Saturday, September 24, 2016

ஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்


ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான். 

ஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.

அப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.

அந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் கப்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

புளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான "வங்கம் தந்த பாடம்" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சியம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

புளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

மார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.

அது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் நூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.

இந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று "தீப்பொறி அமைப்பு" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.

அப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடதுசாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.

புளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.

மேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.

அந்தக் காலத்தில், "மாத்தையா குறூப்" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உருவானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.

இருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். "வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.

முள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.

ஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.

ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், "Lebensraum" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை "இந்தியத் தமிழர்கள்" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுத் தளம் ஆட்டம் கண்டது.

மகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.

முதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்களுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.

No comments: