முதலாளித்துவ உற்பத்தி தோன்றிய காலம் முதல், இரண்டு எதிர்நிலை வர்க்கங்கள் இருந்து வந்துள்ளன. வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும், ஆண்டு அனுபவித்து வாழும், மேட்டுக்குடி வர்க்கம் ஒரு புறம். அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், பாட்டாளி வர்க்கம் மறுபுறம். பல நாடுகளில், கல்வி, உத்தியோகம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற உரிமைகள், மேட்டுக்குடியினர் மட்டுமே அனுபவிக்கும் ஆடம்பரங்களாக உள்ளன. 

பணம் இல்லாத காரணத்தால், கல்வி மறுக்கப் பட்டவர்கள், கல்வியறிவு இல்லாததால், கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகம் பார்க்க முடியாதவர்கள் ஏராளம். பாட்டாளி வர்க்கத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு சுதந்திரம் மறுக்கப் படும் பொழுது, பணத்தின் அடிப்படையில் நியாயம் கற்பிக்கப் படுகின்றது. நமது நாடுகளில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் போனதேன்? வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத காரணம் என்ன? “அவர்களிடம் பண வசதி இல்லை” என்று பதில் கூறலாம். ஆனால், அது ஒரு தேசத்தின் பிரஜைக்கு மறுக்கப் படும் சுதந்திரம் ஆகாதா?

இன்றைக்கும் பலர் ஸ்டாலினை வெறுக்கிறார்கள். "சர்வாதிகாரி, கொடுங்கோலன், பல இட்சம் பேரை படுகொலை செய்தவன்," என்று தமது வெறுப்புக்கு காரணம் கூறுகின்றனர். அப்படிக் கூறுபவர்களின் வர்க்கப் பின்னணி என்ன? அவர்கள் ஒன்றில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள், அல்லது வசதியான உயர் மத்தியதர வர்க்கத்தினராக இருப்பார்கள். அது ஒன்றும் தற்செயல் அல்ல. அவர்களது வர்க்கக் குணம், அவர்களை அப்படித் தான் பேச வைக்கும். ஸ்டாலின் கால சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பது, அவர்களுக்குத் தான் தெரியும். (அறிவுஜீவிகள் ஆச்சே, தெரியாமல் இருக்குமா?) ஆனால், எப்போதும் ஒரு பாதி உண்மையை மட்டுமே பேசுவார்கள். மறுபாதி உண்மை எது?

ஒரு நாட்டில் சோஷலிசத்தை கட்ட வேண்டுமென்றால், அங்கே முதலில் வர்க்கப் போராட்டம் நடக்க வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டு வரப் பட வேண்டும். அதன் அர்த்தம், இதுவரை காலமும் உலகத்து இன்பங்களை எல்லாம் அனுபவித்து வந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் விசேட சலுகைகள் யாவும் பறிக்கப் படும். அவர்கள் பிற வர்க்கங்களிடமிருந்து எந்த வகையிலும் மேலானவர்கள் அல்ல.

பாட்டாளி வர்க்க தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், சுதந்திரம் பறிக்கப் பட்டு, தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப் பட்டனர். முந்திய சார் மன்னனின் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, முதலாளிகள், பணக்காரர்கள், நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் போன்று, மக்களை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அத்தனை பேரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.

“கொஞ்சம் பொறுங்கள்… தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்ட எல்லோரும் முதலாளிகளோ, அல்லது நிலப்பிரபுக்களோ அல்ல. ஏராளமான அரசியல் கைதிகளும் இருந்தனர்.” என்று யாராவது குறுக்கிட்டுக் கேள்வி கேட்கலாம். 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பின்னர், வலதுசாரிக் கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப் பட்டன. அவர்கள் முதலாளித்துவ அமைப்பை நியாயப் படுத்துவதை தவிர, வேறெந்த அரசியலும் தெரியாதவர்கள். அதே போன்று, குறுந் தேசியவாதிகள், இஸ்லாமிய ஜிகாத்தியர்கள் போன்ற அரசியல் சக்திகள் இயங்குவதும் தடுக்கப் பட்டது.

அக்டோபர் புரட்சி நடந்த காலத்தில் சில இடதுசாரி கட்சிகளும் இயங்கின. அவர்களில் ஒரு பகுதியினர், விரும்பியோ, அல்லது கட்டாயத்தின் பேரில், போல்ஷெவிக் கட்சியில் இணைந்து கொண்டார்கள். இன்னொரு பிரிவினர் சுயாதீனமாக இயங்கினார்கள். ஆகையினால், ஆயுத பலம் கொண்டு அடக்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் லெனின் பதவியில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்தில், அரசியல் எதிர்ப்பியக்கம் எதுவும் இயங்கவில்லை.

மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், சமூகத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்யப் பட்டு, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் படவில்லை. நிறையப் பேர், காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்களிடம் இருந்த செல்வங்களை துறந்து விட்டு, சாமானியர்களின் வாழ்க்கையை பின்பற்றினார்கள். அதே போன்று, மேட்டுக்குடியில் பிறந்த பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்லவும், ஏதாவது ஒரு வேலை தேடி வாழவும் முடிந்தது. ஆனால், அப்படியானவர்கள் சமூகத்தில் தங்களது மேல்தட்டு குடும்பப் பின்னணியை மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். அதைச் சொல்ல வெட்கப் பட்டார்கள். தங்களது உயர்குடிப் பிறப்பு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் தினந்தோறும் செத்துப் பிழைத்தார்கள்.

நமது சமுதாயத்தில், பணச் செருக்கு, பகட்டு, உயர்குடிப் பெருமை, அந்தஸ்து பற்றி சிலாகித்து பேசுவோர் எத்தனை? ஒரு உயர்சாதியில் பிறந்தவர், அதற்காக வெட்கப் படுவதில்லை. மாறாக, அதனை ஒரு பெருமைக்குரிய விடயமாக அறிவித்துக் கொள்கிறார். ஆண்ட பரம்பரை கதை பேசி அகம் மகிழ்வோர் எத்தனை பேர்? சிலர் தமது பரம்பரைப் பெருமை பேசி,  உயர்குடியில் பிறந்ததை நிரூபிக்கின்றனர். 

பணம் படைத்தவர்கள், தங்களது ஆடம்பரத்தை விளம்பரம் செய்வதற்காக விழாக்களை கொண்டாடுகிறார்கள். அவர்கள் எல்லோரும், சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் வாழ வேண்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? தங்களது "உயர்ந்த சமூக அந்தஸ்தை", பகிரங்கமாக வெளியே காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். கனவில் கூட பரம்பரைப் பெருமை பேச மாட்டார்கள். உயர்சாதியில் பிறந்ததற்காக வெட்கப் பட்டு, தங்களது சாதியை மறைத்துக் கொள்வார்கள். 

நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர், ஒருவர் தனது சொந்த ஊரை விட்டு, தொலை தூர கிராமம் ஒன்றில் குடியேறி விட்டால், தனது பூர்வீகத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த ஒருவர், உயர் சாதியில் பிறந்ததாக பொய் கூறி, தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. ஸ்டாலின் காலத்தில், அது தலைகீழாக நடந்தது. அதாவது, சொந்த ஊரை விட்டு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற உயர்குடிப் பிறப்பாளர்கள், தங்களது பூர்வீகத்தை மறைத்தனர். தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பிறந்ததாக பொய் சொன்னார்கள். ஏனென்றால், அப்படிச் சொல்வது தான் பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்ட காலம் அது.

1930 க்கு முன்னர், சோவியத் நாடு முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. அரசாங்கம், குடிமக்களின் விபரங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. அதிகாரிகள் மட்டத்திலும், இலஞ்சம், ஊழல் மலிந்திருந்தது. அதனால், ஒரு கற்பனையான பெயரை சூட்டிக் கொண்டு, அல்லது பிறந்த ஊரை மாற்றி, போலி ஆவணங்கள் வாங்க முடிந்தது. போலி பிறப்புச் சான்றிதழில், அல்லது விண்ணப்பப் படிவங்களில், தந்தையின் தொழில் எது என்று கேட்கப் பட்ட இடத்தில், “கூலி விவசாயி” அல்லது “கூலித் தொழிலாளி” என்று போட்டு நிரப்பினார்கள். ஏனென்றால், சமூகத்தில் அதற்குத் தான் மதிப்பு அதிகம்!

ஸ்டாலின் காலத்தில்,  "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டது. அதாவது, சமூகத்தில் உயர்த்தப் பட்டவர்கள், தாழ்த்தப் பட்டார்கள். ஆண்டாண்டு காலமாக  தாழ்த்தப் பட்டவர்கள், உயர்த்தப் பட்டார்கள். "பணம் என்பது அந்தஸ்தின் குறியீடு அல்ல, அது அவமானத்தின் சின்னம்! அது தான் ஸ்டாலினிசம்!!" 

பணக்கார குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள், "எனது அப்பா ஊரறிந்த பணக்காரன்" என்று சொல்லிக் கொள்ள வெட்கப் பட்டார்கள். வெட்கம் மட்டுமல்ல, மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், பாடசாலைகளில் அவர்களது (பணக்கார) குடும்பப் பின்னணி தெரிய வந்தால், மற்றைய பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப் பட்டனர்.வேலை செய்யுமிடத்தில் தெரிய வந்தால், பிற தொழிலாளிகளால் அரசியல் பொலிசிடம் பிடித்துக் கொடுக்கப் பட்டார்கள். 

மேட்டுக்குடியில் பிறந்தவர்களுக்கு, பல சலுகைகள் மறுக்கப் பட்டன. பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு மட்டுமே, எல்லா விதமான சிறப்புரிமையும் கிடைத்தது. பாடசாலைகளில் இருந்த சாரணர் இயக்கமான “முன்னோடிகள்” (Pioneer) அமைப்பில் சேருவதற்கான உரிமை, மேட்டுக்குடி பிள்ளைகளுக்கு மறுக்கப் பட்டது. ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் காலத்தில், அதில் சேர்ந்திருந்தால் தான், பருவ வயதில் “கொம்சொமோல்” (Komsomol) எனும் மாணவர் அமைப்பில் சேரும் தகுதி வாய்த்தது. அவர்களுக்குத் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் சந்தர்ப்பம்  கிடைத்தது. (ஏழைக் குடும்பத்தில், பாட்டாளி வர்க்கத்தில் பிறந்த பிள்ளைகள், இயற்கையாகவே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டனர்.)

படிப்பில் சிறந்த மாணவர்கள், பிற்காலத்தில், உயர்கல்வியை முடித்து உத்தியோகம் தேடும் காலத்திலும், கொம்சொமோல் தகைமை தேவைப் பட்டது. அதனால் தான், பல உயர் குடிப் பிறப்பாளர்கள், தங்கள் குடும்பப் பின்னணியை மறைத்து பொய் சொன்னார்கள். அது மட்டுமல்ல, அப்படியானவர்கள் மார்க்சியத்தை ஐயந் திரிபற கற்று, சிறந்த  கம்யூனிஸ்டாக நடந்து காட்டினார்கள். தமது வேலைத் தலங்களில் இருந்த “வர்க்க எதிரிகளை”, அவர்களே முன் நின்று காட்டிக் கொடுத்தார்கள். 

மேட்டுக்குடியில் பிறந்த பெண்களாக இருந்தால், அவர்களுக்கு இன்னொரு தெரிவு இருந்தது. என்ன பாடுபட்டாவது, பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த ஆண் ஒருவரை, தேடிப் பிடித்து திருமணம் செய்து கொண்டதன் மூலம், தங்களது வர்க்க அடையாளத்தை தூய்மைப் படுத்திக் கொண்டார்கள்.  சிலர் காதலித்து மணம் முடித்தாலும், நிறையப் பேர் பத்திரத்திற்காக மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். பாட்டாளி வர்க்க அடையாளம், அவர்கள் விரும்பிய கல்வி கற்கவும், தொழில் புரியவும் தேவையான அடிப்படைத் தகுதியாக இருந்தது. புரட்சிக்கு முன்னர், ஒரு கோடீஸ்வரனின் செல்ல மகளாக இருந்திருந்தாலும், தற்போது ஒரு கூலித் தொழிலாளியின் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டாள். என்ன செய்வது? காலம் மாறி விட்டது.

நமது நாட்டில் யாராவது ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, “நான் பணக்கார குடும்பத்தில் பிறந்ததே பாவம்…” என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சோவியத் யூனியனில் அந்த அதிசயம் நடந்தது. நமது சமுதாயத்தில், வறுமைப் பட்ட குடும்பப் பின்னணி கொண்ட பிள்ளைகள், மிகவும் கஷ்டப் பட்டு போராடி முன்னுக்கு வர வேண்டியிருக்கும். சோவியத் சமுதாயத்தில், மேட்டுக்குடியினருக்குத் தான் வாழ்க்கை ஒரு சுமையாக, ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. கல்வி, உத்தியோகம் போன்ற சலுகைகள் மறுக்கப் பட்டதால், மேட்டுக்குடியினரின் செருக்கு பெருமளவு அடங்கி விட்டது. உயர் வர்க்க மனோபாவம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தால், அவர்களுக்கு கிடைத்த வீட்டு வசதி, அதையும் இல்லாமல் செய்து விட்டது.

சோவியத் நகரங்களில், மக்களின் வீட்டு வசதியை, “(2 ம்) உலகப் போருக்கு முன், போருக்குப் பின்” என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1917 புரட்சியில் இருந்து, 2 ம் உலகப்போர் வரையில், நகரங்களில் இருந்த எல்லா வீடுகளிலும், கூட்டுக் குடும்பங்கள் குடியிருந்தன. 2 ம் உலகப் போருக்குப் பின்னர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் என தனித் தனியாக வீடுகள் கிடைத்தன. புரட்சிக்கு பிந்திய வீட்டு வசதி, கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அனைத்து பிரஜைகளும் ஏற்றத் தாழ்வின்றி, சமத்துவமாக, சகோதரத்துவத்துடன் வாழ நிர்ப்பந்தித்தது.

நமது நாட்டில், கூட்டுக் குடும்ப முறையை பற்றி பெருமையாகப் பேசும், பழமைவாதிகளில் பெரும்பான்மையானோர், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அவர்களது கூட்டுக் குடும்பம், நிலப் பிரபுத்துவ அடிப்படை கொண்டது. இரத்த உறவு கொண்ட உறவினர்கள், தனித் தனி குடும்பங்களாக, ஆனால் ஒரே வீட்டில் கூடி வாழ்ந்தார்கள். சோவியத் யூனியனிலும், கிட்டத்தட்ட அதே மாதிரியான கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிலவியது.

ஒரு உண்மையான கூட்டுக் குடும்ப சமூகம், அன்றைய சோவியத் நாட்டில் இருந்தது.ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத, வெவ்வேறு வர்க்கப் பின்னணியை கொண்டவர்கள், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது தான் விசேஷமானது. பல்வேறு மொழிகளைப் பேசும், இன, மத வேறுபாடு கொண்ட மக்களும், ஒரே வீட்டில் ஒன்றாக கூடி வாழ்ந்தார்கள். அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து புதிதாக குடியேறி இருந்தாலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். இதைக் கேள்விப் படும் சிலர், "என்ன கொடுமை இது, சரவணா!" என்று புலம்பலாம். 

எங்கள் ஊரில், மிகவும் வசதியான உத்தியோகஸ்தரின் குடும்பமும், வறுமையான கூலித் தொழிலாளியின் குடும்பமும், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், ஒரே வீட்டில் வாழ்ந்ததை கண்டிருப்போமா? அப்படி ஒரு காட்சியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? “இன்னும் ஆயிரம் வருடம் போனாலும் அது நடக்காது” என்று சிலர், இறுமாப்புடன் கேலியாக சிரித்துக் கொண்டே பதில் சொல்வார்கள்.

நாளைக்கு அப்படி ஒரு நிலைமை வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், இன்றைக்கு பலர் ஸ்டாலினையும், கம்யூனிசத்தையும் வெறுக்கிறார்கள். கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என்னென்ன காரணங்களை அடுக்கினாலும், அவர்களது ஆழ்மனதில் இருப்பதெல்லாம், அடித்தட்டு மக்கள் மேலான அச்சம் தான். இன்று சேரியில் வாழும் ஏழை, நாளை பணக்காரனுடன் ஒரே பங்களாவில், ஒரே குடும்பமாக வாழ்வது என்பது, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவாக இருக்கும்.

1917 புரட்சிக்குப் பின்னர், வேலை தேடி நகரங்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உயர்கல்வி கற்க விரும்பிய மாணவர்களும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களில் வந்து குவிந்தார்கள். நகரங்களில் தங்குவதற்கு வீடு கிடைப்பது தட்டுப்பாடாக இருந்தது. ஒரு வசதியான குடும்பம், நான்கைந்து படுக்கையறைகள் கொண்ட பெரிய வீட்டில் வாழ்ந்தால், அது அவர்களது தேவைக்கு அதிகமானதாக கருதப் பட்டது. அந்தக் குடும்பம் ஒரு படுக்கையறையை பாவித்துக் கொண்டு, மற்ற அறைகளை பிற குடும்பங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும். அந்த வீட்டில் உள்ள சமையலறை, குளியலறை போன்றன எல்லா குடும்பங்களுக்கும் பொதுவாகும். இதனால் சிலர், முன்கூட்டியே தமது உறவினர்கள், நண்பர்களை கொண்டு வந்து குடியமர்த்தினார்கள்.

மொஸ்கோ, லெனின் கிராட் (சென் பீட்டர்ஸ்பேர்க்) போன்ற பெரிய நகரங்களில், ஏற்கனவே இருந்த பெரிய மாடிக் கட்டிடங்களை அரசு பொறுப்பேற்றது. வீடு தேடுவோரை அவற்றில் குடியமர்த்தியது. புதிதாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப் பட்டாலும், அதில் தனித் தனி வீடுகள் இருக்கவில்லை. ஒவ்வொரு மாடியிலும், பெரிய மண்டபங்களைக் கொண்டிருந்தன. அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப் பட்டு, படுக்கையறைகளாக்கப் பட்டன. ஒவ்வொரு படுக்கையறையும் தனித் தனி குடும்பங்களுக்கு ஒதுக்கப் பட்டன. எல்லாக் குடும்பங்களும், பொதுவான சமையலறை ஒன்றை பயன்படுத்த வேண்டும். குளியலறைகள், மல சல கூடங்களும் அனைவருக்கும் பொதுவாக இருந்தன.

சோவியத் நாட்டு உழைக்கும் வர்க்க மக்களுக்கான குடியிருப்புகள்.
சோஷலிச கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
இது போன்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை, எல்லோருக்கும் சரிப் பட்டு வராது. அங்கு வாழ்ந்தவர்கள், இட வசதி குறித்து பிரச்சினைப் பட்டார்கள். வேறு வசதியான இடத்திற்கு மாறலாம் என்ற நப்பாசையில், பக்கத்து வீட்டு குடும்பத்துடன் சண்டை பிடித்தார்கள். சமையலறையில் சமைப்பது முதல், துணி துவைப்பது வரையில் போட்டி இருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் திருட்டு போயின. குடியிருப்பாளர்கள் ஒருவரை ஒருவர் திருட்டுக் குற்றம் சாட்டினார்கள். எல்லோரும் சமமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தாலும், தமக்கென தனித்துவம் பேண விரும்பினார்கள். அது இயற்கையானது. 

அந்தக் கால சோவியத் வாழ்க்கையை நினைத்து பரிதாபப் படுபவர்கள், இன்று மேற்கத்திய நாடுகளில் உள்ள அகதி முகாம்களை சென்று பார்வையிட வேண்டும். இரண்டுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சோவியத் அரசு, வேண்டுமென்றே மக்களை கூட்டுக் குடும்பமாக வாழ நிர்ப்பந்தித்தது. அதன் மூலம், மக்கள் கூடி வாழும் கம்யூனிச வாழ்க்கை முறைக்கு பழக்கப் படுவார்கள் என்று நம்பியது. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற தத்துவம் வலியுறுத்தப் பட்டது. ஒவ்வொருவரும் “நான்” என்ற அகந்தையை துறந்து, “நாங்கள்” என்ற உணர்வைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.

சோவியத் அரசு எதிர்பார்த்தது போன்று, மக்களிடையே சமத்துவமும், சகோதரத்துவமும் உருவானது. பலரிடம் இயற்கையாக குடிகொண்டிருந்த, சுயநலம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட குணங்கள் படிப்படியாக மறைந்தன. மெத்தப் படித்து மருத்துவராக, பொறியியலாளராக அல்லது கணக்காளராக தொழில் செய்பவரின் குடும்பமும், எழுத்தறிவற்ற கூலி உழைப்பாளியின் குடும்பமும், அருகருகே வாழும் நிலைக்கு தள்ளப் பட்டன. இதனால், வர்க்கங்களுக்கு இடையிலான கசப்புணர்வு மறைந்து, மனித நேயம் வளர்ந்தது. சோவியத் சமுதாயத்தில், யாருமே கூட்டுக் குடும்ப வாழ்வை தவிர்க்க முடியவில்லை. ஸ்டாலினின் மனைவியின் சகோதரனது குடும்பமும், முகாம் போன்ற வீடொன்றில் வாழ்ந்து வந்தது.

2ம் உலகப் போருக்குப் பின்னர், தனித் தனி வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப் பட்டன. அளவில் சிறியதாக இருந்தாலும், மேற்கு ஐரோப்பாவில் உள்ளதைப் போன்று, அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தன. காலப்போக்கில் எல்லாக் குடும்பங்களுக்கும் தனித் தனி வீடு கிடைத்தாலும், கூட்டுக் குடும்பமாக வாழும் போது இருந்த சந்தோஷம் இருக்கவில்லை. வேலை விட்டு வந்தால், பொழுது போவதே தெரியாது. கார்ட்ஸ், டொமினோ, செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு எந்த நேரமும் யாராவது ஒருவர் இருப்பார். பண்டிகைகள், கொண்டாட்டம் என்றால், வீடு முழுக்க கலகலப்பாக இருக்கும்.

குறிப்பாக, சிறுவர்களுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி கும்மாளம் அடிக்க முடிந்தது. எல்லா வீடுகளும் திறந்து இருந்ததால், ஓடிப் பிடித்து, ஒளித்துப் பிடித்து விளையாட தாராளமான இடம் இருந்தது. பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகள் மேல் பாசமாக இருந்தார்கள். அதனால் குழந்தைகளை பராமரிப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தது.

ஸ்டாலின் காலத்தில், சோவியத் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி மேலும் பல தகவல்கள், "The Whisperers, Private Life in Stalin's Russia" என்ற நூலில் விபரமாக எழுதப் பட்டுள்ளன. 

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1. ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 
____________________________________________________________________________________________

 ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

Saturday, January 04, 2014

நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்

(இரண்டாம் பாகம்)


உலக வரலாற்றில் முதல் தடவையாக, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்பட்ட போதிலும், ஒரு பின்தங்கிய விவசாய நாடான ரஷ்யாவை சோஷலிச நாடாக்க முடியுமா என்பதில் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. “முதலில் எமது நாட்டில் சோஷலிசம்" நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வாதிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தை தக்க வைத்த பின்னர், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, சோஷலிசத்தை கொண்டு வர வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டினார். ஸ்டாலின் தனி ஒரு ஆளாக செயற்படவில்லை. ஸ்டாலினுடன், மத்திய குழுவை சேர்ந்த இன்னும் இரண்டு தலைவர்கள் கூட்டுச் சேர்ந்து குழுவாக இயங்கினார்கள். ஸ்டாலின் குழு, ட்ராஸ்கி குழு, புகாரின் குழு என்பன, தத்தமது கொள்கைகளை விளக்கி, தட்டச்சு செய்த பிரதிகளை கட்சி உறுப்பினர்களுக்கு விநியோகித்தார்கள். இந்தக் குழுக்களுக்கு இடையிலான விவாதங்கள், மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக நடந்தன.

ஸ்டாலின் எழுதிய “லெனினிசத்தின் அடிப்படைகள்" ஒரு வரலாற்று முக்கியமான ஆவணம் ஆகும். 1920 ம் ஆண்டு எழுதப் பட்டாலும், பிற்காலத்தில் சில திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்தது. ஸ்டாலினும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத கடும்போக்காளராக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப, ஸ்டாலின் சில கலாச்சார விட்டுக் கொடுப்புகளை செய்தார். குறிப்பாக, 1935 ம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்டாலினின் சோஷலிசக் கட்டுமானம் காரணமாக பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்தது. மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தொழிற்துறை புரட்சி காரணமாக ஐம்பது ஆண்டுகளில் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலினின் சோவியத் யூனியன் பத்து வருடங்களுக்குள் எட்டியிருந்தது.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஒரு காலத்தில் மேட்டுக்குடியினர் மட்டுமே அனுபவித்த உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது. மேட்டுக்குடியினர் ஆடம்பர வாழ்க்கை வசதிகளை அனுபவித்த காலத்தில், அந்தப் பொருட்களின் விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு இருந்தன. ஆனால், ஸ்டாலின் காலத்தில், எல்லோரும் வாங்கக் கூடியதாக, ஆடம்பர பாவனைப் பொருட்களின் விலைகள் குறைந்திருந்தன. உணவுப் பொருட்களும், பாவனைப் பொருட்களும் தாராளமாக கிடைத்து வந்ததால், அவற்றை விற்பனை செய்வதற்கு புதிதாக பல்பொருள் அங்காடிகள் திறக்கப் பட்டன. நாம் இன்றைக்கு மேலைத்தேய நாகரீகமாக கருதும் “சூப்பர் மார்க்கட்" , சோவியத் யூனியனில் 1930 ம் ஆண்டே வந்து விட்டது. நாடு முழுவதும், பெரிய, சிறிய நகரங்களில் எல்லாம் சூப்பர் மார்க்கட்டுகள் உருவாகின.

சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததால், வசதி வாய்ப்புகள் அதிகரித்தன. அதனால் கொண்டாட்டங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகரித்தன. ஆரம்ப கால புரட்சியாளர்கள் பிற்போக்கு கலாச்சாரமாக ஒதுக்கித் தள்ளியதைக் கூட, அரசியலற்ற சாதாரண மக்கள் அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை ஸ்டாலின் வழங்கினார். உதாரணத்திற்கு, 1917 புரட்சிக்குப் பின்னர், திருமணத்தில் மோதிரம் மாற்றிக் கொள்வது தடை செய்யப் பட்டது. புரட்சியாளர்கள் அதனை பிற்போக்கு கிறிஸ்தவ கலாச்சார சின்னமாக கருதினார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில் அது அனுமதிக்கப் பட்டது. அதனால் தங்க மோதிரங்கள் செய்து கொடுக்கும் நகைக் கடைகளும் தோன்றின. அதே போன்று, நடனம் ஆடுவது மேட்டுக்குடி கலாச்சாரம் என்று கருதிய புரட்சியாளர்கள், எல்லா வகை நடனங்களையும் தடை செய்திருந்தார்கள். ஸ்டாலின், நடனத்தை அனைத்து மக்களினதும் பொழுதுபோக்கு உரிமையாக மாற்றினார். அதனால், நாடு முழுவதும் நடனப் பள்ளிகள் தோன்றின.

சோவியத் மக்களின் கலாச்சார மறுமலர்ச்சியின் ஒரு கட்டமாக, பிரமாண்டமான அணிவகுப்புகளும், ஸ்டாலினை மையப் படுத்திய தலைமை வழிபாடும் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டன. அவற்றில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தார்கள். நமது நாடுகளில், கோயில்/தேவாலய திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களின் மனநிலையோடு அதனை ஒப்பிடலாம். ஆனால், “ஸ்டாலினை மையப் படுத்திய தலைமை வழிபாடு” குறித்து அதிக கவனமெடுத்து உயர்த்திப் பிடித்த மேலைத்தேய புத்திஜீவிகள், அதற்குப் பின்னால் இருந்த பொது மக்களின் பண்பாட்டுக் கூறுகளை கண்டுகொள்வதில்லை. அதாவது, அத்தகைய அரசியல் நிகழ்வுகள், பொது மக்களிற்கு உற்சாகத்தை கொடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களில்  ஒரு பகுதி மட்டுமே. ஆனால், மேற்குலகில் வாழ்ந்தவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.  “ஸ்டாலினிச சர்வாதிகாரம்" மட்டுமே அவர்களின் கண்களை உறுத்தியது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிற்துறை வளர்ச்சியை, ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பத்து வருடங்களில் ஈடுகட்டின. ஒரு கட்டத்தில், சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை முந்திக் கொண்டு சென்றது. சோவியத் ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது. அந்த பொருளாதார அதிசயம் எப்படி சாத்தியமானது? எவ்வாறு ஒரு பின்தங்கிய விவசாய நாடு, ஒரு குறுகிய காலத்தில் முன்னேறிய தொழிற்துறை வல்லரசாக மாறியது? ஸ்டாலின் தீர்க்கதரிசனத்துடன் முன்மொழிந்த “ஒரே நாட்டில் சோஷலிசம் சாத்தியம்” என்ற நிலைப்பாடு மிக முக்கியமானது.

இன்றைக்கு, ஒரு உப கண்டம் என்று அழைக்கப் படும் இந்தியாவில் கூட, மேற்கத்திய மூலதனம் இல்லாமல் பொருளாதாரத்தை நடத்துவதை, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலினின் சோவியத் யூனியன், மேற்கத்திய நாடுகளிடம் ஒரு சல்லிக் காசு கூட கடன் வாங்காமல், தனது சொந்தப் பலத்தில் பொருளாதாரத்தை கட்டியது. மேற்கத்திய நாடுகளில் பெரிதும் வெறுக்கப் பட்ட, கிராமங்கள் தோறும் அமைக்கப் பட்ட கூட்டுத்துவ பண்ணைகள் (Collective farms), பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. 

ஸ்டாலின், ரஷ்ய பொருளாதாரத்தின் மிகப் பெரிய தொழில் துறையான விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்தார். விவசாயம், பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொன்னால் அது மிகையாகாது. கூட்டுறவுப் பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாயிகள் உற்பத்தியை பெருக்கினார்கள். கிராமங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்த படியால், நகரங்களில் தொழிற்சாலைகள் ஒழுங்காக இயங்கத் தொடங்கின. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டதால், நகரங்களில் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அது நகர்ப்புற தொழிலாளர்களை வேலைக்கு செல்ல ஊக்குவித்தது.

மேற்குலகில் வெறுக்கப்பட்ட, “ஸ்டாலினிச சர்வாதிகாரம்” நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்த நிலைமை வேறு. பொருட்களின் விலையை சந்தை தீர்மானித்த காலத்தில், கிராமப்புற விவசாய உற்பத்தியாளர்கள் இலாபமடைந்தனர். ஆனால், நகர்ப் புறங்களில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். சோவியத் அரசு யாருடைய பக்கம் நின்றிருக்க வேண்டும்? விவசாய உற்பத்தியாளர்களுக்கு இலாபம் கிடைப்பது முக்கியமா? அல்லது நகர்ப்புற தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பது முக்கியமா?

ஏறச் சொன்னால் குதிரைக்கு கோபம் வரும், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் வரும். நிச்சயமாக, இது இலகுவாக தீர்க்கக் கூடிய பிரச்சினை அல்ல. எத்தகைய அரசாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இந்தப் பிரச்சினையை சமாளித்திருக்க முடியாது. நாட்டுப்புறங்களில் கூட்டுறவுப் பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாய உற்பத்தியை பெருக்கலாம். ஆனால், பெருமளவு நிலங்களும், கால்நடைகளும் “கூலாக்”(Kulak) என்றழைக்கப் பட்ட பணக்கார விவசாயிகளிடம் இருந்தன. (கூலாக் என்ற சொல், ஊரில் இருந்த பணம் படைத்தவர்கள் எல்லோரையும் சுட்டிக் காட்ட பயன்பட்டது. நிலவுடமையாளர்கள் மட்டுமல்லாது, சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களும், கிராமத்து மக்களால் கூலாக் என இனம் காணப் பட்டனர்.)

இதுவரை காலமும், தமது சொத்துக்களை வைத்திருந்து ஆதாயமடைந்த கூலாக்குகள், கூட்டுறவுப் பண்ணை முறையை எதிர்த்தார்கள். ஒத்துழைக்க மறுத்தார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால், தம்மிடம் இருந்த சொத்துக்களை அழித்தார்கள், கால்நடைகளை வெட்டிக் கொன்றார்கள். தமக்குக் கிடைக்காதது, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற குறுகிய மனோபாவத்துடன் நடந்து கொண்டனர். ஏற்றத் தாழ்வான சமுதாய அமைப்பில் அது எதிர்பார்க்கக் கூடிய ஒன்று தான். இந்திய, இலங்கைக் கிராமங்களில் வசதியாக வாழும் பண்ணையார்கள், பணக்கார விவசாயிகள் கூட, தமது சொத்துக்களை ஊரில் உள்ள எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஊரில் ஏற்றத் தாழ்வு நீங்கி விட்டால், ஏழைக் குடியானவர்கள் மேல் நாட்டாண்மை செலுத்த முடியுமா? உயர் சாதிப் பெருமை பேச முடியுமா?

கூலாக்குகளை ஒரு வர்க்கமாக அறிவித்த ஸ்டாலின், கூலாக் வர்க்கத்தை இல்லாமல் செய்வதற்கான வர்க்கப் போராட்டம் அவசியம் என்பதை தெளிவு படுத்தினார். கிராமங்கள் தோறும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டன. கூடிய சீக்கிரத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவுப் பண்ணைகள் நிறுவப் பட வேண்டும். அதற்கு ஒத்துழைக்க மறுக்கும் கூலாக்குகள் வெளியேற்றப் பட வேண்டும்.

சோவியத் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. மார்க்சிய தத்துவம் பற்றி, அதற்கு முன்னர் கேள்விப் படாதவர்கள் கூட கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். சிலர் பதவிக்காக, பகட்டுக்காக கட்சியில் சேர்ந்தார்கள். இருந்த போதிலும், புதிதாக சேரும் உறுப்பினர்களின் வர்க்கப் பின்னணி கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் கூலித் தொழிலாளியின் பிள்ளையாக இருந்தால், அல்லது மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், பல இடங்களில் அதுவே போதுமான தகைமையாக கருதப் பட்டது. வறுமையான குடும்பங்களில் இருந்து வந்த புத்திசாலி இளைஞர்கள் பலர், பிற்காலத்தில் கல்வியறிவு பெற்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக வந்தார்கள்.

நமது நாடுகளில் கூட, வறுமைப் பட்ட இளைஞர்கள் மனதில், அந்த வர்க்கத்திற்கே உரிய  கிளர்ச்சிகர மனப்பான்மை இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதற்கு வடிகால் தேடிக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஈழப் போராட்டம் நடந்த காலத்தில், ஊரில் இருந்த பணக்கார விவசாயிகள் (தமிழ் கூலாக்?) பலர், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள்.   புலம்பெயர்ந்த பணக்கார விவசாயக் குடும்பங்கள், தமது வீடுகளில் உறவினர்களை இருத்தி விட்டு சென்றார்கள். சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப்படி ஒரு ஏற்பாடு செய்யா விட்டால், ஊரில் இருக்கும் ஏழைத் தமிழர்கள், அந்த சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வார்கள் என்ற அச்சம் அவர்கள் மனதில் குடி கொண்டிருந்தது. பலர் அந்த நோக்கத்திற்காகவே, புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு புலிகளுக்கு தாராளமான நிதியுதவி செய்து வந்தனர்.

ஈழப்போர் நடந்த காலத்தில், பல ஏழைக் குடும்பங்கள், ஊரில் வெறுமையாக கிடந்த வீடுகளை உடைத்துத் திறந்து குடியேறின. புலிகளின் ஆட்சிக் காலத்தில், “போராளிக் குடும்பம்”, “மாவீரர் குடும்பம்” என்று பல ஏழைக் குடும்பங்கள் வசிப்பதற்கு, “புலம்பெயர்ந்த கூலாக்குகளின்” வீடுகள் வழங்கப் பட்டன. ஈழப் போர் நடந்த காலத்தில், நிறைய பணக்காரக் குடும்பங்கள் புலம்பெயர்ந்து சென்றது போல, ரஷ்யாவிலும் யுத்தம் காரணமாக பல ரஷ்யக் கூலாக் குடும்பங்கள் புலம்பெயர்ந்திருந்தன. அப்படியானவர்களின் சொத்துக்களை கூட்டுறவுப் பண்ணைகள் இலகுவாக அபகரித்துக் கொண்டன.

ரஷ்யா முழுவதும் இருந்த கூலாக்குகளை வெளியேற்றிய கதைகளைக் கூறும் ஏராளமான நூல்கள் மேற்கத்திய நாடுகளில் விற்பனையாகின்றன. மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது போல, ஸ்டாலின் அனுப்பிய போலிஸ் படை, திடீரென ஒரு நாள் இரவு கதவைத் தட்டி, எல்லாக் கூலாக் குடும்பங்களையும் வெளியேற்றவில்லை. சில இடங்களில் அப்படி நடந்திருந்தாலும், பெரும்பான்மையான கிராமங்களில் வறுமைப் பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களே முன் நின்று கூலாக்குகளை வெளியேற்றினார்கள். அதைச் செய்வதற்கான அதிகாரத்தை, கட்சி அவர்களுக்கு வழங்கி இருந்தது.

ஏழைகளின் உதவியுடன் பணக்காரர்களை வெளியேற்றுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. அந்தப் பிரதேச கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர், ஊரில் இருந்த மிகவும் வறுமையான இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுத்து விடுவார். அந்த இளைஞர்கள், நேராக கூலாக் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்றனர். கூலாக் குடும்பங்களை வெளியேற்றி விட்டு, வீட்டையும், சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வெளியேற்றப் பட்ட கூலாக் குடும்பங்களை, பொலிஸ் கூட்டிச் சென்று தடுப்பு முகாம்களில் போட்டது. கூலாக்குக்களை வெளியேற்றிய இளைஞர்கள் பலர், கூட்டுறவுப் பண்ணைகளின் தலைவர்களானார்கள். கூலாக்குகளின் வீடுகளை, கூட்டுறவுப் பண்ணையின் அலுவலகமாக மாற்றினார்கள்.

எல்லா இடங்களிலும், கூலாக்குகள் குடும்பத்துடன் வெளியேற்றப் படவில்லை. பல இடங்களில் தானியங்களை பதுக்கிய கூலாக்குகள் மட்டும் காட்டிக் கொடுக்கப் பட்டனர். யூரல் மலைப் பகுதி கிராமம் ஒன்றில், பவ்லிக் என்ற பருவ வயது சிறுவன், தனது தந்தையை காட்டிக் கொடுத்தான். கூலாக்குகள் தப்பிச் செல்வதற்கு போலிப் பத்திரங்கள் கொடுத்து உதவியதாக, அவர் குற்றஞ் சாட்டப் பட்டு கைது செய்யப் பட்டார். பவ்லிக் பின்னர், அவனது உறவினர்களால் கொலை செய்யப் பட்டான். அதற்குப் பின்னர், பவ்லிக் சோவியத் சிறுவர்களின் நாயகனாக சித்தரிக்கப் பட்டான். அந்தக் காலங்களில், பாடசாலைகளில் பயின்ற சிறுவர்கள், தங்கள் ஊரில் இருக்கும் கூலாக்குகளை காட்டிக் கொடுப்பதை பெருமையாகக் கருதினார்கள். ஊரில் யார் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை, சிறுவர்கள் இலகுவாக கண்டுபிடித்தார்கள்.

ஊரில் இருந்த பணக்காரக் குடும்பங்களை வெளியேற்றிய ஏழை இளைஞர்கள் எல்லோரும் நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில இடங்களில், சிறு சச்சரவு கூட கொலையில் முடிந்தது. சில இடங்களில், கூலாக் குடும்பங்கள் வைத்திருந்த எல்லாப் பொருட்களையும் பறித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், கூலாக் எதிர்ப் புரட்சியாளர்களை வெளியேற்றுவதும், ஒவ்வொரு ஊரிலும் கூட்டுத்துவ பண்ணை அமைப்பதும் மட்டுமே முக்கியமானதாகப் பட்டது.

கூட்டுறவுப் பண்ணை மாதிரியை கொண்ட கூட்டுத்துவப் பண்ணைகள், சில இடங்களில் விவசாய அறிவற்ற முகாமையாளர்களினால் நடத்தப் பட்டதால், உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. உண்மையில், வெளியேற்றப் பட்ட கூலாக்குகள் விவசாய நிபுணர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. காலங்காலமாக விவசாயக் கூலிகளாக வேலை செய்து பழக்கப் பட்ட மக்கள், தாமே விவசாயிகளாக பொறுப்பேற்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல. இந்தக் குறைபாடுகள் காரணமாக, பல பண்ணைகள் நட்டத்தில் இயங்கின. ஆனால், விரைவிலேயே பண்ணை உறுப்பினர்கள் தமது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டார்கள். புதிய விவசாய நிபுணர்கள் உருவானார்கள்.

ஸ்டாலின் கொண்டு வந்த கூட்டுத்துவப் பண்ணை அமைப்பு, ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவில் நன்கு பரிச்சயமான, கூட்டுறவுப் பண்ணைகளில் இருந்து மாறுபட்டது. ஊரில் உள்ள பெரும்பாலான நிலங்களும், கால்நடைகளும் கூட்டுத்துவ பண்ணையின் பொதுச் சொத்தாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், பண்ணையில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு குடும்பமும், வீட்டோடு சேர்ந்த தோட்டம் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார்கள். அதிலே அவர்கள் தமக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டனர். அதை விட, ஆடு,மாடு, கோழி எல்லாம் வளர்த்து உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். ஸ்டாலின் கூட, தனி நபர்களின் சொத்துரிமையை ஆதரித்து பேசியுள்ளார்: “ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று சிறு சொத்து வைத்திருக்க விரும்புவது இயற்கையானது. அது குற்றம் அல்ல.”

ரஷ்ய மொழியில் Kolkhoz என்று அழைக்கப் பட்ட கூட்டுத்துவப் பண்ணைகளின் வளர்ச்சிக்கு, சோவியத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. MTS (Machine-Tractor Station) என்ற அரச நிறுவனம், விவசாய இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கி உதவியது. சோவியத் ஒன்றியத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் MTS கிளைகள் திறக்கப் பட்டன. ஒவ்வொரு MTS கிளைக்கும், பத்துக்கும் குறையாத கூட்டுத்துவ பண்ணைகள் வாடிக்கையாளர்களாக இருந்தன. விவசாய உபகரணங்களும், டிராக்டர்களும் பண்ணைகளின் பாவனைக்கு கடனாக வழங்கப் பட்டன.

அவற்றிற்கான மாதாந்த தவணைத் தொகையை, பண்ணைகள் பண்டமாற்று மூலம் செலுத்தி வந்தன. அதாவது, அவை உற்பத்தி செய்த தானியம், பால், இறைச்சி போன்றன பணத்திற்கு பதிலாக வழங்கப் பட்டன. கூட்டுத்துவ பண்ணை எதிலும், பணப் புழக்கம் இருக்கவில்லை. உறுப்பினர்கள் பணத்தையே கண்ணால் காணவில்லை. அவர்கள் வேலை செய்த நாட்கள், பணத்திற்கு பதிலாக கணக்கு வைக்கப் பட்டன. ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்தால், நான்கு மணித்தியாலங்களை சேமித்துக் கொள்வார். வருடக் கடைசியில் மொத்தமாக சேமிக்கப் பட்ட தொகை, பணமாக மாற்றப் படா விட்டாலும், அதன் பெறுமதிக்கு நிகரான பாவனைப் பொருட்களை பெற்றுக் கொள்வார்கள்.

கூட்டுத்துவ பண்ணை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், அதில் வேலை செய்பவர்கள் தான். அதே நேரம், அவர்களே பண்ணையின் உரிமையாளர்களாகவும் உள்ளனர். அதனால், பண்ணையில் அவர்களால் உற்பத்தி செய்யப் பட்ட விளை பொருட்களில், மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கு கிடைக்கும். (பங்கு வணிகத்தில் செலுத்தப் படும் டிவிடெண்ட் போன்றது.) விளைச்சலில் ஒரு பகுதி, உதாரணத்திற்கு விதை நெல் போன்றன, பண்ணையிலேயே மறு உற்பத்திக்காக சேமித்து வைக்கப் படும். மூன்றாவது பங்கை, அரசு வாங்கிக் கொள்ளும். 

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1. ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 
____________________________________________________________________________________________

 ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

Friday, January 03, 2014

ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்

(முதலாம் பாகம்)


ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு,  போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு விசுவாசமான வெண் படைகளுக்கும், செம் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஏற்கனவே, முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட தோல்வியில், அதன் அழிவில் இருந்து மீள முடியாத மக்கள், மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப் பட்டனர்.

நாடு முழுவதும், மீண்டும் பல இலட்சம் மக்கள் மடிந்தனர். பல இலட்சம் சொத்துக்கள் நாசமாகின. இறுதியில், செம்படையினர் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாலும், அதற்காக பெரியதொரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. இடையறாது நடந்த போரினால், பட்டினிச் சாவுகளும் அன்றாட நிகழ்வுகளாகின. எல்லாம் ஓய்ந்து அமைதி திரும்பிய காலத்தில், குறைந்தது பத்து மில்லியன் மக்கள் பலியாகி விட்டிருந்தனர்.

உள்நாட்டுப் போரின் முடிவில், மார்க்சிஸ்டுகள் அதிகாரத்தை நிலை நாட்டினாலும், அவர்கள் கனவு கண்ட சோஷலிச சொர்க்கத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஒரு சோஷலிச நாடு எப்படி இருக்கும் என்ற விளக்கக் கையேடு எதையும் கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கவில்லை. இதற்கிடையே அராஜகவாதிகள் பல சோவியத் சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

அராஜகவாதிகள் நேரடி ஜனநாயகம், நேரடி கம்யூனிசம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும், ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, குரோன்ஸ்டாட் சோவியத் மீது தாக்குதல் நடத்திய பின்னர், அராஜகவாதிகளின் சோவியத்துகள் கலைக்கப் பட்டன. அதற்குப் பிறகும் ஜனநாயக அமைப்பு தொடர்ந்திருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், எந்தக் கட்சியையும் சேராமல் சுயேச்சையாக போட்டியிட்ட தனி நபர்களும் மட்டுமே சோவியத் சபைகளுக்கு தெரிவு செய்யப் பட்டார்கள். 

உள்நாட்டு, உலகப் போர்களினால் கடுமையாக பாதிக்கப் ரஷ்யா, அழிவின் விளிம்பில் நின்றது.  லெனின் தற்காலிக தீர்வாக, “புதிய பொருளாதாரக் கொள்கை" (NEP) ஒன்றை அறிவித்தார். முக்கியமான தொழிற்துறைகள், பெரிய நிறுவனங்கள் மாத்திரம் தேசியமயமாக்கப் பட்டன. சிறிய தொழிற்சாலைகளும், சிறு கைத்தொழில்களும், பிராந்திய முதலாளிகளின் கீழே இயங்கிக் கொண்டிருந்தன. விவசாய உற்பத்தியும் வழக்கமான பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளின் (கூலாக்)  ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 

(கம்யூனிச) போல்ஷெவிக் கட்சியின் புதிய சோவியத் அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு சுதந்திரம் கொடுத்திருந்தது. இதனால் நகரங்களில் சிறு முதலாளிகளும், வணிகர்களும், கிராமங்களில் பண்ணையார்களும் புதிது புதிதாக உருவானார்கள். இதனால், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், கிராமப் புறங்களில் ஏழை விவசாயிகளும் பு.பொ.கொ.(NEP) மீது வெறுப்புக் கொண்டனர். அவர்கள் நம்பியிருந்த சோஷலிசப் புரட்சி நடக்காததால் ஏமாற்றமடைந்தனர். அவர்கள், மீண்டும் முதலாளிகளின், பண்ணையார்களின் கீழ் வேலை செய்யும் நிலைமையை விரும்பவில்லை. சோவியத் அரசு, தங்களது வர்க்க அபிலாஷைகளை பிரதிபலிக்கும் அரசு என்று அவர்கள் நம்பியிருந்தனர்.

லெனினின் மறைவுக்குப் பின்னரும், ஸ்டாலினின் ஆரம்ப காலங்களிலும் ரஷ்யா முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. புதிய சோவியத் அரசின் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் அறிவு பெற்றிருக்கவில்லை. பொதுவாக, ஆசியாவில் அல்லது ஆப்பிரிக்காவில் இன்றுள்ள சராசரி வறிய நாடொன்றின் நிலைமை தான், அந்தக் கால (1917 - 1930) சோவியத் யூனியனிலும் நிலவியது. லெனின் பு.பொ.கொள்கையை ஒரு தற்காலிக தீர்வாகக் கருதி இருந்தார். 

லெனினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. புகாரின் தலைமையிலான வலது கம்யூனிஸ்டுகள், NEP கொள்கையை தொடர விரும்பினார்கள். ஆனால், நாட்டுப்புறங்களில் இருந்த பணக்கார விவசாயிகள், தங்களது விவசாய உற்பத்திக்கு அதிக விலை எதிர்பார்த்தார்கள். அரசு அவர்கள் கேட்ட விலையை கொடுக்க மறுத்ததால், நகரங்களுக்கான உணவு விநியோகம் தடைப் பட்டது. நகரங்களில் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், முரண்பாடற்ற சகோதரத்துவ வர்க்கங்கங்களாக கருதப் பட்ட, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

சோவியத் நாட்டு ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும், எல்லோரும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்று கருதினார்கள். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தான், உழைக்கும் மக்களுக்கு உறுதியளித்த சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், அதற்கு பெருமளவு மூலதனம் தேவைப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த மூலதனம், காலனிகளில் இருந்து சுரண்டிய செல்வம், என்று கார்ல் மார்க்ஸ் எழுதியதை எல்லோரும் படித்திருந்தார்கள். புதிதாக தோன்றியுள்ள சோவியத் ஒன்றியம், அவ்வாறு காலனிகளை பிடித்து சுரண்டி மூலதனம் சேர்க்க முடியாது.

1917 ல் போல்ஷெவிக் கட்சியினர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், தமக்கும் பழைய சார் மன்னனின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தனர். அதன் அர்த்தம், சார் மன்னன் வாங்கியிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கு, புதிய அரசு பொறுப்பேற்க முடியாது. தமது கடன் பணம் திரும்பி வராது என்று தெரிய வந்ததும், பிரிட்டன், ஜப்பான் போன்ற கடன் கொடுத்த நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் தொடுத்தன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் சில பகுதிகளை சிறிது காலம் ஆக்கிரமித்திருந்தன. மீண்டும் ஒரு போர். இந்த தடவையும், ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து விட்டு, செம்படை வெற்றி வாகை சூடியது. ஆனால், வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதற்குப் பிறகும், அவர்கள் சோவியத் நாட்டுப் பொருளாதாரத்தில் முதலிட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள், ட்ராஸ்கி பிரதிநிதித்துவப் படுத்திய இடது கம்யூனிஸ்டுகள் என்ற பிரிவு இருந்தது. அவர்கள் “நிரந்தரப் புரட்சியை" எதிர்பார்த்தார்கள். அதாவது, சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசத்தை கொண்டு வருவது இப்போதைக்கு சாத்தியப் படாது. முதலில், மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சி ஏற்பட வேண்டும். அதற்குப் பின்னர், அந்த நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகளாகி உதவி செய்யும். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளில் புரட்சி வரும் வரை காத்திருப்பது, இலவு காத்த கிளியின் கதையாகியது. 

ஜெர்மனி, ஹங்கேரியில் சில மாதங்கள் நிலைத்திருந்த புரட்சிகளை தவிர, வேறெந்த நாட்டிலும் புரட்சி நடக்கவில்லை. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக சீர்திருத்தங்கள் வந்தன. இதனால், தேர்தல்களில் போட்டியிடும் சமூக - ஜனநாயகக் கட்சிகளும், அரசை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமாக இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்க மக்கள், வேறொரு கட்டத்தை நோக்கி (ஜனநாயக சோஷலிசம்) நகர்ந்து சென்றனர். மேற்குலகில் அன்றிருந்த நிலைமை, ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் தத்துவங்களை பிரதிபலித்ததால், இன்றைக்கும் பல ட்ராஸ்கிச கட்சிகள் சமூக ஜனநாயக அரசியலை பெரிதும் விரும்புகின்றன. இன்று மேற்குலக நாடுகளில், ட்ராஸ்கிச அமைப்புகள் பெருமளவு ஆதரவாளர்களை கொண்டிருப்பது தற்செயல் அல்ல.

ஸ்டாலின் ஆட்சி செய்த காலத்தில், அல்லது போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், ஒரு சர்வாதிகாரியின் (முன்னர் லெனின், பின்னர் ஸ்டாலின்) எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, மக்களை வருத்தியதாக நினைப்பவர்கள் பலர். ஒரு புரட்சி நடக்கும் நாட்டில், எதிரெதிர் அரசியல் கருத்துக் கொண்ட அணிகளுக்கு இடையில் மோதல் நிலைமை உருவாகும். அதிலே ஒரு அணி அதிக பலம் பெறுவதும், அது பிற சிறிய குழுக்களை ஒடுக்குவதும் வரலாறு முழுக்க நடந்து வந்துள்ளது. கிரேக்க-ரோமன் சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்ட காலத்தில், பல்வேறு கிறிஸ்தவக் குழுக்கள் இயங்கின. 

கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையில், மாறு பட்ட கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்ல, விவிலிய நூல் கூட தனித் தனியாக எழுதப் பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் பலம் பெற்ற குழுவினர், மற்ற குழுக்களை சேர்ந்த கிறிஸ்தவர்களை ஒடுக்கினார்கள். கிரேக்கம் முதல் எகிப்து வரையில் பல ஆயிரம் மாற்றுக் கருத்தாளர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதன் பிறகு தான், நாம் இப்போது அறிந்து வைத்திருக்கும் உலகளாவிய கிறிஸ்தவ மதமும், பொதுவான விவிலிய நூலும் உருவானது. அதாவது மதப் போரில் வென்றவர்கள், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை மூலம், தமது கருத்துக்களை உலகம் முழுவதும் ஏற்க வைத்தார்கள். அதை யாரும் இன்றைக்கு நினைவுகூருவதில்லை.

பிரிட்டனில் குரொம்வெல் மன்னராட்சிக்கு எதிராக நடத்திய புரட்சியினால் தான், பாராளுமன்றம் என்ற ஒன்று உருவானது. அப்போதும், "பாராளுமன்றத்திற்கான புரட்சியில்" பல இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர். மன்னரைக் கொன்று பாராளுமன்ற அமைப்பை ஸ்தாபித்தாலும், குரொம்வெல் ஒரு சர்வாதிகாரியாகத் தான் ஆட்சி நடத்தினார். இதே போன்ற நிலைமை, பிரெஞ்சுப் புரட்சியிலும் காணப் பட்டது. மன்னர், பிரபுக்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப் பட்டனர்.

பிரான்ஸ் முழுவதும் கத்தோலிக்க பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் கூட கொன்று குவிக்கப் பட்டனர். அது மட்டுமல்ல, ஒரு காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் நின்று பாடுபட்ட சக தோழர்கள், சில வருடங்களின் பின்னர் ரொபெஸ்பியரின்  சர்வாதிகார ஆட்சியில் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் போது இலட்சக் கணக்கான மக்களும், ஒரு பிரிவு புரட்சியாளர்களும் அழித்தொழிக்கப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் லிபரல் கொள்கைகளை ஐரோப்பா முழுவதும் பரப்பக் கிளம்பிய, நெப்போலியனின் போர்களில் கொல்லப் பட்ட பிற ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அது ஒரு கோடியை தாண்டும்.

ஒரு காலத்தில், சர்வாதிகாரிகளினால் மக்கள் மீது திணிக்கப் பட்ட கிறிஸ்தவ மதத்தையும், லிபரல் சித்தாந்தத்தையும் பின்பற்றுவதற்கு பெருமைப் படுவோர், "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" பற்றி பேசுவது அபத்தமானது. உலகம் முழுவதும், புரட்சிகர சமுதாயம் ஒன்று உருவாகும் காலத்தில், சர்வாதிகாரம், படுகொலைகள், குழு மோதல்கள் எல்லாம்  நடந்து கொண்டு தானிருக்கின்றன. நாம் இன்றைக்கு வாழும், "மேற்கத்திய விழுமியங்களை கொண்ட ஜனநாயக சமுதாயம்" கூட, சர்வாதிகாரம், படுகொலைகள், போர்கள் இல்லாமல் நடைமுறைச் சாத்தியமாகி இருக்காது. பலர் இந்த யதார்த்தத்தை உணர்வதில்லை. இன்றைக்கும் ஏராளமான உலக மக்கள் ஸ்டாலினை ஆதரிப்பதை, ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியை ஆதரிப்பதாக திரிபு படுத்துவது அபத்தமானது. அன்றைய சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஒரு நாட்டில் சோஷலிச பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணிந்த பின்னர் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம்  மேம்பட்டது.

ஒரு நாட்டில், எப்படிப் பட்ட கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும், மக்களுக்கு அது ஏற்புடையதாக இல்லாவிட்டால், எதிர்த்துக் கிளர்ச்சி செய்வார்கள். மக்கள் எழுச்சியை எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு அடிபணிந்து தான் செல்ல வேண்டும். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்திலும், பெருமளவு மக்கள் அரசு இயந்திரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளனர். அவர்களது கோபாவேசம் முழுவதும் புதிய பொருளாதாரக் கொள்கையினால் பலனடைந்த சிறு பிரிவினருக்கு எதிராக இருந்தது. 

அந்தக் கொள்கையின் முன்னெழுத்துகளால், “NEP காரர்கள்" என்று அழைக்கப் பட்ட பிரிவினர் மீது, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். கம்யூனிஸ்டுகளான போல்ஷெவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும், ஒரு தசாப்த காலமாக சோவியத் யூனியனில் முதலாளித்துவ-சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அதன் அர்த்தம், அடக்குமுறையை திணிக்கும் வர்க்கமும், அடக்கப்படும் வர்க்கமும் சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டது. புதிய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்க தலைமை பற்றி பேசிக் கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் முதலாளிகளால் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தால், யாருக்குத் தான் கோபம் வராது?

மக்கள் தமது மனக் குமுறல்களை பல வழிகளிலும் காட்டினார்கள். தமது எதிர்ப்புக் குரல்களை சுவர்களில் எழுதினார்கள். நேரடியாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்கள். தொழிற்சாலைகளில் நடந்த முறைகேடுகள், அதிகாரிகளின் ஊழல்கள், உணவுப் பற்றாக்குறை, வீட்டுப் பிரச்சினை போன்ற எல்லாவற்றையும், மக்கள் கடிதங்களில் விபரித்து எழுதினார்கள். நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் எழுச்சிகளும், வேலை நிறுத்தங்களும் வெடித்தன. (அந்தக் கடிதங்கள் எல்லாம் மொஸ்கோ நகரில், “Obshchestvo i vlast 1930, povestvovanie v dokumentakh” என்ற பெயரிலான ஆவணத்தில் இன்றைக்கும் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.)

ஒரு பக்கத்தில், ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாததாக கருதப் பட்டது. நிரந்தரப் புரட்சிக்கு காத்திருந்தால், மக்கள் தொடர்ந்தும் பட்டினி கிடக்க வேண்டியிருந்திருக்கும். மறு பக்கத்தில், புகாரினின் “சந்தை சோஷலிசக் கோட்பாட்டினால்" ஒரு பிரிவினர் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. (புகாரினின் கோட்பாடான சந்தை-சோஷலிச பொருளாதாரம், பிற்காலத்தில் டெங்சியாவோபிங்கினால் சீனாவில் கொண்டு வரப் பட்டது.) இதன் மூலம், ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு செல்வம் சேர்ப்பதற்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால், நகரங்களில் சிறு முதலாளிகளும் (அல்லது தொழில் முனைவோரும்), கிராமங்களில் பணக்கார விவசாயிகளும் மட்டுமே நன்மை அடைந்தனர். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

(தொடரும்)


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 


ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

Wednesday, January 01, 2014

பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்



சோவியத் யூனியனில், 1930 ம் ஆண்டு, ஸ்டாலின் அறிமுகப் படுத்திய ஐந்தாண்டுத் திட்டத்தினால், பல இலட்சம் கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகள் பயனடைந்தனர். குறிப்பாக மாணவர் பருவத்தில் இருந்த பிள்ளைகள், சோவியத் பிரச்சாரங்களினால் கவரப் பட்டனர். “மருத்துவர், பொறியியலாளர், விமானிகள், விண்வெளி வீரர்கள், விளையாட்டு வீரர்கள்” போன்ற தகமைகளை பெறுவதற்கான கல்வி கற்பதற்கு, அந்தப் பிரச்சார சாதனங்கள் அழைப்பு விடுத்தன.

ஏராளமான இளைஞர்கள், உயர்கல்வி கற்பதற்காக, பின் தங்கிய கிராமங்களை விட்டு விட்டு, நகர்ப் புறங்களை நாடிச் சென்றார்கள். அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப் பட்ட காரணத்தினால், கிராமப் புறங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. படிப்பறிவற்ற பெற்றோருக்கும், படித்த இளைஞர்களுக்கும் இடையில் தலைமுறை இடைவெளி அதிகரித்தது. படித்த பிள்ளைகள், பெற்றோரின் பழைமைவாத கலாச்சாரத்தை பின்பற்ற மறுத்தார்கள். தேவாலயத்திற்கு போக மறுத்தார்கள். மதச் சின்னங்களை அணிய மறுத்தார்கள். நிறைய குடும்பங்களில், பெற்றோரும் பிள்ளைகளும் கொள்கை முரண்பாடு காரணமாக வாக்குவாதப் பட்டார்கள்.

வர்க்க எதிரிகளான, “கூலாக் “ என்று குற்றஞ்சாட்டப்பட்ட கிராமிய பணக்காரர்களின் பிள்ளைகளின் நிலைமை பரிதாபகரமானது. அவர்களது பெற்றோர்கள், கூலாக் என்று குற்றஞ் சாட்டப்பட்டு தொலைதூர தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர். ஆனால் பிள்ளைகள், புதிய சோவியத் நாட்டின் பிரஜைகளாக அனைத்து உரிமைகளும் பெற்றிருந்தனர். அவர்களும் பிற பிள்ளைகளைப் போன்று, பாடசாலை சென்று கல்வி கற்க முடிந்தது. கல்வித் தகைமை கொண்டவர்கள் வேலை செய்ய முடிந்தது. ஆனால், தங்களது பெற்றோர், அல்லது உறவினர்கள் கூலாக்குகள் என்ற உண்மையை மறைக்க வேண்டி இருந்தது. அந்தக் கால சோவியத் சமுதாயத்தில் அது அவமானகரமானதாக கருதப் பட்டது. பிள்ளைகள் தங்களது கூலாக் பின்னணியை பாடசாலை பிள்ளைகளிடம் மறைத்தார்கள். விண்ணப் படிவங்களை நிரப்பும் பொழுது, “கூலாக் உறவினர்கள் இறந்து விட்டதாகவோ, அல்லது காணாமல்போனதாகவோ குறிப்பிட்டார்கள்.

சில கூலாக் பெற்றோரின் மகன் மார், கம்யூனிஸ்ட் கட்சியில் அல்லது கொம்சொமோல் மாணவர் அமைப்பு உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது பெற்றோரை பூரணமாக நிராகரிக்க வேண்டி இருந்தது. ஒரு சிலர் கொள்கை மீது கொண்ட பற்றுக் காரணமாக,பணக்காரனாக இருந்த சொந்த தகப்பனையும் வெறுத்தார்கள். செல்வத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால், அரசியல் பொலிஸ் வந்து அவரை கைது செய்து கொண்டு செல்வதற்கு உதவினார்கள்.

Tiraspol நகருக்கு அருகில், Malaeshty எனும் கிராமத்தின் கொம்சொமோல் தலைவராக இருந்த அலெக்சாண்டர் எனும் நபர், மிகத் தீவிரமான கூட்டுத்துவ பண்ணை அமைப்பின் ஆதரவாளர். கூலாக்குகளுக்கு எதிரான போரையும் ஆதரித்து வந்தார். அவரது தந்தை அதற்கு எதிர்மாறானவர். வீட்டில் மகனுடன் முரண்பட்டு வாக்குவாதம் செய்கையில், கூட்டுத்துவ பண்ணை அமைப்பை கடுமையாக விமர்சித்து வந்தார். கடைசியில், தந்தையை கைது செய்து தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு, தனயனே காரணமாக இருந்தார். அலெக்சாண்டர் தனது செய்கையை விளக்கி, வேறொரு கொம்சொமோல் தலைவருக்கு எழுதிய கடித்ததில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்:

“எனது தந்தை முதலாம் உலகப்போரில் இராணுவ வீரராக கடமையாற்றியவர். ஆஸ்திரியாவில் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திரும்பி வரும் பொழுது ஆஸ்திரிய அதிகார மனோபாவம் கொண்டிருந்தார். ஆஸ்திரியாவில் சிறு பண்ணையாளர்கள் விவசாய பொருளாதாரத்தை வளம் படுத்துவதாக நம்பினார். கூட்டுத்துவ பண்ணை அமைப்பின் ஆரம்ப கட்ட குளறுபடிகளை அவர் பெரும் நாசமாக கருதினார். அவற்றை தற்காலிக கோளாறாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் அரசியல் அறிவு பெற்றிருந்தால் மட்டுமே இயங்கியல் விதிகளை புரிந்து கொண்டிருக்க முடியும்.”

அனேகமாக, வீடுகளில் நடக்கும் விவாதங்களில், பிள்ளைகளுடன் முரண்படும் பெற்றோர், அல்லது உறவினர்கள், காட்டிக் கொடுக்கப் பட்டனர். அவ்வாறு காட்டிக் கொடுக்காத பிள்ளைகள் கூட, வர்க்க எதிரிகளாக குற்றஞ்சாட்டப் பட்ட பெற்றோருடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார்கள். கவிஞர் அலெக்சாண்டர் திவார்டோஸ்கி யின் சொந்தக் கதையை உதாரணமாக குறிப்பிடலாம்.

கவிஞர் அலெக்சாண்டர் திவார்டோஸ்கி, ஸ்மோலென்ஸ்க் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பருவ வயதிலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு, கொம்சொமோல் அமைப்பில் இணைந்து வேலை செய்தார். அலெக்சாண்டரின் தந்தை ஒரு பணக்கார கூலாக். அவர் தனது தந்தையை பற்றி ஒரு கவிதை எழுதினார்:

பணக்காரனும் தந்தையுமானவருக்கு... 
உன்னுடைய வீட்டில் பற்றாக்குறை என்பதே இல்லை 
நீ ஒரு பணக்காரன், எனக்கும் அது தெரியும் 
ஊரில் உள்ள வீடுகளில் எல்லாம் உன்னுடைய வீடே பெரியது

துரதிர்ஷ்டவசமாக அலெக்சாண்டரின் பெற்றோரும், சகோதரர்களும் கைது செய்யப் பட்டு, தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அலெக்சாண்டர் அந்தப் பிரதேச கட்சிப் பொறுப்பாளரை சந்தித்து, குடும்பத்தினரை விடுவிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால், அவர்களை விடுதலை செய்ய மறுத்து விட்ட பொறுப்பாளர் பின்வருமாறு அறிவுரை கூறினார் : “ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு சந்தர்ப்பம் வரும். அவர் ஒன்றில் தனது குடும்பத்தை அல்லது புரட்சியை தெரிவு செய்ய வேண்டி இருக்கும்.”

ஸ்மோலென்ஸ்க் நகரத்தில் படித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டருக்கு, அவரது தாய், தந்தையர் கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் பணம் எதையும் எதிர்பார்க்கா விட்டாலும், தொடர்பை மட்டும் பேணுமாறு வேண்டிக் கொண்டனர். அலெக்சாண்டர் அவர்களுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் பின்வருமாறு எழுதி இருந்தது: 
“அன்பானவர்களே! நான் ஒரு காட்டுமிராண்டியோ, மிருகமோ அல்ல. பொறுமையாக இருந்து வேலை செய்யுங்கள். கூலாக்குகள் என்ற வர்க்கத்தை அழித்தொழிப்பது என்றால், அதன் அர்த்தம் மக்களை அழிப்பது அல்ல.”

அந்தக் கடிதத்திற்குப் பிறகு, அலெக்சாண்டர் தனது குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். அனேகமாக, அவர் புரட்சிக்கு தனது விசுவாசத்தை காட்ட வேண்டி இருந்திருக்கும். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலகட்டத்தில், சொந்தக் குடும்பத்திலும் இது போன்ற இழப்புகள் ஏற்படுவது சகஜம் என்று மனதை தேற்றிக் கொண்டிருப்பார்.

(Orlando Figes எழுதிய, “The Whisperers, Private life in Stalin’s Russia” என்ற நூலில் இருந்து எடுத்த சிறிய பகுதி.)

(ஸ்டாலினின் ஆட்சிக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப் பட்ட நூல். இதுவும், மேற்கத்திய நாடுகளின் வாசகர்களை கவரும் நோக்குடன், “ஸ்டாலினின் கொடுங்கோன்மை” பற்றி கூறும் நூல் தான். ஆனால், தவிர்க்கவியலாது ஒரு உண்மையையும் கூறி விடுகின்றது. சோவியத் புரட்சி நடந்த காலத்தில், கிராமங்களில் இருந்த பணக்கார மேல் தட்டு வர்க்கம் பாதிக்கப் பட்டது. அந்த ஊர்களில் இருந்த ஏழை மக்களுக்கு, கட்சி ஆயுதமும், அதிகாரமும் கொடுத்தததால், அவர்கள் தமக்குத் தெரிந்த பணக்காரர்களை எல்லாம் விரட்டி அடித்தார்கள். ஆனால், அடித்து விரட்டப்பட்ட பணக்காரர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் தான், பல வாசகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதுவும் சற்று மிகைப் படுத்தல்களுடன் இந்த நூலில் விபரிக்கப் பட்டுள்ளது.)