Showing posts with label இரத்த வங்கி. Show all posts
Showing posts with label இரத்த வங்கி. Show all posts

Monday, June 26, 2017

ஒரு அமெரிக்க கனவு: "ஏழைகளின் குருதி விற்பனைக்கு"!



மேற்கு ஐரோப்பாவில் குருதிக் கொடை கொடுப்பவர்களுக்கு பொதுவாக பணம் கொடுப்பதில்லை. அதற்குக் காரணம், பணத்திற்காக குருதியை விற்பவர்கள் தமக்கிருக்கும் நோய்களை மறைக்கப் பார்க்கலாம். அதனால், தாமாக மனமுவந்து கொடுப்பவர்களிடம் இருந்து மட்டும் குருதி எடுக்கப் படுகின்றது. இருப்பினும் இரத்தவங்கியில் போதுமான அளவு குருதி சேமிப்பில் இருப்பதில்லை.

அண்மைய ஐரோப்பிய சட்டத் திருத்தமானது, வெளிநாடுகளில் இருந்து குருதி இறக்குமதி செய்வதை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள், குருதி விற்று கோடிக் கணக்கான டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றன. உலகிலேயே குருதி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா தான் எழுபது சதவீத பங்கைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் ஒளிபரப்பானது. (https://www.npo.nl/zembla/19-04-2017/VARA_101382220) 

தற்காலத்தில், குருதியானது பிளாஸ்மா வடிவத்தில் சேமிக்கப் படுகின்றது. சிவப்பு நிறமான குருதியில் இருந்து, முக்கியமான கலங்களை மட்டும் பிரித்தெடுத்தால் அது மஞ்சள் நிறமான திரவமாக இருக்கும். அதுவே "பிளாஸ்மா" என்று அழைக்கப் படுகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் பிளாஸ்மா போத்தில் குறைந்தது 1000 - 1500 யூரோவுக்கு சந்தையில் விற்கப் படுகின்றது. அது எங்கிருந்து வருகின்றது என்பதை ஆராய்வதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழுவொன்று புறப்பட்டது.

சுவிஸ் அரச மருத்துவமனை மருத்துவர்கள் குருதி விற்கும் கம்பனிகள் பற்றிய விபரங்களை தந்துதவினார்கள். அதில் உள்ள விபரங்களின் படி, பெரும்பான்மையான குருதி அமெரிக்காவில் இருந்து வருகின்றது என்று தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக கிலீவ்லான்ட் பிரதேசத்தில் இருந்தே பெருமளவு குருதி-பிளாஸ்மா இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. ஆகவே, மேலதிக விபரங்களை திரட்டுவதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழு அமெரிக்கா, கிலீவ்லான்ட்க்கு பயணமானது.

அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக, 2007ம் ஆண்டுக்குப் பின்னர் கிலீவ்லான்ட் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அங்கு தற்போதும் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்றனர். வருமானம் இன்றிக் கஷ்டப் படுகின்றனர். 

அமெரிக்காவில், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள், தமது குருதியை விற்றுப் பிழைக்கிறார்கள். இது ஒரு அமெரிக்கக் கனவின் மறுபக்கம். ஏழைகளை சுரண்டி பணம் சேர்ப்பது வர்த்தக உலகில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நியதி. அந்த வகையில், அமெரிக்க ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி விற்கும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இது ஒரு வகையில் "நவீன காலத்து நரமாமிச வியாபாரம்". 

அமெரிக்காவில் இரத்தம் விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அதனால் குருதி வாங்கும் நிறுவனங்கள் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கின்றன. நானூறு டாலர், இருநூறு டாலர் என்று விலைபேசுகின்றன. இரத்தம் விற்றால் பணம் கிடைக்கும் என்பதால், இரத்த வங்கிகளுக்கு முன்னால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகள் வரிசையில் நிற்கின்றனர். இரத்தவங்கி ஒரு சராசரி தொழிற்சாலை போன்று இயங்குகின்றது.

வணிக நோக்கில் இயங்கும் இரத்த வங்கிக்குள் சுவிஸ் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. அதனால் அவர்கள், தெருவில் நின்று குருதி கொடுக்கச் செல்லும் "கொடையாளிகளை" பேட்டி எடுத்தனர். அப்போதும் அந்த நிறுவனம் பொலிசிற்கு அறிவித்து விட்டது. ஊடகவியலாளர்கள் "தெருவில் போவோருக்கு இடையூறு செய்ததாக" தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸ் தெரிவித்தது.

அதனால், மறைத்து வைக்கப் பட்ட கேமராவை கொண்டு சென்று இரத்த வங்கிக்குள் நடப்பவற்றை படமாக்கினார்கள். உள்ளே நூற்றுக்கணக்கான கொடையாளிகள் வரிசையாக படுக்க வைக்கப் பட்டு குருதி சேகரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் கேட்கப் படும் கேள்விகளும் முக்கியமில்லாதவையாக இருந்தன. தான் எல்லாவற்றிற்கும் "இல்லை" என்று சும்மா சொன்னதாக, வெளியே பேட்டி எடுக்கப் பட்ட ஒருவர் தெரிவித்தார். இன்னொரு இளைஞர் போதைவஸ்து வாங்குவதற்காக குருதி விற்றதாக கூறினார்.

அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன. இதனால் பில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவில் படமாக்கப் பட்ட காட்சிகள் சுவிட்சர்லாந்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இருப்பினும், குருதி வாங்கி விற்கும் சுவிஸ் நிறுவனம் ஊடகவியலாளருடன் பேச மறுத்து விட்டது. தலைமையகத்திற்கு சென்ற நேரம் போலீசைக் கூப்பிட்டு வெளியேற்றியது.

இரத்தவங்கிகள் வணிக நோக்கில் செயற்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் பயங்கரமானவை. 1999 ம் ஆண்டு, பிரான்ஸில் ஒரு மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றது. குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தில் HIV எயிட்ஸ் வைரஸ் தொற்றி இருந்தது. முன்கூட்டியே பரிசோதிக்கப் படாத எயிட்ஸ் கிருமி கலந்த இரத்தம் பரிமாறப் பட்டதால் பலர் பாதிக்கப் பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஊழலுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரத்த வங்கிகள், சேமிப்பில் உள்ள இரத்தம் தரமானதா என்பதையிட்டு, ஒன்றுக்குப் பத்து தரம் பரிசோதனை செய்கின்றன.

ஆவணப் படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு:

Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune). 

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune