Monday, December 02, 2013

முன்னிலை சோஷலிசக் கட்சியும், ஒரு வழி தவறிய வெள்ளாடும்

முன்னிலை சோஷலிசக் கட்சியில் இருந்து, பழ ரிச்சார்ட் என்ற தமிழ் உறுப்பினர் வெளியேறியுள்ளார். (அல்லது வெளியேற்றப் பட்டுள்ளார்?) ஒரு பல்கலைக்கழக மாணவராக இருந்த பழ ரிச்சார்ட், மாணவர் அமைப்பு செயற்பாடுகள் மூலம் கட்சிக்குள் இழுக்கப் பட்டவர். மு.சோ.கட்சிக்குள் தகுதி வாய்ந்த தமிழ் உறுப்பினர்கள் பற்றாக்குறையாக இருந்த வாய்ப்பினை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர். தற்போது மு.சோ.கட்சியில் இருந்து வெளியேறியதை நியாயப் படுத்துவதற்காக,பல காரணங்களை கூறி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் ஒரு காலத்தில் முக்கியமான பொறுப்பு வகித்த, தானே முன் நின்று ஸ்தாபித்த கட்சி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவை யாவும் எமது கவனத்திற்குரியன.

நான் முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர் அல்ல. எனக்கும் அந்தக் கட்சிக்கும் இடையில், எந்த விதமான தொடர்பும் கிடையாது. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், சில நண்பர்கள் அந்தக் கட்சி சம்பந்தமான விடயங்களை, தொடர்ந்தும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்தச் சிறு குறிப்பை எழுத வேண்டியுள்ளது.

பழ ரிச்சார்ட் கட்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது வெளியாகி 24 மணி நேரத்திற்குள், சில வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், பழ ரிச்சார்ட்டின் அறிக்கையை தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் அறியத் தருவதில் ஆர்வமாக இருந்தனர். அவர்களது வழமையான பிரச்சாரமான "சிங்கள இடதுசாரிகள் = சிங்கள இனவாதிகள்" என்ற சூத்திரத்திற்கு அமைய இருந்தது, ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், "அப்பாவி" தமிழ் மக்கள் மீதான அவர்களது கரிசனைக்கு நன்றிகள். அவர்கள் மட்டும் இல்லையென்றால், "முட்டாள் தமிழ் ஆடுகள்", "இடதுசாரி போர்வையில் இருக்கும் சிங்கள இனவாத ஓநாய்களை" நம்பிச் சென்று பலியாகி இருப்பார்கள்.

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற கதையைப் போல, "வழி தவறிச் சென்ற வெள்ளாடு" பழ ரிச்சார்ட்டின் அறிக்கையை பரவலாக்கும் அவசரத்தில், அவரது "புகுந்த வீடு" எதுவென்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். "தமிழ் மக்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்காக, முன்னிலை சோஷலிசக் கட்சிக்குள் இருந்தது போல" தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கும் பழ ரிச்சார்ட், எதற்காக ஈரோஸ் (ஈழவர் ஜனநாயக முன்னணி) கட்சியில் சேர்ந்திருக்கிறார்? இலங்கை அரசின் தயவில் இயங்கும் ஈரோஸ், எவ்வாறு அவரது "ஈழம் வாங்கும் கனவை" நிறைவேற்றப் போகிறது என்று தெரியவில்லை.

எண்பதுகளின் இறுதியில், ஈரோஸ் இரண்டாக உடைந்த பின்னர், "RAW உளவாளி" சங்கர் ராஜியினால் தலைமை தாங்கப் பட்ட பிரிவு, தென்னிலங்கையில் தன்னை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து கொண்டது. (தற்போது சங்கர் ராஜியின் மகன் நேசன் கட்சியின் முக்கிய பொறுப்பில் அமர்ந்துள்ளார். அவர் போர் நடந்த காலத்தில், இலங்கை புலனாய்வுத் துறையுடன் தொடர்பைப் பேணி வந்தார்.) ஈரோஸ், அடுத்தடுத்து வந்த பல தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் காணாமல் போயிருந்தது. பல வருடங்களின் பின்னர், மறு சீரமைக்கப் பட்டு கிழக்கு மாகாணத்திலும், கிளிநொச்சியிலும் மட்டும் ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது.

பொதுவான பெயர் ஒன்றைத் தவிர, முன்பிருந்த ஈரோஸ் அமைப்பிற்கும், இப்போதுள்ள கட்சிக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. முந்திய கட்சியின் தொடர்ச்சியாகவும் இதனைப் பார்க்க முடியாது. ஈழத்தை கைவிட்டு விட்டு, மார்க்சியத்தை குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு, இலங்கை அரசின் அதிகார வரம்பிற்குள் கட்டுப்பட்டு நடக்கின்றது. "ஈழம் வாங்குவதற்காக ஈபிடிபி யில் சேர்ந்திருக்கிறேன்..."  என்று ஒருவர் சொல்வது எந்தளவு அபத்தமோ, பழ ரிச்சார்ட்டின் விளக்கமும் அந்தளவு நகைப்பிற்கிடமானது.

முன்னிலை சோஷலிசக் கட்சி உடைந்து சிதறி வருவதாக, "கடலில் தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பலில் இருந்து தப்பி கரை சேர்ந்துள்ள" பழ ரிச்சார்ட் கூறுகின்றார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள சம்பவங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியவை. ஆறு மாதங்களுக்கு முன்னர், சிங்கள ஊடகங்கள் அந்தக் கதைகளை கேள்விப் பட்டு எழுதி இருந்தன. அவற்றில் உள்ள உண்மைத் தன்மை குறித்து எம்மால் எதுவும் கூற முடியாது. தனிப்பட்ட முறையில், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. ஆனால், குமார் குணரத்தினம் அரச படையினரால் கடத்தப் பட்டது சம்பந்தமான பிரச்சினை, கட்சிக்குள் பாரிய எதிர் விளைவுகளை உண்டாக்கி இருந்தது. அந்தக் கட்சிக்குள் சில உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு, அல்லது வெளியேற்றப் படுவதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம்.

மு.சோ.க. தலைவர் குமார் குணரத்தினம், மகளிர் அணித் தலைவர் திமுது ஆட்டிகல ஆகியோருக்கு இடையில் தகாத உறவு இருந்ததாக பழ ரிச்சார்ட்டின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தக் கதையும், ஏற்கனவே சில அரச ஆதரவு ஊடகங்களில் வந்துள்ளதுள்ளது. அதாவது, குமார் குணரத்தினம் கடத்திச் செல்லப்பட்ட பொழுது, திமுது ஆட்டிக்கல கூடவே இருந்துள்ளார். (இருவரும் வெவ்வேறு இடங்களில் கடத்தப் பட்டதாக கட்சி அறிவித்திருந்தது.) உண்மையில், மு.சோ.கட்சிக்குள் பிரச்சினையை கொண்டு வந்த விடயம், இருவருக்கும் இடையிலான தகாத உறவு சம்பந்தமானது அல்ல.

குமார், திமுது கடத்தப் பட்ட நேரம், அவர்கள் மறைந்திருந்த வீடு. 
குமார் குணரத்தினம் மறைந்திருந்த வீடு பற்றிய தகவலை, அவரைக் கடத்திய அரச படையினருக்கு கொடுத்தது யார்? குமார் எந்த இடத்தில், எந்த வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற விபரம், மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. மிக முக்கியமான மூன்று கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே அது தெரியும். அவர்களைத் தவிர்த்து, எவ்வாறு தகவல் வெளியே கசிந்தது? குமார் குணரத்தினத்தின் மறைவிடத்தை பற்றி, அரச படையினருக்கு தகவல் கொடுத்த கறுப்பாடு யார்? குமார் இலங்கை வந்திருந்த விடயமே, பெரும்பாலான கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாது.

குமார், திமுது கடத்தப் பட்டது தொடர்பாக, பல முக்கிய உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்தது. சில நேரம், அது தொடர்பாக கட்சிக்குள் சில களையெடுப்புகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. அதனால், சில முக்கிய உறுப்பினர்கள், கட்சியை விட்டு வெளியேறி இருக்கலாம், அல்லது வெளியேற்றப் பட்டிருக்கலாம் என்று நம்ப முடிகின்றது. மார்லன் என்ற மத்திய குழு உறுப்பினர், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர், கட்சிக்கு துரோகம் இழைத்த குற்றச்சாட்டில் வெளியேற்றப் பட்டுள்ளார்.

முன்னிலை சோஷலிசக் கட்சி, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள தயங்குவது பற்றி, ஏற்கனவே பல தடவைகள் விவாதிக்கப் பட்டு விட்டது. அதைப் பற்றி, மேலும் இங்கே பேசுவதில் அர்த்தமில்லை. மு.சோ.க. உறுப்பினர்கள் முன்பு ஜேவிபி யில் இருந்ததால், அதன் தாக்கம் சிறிதளவேனும் இருக்கவே செய்யும். அதையும் மறுக்க முடியாது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஜேவிபி யின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிந்த விடயம்.

முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி விடுதலைப் புலிகளிடம் கேட்டிருந்தால், என்ன பதில் கிடைத்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. முக்கியமான சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக, புலிகள் பேசுவது போலத் தான், ஜேவிபி யும் பேசி வருகின்றது. அதாவது, "இலங்கை சோஷலிச நாடானால், ஒரே நாளில் தமிழர்களின் இனப் பிரச்சினையும் தீர்ந்து விடும்!" என்று ஜேவிபி இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே போன்று, "தமிழீழம் கிடைத்தால், முஸ்லிம்களின் பிரச்சினை, சாதிப் பிரச்சினை எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விடும்." என்று புலிகள் சொல்லி வந்தனர்.

இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, மு.சோ.க. சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்களுக்கு தயாராக இருந்தது. (புலிகளிடமோ, ஜேவிபி இடமோ, அது பற்றிய பேச்சே எடுக்க முடியாது.) இப்போதும் அந்தக் கட்சிக்குள், கொள்கைகள் வரையறுப்பது சம்பந்தமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை ஒரு வரவேற்கத் தக்க விடயமாக கருத வேண்டும். இலங்கை சோஷலிச நாடானாலும், தமிழீழம் கிடைத்தாலும், எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. அதற்கொரு நீண்ட கால செயற்திட்டம் அவசியம்.

இது எல்லாவற்றையும் விட புரியாத புதிர் ஒன்றுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு, புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள் பலர், அதே ஒடுக்கப் பட்ட மக்களின் இன்னொரு பிரதிநிதிகளான ஜேவிபி/மு.சோ.கட்சிகளை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர். "ஜேவிபி ஒரு சிங்கள இனவாதக் கட்சி, அதிலிருந்து பிரிந்த மு.சோ.கட்சியினரும் இனவாதிகள் தான்." என்று காரணம் கூறுகின்றனர்.

பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் இனவாதம் பேசாமல் எந்தக் கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற முடிவதில்லை. இலங்கையில் மைய நீரோட்ட அரசியல், இனவாத மயப் பட்டுள்ளதை மறுக்க முடியாது. பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் மட்டுமல்ல, சிறுபான்மை தமிழர்களின் அரசியலும் இனவாதத்தை மூலதனமாக வைத்துத் தான் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், நாம் ஒரு விடயத்தை மறந்து விடக் கூடாது. தமிழர்கள் உண்மையிலே அஞ்ச வேண்டிய இனவாத சக்தி ஒன்று சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது.

ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் சிஹல உறுமய என்ற கட்சி உதயமாகியது. "இலங்கைத் தீவில் இருந்து தமிழ், முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்து, நூறு சதவீத பௌத்த - சிங்கள நாடாக மாற்றுவதற்கு" கங்கணம் கட்டியது. இது போன்ற பல தமிழர் விரோத திட்டங்களை, அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டுள்ளது. தற்போது ஜாதிக ஹெல உறுமய என்று பெயர் மாற்றம் செய்துள்ள சிஹல உறுமய, ஐரோப்பிய நவ நாஜிகள், இந்திய ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிடத் தக்கது. ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகள் அந்தக் கட்சி உறுப்பினர் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. குறைந்த பட்சம் கொலைப் பயமுறுத்தல் கூட விடுக்கவில்லை.

நம் மத்தியில் உள்ள வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், ஜேவிபி, முசோக வை இனவாதிகள் என்று நிரூபிக்க படாத பாடு படுகின்றனர். அதற்காக அவர்கள் செலவிடும் நேரத்தில் ஒரு துளியைக் கூட, ஹெல உறுமயவை கண்டிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இரண்டு தரப்பினரும் கொள்கை அளவில் உடன்படுகின்றனர். இடதுசாரி எதிர்ப்புவாதம், வர்க்க ஒற்றுமை, இரண்டு பிரிவினரையும் மொழி கடந்து ஒன்றிணைக்கிறது.

கடந்த மாதம் குறிப்பிடத் தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. இலங்கை அரசால் வளர்க்கப் படும் பாசிச அமைப்பான பொது பல சேனா உறுப்பினர்கள் சிலர், ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட சச்சரவு ஒன்றில் தாக்கப் பட்டனர். ஆனால், அந்த சம்பவத்திற்குப் பிறகு, "பௌத்த-சிங்கள வாக்குகளை இழக்க விரும்பாத" ஐ.தே.க., பொது பல சேனாவிடம் மன்னிப்புக் கேட்டது. அதே நேரம், ஜேவிபி யும், மு.சோ.கட்சியும், பொது பல சேனா போன்ற பாசிச இயக்கங்களை வன்மையாக கண்டித்திருந்தன.

ஜேவிபி, மு.சோ.கட்சி ஆகியன தவறான தலைமைகளினால் வழிநடத்தப் படும், பிழையான கட்சிகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சிங்கள சமூகத்தில் சாதியால், வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதை, நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. அந்த உண்மையை புறக்கணித்து விட்டு, ஒடுக்கப் பட்ட மக்கள் சார்பாக பேசுகிறோம் என்பது வெறும் பித்தலாட்டம்.

சிங்கள மக்கள் மத்தியில் உள்ள வர்க்க, சாதிய ஒடுக்குமுறைகளை மூடி மறைத்துக் கொண்டு, அவர்களை வெறுமனே ஒரே முனைப்பான இனமாக வரையறுப்பதும் இனவாதம் தான். சிங்களவர்களின் இன அடையாளத்தை வலியுறுத்தி, சிங்கள இனவாதிகள் முன்மொழியும் கருத்தொன்றை, தமிழ் இனவாதிகள் வழி மொழிகின்றனர். இரண்டு இனவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழர்கள் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதற்காக, புலிகளை ஆதரிப்பதற்கு, நாங்கள் ஆயிரம் நியாயங்களை கற்பிக்கலாம். புலிகளின் தலைமை தவறாக இருக்கலாம், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் முக்கியம் என்று காரணம் கூறலாம். ஜேவிபி/மு.சோ.க. ஆகியவற்றை ஆதரிப்பவர்களும் அதே நியாயங்களை, அதே காரணங்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் தான் அவற்றை செவி கொடுத்துக் கேட்பதில்லை. ஏனென்றால், நாங்கள் தமிழர்கள் என்பதற்கு அப்பால், "முதலாளித்துவத்தை ஆதரிக்கும் வலதுசாரி பூர்ஷுவா நலன் விரும்பிகள்" என்பது தான் முக்கியமானது. வர்க்க உறவுகள் தான் எமது அரசியல் கருத்துக்களையும் தீர்மானிக்கின்றன.

1 comment:

pithan said...

மிக நல்ல கட்டுரை .