Showing posts with label குர்து மக்கள் போராட்டம். Show all posts
Showing posts with label குர்து மக்கள் போராட்டம். Show all posts

Monday, October 13, 2014

குர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச் சாலை


ஐரோப்பிய நகரங்களில், புலம்பெயர்ந்த குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னர், மேற்கத்திய நாடுகளின் துரோகம் அம்பலப் பட்டது. ஏற்கனவே, ஈழப்போரின் இறுதியில், மேற்கத்திய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இளைத்திருந்தன. ஆயினும், அமெரிக்க விசுவாசிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்களின் கோபாவேசம் மேற்குலகிற்கு எதிராக திரும்பி விடா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.

குர்து மக்களைப் பொறுத்தவரையில், மேற்கத்திய நாடுகளைப் பற்றிய பிரமை எதுவும் அவர்களிடம் இல்லை. ஜெனீவாவில் குர்திஸ்தான் கிடைக்கும் என்று யாரும் நம்பவில்லை. அதற்குக் காரணம், குர்து விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானின் கைதுக்குப் பின்னர், தேசியவாதக் கருத்தியலில் வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டது.

தொண்ணூறுகள் வரையில், PKK மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது. ஆயினும், தேசியவாதத்தின் பிற்போக்குக் கூறுகள், இயக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊறி இருந்தன. தற்போது சிறையில் இருந்து கொண்டு சுய விமர்சனம் செய்து வரும் ஒச்சலான், அதை தனது கடிதப் பரிமாற்றங்களில் குறிப்பிட்டுள்ளார்.

சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் தோன்றிய சர்வதேச நெருக்கடி PKK இலும் உணரப் பட்டது. மறைமுகமான சோவியத் உதவி நின்ற பின்னர், அது தன்னை வெறும் தேசியவாத இயக்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. ஆயினும், இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த இயக்கம் என்பதால், அதனுள்ளே சித்தாந்தம் தொடர்பாக பல விவாதங்கள் நடைபெற்றன.

இடையில் பல வருடங்களாக நடந்த சித்தாந்தப் போரின் விளைவாக, லிபர்ட்டேரியன் அனார்க்கிச கொள்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த விடயம், உலகின் பிற நாடுகளில் வாழும் பெரும்பாலான அனார்க்கிஸ்டுகளுக்கு தெரியாது. பல வருடங்களாக, PKK இந்த விடயத்தை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

துருக்கி, ஏகாதிபத்திய நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக, நேட்டோவில் மிகப் பெரிய இராணுவத்தை கொண்டுள்ள நாடு துருக்கி ஆகும். அதனால், குர்து மக்களின் போராட்டம், ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு நேரடியாகவே முகம் கொடுக்கும் நிலையில் உள்ளது.

தங்களை மார்சிஸ்டுகளாக, அல்லது அனார்க்கிஸ்டுகளாக காட்டிக் கொண்டால், தம்மை அழிக்க முற்படுவார்கள் என்று PKK நினைத்திருக்கலாம். அதனால், PKK இனர் தொடர்ந்தும் தேசியவாதிகள் போன்றே நடித்து வந்தனர். குர்து மக்கள் மத்தியிலும் தேசியவாதப் போக்குகளை ஊக்குவித்து வந்தனர். உண்மையில், PKK தேசியவாதத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி, திரை மறைவில் சோஷலிச பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தது.

சிரியாவில் PKK கட்டுப்பாட்டில் வைத்திருந்த குர்து மக்களின் பிரதேசம், ஜனநாயக பரிசோதனைச் சாலையாக இருந்தது. மக்கள் நேரடியாக பங்கேற்கும் உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப் பட்டன.(https://www.academia.edu/3983109/Democratic_Confederalism_as_a_Kurdish_Spring_the_PKK_and_the_quest_for_radical_democracy) ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும், சுய சார்புப் பொருளாதாரம் கொண்ட தனித் தனி நாடுகளாக வடிவமைப்பது அவர்களது நோக்கம். (PKK தனிநாட்டுப் பிரிவினைக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதற்குப் பதிலாக குர்திஸ்தான் சமஷ்டி அதிகாரத்திற்காக போரிடுகின்றது.)

அமெரிக்க அனார்க்கிஸ்டும், சூழலியல்வாதியுமான புக்சின் (Murray Bookchin) அவர்களது தத்துவ ஆசிரியராக இருந்தார். உண்மையில் அது, கடிதத் தொடர்புகள், மின்னஞ்சல்கள் மூலமான வழிகாட்டுதலாக இருந்தது. (புக்சின் 2006 ம் ஆண்டு காலமானார்.) அவரது தத்துவமான Libertarian municipalism, "குர்திஸ்தான் சமூகங்களின் அமைப்பு" என்று, மண்ணுக்கேற்றவாறு மாற்றப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நடந்த அனார்க்கிஸ்ட் ஒன்றுகூடல்களில், குர்திய ஆர்வலர்களும் பங்குபற்றியுள்ளனர்.

"PKK உண்மையிலேயே ஜனநாயக - சோஷலிசத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது என்றால், அது முதலில் ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும்..." என்று ஈராக்கிய குர்திஷ் அனார்க்கிஸ்ட் ஆர்வலர் ஒருவர் கூறினார். இருப்பினும், முன்பிருந்ததை விட, தற்போது PKK பெருமளவு மாறி விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், PKK குர்திஷ் பிரதேசங்களில் மாற்று இயக்கங்களை இயங்க அனுமதிக்கவில்லை. ஆயினும், சில வருடங்களின் பின்னர், துருக்கி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு காரணமாக, குர்திஷ் கம்யூனிஸ்டுகளை இயங்க அனுமதித்தார்கள்.

சிரியாவில், YPG என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு, சிரிய குர்து மக்களின் விடுதலை இயக்கம் போன்று இயங்கியது. வெளியுலகம் அவ்வாறு நினைக்க வைக்கப் பட்டது. உண்மையில் YPG என்பதன் அர்த்தம் "மக்கள் பாதுகாப்புப் பிரிவு". அதே மாதிரி YPJ என்ற "மகளிர் பாதுகாப்புப் பிரிவு" சமாந்தரமாக இயங்கத் தொடங்கியது. சிரியாவில், மதச்சார்பற்ற, பெண்களுக்கும் சம உரிமை வழங்கிய சமூகக் கட்டமைப்பானது, ISIS போன்ற மதவாதிகளின் கண்களை துருத்திக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.

உண்மையில், சிரியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சோஷலிச அடிப்படையிலான ஜனநாயக சமூகம், மேற்கத்திய முதலாளிய நாடுகளுக்கும் எரிச்சலூட்டி இருக்கலாம். அதனால், ISIS படையினர் குர்திஸ்தான் சுயாட்சிப் பிரதேசத்தை கைப்பற்றுவதை தடுக்கவில்லை. சிரியா குர்திஸ்தானில் ஒரு இனப்படுகொலை நடக்குமாக இருந்தால், அதற்கு மேற்குலகமும் பொறுப்பேற்க வேண்டும். மேற்குலகம் குர்து மக்களுக்கு துரோகம் இழைப்பது, இனிமேலும் நடக்கலாம்.

Thursday, October 09, 2014

கொபானி : சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்"


சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படக் கூடிய, கொபானி பிரதேசம் ISIS படையினரிடம் வீழ்ந்துள்ளது. துருக்கி எல்லையில் உள்ள கொபானி, கடந்த சில வாரங்களாக ISIS படையினரின் முற்றுகைக்குள் இருந்தது. அங்கிருந்து குர்து மக்கள் வெளியேறுவதை, துருக்கி படையினர் தடுத்து வந்தனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள், ISIS எதிர்ப்புப் போரைத் தொடங்கிய பின்னர் தான், கொபானி மீதான தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளின் ISIS எதிர்ப்புப் போர், குர்து சிறுபான்மை மக்களை பாதுகாக்கத் தவறி விட்டது, ISIS முன்னேற்றத்தை தடுக்கத் தவறி விட்டது. "சிரிய முள்ளிவாய்க்காலில்" அகப்பட்டுக் கொண்ட மக்களுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நகரங்கள் எங்கும் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. திடீரென ஆயிரக் கணக்கான குர்தியர்கள், நெதர்லாந்து பாராளுமன்றத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்திலும் இதே மாதிரி பாராளுமன்றங்களை ஆக்கிரமிக்கும் போராட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. பெல்ஜியம், சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நமது தமிழ் தேசியவாதிகளுடன் ஒப்பிடும் பொழுது, குர்திய தேசியவாதிகளை இடதுசாரிகள் என்று சொல்லலாம். ஆனாலும், அவர்கள் மனதிலும் தேசியவாதத்தின் குறைபாடுகள் காணப்படுகின்றன.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் குர்து தேசியவாதிகள், அந்தந்த நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் தேசியவாதிகளும் அப்படித் தான். ஆயினும், தமிழர்கள் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளையே அதிகம் ஆதரிக்கிறார்கள். அதற்கு மாறாக, குர்தியர்கள் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.

நெதர்லாந்தின் சோஷலிசக் கட்சி (SP), அந்த நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சி ஆகும். அதிலே பெருந்தொகையான குர்து அரசியல் ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். "சிரிய குர்தியரின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படும் கொபானி பிரச்சினையில், கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் உருவாகின.

பெரும்பாலான குர்து அரசியல் ஆர்வலர்கள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் "ISIS பயங்கரவாத எதிர்ப்பு போரை" ஆதரிக்கின்றனர். நெதர்லாந்து அரசு அந்தப் போரில் பங்கெடுப்பதையும் ஆதரிக்கிறார்கள். அதற்கான காரணம் தெளிவானது. மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்பு போரை நடத்தினால், சிரியாவில் குர்து மக்களின் தாயகம் பாதுகாக்கப் படும் என்று நம்பினார்கள்.

அமெரிக்காவின் ISIS பயங்கரவாத எதிர்ப்புப் போரில், நெதர்லாந்து அரசும் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட்ட பொழுது, முதலாளித்துவ சார்புக் கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. சோஷலிசக் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. "2001 ஆம் ஆண்டு நடந்த அல்கைதா பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இன்னொரு வடிவம்" என்று கூறி, சோஷலிசக் கட்சி எதிர்த்து வாக்களித்தது.

முன்னாள் மாவோயிசக் கட்சியான சோஷலிசக் கட்சி, இன்று மார்க்சியம் பேசாத இடதுசாரிக் கட்சியாக உள்ளது. ஆயினும் அது, முதலாளியக் கட்சிகளுக்கு மாற்றீடான, மிகவும் கட்டுக்கோப்பான, கொள்கையில் உறுதியான கட்சி என்று, எதிராளிகளினாலும் பாராட்டப் படுகின்றது. அப்படியான ஒரு கட்சியில் முரண்பாடு தோன்றுவது எதிர்பாராத ஒரு விடயம்.

முன்பொரு தடவை, கொசோவோ பிரச்சினையில் யூகோஸ்லேவியா மீதான நேட்டோ இராணுவ நடவடிக்கையையும் SP எதிர்த்து வந்தது. ஆனால், புலம்பெயர்ந்த கொசோவோ அல்பேனியர்கள் பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள். அதனால், அது கட்சிக்கு எந்த நெருக்கடியையும் உண்டாக்கவில்லை.

நெதர்லாந்து சோஷலிசக் கட்சி, ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றது. அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி பொம்மல், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களுக்கு நன்றாகப் பரிச்சயமான ஒருவர். பல தடவைகள், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளார்.

ஆயினும், ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் குறித்து, உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் SP உள்ளது. கொசோவா என்றாலும், கொபானி என்றாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு, அந்த மக்களுக்கு சாதகமானதல்ல என்பது SP இன் நிலைப்பாடு. ஆயினும் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில், குர்து தேசியவாதிகள் இல்லை. அவர்கள், கொபானி பிரச்சினையில், அமெரிக்கா குர்து மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக நம்பினார்கள்.

கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்புப் போரை நடத்தி வருகின்றன. விமானக் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும், ISIS படையினர் கொபானி பிரதேசத்தை முற்றுகையிட்டு கைப்பற்றி உள்ளனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் தான், ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் வேறு என்ற விடயம் குர்து தேசியவாதிகளுக்கு உறைத்தது. அதன் எதிரொலியாக, மேற்கு ஐரோப்பிய நகரங்களில் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. துருக்கியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், கலவரத்தில் முடிந்துள்ளன.

கொபானி நெருக்கடியை, ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நெருக்கடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டிலும் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், இலங்கையை விட சிரியா சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியமான நாடு என்பது குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பான ஒரு விவாதம், தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் அவசியமானது. அத்தகைய விவாதங்கள் மூலம் தான் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

Tuesday, December 08, 2009

துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்

துருக்கியில் "குர்திஸ்தான்" என்ற தனி நாட்டிற்கான ஆயுதப் போராட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. அந்த இடத்தில் அரசுக்கு எதிரான குர்து மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. துருக்கி நகர வீதிகளில் இறங்கிய குர்து இளைஞர்கள், பாதுகாப்புப் படைகளை தீரத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். அவர்களது ஆயுதங்கள், கவன் கற்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியன. அதே நேரம் துருக்கி இராணுவம் டாங்கிகள், தானியங்கி ஆயுதங்கள் சகிதம் கலவரத்தை அடக்க பெரும்பாடு படுகின்றது. குர்திஷ் விடுதலை இயக்கமான PKK யின் 31 வது ஆண்டு நிறைவு தினம், குர்து இன இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. துருக்கியில் குர்து மக்கள் வாழும் நகரங்கள் முழுவதும் கலவரத்தீ பற்றிக் கொண்டது.குர்திஸ்தான் மாநிலத் தலைநகரமான டியார்பாகிர்(குர்து மொழியில் "அமெட்") கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஒரு மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதற்கிடையே குர்து மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் DTP கட்சியை தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதி அமைச்சு தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டில், DTP துருக்கியின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக பிரிவினையை ஆதரிப்பதாக முறையிட்டுள்ளது. கட்சி தடைசெய்யப்படும் பட்சத்தில், அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை ஏற்படலாம்.