Friday, October 03, 2014

சொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் தேசியவாதிகள்
மகிந்த ராஜபக்ச, "காஸ்ட்ரோவுடன் கை கோர்த்தார், அப்பாஸுடன் கட்டிப் பிடித்தார்" என்று, ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சொன்னதையே திரும்பச் சொல்வார்கள்.
ஆனால்.... 
"ராஜபக்ச ஒபாமாவின் காலில் விழுந்தார்" என்பதைப் பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டார்கள். ஏனென்றால், போலி சிங்களத் தேசியவாதிகளான ராஜபக்ச கும்பலும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அமெரிக்க எஜமானுக்கு விசுவாசமான அடிமைகள் தான்.


உக்ரைன், கார்கிவ் நகரில் இருந்த மிகப் பெரிய லெனின் சிலை, பாசிஸ குண்டர்களினால் இடித்து விழுத்தப் பட்டது. சோவியத் யூனியன் மறைந்த பின்னரும், இருபதாண்டுகளாக, லெனின் சிலை அங்கே தான் இருந்தது. கார்கிவ் நகர மக்கள் அதை உடைக்க நினைக்கவில்லை. ஆனால், உக்ரைனில் நடந்த பாசிஸ சதிப்புரட்சிக்கு பின்னர் தான், நாடு முழுவதும் இது போன்ற சிலை உடைப்புகள் நடந்து வருகின்றன. 

தமிழர்களில் யாராவது, லெனின் சிலை உடைப்பை ஆதரித்து பேசினால், அவரை "சாமானிய மக்களில்" ஒருவராக கருத முடியாது. நிச்சயமாக, அவரும் ஒரு பாசிஸ்டாக அல்லது நவ நாஸியாகத் தான் இருப்பார். பெரியாரின் சிலை உடைப்பவர்களும் பாஸிஸ்டுகள் தான். தமிழ் தேசிய இனம் உருவாக பெரியாரும் காரணமாக இருந்தார்.

தனது சொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமையை மதிக்காமல், அதற்கு இனவாத விளக்கம் கொடுப்பவர்கள், தம்மைத் தாமே "தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்வது, அந்த இனத்தின் சாபக்கேடு. உக்ரைனில் லெனின் சிலைகளை இடித்து விழுத்தும் பாசிஸ காடையர்களை, "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று கூறுகின்றன, CNN மற்றும் பல மேற்கத்திய ஊடகங்கள். 

லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் தான், வரலாற்றில் முதல் தடவையாக உக்ரைனிய தேசிய இனம் அங்கீகரிக்கப் பட்டது. அதற்கு முன்பிருந்த சார் மன்னனின் ஆட்சிக் காலத்தில், உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழியின் கிளை மொழியாக கருதப் பட்டது. உக்ரைனிய மொழி மட்டுமல்லாது, தனியான உக்ரைனிய கலாச்சார அடையாளங்களும் நசுக்கப் பட்டன. 

போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக் காலத்தில், உக்ரைன் என்ற தனியான சோவியத் குடியரசு உருவாக்கப் பட்டது. அதுவே, முதலாவது உக்ரைனிய தேசமாக இருந்தது. பாடசாலைகளில் உக்ரைனிய மொழி கற்பிக்கப் பட்டது. உக்ரைனிய மொழியில் இலக்கியங்கள் எழுதப் பட்டன. பத்திரிகைகள் வெளியாகின. 

ஸ்டாலின் காலத்தில் தான், இன்றுள்ள உக்ரைனிய தேசிய எல்லைகள் வரையறுக்கப் பட்டன. 2 ம் உலகப் போருக்கு முன்னர், போலந்தின் ஒரு பகுதியாக இருந்த, உக்ரைனிய சிறுபான்மையினரின் மாகாணம், உக்ரைன் சோவியத் குடியரசுடன் இணைக்கப் பட்டது. அது மட்டுமல்ல, உக்ரைன் ஐ.நா. மன்றத்தில் அங்கத்துவம் கோரி விண்ணப்பிக்கவும், ஸ்டாலின் ஊக்குவித்திருந்தார். 

உக்ரைனிய தேசிய இனத்தை அங்கீகரித்து, அதன் சுய நிர்ணய உரிமையினை வளர்த்து விட்ட தலைவர்களின் சிலைகளை உடைப்பவர்கள், எப்படி "தேசியவாதிகளாக" இருக்க முடியும்? பாசிஸ்டுகளும், நவ நாஸிகளும், தேசியவாத முகமூடி அணிந்து கொண்டு, தமது சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

 ******* 

கம்யூனிச/இடதுசாரி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வது அவரவர் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஈழத்தில் "என்னவோ முதலாளிகளும், வலதுசாரிகளும் மட்டுமே ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்" என்பது போல, சிலர் அபத்தமான கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் எந்தவொரு முதலாளியும் போராளியாக விரும்ப மாட்டான். தனது பிள்ளைகளையும் விட மாட்டான். தமிழீழப் போராட்டத்திலும் அது தான் நடந்தது. 

ஈழப் போராட்டம் நடந்த காலங்களில், தமிழ் முதலாளிகள், போரினால் கஷ்டப்படும் மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பாரம்பரிய முதலாளிகள் மட்டுமல்லாது, திடீர் முதலாளிகளும் ஈழத் தமிழ் மக்களை வருத்தி பணம் சேர்த்து வந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு, சிறிலங்கா படையினர் விதித்த பொருளாதாரத் தடையை பயன்படுத்தி, நிறையப் பேர் கோடீஸ்வரர் ஆனார்கள். தடை செய்யப் பட்ட பொருட்களை கடத்திச் சென்று, பத்து அல்லது இருபது மடங்கு விலைக்கு விற்று கொள்ளை அடித்தவர்கள் பலர் உண்டு. இவை ஈழத்தில் வாழ்ந்த அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். 

எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, மண்ணெண்ணெய் விற்று கோடீஸ்வரனான மகேஸ்வரனின் கதை, ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இராணுவத்துடனும், புலிகளுடனும் சினேகபூர்வமாக நடந்து கொண்டு, தமிழ் மக்களின் பணத்தை கொள்ளையடித்த மகேஸ்வரன், தன்னை ஒரு தீவிர சைவ மத பக்தராக வெளியில் காட்டிக் கொண்டார். வலதுசாரி சிங்கள இனவாதக் கட்சியான UNP சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்கள் பலர், தமது சொந்த நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள். தூரத்தில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டவுடனே, அலறித் துடித்து வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள். சமூகம் எக்கேடு கெட்டாலும், தனது படிப்பு முக்கியம் என்று பல்கலைக்கழகம் வரை சென்றவர்கள். இப்படியான சுயநலவாதிகள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கம்யூனிஸ்டுகளையும், இடதுசாரிகளையும் திட்டுவதற்கு நேரத்தை செலவிடுகின்றனர். 

 ********

இலங்கையில் நடந்த பாசிஸ பொதுபல சேனாவின் உச்சி மகாநாட்டிற்கு, மியான்மர் பௌத்த பாசிஸ்ட் விராத்து வருகை தந்திருந்தார். மகாநாட்டின் முடிவில், இரண்டு பாசிஸ அமைப்புகளுக்கு இடையில் ஓர் ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டுள்ளது. "பயங்கரவாதத்தையும், மத மாற்றத்தையும் எதிர்த்து, பௌத்த கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில்" ஒன்றிணைவதாக அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. மதச் சார்பின்மை, கலாச்சார பன்முகத் தன்மை என்பனவற்றை மேற்கத்திய லிபரல் கலாச்சார திணிப்பு என்று சாடியுள்ளனர்.

தெற்காசியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் பௌத்தர்களை மதமாற்றம் செய்வதாகவும், அதை எதிர்த்துப் போரிடுவது தமது தலையாய கடமை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக பௌத்த மத சக்திகளை ஒன்று திரட்டுவதுடன், ஒரே கொள்கை கொண்ட இந்து மத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் இயங்கும் பௌத்த-சிங்கள பாசிஸ இயக்கமான பொதுபல சேனா, மியான்மரின் பௌத்த - பர்மிய பாசிஸ இயக்கமான 969 ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக, சில மாதங்களுக்கு முன்னர் ராவய எனும் சிங்கள சஞ்சிகை குறிப்பிட்டு எழுதி இருந்தது.

2 ம் உலகப்போருக்கு முன்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட, ஹிட்லர் - முசோலினி ஒப்பந்தம் போன்று, பொதுபல சேனா - 969 ஒப்பந்தமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கையிலும், மியான்மரிலும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கட்டமைப்பதற்கான அத்திவாரம் இடப் பட்டுள்ளது.

பாசிஸ்டுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வாசிப்பதற்கு: 

Full Text: Wirathu And Gnanasara Sign Agreement  https://www.colombotelegraph.com/…/full-text-wirathu-and-g…/


சிங்கள - பௌத்த பேரினவாத பிக்குகள், தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் நேரம், அந்தக் கருத்துக்களுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், அதே பேரினவாத பிக்குகள், சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பும் நேரம், யாருடைய கவனத்தையும் பெறுவதில்லை. 

பாசிஸ பொதுபல சேனா இயக்கம், தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவப் போவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களை "புத்தரின் போதனைகளுக்கு" அமைய வழிநடத்தப் போகிறார்களாம். முதலில் சுகாதார, மருத்துவத்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், இலங்கையில் இன்று வரையில், மருத்துவ வசதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படுகின்றது. சாதாரண வைத்திய ஆலோசனை முதல், அதிக செலவு பிடிக்கும் அறுவைச் சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். 

ராஜபக்ச அரசு, மருத்துவத் துறையை தனியார்மயப் படுத்துவதற்கு பல தடவைகள் முயற்சி எடுத்தது. ஆனால், மருத்துவ ஊழியர்களின் உறுதியான தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பின்போடப் பட்டு வந்ததுள்ளது. அது என்ன "புத்தரின் போதனைகள்"? - வேலை நிறுத்தம் செய்யாதீர்கள். - சம்பள உயர்வு கோராதீர்கள். - தனியார்மயத்தை எதிர்க்காதீர்கள். இதை எல்லாம் புத்தர் எப்போது சொன்னார் என்று கேட்டு விடாதீர்கள். 

கடவுளும், மதமும் என்றைக்கும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும். அதற்கான வழி சமைத்துக் கொடுப்பது தான் பாசிஸ சக்திகளின் நோக்கம். அன்று இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் நடைமுறைப் படுத்திய கொள்கைகளை, இலங்கையில் ஞானசார தேரோ அறிமுகப் படுத்துகிறார்.

********


ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனமான ஐ.நா. மன்றம், இனப்படுகொலையாளி ராஜபக்சவை அழைத்துக் கௌரவித்துள்ளது. "ராஜபக்ச தலைமையில், இலங்கையில் போருக்கு பின்னர் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடத்திருப்பதாக," ஐ.நா. செயலதிபர் பான் கி மூன் பாராட்டி உள்ளார்.

"போருக்குப் பின்னர் வடக்கில் நடந்துள்ள நிவாரணப் பணிகளின் விளைவாக, அந்தப் பகுதி மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக" ராஜபக்ச தெரிவித்தாராம். தமிழரின் பிரச்சினை பற்றி எதுவும் பேசாத பான் கி மூன், அண்மைக் கால மத வன்முறைகளைப் பற்றி மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐ.நா. வின் கைக்கூலித்தனம், ராஜபக்ச கும்பலின் அமெரிக்க விசுவாசம், இலங்கையில் அமெரிக்கத் தலையீடு குறித்து எந்த வித அறிவும் இல்லாத வலதுசாரிகள், தமிழ் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். "ஐ.நா. வில் முறையிட்டால் தமிழீழம் கிடைக்கும்..." என்று நம்புமாறு, அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் தான், அமெரிக்க அடிவருடிகளான "போலித் தமிழ் தேசியவாதிகள்" அல்லது "போலி தமிழ் உணர்வாளர்கள்."

No comments: