Saturday, April 16, 2016

ஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள்


சுவிட்சர்லாந்தில், 1992 - 1994 காலப்பகுதியில், கடும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ் ஏடு எனும் மாதாந்த பத்திரிகையை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புலம்பெயர்ந்த நாடொன்றில், எந்த அரசியல் சார்புமற்று நடுநிலையாக பத்திரிகை நடத்துவது ஒரு பெரிய சாதனை. அதே காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வந்து கொண்டிருந்த "சுவிஸ் தமிழர்", அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாக பல்சுவை அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

அந்த வகையில் தமிழ் ஏடு, புலம்பெயர்ந்த தமிழரின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளது. அது பற்றிய தகவல்கள், எதிர்கால சந்ததியினரின் அறிவுத் தேடலுக்கு உதவும் வகையில் பதிவு செய்யப் பட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகையின் ஆசிரியராக இரண்டு வருடங்கள் கடமையாற்றிய எனது ஊடகவியல் அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்.


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் மூலமாக அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. சுவிட்சர்லாந்தில் மிக நீண்ட காலமாக வசித்து வந்த தமிழ் அரசியல் ஆர்வலரான பாலசுப்ரமணியம், கடும் சுகவீனமுற்று இலங்கைக்கு சென்றிருந்த நேரம் 10-4-2016 அன்று காலமானார். அவரது இறுதிக் காலங்களில், ஒரு சமூக ஆர்வலராக, அரசியல் ஆர்வலராக பலராலும் அறியப் பட்டவர். 

சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப் பட்ட முதலாவது தமிழ் செய்திப் பத்திரிகையை நடத்தியவர் என்ற பெருமையும் அமரர் பாலசுப்ரமணித்தையே சேரும். தமிழ் ஏடு என்ற அந்தப் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரதம ஆசிரியரும் அவர் தான். அமரர் பாலாவின் நினைவாக, தமிழ் ஏடு பத்திரிகை தொடர்பான நினைவுக் குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"தமிழ் ஏடு" பத்திரிகையின் (உதவி) ஆசிரியர் என்ற வகையில், அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பும் இருந்துள்ளது. திரு பாலசுப்ரமணியம், நிர்வாகம், விநியோகம் சம்பந்தமான விடயங்களை கவனித்துக் கொண்டிருந்தார். நான் பத்திரிகையின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன். 

அதன் முதல் இதழில் இருந்து, "எடிட்டோர் பக்கம்" என்ற பெயரின் கீழ் ஆசிரியர் தலையங்கம் எழுதி வந்தேன். அது மட்டுமல்லாது, "கலை, அநாமிகா, தரணியன், தான்தோன்றி, யூரேசியன்" போன்ற பல புனை பெயர்களின் கீழும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். உலகச் செய்திகள், உலக அரசியல் நிலவரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் நானே எழுதினேன். 

தமிழ் ஏடு, 1992 முதல் 1994 வரையில், இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக மாதமொருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. பொருளாதார கஷ்டம் காரணமாக இடையிடையே காலதாமதம் ஏற்பட்டு பின்னர் ஒரேயடியாக வராமல் நின்று விட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த அனைத்து தமிழ்க் கடைகளிலும் விற்பனைக்கு விடப் பட்டது. அது மட்டுமல்லாது, உலகம் முழுவதும் சந்தாதாரர்களுக்கு அனுப்பப் பட்டது.

தமிழ் ஏடு பத்திரிகையை, இந்திய, இலங்கை வாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். அதைவிட, ஐரோப்பாவில் வெளிவந்து கொண்டிருந்த முற்போக்கான சிற்றிதழ்களுடன் இதழ் பரிமாற்றம் செய்து கொண்டோம். 

மனிதம் (சுவிட்சர்லாந்து), தூண்டில் (ஜெர்மனி), சுவடுகள் (நோர்வே), ஓசை (பிரான்ஸ்) போன்ற பல சஞ்சிகைகள், தமிழ் ஏட்டுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தன. அந்தக் காலங்களில் இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த, நடுநிலை தவறாத முற்போக்கான சரிநிகர் பத்திரிகையுடன், தமிழ் ஏட்டை ஒப்பிட்டுப் பார்த்தவர்களும் உண்டு.

தமிழ் ஏடு, ஒரு காலத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப் பட்ட பிரபலமான பத்திரிகையாக இருந்தது. அது எந்த அரசையும், எந்தவொரு தமிழ் அரசியல் அமைப்பையும் சார்திருக்கவில்லை. அதனால், அனைத்து தரப்பினரினதும் கடும் விமரிசனங்களை சந்தித்து இருந்தது. நிதி விடயத்தில், கொடையாளிகள், முதலாளிகளின் பணத்தில் தங்கியிருக்கவில்லை. தமிழ் விற்பனை நிலையங்கள் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்து வந்தாலும், பிற்காலத்தில் ஒரு சிலரின் பயமுறுத்தல் காரணமாக பின்வாங்கி இருந்தனர்.

வெளிநாட்டு சமூகத்தினரின் கலாச்சார ஏடு என்ற காரணத்தால், சுவிஸ் அரசு ஒரு சில நேரங்களில் சிக்கனமான நிதி வழங்கி இருந்தது. அது பத்திரிகை அச்சடிக்கும் செலவுக்கே போதவில்லை. அமரர் பாலசுப்ரமணியம், தனது சொந்தப் பணத்தை முதலிட்டு ஆரம்பித்த பத்திரிகை, கடைசியில் நஷ்டத்தையும், பெரும் செலவையும் உண்டாக்கியது. அப்படி இருந்தும் பாலா அண்ணா அதை ஒரு சமூக சேவையாக கருதி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி மூலம் சுவிட்சர்லாந்து வந்த ஆரம்ப கட்ட தமிழ் அகதிகளில் பாலசுப்ரமணியமும் ஒருவர். அழகிய எழில் கொஞ்சும் ஸ்பீஸ் (Spiez) என்ற எரிக் கரை கிராமத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வதிவிட அனுமதி பெற்ற பின்னர், ஸ்பீஸ் கிராமத்தில் இருந்த வயோதிபர் மடத்தில் உதவியாளர் வேலை செய்து வந்தார். தனது தஞ்சக் கோரிக்கைக்கு, பேர்ன் நகரில் இருந்த பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபை உதவிய காரணத்தால், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார்.

பேர்ன் (Bern) நகரில் தமிழர்கள் ஒன்றுகூடும் கிறிஸ்தவ தேவாலயத்தில் தான், நான் பாலா அண்ணாவை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது 40 கி.மி. தூரத்தில் உள்ள பீல் (Biel) நகரத்தில் வாழ்ந்த என்னையும், பிற தமிழ் இளைஞர்களையும், கூட்டிச் செல்வதற்கு தேவாலய ஊழியர்கள் வருவார்கள். ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு, பயணச் சீட்டு கொடுத்து அழைத்துச் செல்வார்கள். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதாக இருந்தது. எமது நோக்கம் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதாக இருந்தது.

இலங்கையில் வவுனியாவில் பிறந்த பாலசுப்ரமணியம் ஓர் இந்து. அவரது (முதல்)மனைவி ஒரு கத்தோலிக்கர். இருப்பினும் பெந்தெகொஸ்தே சபையுடன் ஒத்துழைத்தனர். இதை நாங்கள் வெறுமனே மதம் சார்ந்த விடயமாக பார்க்க முடியாது. 

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், திக்குத்தெரியாத அந்நிய நாடொன்றில் வந்திறங்கிய அகதிகள், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னேறத் துடித்தனர். உண்மையில், அந்த கிறிஸ்தவ சபை தொடர்பு காரணமாக கிடைத்த சுவிஸ் வயோதிப நட்புறவுகள், தமிழ் ஏடு பத்திரிகை தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருந்தனர். அவர்களுடைய உதவியின் மூலம், சுவிஸ் அமைச்சர் வரையில் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

தொடக்கத்தில், தமிழ் எழுத்துரு மூலம் கணணி தட்டச்சு செய்யும் மென்பொருள் தொடர்பாகத் தான், எனக்கும் பாலா அண்ணாவுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் கணணி தொழில் நுட்பத்துடன் பரிச்சயம் உடையவர்கள் மிகக் குறைவு. ஸ்பீஸ் கிராமத்தில், பாலா குடும்பத்தினரின் வீட்டுக்கு நான் சென்றிருந்த நேரம், பத்திரிகை தொடங்குவது பற்றிய யோசனையை தெரிவித்தார். அப்போது இன்னும் பெயர் வைக்கவில்லை. நான் தமிழ் ஏடு என்ற பெயரை முன்மொழிந்தேன். பாலா அண்ணாவுக்கும் அது பிடித்து விட்டது.

தமிழ் ஏடு முதலாவது இதழுக்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டன. நான் கணனியில் தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி கட்டுரைகள், கதைகள், கவிதைகளை தட்டச்சு செய்து கொடுத்தேன். பாலா அண்ணா அவற்றை வெட்டி வெள்ளைத் தாளில் ஒட்டி வடிவமைத்தார். சிறிய அளவில், பதினாறு பக்கத்தில் தயாரான பத்திரிகையின் மூலப்பிரதியை அச்சகத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தார். இரவு பகலாக உறக்கமில்லாமல் உழைத்து நாம் தயாரித்திருந்த தமிழ் ஏடு, சுவிட்சர்லாந்து முழுவதும் இருந்த தமிழ்க் கடைகளுக்கு அனுப்பப் பட்டது. அது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் வரவேரப் பெற்ற நேரம், நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


அந்தக் காலகட்டத்தில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், பிரான்சில் "பாரிஸ் ஈழநாடு", பிரிட்டனில் "தமிழன்" ஆகிய இரண்டு பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. இரண்டும் இலங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், எங்கோ ஒரு மூலையில் பெட்டிச் செய்தியாக வெளிவரும். 

நாங்கள் அதற்கு மாறாக, புலம்பெயர்ந்த நாடுகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டோம். ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் விதத்திலும், தமிழ் ஏடு செய்திகள் அமைந்திருந்தன. அன்றைய காலத்தில், பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட புரட்சி அதுவெனலாம்.

தமிழ் ஏடு பத்திரிகையின் முதலாவது இதழில், சுவிட்சர்லாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்று முன்பக்கத்தில் பிரசுரமானது. அந்தப் பிரதி தற்போது என்னிடம் இல்லை. அதனால் என்ன எழுதியிருந்தது என்பதை சொல்ல முடியாமல் உள்ளது. ஆயினும், அன்று தமிழ் ஏடு வெளியிட்ட, யாரும் அறிந்திராத, குடியேறிகளுக்கு அவசியமான தகவல் காரணமாக, விற்பனைக்கு வைத்திருந்த கடைகளில் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டது.

பத்திரிகை வெளியிட்டவர்கள் கைகளில் கூட ஒரு பிரதியும் மிஞ்சாத அளவிற்கு, அனைத்தும் விற்றுத் தீர்ந்தமை எமக்கும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த மாதம் வந்த இரண்டாவது இதழும் அனைத்தும் சுடச் சுட விற்கப் பட்டன. அன்றில் இருந்து தமிழ் ஏடு பத்திரிகையின் புகழ் சுவிட்சர்லாந்து முழுவதும் பரவியது. "பத்திரிகை அலுவலகத்திற்கு", அதாவது பாலசுப்ரமணியம் வீட்டிற்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலர், தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

வாசகர் கடிதங்கள் வந்து குவிந்தன. பலர் தாமாகவே முன்வந்து ஆக்கங்களை எழுதி அனுப்பினார்கள். இலங்கைக்கும் பத்திரிகை சென்றதால், அங்கிருந்தும் கடிதங்கள், ஆக்கங்கள் வந்தன. தமிழ் ஏடு பத்திரிகை, பல இலக்கிய ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை மக்கள் முன் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களில் நானும் ஒருவன் என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகைத் துறை அனுபவம், என்னை ஓர் அரசியல் ஆர்வலராக, எழுத்தாளராக உருவாக்கியது.

தமிழ் ஏடு மூலம் பிரபலமடைந்த பலர், இன்று தாமிருக்கும் நிலைமை காரணமாக அதை சொல்லிக் காட்ட விரும்புவதில்லை. இருப்பினும் பலருக்கும் தெரிந்த பிரபலங்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டாக வேண்டும். வவுனியாவில் இருந்து கொண்டு தமிழ் ஏட்டுக்கு இலங்கையின் உள்நாட்டு அனுப்பிக் கொண்டிருந்த மாணிக்கவாசகர், பிற்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர் பரிசு பெற்றார்.

தனது பூஸா சிறைச்சாலை அனுபவங்களை தொடராக எழுதிய கல்லாறு சதீஷ், இன்று வணிகத்துறையில் கொடி கட்டிப் பறக்கிறார். கோடம்பாக்கம் சினிமாத்துறை அனுபவங்களை எழுதிய அஜீவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற குறும்படத் தயாரிப்பாளர் ஆனார். அரசியல் கட்டுரைகள் எழுதிய முன்னாள் ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் அழகு குணசீலன். சுவிட்சர்லாந்தில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளில் பிரபலமான கஜேந்திர சர்மா, மற்றும் ஜெயக்கொடி இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.

1992 ம் ஆண்டு, இரண்டு பேரின் உழைப்பால் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் ஏடு பத்திரிகை பிரபலமான பின்னர், தாமாகவே விரும்பி பங்களிப்பை செலுத்துவதற்கு பலர் முன்வந்தார்கள். ஆசிரியர் குழுவில் மேலும் பலர் உள்வாங்கப் பட்டனர். பத்திரிகையின் உள்ளே வந்தவர்கள் தமது உழைப்பை மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் பரவாயில்லை. சிலர் கூடவே பிரச்சினைகளையும் இழுத்துக் கொண்டு வந்தார்கள். 

ஆரம்ப கட்டத்தில், ஒரு நடுநிலைப் பத்திரிகை, முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது தவறல்ல என்று கருதப் பட்டது. ஆனால், சுயநலவாதிகளையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் சேர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தானது என்பது போகப் போக தெளிவானது.

(தொடரும்)

No comments: