Sunday, March 15, 2020

பின்நவீனத்துவம் சாதிப் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஏ.ஜி. யோகராஜா "எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்!" என்ற பெயரில் ஒரு நூல் எழுதி இருக்கிறார். ஈழத்து சாதிய பிரச்சினைக்கு அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அதை நூலின் அட்டையிலேயே "சமூக சமத்துவம்: அடுத்த கட்ட நகர்வு குறித்த முன் வரைவு." என்று குறிப்பிட்டு விடுகிறார். இந்த நூலானது, "ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான கடமைகள், ஒழுக்க நெறிகள் பற்றி எழுதியுள்ள கையேடு" போன்ற வடிவில் எழுதப் பட்டுள்ளது!


ஏ.ஜி. யோகராஜா எனக்கும் நண்பர் தான். அவர் ஏற்கனவே பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களையும் நான் அறிவேன். யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள அவரது சொந்த ஊருக்கும் நேரில் சென்றிருக்கிறேன். ஆகவே இது அவர் எழுதிய இந்த நூல் மீதான விமர்சனமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த நூலுக்கு பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. ஒருவேளை யோகராஜாவும் ஒரு பின்நவீனத்துவவாதி என்பதால் ஆதரவளித்திருக்கலாம். இந்த நூலில் அப்படி என்ன எழுதி இருக்கிறது என்பதை அ. மார்க்ஸின் முன்னுரையை வாசித்தாலே புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவராலும் சில இடங்களில் உடன்பட முடியவில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

நூலாசிரியர் யோகராஜாவுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள, நமக்குத் தெரிந்த அரசியல் கோட்பாடுகள் அனைத்துடனும் முரண்பாடுகள் உள்ளன. அவர் அடிக்கடி கம்யூனிசத்தின் போதாமை குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார். அதே நேரம், முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை (?). தலித் மக்களின் விடுதலைக்கு அம்பேத்காரியம், பெரியாரியம் இருப்பதையும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே இந்த நூலில் அவராகவே ஒரு புதிய அரசியல் கோட்பாட்டை படைத்திருக்கிறார். (இது தான் பின்நவீனத்துவம்!) அது என்னவென்று பார்ப்போம்.

"அதிகாரம் 1. மொழியதிகாரத்தின் பிடியிலிருந்து விடுபடல்..." (இது அவரே கொடுத்துள்ள தலைப்பு.) இதில் அவர் தனது நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தி விடுகிறார். பெரும்பாலும் யாழ் குடாநாட்டு தமிழ்ச் சமூகம் பற்றிய "சமூகவியல்"(?) பார்வை தான் இந்த நூலின் சாராம்சம். உண்மையில் இந்த நூல் அரசியலும் இல்லாமல், சமூக விஞ்ஞானமும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. இந்த நூலை வாசித்து முடித்த பின்னர் உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் கவலைப்படாதீர்கள். அது தான் பின்நவீனத்துவம்!

இந்த நூலாசிரியர், ஈழத்து தலித் அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களை "விளிம்பு நிலைச் சமூகங்கள்" என்று குறிப்பிடுகிறார். அது அவர்களது சமூக முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில், நூல் முழுவதும் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது, "சாதி என்ற சொல்லை பயன்படுத்தா விட்டால் சாதி ஒழிந்து விடும்" (லாஜிக்?) என்பது போன்றதொரு வாதம் இது. இதற்கு நூலாசிரியர் கொடுக்கும் விளக்கத்தை அப்படியே தருகிறேன்: 
//பல்வேறு காரணங்களால் பஞ்சமர், தாழ்த்தப்பட்ட மக்கள், மற்றும் தலித்துகள் எனும் சொல்லாடல்களைத் தவிர்த்து; குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைக் குறிக்கும் வகையில் தோற்றம் பெற்ற விளிம்புநிலைச் சமூகங்கள் எனும் சொல்லாடலின் கீழ் ஒன்றிணைக்கப் படுகின்றனர்.//

இங்கே "விளிம்பு நிலைச் சமூகங்கள்" என்ற சொற்பதம் பிழையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. உலகம் முழுவதும், அமெரிக்கா, பிரிட்டன், இவர் வாழும் சுவிட்சர்லாந்து ஆகிய முதலாம் உலக நாடுகளிலும் விளிம்புநிலைச் சமூகங்கள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் வேலை இழந்து, வீடிழந்து, சொத்துக்களை இழந்து தெருவில் படுக்கும் அனைவரும் விளிம்புநிலைச் சமூகம் தான். பாலியல் தொழிலாளர்களையும் இதற்குள் அடுக்கலாம். மூன்றாமுலக நாடுகளில் நிரந்தரமாக சேரிகளில் வசிப்பவர்களும் அதற்குள் அடக்கம்.  இது பொருளாதாரக் காரணங்களினால் ஏற்படும் தோற்றப்பாடு. 

ஒரு காலத்தில் தொழிலதிபராக கொடி கட்டிப் பறந்தவரும் மீளாக் கடன்களில் மூழ்கி விளிம்புநிலைச் சமூகத்தவர் ஆகலாம். ஆனால் சாதியமைப்புமுறை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே "சாதியில் குறைந்தவர்" முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப் படலாம். அவர் எவ்வளவு படித்திருந்தாலும், நிறையப் பணம் வைத்திருந்தாலும், சமூகத்தில் அவருக்கான சாதிய முத்திரை மாறாமல் இருக்கும். சாதிய சமூகத்திற்கும், விளிம்பு நிலைச் சமூகத்திற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவதால் சமூக சமத்துவம் ஏற்பட்டு விடாது.

நூலாசிரியர் இன்னும் இரண்டு "புதிய" சொற்களை எமக்கு "அறிமுகப்" படுத்துகிறார். சாதிவெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களை இனிமேல் "பின்நிலைச் சமூகம்" என்றும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்காளர்கள் இனிமேல் "முன்நிலைச் சமூகம்" என்றும் அழைக்கப்பட வேண்டும் என்கிறார். உண்மையில் இந்த நூல் எழுதிய யோகராஜா தமிழ்த் தேசியக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், "தமிழர்கள் எல்லாம் ஒரே இனம்" என்ற கொள்கை கொண்ட தமிழ்த்தேசியவாதிகளின் மனதில் பால் வார்க்கும் வகையில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவேளை "தமிழர்களை ஒன்றுபடுத்தும்" அரசியல் கோட்பாடு எதுவென தெரியாமல் தவித்திருந்தால், இந்த நூல் அதற்கு உதவலாம்.

இனவெறியர்கள், மதவெறியர்கள் போன்று சாதிவெறியர்களும் சமூகத்தில் உள்ளனர். அவர்களை "நல்வழிப்படுத்தும்" முகமாக "பின்நிலைச் சமூகம்" என்று குறிப்பிடுவதால் எதுவும் மாறப் போவதில்லை. ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்க இன/மத/சாதி வெறியர்களை இனங்காண்பதும், அவமானப் படுத்துவதும் மக்களின் வழமையான போராட்டக் குணாம்சங்கள். (வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இந்தப் போராட்டம் நடக்கிறது.) இந்த தீயசக்திகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கு "தமிழ் தேசிய இன" அடையாளம் கொடுப்பதும், "பின்நிலைச் சமூகம்" என்று வகைப் படுத்துவதும் ஒன்று தான். இரண்டும் ஒரே நோக்கம் கொண்டவை. இதன் மூலம் நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப் படுகிறது. அதையே இந்த நூலாசிரியர் செய்ய நினைக்கிறார்.

மேலும் இவர் நேர்மறையான அர்த்தத்தில் வகைப்படுத்தும் "முன்நிலைச் சமூகம்" எப்போதும் முன்நிலையானதும் அல்ல. இன்னொரு இடத்தில் அதில் உள்ளவர்கள் பின்நிலைச் சமூகமாக காட்டிக் கொள்ளலாம். விரிவாகச் சொன்னால், ஓரிடத்தில் சாதிய சமத்துவம் பாராட்டும் ஒருவர், இன்னோர் இடத்தில் இஸ்லாமிய வெறுப்பைக் காட்டலாம். தமிழ்த்தேசியம் பேசும் பலரை இதற்கு உதாரணம் காட்டலாம். ஒரு பக்கம் சாதிய முரண்பாடுகளை சமரசப் படுத்திக் கொண்டே, மறுபக்கம் இனவாத - மதவாத முரண்பாடுகளுக்கு எண்ணை ஊற்றி தீ வளர்ப்பார்கள். இப்படிப் பலரை நூலாசிரியர் கண்டிருப்பார். இவர்களை எல்லாம் "முன்நிலைச் சமூகம்" எனலாமா?

யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் பல வெள்ளாள "உயர்சாதி" சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அதை இங்கே நன்றியுடன் நினைவுகூரும் நூலாசிரியர் "முன்நிலைச் சமூகம் என்ற சொல்லாடலால் விஷேஷிக்கப் படுகின்றனர்" என்கிறார். அன்று போராட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினால் வர்க்க அடிப்படையில் அரசியல்மயப் படுத்தப் பட்டவர்கள். ஒரு சில லிபரல் புத்திஜீவிகளும் இருந்ததை மறுப்பதற்கில்லை. அவர்கள் எல்லோரும் தாம் நம்பிய அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடு காரணமாக முற்போக்காளர்களாக இருந்தவர்கள். அதற்காக தமது குடும்ப உறுப்பினர்களுடனும் முரண்பட்டவர்கள். இது உலகம் முழுவதும் உள்ள சமூக யதார்த்தம். இதே மாதிரியான விமர்சனத்தை அ. மார்க்ஸ் கூட தனது முன்னுரையில் எழுதி உள்ளார். யாழ்ப்பாணத்தில் சைவ மத அடிப்படைவாத சிவ சேனையின் வருகை பற்றி இந்த நூல் எதுவும் பேசவில்லை என்று கூறி உள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் பெரும்பாலான தமிழ் குடியேறிகள் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதற்குக் காரணம் அந்த நாடுகளில் பெரும்பாலும் இடதுசாரிகள் மட்டுமே வெளிநாட்டுக் குடியேறிகள் மீது அனுதாபம் காட்டுகின்றனர். அப்படியானவர்களை தான் யோகராஜா "முன்நிலைச் சமூகம்" என்று புகழ்கிறார். இதை அவர் நமக்கு ஆன்மீக ஒளியில் காண்பிக்கிறார். "...சமூகத்திற்கு விடிவெள்ளிகளாக துலங்கிக் கொண்டிருக்கும் மனிதஜீவிகளையும் காலத்திற்குக் காலம் இதே சமூகம் பிரசவித்துக் கொண்டு தான் இருக்கிறது." என்கிறார். இந்த "முன்நிலைச் சமூகத்தினர்" எமக்காக தேவதூதர்களால் அனுப்பப் படவில்லை. அவர்கள் சுயமாகவோ அல்லது கட்சி சார்பாகவோ அரசியல் கற்றுக் கொண்டதால் தம்மைத் தாமே முற்போக்காளர்களாக மாற்றிக் கொண்டவர்கள். அதே நேரம், குறிப்பிட்ட ஒரு விடயத்தில் முற்போக்காளராக இருக்கும் ஒருவர் இன்னொரு விடயத்தில் பிற்போக்காளராக இருக்கலாம்.

நூலாசிரியர் யோகராஜா தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களை தனியாக நிறுவனமயப் படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தை " அடுத்த கட்ட நகர்வு குறித்த முன் வரைவு" என்பதன் மூலம் அறியத் தருகிறார். ஆனால் இது பல இடங்களில் இடறுகிறது. சொல்லதிகாரம் மூலம் சாதிகளை இல்லாதொழிக்க கிளம்பியவர் தவிர்க்கவியலாது சாதிகளை பெயர் சொல்லி குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்காங்கே ஏற்படுகிறது. ஈழத்தில் பலவகையான சாதிப்பிரிவுகள் இருந்தாலும், நூலாசிரியர் "நளவர், பள்ளர்" ஆகிய இரண்டு சாதிகள் மீது மட்டுமே அதிக கவனத்தைக் குவிக்கிறார். அதற்குக் காரணம் அவர்கள் பாரம்பரியமாக பனை மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பதே. இந்தியாவில் நாடார் சமூகம் மாதிரி அவர்களும் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்கிறார்.

யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியான (மன்னிக்கவும், "பின்நிலைச் சமூகம்") வெள்ளாளர்கள் பெருமளவு நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி கடலோர பிரதேசங்களில் வாழும் கரையார்கள் கடல் வளத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆகவே, பனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் நளவர், பள்ளர், பனை மரங்களுக்கு சொந்தம் கொண்டாடுவதில் என்ன தவறு என்பது தான் இவரது வாதம். பனைமரங்கள் ஆகாயத்தில் தொங்கும் தோட்டத்தில் வளர்வதாக இருந்தால் இவரது வாதத்தில் எந்தத் தவறும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பனைமரங்கள் எல்லாம் நிலவுடைமையாளர்களான வெள்ளாளரின் காணிகளில் தானே உள்ளன?

ஒரு பேச்சுக்கு, வயல் நிலங்கள் வெள்ளாளர்களுக்கு, பனைமரக் காணிகள் நளவர் - பள்ளருக்கு என்று பிரித்துக் கொடுத்து விடலாம். கடல் முழுவதும் கரையாருக்கு கொடுப்பதில் இவருக்கு ஆட்சேபனை இருக்காது. ஆனால், கரையோரப் பிரதேசங்களில் கடற் தொழிலை நம்பி வாழும் திமிலர் எனும் தாழ்த்தப் பட்ட சாதியினர் வசிக்கிறார்களே? அவர்களுக்கு எதைக் கொடுப்பது? அது மட்டுமல்ல, எந்த வித இயற்கை வளத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியாமல் நகரங்களை அண்டி வாழும் சக்கிலியர்கள், பறையர்கள் போன்ற சாதிய சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதியினருக்கு என்ன தீர்வு? நான் இங்கே உட்சாதிப் பிரிவுகள் பற்றிப் பேசவில்லை. ஈழத்தில் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் மாறுபட்ட சமூக- பொருளாதார அடிப்படைகளை கொண்டுள்ளனர். எல்லா சாதிகளும் சமமாக பொருளாதார வளர்ச்சி அடையவில்லை.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தில் வெள்ளாளர்களின் விகிதாசாரம் அதிகமாக இருந்ததாகவும், ஈழப்போரின் பின்னர் அவர்களது எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும், தற்போது தாழ்த்தப்பட்ட சாதியினர் அறுபது சதவீதமாக இருக்கலாம் எனவும் நூலாசிரியர் நினைக்கிறார். (உண்மையில் இப்படி ஒரு கதையாடல் யாழ் குடாநாட்டில் இருப்பதை மறுப்பதற்கில்லை.) அதை அடிப்படையாகக் கொண்டு தனது "முன்வரைபை" சமர்ப்பிக்கிறார். இந்தியா மாதிரி, இலங்கையில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடப்பதில்லை. மக்கட்தொகையில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

ஈழப்போருக்கு முந்திய காலத்தில் வெள்ளாளர்கள் 40% - 50% இருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பெரும்பாலும் வெள்ளாளர்கள் தான். அதற்கு மாறாக பெரும்பாலான தாழ்த்தப்பட்ட சாதியினர் தாயகத்தில் தங்கி இருந்தனர். அதை மட்டுமே வைத்துக் கொண்டு யாழ் குடாநாட்டில் வெள்ளாளரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து விட்டது என்று கருத முடியாது. முப்பதாண்டு கால போரில் இலட்சக்கணக்கானோர் கொல்லப் பட்டாலும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும் ஈழத்தமிழர் சனத்தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்றது.

மேலும் சாதிய கட்டமைப்பில் சனத்தொகை விகிதாசாரம் எந்தத் தாக்கத்தையும் செலுத்துவதில்லை. உதாரணத்திற்கு தமிழ்நாட்டு நிலைமையை எடுத்துப் பார்க்கலாம். அங்கு சாதிய பிரமிட்டின் உச்சியில் இருக்கும் பிராமணர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதே நேரம் அடித்தளத்தில் இருக்கும் பறையர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இருப்பினும் சமூகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் மேன் நிலைச் சாதியினர் தான் பொருளாதார துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதைக் கொண்டு அரசியல்- சமூக மாற்றங்கள் வந்து விடாமல் தடுக்க முடிகிறது. அதே நிலைமை தான் யாழ்ப்பாணத்திலும் உள்ளது. சனத்தொகையில் வெள்ளாளரின் எண்ணிக்கை குறைந்தாலும் பொருளாதாரத்தில் அவர்களது ஆதிக்கம் அதிகம்.

இன்று தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மத்தியதர வர்க்கத்தினர் பெருமளவு காணிகளை வாங்கிச் சேர்த்தாலும், நிலத்தின் மீதான அதிகாரம் வெள்ளாளரின் கையில் தான் உள்ளது. அந்த சாதியை சேர்ந்த நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கு சொந்தமான காணிகளின் தொகையும் மிக மிக அதிகம். இப்போதும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் உள்ளனர். இந்த பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளை போர்வையாக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசியல் சக்திகள் முன்வர வேண்டும். அதை இந்த நூலாசிரியர் ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயக அடிப்படையில் "விளிம்பு நிலை சமூகத்தவர்" அதிக பிரதிநிதித்துவம் கோர வேண்டும் என்கிறார். அது சரியே. ஆனால், நிலங்களையும், வளங்களையும் பகிர்ந்தளிக்கும் வரையில் சாதிய அமைப்பு மாறப் போவதில்லை. ஏனென்றால் தாம் ஆண்டு அனுபவிக்கும் சொத்துக்களை விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இல்லை. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. "முன்நிலைச் சமூகத்தவரே" என்று மயிலிறகால் வருடிக் கொடுத்தாலும் எதுவும் நடக்காது. 


No comments: