Thursday, October 09, 2014

கொபானி : சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்"


சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படக் கூடிய, கொபானி பிரதேசம் ISIS படையினரிடம் வீழ்ந்துள்ளது. துருக்கி எல்லையில் உள்ள கொபானி, கடந்த சில வாரங்களாக ISIS படையினரின் முற்றுகைக்குள் இருந்தது. அங்கிருந்து குர்து மக்கள் வெளியேறுவதை, துருக்கி படையினர் தடுத்து வந்தனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள், ISIS எதிர்ப்புப் போரைத் தொடங்கிய பின்னர் தான், கொபானி மீதான தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளின் ISIS எதிர்ப்புப் போர், குர்து சிறுபான்மை மக்களை பாதுகாக்கத் தவறி விட்டது, ISIS முன்னேற்றத்தை தடுக்கத் தவறி விட்டது. "சிரிய முள்ளிவாய்க்காலில்" அகப்பட்டுக் கொண்ட மக்களுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நகரங்கள் எங்கும் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. திடீரென ஆயிரக் கணக்கான குர்தியர்கள், நெதர்லாந்து பாராளுமன்றத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்திலும் இதே மாதிரி பாராளுமன்றங்களை ஆக்கிரமிக்கும் போராட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. பெல்ஜியம், சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நமது தமிழ் தேசியவாதிகளுடன் ஒப்பிடும் பொழுது, குர்திய தேசியவாதிகளை இடதுசாரிகள் என்று சொல்லலாம். ஆனாலும், அவர்கள் மனதிலும் தேசியவாதத்தின் குறைபாடுகள் காணப்படுகின்றன.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் குர்து தேசியவாதிகள், அந்தந்த நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் தேசியவாதிகளும் அப்படித் தான். ஆயினும், தமிழர்கள் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளையே அதிகம் ஆதரிக்கிறார்கள். அதற்கு மாறாக, குர்தியர்கள் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.

நெதர்லாந்தின் சோஷலிசக் கட்சி (SP), அந்த நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சி ஆகும். அதிலே பெருந்தொகையான குர்து அரசியல் ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். "சிரிய குர்தியரின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படும் கொபானி பிரச்சினையில், கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் உருவாகின.

பெரும்பாலான குர்து அரசியல் ஆர்வலர்கள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் "ISIS பயங்கரவாத எதிர்ப்பு போரை" ஆதரிக்கின்றனர். நெதர்லாந்து அரசு அந்தப் போரில் பங்கெடுப்பதையும் ஆதரிக்கிறார்கள். அதற்கான காரணம் தெளிவானது. மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்பு போரை நடத்தினால், சிரியாவில் குர்து மக்களின் தாயகம் பாதுகாக்கப் படும் என்று நம்பினார்கள்.

அமெரிக்காவின் ISIS பயங்கரவாத எதிர்ப்புப் போரில், நெதர்லாந்து அரசும் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட்ட பொழுது, முதலாளித்துவ சார்புக் கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. சோஷலிசக் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. "2001 ஆம் ஆண்டு நடந்த அல்கைதா பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இன்னொரு வடிவம்" என்று கூறி, சோஷலிசக் கட்சி எதிர்த்து வாக்களித்தது.

முன்னாள் மாவோயிசக் கட்சியான சோஷலிசக் கட்சி, இன்று மார்க்சியம் பேசாத இடதுசாரிக் கட்சியாக உள்ளது. ஆயினும் அது, முதலாளியக் கட்சிகளுக்கு மாற்றீடான, மிகவும் கட்டுக்கோப்பான, கொள்கையில் உறுதியான கட்சி என்று, எதிராளிகளினாலும் பாராட்டப் படுகின்றது. அப்படியான ஒரு கட்சியில் முரண்பாடு தோன்றுவது எதிர்பாராத ஒரு விடயம்.

முன்பொரு தடவை, கொசோவோ பிரச்சினையில் யூகோஸ்லேவியா மீதான நேட்டோ இராணுவ நடவடிக்கையையும் SP எதிர்த்து வந்தது. ஆனால், புலம்பெயர்ந்த கொசோவோ அல்பேனியர்கள் பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள். அதனால், அது கட்சிக்கு எந்த நெருக்கடியையும் உண்டாக்கவில்லை.

நெதர்லாந்து சோஷலிசக் கட்சி, ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றது. அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி பொம்மல், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களுக்கு நன்றாகப் பரிச்சயமான ஒருவர். பல தடவைகள், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளார்.

ஆயினும், ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் குறித்து, உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் SP உள்ளது. கொசோவா என்றாலும், கொபானி என்றாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு, அந்த மக்களுக்கு சாதகமானதல்ல என்பது SP இன் நிலைப்பாடு. ஆயினும் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில், குர்து தேசியவாதிகள் இல்லை. அவர்கள், கொபானி பிரச்சினையில், அமெரிக்கா குர்து மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக நம்பினார்கள்.

கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்புப் போரை நடத்தி வருகின்றன. விமானக் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும், ISIS படையினர் கொபானி பிரதேசத்தை முற்றுகையிட்டு கைப்பற்றி உள்ளனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் தான், ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் வேறு என்ற விடயம் குர்து தேசியவாதிகளுக்கு உறைத்தது. அதன் எதிரொலியாக, மேற்கு ஐரோப்பிய நகரங்களில் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. துருக்கியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், கலவரத்தில் முடிந்துள்ளன.

கொபானி நெருக்கடியை, ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நெருக்கடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டிலும் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், இலங்கையை விட சிரியா சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியமான நாடு என்பது குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பான ஒரு விவாதம், தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் அவசியமானது. அத்தகைய விவாதங்கள் மூலம் தான் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

No comments: