Saturday, October 11, 2014

இன்னொரு மலாலா : "கம்யூனிஸ்டுகளுக்கு" நோபல் பரிசு கிடைப்பதில்லை!

இந்த வருடம் (2014) சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்த மலாலா பற்றி, உலகம் முழுவதும் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாகிஸ்தானிய சிறுமியை விட, மகளிர் கல்விக்கு அதிகளவு பங்களிப்புச் செய்த இன்னொரு மலாலா பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. அவருடைய பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் இருக்கும்: மலாலை ஜோயா! பெயரில் மட்டுமல்ல, அரசியல் செயற்பாடுகளிலும் ஒற்றுமை உண்டு. அவர் இன்றைக்கும் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

பாகிஸ்தானிய மலாலா, தாலிபானால் சுடப் பட்ட காரணத்திற்காக மட்டும், மேற்குலக நாடுகளினால் அரவணைக்கப் படவில்லை. அவர் ஒரு சிறுமி. அதனால், மேற்குலக அரசியல் அபிலாஷைகளை அவரின் தலைக்குள் இலகுவாக திணிக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் மகாராணி என்று உலகின் மிகப் பெரிய தலைவர்கள் எல்லோரும் சிறுமி மலாலாவை சந்தித்துப் பேசி விட்டார்கள். கடைசியில் நோபல் பரிசும் கொடுத்தாகி விட்டது. இனிமேல் அவர் மேலைத்தேய "அபிவிருத்தி" திட்டங்களின் உள்ளூர்ப் பிரதிநிதியாக கௌரவிக்கப் படுவார். அடுத்த பல தசாப்தங்களுக்கு, பாகிஸ்தானில் மேற்கத்திய கொள்கைகளை நடைமுறைப் படுத்த உதவுவார்.

ஆப்கானிஸ்தானி மலாலா, மேற்குலக அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். வயது முப்பதுக்கு மேலே இருக்கும். ஏற்கனவே இடதுசாரி அரசியல் நிறுவனங்களில் சுறுசுறுப்பாக செயற்பட்டு வருபவர். அதனால், அப்படியான ஒருவர் தனது கொள்கைகளை இலகுவில் மாற்றிக் கொள்ள மாட்டார். ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு உதவ மாட்டார். 

நோபல் கமிட்டி மட்டுமல்ல, சர்வதேச சமூகம் இன்னொரு மலாலாவை கண்டுகொள்ளாமல் விட்டமைக்கு காரணம் இருக்கிறது. மத அடிப்படைவாத தாலிபான்கள் மட்டுமல்ல, ஜனநாயகவாதிகளான மேற்குலக கனவான்களும், "கம்யூனிஸ்டுகள்", "சோஷலிஸ்டுகள்", "இடதுசாரிகள்" போன்றோரை விரும்புவதில்லை. "கம்யூனிஸ்டுகளுக்கு" சர்வதேச அங்கீகாரமும், நோபல் பரிசும் கிடைப்பதில்லை. 

ஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் சோஷலிச நாடாக இருந்தது என்பதையும், அங்கு சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது என்பதையும், இன்று பலர் மறந்து விட்டிருக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறை, அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கவும் மாட்டார்கள். ஆனால், அந்தக் காலங்களில் பெண்களுக்கு பெருமளவு சுதந்திரம் இருந்தது. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் ஊக்குவித்தார்கள். முக்காடு அணியாத, முகத்தை மூடாத பெண்கள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று, பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தப் பொற்காலம் இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. 

சோஷலிச அரசாங்கத்தை பாதுகாத்து வந்த சோவியத் இராணுவம் வெளியேறியதும், கடும்போக்கு மதவாதிகளான முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியைப் பிடித்தன. முஜாகிதீன்கள் பிற்போக்குவாத மதவெறியர்களாக மட்டும் இருக்கவில்லை. கிரிமினல்கள், போதைவஸ்து கடத்தல்கார்கள், போன்ற சமூக விரோதிகள் தம்மை புனிதப் போராளிகளாக காட்டிக் கொண்டார்கள். அவர்களுடன் ஒப்பிடும் பொழுது, பிற்காலத்தில் வந்த தாலிபான்களுக்கு ஒரு அரசியல் சித்தாந்தம் இருந்தது என்பது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, தாலிபான் செய்ததையே, முஜாகிதீன்களும் செய்தார்கள். பெண்கள் கல்வி கற்பதை அவர்களும் தடை செய்திருந்தார்கள். 

பாகிஸ்தானில், ஆப்கான் அகதி முகாம்களில், சோஷலிச சிந்தனை கொண்ட பெண்கள் ஒன்று கூடி நிறுவனமயப் பட்டனர். RAWA (Revolutionary Association of the Women of Afghanistan) என்ற பெயரில் உருவான புரட்சிகரப் பெண்கள் அமைப்பு, அகதி முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளுக்கு கல்வி புகட்டுவதற்காக பாடசாலைகளை நடத்தியது. ஓர் உத்தியோகபூர்வமற்ற பள்ளிக்கூடத்தில் படித்த அகதிச் சிறுமி, பிற்காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவார் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானில் அந்த அதிசயம் நடந்தது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்த நேரம், அவர்கள் பெண்களின் கல்வி உரிமையை மறுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மகளிர் பாடசாலைகள் அனைத்தும் மூடப் பட்டிருந்த காலத்தில், இரகசியமாக சில இடங்களில் பாடசாலைகள் நடந்து கொண்டிருந்தன. தாலிபான்களின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது, RAWA அமைப்பு, ஆப்கான் சிறுமிகளுக்கு கல்வி புகட்டி வந்தது. தாலிபான் ஆட்சிக் காலத்தில், இரகசியமாக இயங்கி வந்த பாடசாலை ஒன்றில், மலாலை ஆசிரியையாக பணியாற்றினார். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக புரிந்த வன்முறைகளை, RAWA ஆவணப் படுத்தியது. இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள், பாகிஸ்தான் ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டன. அவற்றைத் தான், CNN தனது செய்திகளில் போட்டுக் காட்டி வந்தது. அதற்குப் பிறகு தான், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் கொடுங்கோன்மை பற்றி உலகம் அறிந்து கொண்டது. 

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தாலிபான்களை வெளியேற்றிய பின்னர், "லோயா ஜிர்கா" எனப்படும் ஆப்கான் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட மலாலை, மக்களால் தெரிவு செய்யப் பட்டு, பாராளுமன்ற பிரதிநிதியாக அமர்ந்திருந்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த முன்னாள் யுத்தப் பிரபுக்கள், மத அடிப்படைவாதிகள், பிற்போக்குவாதிகள் மத்தியில், மலாலை ஒரு துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதியாக அமர்ந்திருந்தார். 

மலாலை தாலிபான்களை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், முன்னாள் முஜாகிதீன் குழுக்கள், நிலப்பிரபுக்கள், மதத் தலைவர்கள், போன்ற பல ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடினார். "இங்கே அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், முஜாகிதீன் யுத்தப் பிரபுக்களாக இருந்த காலத்தில் புரிந்த போர்க்குற்றங்களுக்காக, சர்வதேச நீதிமன்றத்தினால் தண்டிக்கப் பட வேண்டும்..." என்று மலாலை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத பிற்போக்குவாதிகள், "மலாலை ஒரு கம்யூனிஸ்ட்!" என்று குற்றஞ்சாட்டினார்கள். 

முன்னாள் யுத்தப் பிரபுக்களை கிரிமினல்களாக குற்றம் சாட்டிய மலாலையின் பேச்சு, அதிகாரத்தில் இருந்த மத அடிப்படைவாதிகளை ஆத்திரமூட்டியது. பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தனர். அதனால், பாராளுமன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ள முடியாமல், வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐ.நா. படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், காபுல் நகரில், அடிக்கடி வீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமையில் வாழ்ந்து வருகின்றார். 

ஆப்கானிஸ்தான் போன்றதொரு அபாயகரமான நாட்டில், இத்தனை பெரிய ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். ஒரு பெண்ணாக அத்தனை சவால்களையும் சமாளித்து அரசியல் நடத்துவது சாதாரண விடயம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய மலாலாவுக்கு பதிலாக, ஆப்கான் மலாலைக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தால், அந்தப் பரிசுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கும். 

என்ன செய்வது? "கம்யூனிஸ்டுகள்" எந்தளவு நல்லவர்கள், வல்லவர்களாக இருந்தாலும், உலகம் அவர்களை கண்டுகொள்வதில்லை. "கம்யூனிஸ்டுகளுக்கு" நோபல் பரிசு கிடைப்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளையும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளையும் மக்களின் எதிரிகளாக நம்பும் அனைத்து அரசியல் ஆர்வலர்களையும் உலகம் புறக்கணித்து வந்துள்ளது.

மாலாலை பல உலக நாடுகளில் நடந்த கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்களில் பங்குபற்றி வந்துள்ளார். ஆனால், ஒபாமாவோ அல்லது பிரிட்டிஷ் மகாராணியோ அவரைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லை. மேற்குலக நாடுகளில் மலாலையை அழைத்து வந்து, அவரை மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் இடதுசாரி அமைப்புகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 


மேலதிக தகவல்களுக்கு:
Revolutionary Association of the Women of Afghanistan

The brave and historical speech of Malalai Joya in the LJ 


No comments: