Friday, October 17, 2014

அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!


அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! உங்களது பொது எதிரிகளான உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்து வைத்திருப்பீராக! இனவாதிகளும், தேசியவாதிகளும் ஆண்டவரால் இரட்சிக்கப் படுவீர்கள். ஆமென்!

போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச அதே மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. "தேர்தலில் உதவுபவனே உண்மையான நண்பன்!"

வத்திக்கான் திருச்சபையின் வரலாறு நெடுகிலும், போப்பாண்டவர்கள் சர்வாதிகாரிகளுடன் ஒத்துழைத்து வந்துள்ளனர். ராஜபக்சவுக்கு வத்திகானின் ஆசீர்வாதம் கிடைப்பதை எதிர்த்து, எந்தவொரு போலித் தமிழ் உணர்வாளரும் முணுமுணுக்கக் கூட இல்லை. "ஆண்டவரின் மண்ணுலக பிரதிநிதியை" பகைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும்.

போப்பாண்டவரின் இடத்தில், காஸ்ட்ரோ, ஏவோ மொராலேஸ், அப்பாஸ் இருந்திருந்தால், இந்நேரம் அதைப் பற்றி ஊரெல்லாம் தண்டோரா போட்டு சொல்லித் திரிந்திருப்பார்கள். என்னதான் தமிழ் தேசியவாதி வேடம் போட்டாலும், முதலாளிய வர்க்க பாசம் அவர்களை அறியாமல் தலை காட்டி விடுகின்றது.

கம்யூனிஸ்டுகளை கண்டியுங்கள் என்று சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேட்கின்றனர். அப்படியே செய்யலாங்க... ஆனால் ஒரு பிரச்சினைங்க... "தொண்ணூறுகளில் கம்யூனிசம் இறுதி மூச்சை விட்டது. புதைகுழிக்குள் சென்று விட்டது..." என்று மெத்தப் படித்த அறிவாளிங்க சொன்னாங்க... அதை எல்லோரும் நம்பிட்டோமுங்க... இப்போது "கம்யூனிச ஆவிகள் நடமாடுகின்றன" என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க... அது எப்படி என்று அறிவுஜீவிகள் மக்களுக்கு விளக்கி சொன்னா நல்லதுங்க...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி இவற்றைப் பற்றி யாரும் பேசக் காணோம். முழு இலங்கையிலும், வட-கிழக்கு மாகாணங்கள் தான் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு தமிழ் உணர்வாளரும் பேசுவதில்லை. போலி சிங்களதேசியவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அதிகாரத்தை பங்கு போடுவதை பற்றிப் பேசும் பல மணி நேரத்தில், ஒரு துளியாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு செலவளிப்பதில்லை.

தனது நலன்களை மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கும், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு எந்தப் பிரயோசனமுமற்ற வெற்று அரசியல் கோஷங்கள், காலப்போக்கில் அதே மக்களால் நிராகரிக்கப் படும்.

அனைத்து வகை அதிகாரங்களையும், தமிழ் உழைக்கும் மக்கள் கைக‌ளில் குவிப்பதற்காக போராடுவதே உண்மையான தமிழ் தேசியம். அதற்கு மாறாக, தமிழ் முதலாளிகளின் ஆட்சியை கொண்டுவர விரும்புவது போலித் தமிழ்தேசியம் ஆகும்.

No comments: